கலையாத வேடம்
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: June 17, 2026
பார்வையிட்டோர்: 210
(குறிப்பு – 2011 ஆம் ஆண்டு, அடியேன் டைரியில் எழுதி வைத்திருந்த புனைகதைக்கான கதைக் கரு இது)

நடுத்தர வயது பாஸ்கர் – மத்திய அரசு அதிகாரி .அவருடைய மனைவி யமுனா. இந்த இணையருக்கு ஒரு பதின்பருவ புதல்வி – ரஞ்சனா ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். பாஸ்கர், உத்யோகத்தில் நேர்மையைக் கடைப்பிடிக்காமல், லஞ்ச லாவண்யத்திலும் முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான். மதிநுட்பம் மிகுந்த மனைவியாக யமுனா, இவை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் தீய வழி வருமானம் வேண்டாம் என்று எச்சரிக்கிறாள். பாஸ்கர், மனைவியின் எச்சரிக்கைகளை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. மழை நாள் மாலை நேரம். கணவன் வீடு திரும்பவில்லை. யமுனாவும் ரஞ்சனாவும் ஒரு வயதான பணிப் பெண்ணும் வீட்டில் இருக்கிறார்கள். வீட்டிற்குள் மத்திய அரசின் விஜிலன்ஸ் அதிகாரிகள் சோதனை செய்கிறார்கள். பாஸ்கர், வீட்டுப் பரணில் மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகளையும் ஆவணங்களையும் பறிமுதல் செய்து எடுத்துச் செல்கிறார்கள். யமுனா, இது பற்றி எல்லாம் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறுகிறாள். என்ன காரணத்தாலோ அவர்கள் அவளிடம் மேலும் கேள்விகள் கேட்டு குடையாமல் வீட்டிலிருந்து கிளம்பி விடுகிறார்கள். அந்த நிகழ்ச்சிக்குப் பின் பாஸ்கர் வீட்டிற்கு வரவில்லை. தலைமறைவாகி விடுகிறான். எங்கு போனான் என்ன ஆனான் இருக்கிறானா இல்லையா என்றெல்லாம் அறிய முடியவில்லை. யமுனா பாஸ்கரின் நண்பர்களின் வீடுகளுக்கு நடையாய் நடந்து கேட்டுப் பார்த்தாள். யாரும் அவள் கணவன் எங்கே என்பதை சொல்லவில்லை.
யமுனா, வேலைக்குப் போய் ரஞ்சனாவை வளர்த்து ஆளாக்கி விடுகிறாள்.
ஆளாகி மலர்ந்த ரஞ்சனாவோ காதல் வலையில் விழுந்து அம்மாவிடம் சொல்லிக் கொள்ளாமல் காதலனுடன் வேறு ஊருக்குச் சென்று விடுகிறாள்.
நான்கு ஆண்டுகளுக்குப் பின், தனி மரமாய் இருக்கும் யமுனாவைத் தேடி அவளுடைய மகளும் மாப்பிள்ளையும் குழந்தையுடன் வந்தார்கள். மாப்பிள்ளை ரவி குமார் , யமுனாவின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான். டெல்லியில் உள்ள அவர்கள் வீட்டிற்கு வந்து ஒரு வாரம் இருக்கும்படி வேண்டிக் கொள்கிறான். ரவி – டெல்லியில் விஜிலன்ஸ் அதிகாரியாக இருக்கிறான்.
டெல்லியில் மகள் வீட்டில் சில நாள் தங்கி இருக்கிறாள் யமுனா. ரஞ்சனா , சில சமயம் , அவளுடைய அப்பாவைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது என்று தாயிடம் சொல்கிறாள்.
சென்னைக்கு கிளம்புகிற அன்று மாப்பிள்ளை ரவி, ‘என்னால் ஸ்டேஷனுக்கு வர முடியாது . அழைத்தால் வரும் ஓட்டுநர் சர்தார்ஜி வருவார் . அவர் தமிழ் தெரிஞ்ச சர்தார்ஜி’ என்று சொல்கிறான்.
ரயில் நிலையத்திற்கு மகளுடன் காரில் செல்கிறாள் யமுனா.
சென்னை செல்லும் இரயில் வண்டியில் தன்னுடைய இடத்தில் அமர்கிறாள்.
இரயில் வண்டி செல்வதற்கு முன்பு ஜன்னல் அருகில் வந்து நின்றாள் ரஞ்சனா.அவள் கையில் அவளுடைய குழந்தை. நடைமேடையில் சில அடிகள் தள்ளி ஓட்டுநர் சர்தார்ஜி நின்று கொண்டிருந்தார்.
யமுனா பேசினாள் – “என்ன நெஞ்சழுத்தம் பாரு நட்டாத்துல விட்டுட்டுப் போன மனைவிய பார்த்தும் மன்னிப்பு கேட்க மனசு வரலை… விஜிலன்ஸ் கண்ல மண்ணைத் தூவி தலைமறைவான ஆள், விஜிலன்ஸ் அதிகாரி கிட்ட வண்டி ஓட்றாரு.. இவரு தமிழ் தெரிஞ்ச சர்தார்ஜி இல்ல.. தமிழ்நாட்டிலிருந்து வந்த சர்தார்ஜி… ஒங்க அப்பாவைப் பார்க்கணும்னு பேசினியே… இந்த சர்தார்ஜி தான் ஒங்க அப்பா…”
“என்னம்மா சொல்றே” அதிர்ச்சியுடன் ரஞ்சனா. வண்டி கிளம்பி விட்டது. யமுனா மகளையும் மகள் கையில் இருந்த பேத்தியையும் பார்த்து கையசைத்தாள்.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
உறுப்புகளைத் தேடி…
காரை ஆடலரசன்
June 17, 2026
திருப்புமுனை
ஜெயந்தி சங்கர்
June 17, 2026
தந்தையாகிய தமையன்
இரா.கலைச்செல்வி
June 17, 2026
