கருமேகங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 18, 2025
பார்வையிட்டோர்: 4,568 
 
 

லண்டன்.

மழையில் குமுதினி நடந்து கொண்டிருக்கிறாள். மழையில் நடப்பது இப்போ குமுதினிக்குப் பிடிக்கும். காரணம் குமுதினியின் கண்ணீரை யாரும் பார்க்க முடியாதுதானே! வாழ்க்கையில் சிக்காத நிலைகள் எல்லாமே அவளுக்குத் தொலைந்துபோன நிலையாகத்தான்; தெரிகின்றது.

நிலவைப் பார்த்து உணவை உண்டு விளையாடிய காலங்கள் அவளின் குழந்தைப் பருவம். அம்மம்மா திரேசா அந்த நிலவு வெளிச்சத்தில் தன்மடியில் வைத்துக் குமுதினிக்கு குட்டிக்கதைகள் சொல்லித்தான் உணவு தீத்துவார். அந்த நிலா ஒளி; பட்டுத் தெறிக்கும் சுவையோடு உண்ட அந்த மகிழ்ச்சியான காலம் எத்தகையது என்று உங்களுக்குத் தெரியுமா? குமுதினியின் அக்காமார் இருவரையும்; சேர்த்துத்தான் அம்மம்மா உணவை வழக்கமாக ஊட்டுவார். அப்படித்தான் அன்று பந்த பாசங்கள் அன்பை ஊட்டி பிள்ளைகளை வளர்த்தார்கள்;. அன்று அந்த மூன்று சகோதரிகளும் அளவு கடந்த விசேட பாசப்பிணைப்பு.

வாழ்க்கையின் உண்மைகளை, அன்றைய தோற்றங்களை கதைகளாக்கி; நினைக்கும்போது அவை இறுக்கமாகி குமுதினிக்கு இப்போ புலப்படுத்துகின்றது. இந்த வாழ்க்கையில் எதுவும் நிரந்திரமில்லை என்பதும், எல்லாமே சிறிது காலம்தான் என்பதும் இப்போ குமுதினிக்கு அவளின் அனுபவம் புகட்டுகின்றது. கவலையால் உலகம் புரண்டு கொண்டிருப்பதையும் அன்;றைய வெளிச்சம் அற்றுப் போனதையும் எண்ணி அதிசயிக்கின்றாள் குமுதினி;. கவலை இல்லாத மனித ஜென்மங்களை இன்று உங்களால் பார்க்க முடிகின்றதா? இன்று கவலை இல்லாத மனிதன் ஒருவன் இருக்கிறான் என்றால் ஒன்று அவன் தாயின் கருவறையில் இருக்கும்போதுதான். அங்கு மட்டும்தான் அவன் கவலை இல்லாமல் இருக்கிறான்;;. மற்றது கல்லறையில் உறங்குபவனும்; கவலையின்றி இருக்கிறான் என்பதையும் குமுதினி இப்போ எண்ணி உணர்கின்றாள்.

உலக வாழ்க்கையில் மிக அதிகமாகக் கற்றுத் தரும் ஆசானாகத் திகழ்வது என்றால் அவளது வயதுதான். பழைய வயது எங்கே போனதென்று எண்ணுகின்றாள குமுதினி;. கருமேகங்கள் வந்து அந்த வெளிச்சத்தைப் புறக்கணித்துவிட்டனவா என்றும் அவள் எண்ணுவதுண்டு.

ஒன்றை நாம் கிடைக்கப் பெறும்வரை நாங்கள் எல்லோரும் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். அது பொருளாகவும் இருக்கலாம் சொந்த உறவாகவும் கூட இருக்கலாம். ஆனால் அவை வெற்றியாக முடிந்துவிடவும் மறந்துவிடுகின்றோம். மீண்டும் அப்படிப்பட்ட ஒரு உறவை நம்பிக்கையுடன் ஏற்க குமுதினியின் மனம் ஏதோ மறுக்கின்றது. எத்தனை முறை ஒரு கதையைத் திரும்பத் திரும்பப் படித்தாலும் அதன் முடிவு மாறாததுபோல் அத்தகையவர்களில்; எவ்வித சுயமான மாற்றத்தையும் குமுதினியால் பார்க்கவே முடியவில்லை.

நாட:;டின் போர்ச்சூழல் சகோதரிகளை மேல்நாடுகளுக்கு பறக்க வைத்தது. குமுதினியின் மூத்த அக்காவை அவரின் திருமணத்தை முன்னிட்டுப் பெற்றோர் முதலிலேயே ஜேர்மனிய நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். அன்றைய சூழலில் பெற்றோரின் தியாகங்களோ அளப்பரியது. பல துன்பங்கள், அபாயங்கள், பணக் கஷ்டங்கள் மத்தியில்தான் பிள்ளைகளை அனுப்பி வைத்தனர். ஆனால் பெற்றோர் பட்ட துன்பங்களை இன்றைய தலைமுறையினர் உணர்கின்றனரா? குமுதினியையும், சின்னக்காவையும் லண்டனுக்கு

எல்லோரினதும் ஒத்துழைப்பு, அரவணைப்போடுதான் அனுப்பி வைத்தனர். புலம்பெயர்ந்து இயல்பான வாழ்க்கை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. .

ஆனால் நவீன உலகில் எங்கட சனங்களின்ர கதைகளைக் கேட்க தலை வெடிக்கும் குமுதினிக்கு. ஐயோ தாயே சகோதரங்களின்ர போட்டி பொறாமைகளும், நன்மை தீமைகளுக்கு சொந்தச் சகோதரங்களை விலத்திவிட்டு வீம்புகாட்டுவதும் என்று இந்தக் காகிதம் பணமாக மாறி எங்கட சனம்; செய்கின்ற விளையாட்டோ கொஞ்ச நஞ்சமல்ல.

கடந்த வருடம்தான் குமுதினி உறவினரின் திருமண வைபவத்திற்காக கனடாவுக்கு முதற் தடவையாகச் சென்றிருந்தாள். உறவினர்கள் எல்லோரும் பெரிய வீடு வசதிகளோடு இருப்பதைப்; பார்த்து அவளுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. அங்குள்ள நயாகரா நீர்வீழ்ச்சி, சி.என்.கோபுரம் போன்ற பல முக்கிமான இடங்களுக்கெல்லாம் எனது உறவினர்கள் மாறி மாறி கூட்டிச்சென்று மகிழ்வுடன் காண்பித்தார்கள்.

பாடசாலை நண்பர்களும் ஊரில் தெரிந்தவர்களையும் நீண்ட நாட்களின் பின்னர் சென்று சந்தித்தும் விருந்துண்டு மகிழ்ச்சியில் திளைத்தாள் குமுதினி. ஊரில் தெரிந்த அவளின் நண்பரின் தாயார் அண்மையில் இவ்வுலகை விட்டுப் பிரிந்ததை அறிந்து குமுதினி அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தாள். அங்கு சென்ற வேளை அதிசயமான செய்தியைக் குமுதினியால் அறிய முடிந்தது.

‘பெற்ற தாயின் இறுதிச் சடங்கிற்கு அவரின் ஆண் பிள்ளைகளை அனுமதிக்க வில்லையாம். அவ்விதம் அவர்கள் அங்கு சென்றால் அதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாராம் அவர்களின் சகோதரி. அது தாயின் வேண்டுகோள் என்றும் அதனைத்தான் நிறைவேற்றுவதாக அந்தச்சகோதரி எல்லோருக்கும் எடுத்துரைத்தாராம்’ என்ற செய்தி குமுதினியை ஆச்சரியத்தில் விழிக்கச் செய்தது.

குமுதினி வியப்பான இக்கதையைக் அறிந்து ஆச்சரியத்தில் துயரமானாள். காரணம் அந்தத் தாயை ஆண்பிள்ளைகள் சென்று கவனிக்கவில்லையாம். தங்கள் குடும்பங்கள் என்று வரும்போது அப்படி இருத்திருப்பார்களோ? ஏன்று குமுதினி தன்னுள் கோடுகள் வரைந்து பார்த்தாள். இப்படி ஒரு தாய் தான் பெற்றவர்களை மயானத்திற்கு வரக்கூடாது என்று கூறியிருப்பாரா?… நவீன காலத்தில் என்னென்ன விசித்திரங்கள் என்று பாருங்கோவன். என்ன ஒரு விசித்திரமான உறவுகளும் சகோதரங்களும் பாசங்களும் என்று குமுதினி தனக்குள் எண்ணிக் கொண்டாள்.

குமுதினியைக் காயப்படுத்துபவர்கள் பலர் இருந்தாலும் மருந்தாகச் சிலர் இருப்பதால் லண்டனில் அவளின் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி அழகாகத்தான்; பயணிக்கின்றது. நவீன மோட்;டார் வாகன வசதிகளோடு சிறிய சொந்தச் சிறுகடை, அதன்மேலே குமுதினியின் வீடும் அமைந்து வாழ்க்கை லண்டனில் அமைதியாகக் கடந்தது.

நாட்டுச் சூழல் எம்மக்களை உலகப் பிரஜைகளாக்கி வாழ்க்கையை நவீன மயமாக்கி வைத்திருக்கின்றது இப்போ. ஒவ்வொருவருக்கும் அவரவர் தகுதிகளுக்கு ஏற்ப அழகான வாழ்க்கையும் கைகொடுத்து விடுகின்றது. மனித வாழ்க்கையோ கண்ணுக்குத் தெரியாத கலையாகி; வித்தியாசமாக அமைந்து விடுவது இயல்புதானே! நாம் அதனைப் பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டும்! அதுதானே மனிதப் பண்பு! அந்தப் பண்பு எங்களிடம் இருக்கிறதா?

குமுதியின் சின்னக்காவுக்கோ குமுதினி போன்று வசதியான வாழ்க்கை அமையவில்லை. லண்டனில் வாடகை வீட்டில்தான். வாழ்க்கை சற்றும் குறைவின்றிச் சாதாரணமாகத்தான் நகர்ந்தது. சகோதரிகளுக்கிடையில் எல்லாவிதமான பரிமாற்றங்களும் சுமுகமாகத்தான் இடம்பெற்றன.

பணமாற்றங்கள் உட்படத்தான். ஒருவருக்கு பணக்கஷ்டம் ஏற்படும்போது அதனைகக் கொடுப்பதும் திருப்பி வேண்டுவதும் சகோதரர்களுக்கிடையில் இயல்பான விடயம்தானே!

குமுதினிக்கு லண்டனில் வாழ்க்கை அழகான சங்கீதத்தை ஆழ்மனதில் இசைத்துக்கொண்டே இருந்தது. மாற்றத்தின் இரகசியம் என்பது எங்களுடைய ஆற்றல்களை பழமையில் குவிப்பதல்ல. புதியதைக் கட்டி எழுப்புவதே என்ற கிரேக்க தத்துவஞானி சோக்ரட்டிஸின் குறிப்பு குமுதினியை வந்து தழுவியது. குமுதினி லண்டனில் படிப்படியாக புதுப்புது விடயங்களைக் கற்றுத் தேவையற்ற விடயங்களைத் தலையில் போடாமல், தன்னைத் தன் குடும்பத்தோடு மேலும் வளர்த்துக் கொண்டே இருந்தாள்.

தொலைபேசியின் அலறல் கேட்டுக்கொண்டிருந்தது.

சிலந்தி வலைபோன்ற தனிமையைத்தான் இப்போது குமுதினி தேர்ந்தெடுப்பது வழக்கமாகிவிட்டது. முன்பெல்லாம் அவள் தனிமையை விரும்புவதில்லை. ஆனால் அவளை நேசித்தவர்கள் தனிமையை மேகங்களாக்கிப் பரிசளித்திருக்கிறார்கள் என்றுதான் நினைப்பாள். அரட்டை அடிப்பதைவிட தனிமையில்தான்; பல விடயங்களைச் சாதிக்கலாம்;.

இந்தக் காலை வேளையில் இப்படி ஒரு தொலைபேசி அலறல் சத்தமா? குமுதினிக்கு இப்படித் தொலைபேசியில் அழைப்பு வந்தால் ஒரே துக்கமான செய்திகளாக இருக்குமோ என அவள் சற்று யோசிப்பதுண்டு. கொரோனாவுக்குப்பின் தொடர்ந்து இப்படியான அதிர்ச்சித் தகவல்களைத்தானே பார்க்க முடிகின்றது.

ஹலோ…!

சுகி பேசுகின்றேன் குமுதினி. சிறுவயது முதல் ஊரில் குமுதினியின் நெருங்கிய நண்பிதான் சுகி.;.

எப்படி இருக்கிறீர்கள் சுகி?

சுக செய்திகள் எனப் பலவிடயங்கள்பற்றி இருவரும் பரிமாறினர்.

எமது நெருங்கிய உறவினர். இப்போது சற்று மாறுபட்ட கதைகளோடு லண்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் குமுதினி. இலங்கையில் அவர் ஒரு கண் வைத்தியர். யாழ்ப்பாண வைத்தியசாலையில் கண் வைத்திய சேவைக்கு அவர்தான் தலைமைப் பதவியை வகுத்தவர். ஞாபகமிருக்கோ குமுதினி?

ஆ..ஆ…. பொறுங்கோ சுகி… ஓம் சுகி. இப்ப ஏனக்கு ஞாபத்தில் வருகிறது. ஏல்லோருக்கும் மனித நேசத்தோடு உதவியவர். அவர் பல்கலைக்கழகத்தில் படித்தவேளையில் பக்கத்து ஊர்ப் பொம்பிளையைக்; காதலித்துத்தான் திருமணம் செய்தவர். வீட்டாரின் எதிர்ப்புகளோடு திருமணம் புரிந்தவர். அப்போது நாங்கள் சிறியவர்கள்தான்;. அவர் எல்லோரையும் கவரும் குணத்தோடு மட்டுமல்ல மிகுந்த அழகான வாலிபனாகவும் இருந்தவர். எனக்கு இப்போ நல்ல நினைவுக்கு வருகிறது. அவரைப்பற்றி எல்லோரும் புகழ்ந்து கதைப்பதுண்டு. அவருக்கா இந்த நிலை சுகி? அவரது இரண்டு பெண்பிள்ளைகளும் லண்டனில் வைத்தியர்களாக இருக்கிறார்கள் தானே!.

அவரது மனைவி அவரை வைத்தியசாலையில் சென்று பார்ப்பதற்கு அவரின் உறவினரையோ எவரையும் விரும்புவதாகவில்லை.

என்ன சுகி அவவும் பல்கலைக்கழகத்தில் படித்த பெண் தானே! பிள்ளைகளும் வைத்தியர்கள்தானே! இதென்ன புதுமையாகக்கிடக்கு? அவருடைய சகோதரங்கள் உறவினர்கள் மற்றும் ஆட்களைப் பார்த்தால் அவர் பழைய நினைவுகளோடு சந்தோஷமாக இருப்பார்தானே சுகி!

கொழும்பிலிருக்கும் அவரின் சகோதரியின் மகளுக்கு ஏற்பட்ட பாரிய நோயினால் அவர் சற்று மனமுடைந்து கொண்டே இருந்தார். அதனால்த்தான் அவருக்கு இந்த வருத்தமாம் என்று அவருடைய உறவுகள் பற்றிக் குறைகள் சொல்கின்றா குமுதினி.

இது என்ன விண்ணானக் கதையாகக் கிடக்கு சுகி?

குமுதினி அன்றைய போர்ச்சூழலில் அவர் வைத்தியசாலையில் பணியாற்றிய வேளை அன்றைய ராணுவக் கெடுபிடிகளால் சில காலம் பயந்து காட்டுக்குள் ஒளிந்திருந்தாராம். அந்தத் தாக்கங்கள்தான் அவரின் அடிமனதில் உறைந்திருந்ததாகத்தான் நான் கேள்விப்பட்டனான் குமுதினி;. அதன் தாக்கம் என்றுதான் வைத்தியர்களும் கருதுகின்றார்கள்; குமுதினி.

அப்படியோ சுகி? இப்போ எல்லாமே புதுப்புது வியாதிகள் தானே!

அவருக்கு இப்படியான மாற்றங்கள் நிறைந்த மறதி வருத்தமென்று அறிந்து இலங்கையில் இருக்கும் அவரின் இன்னுமொரு சகோதரி அச்செய்தியால் மீளாத் துயரத்தில் மனமுடைந்து இருக்கிறார். அவரும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர்தான்.

ஓம் சுகி எனக்கும் அவரை நினைவிருக்கிறது. எப்படியோ சகோதரங்களின் பாசத்;துடிப்பு சும்மா இருக்குமா? உதிர்ந்த வயதுகள், மகிழ்ச்சியின் பாதைகள்; நினைவில் வந்து வெளிச்சத்தைக் காட்டும்தானே சுகி.

ஓம் குமுதினி. அவவும் தனது சகோதரனைப் பார்க்கவேண்டுமென்று துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்தப் பொம்பிளையெல்லோ ஒருவரையும் அணைப்பதாக இல்லை.

ஏன்ன இது சுகி? உலகமே விசித்திரமாக மாறிக்கிடக்குது இப்போது?

குமுதினி நாம் அவரைச் சென்று பார்ப்பதற்கு தொலைபேசி எடுத்தாலும் அதிற்குப் பதில் எதுவுமின்றி துண்டித்து விடுகின்றார்.

சுகி… எனக்கு இப்போ ஒரு கேள்வி வருகின்றது. இப்படிப்பட்டவர். வீட்டில் அவரை மகிச்சியாக வைத்திருந்திருப்பாரா,…?

மனைவியின் செயற்பாட்டை எப்படி நான்; கூறுவது?. அவர் எங்களுடன் உறவாடுவதை இந்த மனைவி என்றுமே விரும்பாதவராச்சே….!

ஓ… அப்படியா சுகி? இவர்கள் எல்லோரும் பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றவர்களா? மனித நேயம் இல்லாதவர்கள். தங்களைத் தாங்களே பட்டதாரிகள் என்று புகழ்ந்து தம்பட்டம் அடிக்கும் புகழ்ச்சிக்காரர்கள்;;. புத்தகப் பூச்சிகள் மட்டும்தான். சோதனையை எழுதிப் பாஸ் பண்ணி கேட்பிக்கேற் வாங்கின பட்டதாரிகள்தான்;. அவரின் நல்ல குணத்துக்கு இப்படி அமைந்ததா வாழ்க்கை? உலகச் செய்திகள் அனைத்தையும் கேட்கவே விசித்திரமாகத்தான் இருக்குது.

இன்றைய நவீன காலத்துப்; பிள்ளைகளோடு இதனைக் கதைக்க முடியுமா சுகி?

ஓகே குமுதினி. அதிக நேரம் கதைத்து உங்கள் வேலைகளை நிறுத்திவிட்டேனோ தெரியவில்லை. விரைவில் உங்களைச் சந்தித்துப் பேசுகிறேன் குமுதினி;.

ஓம் சுகி. சின்னக்கா தொலைபேசி எடுக்கிறா என்ன ஆக்கினையோ தெரியவில்லை. பின்னர் சந்திப்போம் சுகி.

ஹலோ…

நான் தான் கதைக்கிறன். ஏதோ கடைக்கு அவசரமாகத் தேவையென்று என்னட்டை வேண்டின காசை மறந்திட்டியோ? இப்போ வீட்டை வாறேன் உடனடியாக அந்தக் காசை வட்டியோட தந்துவிடு. இப்ப எனக்கு

அந்தக் காசு அவசரமாகத்தேவை. இப்ப வீட்டுக்கு வந்திடுவேன். உடனடியாகத் தந்திடு அல்லாவிடில் என்ன நடக்குமெண்டு பார்?

சின்னக்கா இப்படி கடும் சினங்கொண்டவளாக சீறிச் சினக்கின்ற குரோத மனப்பாண்மை குமுதினிக்கு சற்று மனப்பயத்தைக் கொடுத்தது.

சின்னக்கா மின்வேகத்தில் வீட்டோடு அமைந்த கடையில் வந்து நின்று குமுதினை வெளியில் கெதியில் வா. எனது பணத்தைக் கொண்டுவா என்று பெரிய குரலில்…

கடையில் வேலை பார்த்தவர்கள் இந்தப் பொம்பிளைக்கு என்ன? தலையில் ஏதோ தட்டிக்கிட்டிப் போட்டுதோ இப்படிச் சத்தம்போடுது! லண்டனில் வசிக்கிறோம் என்பதை மறந்து போய்க் கத்துது என்று குசு குசுத்தனர்…

கீழே குமுதினியின் அதிக நேர வருகையைக் காணாத சின்னக்கா மோட்டார் வாகனத்தின் முன் கண்ணாடியை பாரிய இரும்புக் கம்பியால் நொறுக்கிய சத்தம் எல்லோரையும் அதிர வைத்தது. கண்ணாடியை நொருக்கியதும், அது சுக்கு நூறாகியதும் சின்னக்காவின் எல்லாக் கோவமும் அடங்கிவிட்டதுபோல. வீட்டிற்கு வேகமாகித் திரும்பிவிட்டாள் சின்னக்கா.

குமுதினி மேலிருந்து ஜன்னல் வழியாகப் பார்த்தாள். அவளோ தனது வாகனத்தைப் பார்த்து உறைந்துபோனாள். உடல் அதிர்ந்து நடுங்கியது. தொலைபேசியில் பொலிஸின் அவசர 999 நம்பரை அழுத்திக் கொண்டிருந்தாள்.

லண்டனில் அது பாரிய குற்றம்.

காலம் மாறிவிட்டது! ஆனால் மனிதர்கள் மாறினார்களா?

23.4.2025 (15.4.2025)

மு.ப. 9.50.

நவஜோதி ஜோகரட்னம் நவஜோதி, ஜோகரட்னம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அகஸ்தியர். இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள், விமர்சனங்கள், வானொலி உரைகள், வானொலி நாடகங்கள், குட்டிக்கதைகள் என்பவற்றை எழுதியுள்ளதுடன் எனக்கு மட்டும் உதிக்கும் சூரியனின் கவிதை என்னும் நூலையும் எழுதியுள்ளார். இவரது நூல்கள் எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன் மகரந்தச் சிதறல் மேலும் விவரங்கள் இவர் எனக்கு மட்டும் என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்."மகரந்தச் சிதறல்" என்ற இவரது படைப்பு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *