கிண்ணங்கள்




(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இந்தாங்கோ அப்பா, உங்களுக்குப் பிடிக்கிற வஸ்து ஒண்ணு.”
கையுள் திணித்த கிண்ணத்தை விரல்கள் தடவு கின்றன. வயல்வெளியில், முற்றிய நெற்கதிர்களின் மேல், மாலைக் காற்றின் விதிர்விதிர்ப்புப் போல் விரல் நுனிகள் எதையோ அடையாளம் கண்டுகொண்டு பரபரப்பில் நடுங்குகின்றன.
“இது இந்த வீட்டுப் பண்டம் போலிருக்கிறதே!”
“ஏது, அப்பாவுக்கு இதெல்லாம்கூடத் தெரிகிறதே ! இது உங்களதேதான். என் சாந்திக் கல்யாணத்துக்கு அம்மா ‘பாலிஷ்’ போட்டு புதிசு பண்ணிக் கொடுத்தது! எனக்கே மறந்து போச்சு; எத்தனை நாளாளச்சு! ஊருக்குக் கிளம்பும் வேளைக்குப் பழம்பெட்டியைக் குடைந்தேன்; கிடைத்தது. வீட்டில் கொள்ளையா இறைஞ்சு கிடக்கும் சாமான்களில் இது யாருக்குப் பொருட்டு?”
விரல்கள் செல்லமாய்க் கிண்ணங்களைத் தடவு கின்றன, நிறைய நசுங்கல். கொடுத்தபடியே இருக்க முடியுமா? திரட்டுப் பாலின் மணம் ‘கம்’மென்று எழுகின்றது. தேவலை, அமலிக்கு அவள் வீட்டு உப்பும் தண்ணீரும் ஊறி ஊறி, பேச்சும் அப்படியே படிந்து போயிற்று. இருக்க வேண்டியதுதானே!
வாசலில் ஜட்கா நின்று, பெட்டியும் சாமானும் இறங்குகின்றன.
கண் படுமோசமாப் போச்சு. இப்போதெல்லாம் கண்ணுக்கும் சேர்த்து, காதுக்கு ‘டபிள் டியூட்டி. அதுவும் போன வருடம் கண்ணுக்குச் சிகிச்சை செய்யப் போய் ஏதோ பிசகி, உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணா. கையைப் பிடித்துக் கொண்டுபோய் விடவேண்டாம். வாய்க்கும் கைக்கும் வழி தெரியும். ஆனால் அனேகமாய் அத்தோடு சரி.
விமலியின் குரல் ‘கணீர்’:
“சௌக்யமா அப்பா? நமஸ்காரம் பண்றேன். திக்கு சரிதானே? இந்தா அமலி, உனக்கும் ஒண்ணு. சபை வஞ்சனையில்லாமல்”.
சுற்றிக் குழந்தைகள் ஆர்க்கின்றன. ஒன்று கழுத்தைக் கட்டுகிறது. ஒன்று மடியில் புரள்கிறது. இன்னொன்று முதுகில் ஏற முயல்கிறது. இரண்டு இடம் கிடைக்காமல் தாத்தா தாத்தா’ என்று கும்மியடித்தபடிச் சுற்றிச் சுற்றி வருகின்றன.
கூடம் அதிர்கின்றது.
“என்ன அமலி, கல்யாணம் வந்திருக்கா?”
“என்னவோ அம்மா, எல்லாம் உன் புண்ணியம்!”
அக்காவும் தங்கையும் ஏன் இப்படி ‘மேக்அப் பில் சிலம்பம் ஆடுகிறார்கள்?
“விமலி, மாப்பிள்ளை வரவில்லையா? அப்புறம் வருவாரா?”
“வரமாட்டார், உடம்பு சரியில்லே.”
“என்ன உடம்பு?”
“அவர் விஷயம் உனக்குத் தெரியாதா அப்பா? விமலி இனிமேல் ‘உங்களை என்றால் உடம்பைப் பிய்த்து பிடுங்கும்) என்றையப்படி நித்ய கல்யாணந் தான்!”
விமலியின் கணவன் படுத்த படுக்கையில்லை. ஆனால் சதா உடம்பைப் படுத்திற்று. அத்துடன் விமலிக்காக மனம் இரங்குகிறது. இருந்தும் என்ன செய்ய முடியும்? அவரவர் வழி அவரவர் தலைவிதி. இதை யார் யாருக்கு விளக்க முடியும்? பெண்ணைப் பெற்றவர்கள் எந்தக் கட்சியும் கொள்ள முடியாது.
அமலியின் அதிர்ஷ்டம் விமலியின் வாழ்க்கைக்கு நேர் எதிர்க்காட்டு.
ஆண்டவன் புண்ணியத்தில் அமலியின் கணவன் திடமாயிருந்தான். எல்லா விஷயத்திலுமே. அத்தோடு ‘கெட்டி’யும் கூட.எங்கோ தூர இடத்தில் பிழைப்பைப் பிடித்துப் போட்டிருந்தாலும், நல்ல சம்பளம் கை நிறையக் கிம்பளம்.
வேண்டாம்னா விட்டாத்தானே அப்பா? தள்ளி உதறினாலும் தானே வரதை என்ன பண்ணலாம்? புதைக்கிறதா, எரிக்கிறதா, நீங்களே சொல்லுங்கள் !*
(அட அமலி, நீ ரொம்பக் கற்றுக் கொண்டுவிட் டாய்! உன் பேச்சின் பூச்சே ! உன் வாயில் வெண்ணெய் உருகாதோ?)
அமலிக்கு நறுக்காய் ஒரே பிள்ளை. அவனுக்குப் பூணூல். அதற்குத்தான் கூட்டம் கூடியாகிறது. அமலி வீட்டாரின் பல சௌகரியங்களை முன்னிட்டு இங்கே நடக்கிறது; நடக்கணும். விமலியின் கல்யாணத்திற்குப் பிறகு இப்போத்தான் இந்த வீட்டில் மேளம் கொட்டப் போகிறது.
அமலிக்கு எல்லாம் இருக்கிறது. அதையும் மீறி ஆசை யிருக்கிறது. தன் பிள்ளையை அபிமான புத்ரனாய் வரிக்க மாட்டேனா என்று ஜாடை மாடையாய்ப் பேச்சு விட்டுத் திரட்டிப் பால் காய்ச்சிக் கொடுத்து (“உங்களுக் கென்றே, தனியா திட்டமா, ஸ்பெஷலா, வெல்லம் தாழ்ந்து, பால் மணக்க ) நோட்டம் பார்க்கிறாள். கண் போனாலும் இதெல்லாம் வெளிச்சம் போட்டுத்தான் தெரிகிறது.
“என்னம்மா, தாத்தா மேலே வாசனை தூக்கறதே?”
“தின்கற பண்டம்னா இதுகளுக்கு எப்படித்தான் மூக்கிலே வேர்க்கிறதோ? ஏண்டி அமலி, இந்தக் கிண்ணம் எப்படி இப்போ இங்கே வந்தது?”
“என் சொத்து.”
“என்ன உன் சொத்து, நீ வாங்கினது தட்டுக் கெட்டுப் போனது? இங்கிருந்து தட்டிக் கொண்டு போனதுதானே ! ஏன் கவலைப் படறே, இத்தோடு நீ சேர்த்து ஆள இதன் ஜோடியைக் கொண்டு வந்திருக் கேன் பார்! என் வீதத்துக்கு அம்மா கொடுத்தது. இதைத்தான் உன் பிள்ளைக்கு ஓதியிடப் போகிறேன்.”
அமலிக்கு முகம் கடுக்கிறது.
“இந்த மட்டும் நினைவாக இத்தனை நாள் காப் பாற்றி, சமயத்துக்கு கொண்டு வந்தாயாக்கும்!”
“சந்தேகமா? என் குடும்பக் கஷ்டத்தில் மார்வாடிக் கடையையோ வெள்ளிக் கடையையோ பார்க்கப் போகாமால் இதுவரைக்கும் என்னிடம் இருந்ததே உன் அதிர்ஷ்டண்டீ !”
“அந்தக் கிண்ணமும் வேண்டாம்; அத்தோடு நீ ஓதற அதிர்ஷ்டமும் என் பிள்ளைக்கு வேண்டாம்!”
விமலி மேலுதட்டைக் கீழுதட்டால் கடித்து, நாவில் துடிக்கும் பதிலை இழுத்து விழுங்குகிறாள். விமலி விவேகி. வந்த இடத்தில், அதுவும் கலியாணத்தில் சிண்டைப் பிடித்துக்கொள்ள வேண்டாம்.
“இதோ பாரப்பா இதை, என்ன வலிக்கிறதாம் இவளுக்கு?’ அவள் விழிகள் தளும்புசின்றன. “இது நாளானால் வெள்ளியில்லையா, நசுங்கினால் வெள்ளி யில்லையா? ஏதோ, ஏழைக்குத் தக்க எள்ளுருண்டை. இவளுக்குச் சரியா நான் மேருவாக முடியுமா?- சரியாத் – தான் பிடியேன், விரல் ஏன் இப்படி உதர்றது? உனக்கு அதுக்குள்ளேயும் அவ்வளவு வயசாயிடுத்தா என்ன?”
உடல் கொஞ்சம் பரபரப்பாய்த்தான் இருக்கிறது. இத்தனை வருடங்களுக்குப் பின் எந்த சேதியை வெளிப்படுத்த இக்கிண்ணங்கள் வேளைபோல், கூடியிருக் கின்றன? சேதியெதுவோ, இன்னும் ஒன்று பாக்கி. மூன்றும் கூடினால்தான் வேளையும் முழுமை, வேளை யின் சேதியும் முழுமையாகுமோ?
அமலி கொடுமைதான் பேசுகிறாள். ஆனால் உண்மையும்தான் பேசுகிறாள். அவளுக்குக் கொடுத்த கிண்ணத்தின் வேளை, அவளுக்கு அமுதகலசமாய்ப் பொங்கி வழிவானேன், விமலியின் கிண்ணம் பிரம்ம கபாலமாய்க் குறையாவே விளங்குவானேன்? அதிருஷ் உம் என்பது ஆளைப் பொறுத்ததா? வேளையைப் பொறுத்ததா?
கமலி வருகிறாள்.
அவள் வருகையின் முன்னொளி செவிவழி நினைவில் பதிவாகிறது.
வருடக் கணக்கான பழக்கத்தடியில் அதன் அச்சு யுதைந்து போனாலும் பதிவு தெரியாமல் இல்லை. எனக்குக் கண் குறைந்து போனதிலிருந்து அவள் ள்ளொளியை இன்னும் நிச்சயமாய் உணருகிறேன்.
வந்தவர்களுக்கு வரவேற்பாய்க் கமலி புன்னகை காட்டுகிறாள். அவள் பார்வை, கிண்ணங்களின் மேல் விழுந்ததும், மாலை வேளையின் வான வர்ணங்கள் போல் அவள் புன்னகையின் ஒளி மிளிர்வு மாறுகின்றது. கிண்ணங்களை எடுத்துக் கொண்டு உள்ளே செல்கிறாள். அவள் சென்ற பின் கூடம் மங்குகிறதோ? குழந்தைகள் எப்பவோ வாசலுக்கு விளையாடப் போய் விட்டன. திண்ணையை அவை எங்கு கண்டிருக்கின்றன ? கூடத் தில் தேங்கிய மோனத்தைக் கலைக்க விமலி ஆரம்பித்தாள்.
“அப்பா, எனக்கு ஒண்ணு தோணறது. நாளடைவில் ஒரு நாள், நாங்கள் இங்கே மறுபடியும் வரும்போது, நீ அடுப்பங்கரையிலோ, மாடியறையிலோ ஒரு பாறாங் கல்லைக் காட்டி “இது கமலியாய் இருந்தது” என்று சொன்னால் நாங்கள் ஆச்சரியப்படமாட்டோம், ஏன் என்று கூடக் கேட்கமாட்டோம்.”
நாங்கள் கிராமத்திற்கு வந்த பின் இங்கே எங்களுக்குப் பேச்சு இன்னும் அவசியமில்லை. ஆற்றங் கரையும் தென்னந்தோப்பும், களத்துமேடும், அரசமரத் தடியில் பாம்புப் புற்றும் எங்களை வானத்தின் மோனத் துடன் இழைத்துவிடுகின்றன. உண்மையில் விமலி அமலி, நீங்கள் வருகையில் சந்தோஷமாய்த் தானிருக் கிறது. ஆனாலும் வந்தபின் உங்கள் ஓயாத பேச்சும் இரைச்சலும் எப்போது போகப் போகிறீர்கள் என்றுதான் இருக்கிறது. இதை உங்களிடம் எப்படிச் சொல்லி மீள்வது ?
வாசற்குறட்டில், கயிற்றுக் கட்டிலில் படுத்திருக்கிறேன். ஓசை எப்பவோ அடங்கிவிட்டது. கவிழ்ந்த. கிண்ணம் போன்ற வான் தட்டில் நட்சத்திரங்கள் கதிர் கதிராயும், உருவியும், இறைந்தும், உதிர்ந்தும் கிடக் கின்றன எந்த ஆத்திரத்தில் ஆண்டவன் வானத்தைச் சூறையிட்டிருக்கிறான்? கடவுள் என்கிறோம், அவனு டைய கசந்த ஆசைகள் என்னென்னவோ? இத்தனை நட்சத்திரங்களைக் கண்டுவிட்டதால் மனம் மகிழ்ச்சி யடைந்து விடவில்லை.
திண்ணையில் குழந்தைகள் தூக்கத்தில் உருள் கின்றன. அவர்களுடன் அமலி, விமலி. இன்னும் நாலு பேர் படுத்தாலும் இடம் கொடுக்கும். கடல் போலத் திண்ணை. குஞ்சுத் திண்ணையில் கமலி-இல்லை,- அவளிடத்தில் கமலியைக் காணோம். சற்று நேரம் காத்திருக்கிறேன். அப்பவும் காணோமே! எழுந்து கோவில் கதவுபோலக் கனத்த வாசற்கதவை மெதுவாய்த் தள்ளி வழி நடையுள் வந்து எட்டிப் பார்க்கிறேன். மொக்கு மலர்ந்தாற்போல் மிருதுவான வெளிச்சத்தில் கூடம் குளிர்ந்திருக்கிறது.
அம்மாவின் படத்துக்கு எதிரே, பெரிய குத்து விளக்கில் – அதன் உயரம் என் இடுப்புக்கு மேல் – சுடர் ஸ்தம்பித்து நிற்கிறது. அதைத் தனக்குக் குறியாய்க் கண்டது போல் கமலி அசைவற்று நிற்கிறாள்.
படத்தில் அம்மாவின் கண்களில் கருணை தெரிய வில்லை. படத்தில் எந்தச் சமயமும் சிரித்த முகத்தில் சீற்றம் சிந்துகிறது.
படத்தடியில் மூன்று கிண்ணங்கள்.
நான் ஓசைப்படாமல் நழுவி மறுபடியும் கட்டிலில் வந்து உட்கார்ந்து கொள்கிறேன். வானத்தின் சீறல் ஏன் என்று இப்போது தெரிகிறது,
அமலியும், விமலியும், கமலி கல்லாக உறைந்திருப் பதைத்தான் கண்டிக்கிறார்கள். அத்தனைக்கத்தனை அவள் இருந்த கலகலப்பை அவர்கள் எப்படி அறிவார் கள்? அவர்கள் வருமுன்னரே அவள் பேச்சு அடங்கி விட்டது. வைராக்கியம் அற்ப விஷயத்திலிருந்துதான் பிறக்கின்றது. கமலியின் வைராக்கியத்திற்குக் காரணம் என் கிண்ணங்கள்தாம். சீதத்தில் பதித்த பண்டம்போல், மேலி தன் வைராக்கியத்தின் கவசத்தில், வயதில் சிதை யாமல் உருத்திகழ்கின்றாள்.
கமலி, அமலி, விமலி மூவரும் சேர்ந்து வெளியே சென்றால் தாயும் பெண்களும் என்று எவர் நினைப்பர்?
ஆனால் கமலி வாசற்படி தாண்டிப் பத்து வருடங் களாகின்றன
கமலி தபஸ்வினி.
எனக்குச் சில சமயங்கள் தோன்றுவதுண்டு. அண்டாவைச் சொம்பால் நிரப்புவது போன்று, கமலி தன் தவத்தை, தான் அவ்வளவு கடுமையாய் காக்கும் தன் வீம்பை, நாளுக்கு நாள், வருடா வருடம் ஏதோ ஒரு முறையில், பெண்களுக்கு இரண்டைக் கொடுத்துவிட்டுத் தனக்கு மீத்திக் கொண்டிருக்கும் கிண்ணத்தால் அளந்து அளந்து, தனக்குப் பெருக்கிக் கொள்கிறாளோ?
மறுபடியும் இக் கிண்ணங்கள் தாம் வருகின்றன. அம்மா, கமலி,நான்,எங்கள் மூவரின் விதிப்பயனை, அவரவர்க்கு அவரவர் வீதமாய் அளந்துவிட்ட கிண்ணங் கள் ஒன்று: ஒன்றின் தலையில் சுழித்துவிட்டால் ஒன்பது. வாழ்க்கை எப்படித் தன் அர்த்தமிகையினாலேயே, அர்த்த மற்றும் இருக்கின்றது!
ஆமோதிப்பில் ஒரு நட்சத்திரம் உதிர்கின்றது.
ஊமை உகுத்த கண்ணீர்.
அம்மா, உன் கோபம் தணிவாயா?
உள்ளே கமலி உன்னோடு வாதாடிக் கொண்டிருக் கிறாள்.
எனக்கும் வயதாகிவிட்டது. நீயே சொல்லியிருக்கிறாய். “இந்த வீட்டிலேயே ஆண்களுக்கு ஆயுசு கட்டை ‘முணுக்’கென்றால் மளுக்.”
என்னைச் சொல்லிவிட்டு நீ முறிந்துவிட்டாய்.
ஆனால் அதற்கு முதற் காரணம் நான்தான். முதலில் என்னை மன்னி. பிறகு எங்களை மன்னி: நீ உயிரோடி ருக்கையிலேயே எங்களை மன்னிக்காமலே போய்விட்ட தற்காக உன்னையே மன்னித்துக் கொள்.
சீறாதே.
என் வேண்டுதலுக்கிரங்கி வானம் கலக்கம் கொள் கிறதோ? நட்சத்திரங்கள் ஒரு முறை மங்கி மறுபடியும் வீங்குகின்றன. வானம் தன் நெற்றியில் மன்னிப்பில் இட்டுக் கொண்ட உதிரி விபூதிபோல், பிசுபிசுவென்று சிறியதொரு வெண்மேகம் திடீரென எங்கிருந்தோ தோன்றுகிறது.
கொட்டு மேளத்தின் கெட்டி முழக்கத்தினிடையே, வலது காலை முன்னால் வைத்துப் படியை மிதி,” என்று அம்மா சொல்லிக்கொடுத்து மருமகள் வீட்டுள் நுழைந்து மாமியாரை நமஸ்கரித்ததும், அம்மா ஆசீர்வாதம் பண்ணியது இன்றுபோல் கேட்கிறது.
“எனக்குப் பெண் இல்லாக் குறையைத் தீர்த்து வைக்க வந்தாயா குழந்தை !” என்று சொல்லி அம்மா கமலியைக் கட்டிக்கொண்டாள். அப்போது என் கன்னங்கள் வெட்கமற்றுச் சில்லிட்டன. இன்னும் அந்த ஈரம் மனதில் நிற்கிறது. முன்னுமில்லை, பின்னுமில்லை; அந்த நிமிஷத்தின் தெறிப்பில்தான் அம்மா தன்னுள் இத்தனை நாள் எனக்குக் கூடத் தெரியாமல் அடக்கி வைத்திருந்த ஆசை தெரிந்தது.
வேளைப் பொருத்தமில்லாமல் சாந்தி முகூர்த்தம் இரண்டு மாதங்கள் தள்ளிப்போயிற்று. ஆனால் அம்மா வின் ஆசை, மருமகளை நிறுத்திக் கொண்டாள்.
கூச்சமும் களங்கமுமற்ற கமலியின் பேச்சின் வெகு ளிக்கு எல்லையே இல்லையோ என நான் வியப்புற்ற துண்டு. லஜ்ஜையும் பட்டதுண்டு. நாலு சகோதரர் நடுவில் ஒரே பெண். செல்லப் பெண்ணாய் வளர்ந்த பயன்.
முதலில் அவள்தான் பேசினாள். சே.இத்தனை வயதாகியும் இந்த விஷயத்தில் ஏன் பச்சைக் குழந்தையா யிருக்கிறோம்? யார் முதலில் பேசினால் எல்ன ? ஆனால் ஒரு முக்கியமான தலை போகும் விஷயமாய், விலை மீறிய நகையாய் ஏன், மனப் பேழையில் தனியறை யில் முடிச்சுப் போட்டு வைத்துக் கொள்கிறோம்?
“எங்கிருந்தோ வந்தீர்கள்; என் கையைப் பிடித்தீர்கள், உங்களுக்கென்று ஆக்கிக்கொண்டு விட்டீர்கள்”
நான் கூச்சமுற்றேன்.
“சினிமா சினிமா-”
அவள் கண்கள் நிறைந்தன. “உண்மையாய், சத்தியமாய், விட்டேன் என்று சொல்லுங்கள்-”
கையை விடுவித்துக் கொள்ள முயன்றேன். “உஷ்…. அம்மா வந்துவிடப் போகிறாள்!”
“விட்டேன் என்று சொல்லுங்கோளேன்!”
“விட்டேன்” என்ற பின்தான் விட்டாள்.
அப்பட்டமான உண்மையோ உணர்ச்சியோ அதன் உக்கிரத்தில் வெளிப்படுகையில் அது வெளிப்படும் சொல் லின் உருக்குறைவால் பொய்யெனத்தான் படுமோ?
பிறகு இன்னொரு சமயம்.
“உங்களை எனக்கு முன்னாலேயே தெரியும்” என்றாள்.
அவளிடமிருந்து ஏதோ ஒரு மணம் – தாழம்பூ ஜடை யல்ல. இளமையின் கமழ்ச்சி மண்டையைக் கிறு கிறுத்தது.
“ஒரு நாள் நானும் அம்மாவும் கடற்கரைக்கு வந்திருந்தோம்.”
:அதோ பார் அந்த நாலு கலர்ச் சொக்காய்களுக்கு நடுவில் ஒரு வெள்ளை ஜிப்பா, அந்த பிள்ளையாண்டான் ஜாதகத்தைத்தான் இன்று வாங்கி வந்திருக்கிறேன். கடவுள் யத்தனம் எப்படியோ?’ என்று அம்மா பெருமூச் செறிந்தாள். அம்மாவின் கவலை அம்மாவுக்குத் தெரியும். பெண் மதமதவென வளர்ந்து விட்டாளே!
‘அவருக்கே என்னைப் பண்ணி வைத்துவிடு அம்மா!’ என்றேன். ஏன் அப்படிச் சொன்னேன்? எனக்குத் தெரியாது. அம்மாவுக்கிரங்கியா? உங்கள் முதுகுக்கு மயங்கியா? அப்பவும் உங்கள் முதுகைத்தான் கண்டேன் முகம் காணவில்லை. அல்ல பின்நேரப் போவதன் முன்வாக்கா?
“என்னைப் பெண் பார்க்க வந்த முதல் வரனும் கடைசி வரனும் நீங்களேதான். நாலுபேருக்கு நமஸ் கரித்து எழுந்து அவர்கள் வெறிக்க வெறிக்க அவர்கள் எதிரே நின்று அவர்கள் கண்பட்ட எச்சிலாய் நான் இல்லை.”
அவள் மூச்சு என் முகத்தை எரித்தது.
“இப்போதெல்லாம் எனக்கு இப்படிக் கூடத்தோன்று கிறது. அவள் கண்கள் சஞ்சலித்தன. ‘கோரினதே கிடைத்து விட்டது என்றாலும் கிடைத்த பின் அப்படிச் சுலபமாய்க் கிடைத்து விடலாமோ? அப்படியும் எனக்குத் திருப்தியில்லை. இன்னொரு விதமும் தோன்றுகிறது. அப்படித் தோன்றுவதைச் சரியாய் வெளிப்படுத்தத்தான் எனக்குத் தெரியவில்லையா, இல்லை அப்படித் தோன்று வதே சரியில்லையா? எப்படியென்று நீங்கள்தான் சொல்லவேண்டும் இப்போதெல்லாம் உங்களைக் கண்டாலே அழுகையாய் ஆத்திரமாய் வருகிறது. நீங்கள் ஏன் நீங்களாய் இருக்கிறீர்கள்? உங்களுக் கென்று தனி உருவாய் அதற்கென்று அதனுடைய தனித் தன்மை உடைய பழக்க வழக்கங்களுடன் நீங்கள் வளைய வருவதே, உங்களுக்கென்று நீங்கள் இருப்பதே என்னுடைய பிரிவினைதான்; என்னைத் துண்டம் போட்ட துடிப்புத் தான்; என்ன சொல்கிறீர்கள்?”
அவள் முகம் விட்டு விட்டுச் சிவக்கின்றது. திடீர் திடீரென வெளிப்படும் இந்த உக்ரம் காண்கையில் நெஞ்சில் ஒரு தினுசான பீதிதான் காண்கிறது. ஏதேதோ வினாத் தெரியாத புழுக்கள் போன்று சந்தேகங்கள் ஒன்றோடொன்று புழுங்குகின்றன.
ஒரு நாள் ஆபீசிலிருந்து திரும்ப நேரமாகிவிட்டது.
அம்மா ராமர் கோவிலுக்குப் போய்விட்டாள். கதை கேட்க.
கமலி, தட்டும் மணையும் போட்டுக் காத்துக் கொண் டிருந்தாள்.
“உங்களுக்குப் பரிமாற இன்றுதான் எனக்குக் சான்ஸ் கிடைத்தது”.
அவள் வெற்றியுணர்வு அவள் தோற்றத்திற்கே ஒரு முறுக்கேற்றியிருந்தது. காற்றில் மிதக்கும் விளக்கின் வெளிச்சத்தில் அழுந்தச் சீவிய கூந்தல் பளபளத்தது. வளையல்கள் கைகளில் குலுங்கிச் சுடர்மூச்சு விட்டன அவளிடம், அவளே குங்கிலிய ஜ்வாலைபோல் ஒரு வெறி மிளிர்ந்தது அவளிஷ்டப்படியே ஸ்வீகரித்துக் கொண்டு என் சோபையையும் வலுவையும் அவள் ஒளியில் இழந் தேன். போல் தோன்றிற்று. இன்னதென்று புரியாமல், அவள் மேல் அல்ல, அந்த வேளையின் மேல் அது என்னைச் சதிசெய்து விட்டாற்போல் என்னில் ஊமை யானதோர் கோபம் மூள்வது உணர்ந்தேன்.
“என் கிண்ணங்கள் எங்கே?”
“கிண்ணங்கள் எதற்கு? அதான் நான் இருக்கிறேனே!” என்றாள்.
“குழம்புக்கொரு கிண்ணம்.”
ரஸத்துக்கொரு கிண்ணம்.
மோருக்கொரு கிண்ணம். அர்த்தமில்லாமல் முனகினேன்.
“ஏன், நான் பரிமாற மாட்டேனா?”
எனக்குச் சட்டெனப் பதில் எழவில்லை. அரை மனதில் தயங்கி நின்றேன்.
விட்டிற் பூச்சி ஒன்று என் முகத்தில் மோதி, தட்டில் வீழ்ந்து நெளிந்தது. சுவாமி விளக்கில் சுடர் பொரிந்தது. அவள், விரலோடு விரல் முறித்தபடி நின்றாள். எங்கள் இருவரிடையிலும் மோனம் விரிந்து அதன் கரைகள் அகன்றன, எதிர்க் கரைகளில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றோம்.
அவள் விழிகளில்-அவள் விழிகளே சற்று மேட்டு விழிகள் – மங்கிய தழல் பிழம்பிற்று. விடுவிடெனக் கிண்ணங்களை நிரப்பி என் தட்டைச் சுற்றி வைத்து விட்டுச் சரேலென அவ்விடம் விட்டகன்றாள்.
நான் சாப்பிடவில்லை. வாசலில் போய் உட்கார்ந்து கொண்டேன்.
குழம்புக்கொரு கிண்ணம்.
ரஸத்துக்கொரு கிண்ணம்.
மோருக்கொரு கிண்ணம்.
ஆர்மோனியப் பெட்டியின் பல்லை அமுக்கினாற் போல் கிண்ணங்களின் பல்லவி தன்னைத்தானே வாசிக்க ஆரம்பித்து விட்டது.
மறுநாள் முழுதும் அவள் தெனபடவில்லை. அவள் அரவங்கள் கூடக் கேட்கவில்லை. வேலை அதிகம் என்று சாப்பிடாமலே ஆபீஸுக்குப் போய்விட்டேன். மணி மூன்றிருக்கும். எதிர் வீட்டுச் சீமாச்சு இறைக்க இறைக்க என் ‘ஸீட்’டுக்கு ஓடி வந்தான்.
“மாமா மாமா? உங்களைப் பாட்டி கையோடு அழைச்சுண்டு வரச்சொன்னா.”
வயிற்றில் புளியைக் கரைத்தது. “வீட்டில் எல்லோ ருக்கும் உடம்பு சரிதானேடா ”
“அதென்னமோ தெரியாது! உங்களை அவசரமா அழைச்சுண்டு வரச்சொன்னா.”
சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை.
நான் உள்ளே நுழைந்ததுமே வீட்டில் ஒளியின்மை தெரிந்துவிட்டது.உள்ளிருந்து அம்மா வந்தாள். பயத்தில் அவள் விழிகள் வட்டங்களாயிருந்தன.
“அவள் போயிட்டாடா!”
கால்கள் வெலவெலத்தன; சுவரைப் பிடித்துக்கொண்டேன்.
“உங்கள் ரெண்டு பேருக்கும் என்னடா சச்சரவு? ராத்திரியே ரெண்டு பேரும் சாப்பிடல்லியா? வடித்த சாதம் அப்படியே ஜலம் கொட்டிக்கிடக்கே!”
எனக்குச் சீற்றம் மூண்டெழுந்தது. “இதைச் சொல்லவா அம்மா இவ்வளவு அவசரமாய்க் கூப்பிட் டாய்? அவள் எங்கே?”
“இன்னிக்குக்கூட அவள் சாப்பிடவில்லை. ரெண்டு மூணு தடவை கேட்டுப் பார்த்தேன் சரியான பதில் ல்லை, எனக்குத்தான் ஏகாதசியாப் போச்சு. ரேழியில் அரைக் கண் உறக்கமாயிருந்தேன். எதிரே திடீர்னு, கையில் ஏதோ இரண்டு துணி திணித்த பையோடு வந்து நின்னா.”
“அம்மா, நான் போறேன்.”
“எங்கேடி?” தூக்கி வாரிப்போட்டு எழுந்து உட்கார்ந்தேன்.
“ஊருக்குப் போறேன். இந்த வீட்டில இனமேல் எனக்கு வேலையில்லை.”
“என்னடி பேத்தறே?”
“இல்லை. சொன்னால் உங்களுக்குப் புரியாது” என்று சொல்லிக்கொண்டே என்னைத் திமிறிண்டு போயிட்டாள். “அப்படி என்னடா உங்களுக்குள்ளே நடந்துடுத்து? நாம் ஏமாந்து போயிட்டோம்டா. கைக்கடங் காத குதிரையிடம் மாட்டிக்கொண்டோம். அப்படியே நீ கோபித்தாலும், கோபிக்க உனக்கு உரிமையில்லையா? அவளுக்கு இப்படித்தான் தோணணுமா?”
இதே மூச்சில் இன்னும் ஏதேதோ அம்மா அரற்றிக் கொண்டிருந்தது காதில் ஏறவில்லை. கைக் கெடியாரத் தைப் பார்த்தேன். ஸ்டேஷனுக்கு ஓடினேன்.
ஊருக்குத்தான் போகிறாளோ? அல்லது, வேறேதாவது பண்ணிக்கொண்டு விடுகிறாளோ?
விளக்கில் பச்சை விழுந்துவிட்டது. ப்ளாட்பாரத்தில் கூட்டம் குழுமிவிட்டது. கூட்டத்தில் ஒட்டாமல் தன் நிழலைக் கண்டு தானே மிரளும் விலங்கு போல் ஓர் உருவம், தன்னோடு தான் ஒண்டிக்கொண்டு சுவரோரமாய்….
விரைந்து சென்று மளனமாய்க் கையைப் பிடித் தேன். கை தகித்தது.
உடல் பதறி முகம் என்பக்கம் திரும்பிற்று. குழிவாங்கிய விழிகளில், எரியும் கனல் தூய்மையில், புடைத்தெழுந்து வடியும் மூச்சில், அவளிடமிருந்து ஒளி வீசிற்று. ரிஷி கோபம் இப்படித்தான் இருக்குமோ? தன்னையே அழித் துக் கொள்ளுமளவுக்குத் தன்னையே மறந்ததாய்…
“கமலி, முடுக்கிக் கொள்ளாதே. கிண்ணங்களை மறந்து விடு” என்றேன்.
“எப்படி மறப்பது? உங்களை இப்போது புரிந்து கொண்டு விட்டேன். உங்களிடம் நான் ஏமாந்து போனேன்.”
எனக்குச் சுருக்’ கென்றது. “என்ன புரிந்துகொண்டாய்? என்ன ஏமாந்தாய்?”
“அவைகள் கிண்ணங்கள் இல்லை. உங்கள் எண்ணங்கள்..”
அப்பவே, நெஞ்சைத் துருவும் கிறீச்சில் ஊதிக் கொண்டு ரயில் ஸ்டேஷனுள் புகுந்தது.
மண்டையை, தலையினின்று தனி வில்லையாய் பெயர்த்துவிடும் போன்ற உள் எழுச்சியில் வலி நெற்றிப் பொட்டைத் துருவிற்று. தலையை இரு கைகளாலும் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டேன். எதிரே, ஸ்டேஷன் ஜனங்கள், எல்லா உருவங்களும் எழுதி அழித்துவிட்டாற் போல் மங்கி ஒன்றோடொன்று இழைந்து இருண்டன.
“கிண்ணங்கள் இல்லை, உங்கள் எண்ணங்கள்.”
கிண்ணங்களின் பழக்கம் எப்போது துவங்கிற்று என்பது கூட மறந்துவிட்டது. எந்நாளாவோ அவைகளை ஆள்கிறேன். பள்ளியிலிருந்து கல்லூரி வரை, பிறகு உத்தியோகத்திற்கும் வெகு நாட்களுக்குப் பின் ஓட்டலில் சாப்பிட்ட பழக்கமாயிருக்கலாம்.
வாழ்க்கை பாதிக்கு மேல் வீட்டை விட்டுத் தனித்தே யிருந்து, என் காரியத்தை நானே பார்த்துக்கொண்டு அதனால் ஏற்பட்ட என் தனிமை, என் ஒதுக்கம், என் பத்ரம்……
இப்படி என்னை விட்டுக் கொடுக்காமல் என்னுடன் என்னைக் கெட்டியாய் பிடித்துக் கொண்டிருக்கும் அவசியம் இல்லாவிட்டாலும், சுபாவம் படிந்து போயிற்று
வீட்டோடு ஒட்ட வழி முதலிலேயே நேரவில்லை.
“அப்பா மாரடைப்பில் போய்விட்டார்.”
தந்தியைக் கையில் பிடித்துக் கொண்டு திக்பிரமை யுடன் நின்றது ஞாபகமிருக்கிறது. ஆனால். மருந்துக் கொரு கண்ணீர், தொண்டையில் ஒரு அடைப்புக்கூட எழவில்லை.
இத்தனைக்கும் என்னை ஆளாக்கியதே அப்பாதான், நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை. படிக்கும் நாளிலும் வேலைதேடும் நாட்களிலும், நான் கேட்டும் கேட்காமலும் ‘ரோக் ரோக்’ காய் அனுப்பி வைத்து, தன் கஷ்டம் என்னவோ, அது என் காதுக்கெட்டாமல் -அது அப்பாவின் பத்ரம் போலும்.
தந்தை வழி மகன்.
அப்பாமேல் எனக்கு அன்பு இல்லையா? நன்றி யில்லையா ? மதிப்பில்லையா?
ஆனால், கண்ணீர் இல்லை.
அன்றிரவு ரயிலேறிக் காலையில் ஊர் போய்ச் சேர்ந்தேன்.
வாசலில் வண்டிச் சத்தம் கேட்டு அம்மா உள்ளிருந்து ஓடி வருகிறாள். அவளைத் தாங்கிக்கொண்டு நாலுபேர், அம்மா என்னைக் கட்டிக்கொண்டு கதறுகிறாள், நான் என்னை விடுவித்துக் கொள்ள முயல்கிறேன். என்னில் எழும் வெறுப்பை, முகத்திலிருந்து மறைக்க நான் முயற்சி கூடச் செய்யவில்லை. அவள் மேல் இப்போது எனக்குத் துளிக்கூட இரக்கம் தோன்றவில்லை.
பிள்ளை மனம் கல்.
என் கண்களைக் கண்டதும் திகைத்து அம்மாவே ன்னடைகிறாள். பிறகுதான் பரிதாபம் கசியலாமா வேண்டாமா எனப் பார்க்கிறது.
உயிரையே கொடுத்து அப்பா- பிறகு, அல்ல- அதற்கு முன்னாலிருந்தே அம்மா-இப்போது கமலி, இவர்கள் அபரிமிதமாய்த் தங்கள் அன்பை என்மேல் கொட்டி, லஞ்சம் கொடுத்து என்னிடமிருந்து எதைப் பறிக்கப் பார்க்கிறார்கள்? என்னையேவா? அல்ல; அவர்கள் அன்பை என்னால்தான் புரிந்துகொள்ள முடியவில்லையா ? புரிந்துகொள்ளவே ஒன்றுமில்லையா? என்னைத் தன்மயமாய் விழுங்கும் அன்புக்கு விட்டுக்கொடுக்க முடியவில்லையா?
குழம்புக்கொரு கிண்ணம்
ரஸத்துக்கொரு கிண்ணம்
மோருக்கொரு கிண்ணம்
நான் என் நினைவுகளிலிருந்து மீண்டபோது, நாங்கள் இருவர் மாத்திரம் ப்ளாட்பாரத்தில் தனித்திருந்தோம்.
“கமலி, நம்மிடையில் இனி கிண்ணங்கள் குறுக்கிட வேண்டாம்.”
அவள் கை என் கையுள் உயிரற்றுக் கிடந்தது. கன்னங்களில் அருவிகள் பளபளத்தன. கிண்ணங்களை ஒதுக்கி விடலாம், ஆனால், எண்ணங்கள்?
மணவறையில் முதலிரவு.
கமலி ஜன்னலோரமாய் நின்று கொண்டிருக்கிறாள்.
கூஜாவிலிருந்து பாலைக் கிண்ணத்தில் விளிம்புவரை ஊற்றுகிறேன்.கீழே துளியும் சிந்தாதபடி, என் சமாதானத்தை இரு கைகளிலும் ஏந்தி, ஜாக்கிரதையாய் அடி மேல் அடிவைத்து அவளிடம் செல்கிறேன்.
என் அரவம் கேட்டு முகம் என் பக்கம் திரும்புகிறது என்னைக் கண்டதால் கண்களில் ஒரு வினாக்கூடத் தோன்றவில்லை.
கிண்ணத்தை அவளிடம் நீட்டுகிறேன்.
என்னிடமிருந்து கிண்ணத்தை வாங்கிப் பாலைக் கீழே ஊற்றுகிறாள். படக்கென்று ஆத்திரத்துடன் சாய்க்க வில்லை. தீர்மானத்துடன், நூலருவியாய் ஒரே நிதானத்தில் சிந்திக் கொண்டேயிருக்கிறாள்.
முகத்தில் எவ்விதமான மாறுதலுமில்லை. ரயிலடி. யிலிருந்து அழைத்து வந்த அன்றிலிருந்தே அப்படித் தான்.
கள்ளிச் சொட்டுப் போன்ற பால், அதன் தேக்கம் தரை மேல் சோம்பி அகல்வதைப் பார்த்துக்கொண்டு நிற்கிறேன்.
அன்றொரு நாள்-ஆனால், என்றுமே தான்- சிருஷ்டியின் பொருள்கள் அனைத்தும் ஆண்டவனின் அத்தனை எண்ணங்களாய், அவ்வெண்ணங்களின் ரகஸ் யங்களைத் தம்முள் அடக்கிக்கொண்டு, பார்க்குமிட மெல்லாம் இரைந்து கிடக்கின்றன. ஆனால், அவ்வெண் ணங்களை எண்ணுவதற்கு, அவைகளுள் பொதிந்த அவைகளின் பொருளைச் சிந்திக்கத் தோன்றுவதற்கு வேளையின் கூடுதல், திருஷ்டியின் அதிருஷ்டம் வேண்டும்.
அன்றொருநாள், மழை பெய்து ஓய்ந்ததும் மல்லி கைப் புதரடியில் ஒரு நத்தை ஊர்வதை கண்டேன். வெகு மெதுவாய், ஆனால் வெகு காரியமாய், தூக்க, முடியாமல் தன் ஓட்டை முதுகின் மேல் சுமந்து செல் கிறது. இதுபோல், நானும் என் பத்தரத்தை, என் பத்ரமே என் கோட்டையாய், என் கோட்டையே என் பாரமாய், என் மேல் சுமந்து கொண்டு எங்கு செல்கிறேன்?
என்மாதிரியே ஒவ்வொருத்தரும் அவரவர் சுமையுடன் ……
என்னிடம் எதைத் தேடி ஏமாந்ததற்காகக் கமலி அன்று பாலின் சமிக்ஞையில் உணர்த்தியபடி, தன் வாழ்க்கையைத் தன் மௌனத்தின் பலிபீடத்தின்மேல் ஆஹுதியாய் ஏன் வடித்துக் கொண்டிருக்கிறாள்?
அம்மாவின் மோனம், உடையாத கட்டிபோல் விண்விண் என வீடு முழுதும் விறுவிறுக்கின்றது. பகை செதுக்கிய முகத்தின் வார்ப்பு நாளுக்கு நாள் இறுகு றது. அவளால், படிதாண்டிய மருமகளை மன்னிக்க முடியவில்லை. அன்பின் தராசு எவ்வளவு நம்பத் தகுதி யற்றதாயிருக்கின்றது ! சிலந்தியிழைப் பிசகில் அன்பு பகையாய்த் திரியக் காத்திருப்பதை நினைக்க சிரிப்புக் கூட வருகிறது.
இத்தனை முரண்களின் நடுவில் இயற்கை தன் கட்டாயத்தை எங்கள் உடல்மேல் முறித்துத் தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறது. மண்ணில் மலடு இல்லை என்பதை நிரூபிப்பது போலும் அமலி தோன்று கிறாள். அவளுக்கு இரண்டு வருடங்களுக்குப்பின் விமலி.
பிரசவ அறையிலிருந்து குழந்தையை எடுத்துவந்து அம்மா என்னிடம் காண்பிக்கிறாள்.
“அம்மா, வீட்டில் பெண்ணில்லா உன் குறையைத் தீர்த்து வைக்க ஒண்ணுக்கு ரெண்டாச்சு, போ” என்கிறேன்.
“அதுக்கென்ன குறைச்சல்? ஆனால், குணத்துக்குத் தாயாரைக் கொள்ளாமல் இருக்கணும்”.
இம்மாதிரித் தெறிப்பில்தான், வயிற்றுள் வருடக் கணக்காய்க் குமுறும் ஜ்வாலை வெளியே குபீரிடுகையில்,
துபட்ட நெஞ்சு கருகுகின்றது-
ஆனால், காரியங்கள் ஏதும் தடைப்படுவதில்லை. அவை நடைபெற்றுக் கொண்டுதானிருக்கின்றன. கடமைகள் தவறாது நிறைவேறிக்கொண்டுதானிருக் கின்றன. ஆனால், செயல்களை ஒன்றுடனொன்று இணைத்து அவைகளுக்கு அர்த்தத்தையும் அந்த அர்த்தத்திலிருந்து ஊக்கத்தையும் கொடுக்கும் பரிவுதான் இல்லை.
அவரவர் கிண்ணங்களில் அவரவர் எண்ணங்கள்.
எண்ணங்களில் மூழ்கி மூச்சுத் திணறி, ஈப்போல் நெளிந்து கொண்டிருக்கிறோம்.
கண்ட பலன் இதுதானா?
கமலி உள்ளிருந்து வெளிப்படுகிறாள். நேரே என்னிடம் வருகிறாள்.
“இப்போது அம்மா என்னிடம் சொன்னார். இவை களை உங்களிடம் சேர்த்து விடும்படி” கிண்ணங்களை என்னிடம் கொடுக்கிறாள்.
அந்தக் கணமே கிண்ணங்களிலிருந்து என் விடுதலையை உணர்கிறேன்.
கிண்ணங்களின் எண்ணங்களின் அழுத்தலினின்று என் மீட்சியை உணருகிறேன். அவைகளைத் தூர வீசி எறிகிறேன். ஒன்றன்பின் ஒன்றாய் அவை குறட்டுக் கல்லில் பட்டுத் தெறித்து விழும் ஒலி, இருளில் இனிக்கின்றது.
விலங்கின் தெறிப்பைப்போல்.
கமலியின் கன்னங்களை என் கைகளால் தொடுகிறேன். என் கன்னங்கள் திடீரெனச் சில்லிடுகின்றன.
கண்ணீரின் ஆசி இன்னதென்று இப்போதுதான் புரிகின்றது.
– கங்கா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1962, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.
![]() |
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க... |