கதிரேசன் கணக்கு




அதி காலை மணி 5.30.
கூப்பிடு தூரத்தில் எதிரே வேகு வேகுவென்று வியர்வை வழிய நடந்து வரும் கதிரேசனைப் பார்க்க எனக்கு அதிர்ச்சி, ஆச்சரியம். !
வயது ஐம்பது. நோஞ்சான் உடம்பு. சதைப் பிடிப்பென்பது எங்கும் கிடையாது. அந்த உடலில் சர்க்கரை, கொழுப்பு, உப்பு, எந்த நோய் நொடிகளும் மருந்துக்கும் இல்லை. அப்படி இருக்கும்போது எதற்கு நடைப்பயிற்சி, பழக்கம்!?
பொழுது போகவில்லை என்றால் காலை எழுந்து பல் துலக்கி, காபி குடித்து, வாசலில் வந்து அமர்ந்து தினசரியை எடுத்து மேய்ந்தால் மணி 8.00. அப்புறம் அலுவலகம்…! எதற்கு நடை..? மனுசன் நடந்து எதை சாதிக்கப் போகிறார்..?
‘எனக்குத்தான் எல்லா இழவுகளும்..!’ மூச்சு வாங்க அமர்ந்தேன்.
சிறிது நேரத்தில் அருகில் வந்தார் கதிரேசன்.
“வணக்கம் சார்..!” கை கூப்பினேன்.
“வணக்கம் தமிழ்மணி!” அவரும் பதிலுக்குக் கை கூப்பினார்.
“என்ன நடைப்பயிற்சியா..?”
“ஆமாம் !”
“ஏன்..?”
“ஒ.. ஒன்னுமில்லே ! என் மனைவி அதிகாலை அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து வாசல் தெளிச்சு, கோலம் போட்டு, அப்புறம் நான் அலுவலகம் கிளம்ப சிற்றுண்டி, மதிய சாப்பாடுன்னு வேலைகள் செய்து கொண்டே இருப்பாள். அதுல நான் எழுந்து பல் துலக்கி, காபி குடிச்சி… ஹாயாய் வாசல்ல வந்து தினசரி விரிச்சேன்னா அவளுக்கு வருத்தமாய் இருக்குமோ இல்லையோ… எனக்கு, மனைவி இப்படி வேலை செய்ய… நாம ஆண்னென்கிற ஆணவம், அதிகாரத்துல உட்கார்ந்திருக்கிறோம் உறுத்தல் மன உளைச்சல். இதைப் போக்க அவளுக்கு உதவி ஒத்தாசை செய்யப் போனால் கண்டிப்பாய் விடமாட்டாள். பொம்பளை வேலைகளை ஆம்பளை செய்யக்கூடாது என்கிற அரத பழசு மனசு அவளுக்கு. மேலும் அவளுக்குக் கணவனே கண்கண்ட தெய்வம். இந்த உறுத்தல், மன உளைச்சலைப் போக்க வழி என்னன்னு யோசிக்கும்போதுதான் இந்த நடைப்பயிற்சி நினைவுக்கு வந்தது. இப்படி எழுந்து வெளியே வந்தால்… என் மனைவிக்கும் கணவர் வெட்டியாய் இல்லாமல் ஏதோ ஒரு வேலையை செய்யறார் என்கிற நினைப்பு இருக்கும். எனக்கும் நல்ல காற்று, ஆரோக்கியம் கிடைக்கும் என்ன என் கணக்கு சரிதானே..?!” கேட்டு கதிரேசன் என்னைப் பார்த்தார்.
‘எப்படி இவர் மனைவியை மதிக்கிறார்..! பெண்மையைப் போற்றுகிறார்..?!’
“ரொம்ப சரி சார்!” திருப்தியாய்ச் சொன்னேன்.