கலங்கி தெளிந்த மனம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 3, 2026
பார்வையிட்டோர்: 5,028 
 
 
காலையில் படுக்கையிலிருந்து எழுந்து பார்த்த போதே கணவன் ராசப்பனைக்காணாமல் கலங்கியது கண்ணாத்தாளுடைய கண்கள்.
‘இந்த மனுசன் இந்நேரத்துக்கே எந்தப்பக்கம் போயிருப்பாரு? அன்னாடும் நானெந்திருச்சு ஊடு, வாசக்கூட்டி வாசலுக்கு சாணித்தண்ணி தொளிச்சு மாட்டுக்கட்டுத்தரைல சாணி வளிச்சுக்கொட்டி, மாட்டுல பாலக்கறந்து, காப்பித்தண்ணி வெச்சு எழுப்புனாத்தானே எந்திரிப்பாரு?’ தனக்குள் பல சந்தேகக்கேள்விகள் எழ,கலைந்திருந்த சேலையை சரி செய்து கொண்டு, திறந்திருந்த கதவை வெளியில் சென்று சாத்தி விட்டு பக்கத்திலிருந்த கிணத்தின் அருகில் இருந்த, கிணறு தோண்டும் போது போடப்பட்டிருந்த மண் மேட்டின் மீது தடுமாறியபடி ஏறி நின்றவள் சுற்றிலும் பார்த்தாள்.
எங்கும் தோட்டத்துக்குள் கணவன் உருவம் தெரியாததால் கவலையுடன் ஓலை வேய்ந்த சாலை வீட்டுக்கு திரும்பி வந்தவள் கட்டுத்தரையில் கட்டப்பட்டு பசியால் கத்திக்கொண்டிருந்த மாடுகளையும், ஆடுகளையும் காட்டிற்குள் மேய அவிழ்த்து, அடங்காத சிலதுக்கு அன்னாங்கால் போட்டு முடுக்கி விட்டாள்.
“கூரை ஏறிக்கோழி புடிக்காதவன் வானமேறி வைகுந்தமா போயிருக்கப்போறான்? அவனெனத்தப்போயி தேடறே? சாராயந்தா குடிக்கப்போயிருப்பானந்தக்கசுமால…. நீ வந்து இந்தத்தயிரக்கொஞ்சஞ்சிலுப்பிக்குடு தாயி. இத்தன மோரூத்தி கம்மஞ்சோத்த கரைச்சுக்குடிச்சுக்கறேன். பசி வேற உசுரப்புடுங்குது…” மாமியார் அருக்காணி கூப்பிட, மறுக்காமல் வந்து தயிர் சிலுப்பும் மத்தை எடுத்து, தயிர் பானையில் போட்டு திண்ணைக்காலில் கட்டியிருந்த கயிற்றில் மேலும், கீழும் போட்டு, மத்தில் சுற்றிய கயிரை முன்னும் பின்னும் இழுத்து கடமையே கண்ணாக தயிரைச்சிலுப்பினாள் கண்ணாத்தாள்.
வெகு நேரமாகியும் கணவனைக்காணாததால் வேலைக்காரன் வெங்கியை அனுப்பி ஊருக்குள் சென்று தேடி வரச்சொன்னாள். வெங்கி தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு செல்லத்தயாராகும் போதே மாட்டு வண்டி ஒன்று தோட்டத்துக்குள் வந்தது.
அந்த வண்டியை பக்கத்து தோட்டத்து கருப்பசாமி ஓட்டிவர, அதில் கணவன் ராசப்பன் படுத்தபடி வருவதைக்கண்டவள் ‘என்னமோ? ஏதோ?’ என நினைத்து கண் கலங்கினாள்.
வாசலில் வந்து நின்ற வண்டியிலிருந்த இறங்கிய கருப்புசாமி, “அக்கா கொஞ்ச இந்தல்ல வா…. மச்சா காரங்காத்தால சாராயக்காரனூட்டுக்கே போயி சாராயத்த வாங்கி குடிச்சுப்போட்டு நடு ரோட்ல கெடந்தாரு. நல்ல வேள நானும் அந்தப்பக்கம் பாலூத்தப்போன போது பாத்து அந்தல்ல இருந்த ஊட்டுப்பக்கம் படுக்கவெச்சுப்போட்டு வந்து காளைகல வண்டில பூட்டி ஓட்டீட்டு போயி வண்டில தூக்கி படுக்க வெச்சுட்டு வந்தேன்….” என சொன்னதைக்கேட்டதும் கண்ணாத்தாளுக்கு அழுகை தேம்பலாக மாறியது.
மயக்க நிலையில் வண்டியில் படுத்த படி தன்னை விழித்துப்பார்த்த கணவனைப்பார்த்ததும் கோபம் தலைக்கேறியது.
“நீயெல்லாம் ஒரு குடியானவனா…? பெத்த பொம்பளப்புள்ள வயிசுக்கு வந்து பத்து நாளுங்கூட ஆகுல. உன்னைய இப்புடிப்பாத்தா, ஆராச்சும் நம்ம சாலைக்கு பொண்ணுக்கேட்டு வருவாங்களா….? உன்னைய நம்பி என்ற அப்பங்கொண்டு வந்து என்னைய கண்ணாலம்கிற பேர்ல குழில தள்ளிப்போட்டு போயிட்டான். ஒன்னி நானென்ன பண்ணுவேன்? ஆருட்ட சாபமோ அம்பா பாஞ்சிருச்சு, எவருட்ட சாபமோ எமனா வந்திருச்சு… நீயே தூக்கிக்கொண்டு போயி திண்ணைல போட்டுட்டு போ சாமி. ஒன்னி மேலு அந்த சண்டாளன ஆயிசுக்கும் நாந்தொட மாட்டேன்” சொன்னவள் வாசலில் உட்கார்ந்து ஒப்பாரி வைத்த படி துக்கப்பாட்டுப்பாடி அழுதாள்.
வேலைக்காரன் வெங்கியும், வண்டிக்கார கருப்புசாமியும் ராசப்பனை வண்டியிலிருந்து கீழே இறக்கி வீட்டின் முன் இருந்த திண்ணையில் படுக்க வைத்தனர்.
அன்று முழுவதும் திண்ணையிலேயே மது மயக்கத்தில் கிடந்த ராசப்பனுக்கு உண்ண, குடிக்க எதுவும் கொடுக்காமல், தானும் அன்ன, ஆகாரம் எடுக்காமல் வீட்டிற்குள் சென்று முடங்கிப்போனாள் கண்ணாத்தாள்.
மாமியார் அருக்காணி பக்கத்தில் உள்ள தனது பெண் வீட்டிற்கு சென்று விட, காலையில் பள்ளிக்குச்சென்று மாலையில் வீடு வந்த மகள் மரிக்கொழுந்து பெற்றோரின் நிலைகண்டு மனம் வெதும்பி அழுதாள்.
“அப்பா….அப்பா…. எந்திரிப்பா. ஏப்பா எந்திரிக்க மாட்டேங்கறே?” என திண்ணையில் படுத்திருந்த தந்தையை எழுப்பியவள், வீட்டிற்குள் சென்றதும் மகளைப்பார்த்ததும் கட்டியணைத்து கதறினாள் கண்ணாத்தாள்.
“எதுவும் புரியாமல் தானும் அழுதாள் மரிக்கொழுந்து. மகளுக்காக எழுந்து உணவை சமைத்தவள்,பசி தாங்காமல் சாப்பாட்டில் வடித்த கஞ்சியைக்குடித்தாள். மகளுக்கு தட்டில் சோறு போட்டு வைக்க, மரிக்கொழுந்து சோற்றுத்தட்டை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினாள். ஓடியவள் தந்தையருகில் அமர்ந்தவுடன், மகளைக்கண்டு எழுந்த ராசப்பன் தள்ளாடியபடி வேகமாக வாசலைத்தாண்டி சென்று வாந்தி எடுத்து விட்டு வந்து முகம் கழுவி திண்ணையில் அமர்ந்தவனைப்பார்த்து மகள் தேம்பியதைக்கண்டு தலை குனிந்தான்.
துவைத்து காயவைக்கப்பட்டிருந்த துண்டு வேட்டியை எடுத்து வந்து தந்தையின் முகத்தைத்துடைத்தவள், சோறெடுத்து தந்தைக்கு ஊட்டி விட்டாள்.
பசி வயிற்றைக்கிள்ள தானே மகளிடமிருந்த தட்டை வாங்கி கண்ணீர் சிந்தியவாறே சாப்பிட்டதோடு, மகளுக்கும் ஊட்டி விட்டான். அங்கே இரண்டு பேருக்குள்ளிருந்தும் பாசத்தின் வெளிப்பாட்டால் பேச்சு மூச்சிழந்திருந்தது. வாயால் பேச துக்கம் தொண்டை அடைத்தது. இருவரின் கண்கள் மட்டும் கண்ணீர் ததும்ப பேசின.
‘ஒன்னிமேலு என்ற ஆயுசுக்கும் நாங்குடிக்கமாட்டஞ்சாமி. இப்ப என்னை மன்னிச்சுப்போடு’ என ராசப்பனின் கண்களும், ‘நீங்க என்ன பண்ணினாலும் என்னோட அப்பா தான். உங்களை மன்னிக்கிற வயிசுல நாங்கிடையாது. நீங்க இல்லாம என்னால வாழ முடியாது. ஆனா குடிச்சு ஒடம்ப மட்டும் கெடுத்துக்காதீங்க. அம்மா பாவம். காட்டுக்குள்ளேயும் சிரமப்பட்டு, ஊட்டுக்குள்ளேயும் சிரமப்படுது. உங்களையே நம்பி நாங்க இருக்கோம். உங்களுக்கு ஏதாச்சும் ஆயிட்டா நாங்க எப்புடி வாழறது?’ என மகளது கண்கள் பேசியதாகப்புரிந்தது.
மகளை வாரியணைத்து பாசம் பொங்க உச்சியில் கணவன் முத்தமிட்டதைக்கண்டதும், ‘குடும்பம் தான் உலகம்’ என நினைத்து வாழும் கண்ணாத்தாளின் மனம் கவலைகளை வெளியே ஓட்டிவிட்டு மகிழ்ச்சியை உள்ளே அழைத்தது.
மகிழ்ச்சியால் வாடிய முகம் மலர, பசி வயிற்றைக்கிள்ள சமையலறைக்குள் சென்று தட்டை எடுத்து வெகுளியைப்போன்று, கலங்கி பின் தெளிந்த மனதுடன் சோறு போட்டு ஆனந்தக்கண்ணீர் வடிய நிம்மதியாக பசி போக்க உண்ண ஆரம்பித்தாள்.
கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *