கவிதைச் சிதறல்




சங்கர ஹாலில் நடக்கப்போகும் கவியரங்கத்திற்கு செல்ல புறப்பட்டுக்கொண்டிருந்தான் கவிப்ரியன்.
சலவைக்குப் போட்டிருந்த கதர் ஜிப்பாவையும், கதர் வேஷ்டியையும் உடுத்திக்கொண்டான்.
ஒன்றிரண்டு பல்லுப்போன சீப்பால் தலையை வாரிக்கொண்டு, ஸ்டாண்டில் மாட்டியிருந்த அவனது ஒரே சொத்தான அந்த ஜோல்னா பையை எடுத்து மாட்டிக்கொண்டு, தேய்ந்துபோன செருப்பைக் காலில் நுழைத்துப் புறப்படுகையில் –
“நில்லுங்க !” ஆணையிட்டாள் அவனது சகதர்மிணி.
“என்ன?” என்பதுபோல் அவளை ஏறிட்டான்.
“துளி அரிசி இல்லே வீட்லே அதுக்கு ஒரு வழி பண்ணிட்டு அப்புறம் போங்க கவிபாட” காரசாரமாகக் கூறினாள்.
பதில் சொல்லாமல் கிளம்பிய அவனை கைகளை முன் நீட்டி மறைத்துத் தடுத்து, “இப்படி பதில் சொல்லாமல் போனால் என்ன அர்த்தம்? இருந்த வேலையையும் கவிதைக்காக விட்டாயிற்று கட்டிய மனைவியை அப்படி விட முடியாது, மனசிலே பெரிய சாக்ரடீஸ்னு நினைப்போ?” சாடினாள்.
அதற்கும் அவன் அவளை சட்டை செய்யாமல் மென்மையாக அவளை ஒதுக்கிவிட்டு வெளி நடந்தான்.
அவள் காச், மூச்சென்று கத்துவது தெருமுனை வரை கேட்டது.
சட்டென்று எரிச்சலாகிப்போனது அவனுக்கு என்ன வாழ்க்கை இது! சுதந்திரமாக சுவாசிக்கக் கூட முடியாமல் . . . ஒரு காலத்தில் இந்த கவிதைக்காகத்தானே என்னை விரட்டி விரட்டி நேசித்தாள். இன்று . . . கவிதையைத் துhக்கி குப்பையில் போடச் சொல்கிறாளே!
மூட் அவுட்டாகிப் போனதால் விரக்தியோடு நடந்தான். கவியரங்கத்திற்கு போக மனம் இடங்கொடுக்கவில்லை. வீட்டிற்குப் போகவும் பிடிக்காமல் கோவிலை நோக்கி நடந்தான்.
கோவிலின் வெளிப்பிரகாரத்தில் கால் நீட்டிப் படுத்து சுற்றுப்புற சூழ்நிலையையும் மறந்து சிந்தித்துக் கொண்டிருந்தான்.
இதமான காற்று அவன் உடலையும், மனதையும் ஆசுவாசப்படுத்தியது.
அருகில் குப்பென்று ஜாதி மல்லிகையின் நறுமணம் அவன் நாசியைத் தாக்க சிந்தனை கலைந்தான்.
எதிரே பூக்கூடையுடன் கண்மணி அவனின் இனிய சிநேகிதி, கம் ரசிகை.
“என்ன கவி இங்கே படுத்திருக்கீங்க?
முகமெல்லாம் சோகமாக என்னது தேவதாஸ் போஸ்.”
“உண்மைதான் கண்மணி கவிதையைப் பிரிந்த தேவதாஸ்தான்.”
“பிரிப்பது யாரோ?”
“சாட்சாத் என் மனைவிதான்!” என்றான் வருத்தத்துடன்.
“என்ன விஷயம், கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன்.”
கேட்டதுதான் தாமதம் சற்று முன் வீட்டில் நடந்த நிகழ்ச்சியை சொன்ன கவிப்ரியன், ஏன் கண்மணி பெண்கள் எல்லாம் இப்படி இருக்கிறீர்கள், பொதுவாக பெண்கள் ரசனை மிக்கவர்கள் என்று சொல்வார்கள் ஆனால் எனக்கு வாய்த்ததுவோ, கவிதைக்காகத்தான், என்னை நேசித்தாள் என் மனைவி இன்று கவிதையையே வெறுக்கிறாளே. ஏன் இப்படி மாறினாள் இல்லை ரசனை இருப்பதாக முதலில் நடித்தாளோ ஒன்றுமே புரியவில்லை. ரசனை இல்லாத அவளுடன் எப்படித்தான் நாட்களை கடத்த போகிறேனோ தெரியவில்லை நீயே சொல் கண்மணி அவள் செய்யறது சரின்னு படுதா?
கொஞ்சம் நிதானித்த கண்மணி சொன்னாள்.
“அவள் செய்தது கொஞ்சங்கூட சரியில்லை தான். சரியான முட்டாள் உங்க மனைவி ஐ மீன் உங்களை கல்யாணம் பண்ணிகிட்டது தப்புத்தான்.”
“கண்மணி நீ என்ன சொல்றே?”
“பின்னே என்ன சார்? எந்த ஒரு பெண்ணும் உணவு, உடை, இருப்பிடம் அப்படிங்கிற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுகிற கணவனைத்தான் மதிப்பாள். போற்றுவாள். நீங்களும் கொஞ்சம் வசதியோடு இருந்து கவிதை எழுதினா அவளும் ரசித்திருப்பாள், அடிப்படைத் தேவையை நீங்க நிறைவேற்றாமல் இருக்கும் போது கவிஞன் அவளுக்கு ஞாபகம் வருவதில்லை. கணவன் தான் ஞாபகம் வருகிறது.
நீங்க கவிஞர். செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்னு வள்ளுவரும் சொல்லியிருக்கலாம் அதை நீங்கள் மேற்கோள் காட்டலாம். அதுக்காக வெறும் கவிதைகளைத் தின்னுட்டு உங்களால் மட்டுமல்ல யாராலும் உயிர் வாழ முடியுமா? உங்க மனைவி ஸ்தானத்திலே நானோ, கல்பனாவோ, கவிதாவோ யாராக இருந்தாலும் இதையேத்தான் செய்வோம் ஏன்னா பசிக் கொடுமை பாராட்டச் சொல்லாது. ரசிக்கச் செய்யாது.
எங்களைப் போல் வெளியில் நின்று உங்க கவிதைகளை ரசிப்பதுடன் நிற்காமல் உங்களை மணந்து கொண்டது உங்க மனைவி செய்த பெரிய தப்புதான் ஸார்.” பிரசங்கமே செய்து விட்டு கண்மணி நடந்தாள்.
– இனியஉதயம்