காதலும் கழற்றப்பட்ட என் சட்டையும்




மணி எட்டாகி விட்டது. இப்போதுதான் துணிகளைத் துவைத்துக் கொண்டிருக்கிறாள். இனிமேல்தான் குளிக்கப் போவாள். அப்புறமாக வந்து “கை கொடயுது, கால் கடுக்குது” என்று புலம்பிக்கொண்டிருப்பாள். இதே வேலையாகப் போய்விட்டது இளவேணிக்கு. எனக்கென்னவோ இவள் இதைத் திட்டமிட்டே செய்கிறாள் என்றுதான் தோன்றுகிறது.

தொலைகாட்சியில் மனம் லயிக்கவில்லை. மனம் பூராவும் இரவைப் பற்றின சிந்தனைகளாகவே இருந்தன. இன்றைக்கு என்ன நோவைச் சொல்லப்போகிறாளோ? தலைவலி, பித்தம், மயக்கம், கைவலி, கால் குடைச்சல், தலை பாரம், அசதி அல்லது எதாவது வீக்கம்… இப்படி விதவிதமான நோவுகள் வந்துவிடும் அவளுக்கு. எதாவது சொல்லி தட்டுகழித்துவிடுவாள்.
அவள் ஏன் இப்படி சதுரங்கம் ஆடுகிறாள்? கல்யாணமான புதுசில் எல்லாருக்கும் இருக்க வேண்டியது அவளுக்கு எப்படி இல்லாமல் போனது? இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இப்படியே இருப்பாள்? காலம் பூராவும்? ஐயோ! என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
இளவேணிக்கு என் மீது அடங்காத காதல் உண்டு. எனக்கும்தான் அப்படி. களவு காலத்தில் எங்கள் நெருக்கம் எப்படி இருந்ததோ, அப்படியேதான் கற்பு வாழ்க்கையிலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கற்பு நிலையை எட்டி ஒராண்டு முடிவடையப் போகிறது. ஆனால், அவள் இன்னும் இந்த நிலைக்குத் தயாராகவில்லையா அல்லது அதைப் பிடிக்காமல் ஒதுக்குகிறாளா என்பதை நிச்சயமாகக் கூற முடியவில்லை என்னால்.
தொலைகாட்சியில் செய்திகள் அஸ்தமனம். ஏதோ தொடர்நாடகம் அப்போதுதான் ஆரம்பித்துக் கொண்டிருந்தது. தமிழ் நாடகத்தைப் பார்த்து ரசிக்குமளவு எனக்குப் பொறுமை இல்லை என்று வேறொரு நிலையத்துக்கு மாற்றினேன். அதிலும் மனம் செல்லவில்லை. சிந்தனை அலைபாய்ந்தது
அழுத்தம் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. இப்போதெல்லாம் எனக்குத் தொட்டதெற்கெல்லாம் கோபம் வந்துவிடுகிறது. குறிப்பாக இளவேணி ஏதாவது கோக்குமாக்குகளைச் செய்துவிட்டால் கோபம் உச்சந்தலை வரை ஏறிக்கொள்கிறது.
இளவேணி துணிகளைத் துவைத்துவிட்டாள் என்று நினைக்கிறேன். காயப்போட ஹெங்கர்களை எடுத்துக்கொண்டு போனாள். போகும்போது என்னைப்பார்த்து லேசாகச் சிரித்துவிட்டுப் போனாள். நான் உற்சாகமானேன். இன்றைக்கு இளவேணி நல்ல மூடில் இருக்கிறாள் போல.
நானும் எழுந்து அவளுடனேயே துணி காயப்போடும் இடத்துக்குப் போய் நின்றுகொண்டேன். அவள் துணியை ஹெங்கரில் தொங்கப்போட நான் அவளுடைய தோள்களில் தாடையை வைத்தும், பின்னாலிருந்து கட்டிப்பிடித்தும் கொஞ்சம் ‘அப்படி இப்படி’ செய்துகொண்டிருந்தேன். அவள் சிரித்தபடிதான் இருந்தாள். இன்று உண்மையில் அவள் நல்ல மூடில்தான் இருக்கிறாள் என்று பட்டது.
துணிகளைத் தொங்கவிட்டுவிட்டு அறைக்குப் போனாள். குளிக்கத் துண்டு எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழையும்போது டக்கென நானும் உள்ளே நுழைந்து சின்னச் சின்ன ஆர்ப்பாட்டங்கள் செய்ய அவள் செல்லமாக என்னை வெளியே தள்ளிவிட்டாள். பரவாயில்லை; குளித்துவிட்டு வரட்டும். இன்று படுக்கப்போகும் வரை இப்படியே மெய்ண்டென் பண்ண வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்.
இளவேணி குளித்துவிட்டு வரும்வரை சோஃபாவில் அமர்ந்து கொண்டேன். பக்கத்தில் மேசை மீது, அவள் என் பிறந்தநாள் பரிசாக ஒரு மாதகாலம் நேரமெடுத்து அலங்கரம் செய்துகொடுத்த காகிதப் பூங்கொத்தை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டேன்.
இளவேணிக்கு என் மேல் பாசம் அதிகம். கொஞ்ச நேரமும் என்னைப் பிரிந்திருக்கமாட்டாள். அதனாலேயே நான் வேலை பார்க்கும் அலுவலகத்துக்கே போராடி வந்து சேர்ந்தவள் அவள். எனக்கென எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்பவள். இந்தப் பூங்கொத்துகூட அவளே கஷ்டப்பட்டு கையால் பின்னிக் கொடுத்ததுதான். எனக்குப் பிடித்தப் பூ, பூவின் நிறம், வடிவம் என ஒவ்வொன்றாகப் நுனுகிச் செய்துகொடுத்தாள். அவள் நினைத்திருந்தால் முப்பது வெள்ளியோ நாற்பது வெள்ளியோ கொடுத்து ஏதாவது பூங்கொத்தை வாங்கி தந்திருக்கலாம்தான். ஆனால், அவளே தன் கையால் செய்து கொடுப்பதைதான் நான் விரும்புவேன் என்பதைத் தெரிந்துகொண்டு இதை ஒரு மாதம் எடுத்துச் செய்து முடித்தாள். எத்தனை பேருடைய மனைவிமார் இளவேணியைப்போல் இருப்பார்கள்?
“அதே மாதிரி இன்னொன்னு வேணுமா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் குளித்துவிட்டு அறைக்குப் போகிற வழியில். ஆனால், என் கவனம் அவளது கேள்விக்கு பதில் சொல்லத் தவறியிருந்தது. மார்புவரை தூக்கிக் கட்டிய துண்டு முட்டிக்கு மேல் வரை போயிருந்தது. ஈரத்தலையுடன் காற்றாடி குளிருக்கு நடுங்கிக் கொண்டே ஓடி வந்த காட்சி என் கண்களை லபக்கென்று கவ்விச் சென்றது. நான் எழுந்தேன். அதைக் கண்டதும் உடனடியாக அறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக்கொண்டாள். உள்ளே இருந்து, “இப்ப என்னா பண்ணுவீங்க?” என்ற எள்ளல் குரல் என் காதுகளைச் சேர்ந்தது.
சரி, ராத்திரிக்கு விட்டுவைப்போம் என்று இருந்துவிட்டேன்.
இரவில் கனமான உணவைச் சாப்பிடுவதை நாங்கள் தவிர்த்திருந்தோம். மெல்லிய உணவுதான். அதையும் எங்கே இளவேணி அதிகமாகச் சாப்பிடுவிடுவாளோ என்ற பயம் எனக்கு. ஏனென்றால், பிறகு “வயிறு நிறம்ப கெடக்கு. வேண்டாங்க” என்பாள்.
கடிகாரம் “பதினொன்று” என்றது. நான் “சரி” என்றேன். பன்னிரண்டு மணி என்றா இளவேணிக்குத் தூக்கம் அப்பிக்கொண்டுவிடும். “இளவேணி, படுக்கலாம் வா,” என்றேன். இறுதிகட்ட வேலைகள் சிலவற்றை முடித்துக்கொண்டு வந்து படுத்தாள்.
கையில் தைலம் வைத்திருந்தாள். “கொஞ்சம் காலுக்குத் தேச்சிவிடறிங்களா? கால் கொடையுது…” என்று அவள் சொன்னதுதான் தாமதம். ஜிவ்வென எனக்கு மண்டைக்கு ஏறிவிட்டது. என்னடா இன்னும் எந்த நோவையும் சொல்லவில்லையே என்று பார்த்தேன். இதோ கையில் தைலப்புட்டி!
இருந்தாலும் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு கால்களுக்குத் தைலத்தைப் பூசி உறுவினேன். எங்கே அப்படியே தூங்கி தொலைத்துவிடுவாளோ என்ற பயம் வேறு! பேச்சு கொடுத்துக்கொண்டே உறுவிவிட்டேன். ஒரு வழியாக “போதும்” என்று சொன்னாள். விடுவிடுவென ஓடிப்போய் கைகளைக் கழுவிவிட்டு வந்து அவளோடு எவ்வளவு நெருக்கமாக படுக்க முடியுமோ அவ்வளவு நெருக்கமாக படுத்துக்கொண்டேன்.
விரல்களால் இளவேணிக்குக் கிளர்ச்சியை இழுத்துவர முற்பட்டேன். லேசாக முண்டினாள். விரல்களைத் தட்டிவிட்டாள். இன்று விடுவதாய் இல்லை என் விரல்கள். எத்தனை வாரங்கள், இல்லை இல்லை… எத்தனை மாதங்கள் தேங்கி நிற்கின்றன ஆசைகள்?
அவள் என்னதான் மறுத்தாலும் எனது ஆணாதிக்க முரட்டுத்தனத்தைத் திணிக்க நான் தயாராய் இல்லை. ஒரு வேளை அது அவளைக் காயப்படுத்துமானால், அது எனக்கு நானே விளைவித்துக்கொண்ட காயம்தான். அவளை எப்படியாவது வென்று சம்மதிக்கவைக்க வேண்டும். அந்த இன்பத்தை என்னோடு சேர்ந்து அவளும் அடையவேண்டும் என்பதுதானே எனது விருப்பம்.
இளவேணி முதலில் செல்லமாகத் தட்டிவிட்டாள். பின்பு அதில் ஒரு எதிர்ப்புத்தன்மை தெரிந்தது. நான் வருடுவதை அவள் விரும்பவில்லை என்று தெரிந்தது. “இளவேணி… இன்னைக்கு…” என்று குறிப்பால் உணர்த்தினேன். கண்களை மூடிய நிலையிலேயே பதில் சொன்னாள், “இன்னைக்கு வேண்டாங்க. இன்னொரு நாளைக்கு பாத்துக்கலாம்”.
இப்போது எனக்குக் கோபத்தைவிட சோகம்தான் மிகுந்தது. ஏன் அவள் இப்படி ஒவ்வொரு முறையும் தட்டிக்கழிக்கிறாள் என்பதற்கான விடையை என்னால் கணிக்க முடியவில்லை. ஒரு வேளை அவளுக்கு இதில் ஈடுபாடு இல்லாமல் போய்விட்டதோ என்னவோ.
பிள்ளைச்செல்வத்தைத் தள்ளிப்போடும் திட்டமெல்லாம் ஒன்றும் இல்லை. அதே சமயம் இன்றைய நாள் அவளுக்கு ‘பிரச்சனைக்குரிய’ நாளும் இல்லை. அது வர இன்னும் ஒரு வாரத்துக்கு மேலேயே இருக்கிறது. எல்லாம் நலம்தான்; அவளுடைய விருப்பத்தைத் தவிற.
புரண்டு இளவேணிக்கு என் முதுகைக் காட்டிப் படுத்தேன். என்னுடைய அதிருப்தியை அவள் உணரட்டும். வாய்விட்டு கேட்டால் கோபித்துக்கொள்வாள். “அதுதான் இப்ப ரொம்ப முக்கியமாங்க?” என்பாள். மறுபடியும் அவளை நச்சரிக்க நாகரீகம் தடுத்துவிடும். அவளுக்கு உடற்கூறில் ஏதாவது குறை இருக்கும் என்றுதான் இப்போதுவரை எனக்குத் தோன்றிய எண்ணம்.
யோசனைகளும் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகளுமாகவே இருந்தது எனக்கு. அவளுக்குக் இந்தக் குறை இருப்பது எனக்குக் குறையாகப் படவில்லை. அந்தக் குறைக்காக, இறைவன் எனக்கு மிகப் பூரணமாக அருளிய வாலிபத்தையும் இளமையையும் இச்சையையும் பலியாக ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். எனக்கு இருப்பில் இருப்பது இந்த ஒரு வாலிபப் பருவம் தான். அதில் காணும் சுகங்களை ஒருபோதும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்கத் தயாராய் இல்லை நான்.
அதற்காக நான் இளவேணிக்கு துரோகம் செய்கிறேன் என்று பொருள்படாது. அவளிடம் எல்லாம் கிடைக்கிறது. இது ஒன்றைத் தவிர. நானும் அவளிடம் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்கிறேன்; இது ஒன்றைத் தவிர. அதையே நானும் திரும்ப அவளுக்குத் திரும்பச் செலுத்துவதிலிருந்து ஒருபோதும் தவறியதில்லையே.
வீட்டில் சமைக்காதபோது வயித்துப் பசிக்குக் கடையில் சாப்பிட்டால் தப்பில்லை; உடம்புப் பசிக்கு மட்டும் வெளியில் ஆகாரம் தேடினால் துரோகம் என்றாகிவிடுமா? பசித்தவனுக்குத்தானைய்யா ஆகாரத்தின் அருமை தெரியும்? என் மனைவி மீது வைத்துள்ள அன்புக்கு நான் எந்த ஒரு குறையும் இல்லாமல்தான் பார்த்துக் கொள்கிறேன். அந்த அன்பு மனசு சார்ந்தது. அது நிலையான ஒன்று. இது அன்பு அல்ல; வெரும் இச்சைதான். அது தீர்ந்ததும் அதற்குமேல் அங்கு மதிப்பில்லை. அதற்காக அதை அடக்கியாள நான் ஒன்றும் துறவி கிடையாது. அதற்கும் தீனி போடும் கடப்பாடு எனக்கு உண்டு.
திரும்பி பார்த்தேன். என்னுடைய இரவுகளைப் பற்றிய கவலைகள் அவளுக்கு இல்லாமலிருந்ததுதான் கொஞ்சம் வேதனை. எனக்கு வந்து சேராத தூக்கம் அவளை மட்டும் வியாபித்திருந்தது. என் இளமைக்கு இன்னொரு மருட்சி.
பொங்கி எழுகிற என்னுடைய வாலிப கிளர்ச்சிக்கு ஏதேனும் வடிகால் கட்டாயம் தேவை. இல்லையென்றால் எனக்கு இன்னும் கொஞ்ச நாளில் மனநோய் பிடித்துவிடும் போலிருந்தது. மருத்துவ ரீதியாக இது சாத்தியமா இல்லையா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், இதற்காகக் காத்திருந்து காத்திருந்து மன அழுத்தம் அதிகமகிக்கொண்டே போய்க்கொண்டிருந்ததை என்னால் மிகத் துள்ளியமாக உணர முடிந்தது.
மறுநாள் அலுவலகத்தில் வேலை முடிந்ததும் இளவேணியை வீட்டில் விட்டுவிட்டு என்னுடைய பழைய நண்பன் பாலனைச் சந்திக்கக் கிளம்பினேன். அவனிடம் முன்கூட்டியே வருவதாகச் சொல்லி வைத்ததால் அவனும் தயாராய்தான் இருந்தான். கௌரவமான குடும்பஸ்தனுக்கும் பேருள்ள ஆள்களுக்கும் ஏற்ற ‘வடிகால்’ எங்கிருக்கிறது என்று அவனுக்குத் தெரியும் என்பது எனக்கு நன்கு தெரியும். அதனால்தான் அவனைத் தேர்ந்தெடுத்தேன்.
நூறு வெள்ளிதான் செலவு. எது எப்படியோ, எனக்கு இச்சைகள் தீரவேண்டும். என்னால் இனியும் அடக்கிவைத்திருக்க இயலாது. இளவேணிக்கும் இனிமேல் தொந்தரவு இல்லாமல் போகும்; எனக்கும் இனிமேல் சங்கடங்கள் இல்லாமல் போகும். இவற்றைச் சரிகட்ட நூறு வெள்ளிதான் செலவு. என்னுடைய ஒருநாள் சம்பளத்தில் பாதிதானே.
எவளோ ஒரு பெண் கதவைத் திறந்து உள்ளே படு சகஜமாக நுழைந்தாள். பார்க்க கீழ்த்தர நிலையில் இல்லாதவளாகத் தெரிந்தாள். ஓரளவு சுமார் அழகுதான். அறையும் சுமார் தான். தனிமை; பொங்கி கொண்டிருந்த எனது காமம்; கண்ணெதிரே பணம் கொடுத்து வரவழைத்த வடிகால்…
அந்தப் பெண் யாரென்றுகூட எனக்குத் தெரியாது. ஆனால், நூறு வெள்ளியில் அவள் மீதான தற்காலிக உரிமையை நான் பெற்றிருந்தேன். அவள் பொத்தென நான் உட்கார்ந்திருந்த கட்டிலில் பாய்ந்து படுத்தாள். இந்த அறை அவளுக்கு மிக மிக பழக்கம் போல. படு சகஜமாய் இயங்கினாள் அவள்.
அவளிடம் பேச்சு கொடுக்க முயன்றேன். “ம், இல்ல, சரி,” என்று முனகினாலே தவிற கைகள்தான் அதிகம் வேலை செய்தன. என் சட்டை பட்டன்களைக் கழற்றினாள். நான் அவளுடன் இணையத் தயாராவதற்கு முன்னதாகவே அவள் கொஞ்சம் அவசரம் காட்டினாள். இந்த வாடிக்கையாளரை சீக்கிரம் கவனித்து அனுப்பிவிட்டால் அடுத்த வாடிக்கையாளரிடம் இன்னொறு நூறு வெள்ளியைச் சம்பாதிக்கலாமே என்ற முற்போக்குச் சிந்தனையோ என்னவோ.
அவள் உள்ளே வரும்போதே முக்கால் நிர்வாணமாகத்தான் வந்தாள். எனது சட்டையைக் களைத்ததும் அறை நிர்வாணமானாள். இப்போது கால் நிர்வாணத்துக்கு மாறினாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் அது முழுமையடைந்துவிடும்.
கட்டிலின் வலக்கோடியில் போய் விழுந்த என் சட்டையைப் பார்த்தேன். மனசுக்கு என்னவோபோல் இருந்தது. மீண்டும் அதை எடுத்துப் போட்டுக்கொண்டேன். அந்தச் சட்டை காதலர் தினத்துக்காக இளவேணி எனக்கு வாங்கி தந்த காதல் பரிசு!
– அநங்கம், மலேசிய சிற்றிதழ்
– 20th July 2012