காலம் கடந்து…
(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘சாமத்தைத் தாண்டித் தலைக்கோழி கூப்பிடுகிற நேரம் இருக்குமா?’ எழுந்திருந்து மாடுகளுக்கெல்லாம் கூளம் போட்டுவிட்டு வர்ரதுக்கு முன்னால், சிணுங்கிக்கொண்டிருந்த மழை மடை உருவிவிட்டதுமாதரி சீறி வந்து பூமியைத் தாக்கும்போலத் தெரிந்தது.
உடம்பின் சூடு, பரவும் குளிரினால் பாதித்தது. அதோடு அவருக்கு ‘அந்த நாள்’ முதலே தரையில் ஒரு பொட்டுத் தூத்தல் விழத் தொடங்கி விட்டாலே போதும்; மன்மதன் மறைந்து நின்று பாணம் எய்ய வேண்டியதில்லை. வருணனின் வரத்தே போதும்.
இவரது படுக்கை, வீட்டின் முன்வராண்டாவிலுளள சிமெண்ட் திண்ணையில்தான். உள்ளே இருந்த படுக்கை இங்கே வந்து அனேக வருஷங்கள் ஆயிட்டது.
ஒருநாள் இவர் அவளை அணுகி, தொட்டபோது எரிச்சல்பட்ட மாதரி இருந்தது. முகம் சொல்லலையானாலும் உடம்பு சொல்லுதே. மரத்துப்போன கையைத் தொட்டமாதிரி இருக்காம்!
பாவம் போகட்டும் என்கிற அனுதாபம், ரசிப்பு இல்லை யென்றாலும் பெண்மைக்கு உரிய சகிப்புத்தன்மை, இப்படிக் கழிந்தன சில. இவருக்கும், இது வேண்டாமே என்று பிறகுதான் தோணும். என்ன பிணைப்பு இது சை என்று எரிச்சல படுவதெல்லாம் அந்த சமயத்தோடு சரி.
அவர்களின் நெருக்கத்தில் விரிசல் அகலமாகிக்கொண்டே வந்து ஒரு கோடையில் வெளியே வந்த படுக்கை நிரந்தரமாகிவிட்டது இங்கெயே.
இந்த வயசுக்குப்பிறகு “இது” வேண்டாந்தான்; இருக்கே… இருக்கிறதை எங்கே கொண்டுத் தள்ள, அறுபது வயசை எப்பவோ தாண்டியாச்சி; ஆறு கழுதை வயசு சொச்சம். “மணிவிழா” எளவெல்லாங் கொண்டாடியாச்சு. பேரப்பிள்ளைகளெல்லாம் அண்ணைக்கிக் கேலி செஞ்சது.
“இன்னும் எளவட்டந்தான்; ரெண்டு கலியாணம் முடிக்கலாம் இனியும்” என்று கேலியாடினார்கள் தாயாதிக்காரன்கள். ஆனா- உண்மை என்ன; அதைச் சொல்லமுடியுமா.
அந்த ராத்திரி முதநாள்…
உப்போடையில் சேறு கலக்கி கையினால் மீன் பிடிப்பார்கள் கோடையில். குரவை மீன். இந்த உப்போடை மீனுக்கு அப்படி ஒரு ருசி; மீன் கறியோ தேன்கறியோ என்று.
முதன்முதலில் இறங்கி மீன் பிடிப்பவனுக்கு வெறும் சந்தோஷமும் உடம்பில் சேறு பூசிக்கொண்டது தான் மிச்சம். அப்படித்தான் ஆச்சி அன்று.
அடுத்த நாட்களில், பிறகு இந்த “அப்புராணி ஆளுக்கு” லச்சையை ஒதுக்கி வைத்துக்கொண்டு அவளே ஒத்துழைத்து வாத்திச்சியம் பண்ண வேண்டியிருந்தது. அதுக்கப்புறம் நாலு மீன் அஞ்சி மீன் என்று கூட ஆயிற்று தினோமும். அப்படி ஒரு காலம்.
உடம்பில் சுரக்கிற வீர்யமும் கட்டும் ஒரேமாதிரி இருக்குமா? நாலுவேளை என்றிருந்தது போய் வயிறு மந்தப்பட்டு மூணு, பிறகு இரண்டு என்று குறைந்தது. சாப்பாடுதான் ரெண்டே தவிர இடைவேளைகளில் கொரிக்கும் நொறுக்குத் தீனிகளும் பானகங்களும் சேர்த்தி இல்லை…. இதில்.
ரெண்டுவேளை என்பது தவறாமல், அது ஒரு இருபது வருசத்துக்கு நீடித்தது.
அப்புறம் ஒருதரம் நோயில் பலமாக வீழ்ந்தார். கரும்புச் சக்கையாக மென்று துப்பிப் போட்டுவிட்டுப் போய்விட்டது நோய். உடம்பு உடம்பாக இல்லை பிறகு.
தின்று தீர்த்ததுக்கெல்லாம் வட்டியும் வாசியும் சேர்த்து சீரழிய நேர்ந்தது.
பிராயத்தில் அனுபவித்த தீனியை நினைத்து நினைத்து வியந்தும் ஏங்கியும் போனதோடு பெருந்தீனிக்காரரைப் பார்க்கும்போதெல்லாம் ஆனந்தமும் அசூயையும் கொண்டது மனசு.
முதுமையைச் சந்தித்த உடம்பு பிறகு அதோடு போராடி அதைக் கீழேதள்ளி மேலே ஏறி உட்கார்ந்து ராச்சியம் பண்ண கொஞ்ச நாள்ப் பிடித்தது.
இப்படி ஓர் நிலைக்கு வந்த சமயந்தான் எதிர்ப்பக்கதிலிருந்து பலமான ஒரு இடி கிடைத்தது; ரெண்டு பாதங்களால் மிதித்து ஓடிய சைக்கிள் பெடலில் ஒன்று ஒடிந்தது போல.
ஜன்னல் வழியாக அன்று தெருவில் பார்த்த காட்சி நினைவுக்கு வந்தது. கண்டாங்கிச் சேலையிலான சிறிய மூட்டை ஒன்றை ஒரு குச்சியின் நுனியில் சொருகி, தூக்கிப் பிடித்துக்கொண்டு வண்ணாத்தி தெரு வழியாகப் போனாள். எதிரே வருகிறவர்களுக்கு வழக்கத்துக்கும் அதிகமாக விலகி வழிவிட்டாள். பெரிய மனிதர்கள் தட்டுப்படும்போது மட்டும் தெருவில் ஓரமாக அதைக் கீழே வைப்பாள். இப்படி அந்த மூட்டை நகர்ந்துகொண்டு போனது.
இவர்கள் வீட்டுக் கொல்லைப்புறத்தில் ஒதுங்குவதற்கு என்று “ம” வடிவத்தில், மொச்சிமார்களால் பின்னப்பட்ட படல்கள் கொண்ட ஒரு ஒதுக்குப்பிறை. அங்கே அவர் எப்பவாவது சிறுநீர் கழிக்கச் செல்லும்போது மூலையில் ஒரு கல்லின்மேல் இதேமாதிரி “பொட்டணம்” மாசம் ஒருக்கத் தட்டுப்படும். அதெல்லாம் நின்று அநேக வருஷங்களாச்சி.
ஒரு கிராமியக் கதை அவர் ஞாபகத்துக்கு வந்தது. நடுச்சாமத்தில் ஒரு கிழம், தன் கிழவி தூங்கிக் கொண்டிருக்கும் இடத்துக்கு தட்டுண்டு தடுமாறி போனதாம். “ஒனே…; ஓனே” என்று அவளைக் கூப்பிட்டு, “ஒரு சொட்டுகூட இருக்கோ இல்லை அரைச் சொட்டுதான் இருக்கோ; அது என்ன மனுசனைத் தூங்கவிடுதா…” என்றதாம்!
கதை சொல்லுகிறவர்களுக்கு இந்த இடத்தில் சிரிப்பு அப்படி பொத்துக்கொண்டு வரும்.
பாதிக்கப்படாத யாருக்குத்தான் சிரிப்பைக் கொண்டுவராது இது. ‘ஆண்டுகூடி மாண்டுகூடி ஆறுமாசத்துக்கு ஒருக்கக்கூட அண்ட முடியலையே. எம்புட்டு சிறுமைப்பட்டு போறோம் இதனாலே’ என்று நினைத்துக் குங்கினார்.
படுக்கைக்குப் போக மனசில்லை. அவள் இப்போதெல்லாம் முன்னேமாதரித் தனியாக வீட்டினுள் படுப்பதில்லை. பேத்தியாள் என்றும் பக்கத்து வீட்டுக்காரி அல்லது வேலைக்காரி என்றும் ஏதாவது ஒரு துணை வைத்துக்கொள்கிறாள். இவர்களைக் காட்டி மறுக்க இது ஒரு தோது; போன தபா அப்படிச் செய்தாளே. கதவை மெள்ளத் தட்டி; “சன்னக்குட்டி – சன்னக்குட்டி” என்று மனைவியைப் பிரியமாக அழைத்தார்.
கதவு திறப்பதற்குப் பதில் இவரது படுக்கைத் திண்ணையின் மேலுள்ள, ஜன்னலின் ஒரு கதவு திறந்தது.
“என்ன வேணும்?”
இந்தக் கேள்விக்குப் பிறகு சொல்ல என்ன இருக்கு!
“ம்… வாடை வெரைக்கி…”
எதிர்ப் பக்கத்திலிருந்து மௌனம் பதிலாக நின்றது. கதவு திறக்கப் படலாம் ஒருவேளை.
இது என்ன! திறந்திருந்த ஜன்னல் வழியாக உல்லன் போர்வை வந்து விழுகிறது. கதவின் கம்மந்துண்டைப் பிடித்துக்கொண்டு போர்வை விழுந்த திக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். ‘சன்னக்குட்டி, உனக்கு என்ன வந்திட்டது?”
திண்ணைமேல் ஏறி அவள் சொந்தப்பெயரைச் சொல்லியே கூப்பிட்டார். விர்ர்ரென்று தலைக்கு ரத்தம் ஏறும் நேரம்தவிர அவர் அவளுடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டதில்லை.
திறந்திருந்த ஒற்றை ஜன்னல் கதவும் அடித்து மூடிக்கொண்டது
ஓசையடங்கிய அந்தவேளையில் எங்கோ ஒரு ஆள்காட்டிக் குருவி சத்தங் கொடுத்தது. கொஞ்சநேரத்தில் அதைத் தொடர்ந்து தலைவாசல் கதவு இடிக்கும் ஓசை. தலைக்கோழியும் கூப்பிட்டது. போய்க் கதவைத் திறந்தார். வேலையாள் வந்துவிட்டான்.
“ஏலெ அவனெங்கெ?”
“வல்லெ மொதலாளி”
“எங்கே தொலைஞ்சி போய்ட்டான்; மளைமேகமா இருக்கு, குப்பைக்கு மண்ணெ வெட்டிப்போட்டு நெறத்தணும்ணு சொல்லி இருக்கேன்லே?”
“கோவிச்சீட்டுப் போன பெண்டாட்டியெக் கூட்டீட்டு வரப் போயிருக்கான். ஒரு மாசமா அவனா குத்திப்போட்டு கஞ்சி காச்சிப் பார்த்தான்; முடியலெ. வர நாலைஞ்சி நாளாகுமாம்.”
“களுதெப் பயலெ போகச் சொல்லு.”
பருத்தி விதையை ஆட்டச் சொல்லிவிட்டு அந்த உல்லன் போர்வையைத் தள்ளிவைத்துவிட்டு மேல்வேட்டியை எடுத்து தலையில் இறுக்கிக் கட்டினார். கைத்தடியை எடுத்துக்கொள்ள வில்லை. அது ஒரு அத்துக்குத்தான்; எப்பவும் ஊன்றி நடந்தது கிடையாது. மண்வெட்டியையும் கூடையும் எடுத்துக்கொண்டார். வீட்டுக்குப் பிறத்தாலேயுள்ள குப்பைக் கிடங்குக்குப் போனார்.
அம்பாரமாய்க் கிடந்த மண்ணை வெட்டி வெட்டி கூடையில் நிரப்பி சிரமப்பட்டு அவராகவே தூக்கிக் குப்பையின்மேல் வீசினார்.
குனிந்து மண்வெட்டியால் மண்ணை வெட்டி எடுப்பது எவ்வளவு அலுப்புத் தரும் வேலை என்பதை அவர் அப்போதுதான் உணர்ந்தார். மூச்சு இரைத்தது. வேர்வையில் நனைந்தார். நெற்றி வேர்வை வழிந்து கண்ணைக் கரித்தது. தாங்கமுடியாத அலுப்பு வந்தது. ஈரல் வெடித்து சாகணும் அல்லது இந்த மண்மேட்டைக் குப்பைமேல் ஏத்தணும் என்று இயங்கினார்.
நேரம் ஆக ஆக உடம்பு கொஞ்சங்கொஞ்சமாய் சுதாரித்தது. அலுப்பு விலகி ஒரு இதம் தெரிந்தது. பிறகு ஆனந்தமும், ஒரு நிம்மதியும்கூட இருந்தது.
வேலை செய்துகொண்டே பாட்டுப் பாடுகிறவர்களைப் பற்றிய ஞாபகம் வந்தது. அவருக்கும் அந்தமாதிரி வாய்விட்டுப் பாட வேண்டும்போல இருந்தது. அப்பொழுதுதான் அவருள் ஒரு பிரகாசம் குடியேறியது.
முற்றம் தெளித்துவிட்டு வீட்டம்மாள் குளியல் அறைப்பக்கம் வந்த போது பச்சைத் தண்ணீரைக் கோரிக் கோரி விட்டுக்கொள்ளும் ஓசையும் “ராம் ராம்” என்ற சொல்லும் கேட்டது உள்ளிருந்து.
– யாத்ரா 2, செப்டம்பர் 1978.
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[1] 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல்…மேலும் படிக்க... |