கண் கெட்டப் பிறகு…





“அங் மோ கியோ நூலகத்தில் அவளைச் சந்திப்பேன் என்று நான் நினைக்கவில்லை”. அன்றலர்ந்த ரோஜா மலர் போல எப்போதுமே புத்துணர்ச்சியுடன் இருக்கும் நந்தினியின் வதனம் வாடிப்போய்க் காணப்பட்டது. அது அவள்தானா என்று கூடவே ஓர் ஐயமும் தோன்ற அவளது அருகில் சென்று, “நந்தினி” என்று மெதுவாக அழைத்தேன்.
திரும்பிய அவளும் ஆச்சர்யப்பட்டுப் போனாள். நீண்டகாலமாகப் பிரிந்திருந்த தோழியர் இருவரும் இரவல் பெற்ற புத்தகங்களுடன் வெளியில் வந்தோம்.
நந்தினியின் தோற்றத்திற்கான மாற்றத்தை அவளுடன் உரையாடியதிலிருந்து தெரிந்துகொள்ள முடிந்தது. ஏழு வருடங்களில் இவ்வளவு பெரிய மாற்றமா என்று என் மனமும் கனத்தது.
அப்போது நாங்கள் ஜூரோங் வட்டாரத்தில் குடியிருந்தோம். வீட்டுக்கு அருகிலுள்ள பாலர் பள்ளியில்தான் எங்கள் பிள்ளைகள் படித்துக்கொண்டிருந்தனர். நந்தினியிடம் ஆடம்பர மோகம் சற்று அதிகமாகவேக் காணப்படும். விலையுயர்ந்த பொருட்களை உபயோகிப்பதுதான் அவள் வழக்கம். அதைப் பார்க்கையில் இவ்வளவு வீண் செலவு ஏன் என்ற கேள்வி என்னுள் எழுந்தாலும், பிறரது விருப்பத்தில் மூக்கை நுழைப்பது அநாகரீகம் என்று நினைத்து விட்டுவிடுவேன். திடீரென ஒருநாள் நந்தினி, “நான் என் பிள்ளையை இண்டர்நேஷனல் பள்ளியில் சேர்க்கப் போகிறேன்” என்றாள்.
“நிறைய செலவு ஆகுமே” என்றேன்.
“ஆமாம்,மாதத்திற்கு ஐநூறு வெள்ளிக்கும் மேலாகும்”, என்றாள்.
“பிள்ளைகள் மேற்படிப்பிற்காக செலவழிப்பதென்றால் சரி. பாலர் பள்ளியில் படிக்கும் பிள்ளைக்கு இவ்வளவு பெரிய தொகையை செலவழிப்பதா. இங்கும் பிள்ளைகள் நல்லாதானே படிக்கின்றனர், யோசித்துப்பார்” என்றேன்.
அவ்வளவுதான் உடனே அவள் முகம் சிவக்க, “உன் பிள்ளையை அந்தப் பள்ளியில் படிக்க வைக்க முடியவில்லை என்கிற பொறாமையில் நீ பேசுகிறாய்” என்று பொரிந்தாள்.
என்னுள் வேதனை வியாபிக்க நான் பதிலேதும் சொல்லவில்லை. அதற்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை என்பதுதான் நிஜம்.
அதன்பிறகு அவளும் என்னிடம் பேசுவதில்லை. அவள் கூறிய பள்ளியிலேயே பிள்ளையை சேர்த்து விட்டதாகவும், வேறு பகுதிக்கு குடிபெயர்ந்துப் போய்விட்டதாகவும் அறிந்தேன். அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று அவ்வப்போது நினைத்துக் கொள்வேன். இன்றுதான் மீண்டும் கண்டேன்.
“கடந்த வருடத்தில் என் கணவருக்கு வேலை போய்விட்டது. திரும்பவும் அதுமாதிரி நல்ல சம்பளத்துடனான வேலை கிடைக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. சம்பாதிக்கும்போது கையில் இருந்ததெல்லாம் செலவு பண்றப்ப பெருமையாயிருந்தது. காலம் கடந்தபின்தான் காசோட அருமை தெரியுது. உன்னோட அறிவுரையை நான் அன்று உதாசீனப் படுத்திப் பேசினேன். இப்போது என் பிள்ளை நமது அரசுப் பள்ளியில்தான் படிக்கிறான். அவன் படிப்பில் மிகவும் பின்தங்கியிருக்கான். அவனை துணைப்பாட வகுப்புக்கு அனுப்பக்கூட எனக்கு இப்ப வசதியில்லை” என்று கண்ணீரும் கம்பலையுமாக சொல்லி முடித்தாள்.
என்னுள்ளும் துன்ப ரேகைகள் படர்ந்தது.
“கவலைப்படாதே நந்தினி, என்னால் முடிந்த உதவியை செய்கிறேன். உன் மகனை விடுமுறை நாட்களில் என் வீட்டுக்கு அனுப்பு. என் மகன் அவனது சந்தேகங்களை அவனால் முடிந்தளவிற்கு நிவர்த்தி செய்வான்” என்று கூறினேன்.
அந்த வார்த்தைகள் காயம் பட்டிருந்த அவளது இதயத்திற்கு மருந்தாக அமைந்திருக்க வேண்டும். அவளால் பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க, கண்கள் நன்றி கூறின.
– சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தும் கதைக்களத்தில் (அக்டோபர் 2016) இரண்டாம் பரிசு பெற்ற கதை.