ஒற்றைப் பனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 14, 2025
பார்வையிட்டோர்: 202 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காய்கறி நறுக்கிக்கொண்டிருந்த அம்மாவுக்கு உதவியாகக் கீரைக்கட்டை ஆய்ந்து கொண்டிருந்தேன். இன்று அப்பாவின் நண்பர் ஒருவரும் ‘லஞ்சு’க்கு வருவதாக ஏற்பாடாகியிருந்தது. எனவே, நானும் அம்மாவும் பரபரப்பாக இயங்க வேண்டியிருந்தது: “கண்மணி, புள்ள கண்மணி…” பக்கத்து வீட்டிலிருந்து வேலம்மா பாட்டி அழைப்பது கேட்டது. 

“இந்தக் கிழத்தோட தொல்லை தாங்க முடியல்ல. எப்பப்பாரு யாரையாச்சும் கூப்பிட்டுக்கொண்டு… ச்சே! சரி, சரி போய்… என்னன்னு கேட்டுட்டு சீக்கிரம் வந்திடு” அம்மா எரிச்சலுடன் முணுமுணுத்தார். 

நான் மௌனமாக அதுவரை ஆய்ந்து முடித்திருந்த கீரையைத் தட்டில் ஒருபுறமாய் ஒதுக்கிவைத்துவிட்டு, பக்கத்து வீட்டை நோக்கி விரைந்தேன். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து வேலம்மா பாட்டி அங்குதான் இருக்கிறார். பெரிய வசதியான வீடு, அது. மகளும் மகனும் கனடாவிலும் பிரான்சிலுமாக செட்டிலாகியிருந்தனர். இவர் தம்முடன் வசிப்பதை இருவருமே அவ்வளவாக விரும்பவில்லை. “பழம் பஞ்சாங்கமான அம்மாவால் அந்த நாகரிக உலகோடு ஈடு கொடுக்க முடியுமா அங்கிள்?” என்று பாட்டியின் மகன் ஒருதரம் கூறியது பற்றி அப்பா அம்மாவிடம் சொல்லி வருத்தப்பட்டது என் நினைவுக்கு வந்தது. எனினும், மாதாமாதம் வெளிநாட்டிலிருந்து வரும் கணிசமான பணத்தில் பாட்டி நல்ல வசதியாகத்தான் வாழ்கிறார். யோசித்தபடி, அவரின் அறையை அடைந்தேன். வேலம்மா பாட்டி கட்டிலில் அமர்ந்திருந்தார். திறந்த சன்னலினூடாக உள்ளே ஊடுருவியிருந்த சூரிய ஒளியில் பாட்டியை ஒரு கணம் உற்றுப் பார்த்தேன். தும்பைப் பூவாய் நரைத்த தலைமயிர் பலநாள் வாரப்படாமல் காற்றில் அலைபாய்ந்தது. வயோதிபம் தந்த வடுக்களாய் ஏராளமான சுருக்கங்கள் கொண்ட அவரது முகத்தில் இடுங்கிப்போயிருந்த கண்கள் என் வரவைக் கண்டுவிட்டன போலும்! சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தார். “புள்ள கண்மணி, இப்பிடி உட்கார்!” கட்டிலை அண்டியிருந்த பிரம்பு நாற்காலியில் மெதுவாகப் போய் அமர்கிறேன். அந்தக் கட்டிலிலிருந்து எழுந்த துர்நாற்றத்தை என் நாசி உணர்ந்தும், எழுந்து ஓடிவிடுவோமா என்ற எண்ணம் என்னை உந்தித் தள்ளியபோதும், மிகுந்த பிரயாசையுடன் கட்டுப்படுத்திக்கொண்டு மெல்லிய குரலில் கேட்டேன். 

“என்ன வேணும் பாட்டி?” 

“புள்ள கண்மணி காலையில் இருந்து ஒரே வயித்துவலி, இன்னைக்கின்னு பரிமளமும் மட்டம் போட்டுட்டா. நாக்கெல்லாம் ஒரேயடியா காய்ஞ்சி கிடக்கு. உங்கம்மாகிட்ட சொல்லி கொஞ்சம் கோப்பி ஊத்தித் தர்றியாம்மா?” “சரி பாட்டி” இதைக் கேட்டதும் அம்மாவுக்கு கோபம் வருமென்று எனக்குத் தெரியும். ஆனால்… எனக்கு ஏனோ வேலம்மா பாட்டியை நினைத்தால் பாவமாய் இருக்கிறது. இந்தத் தள்ளாத வயதில் அவ்வளவு பெரிய வீட்டில் தன்னந்தனியாக… பேச்சுத்துணைக்குக்கூட ஆளின்றி இருப்பதென்றால் அதைவிடக் கொடுமை வேறென்ன இருக்கமுடியும்? 

தனிமை தரும் மனஅழுத்தம் தாளாது, அவர் என்னையோ அம்மாவையோ அழைத்துத் தம் பழைய கதைகளைப் பற்றி பேசித் தீர்ப்பார். எனினும், அம்மாவுக்கு இப்போதெல்லாம் அதைக் கேட்டுக்கொண்டிருக்கப் பொறுமை இல்லை. எனக்கும் ஒரு சில சமயங்களில் எரிச்சலாகத்தான் இருக்கும். அப்போதெல்லாம் அவர் கூப்பிடக் கூப்பிடக் காதே கேளாததுபோல் இருந்துவிடுவோம். ஈற்றில் பாட்டியின் குரல் தளர்ந்து… தேய்ந்து… ஓய்ந்துபோகும் போது என் மனச்சான்று என்னை இடித்துரைக்கையில் மிக வேதனையாகவிருக்கும். எவ்வளவு செல்வம் இருந்தென்ன? அன்பாய்… ஆதரவாய் ஒரு சொல் பேசி, கனிவோடும் பரிவோடும் பணிவிடை செய்யும் ஒரு துணை அருகில் இல்லாதிருக்கும் வேலம்மா பாட்டியின் வாழ்வில் அர்த்தமேதும் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை. அவரைப் பார்க்கும் போதெல்லாம் எங்கள் பாடசாலை வளவுக்குள் ஒரு மூலையில் நின்றிருக்கும் பட்டுப்போன ஒற்றைப்பனைதான் என் நினைவுக்கு வரும். 

மனிதன் எவ்வளவு முன்னேறித்தான் என்ன? 

இன்ரர்நெட் வரை கண்டுபிடித்துச் சாதனை படைத்துத்- தான் என்ன? மனிதனை மனிதனென்று இனங்காட்டக்கூடிய அன்பு, பாசம், பந்தம் எனும் உன்னத உணர்வுகளையெல்லாம் விலையாகக் கொடுத்தல்லவா இத்தகைய முன்னேற்றத்தை அடைந்துள்ளான்? 

எத்தனையோ எதிர்பார்ப்புகளோடு தன் இரு செல்வங்- களையும் வளர்த்து ஆளாக்கிய வேலம்மா பாட்டி இன்று தன்னந்தனியாக..வெறுமையும் ஏக்கங்களும் தேங்கிய உள்ளத்தோடு பெயரளவில் வாழ்ந்து கொண்டு… ஒரு கோப்பை சுடுநீருக்குக் கூட அடுத்தவரைக் கெஞ்சும் அவலநிலையில்… ச்சே! என்ன வாழ்க்கை இது? போகிறபோக்கிலே நாளைய நூற்றாண்டில் முதியோர் இல்லங்களும் அகதி முகாம்களைப்- போல் நிரம்பிவழியப் போகின்றன போலும்! சலிப்போடு எண்ணியபடி வீட்டுக்குள் சென்ற நான், அம்மாவைச் சமாதானப்படுத்திவிட்டு கோப்பி தயாரித்து எடுத்துப்போய், அவரது சின்ன ‘பிளாஸ்க்’ மூடியில் கொஞ்சத்தை ஊற்றிக் கையில் கொடுத்து விட்டு, மிகுதியை ‘பிளாஸ்க்’ கில் ஊற்றி இறுக மூடினேன். 

அன்று மாலை மீண்டும் ஒருதரம் சென்று அவரின் பிள்ளைகளுக்குக் கடிதமும் எழுதிக் கொடுத்தேன். எல்லாம் சரிதான். ஆனால், அவரின் அறையிலிருந்து எழுகின்ற குமட்டலான மணத்தைத்தான் என்னால் சகிக்கவே முடிய- வில்லை. இந்தக் கொஞ்சக் காலமாய் எங்கள் பகுதியில் தண்ணீர் கஷ்டம். பாட்டி குளித்து எத்தனை நாளாயிற்றோ! என்மனம் அவருக்காகப் பரிதாபப்பட்டது. 

பொழுது புலர்ந்தது முதல் வழமையான வீட்டுப் பணிகளில் மூழ்கியிருந்த எனக்குள் ஏதோ இனந்தெரியாத வெறுமையுணர்வொன்று வியாபிப்பதை உணரக்கூடியதாய் இருந்தது. யோசித்துப் பார்த்ததில், இன்று காலையிலிருந்து ஒரு யாரையும் தடவையாவது வேலம்மா பாட்டி எங்கள் யாரையும் அழைக்கவே இல்லை என்ற உண்மை உறுத்தவே மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை… பரிமளம் வந்திருப்பாவோ? ஆனால், நேற்று எழுதிய கடிதங்களை இன்று தபாலில் சேர்க்க வேண்டுமென்று சொன்னாரே!எனக்குள் குழப்பம் தலைதூக்கியது. 

அதற்கு மேலும் தாமதிக்காமல் பாட்டியின் வீட்டை நோக்கி விரைந்தேன். வீடு நிசப்தத்தில் ஆழ்ந்திருந்தது. பாட்டியின் அறையை மெல்ல எட்டிப்பார்த்தேன். அவர் கட்டிலில் சாய்ந்திருந்தார். என்ன இது வீட்டைத் திறந்துபோட்டுவிட்டு இவர் பாட்டுக்குத் தூங்குகிறாரே! என்று எண்ணி வியந்தபடி இரண்டெட்டு முன்னால் வைத்து விட்டுத் தயங்கியபடி பாட்டியைப் பார்த்தேன். அவரின் கண்களும் வாயும் திறந்தபடி இருக்க, ஈக்கள் அவரது உடலை மொய்த்துக்கொண்டிருந்தன. நேற்றை விடவும் அந்தக் குமட்டல் மணம் இன்று அதிகமாயிருந்தது. பாட்டி உறங்குகிறாரா? அல்லது… அல்லது…? அடுத்த கணம் கத்திக்கொண்டு வீட்டை நோக்கி ஓடினேன். கும்பல் கூடி விட்டதை சன்னலால் காணமுடிந்தது. யாரோ வெளிநாட்டுக்கு ஃபேக்ஸ் அடிப்பது பற்றி அப்பாவிடம் கேட்பது காதில் விழுந்தது. கூடிய கும்பலிலிருந்து ஒப்பாரிச் சத்தம் காதைத் துளைத்தது. பாட்டி உயிருடன் இருக்கும் போது, பேசக் கூப்பிடுகையில் திரும்பியும் பாராமல் ஓடியவர்கள் இப்படிக் கதறி அழுகிறார்களே! இந்த மனிதர்கள் எவ்வளவு போலியானவர்கள்? எனக்குள் எரிச்சல் மண்டியது. இரண்டு நாளில் மகனும் மகளும் குடுபத்தோடு வந்து சேர்ந்தார்கள். ஊருக்குப் பயந்து ஒப்பாரி வைத்தார்கள். எனக்கு அவர்களின் முகத்தில் அறைய வேண்டும் போலிருந்தது. ஆத்திரம் தீருமட்டும் திட்ட வேண்டும் போல் வாய் துடித்தது. என்றாலும் மௌனமாக இருந்தேன். சடங்குகள் முடிந்தபின் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு, பிள்ளைகள் மீண்டும் வெளிநாட்டுக்குப் பறந்து போய் விட்டார்கள். நாகரிக உலகில் தாயின் இழப்புக்காகக் கவலைப்பட அவர்களுக்கு அதற்குமேல் நேரமில்லை. இன்று அவரவர் கவலை அவரவர்க்கு என்னும் தத்துவம் கசப்பாகத் தோன்றினாலும், நிதர்சனத்தை சகிக்கத்தான் வேண்டியிருந்தது. 

எப்படியிருந்தாலும் வேலம்மா பாட்டியின் மறைவு என்னை இவ்வளவு தூரம் நிலைகுலையச் செய்யுமென்று நானே எண்ணியிருக்கவில்லை. தனிமை மிகப் பயங்கரமானது என்று எனக்குத் தோன்றியது. பாட்டியின் குரல் என் பெயர் சொல்லி அழைப்பதான பிரமை என்னை அடிக்கடி அவஸ்தைப்- படுத்தியது. இந்த இனம்புரியாத வேதனையில் இருந்து மீள்வதற்காக ஏங்கிய எனக்கு, பாடசாலை விடுமுறை முடிந்த போது மகிழ்ச்சியாக இருந்தது. பெரும் மன ஆறுதலோடு பாடசாலைக்குச் சென்றபோதுதான் நான் அதைக் கவனித்தேன். ஆம்! பாடசாலை வளவு மூலையில் நின்றிருந்த பட்டுப்போன அந்த ஒற்றைப் பனையை யாரோ தறித்திருந்தார்கள். என் விழிகளிலிருந்து திரண்டு வந்த இரண்டு கண்ணீர்த் துளிகள் உருண்டு, கையிலிருந்த புத்தக முகப்பில் சிதறின. மனிதன் அறிவியலில் முன்னேறிவிட்டான். ஆனால் அன்பில்…? விடை தெரியாத வினாவின் அழுத்தம் பெருமூச்சாக வெளிப்பட்டது. 

– மித்திரன் வாரமலர் 3-10-1999.

– எருமை மாடும் துளசிச் செடியும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மார்ச் 2003, தமிழ் மன்றம், கண்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *