கல்லிலே கலை வண்ணம் கண்டான்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 28, 2024
பார்வையிட்டோர்: 2,535 
 
 

‘அறிவு- அனுபவ ஞானம்…!’ இதெல்லாம் பொசுக்குனு ஓளவைக்கு மரத்திலிருந்து நாவற்பழம் விழுந்தா மாதிரி.. அதான்., சுட்ட பழம் வேணுமா? சுடாத பழம் வேண்மா?ன்னு கேட்டுக் கிடைத்தா மாதிரிதான் பொசுக்குனு கிடைக்கும். ஓளவைக்கும் பாருங்க மேல இருந்துதான் கீழே விழுந்து கிடைத்தது. அவ்வை விழித்துக் கொண்டாள் நாம பல தடவை, விழுந்தும் கிடைக்கவே மாட்டேங்து..! ‘ஞானம்தான்!’.

அந்த மார்க்கெட்டில் நுழைந்தான் அவைநாயகன். அதுவொரு பழ மார்க்கெட். அதில் பழமுதிர் நிலையங்களில் மாம்பழங்களில் அடுக்கி வைத்த ரேக்கின் மேலே பெயர்பலகையாய் பழம் இன்ன ஜாதின்னு எழுதி வைக்கப்பட்ட மாதிரி எதுவுமில்லை மலை மலையாய் பழங்கள் குவிக்கப் பட்டுக் கிடந்தன.

ரேட் ரொம்பச் சீப்பா இருக்கும் பெரிய மார்க்கெட் இல்லையா அது?! அதில் ஒரு குவியலிருந்த ஒரு பழத்தை எடுத்து, நாசியருகே வைத்து வாசம் பார்த்தான். எல்லாம் காய் நிறத்தில் பச்சையாய் இருக்கவே பழத்திருச்சா தேடினான் வாசத்தை நாசியில்

இவன் நுகர்வதைப் பார்த்த நூர்முகமது பழ வியாபாரி நல்ல வேளை மருத மல்லி விற்பவனில்லை..! வாசம்பிடிச்சிட்டீல்லா எடு ஐம்பதை என்று எகிரவில்லை! மாறாக,

‘மோந்து பார்த்து வாங்கினதெல்லாம் அந்தக்காலம்! அந்தக் காலமெல்லாம் போயிடுச்சு! அப்ப பழமெல்லாம் தானாய் பழுக்கும்!’ என்று சொல்லி ஒரு மாதிரியாய் சிரித்தார்.

உண்மைதான்.. அவன் தந்தையோடு மார்க்கெட் போன காலத்தில் அவன் அப்பா, மோந்து பார்த்தே பழம் இன்ன ஜாதி என்பதையும் புளிக்குமா? இனிக்குமா என்பதையும் புரிந்து சொல்வார். அந்த ஞானத்தில் இவனும் மோந்து பார்க்க, நூர்முகமது இவனைச் சாடினார்.

இவன் ஆச்சரியமாக பாயைப் பார்க்க அவர் தொடர்ந்தார்

‘இன்னா தம்பி இன்னும் நீ ஒங்க அப்பா காலத்துலயே இருக்கயே?! நவீன காலத்துல மாம்பழங்களை எல்லாம் கல்லிலேயே பழுக்க வச்சுடறாங்க! கல்லிலே இருக்கும் கலை வண்ணத்தை மூக்கால் முகர முடியாது. இதெல்லாம் பிஞ்சில் பழுத்த பழமல்ல…! கல்லில் பழுத்த பழம் எடத்தைக் காலி பண்ணு., ! ‘ என்றார். நூர் முகமது அந்தக் கணம் ஆறுமுகனாக அவ்வைக்கு அருளிய ஆட்டுக் கார குருவாக அவைநாயகத்துக்கு அருள்புரிந்தாற் நூர்முகமது!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *