ஒரு பூவின் ஜாதகம்





(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஊரில் அரவமடங்கிவிட்டது. தேய்பிறைக் காலமாதலால், பூமியை இருட்டு கறுப்பாக அப்பியிருந்தது. தெரு விளக்குகள், மரணப்படுக்கை நோயாளியைப்போல ‘எரியட்டா, அணையட்டா என்று பயமுறுத்திக்கொண்டிருந்தன.
நேரம் பத்து மணி இருக்கும். இல்லாட்டி கொஞ்சம் குறைவாயிருக்கும். பத்து மணியாகிவிட்டால்தான் சங்கு ஊதியிருப்பானே! இன்னும் ஊதவில்லை.
‘விர்ர் விர்ர்’ரென்ற ஓசைப் பெருக்குடன், காற்று வீசுகிறது. இரவின் அமைதி லேசு லேசாக பங்கப்படுகின்றது.
எங்கோ ஒரு விவசாயி, கூளத்தின் மண்ணை உதறித் தட்டுகிற சப்தம்; அசைபோடும்போதே திடுமென்று தலையைக் குலுக்குவதால் அலையாக எழுகின்ற மாட்டு மணியோசை.
தன்னைச் சுற்றிப் பரவியிருக்கும் அழுக்கான சந்தன நிற ஒளியை, அலுப்புடன் பார்த்த அலமேலுப் பாட்டி, அப்படியே, தனது நார்க்கட்டிலுக்குப் கீழே துணியை விரித்துப் படுத்துக்கிடக்கும் பேத்தியைபார்க்கிறாள். அவள் மனத்தில் ஒரு கனம் அழுத்துகிறது.
பதினைந்து முடிந்து, வயது பதினாறில் ஏறிக்கொண்டிருக்கிறது. இடது கையை மடித்து தலையணையாக்கி, முகத்தை மலத்தி ஒருக்கழித்துப் படுத்துக்கிடக்கிறாள். தூங்குகின்ற அவள் முகம். உணர்ச்சிப் பெருக்குடன் மலர்ந்து புன்னகைக்கிறது. ஏதோ ஒரு கனவில் அமிழ்ந்து கிடக்கிறாள்போலும்!
சமீபத்தில் காலியானதால், வெறுமையான அவள் நாசியில் துக்கத்துடன் பார்வைவை நிறுத்தினாள். எல்லாமே ஓய்ந்துபோனது போன்ற மிரட்சி!
‘மூக்குத்தியையும் வித்து மருந்தா தின்னாச்சு…’ என்று விசாரத்துடன் நினைத்துக்கொண்டபோது, ஒருவித விரக்தி மனதில் விரிந்தது.
அலமேலுப் பாட்டிக்கு நெஞ்சுக்குள் ஒருவித குறு குறுப்பு; வண்டு ஊர்ந்து செல்வதுபோன்ற தொண்டையில் கூச்சம்; அவ்வளவுதான்! கொஞ்ச நேரமாக ஓய்ந்து கிடந்த இருமல், விசுவரூபமாகி,அவளை உலுக்கியது. அடிவயிற்றுக் குடலே மேலே தொண்டைக்கு ஏறிவிடுமோ என்று பயப்படச் செய்யும் அளவுக்கு, இருமலின் அசுர உலுக்கல். கட்டில் சோகத்துடன் கிரீச்சிட்டுக்கொள்கிறது. அலமேலுப் பாட்டி, சாவே நெருங்கிவிட்டது போன்ற அபூர்வ நிம்மதியுடன் இருமினாள்.
‘லொக் லொக் லொக்க…’
இருமல் தொடர்கதையா? அப்படித்தான் தெரிந்தது. இருமலுடன் இளைப்பும் சேர்ந்துகொண்டது. பளிச்சென்று தெரிந்த நெஞ்செலும்பு வரிசை, ‘கேது…. கேது ‘வென்ற இளைப்பில், மேலும் கீழுமாய் ஏறி இறங்கியது.
கனவில் அமிழ்ந்த அந்த ‘பூ’ சலனமுற்றுச் சிலிர்த்தது. இருமலின் பூகம்பத்தில் அந்தப் பேத்தியும் விழிப்புற்று, திடுக்கிட்டவளாக எழுந்தாள்.
ஜன்னி கண்டு வெட்டி வெட்டி இழுப்பதுபோல உடம்பெல்லாம் ஒடுங்கி குலுங்கி இருமுகின்ற பரிதாபக் கோலம், அவள் மனதைப் பிசைந்தது. மனதில் கிலி!
முள்ளும் முடலுமாய் மூடிய புதர்களுக்கிடையில் ஊடுருவிச் செல்லும் தெளிவற்ற ஒற்றையடிப் பாதையில், குருடாகச் செல்லும் அவளுக்கு ஒரே வழித்துணை, இந்தக் கிழடுதானே! இதுவும் போய்விட்டால்…?
தன் எதிர்காலத்தில் எஞ்சி நிற்கும் இந்த அற்பமான, அழுக்கான ஒளியும் அணைந்து, இருள் அப்பிக்கொள்ளுமே!
அலையகுலைய எழுந்த பாப்பாத்தி, அலமேலுப் பாட்டியின் தொய்ந்த தொண்டையையும், முள்ளாக நெருடும் நெஞ்செலும்பையும் இதமாக நீவிவிட்டாள். தலைமாட்டில் காய்ச்சி வைத்திருந்த பனங்கற்கண்டு காபியை, வாயில் ஊற்றினாள்.
“ஆச்சி… ஆச்சி… ரொம்ப நெஞ்சை வலிக்குதா?” பாப்பாத்தியின் குரல், பயத்தால் குளிர்ந்து நடுங்கியது. அலமேலுப் பாட்டியின் நெற்றிக்கடியில், ஆழத்தில் புதைந்துகிடந்த மங்கலான விழிகள்… அலங்கமலங்க அலைபாய்ந்தன. அவள் முகத்தில் நிலைத்து நின்றது; ஆறுதலுடன் நோக்கியது. “ஒன்னுமில்லேம்மா… தைர்யமாயிரு ” என்று தெம்பு சொன்னது. உலர்ந்து போன உதடுகள் மெல்ல மெல்லச் சலனமுற்றன.
”பாப்பட்ற்றி…”உச்சரிப்பு குளறியது.
“என்ன ஆச்சி… இளைப்பு ரொம்ப இருக்குதா? கொஞ்சம் தண்ணி வைக்கட்டா?”
மெதுவாகத் தலையசைத்தாள்.
“வேண்டாம்மா… நீ தூங்கும்மா…”
‘இன்னும் ரெண்டு மாசத்துலே நா ஒரேயடியா தூங்கப் போறேன்’ என்று நினைவுபடுத்திக்கொண்டபோது, அந்த ஓய்ந்த இதயம் திகிலுடன் ஸ்தம்பித்தது.
‘அதுக்கப்புறம் பாப்பாத்தியை யார் பாத்துக்குவா?’
‘இப்பத்தான் பூத்திருக்கிற இந்தப் பூ, செடியிலேயே நிலைச்சாத்தானே, காய்க்கும்; கனியும்; விதைகளைச் சிந்தும்; வாரீசு வரும்!… இப்ப செடியே ஒடிஞ்சு சாயப்போவுதே! அப்புறம், இந்தப் பூவின் கதி?’
பாட்டியின் நெஞ்சமும் குளிர்ந்து நடுங்கியது. எதிர்காலம் இருட்டாக மிரட்டியது. சமீபமாக நெருங்கிவரும் மரணக் காற்று.. அலமேலு பாட்டியை அச்சுறுத்தியது.
வரப்போகும் மரணத்தை முன்னுணர்த்திய, ஜோஸ்யர் சுந்தரமாமணியின் சிவந்த பப்பாளிப் பழ முகம், நன்றாக நினைவுக்குள் விரிந்தது.
மேலே அகன்று, தாடை ஒடுங்கி, கன்னம் உள்ளே பதுங்கியிருந்த அந்த முகத்தில், கண்கள் மட்டும் கருப்பு வைரம்போலப் பிரகாசிக்கும். வெற்றிலைக் காவி ஏறிய பற்களில், முன்னிரண்டு பற்கள் மட்டும், உதட்டுக்கும் மேலே கொம்புபோல நீட்டிக் கொண்டிருக்கும்.
இருமி ஒய்ந்தவளாக தொய்ந்துபோன அலமேலுப் பாட்டி, சோர்வுடன் இமைகளை மூடினாள்.
…கொம்புகளைப் போன்ற பற்களைக் கொண்ட பப்பாளிப்பழ முகம், குரூரமாக இளித்துக்கொண்டு வருகின்றது. நெடிய அந்த உருவத்தின் நீண்ட கரங்களின் முகப்பில், பத்து அரக்க நகங்கள்! அந்தப் பத்துக் குறுவாள்களும், வெறி கொண்ட கண்களுமாகத் தன் கழுத்தை நெறிக்க வரும் குரூரம்!
நாலைந்து குரங்குகள், குரூரமான குதூகலத்துடன் ஒரு ‘பூவை’ இதழ் இதழாகப் பிய்த்து, அதையும் கசக்கி..
திடுக்கிட்டு விழித்த பாட்டி, அவசர அவசரமாகக் கழுத்தைத் திருப்பினாள். பாப்பாத்தி படுத்திருந்த துணிவிரிப்பு, அனாதையாகக் கிடந்தது. பாட்டியின் நெஞ்சில் ஒரு பாறாங்கல் திடுமென்று ஏறிக் கொண்டது. ‘எங்கே போய்ட்டா…?’
நெஞ்சுக்குள் ஒரு சிறு குறுகுறுப்பாகத் தோன்றி, பெருந்தவிப்பாக விசுவரூபமெடுத்து, ஒரு சூறாவளியைப் போல பாட்டியை உலுக்கியது, இருமல்.
அலமேலுப் பாட்டி இருமல் அடங்கி, சோர்வுடன் கண்கைள மூடவும், வெளியே வந்தாள் பாப்பாத்தி. சுற்றும் முற்றும் பார்த்தாள்… அது ஒருவகையான பயந்த கள்ளப்பார்வை.
ஏதோ அரவம் கேட்டதால் விழிப்புற்ற மயில்கள், ஒன்றன்பின் ஒன்றாகக் கூவிய அலறல், ஒரு பர்லாங் தூரத்துக்கு அப்பால்தான் ஒலித்ததென்றாலும், பாப்பாத்தியின் பயந்த மனதைத் திடுக்கிட வைத்தது.
“கட்டாயம் வந்துரு… ஆமா… வந்துடணும்… நா காத்துக்கிட்டேயிருப்பேன்” என்று கண்களும், உதடும் கெஞ்சி ஏங்கிய ராஜையாவின் வாலிபத் துடிப்புமிக்க பார்வை… அவள் நெஞ்சுக்குள் சிக்கிக்கொண்டது. அவள் மனதுக்குள் இன்ப இசை, அலையாகப் பொங்கியெழுகின்றது.
அந்த நாள்…! பம்ப்ஷெட் கிணற்றில் குளித்துவிட்டு, உடை மாற்ற அந்த பம்ப்ஷெட் ரூமுக்குள் நுழைந்தபோது… அங்கே உட்கார்ந்திருந்த ராஜையாவைக் கண்டு திகைத்து, ஒரேயடியாக குழப்பமுற்றவளாகத் தவித்து…
அப்படித்தான் தொடர்பு முளைவிட்டது. ஒரேகாட்டில் தொடர்ந்த- இணைந்த – உழைப்பு, அவர்கள் உறவுப் பயிருக்கு நீராகியது.
திடமான உள்ளத்துடனும், உடலுடனும் உழைத்துக் கொண்டிருந்த பாட்டிக்கு அவள் பயந்தாலும், அந்த உறவு வளர்ந்தது. தத்தமது சோகங்களை – தாபங்களைப் பரிமாறிக் கொண்டனர். சலித்துக்கொண்டனர்; துயருற்றுக்கொண்டனர்; துயர்களைப் பங்கிடத் துணை இருக்கிற தெம்பில் வாழ்ந்தனர்… அவர்களிடையே கனவு மலர்கள், நட்சத்திரத் தோட்டங்களாக மின்னிச் சிரித்தன. அவர்கள் உலகமே வேறு! அதில் பிரஜைகளும், பிரபுக்களும் அவர்கள்தான்!
பாட்டி ஒரேயடியாக நாராகக் கிழிந்தபிறகு… தனது கவலைகளை – கண்ணீரைத் துடைக்க, ராஜையாவின் ஆதரவு அத்யாவசியமாகப்பட்டதாலோ என்னவோ, அவர்களது சந்திப்பு மேலும் அடர்ந்து தொடர்ந்தது.
அந்தத் தனிமை… இளமைக் கொந்தளிப்பு…ஆதரவுக் கழியைத் தேடியலையும் கொடிபோன்ற பாப்பாத்தியின் அனாதைமை… எல்லாமாகச் சேர்ந்து அவர்கள் மனதை மட்டுமில்ைைல, உடலையும் இணைத்தது!… என்னதானிருந்தாலும், பாப்பாத்தியின் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு வயசு காரணமாக இருந்தாலும், சமூக ஞானம் பற்றிய தெளிவையோ- உஷார்தனத்தையோ கற்றுத் தரவில்லையே!…
அலமேலுப் பாட்டியின் மனதில், பயமும் சந்தேகமும் பரவியது. ‘இந்த அகால வேளையிலே வயசுக்கு வந்த புள்ளை எங்கே போய்ட்டாள்?’
‘அப்படியிருக்குமோ…. நா நொண்டி மாடாக விழுந்தவுடனே, கன்னுக்குட்டி துள்ளி விளையாடிக் குதிக்க ஆரம்பிச்சிடுச்சோ… கன்னுக்குட்டி என்னத்துக்காகும்? இளங்கன்னு, பயமறியாதே! ஒன்னுருக்க ஒன்றைச் செய்து… ஏதாச்சும் பள்ளத்திலே மாட்டிக்கிடுமோ?’
நினைவுகள், குருட்டு ஈயைப்போல நோக்கமின்றிப் பறந்து திரிந்தது. மனதில் ஒரு வருத்தமும், அச்சமும் இருளாகக் கவிந்தது. பின்னும் மனதைத் தேற்றிக்கொண்டாள்.
‘நம்ம ‘கொடிவழியிலே வந்த புள்ளைக்கு அப்படியெல்லாம் புத்தி போகாது.கவரிமான் பரம்பரையாச்சே’ என்று பெருமிதத்துடன் நினைத்துக்கொண்டாள். சில சமயம் இந்த மாதிரி பொய்யான பெருமிதங்களே, அலைபாய்ந்து திரியும் மனதுக்குத் தைரியமாக விளங்குகிறது.
‘நம்ம பாப்பாத்தியை என்ன செய்யப் போறோம்? அவளை தவிக்க விட்டுட்டு,நா இன்னும் ரெண்டு மாசத்திலே கண்ணை மூடப் போறேனே… அதுக்கப்புறம் அவளை யார் காப்பத்துறது? யார் ஆதரிப்பாக?….ம்ம்… அதது தலைவிதிப்படி நடக்கும்… நமக்கென்ன, மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்…’
உள்ளத்து நினைவை உணர்ந்து- அதிலிருந்த விரக்திமிக்க தன்னம்பிக்கையின்மையை உணர்ந்து, அவளே திடுக்கிட்டுப் போனாள்.
ஏனெனில், இதே மாதிரியான உணர்வு, சில வருஷங்களுக்கு முன்பு அவளை ஆக்ரமித்திருந்தது.
‘நம்மாலே என்னத்தை இந்தப் புள்ளையை வளர்த்து, ஆளாக்கி, கரையேத்த முடியப் போகுது! ஊஹூம்! பனங்காயை குருவியாலே சுமக்க முடியுமா, என்ன! என்ன செய்றது? நம்ம என்ன செய்ய முடியும்?… அதது தலைவிதிப்படிதானே எல்லாம் நடக்கும்! நம்ம கையிலே என்ன இருக்கு? உசுர் இருக்கிற வரைக்கும் உழைச்சுப் பாப்போம்… அதுக்கப்புறம் அதது விதிப்படி நடக்கட்டும்…’
இந்த மாதிரியான தன்னம்பிக்கையற்ற சிந்தனையுடன், அச்சமும் சோகமுமாய் இருந்த அலமேலுப் பாட்டிதான்… வாழ்க்கையை அரக்கனாக எண்ணிப் பயந்து கிடந்தவள்தான்!
பெருமாளம்மாளின் சாதனைதான் அலமேலுவை வேறோர் வார்ப்பில் வார்த்தது. ஆம்… அது அப்படித்தான்!
பெருமாளம்மாள், அலமேலுப் பாட்டியைவிட இருபது வயதுக்கு முந்தியவள். ரொம்பத் தளர்ந்து போனவள் – வெடித்துப் போன வெள்ளரிப் பழம்போல.
இட்லி அவித்து விற்றே, கூட்டுக்கு கூளம் சேர்க்கும் குருவியை மாதிரி சிறுகச் சிறுக சேகரித்து, பேத்தியோட மகன் கல்யாணத்தையே நடத்தி முடித்தாள். அந்தக் கல்யாணத்தன்று – அந்தக் கிராமமே அமளிதுமளிப்பட்டது.
பருமாளம்மாளின் விடாப்பிடியான உறுதியையும் அதனால் விளைந்த சாதனையையும் – ஆணும், பெண்ணும் சொல்லிச் சொல்லி வியந்தனர்.
அது என்ன, லேசுப்பட்ட சாதனையா? நடத்தி வைக்கிறவளுக்கும் – தாலியை ஏந்தியவனுக்குமிடையே உள்ள இடைவெளி கொஞ்சமா? மூன்று தலைமுறைகளல்லவா, இடைவெளித் தூரம்!
அந்தப் படுகிழடு – கனிந்து முற்றிக் காய்ந்துவிட்ட நெற்று. அதன் சாதனையின் மகத்துவம் எல்லோரையும் பிரமிக்கவைத்தது, புகழவைத்தது. ஆனால், அலமேலுப் பாட்டியிடம் வேறுவிதமான பிரதிபலிப்புகளை சிருஷ்டித்தது.
அப்போதுதான், தன் மகளைப் பறிகொடுத்துவிட்டு…அவள் விட்டுச்சென்ற ஒரே சொத்தான பாப்பாத்தியை வளர்த்துக் கொண்டிருந்தாள். தன்னம்பிக்கையற்ற வெறுமையுடன், பய பீதியை நெஞ்சில் தாங்கி உழன்று கொண்டிருந்தாள்.
தகப்பனுக்காக உழைச்சோம்… புருஷனுக்காக உடம்பைத் தேய்ச்சோம்… புள்ளைகளுக்காக உருக்கிக்கிட்டோம். அதெல்லாம் போதாதுன்னு, பேத்திக்காகவும் பாடுபட வேண்டியதிருக்கே… இதை நம்மாலே செய்ய முடியுமா? கடைசிவரை காப்பாத்தி கரையேத்த முடியுமா? அதுவரைக்கும் ஆயுசு சக்தியும் இருக்குமா? என்ற மாதிரியான சம்சயங்களும், சஞ்சலங்களும் மனதை அலைக்கழித்து, அவளது உறுதியையும், போர்க்குணத்தையும் மழுங்கடித்துக் கொண்டிருந்தன……
இந்தச் சமயத்தில்தான், பெருமாளம்மாளின் வியத்தகு சாதனை!
தம்மைவிட இருபது வயது மூத்த அவளே அப்படிச் செய்யும்போது, இளையவளான தன்னால், தன் பேத்தியைக் கரையேத்த முடியாதா? அதுவரை உழைக்க முடியாதா? முடியும்… என்னாலும் முடியும்! நானும் சாதித்த பெருமையை – பேத்தியின் மண வாழ்வின் மகிழ்வை- சந்திக்கத்தான் போகிறேன். என்னையும் இந்த ஊர், மூக்கில் விரல் வைத்து அதிசயமாகப் பார்க்கத்தான் போகிறது…இதுமட்டும் சத்தியம்.
அலமேலுவின் மனதில் நினைவுகள் இறுகியது; அடர்ந்தது; வைரம் பாய்ந்தது; வாழ்க்கையை அரக்கனாக நினைத்துப் பயந்து கிடந்த அவள், அப்புறம் வாழ்க்கையோடு மோத ஆரம்பித்தாள். வெற்றியின் நம்பிக்கையுடன் சமர்புரிந்தாள்.
இயல்பான போர்க்குணம்… தனது சுபாவமான அக்கினி உஷ்ணத்துடன், ஜ்வாலைவிட்டு எரிந்தது.
அவ்வளவுதான்…! அலமேலு ஒரு வீராங்கனையைப்போலக் சுழன்றாள். மாடாக – ராட்சஸ எந்திரமாக- உழைத்தாள். சீட்டுக் கட்டி பணத்தைச் சேமித்தாள்; ‘சீட்டு’ பிடித்துச் சம்பாதித்தாள். ஆட்டுக் குட்டி வளர்த்தாள்; எருமை மாடு வளர்த்து… பாலை விற்று, காசைச் சேர்த்தாள்.
குடித்தும் குடியாமல் அல்லும் பகலும் பாராமல் அலுப்பையறியாமல் – வெறிகொண்டவளைப் போல… அப்படியோர் அசுர உழைப்பு! ஊரையே அசந்து போகவைத்த உழைப்பு; பிரமிப்பில் மூழ்கடித்த அதீத முயற்சி!
அப்படி வயது மீறிய வேகத்தில், தேனீயைப்போலப் பறந்து திரிந்த அவள், இப்போது சோகமாய் -வியப்புக்குரிய சோர்வுடன் நினைத்துக்கொண்டாள். ‘நார் நாராய் கிழிஞ்சு போய்ட்டேனே… ந மட்டுமா? என் நம்பிக்கைகளும்தான்.’
‘இந்தக் கிழிஞ்சு கிடக்கிற நார்,இன்னும் ரெண்டு மாசத்திலே ஒரேயடியாகக் காய்ஞ்சு உலர்ந்து போகும்… ஜோஸ்யர் சுந்தரமாமணி அப்படித்தானே சொன்னார்…
அவர் சொன்ன ஜோஸ்யம் அப்படியே பலிக்குமாமே! கதை கதையா சொல்கிறாங்களே… ‘இன்னின்னார்க்கு இப்படி இப்படி சொன்னார்… இதது இப்படி இப்படி முடிஞ்சது’ என்றெல்லாம் கற்பனாலங்காரத்துடன் விளக்கிவிட்டுச் சொல்வார்கள்: “அம்புட்டுக் கரெக்டா சொல்லுவார்… ஜோஸ்யத்தைக் கரைச்சுக் குடிச்சிருக்கார்… எல்லா நுணுக்கமும் தெரிஞ்ச மனுஷர்!”
அப்பேற்பட்ட ஜோஸ்யப்புலி, பாப்பாத்தியின் ஜாதகத்தை மட்டுமா, தப்பும் தவறுமா சொல்லப்போறார்? சொல்லவே மாட்டார்…அவர் சொன்னதும் சரிதானே… அவர் சொன்ன மாதிரியே இதோ, நா நார்நாரா கிழிஞ்சு கெடக்கேன். இன்னும் ரெண்டு மாசம் நான் வாழ்றதுங்கிறது, அதிகபட்சம்தானே…
அலமேலுப் பாட்டி, சாவைப்பற்றி ஒரு இனம் புரியாக மகிழ்வுடன் சிந்தித்தாள். பேத்தியை நினைக்கும்போது மட்டுமே, பீதி நெஞ்சைக் கவ்வியது. கண்முன்பாக இருள் அடர்ந்தது.
ஆமா… இந்தப் புள்ளை… இந்த அகால நேரத்திலே எங்கே போச்சு?
பாப்பாத்தி ஜாக்கிரதை உணர்வுடன் நடந்தாள். மூன் பாதங்களை ஊன்றி, ஓசை வராமல் நடந்தாள். அந்த மயில்களின் அலறல் இன்னும் ஓயவில்லை. மிரட்சியான அலறல்! பாப்பாத்தியின் மனதும் பயத்தால் சிலிர்க்கிறது. ஆயினும் ராஜையாவின் அழைப்பு சாகக்கிடக்கும் பாட்டிக்குப் பிறகு… தனக்கென இருக்கும் ஒரே நம்பிக்கை அவன்தான்… அவனைத் தட்டிக்கழிக்க முடியாது. அது மட்டுமல்ல… அவளுக்கே அவன் மீது ஒருவித மையல்! ஆழ்ந்த விருப்பம்!
அதனால்தான்… அன்று தனிமையில் மனதைத் திறந்து, பரஸ்பரம் விஷயங்களைப் பரிமாறிக் கொண்டிருக்கையிலேயே….. உடலை அணைத்து, ஆசையுடன் அவன் இறுக்கியபோது. உணர்வலைகளில் துரும்புகளாக இருவரும் மிதந்தபோது… மறுக்க முடியாத மயக்க நிலையில்… இன்பலாகிரியில் இணங்கினாளே… அந்தச் சம்பவங்களும் இருமுனை விருப்புடனும், மறுப்புடனும் தொடர்ந்தனவே… அந்த இணக்கமே… இன்று ஒரு பிரச்னையாக பரிணாமமாகி நிற்கிறது.
இதோ… வயிற்றில் ஏதோ ஒரு பிசைவு… அங்கே என்னவோ நடக்கிறது. நாக்கு மசமசாவென்றிருக்கிறது. இதெல்லாம் சேர்ந்து அவளுக்கு ‘எதையோ’ உணர்த்திப் பயமுறுத்தியது.
தன்னைப் பூத்து தாங்கி நின்ற செடி சாய்ந்து விட்டதே! இந்தப் பூவையெடுத்து அன்புடன் சூடிக்கொள்வானா? அதில் இவனுக்கு முழு உறுதி இருக்குமா?
கோடைகாலத்து மின்னலாக, இப்படிச் சில சந்தேகங்கள் மனதில் ஒளிர்ந்து இருண்டன.
மூக்குத்திகூட இல்லாத தன்னை விட்டுவிட்டு, வரதட்சணையுடன் வரும் ஏதோ ஒன்றை ஏற்றுக்கொள்ள சபலம் கொள்வானோ என்ற சலனம், அவள் மனக்குளத்தை சில சமயங்களில் கலக்கியது.
தேய்பிறைக்கால வெளிறிப்போயிருக்கும் இருளில் நீந்தி புஞ்சையைக் கடந்து… ஓடையை ஒட்டியுள்ள சோளப் புஞ்சையை நெருங்கினாள்.
“வந்துட்டீயா?” என்ற ஆவலும், திருப்தியுமான குரல் அவளை அன்புடன் வரவேற்றது.
“ம்… நல்லவேளை. ஆச்சி இருமினாள். இல்லேன்னா நல்லா உறங்கியிருப்பேன்…’
அவள் சொல்லில் தொக்கி நின்ற சிறுபிள்ளைத்தனத்தைக் கண்டு, மூகம் சுளித்தான் ராஜையா.
‘பாட்டி இருமுனா… ஒனக்கு சந்தோஷமா?” என்று கண்டனக் குரலில் கேட்டவன், தொடர்ந்தான்:
“சரி, உங்க ஆச்சிக்கு எப்புடி இருக்கு?”
அவன் விசாரிப்பில் ததும்பிய கரிசனமும், பரிவும், அவளது நம்பிக்கைகளை வளர்த்தது.
“இருக்கு…! சாவுக்கு நாளை எண்ணிக்கிட்டிருக்காள். பயமாயிருக்கு.’
“பயந்து ஆகப்போறதென்ன? ஒழுங்கா மருந்து குடிக்காகளா?”
“மருந்தே வேண்டாங்கிறாள். என்ன மாத்திரை குடுத்தாலும் சரி… ‘ஆமாம் இந்த மாத்திரைதான் விதியைப் பிடிச்சு நிறுத்துமாக்கும்? எனக்குத்தான் ரெண்டு மாசம்னு ஆணிபிடிச்சு எழுதியாச்சே’ன்னு சலிச்சாப்புலே சொல்லி, வேண்டாமென்னு விடுகிறாள்.”
“ஏன் அப்படி? ரெண்டு மாசம்னு நிச்சயமா எப்படிக் கண்டுபிடிச்சாக?”
“போன மாசம் ஜோஸ்யம் பாத்தாளாம்…”
“முந்தியெல்லாம் பேயா உழைப்பாளே. ரவ்வும் பகலுமாக பரப்பெடுத்துப்போய் அலைவாளே… எந்த நோய் வந்தாலும் கஷாயத்தைப் போட்டுக் குடிச்சு, ஒடம்பைத் தேத்திக்கொள்வாளே… இப்பமட்டும் என்னவாம்…?”
“அதான் சொன்னேனே, ஜோஸ்யம் பாத்தாள்னு. நா ‘சமைஞ்ச’ நேரத்தை குறிச்சு அதை வைச்சும், என்னோட பெறப்பு ஜாதகத்தையுைம் வைச்சு ஜோஸ்யம் கேட்டிருக்காள்… அந்த ஜோஸ்யக்காரப் பாவி சொல்லியிருக்கான்,’ஓம் பேத்தி சமைஞ்ச நேரத்துலே தோசமிருக்குது…’ன்னு. என்னோட தோஷம், எங்க ஆச்சியை கொன்னுடும்ங்கிற மாதிரி, ஆணியடிச்சாப்பலே சொல்லிட்டான் போலிருக்கு.
அந்த ஜோஸ்யன் சொன்ன ஜோஸ்யம், அவள் சுழல்றதுக்கும், வாழ்க்கையை எதுத்துப் போராடுறதுக்கும் ஆதாரமாயிருந்த நம்பிக்கையையே சுக்கு நூறா நொறுக்கிடுச்சு.”
இந்தப் புதிய ‘நிஜம்’, அவர்களிடையே கனத்த மௌனத்தை சிருஷ்டித்திருந்தது. அவர்களது சிந்தனைப்புழு, கலயுடனும் எதிர்காலம் பற்றிய பீதியுடனும் ஊர்ந்துகொண்டிருந்தது.
‘இந்த அளவுக்கு அன்பையும், அக்கறையும் காட்டி தனது கவலைகளின் சுமைகளைப் பங்கிட்டுக்கொள்ளும் இவன், நம்மைக் கைகழுவிவிடவா செய்வான்…’ என்ற நம்பிக்கையான சிந்தனையும், பாப்பாத்தி நெஞ்சில் நிழலாடியது.
‘எல்லாம் நிறைஞ்ச இன்னொருத்தியோட, ஏதுமில்லாத தன்னை ஈடுபாத்து மனசு மாறிட்டா…? ஆம்பளைகளை நம்ப முடியாது.
இப்படியோர் அச்சமும், அவளது அடிவயிற்றைக் கலக்கியது. எதிர்காலம் அவளிடம் கண்ணாமூச்சு காட்டியது.
ஒரு புதிய ஜீவன் தன் வயிற்றுள்- தனது ரத்தத்தில்-வடிவம் கொள்ள ஆரம்பித்திருப்பதை நினைத்தபோது, திகிலும் கலக்கமும் நெஞ்சை நிரப்பியது; உலுக்கியது.
சிந்தனைச் சரட்டைக் கத்தரித்து விட்டு, பிரக்ஞையுற்ற ராஜையா, அவளது மென்கரத்தைப் பற்றினாள்.
“சரி, போய் ஆச்சியைக் கவனி… நேரமாச்சு.”
“ஒரு விஷயம்…” என்று ஆரம்பித்தவள், நாணம் கலந்த தயக்கத்தோடு உதட்டைக் கடித்தாள்.
“என்ன பாப்பு சொல்லுடி” ஆசைப்பெருக்கில் வார்த்தையில் அன்பு ஆர்ப்பரித்தது; விஷயத்தை, தயங்கி… மென்று விழுங்கி… முணுமுணுப்பாக வெளிவிட்டாள். அவன் மனதில் அதிர்ச்சி மின்சாரம்!
தன்னை அழுத்தி அணைத்திருந்த ஆண்மைத் திமிரான இறுக்கம், தளர்வது போன்ற பிரமை அவளுக்கு! பீதியும் திகிலும் நெஞ்சைக் கலக்கின. ‘பிஞ்சாக பரிணமிக்க முயன்றுவிட்ட இந்தப் பூவைப் போற்றிப் பாதுகாப்பானா…?’
ஏராளமான சம்பவங்களையும், நிகழ்ச்சிகளையும் சுவடுகளாக- காய வடுக்களாக-விட்டுவிட்டு மாதம் மூன்று கரைந்தோடிவிட்டன.
அலமேலுப் பாட்டி இன்னும் மரண தேவதையை சந்திக்கவில்லை. ஆனால் ரொம்பவும் கிழிந்து நைந்து போனாள். இருமல் கொடுமையில், இரவுகளெல்லாம் ஏகாதசிகளாக நகன்றன. சோப்புப் போட்ட துணியைக் கசக்குவதைப்போல இருமல், அலமேலுவின் நலிந்த உடலை உலுக்கிப் பிழிந்தது.
பாப்பாத்திவேறு அவளைப் பயமுறுத்தினாள். ஒரு பூசணிப் பூவைப்போல அகன்று மலர்ந்து பிரகாசிக்கும் பாப்பாத்தி, இப்போதெல்லாம் இருண்டு கறுத்துக் கிடக்கிறாள்.
இப்போதெல்லாம் அவள் குளிப்பதில்லை; அலங்கரித்துக் கொள்வதுமில்லை. சரியாகச் சாப்பிடுவதுமில்லை.
‘சாகக் கிடக்கும் ஆச்சியை எண்ணித்தான் இப்படி மருகித் தவிக்கிறாளோ…’ என்று நினைத்துக் கொண்டபோது, பேத்தியின் பாசத் தவிப்பில் அலமேலுப் பாட்டி உருகிப் போனாள்.
‘இப்பேர்பட்ட பாசமான தங்கக் கட்டியை, இந்த நீசப்பய உலகத்துலே தவிக்கவிட்டுட்டு ஈசன் என்னை இழுக்கப் போறானே…’ என்று நினைத்தபோது, அளவில்லா வருத்தத்துடன் சூள்கொட்டினாள்.
ஜோஸ்யரின் பப்பாளிப்பழ மூஞ்சியை, முதன் முதலில் வெறுப்புடன் எண்ணினாள். ‘விதியின் வலிமையால் நாள் நிச்சயிக்கப்பட்டுவிட்ட தனது சாவை முன்னுணர்த்திய’ அவரை… ஏனோ காரணம் புரியாமல் ‘நாசமாய்ப் போக’ என்று அக்கினி மனத்துள் சபித்தாள்.
‘அவரைச் சொல்லி என்ன செய்ய, பாவம்? நம்ம தலையிலே பிரமன் எழுதியிருக்கிற எழுத்துக்கும், பாப்பாத்தியின் விதியமைப்புக்கும், அவரைக் குத்தம் சொல்லி என்ன செய்ய…’ இப்படியும் ஒரு சுய விமர்சன சிந்தனையில் மிதந்தாள்.
கொல்லையில் “ஓவ்…ஹஓவ்…” யாரோ வாந்தி எடுக்கும் சப்தம் கேட்டது. அலமேலுவின் சிந்தனை கத்தரிக்கப்பட்டது. மனதில் ஒரு திடுக்கிடல். கொஞ்ச நேரத்தில்-
பாப்பாத்தி கழுவிய மூகத்தைத் துடைத்துக்கொண்டு வந்தாள். அவள் மூகத்திலும், உடலிலும் அளவில்லா தளர்ச்சியும், வாட்டமும் நிழலாகக் கவிந்திருந்தது.
“என்னடி வாந்தி எடுக்கிறே?” பதற்றத்தில், அவள் குரலில் கண்டிப்பு தொனித்தது.
“ஒன்னுமில்லே… நேத்துக் குடிச்ச சோளக்கஞ்சி ஒவ்வலே. குடலைப் புரட்டிக்கிட்டே வருது.”
பாப்பாத்தியின் பதில், பாட்டியின் பதற்றத்தைத் தணிக்கவில்லை. ஆயினும் சொன்னாள்: ‘அஞ்சாறு அரிசியை வாயிலே ஒதுக்கு… குமட்டாது.
பாப்பாத்தியின் மனதில், சலிப்பும் விரக்தியும் நிறைந்து நின்றது. யாரையோ திட்டுவதைப்போல ஆத்திரத்துடன் முணுமுணுத்தாள். “நாசமாய்ப் போக!”, “ஒருநாள், பேதியிலே பாடையேற!”, “கையிலே கண்ணுலே புத்து (புற்று) புறப்பட!” என்றெல்லாம் ஆங்காரமாய் சபித்துக்கொண்டாள்.
சிலசமயம் தன்னையே திட்டிக்கொண்டாள். தனக்கு ‘இதுவும் வேணும், இன்னமும் வேணும்’ என்றும் சலித்துக்கொண்டாள்.
இதையெல்லாம் அரசல் புரசலாகக் கவனித்த பாட்டியின் மனதில் ஒரு புதிய கலக்கம் பிறந்தது. அரூபமான ஆபத்து தன்னைச் சுற்றி வளைப்பது போன்ற பிரமையில் அஞ்சி நடுங்கினாள்… யாருக்கு அஞ்சுகிறாள்? தன்னை நோக்கி வரும் மரணத்துக்கா? அனாதையாகத் தவிக்க இருக்கும் பேத்திக்கா?… அவளுக்குப் புரியவில்லை.
நினைவின் அயற்சியில், கண்ணை மூடினாள்… பத்து அசுர நகங்களுடன் நீண்ட கரங்களை நீட்டிக்கொண்டே பிசாசுத்தனமான ‘பப்பாளிப்பழ முகம்’ ஒன்று, தன்னை நோக்கி வருவது போலிருந்தது. பீதியில் மனம் குளிர்ந்து மரத்தது.
மசகு போடாத சக்கரத்தைப்போல, பெருத்த கூச்சல் குழப்பத்துடன் ஆறு மாதங்கள் நகன்று ஓடிற்று.
அலமேலு பாட்டியின் வீட்டில் ஏசல்… சாடல்… வசவு சாபம்… அழுகை… எல்லாம் நிகழ்ந்தன. வாழ்க்கை, அதற்கேயுரிய பாட்டையில் ஊர்ந்தது. கொந்தளிக்கும் பிரச்னைகள் மூழ்கடிக்க முயன்றன; மூழ்கடிக்கப்பட்டன.
ஊர் மெச்சியதோ இல்லையோ, அலமேலு பாட்டியின் மனம் குளிர, அந்தப் ‘பூ’, இப்போது ராஜையாவின் கழுத்தில் சூட்டப்பட்டிருக்கிறது!
இப்படி எல்லாமே நிகழ்ந்தன. ஆனால் எந்த ‘இழவும்’ நடக்கவில்லை. ஆம், ‘பப்பாளிப் பழம்’ அழுகிவிட்டது!
– செம்மலர், டிசம்பர்1977.
– மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் (பாகம்-2), முதற் பதிப்பு: 2002, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |