காலச்சக்கரம்





அறுபது வயதான “ராஜ கணபதி ஸ்டோர்ஸ்” முதலாளி ராஜசேகரன் நாள் தவறாமல் அவர் கடைத்தெரு வழியே வாக்கிங் சென்று கொண்டிருக்கும் பல மனிதர்களை பொறாமையுடன் பார்த்து கொண்டே வியாபாரம் செய்து கொண்டிருப்பார்.

மோகன், ராஜசேகரனை விட 10 வயது அதிகமாக வயதானவர் என்பதாலும் மிகவும் திடகாத்திரமாக இருப்பதாலும் மோகன் மீது சற்று கூடுதல் பொறாமை!
ஒரு நாள் ஏதோ சாமான் வாஙகி கொண்டிருந்த மோகன், ராஜசேகரனை பார்த்து
“சார்! உங்கள் வாழ்க்கையில் பணப்பிரச்சனைகள் பெரிதாக எதுவும் இல்லையென்றால் நீஙகளும் ரிட்டயர்டு ஆகி எங்களை போன்று தினமும் வாக்கிங் சென்று ஆரோக்கியமாக இருக்கலாமே” என்றார்.
வெகு நாட்களாக உள்ளே உறங்கிக்கிடந்த அந்த “பணி ஒய்வு “ ஆசை தீயாக பற்றிக் கொண்டது ராஜ சேகரனுக்கு!
ஒரு சில வாரங்களில் கடையில் உள்ள சாமான்களையெல்லாம் தள்ளுபடி விலைக்கு விற்று விட்டு கடையை காலி செய்து விட்டார் ராஜசேகரன்!
மிகப்பெரிய பாரம் தலையிலிருந்து இறங்கிய உணர்வுடன், புதிதாக வாக்கிங் ஷூஸ் வாங்கி அணிந்து கொண்டு அவரும் ஆனந்தமாக தினமும் வாக்கிங் மற்றும் உடற் பயிற்சி செய்து வந்தார்.
மாதங்கள் பல சென்று ஒரு நாள் தன் பழைய கடை இருந்த தெரு வழியே வாக்கிங் சென்றபோது, தன் நெடுநாள் வாசஸ்தலமாக இருந்த கடையை பார்த்தார்!
“ராஜ கணபதி ஸ்டோர்ஸ்” என்ற பெயர்ப்பலகைக்கு பதிலாக அங்கே பல வண்ண விளக்குகளோடு புத்தம் புது பெயர்ப்பலகை “மோகன் ஸ்டோர்ஸ்” தொங்கி கொண்டிருந்தது.
வியப்புடன் பார்த்தபோது உள்ளே அதே மோகன்!
“என்னை காலி செய்ய வைத்து விட்டு இப்போது நீங்கள் கடை ஆரம்பித்து விட்டீர்களே? ஊருக்குத்தான் உபதேசமா?” என்று கோபாவேசத்துடன் கொந்தளித்தார் ராஜசேகரன்.
“ராஜசேகரன்சார்! கடைக்குள்ளே வந்து என்னை பாருங்கள்!” என்றார் வேதனையுடன் மோகன்.
ராஜசேகரன் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது!
கடைக்கு வெளியே ராஜசேகரன் பார்த்தபோது அங்கிருந்த “சக்கர நாற்காலி”, மோகன் ஒரு விபத்தில் கால்களை இழந்ததற்கு மௌன சாட்சியாக நின்று கொண்டிருந்தது!
மளிகைக் கடை வைத்திருப்பவர்களுக்குப் பெரும்பாலும் விடுமுறையே இருக்காது. எப்போதாவது ஓரிரு நாள் கடையைச் சாத்தி விட்டால், அதற்கடுத்து மீண்டும் வாடிக்கையாளரைத் திரும்பக் கொண்டு வர பெரும்பாடு பட வேண்டியிருக்கும்.
தொழில் இலாபகரமாக நடந்து கொண்டிருந்தால், அவர்களுக்குப் பணி ஓய்வு பெறும் மனநிலையும் வராது.
குடும்ப விசேஷங்கள், குழந்தைகளின் பள்ளிக்கூட விழாக்கள் என்று பெரும்பாலும் எதிலும் கலந்து கொள்ள முடியாது. மழை, வெயில், பனி, குளிர் என்று எல்லா பருவக் காலத்திலும் வியாபார நிமித்தமாக அலைய வேண்டியிருக்கும்.
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான வாடிக்கையாளர்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.
இந்தச் சிரமங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு, சில கடைக்காரர்கள் இலாபத்திற்கு அப்பாற்பட்டு அவர்களின் வாடிக்கையாளர்களுக்குச் சிரமம் ஏற்படுமே என்று கடையைக் கட்டிக் கொண்டிருப்பார்கள்.
இந்தக் கதையில் கடை வைத்திருக்கும் ஒரு கதாபாத்திரத்தை விவரிக்கும் போது, அந்தக் கடைக்காரருக்குத் தொழில் வாழ்வில் இருந்த சலிப்பை ஓரிரு வரிகளில் எடுத்துச் சொல்லி இருக்கலாம். வாடிக்கையாளர்களுக்கும் அவருக்கும் இடையிலான உறவையும், அவருக்கு ஏற்பட்டிருந்த வெறுப்பையும் சொல்லி இருக்கலாம் என்று தோன்றுகிறது.
இலாபம் என்பது ஒரு போதை. யாருமே இலாபமான தொழிலைத் திடீரென கைவிட மாட்டார்கள். அதற்கு ஆழமான காரணங்கள் இருக்க வேண்டும்.
அதே போல மற்றொரு கதாபாத்திரம் மளிகைக் கடையை எடுத்து நடத்துவதாகவும், அவர் கால் இழந்த பின்னர் புதிதாகக் கடை நடத்த வந்திருப்பதாகவும் கதை முடிக்கப்படுகிறது. இது முரண்பாடானது.
கடை நடத்துவது என்பது அத்துணை சுலபமான காரியம் இல்லை. அதற்காக அலைய வேண்டியிருக்கும். அதற்குரிய உதவிகள் இல்லாவிட்டால், சாத்தியமில்லை. அதையெல்லாம் கதைக்குள் ஏதோவொரு ஓரிரு வரிகளில் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.