ஒரு தாயின் ஏக்கம்
நான் பத்து மணிக்கு உங்ககிட்ட சொன்னேன் இப்ப மணி என்ன ஆச்சு? இன்னும் என்னதான் செய்றீங்க? என்ற ஜெய்யின் பேச்சு சத்தம் கேட்டு கார்த்தி படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தான். என்ன கார்த்தி நேற்று இரவு வேலை முடித்து வர தாமதமாகி விட்டதா? ஷோபாவிலேயே படுத்து விட்டாய். ஆமா ஜெய் இரவு பதினோறு மணி ஆகிவிட்டது. உன்னை தொந்தரவு செய்ய மனம் இல்லாமல் இங்கேயே படுத்து விட்டேன். அட பைத்தியகார நீ வருவாய் என தாழிடாமல் தான் படுத்தேன் என ஜெய் கூற இருவரும் சிரித்து கொண்டனர்.
இத்தனை கஷ்டத்துடன் வேலையை இங்கு செய்வதற்கு பதிலாக உன் சொந்த ஊரிலே வேலை பார்க்கலாம் அல்லவா என ஜெய் கார்த்தியிடம் கேட்கிறான். நான் படித்த படிப்பிற்கு என் ஊரில் வேலையா? எவ்வளவு வருமானம் வரும் சொல் ஒரு பதினைந்தாயிரம் தருவார்கள். ஆனால் இங்கோ ஐம்பதாயிரம் வாங்குகிறேன். அங்கு நான் ஒன்பது மணிக்கு வேலைக்கு போக ஏழு மணிக்கெல்லாம் தயாராகி பஸ் பிடித்து ஏறி நான் செல்வதற்குள் என் சட்டையை நான்கு பேர் மோதியே கசக்கி விடுவார்கள். இங்கு அப்படியா என்னை அழைத்து செல்ல அலுவலக வாகனம் வரும் எப்படி செல்கிறேனோ அப்படியே திரும்பி வருவேன் , என கார்த்தி கூற ஜெய் சரிதான் என்பதை போல தலையசைத்தான். டீ குடித்து விட்டு வா கார்த்தி நான் சென்று காலை உணவு ஏற்பாடு செய்கிறேன். டீ கப்பை கையில் எடுத்து கொண்டு பால்கனியை நோக்கி சென்றான்.
தனது போன் ஞாபகம் வரவே பேண்ட் பாக்கெட்லிருந்து அவனது போனை எடுத்தான். இருபது அழைப்புகள் ஆறுமுகம் என்ற பெயரில் போன் சைலண்ட்டில் இருந்தது அதை சரிசெய்து விட்டு அந்த நபருக்கு போன் செய்தான். மறுமுனையில் என்ன தம்பி தூங்கி விட்டாயா என குரல் கேட்டது. ஆமா மாமா இத்தனை முறை அழைத்து உள்ளீர்கள் ஏதேனும் முக்கியமான விசயமா? மாமா. அது வந்து தம்பி என்ற தயங்கிய குரலில் ஆறுமுகம் பேச ஆரம்பித்தார் திலகாவிற்கு நெஞ்சு வலி மருத்துவமனையில் சேர்த்து உள்ளேன். உன்னை கடைசியாக பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறாள்.
வருவாயா? எனக் கேட்டார். அம்மாவுக்கு என்ன? ஏன் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. அதுக்கு நீங்க மொத போன் எடுக்கணும் மாப்ள என அவர் கூறினார். எந்த மருத்துவமனை என கேட்கிறான். அரசு மருத்துவமனையில் தான் மருத்துவர் அழைக்கிறார் நீங்கள் சீக்கிரம் கிளம்பி வாருங்கள் மாப்ள என கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துக் கொள்கிறார். பாதி குடித்த டீ கப்போடு சமையலறைக்குள் நுழைந்தான் கார்த்தி. டீ பாதி மீதி இருப்பதை பார்த்த ஜெய் ஏன்டா என்ன ஆச்சு என விசாரிக்க கார்த்தி விவரத்தை சொல்கிறான்.
நீ உடனே கிளம்பு கார்த்தி நானும் உடன் வருகிறேன். இருவரும் புறப்படத் தயாராகி கொண்டு இருந்த வேளையில் கார்த்தி போன் அடித்தது. அவன் அதற்கு காதை கொடுக்க மறுமுனையில் அவனது பாஸ் கார்த்தி நாளைக்கு முக்கியமான நபரை சந்திக்க நீ டெல்லி செல்ல வேண்டும் .
காலை ஏழு மணிக்கு விமான நிலையத்தில் இருக்க வேண்டும் எனக் கூறினார். அவன் நடந்ததை கூற தயங்கிய குரலிலும் இல்லாமல் கோவமான குரலிலும் இல்லாமல் நடுத்தரமாக சரி சென்றுவிட்டு விரைவில் வா நான் வேறு நபரை ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிவிட்டு வைத்துவிட்டார். இருவரும் வரவேண்டிய இடத்தை வந்தடைந்தனர். ஒரு டாக்ஸியை பிடித்து கொண்டு மாமாவுக்கு போன் செய்து நான் மருத்துமனைக்கு வந்து கொண்டிருக்கிறேன் என கூறுகிறான். வீட்டிற்கு போய் கொண்டு இருக்கிறோம் நீ அங்கு வந்துவிடு என ஆறுமுகம் சொல்கிறார்.
என்ன மாமா அம்மாவுக்கு சரியாகி விட்டதா? அம்மாவிடம் குடுங்கள் நான் பேசவேண்டும் என்றான். நீ பேசுவாய் ஆனால் அவளால் பேச முடியாது என்று கூறி அழத்தொடங்கினார். இவன் அழைப்பைத் துண்டித்து விட்டு ஜெய்யின் தோளில் முகத்தை புதைத்து கொண்டான். கார்த்தியின் இந்த வேதனைக்கு யாராலும் மருந்து போடமுடியாது. அந்த கடவுளால் கூட இயலாத காரியம் ஆயிற்றே டாக்ஸி கார்த்தியின் வீட்டை நோக்கி சென்றது. வீட்டின் முன் சொந்தபந்தம் அக்கம்பக்கத்தினர் என அனைவரும் கூடியிருந்தனர். கார்த்தியின் மாமா வந்து அணைத்துக் கொண்டார். இதற்கு அடுத்து நிகழும் சடங்குகளை தாங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். அனைத்து காரியங்களையும் முடித்துவிட்டு இருவரும் கார்த்தியின் வீட்டிற்கு வந்தனர். கார்த்தியின் சித்தி மகள் பூஜா அவர்கள் குளிக்க தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருந்தாள்.
ஜெய்யை பார்த்தவுடன் ஒரு ஈர்ப்பு வந்தது போன்ற உணர்வு ஜெய்க்கு அவள் நடத்தையல் தெரிந்தது. அவனோ நிராகரித்து விட்டு கார்த்தியின் பின்னே சென்றுவிட்டான். இருவரும் குளித்து விட்டு வந்தார்கள். உணவு தயாராக இருந்தது. அந்த மிருதுவான இட்லியும் சட்னியும் இருவரின் தொண்டையை அடைக்க அரைமனதாக சாப்பிட்டார்கள். ஜெய் பயணித்த களைப்பில் அங்குள்ள கயிற்று கட்டிலில் தன் உடலை சாய்த்துக் கொண்டான்.
கார்த்தி அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைந்தான். உள்ளே கார்த்தியின் சிறுவயது புகைப்படம் தொங்கி கொண்டிருந்தது. அதன் அருகே என் உலகம் என்ற வார்த்தை எழுதியிருந்தது. அதை தொட்டு பார்த்துவிட்டு திரும்பியவனுக்கு ஒரு டைரி தென்பட்டது. அதை புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். அதில் சில வரவு செலவு கணக்குகள் எழுதியிருந்தது. அப்படியே புரட்டிக் கொண்டே இருந்தான் ஒரு பக்கத்தில் என் அன்பு மகனுக்கு என்று எழுதியிருக்க படிக்க தொடங்கினான்,
நீ பிறந்தவுடன் உன்னை கையில் வாங்கிய தருணம் என் உதட்டில் மலர்ந்த புன்னனைக்கு ஈடாக எதுவும் இந்த உலகத்தில் இல்லை மிகவும் மகிழ்ச்சியாகவும் அதேசமயம் உன்னை நன்றாக வளர்க்க வேண்டுமே என்ற வருத்தமும் ஒரே சமயம் என்னில் தோன்றி மறைந்தது. உன்னை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தேன். துணையாக யாரும் இல்லை நான் ஐந்தாவது மாதம் கருவுற்றிருக்கும் போதே உன் அப்பா வேறு ஒரு துணையை தேடிக் கொண்டார்.
உன் பாட்டியின் அரவணைப்பில் உன்னை ஈன்றெடுத்தேன். ஒரு வருடம் உன்னுடன் இருக்க முடிந்தது. உன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய ஓட ஆரம்பித்தேன். நாட்கள் கடந்தன. பள்ளிப்பருவத்தை அடைந்தாய் மிகவும் புத்திசாலி பையன் என்ற பெயரும் எடுத்தாய் சிலிர்த்துக் கொண்டேன். பள்ளி முடித்து வீட்டிற்கு வந்தவுடன் என்னை தேடுவாய். நான் வர தாமதம் ஆனால் வாசலிலே எனக்காக காத்துக் கொண்டிருப்பாய் களைத்துப் போய் வீடு திரும்பும் எனக்கு உனது சிரிப்புடன் கலந்த அணைப்பு ஆறுதலை தரும் பிறகு பள்ளியில் நடந்ததையெல்லாம் என்னிடம் கூறி சாப்பாடு போட்டு ஊட்டிவிடச் சொல்லி என் மடியிலேயே உறங்கி விடுவாய். உன் பசியில் என் பசியும் தீர்ந்துதான் போனது.
நீ உறங்கும் அழகை ரசித்துக் கொண்டிருப்பேன். வருடங்கள் கடந்தன கல்லூரிப் பருவத்தை அடைந்தாய் என் வேலைகளை முடித்துவிட்டு வேலையைப் பற்றிய தகவல்களை உன்னிடம் பகிர்ந்து கொள்ளலாம் என வந்தால் நீ என் முகத்தை கூட பார்க்காமல் போனில் மூழ்கி இருப்பாய்.
நானும் விட்டுவிட்டு சமையலறைக்குச் சென்று வேலையை முடித்துவிட்டு சாப்பிடும் பொழுதாவது பேசுவாயா என ஏங்கினால் அப்பொழுதோ டிவியை போட்டு விட்டு சாப்பிடும் பொழுது என்னம்மா பேச்சு டிவி சத்தமே கேட்கவில்லை அமைதியாக இருங்க மா என கூறிவிடுவாய். சிறுவயதில் வெளியே செல்லும்பொழுது நான் என்ன நிறத்தில் சேலை கட்டுகிறேனோ அதே நிறத்தில் சட்டை போட்டு கொள்வாய். ஆனால் இன்றோ நான் என்ன சேலை கட்டுகிறேன் என்பதை கூட பார்க்க உனக்கு நேரமில்லாமல் போய்விட்டது. சரி நல்ல நாளிலாவது வீட்டில் இருப்பாய் என நினைத்தால் நண்பர்களை காண வெளியில் சென்று விடுவாய் . இப்படியாக பல மாதங்கள் கடந்தது. நீ வேலைக்கு வெளியூர் செல்லப்போவதாக கூறினாய் சரி உடன் இருக்கும் வரைதான் அருமை தெரியவில்லை வெளியூருக்குச் சென்றாலாவது பேசுவாய் என அதற்கும் சம்மதித்தேன். என்னுடன் உரையாடும் ஐந்து நிமிடங்களில் இரண்டு நிமிடத்திலேயே இருங்க அம்மா கம்பெனியில் இருந்து போன் என வைத்துவிடுவாய் வீடியோ காலில் கூட சாப்பிட்டுக் கொண்டும், ஏதாவது வேலை செய்து கொண்டும் தான் அரைகுறையாக பேசுவாய். இவ்வாறு பல ஏக்கங்கள் என்னுள் தோன்றி மறைந்து தற்போது மறந்தேவிட்டது. இல்லை எனக்கு புரியவில்லை இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? என் மீது என்ன பிழை உள்ளது ? புரிந்துகொள்ளாமல் விட்டது உன் தவறா ? புரிய வைக்கமால் விட்டது என் தவறா? எல்லாம் புரிந்தும் விட்டுவிட்ட அந்தக் கடவுளின் தவறா? சொல் மகனே..
இதற்கு அவன் என்ன விடையளிக்க முடியும். எதை கொடுத்து சரிசெய்ய முடியும் அவன் கண்களில் வழிந்துக் கொண்டிருக்கும் கண்ணிரைத் தவிர…