கறையான் என்ஜினீயர்!




பரபரப்பில்லாத அந்தப் பகுதியில் இருந்தது, கறையான் என்ஜினீயர் கௌதமன் வீடு.

குண்டும் குழியுமாக நீண்டிருந்த சாலையின் கடைசிப் பகுதியில் இருந்ததால், அந்த முக்கு வீட்டின் இருமருங்கிலும் காலி சைட்டுகள். அநியாய விலைக்கு வாங்கிப்போட்டவன்,
‘எப்படியும் கோடி விலை போகும்’ என்று எங்கோ அட்டணைக்கால் போட்டவாறு கனாவில் மிதந்து கிடக்கிறான்.
கௌதமன் வீட்டு வாசலில் தாபரித்திருந்த நந்தியாவட்டை, செம்பரத்தை, நித்யகல்யாணி, முல்லை போன்ற தாவரங்களுக்கு ஒரு பெரியவர் நீர் வார்த்துக் கொண்டிருக்கும் வழமையான காலை நேரம் அது. பகலோனின் கதிர்கள் பறவையின் இறகு போல் ஒளியை உதிர்த்துக் கொண்டிருந்தன.
பெரியவர் வேறு யாருமில்லை. கௌதமனின் தந்தை பரமசிவம் தான்.
அப்போது யாரோ ஒருவர், வாசலின் எதிர்புறம் ஓங்கிநின்ற புங்கமர நிழலில், ராயல் என்ஃபீல்டு புல்லட்டை அசத்தலாக ஓரங்கட்டினார்.
‘சார் …சார்’
‘யாருப்பா…. என்ன வேணும்?’
‘கறையான் என்ஜினீயர் வீடு இதுதானுங்களா?’
‘அட! இப்படியொரு பேரு போட்டுட்டானுகளா’ என்று நினைத்தவாறு, ‘ஓ… கௌதமனா..இருங்க வரச் சொல்றேன்’ என்றார் பரமசிவம்.
பேச்சொலி கேட்டு, கௌதமன் வெளியே வந்தான்.
‘சார்… அசோக் நகர்லே என் வீடு இருக்கு… கறையான் மருந்து அடிக்கணும்’
‘சரி… நாளைக்குக் காலைலே வந்து பார்த்துட்டுச் சொல்றேன்.. ஃபோன் நம்பர், அட்ரஸ் கொடுத்துட்டுப் போங்க.. உங்க பேரு சார்?’
‘ரகுநாதன் சார்’
அவரை அனுப்பிவிட்டு உள்ளே நுழைந்த கௌதமனுக்கு இன்னொரு அழைப்பு வந்தது.
இது…… அவனுடைய ஒரே மகள் ஓவியா!
‘டாடி…. வந்து பாருங்க… இது எப்படியிருக்கு?’
அவள் அறை ஒரு சித்திரக்கூடம்.
தூரிகையால் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள் அகண்ட மேசைமீது இரைந்து கிடந்தன.
ஒரு பெருங்காட்டில் பச்சைப்பசேலென்றிருந்த இலந்தை மரத்தின் இருளில் ஒரு பஞ்சவர்ணக்கிளி பதுங்கியிருக்கிற மாதிரி தீட்டியிருந்தாள். அது ஒரு கொலாஜ் ஆர்ட் வடிவம்.
‘மகளே! இது சூப்பர்தான்… இது மாதிரி இன்னும் பத்து ஓவியங்களாவது வரையணும்…’
‘ஓகே டாடி..’
‘ஆர்ட் எக்சிபிஷன் எப்ப?’
‘அதுக்கு இன்னும் ஒரு மாசமிருக்கு, டாடி…’
‘வெரிகுட்…. அப்படீன்னா உன்னாலே முடியும்!’
ஓவியாவுக்கு பாலப்பருவத்திலிருந்தே ஓவியங்கள், சித்திரங்கள், படங்கள் வரைவதில் பேரார்வம்.
அழிபசி! அழித்தழித்துத் தீட்டினாலும் திருப்திப்படாத கரங்கள் அவளுக்கு. தந்தையும், தாயும் எல்லாமே அவளுக்கு கௌதமன்தான். பிரசவம் முடிந்து, பச்சை மண்ணை அவன் கைகளில் திணித்துவிட்டு மறைந்து போனாள் ரோகிணி – அவன் மனைவி. தன் மடியில் ஓவியம் போல் கிடந்த அவளுக்கு ‘ஓவியா’ என்று பெயரிட்டான். அவளைக் கண்ணும் கருத்துமாக வளர்ப்பதிலேயே அவன் ஆசைப்பாடு அமைந்திருந்தது. அதனாலோ என்னவோ, இந்த உலகத்தில் அவன் வேறெந்தப் பெண்ணையும் ஏறெடுத்துக் கூடப் பார்க்கவில்லை.
கல்லூரிப் படிப்பை முடித்ததும் அவள் ஒருநாள் கௌதமனிடம் சொன்னாள்.
‘டாடி! ஒண்ணு சொல்லுவேன்… கேட்பீங்களா..’
‘சொல்லு மகளே!’
‘நான் இங்கேயே… எப்போதும்… உங்களோடவே இருந்துடறேனே..’
அதில் ஆயிரம் அர்த்தம் தொனித்தது.
அவன் விழிகளில் நீர் கசிந்தது. அவளை வாரியணைத்து நெற்றியில் முத்தமிட்டவாறு, நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
அப்புறம் சொன்னான்.
‘அதெப்படி முடியும் மகளே! ஒரு கதையை யாராவது மனசோடவே வச்சுக்குவாங்களா.. சமைச்ச உணவை சமையல் அறைக்குள்ளேயே வச்சிக்க முடியுமா.. ஒரு பொண்ணை எத்தனை நாளைக்கு அவ பிறந்த வீட்டுக்குள்ளேயே வச்சிருக்க முடியும்…’
‘போங்க டாடி! இந்த மாதிரி தத்துவமெல்லாம் நானும் நிறையப் படிச்சிருக்கேன்!’
‘முதல்லே நீ இந்த நாட்டின் ஆகச் சிறந்த ஓவியப் பெண்ணாக வரவேண்டும்.. அதுக்கு முயற்சி செய்!’
அவள் உடனே ஓடிப்போய் தன் ஓவிய அறைக்குள் புகுந்துகொண்டாள். தான் வரைந்த பெரிய சைஸ் பிகாஸோ ஓவியத்தின் முன்பு நின்றுகொண்டு, அந்தப் புகழ் பெற்ற ஓவியனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். பிகாஸோ அவளுடைய மானசீக குரு!
அந்த மேதை வரைந்த பிரபலமான ‘குவர்னிகா’ ஓவியத்தை அலமாரி மீது நிறுத்தி வைத்திருக்கிறாள்.
பிகாஸோ நேரடியாக ஓவியம் வரையும் ‘த மிஸ்டரி ஆஃப் பிகாஸோ’ திரைப்படத்தை ஓவியா பார்க்க நேர்ந்தது.
அந்த கணம் முதல் அவர்தான் அவளுக்கு ரோல்மாடல்.
கழைக்கூத்தாடிகளையும்,இரப்போர்களையும் மையமாகக் கொண்டு நீலநிறச் சாயம் பூசப்பட்ட அவரது ஓவியங்களில் அவள் தன்னை இழந்து போனாள்.
அதேபோல், லியனார்டோ டாவின்சியின் ‘மோனா லிசா’, ‘கடைசி விருந்து’, விற்றுவியன் மேன்’ போன்ற உலகப் புகழ் பெற்ற ஓவியங்கள் அவளைக் கட்டிப்போட்டன.
அதேபோல், ரவி வர்மாவின் ஆயில் பெயிண்டிங்குகளில் குறிப்பாக ராணி லட்சுமிபாய் ஓவியம், எமோஷன்களை வெளிக்காட்டிய தத்ரூபமான சாகுந்தலா, தமயந்தி போன்ற நூற்றாண்டுகள் கடந்த அவரது சித்திரங்களுக்குள் மூழ்கி, லயித்துக் கிடப்பாள்.
பத்து வயதிலிருந்தே தன் ஆக்கத் திறன்களை ஓவியம் வரைதலில் வெளிக்காட்டத் துவங்கினாள். ஆரம்பத்தில் கேலிச்சித்திரங்களை கோட்டோவியங்களாக வரைந்து தள்ளினாள், அதன் தொடர்ச்சியாக, வண்ணம் தீட்டாமல் ‘அவுட் லைன் டிராயிங்’ போன்று வரையப் பழகிக் கொண்டாள். அப்புறம் இயற்கைக் காட்சிகளைப் பிரதிபலிக்கும் ‘லேண்ட்ஸ்கேப்’ ஓவியம்……
…இப்படித் தன்னைத் தானே மேம்படுத்திக்கொண்ட ஓவியாவுக்கு பேராசை ஒன்று
உண்டு. அடுத்த மாதம் தேசிய அளவில் பெங்களூரில் நடைபெறும் ஆர்ட் எக்சிபிஷனில் குறைந்தது பத்து ஓவியங்களாவது காட்சிப்படுத்த வேண்டு மென்பதுதான் அது.
அதற்கென்று பூச்சு ஓவியங்கள்,எண்ணெய் ஓவியங்கள், துணி ஓவியங்கள், நவீன ஓவியங்கள் என்று பல உத்திகளில் முயன்றுகொண்டிருக்கிறாள்.
இராப்பகல் உழைத்துவரும் அவளுக்கு தோன்றாத்துணையாக இருப்பவர் அவளுடைய தந்தை கௌதமன்.
அடுத்த நாள் கௌதமன், உடன் வேலையாட்களுடன் கறையான் மருந்து அடிக்கும் வேலையாக, ரகுநாதன் வீடு இருக்கும் அசோக் நகர்ப்பகுதிக்குப் போனான். வீட்டைச் சுற்றிலும், உட்புற அறைகளிலும் கறையான் மருந்து அடிப்பதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொண்டான்.
சுவரோடு அப்பிக்கிடந்த ஷோகேஸ், வால்ரும், பீரோ, மேசை என்று எல்லாப் பகுதிகளிலும் கறையான் படை படையாய்ப் புகுந்து துவம்சம் பண்ணியிருந்தது. ஆனாலும் அதற்கு ஓநாய்ப் பசி போலும்!
லிவிங் ரூம் சுவர்களில் ஆரம்பித்து ஒருவர், அடிக்கொரு ட்ரில் போட்டுக் கொண்டே வர, இன்னொருவர் ‘இமிடாக்ளோப்ரிட்’ மருந்தை இஞ்செக்ட் செய்ய, வேறொருவர் ‘டைல்பிக்ஸ்’ புரை அடைப்பானால் பேக் பண்ணிக்கொண்டே வந்தார்.
‘ரகுநாதன் சார் ! இங்கே வாங்க… இந்த வால்ரூம் ஓரத்திலே பாருங்க… லைவ் ஓடிட்டு இருக்கு!
கௌதமன் அழைத்தான்.
‘ரகுநாதன் பார்த்த காட்சி அவனை அலைகுலையாக்கிற்று.
‘என்ன என்ஜினீயர் சார்…. நூத்துக்கணக்குலே போய்ட்டிருக்கும்போல..’
‘நூத்துக்கணக்கா… லட்சக்கணக்குலே சார்! கார்பெண்டர் யாருங்க… கறையானுக்குச் சலிப்பே வராத மரம் சார் இது!..’
‘பத்து வருஷம் இருக்கும்.. என்னமோ மரம்னு சொன்னான்.. ஞாபகமில்லே.’
‘இது சிக்வுட்.. கறையானுக்குப் பிடித்தமான ஸ்டார் ஓட்டல் பிரியாணி இது!
இப்போதைக்குப் பிரச்சனையில்லே.. இந்த வால்ரூம், பீரோ, டேபிள் எல்லாத்தையும் அப்படியே வெளிலே நகர்த்தினீங்கனா….அங்க நிச்சயமா கறையான் இருக்கும்!’
‘அப்படியா?’
‘அது பின்னாலே பார்த்துக்கலாம்.. வாங்க… வீட்டைச் சுத்தி அடிக்கப் போறோம்’
‘அதுக்கும் இதே மருந்துதானா?’
‘இல்லேங்க.. அங்க ஃப்ராஃபெக்ச்சர்ன்னு ஒன்னு இருக்கு… அதோட ஃசைபர் கோத்ரின் கொஞ்சம் மிக்ஸ் பண்ணி அடிப்போம்…’
‘என்னமோ சொல்றீங்க.. ஒண்ணுமே புரிலீங்க’
‘உங்களுக்குப் புரிய வேண்டாம் சார்… கறையானுக்குப் புரிஞ்சா சரி!’
அன்று இரவு –
வீட்டுக்கு வரத் தாமதமாகும் என்று சொல்லியிருந்தான் கௌதமன்.
ஓவியா சித்திரக்கூடத்தில் படங்கள் தீட்டுவதில் முனைப்போடு இருந்தாள்.
பரமசிவம் முற்றத்தில் மென்னடையில் இருந்தார்.
அவர் கவலையெல்லாம் தன் ஒரே மகன் கௌதமனைப் பற்றித்தான். வாழ்க்கை ஒரு நதியைப்போல் ஓடிக்கொண்டேயிருக்கிறது. முதுமையை நெருங்க நெருங்க,வாழ்க்கை மதிப்பிழந்து விடுகிறது.
‘நான்தான் காலத்தைக் கடத்த வேண்டிய நிலையில் இருக்கிறேன்… இவனுக்கென்ன…இழந்துபோனவளையே நினைத்துக்கொண்டிருக்கிறான்… நேரம் கனியும்போது, ஓவியாவும் மேகம்போல் கடந்துபோய்விடுவாள்… அதற்கப்புறம் இவன் கதி?’
ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்துகொண்டு பலமுறை அவனிடம் பேசியாயிற்று. அவன் மனசு கன்மலை போல் இறுகியேகிடக்கிறது. விடியுமட்டும் மழை பெய்தாலும் ஒட்டாங்கிளிஞ்சல் கரையுமா என்கிறமாதிரி.
சற்று நேரத்தில் இரும்பு கேட்டைத் திறந்துகொண்டு பைக்கில் உள்ளே நுழைந்தான்,
கௌதமன்.
பரமசிவம் மெளனமாக போர்டிகோவுக்கு வெளியே நடந்துகொண்டிருந்தார். சோகம் கப்பிய அவர் முகத்தைப் பார்ப்பதற்கு அவனுக்கு வியசனமாக இருந்தது.
அப்பா மனசு அப்படித்தான் இருக்கும். அவனையே அவன் தேற்றிக் கொண்டவனாய்,
‘என்னப்பா.. நீங்க சாப்பிட்டுட்டிங்களா…’ என்றான் அக்கறையோடு.
‘ம்…ஓவியா நீ வரட்டும்னு இருக்கா.. போய்ப் பாரு,.. நேரமாச்சு’ என்றார் பரமசிவம் தலையை குனிந்தவாறே.
அப்போது –
ஓவிய அறையிலிருந்து அலறல் சத்தம்.
‘டாடி’ இங்க வந்து பாருங்க… எல்லாமே போச்சு!’
இருவரும் அரக்க பரக்க உள்ளே ஓடினார்கள்.
அங்கே-
மரபீரோ திறந்து கிடந்தது. அவள் தீட்டிய ஓவியங்களெல்லாம் சின்னா பின்னமாகி நொறுங்கிக் கிடந்தன.
‘மூணு மாசமா உழைச்சதெல்லாம் வீணாப் போச்சு. தாத்தா இங்கே.. பாருங்க. எல்லாமே கறையான் அரிச்சிருச்சு! டாடி! இப்ப என்ன செய்யறது..’
ஓவியா கோவென்று அழுதாள். பரமசிவமும் கௌதமனும் திகைத்துப்போய் தூண் போல் நின்றனர்.
![]() |
சந்திரா மனோகரன், M.A.,M.Th.,Dip.in JMC, ஈரோடு. கண்காணிப்பாளர் (வேளாண்மை பொறியியல் துறை) பணி நிறைவு. இதுவரை: 45 நூல்கள் (சிறுகதை/கவிதை/கட்டுரை/புதினம்/மொழிபெயர்ப்பு உட்பட) பல்வேறு சிற்றிதழ்களில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தது - சிகரம் இதழ் உட்பட. தற்போது அருளமுது இதழ் ஆசிரியர். அருளமுது பதிப்பக வெளியீட்டாளர். குறிப்பிடத்தக்க சில விருதுகள்: தமிழ் நாடு அரசு - நற்றமிழ் பாவலர் விருது - 'அசையும் இருள் 'கவிதை நூலுக்கு. பாரத ஸ்டேட் வங்கி…மேலும் படிக்க... |