காதல் மொழி விழியா? விலையா?





ஜன்னல் கதவைத் திறந்தாள் ப்ரீதி. சில்லென்று குளிர் காற்று என்னைத் தடை செய்யாதே என்று முகத்தில் அடித்தது.
ஜன்னல் வழியாகப் பார்த்தபோது கீழே இருந்த காபி ஷாப்பில் ஆணும் பெண்ணுமாக அமர்ந்தபடி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அடிக்கடி சிரிப்பு. இவள் ஊமைப் படம் போல் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்படி ஓயாமல் என்ன பேசுவார்கள்? காதல் என்று ஒன்று வந்து விட்டால் அர்த்தமற்றுச் சிரிக்கத் தோன்றுமோ? அபத்தமாகப் பேசுவதைக் கூட ரசித்துச் சிரிக்கத் தோன்றுமோ?
திரும்பினாள். தலையில் சொத்தென்று பல்லி ஒன்று வீழ்ந்தது. தலையில் பல்லி விழுந்தால் மரணம். எப்போதோ பஞ்சாங்கத்தில் படித்தது.
மரணம் பல்லிக்கா? தனக்கா? சிரிப்பு வந்தது.
கீழே விழுந்த அதிர்ச்சியில் ஒரு கணம் அசைவற்றுக் கிடந்த பல்லி சட்டென்று ஞானோதயம் பெற்று ஓட ஆரம்பித்தது.
வாழ்க்கையும் இப்படித் தான். ஆங்காங்கே நின்றுவிட்டாலும் மீண்டும் ஓட வேண்டும். இயக்கம் இல்லை என்றால் இறந்தவர்களாகக் கருதப்படுவோம். இவள் இன்னமும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாள்.
இவளின் இந்தப் பயணம் எதற்காக? யாருக்காக? புரியவில்லை.
“”ப்ரீதி.. ஆபீஸிலே இருந்து வரும்போது மார்க்கெட் வழியா வந்து காய்கறி வாங்கிட்டு வந்துடறியா? வீட்டிலே காயே இல்லை”
“”ப்ரீதி இந்த மாசம் உனக்குப் போனஸ் வரும் இல்லை. எனக்கு இன்னும் கொஞ்சம் பணம் கூடக் கொடு.. கிளப்புக்குக் கொடுக்கணும்”
அம்மாவின் அன்புக் கெஞ்சல். அப்பாவின் அதிகாரப் பிச்சை. பழக்கமானவை தான்.
“”உன்னை நான் படிக்க வைச்சேன்” தனக்குத் தானே அப்பா அடிக்கடி சூட்டிக் கொள்ளும் பாராட்டுவிழா.
வாட்ச்மேன் மகள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகிறாள். விவசாயியின் மகள் இன்ஜினியர். இவர்கள் தன் பிள்ளைகளைப் படிக்க வைக்கவில்லையா?
அப்பா ஆரம்பத்திலிருந்தே இப்படித் தான்.
அம்மாவின் நகைகளை அடமானம் வைக்கும் குடும்பத் தலைவன்.
தன் சுயலத்திற்காக மற்றவர்களின் ஆசைகளை நசுக்கும் அதிகார வர்க்கம்.
வேலையைத் தொலைத்துவிட்டு வேறு வேலை தேடாத பொறுப்பற்ற ரேஷன் கார்டிலே மட்டும் இடம் பெறும் குடும்பத் தலைவன்.
“”என்னாலே இனிமே வேலைக்குப் போய் ஒருத்தன் கீழே கை கட்டி இருக்க முடியாது. நிறைய உழைச்சாச்சு. போதும்”
அம்மா எதுவும் பேச மாட்டாள். ஒவ்வொருத்தர் தன் குடும்பத்திற்காக எக்ஸ் டென்ஷனில் வேலை பார்க்கிறார்கள். ஆனால் அம்மா எதையும் கேட்க மாட்டாள் . மாதக் கடைசியில் அப்பா சார்பாக மகளிடம் பணம் தான் கேட்பாள். அந்தத் தன்மானத் தலைவனுக்கு மகளிடம் பிச்சை கேட்க அவமானம். அது தான் மனைவி விடு தூது.
இவளுக்கு மேலே எம்.எஸ். படிக்க ஆசை. கேட்ட போது அப்பா கத்தினார்.
“”அதுக்கெல்லாம் பணம் நிறைய செலவாகும்”
“”பேங்கிலே எஜுகேஷன் லோன் தருவாங்க”
“”அதுக்கு என்ன ப்ரசீஜர் தெரியுமா? செக்யூடிரி கேட்பாங்க. பேங்க் பேலன்ஸ் கேட்பாங்க. ஷுரிடி தரணும். என்டரன்ஸ் எக்ஜாம் எழுத செலவாகும்”
தன் மேலே படிக்க வேண்டும் என்ற ஆசைகளைப் புறம் தள்ளி தன் குடும்ப நிலையறிந்து இவளாக வேலை தேடிக் கொண்டாள். இவளுக்கு செக்யூரிடி ஏதுமில்லை.
அப்பாவுக்கு எப்போதும் வரவு செலவு கணக்குப் பற்றிய நினைவு தான்.
இவளின் செலவுக் கணக்கு, வாழ்வின் இளமை… ஆசைகள்… கனவுகள்… கற்பனைகள்.
இவளின் அலுவலக நண்பிகள் எங்காவது வெளியூர் டூர் போனால் இவளைக் கூப்பிட்டால் செலவு கருதி மறுத்து வந்தாள்.
“”இல்லை அம்மாவை ஆஸ்பத்திரி கூட்டிட்டுப் போகணும்”
“”அப்பாவுக்கு உடம்பு சரியில்லை”
வரிசையாகப் பொய்கள். அப்போது தான் அக்கம் பக்க மனிதர்கள் கேட்க ஆரம்பித்தார்கள்
“”ப்ரீதிக்கு வயசாயிட்டு வருதே. கல்யாணத்துக்குப் பாக்கல்லையா?”
“”அவளுக்குக் கல்யாணத்துலே இஷ்டமில்லை”
தனக்கு மகளைக் கட்டிக் கொடுக்க வக்கில்லை என்பதை மறைத்து கூறிய பொய். அம்மா வெறும் பார்வையாளர் மட்டுமே.
நான் எங்கே? எப்போது சொன்னேன்? என்று கேட்கத் தோன்றினாலும் ஊரார் முன்னிலையில் தந்தையை அவமானப்படுத்த விரும்பாத நல் எண்ணம்.
“என் விதி இப்படி என்றால் கர்ப்பத்திலேயே கரைந்திருப்பேனே’ என்று திரைப் படம் ஒன்றில் பாடும் கதாநாயகியின் நினைவு வரும்.
நம் பிறப்பையோ பெற்றோர்களையோ நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது என்பது சத்தியம். விதி என்று ஏற்பதை தவிர வேறு வழி?
ஆரம்பத்தில் செலவுகளைச் சிரித்தபடி செய்தவள். வர வர எரிச்சல் பட ஆரம்பித்தாள்.
தன் கோபத்திற்கு வடிகாலாக தேர்ந்தெடுக்கப்பட்டவள் அம்மா என்கிற ஜீவன் தான். அப்பாவிற்கும் அதே.
இவள் தன் மென்மைகளைத் தொலைத்தாள். சிரிக்க மறந்தாள். அம்மாவிடம் அதிகாரச் சவுக்குகளை வீசும் அப்பாவைப் பார்க்கவே வெட்கப் பட்டாள்.
இந்தச் சூழலை விட்டு எங்காவது போக நினைத்தபோது தான் அந்த வாய்ப்புக் கிடைத்தது.
பதவி உயர்வுடன் இட மாற்றம். மும்பையில் வேலை. இவளுக்கு இந்தி தெரியும். வேலையை ஏற்றாள்.
கூடச் சம்பளம் கிடைக்கும். வீட்டுக்கு நிறைய அனுப்பலாம்.
அப்போது கூடப் பிரிவைவிட பணம்தான் பேசியது.
அன்று இரவு அம்மா இவள் அறை தேடி வந்தாள்.
தூக்கமின்றி புரண்டு படுத்துக் கொண்டிருந்த இவள் அம்மாவைப் பார்த்து ஆத்திரப்பட்டாள்.
“”ராத்திரி கூடத் தூங்க விட மாட்டியா? பணம் தானே வேணும்? காலைலே பேசிக்கலாம்.”
“”அதில்லை மும்பை”
“”தெரியும் மும்பை போனா நிறைய அனுப்பணும். அதுதானே? அனுப்பறேன்..புருஷனுக்கு வக்காலத்து வாங்கிட்டு ராத்திரி வந்து தொந்திரவு தராதே”
“”இல்லேம்மா.. மும்பை புது இடம் நான் வேணா கூட வந்து”
“”ஒண்ணும் வேண்டாம்.. உன் புருஷனுக்கு சமைச்சுப் போட்டுட்டு அந்த அரச ஆணைக்குக் கீழ்படிந்து உன் வேலையைப் பார். எனக்கு மும்பையில் ஒன் ரூம் கிச்சன் ரெடியா இருக்கு. பர்னிஷ்ட் ப்ளாட்.. கவலைப் படாதே”
“”அதில்லைமா உனக்கு வயசாச்சு. இளமை தேஞ்சுட்டு வருது. அப்பா இப்போதைக்குக் கல்யாணம் பண்ற மாதிரித் தெரியல்லை.”
“”என்ன பண்ணச் சொல்றே? யார் கூடவாவது ஓடிப் போயிடட்டுமா?”
“”ஆமாம்மா அதைச் சொல்லத்தான் வந்தேன். பெரியவங்களாப் பாத்துப் பண்ண வேண்டிய விஷயம். சுயநலத்துக்காக அது மறுக்கப்பட்டா நீயா தேர்ந்தெடுத்துக்கறதுலே தப்பில்லை. ஜாதகம் பார்த்துப் பண்ணின கல்யாணம் என்ன வாழுது? உன் வாழ்க்கைத் துணையை நீ தேடிக்கோ. ஆனா யோசிச்சு முடிவெடு. என் ஆசி எப்பவும் உனக்கு உண்டு”
அம்மா போய்விட்டாள். இவளும் மும்பை கிளம்பி வந்துவிட்டாள். மும்பை புறநகர் பகுதியில் நான்கு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் மூன்றாவது ப்ளோரில் இவளின் புறாக்கூண்டு ப்ளாட் கொலாபா சென்டர் அலுவலகம். காலை எட்டு மணிக்கே கிளம்பினால் தான் ரயில் பிடித்து அலுவலகம் நேரத்திற்குச் செல்ல முடியும். சனி ஞாயிறு விடுமுறை. ப்ரேக்பாஸ்ட், லஞ்ச் எல்லாம் அலுவலகத்தில் கிடைத்துவிடும். இரவு வீடு திரும்ப எட்டு மணி ஆகிவிடும். வரும்போதே ஏதாவது டிபன் வாங்கி வந்துவிடுவாள். இல்லை சாப்பிட்டு வந்து விடுவாள். காலை காபி மட்டும் தான், இவள் போடுவாள். காபி சாப்பிடாவிட்டால் இவளின் பொழுது விடியாது. அதற்காகவே பால் பாக்கெட் போட மட்டும் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தாள்.
அம்மா செல்போனில் கூப்பிட்டால் அவளைப் பேச விடாமல்,
“”பணம் தானே டிரான்ஸ்பர் பண்ணிட்டேன். அப்பா கிட்டே சொல்லு போய் எடுத்து வருவார். சும்மா சும்மா கூப்பிடாதே. நான் ஜர்னியிலே இருப்பேன். இல்லை, ஆபீஸிலே மீட்டிங்கில இருப்பேன். நானே கூப்பிடறேன்”
அதற்குப் பிறகு அம்மா கூப்பிடவில்லை.
யாரோ பெல் அடிக்க இவள் தன் நினைவுகளைத் துறந்து வாசலுக்குப் போனாள். கதவு திறந்தாள்.
அங்கே ஓர் அழகான வாலிபன் நின்றிருந்தான்.
எதிர் ப்ளாட் திறந்திருந்தது.
“”நீங்க?”
இவள் ஆரம்பிப்தற்குள் அவன் பேசினான்.
“”அப்பாடா நீங்க தமிழா நான் தப்பிச்சேன். இப்பத் தான் வந்தேன். ஹிந்தி தெரியாது முப்பது நாள்லே இந்தி கற்பதெப்படின்னு புஸ்தகம் தான் வாங்கினேன். படிக்க நேரமில்லை. இதுக்குப் பயந்தே யார் கூடவும் நான் பேசறதில்லை. இன்னிக்கு வேற வழியில்லாம உங்க வீட்டுக் கதவைத் தட்டினேன்.. ஸாரி பெல் அடிச்சேன். காலைலே காபி போட பால் பாக்கெட்டை ஓபன் பண்ணும் போது பால் எல்லாம் கொட்டிப் போச்சு. காலைலே காபி சாப்பிடலையானா எனக்கு வேலையே ஓடாது ப்ளீஸ் உங்க கிட்டே பால் பாக்கெட் இருக்குமா? நான் கீழே போகும்போது வாங்கிட்டு வந்துடறேன். லிப்ட் ஒர்க் பண்ணல்லை மூணு மாடி இறங்கக் கஷ்டமா இருக்கு”
தேவைக்கு அதிகமாகவே பேசினான்.
காபியாவே தரட்டுமா? என்று கேட்கத் தோன்றியதை அடக்கியபடி உள்ளே போய் பிரிஜ்ஜிலிருந்து பால் பாக்கெட்டை எடுத்து வந்தாள்.
“”காலைலே காபி சாப்பிடலையானா வேலையே ஓடாது”
இவள் சிரித்தபடி, “”எனக்குக் கூட அப்படித் தான்” என்றாள்.
“”பரவாயில்லையே பேச வருமா?”
இவள் பேசவில்லை. அவன் போய்விட்டான். மீண்டும் பெல் சப்தம்
அவனே தான்.
“”ஸாரி பார் டிரபிளிங் யூ பேரைக் கேட்க மறந்துட்டேன். என் பேர் கிருஷ்ணன் என்கிற கிருஷ். உங்க பேர்”
இவள் மெல்லச் சொன்னாள்.
“”ப்ரீதி”
“”ப்ரீதிக்கு நான் கியாரண்டி.. ஸாரி சில பேரைக் கேட்டா சிலது ஞாபகம் வரும்”
அவன் போய்விட்டான்.
அடுத்த வாரமும் அப்படியே போனது. யாராவது பெல் அடித்தால் அவன்தானோ என்று எண்ணம் எழுவதை இவளால் தடைசெய்ய முடியவில்லை.
ஹிந்தி தெரியாதாமே? கற்றுத் தரலாமா? எப்படிக் கேட்பது?
சனி ஞாயிறுகளில் வகுப்பு எடுத்தால் போதும். அவனுக்கு ஹிந்தி வரும். இவளுக்கு
யாரோ பெல் அடிக்க ஓடிச் சென்று கதவு திறந்தாள்..
அவன் தான்.
“”என்னை நினைச்சீங்களா?”
இவள் அவனைப் புரியாமல் பார்த்தாள்.
“”ஊரிலே எனக்கு அடிக்கடி புரை ஏறிச்சு அதான் கேட்டேன். இந்தாங்க. ஆபீஸ் விஷயமா ராஜஸ்தான் போயிருந்தேன். மிரர் வைச்ச இந்த ஹேண்ட பேக் அழகா இருந்தது உங்க ஞாபகம் வந்தது. அதான் வாங்கிட்டு வந்தேன்”
“” இதுக்கு என்ன விலை?”
“”என் சின்சியாரிடிக்கு விலை பேசாதீங்க”.
புரியல்லை.
“”புரியும். .என்னோட குருதக்ஷிணை… அன்னிக்குக் கொரியர்காரர்கிட்டே ஹிந்தியிலே பொளந்து கட்டிட்டு இருந்தீங்க. எனக்கு ஹிந்தி கத்துக் கொடுங்க. அதுக்குத்தான் குருதக்ஷிணை”
இவள் பிரமித்தாள்..
“”நீங்க மறுத்தா..தப்புத் தப்பா பேசி உங்களை டார்ச்சர் பண்ணுவேன்”
இவள் சிரித்தாள். இவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பின் இப்போது தான் சிரிக்கிறேனா?
“”எப்ப வர்றீங்க?”
“”எதுக்கு?”
“”ஹிந்தி கத்துக் கொடுக்கத் தான். எங்கிட்டே புஸ்தகம் எல்லாம் இருக்கு டீச்சர் தான் இல்லை. எனக்கு ஸ்கிரிப்ட் கூடத் தெரியும். நானா கத்துக்கிட்டது அது மட்டும் தான். இன்னிக்கே வாங்க முகூர்த்த நாள். ஞாயித்துக்கிழமை தானே? ரெண்டு பேருக்குமே லீவு. ராகு காலத்துக்குள்ளே வந்திடுங்க.”
என்னமோ திருமண முகூர்த்தம் மாதிரி நேரம் குறித்து விட்டுப் போய்விட்டான்.
இவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இவன் ஹிந்தி தானே கற்றுக் கொடுக்கச் சொன்னான். காதலிக்கக் கற்றுக் கொடுக்கவா சொன்னான்?
மணி பார்த்தாள்.
பகல் பன்னிரண்டு மணி. நேரம் ஊர்வதாகப் பட்டது.
ஆரம்பம் நல்லா இருக்கணும். ஸ்வீட் எடு கொண்டாடு..
இவள் தன் தேவைக்காக வாங்கி வைத்திருந்த ரெடி மிக்ஸ் கேசரி பாக்கெட்டை எடுத்தாள்.
அரைமணியில் கேசரி ரெடி. தன்னை கர்ம சிரத்தையாக அலங்காரம் செய்து கொண்டாள். மணி நாலு. கேசரியை ஒரு கேஸ்ராலில் போட்டுக் கொண்டாள். தன் ப்ளாட் பூட்டி எதிர் ப்ளாட் பெல் அடித்தாள்.
கிருஷ் தான் கதவு திறந்தான்.
“”அட வாங்க… வாங்க… நீங்க வரதுக்குள்ளே கொஞ்சம் ஒழுங்கு படுத்த நினைச்சேன். பேச்சலர் ப்ளாட் இப்படித் தான் இருக்கும்”
அவசரமாக தூசுதட்டி ஒரு நீல்கமல் சேரை எடுத்துப் போட்டான்.
இவள் கேசரி டப்பாவைத் தந்தாள்,
“”வாவ்… கேசரி எனக்கு ரொம்பப் பிடிக்கும்.”
அவள் எதிரிலேயே ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.
“”அப்படியே கரையுது”
“”சர்க்கரை கரையத் தான் கரையும்”
அவன் சிரித்தான்.
“”நான் அடிக்கடி பெல் அடிப்பேன். பயப்படாதீங்க. பாடத்துலே சந்தேகம் வந்தா மட்டும் தான்”
“”ஓகே”
“”ஆரம்பிக்கலாமா டீச்சர்?”
இவள் சிரித்தாள்.
எதை ஆரம்பிப்பது? காதலுக்கு முதல் எழுத்தென்ன?
ஆரம்பித்தாள், “”மை ஹம் தும்”
அவன் சிரித்தான்.
“”ஹம் தும் இக் பங்களாமே பந்த்ஹோ பாபி பாட்டு ஞாபகம் வருது”
அவளும் சிரித்தாள்.
அன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். மறுநாள் அலுவலகம் செல்லும் போதும் அந்த மகிழ்ச்சி தொடர்ந்தது.
அன்று சீக்கிரமே வீடு திரும்பி விட்டாள். இந்த வாரம் புதுப் பாடம் ஆரம்பம்..
அந்த சனிக்கிழமையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
அலுவலகம் விட்டு வரும் போது வாசலில் மினி வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. யாராவது குடி வருகிறார்களா? இல்லை காலி செய்கிறார்களா?
தன் ப்ளாட்டில் நுழைந்தாள். எதிர் ப்ளாட் திறந்திருந்தது. இன்று கிருஷ் சீக்கிரமே வீடு திரும்பி விட்டானா? டிவியை ஆன் செய்தாள். ஏதோ பழைய ஹிந்திப் படம்.
சற்று நேரத்தில் யாரோ பெல் அடிக்க, கிருஷ்ஷா? இப்போதே ட்யூஷனுக்குக் கூப்பிட வந்துவிட்டானா? இல்லை, ஏதாவது சந்தேகமா?
தன்னை சுதாரித்துக் கொண்டவள் கதவு திறந்தாள்.
வந்தது கிருஷ் தான்.
“”வழக்கமா நீங்க வருவீங்க. இன்னிக்கி நான் வந்திருக்கேன்”
“”வாங்க உள்ளே வாங்க”
சோபாவைத் தட்டிப் போட்டாள்.
“”ஒரு புது ஆளை அறிமுகப் படுத்தப் போறேன்,அவங்களுக்கும் நீங்க தான் டியூஷன் எடுக்கணும். ஒரு புது ஸ்டூடண்ட்” என்றவன், இரைந்து “”மாயா” என்றான்.
ஓர் அழகான பெண் கையில் குழந்தையுடன் உள்ளே நுழைந்தாள்.
“”என் ஒய்ப் மாயா… மேரி பத்னி.. மேரா பேடா தீபக் சரியா குழந்தைக்கு மூணுமாசம் கூட ஆகலை. அனுப்ப முடியாதுன்னு சொன்ன மாமியார் கிட்டே சண்டை போட்டு இவளை வர வழைச்சுட்டேன். தனியா சமைச்சு சாப்பிட்டு வீட்டு வேலை செய்து பாத்திரம் தேய்ச்சு, நம்மால முடியல்லை சாமி. நீங்க லேடீஸ் எப்படித் தான் இப்படி அலுக்காம சிரிச்சபடி வேலை செய்யறீங்களோ? மாயா, நான் சொல்லல்லை என் டீச்சர் ப்ரீதி மேடம்?
மாயா ஊரிலே இருந்து வரும் போது மைசூர்பாகு பண்ணிட்டு வந்திருக்கா… இந்தாங்க.. இனிமே நான் இப்படி என் குருதக்ஷிணையா ஏதாவது ஸ்வீட் தருவேன். ஓகேவா எந்த ஆரம்பத்துக்கும் ஒரு ஸ்வீட் வேணும் இல்லையா?”
இவள் பார்க்கிறாள். இவளால் ஹிந்தியையும் கற்றுத் தர முடியவில்லை. காதலையும் கற்றுத் தர முடியவில்லை.
விடுதலை தேடி பறந்த பறவையின் சிறகுகள் வெட்டப் பட்டு இருபுறமும் வீழ்ந்தன.
சின்னத் திரையில் ராஜ்கபூர் பாடிக் கொண்டிருந்தார்.
“ஜீனா யஹாங் மர்னா யஹாங்’
அந்த நிமிடமே தன் தாயின் மடியில் படுத்து ஆசை தீர அழ வேண்டும் போல் இவளுக்குத் தோன்றியது.
– ஜூன் 2015