ஒரு எலிய விஷயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 8, 2025
பார்வையிட்டோர்: 3,807 
 
 

1

பழைய வீடு நாற்பது ஆண்டு கால கான்கிரீட் ஒட்டு கட்டிடமாதலால் சரியாக பராமரிக்க முடியாமல் மழை காலங்களில் நீர் ஊறி நிறைய இடங்களில் ஒழுகியதால் அருகிலிருந்த காவேரி நகரில் ஒத்திக்கு வீடு பிடித்து தன் குடும்பத்தோடு வந்தது நல்லதாக போய்விட்டது தருனுக்கு, ஐம்பது மீட்டருக்குள்ளாக பஸ்ஸ்டாப்பும் , அவசரத்துக்கு கொஞ்சமாக வாங்க மளிகை கடையும், காய்கறிகடையும். தெருமுனையில் பிள்ளையார்கோவிலும், கோயிலுக்கு எதிரில் அகலமான புதுக்கோட்டை பிரதான சாலையை குறுக்கே கடந்தால் பெட்ரோல் பங்க்கும் , தெருவுக்கு சுலபமாக எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய அடையாளமாக அஸ்வின் கார்ஸ் என்கிற பழைய, கொஞ்சம் புதிய கார்களை வாங்கி விற்கும் நிறுவனமும், அதையொட்டி வினோத் மகால் என்ற நடுத்தர வர்கத்திருக்கான சகல வசதிகளுடன் கூடிய திருமண மண்டபமும் இருந்தன.

மொத்தத்தில் என் மனைவிக்கும் அம்மாவுக்கும் வீடு ரெம்ப பிடித்து விட்டது இரு மகன்களுக்கும் தனியறை என்பதாலும் இனி மழை காலங்களில் நீர் ஒழுகி தூங்க படிக்க குளிர் இல்லாத ,பள்ளிக்கு சைக்கிளில் போவதற்கும் சுலபமாக இருந்ததாலும் அவர்களுக்கும் வீடு பிடித்துப் போய் விட்டது

பெரிய கேட்டும் நீண்ட வராண்டாவில் வாகனங்கள் நிறுத்த போதுமான இடமும் இருந்தது தாழ்வாரத்தின் கடைசியில் இரண்டடி சந்தும் அதில் கழிவறை குழாய்களும் மழைநீர் குழாய்களும் சுவரில் பொருத்தப்பட்டு பழுதானால் சரிபார்த்துக் கொள்ளும் விதமாக இடமிருந்தது. சந்தையொட்டி படுக்கையறையின் வெளி சுவர் முடிவில் வீட்டின் நுழைவாயிலும் நுழைவாயிலின் இருபுறமும் ஒன்னரை அடி அகலமும் மூன்றடி உயர ஜன்னலும் , இடது புறம் ஜன்னல் அருகில் இரும்பால் செய்த இரண்டு டிராயர்கள் கொண்ட மேஜையின் மேல் ஐம்பத்தி மூன்று இன்ச் டிவி பொருத்தப்பட்டு அதன் பின்புறமாக ஸ்குருவில் கம்பியை சுற்றி ஜன்னலின் இரும்பு கம்பியில் கட்டி ஏதாவது அதிர்வு ஏற்பட்டாலோ தவறுதலாக கைபட்டு கீழே விழாதவாறு பாதுகாப்பாக இருந்தது. நுழைந்தவுடன் சிறிய ஹாலும் ஹாலின் இடது புறம் கடைசியில் வாஷ்பேசினும், அதையொட்டி ஒரு படுக்கையறையில் குளியலறையுடன் கூடிய கழிவறையும். வாஷ்பேசினுக்கு வலதுபுறம் கதவில்லா கச்சிதமான சமயலறையும் சமயலறையின் முன்னதாக ஹாலின் வலதுபுறம் இன்னொரு படுக்கையறையும் ஹாலின் இறுதில் இடது புற சுவரில் அலமாரி வைத்து கீழக்கு முகமாக சாமி படங்கள் வைத்து வணங்கவும், சகல வசதிகளுடன் இருந்தன. மொத்தத்தில் நடுத் தட்டு மக்களுக்கு ஏற்ற வீடு.

ஹாலின் வலதுபுற உள்புறமாக ஜன்னலையொட்டி மர அலமாரி ஒன்றும் இருந்தது.

கடந்த மூன்று நாட்களாக எலியின் நடமாட்டமிருப்பதாக அம்மா சொன்னார். மர அலமாரிக்கு பக்கத்தில் மர மேஜையில் தான் டிவியின் ரிமோட், அம்மாவின் மாத்திரைகள் மொபைல் போன்களும் இரவில் பசித்தால் ஹாலில் படுத்திருக்கும் அம்மா சாப்பிட பழம் பிஸ்கட்டுகள் வைப்பது வழக்கம். காலையில் எழுமணிக்கு மேஜைக்கு அருகில் அமர்ந்திருந்த போது அம்மா மேஜையில் வைத்திருந்த ஆப்பிளை காட்டி தருண் இந்த ஆப்பிள பாறேன் எலி கடிச்ச மாறி இருக்கு, எனக்கு சந்தேகமாவும் இருக்கு.

ஆப்பிளை வாங்கி பார்த்தேன் நிச்சயமாக அணில் அல்லது எலி கடிந்த தடமிருந்தது சந்தேகமாகவும் இருந்தது. புது வீடு சுத்தமாகவும் அடைசல்கள் இல்லதாவாரும் வீட்டை வைத்திருக்கிறோம் எலிகளுக்கு ஏற்ற இடம் கிடையாது என்பது எனது நம்பிக்கை.

அதெல்லாம் இருக்காதும்மா வேற ஏதும் கடிச்சிருக்குமோ? இல்ல சின்னவன் கடிச்சிட்டு வச்சிருப்பான் கொஞ்சம் இருங்க அவன் கேப்போம் என்றேன்.

இரண்டாவது பையன் பிரனவை அழைத்தேன்.

தம்பி டேய் பிரணவ் இங்க வாயேன் ஒங்கிட்ட ஒன்னு கேக்கனும்.

பள்ளியில் குடுத்த வீட்டு பாடங்களை படித்தவன் சலித்தபடி

என்னாப்பா இப்ப கூப்பிடுறே படிக்கிறேன் இதோ வர்றேன். என்றான்.

வந்தவனிடம். கடித்த ஆப்பிளை காட்டி,

நீ கடிச்சிட்டு வச்சியா பொய் சொல்லாம சொல்லு

இல்லப்பா சத்தியமா நா கடிக்கல இங்க அப்பாயி ராத்திரி வச்சதே எனக்கு தெரியாது நேத்து நா ஒம்போது மணிகெல்லாம் தூங்கிட்டேன்.

சிரித்து முதுகை தடவி சிரி சரி போய் படி என்றேன்.

அம்மா விடுங்க இன்னிக்கு ராத்திரி வேறெதாவது வச்சி பாப்போம் காணா போவுதா இல்ல கடிச்சிவச்சிருதான்னு டெஸ்ட் பண்ணுவோம்

ஆமாடா வச்சி பாத்துருவோம் என்றார் அம்மா

இரவு முழுவாழை பழத்தை மேஜைமேல் வைத்துவிட்டு பத்தரை மணிவரை ஹாலில் அம்மா படுத்திருந்ததால் டியூப்லைட்டை அனைத்து விட்டு ப்ளூடுத் வழியாக சினிமாவின் ஆடியோவை கேட்டு டிவி பார்த்து விட்டு வந்து படுத்துவிட்டேன். காலையில் எழுந்து பல் விளக்கும் போது வாசலில் எனக்கு முன்பாக எழுந்து நற்காலியில் உட்காந்திருந்த அம்மா உள்ளே வந்து

தருண் அந்த வாழை பழத்த காணும் பல்லவெளக்கிட்டு வா தேடி பாப்போம்.

ஆச்சயர்த்தோடு பார்த்தேன் பல் சீக்கிரமாக விளக்கிவிட்டு தேடினோம் வீட்டில் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை கடைசியாக டிவி வைத்திருந்த இரும்பு மேசையின் கீழே பார்தோம். பாதி கடித்து குதறிய வாழைப்பழம் கிடந்தது, கூடவே காய்ந்த அரை எழுமிச்சை பழமும் ,சில முருங்கக்காய் எச்சங்களும், வாழை காய் வருவல் துண்டுகளும் கிடைத்தது.எலி வீட்டினுள் வந்து போவது உறுதியானது.

2

காவேரி நகரில் தருண் குடி வந்த கொஞ்ச நாள் கழித்து தான் வெளிவராண்டாவின் கடைசியில் சுற்று சுவருக்கும் வீட்டிற்கும் இடையில் உள்ள சந்தில் மழைநீர் சேகரிப்பு குழாய் பாதியில் உடைந்ததால் மழைநீர் சேகரிப்பு பள்ளத்தில் நீர் தேங்காத்தால் அங்கே குழி தோண்டி குடியிருந்தது எலி. உடைந்த பிளாஸ்டிக் நான்கு இன்ச் குழாய் வழியாக போய் பள்ளம் தோண்டிய மண் வெளியே தெரியமல் இருந்ததே அது வந்து போவதன் சுவடு தெரியாமல் இந்தது.

தருண் குடிவந்தது முதல் அவர்கள் வீட்டினுள் நுழைய முயற்சி செய்யும் தருனம் வரவில்லை, இரவில் மட்டுமே வெளியே வரும் குழ்நிலை , அப்படியே வீட்டின் பின்புறமாக வெளியே போய்விட்டும் சுற்று சுவருக்கு வெளிப்புறமாக இருந்த மரம் அறுத்து விற்கும் டிம்பர் டிப்போ வழியாகவும் சென்று எனக்குத் தேவையான உணவு உண்டு விட்டு மழைநீர் சேகரிப்பின் பள்ளத்தில் உள்ள எனது குழிக்கு வந்து பகல் முழுவதும் தூங்கி விடுவேன். வெளியே போவதும் வருவதும் யாருக்கும் தெரியாது.

நான் ஒருவன் மட்டும் அங்கே தங்கியதால் எவ்வித வில்லங்கமும் உயிரபாயமும் இன்றி வாழ்ந்து வந்தேன். துணையாக வருவதாக சொன்ன நண்பிகளையும் நண்பர்களையும் வர வேண்டாம் என கட்டாயமாக சொல்லி வைத்திருந்ததோடு அதை கடுமையாக கடைபிடித்தேன். முடிந்த அளவு ஒவ்வொரு தடவையும் பாதையை மாற்றி மாற்றி ஒரே பாதையில் வீட்டுக்கு வருவதில்லை . மரக்கடைக்கருகில் இருக்கும் டீ கடையுடன் கூடிய காலை மதிய உணவகத்தில் இரவு மிஞ்சிப் போனதையும், விற்காத கெட்டுப் போன வடைகளை குப்பையில் போடுவதையும் பல வீடுகளில் கிடைக்கும் எனக்கான உணவுகளையும் சாப்பிட்டு குறைந்தபட்ச எல்லலைக்குள்ளாக எனது நடவடிக்கைகளை வைத்து காலத்தை ஓட்டி வந்தேன். தருணின் வீட்டு வராண்டா வரை பூனைகள் நடமாட்டமும் , வெளியே தெருநாய்களின் நடமாட்டமும் அதிகமிருந்தாலும் மிகக் கவனமாக உயிரை பாதுகாத்து வாழ்வது அதிசயமே.

ஒரு தடவை தருணின் வீட்டில் வடை சுடும் வாசனை ஜன்னல் வழியாக நான் வாழும் சந்து வழியாக பரவி தூங்கிய என் மூக்கை துளைத்து தூக்கத்திலிருந்து எழவைத்து நாக்கில் உமிழ்நீர் சுரக்க வடை சாப்பிடும் ஆசையை தூண்டியது பகலில் வெளிவராத நான் எனது ஆசையின் தூண்டுதலால் விதியை தளர்த்தி பகலிலேயே அவர்கள் வீட்டில் நுழைய முயற்சித்தேன் அவ்வேளையில் வீட்டில் உள்ளவர்களின் நடமாட்டத்தால் நுழைய முடியவே இல்லை. அவ்வாசை நிராசையானது குழிக்கு திரும்பி மனச்சங்கடத்துடன் சற்று நேரம் யோசித்தபடி தூங்கிவிட்டேன்.

இரவிலும் இரண்டு மூன்று முறை நுழைய முயன்று தோற்றேன். வாசல்படியிலும் வீட்டை சற்றிலும் உள்ளே போக வழியே இல்லை நான் நுழையும் அளவுக்கு சிறிய ஓட்டைகள் எங்குமில்லை. வீட்டினுள் நுழைய வாய்ப்புகளை தேடி தினமும் இரவில் உலா போகும். முன்பு நோட்டமிட்டு விட்டே செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன்.உள்ளே நுழைய வாய்ப்பு தானாக அமையாது நாம் தான் அமைத்துக் கொள்ள வேண்டுமென்பதை உறுதி செய்து இயல்பை விட வெகு வேகமாக ஓடி வந்து நுழைவாயிலின் இரண்டாவது படியிலிருந்து வேகமாக தாவி ஜன்னலை அடைய முயற்சித்தேன் வெற்றி கிடைத்தது. எனக்கு குதுகலத்தை வரவழைத்தது. சாதித்து விட்டேன் என மகிழ்ச்சியில் துள்ளினேன் . நள்ளிரவில அனைவரும் தூங்கியதால் சப்தம் அதிகம் கேட்காது. இனி அடிக்கடி உள்ளே நுழைய முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. முதல் முறையாக உள்ளே நுழைந்தவன் அதிகம் சுற்றாமல் விசேஷ நுகர்வால் முகர்ந்து தேடிப்பார்த்தில் சமயலறையில் பாத்திரம் கழுவும் ஸிங்க்க்கு கீழே வைத்துள்ள குப்பை கூடையில் சில உணவுகளை ருசித்து சாப்பிட்டு வந்துவிட்டேன். இரண்டாவது முறை போகும்போதுதான் மர அலமாரிக்கு பக்கத்திலிருந்த மேஜையின் மேல் வைத்திருந்த ஆப்பிளின் வாசனையால் ஈர்க்கப்பட்டு அருகிலிருந்த நாற்காலியில் தாவி ஏறி ஆப்பிளை கடித்து பார்த்தேன் எதிர்பார்த்த சுவையில்லாததால் ஒரே கடியில் முகம் சுளித்து கீழே இறங்கி குப்பை கூடையிலிருந்த முருங்கை காய் சக்கையையும் பிழிந்து எறியப்பட்ட அரை எழுமிச்சை பழ தோலையும் எடுத்து ஹாலின் நெடுக்கே சப்தமில்லாமல் ஓடி தூங்கிய தருணின் அம்மாவை தொந்தரவு செய்யாமல் டிவி வைத்திருந்த இரும்பு மேஜைக்கு கீழே மறைவில் வைத்து சாப்பிட்டு மீதத்தை அப்படியே போட்டுவிட்டு வெளியேறி டீ கடைக்கு சென்று குப்பையில் வீசப்பட்டதை வயிரார சாப்பிட்டு அதே மயக்கத்தில் வீடு வந்து தூங்கினேன்.

ஓரிடத்திற்கு சென்று பிடித்து விட்டால் , சவால் நிறைந்த இடமென்றாலும் வலிந்து செல்வது வழக்கம் அதுவே என் ரத்தத்தில்

ஊறியது எனலாம். இரண்டாவது நாளும் தருணின் வீட்டிற்குள் நுழைந்தேன் மரமேஜையில் வைத்திருந்த வாழைப்பழத்தை இழுத்துச் சென்று இரும்பு மேஜையின் கீழே பாதியை சாப்பிட்டு விட்டு வெளியே வந்து உலாவி ஆங்காங்கே பல இடங்களில் உணவுக்காக வெளியே வந்த நண்பர்களை சந்தித்தேன். என் வீட்டுக்கு வருவதாக சொன்னவர்களை தவிர்த்து தனித்தே வாழும் குழிக்கு திரும்பினேன். தருணின் வீட்டிற்குள் நான் வந்து போனதை அறிந்து கொண்டார்கள் என்பதை நானறியாமல் போனது துரதிர்ஷ்டமே

3

வீட்டில் ஒரே நினைவாக எலிவந்து போவதை விரும்பவில்லை அம்மாவும் மனைவியும் எப்படி உள்ளே வருகிறது என ஆராயச்சியில் ஈடுபட்டு அவர்களால் கண்டுபிடிக்க இயலாததால் என்னை இழுத்தனர்

இந்த எலி எந்த பக்கமா வருதுன்னு தெரியல போவுதுன்னும் தெரியல இரும்பு மேகைக்கு கீழே போன வாழைப்பழத்தால நிச்சயமா எலி வந்து போறது என்றாள் மனைவி.

ஆமா நிச்சயமா வந்து போவுது எப்படின்னு தான் தெரியல என்றார் அம்மா.

தருண் கொஞ்சம் வாயேன் அது எப்படி உள்ளே வருதுன்னு பாரேன்.

நாடி சுத்தி செய்து முடியும் தருவாயில் இருந்ததால் இதோ வர்றேன்மா என்று நானும் இணைந்து எலி வரும் வழியை கண்டுபிடிக்க முனைந்தோம். பல விதமான யூகங்கள், கருத்துக்களுக்கு பிறகு ஒரு வழியாக ஜன்னலின் வழியாக மட்டுமே வர முடியும் என ஒரு மனதாக முடிவுக்கும் வந்தோம். அதை மட்டுமே இரவிலும் திறந்து வைத்திருந்தோம் வேறு எங்கும் ஓட்டைகளோ சந்துகளோ இல்லை எங்களுக்கு தெரிந்து விட்டதை எலி அறிந்திருக்குமா என்ற என் கேள்விக்கு பதில் தெரியவில்லை.

அவர்களுக்கு நான் வந்து போவது தெரிந்து விட்டதை அறியாதவன். வழக்கம் போல இரவில் உள்ளே நுழைந்து நுண்நகர்வால் துழாவியதில் எதுவும் இல்லை திட்டமிட்டு குப்பை கூடை உட்பட அனைத்தையும் சுத்தம் செய்தும் மேஜையில் எதுவும் வைக்கப்படவில்லை என அறிந்ததும் உஷாரானேன் மேஜையிலிருந்து இறங்கப் போகும் சமயம் தருணின் அம்மா தண்ணீர் குடிக்கவோ கழிவறைக்கு செல்லவோ எழுந்ததால் உடனடியாக அருகே இருந்த மர அலமாரியில் தஞ்சம் புகுந்தேன் அங்கு அடைசலாகவும் சொகுசாகவும் தங்க ஏதுவாக நிறைய துணிகளும் பைகளும் நிறைந்திருந்ததால் ஒளிவதற்காக வந்த படபடப்பு குறைந்ததும் அப்படிய தூங்கினேன். நீண்ட நேரமாகியிருக்க வேண்டும் ஏதோ சப்தமாக பேசிக்க கொள்ளுவது என் தூக்கத்தை கலைத்தது காதுகள் மூலம் கூர்ந்து கவனித்தேன். தருணும் அவன் அம்மாவும் தங்களுக்குள் வாதம் செய்தனர்.

ராத்திரி சப்தம் கேட்டது ஏதோ இருட்டுல ஒடினது போலவும் இருந்திச்சி நல்லா தேடி பாரு இங்க எங்காவது இருக்க போவுது.

இருக்காதும்மா நாமதான் நேத்தே தேடினோமே இல்லையே இப்ப எப்படி இருக்கும்.

கோபத்தோடு தேடிப்பாரு ஒடினத பார்த்தேன் என்றார்.

சரி என்ற சலிப்போடு மீண்டும் சமயலறையிலிருந்து ஆரம்பித்து எல்லா இடங்களிலும் தேடினோம் எலி அகப்படவில்லை மர அலமாரியிடம் வந்து கொஞ்சம் திறந்திருந்த கதவை முழுவதுமாக திறந்து அதிலிருந்த பைகளையும் பொருட்களையும் எடுக்க முனைந்தேன்.

மர அலமாரியிடம் அவர்கள் நெருங்கி விட்டதை உணர்ந்ததும் உடலில் படபடப்பும் நடுக்கமும் வந்து சேர்ந்தது ஓடித்தப்பிக்க தயாராக உடலையும் மனதையும் திடப்படுத்த மூச்சை ஒழுங்கு செய்து மரக்கதவை திறந்து பைகளை வெளியே எடுத்தவுடன் கிடைத்த இடைவெளியில் ஒரே மூச்சில் எம்பிகுதித்து வாசல்வழியாக ஓடித் தப்பித்தேன்.

நான் தான் அப்பவே சொன்னேனே ராத்திரி ஏதோ ஒடிச்சின்னு என்றார் அம்மா.

விடக் கூடாதும்மா இன்னிக்கே எலிப்பொறிய வச்சிட வேண்டியதுதான் என்றான் தருண்.

அவசரக் காலங்களில் எடுக்கும் நடவடிக்கை போல எலியை பிடிக்க திட்டங்கள் தீட்டப்பட்டன எலி கேக் வேண்டாம் அது குழியினுள் போய் செத்துவிட்டால் கண்டுபிடிக்க தாமதமாகவும் நாற்றம் பலநாட்கள் வரை போகாது, பல பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் நிராகரித்து வடை, தேங்காய் சுட்டு கம்பி சுருள் வைத்த எலிப்பொறி தான் சிறந்தது அதிலொன்று வீட்டிலிருந்தது. தருணின் அம்மா ஒன்று போதாது என வாதிட்டு வீட்டு உரிமையாளரிடம் கேட்டு ஒன்றும், இரண்டு பொறிகளை சமயலறையில் ஒன்றும் வீட்டு நுழைவாயிலுக்கு வெளியே இடது புறம் ஜன்னலுக்கு கீழே ஒன்றும் வைப்பதென முடிவு செய்து தேங்காய் சுட்டு எலிப்பொறியில் வைத்து குறிப்பிட்ட இடங்களில் வைத்து எப்படியும் விழுந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் ஜன்னலையும் திறந்து வைத்து தூங்கினர்.

ருசி கண்டவர்கள் அதே சுவைக்கு தேடியலைவது போல நானும் அருகே இருப்பதாலும் சாப்பிட ஏதாவது கண்டிப்பாக கிடைக்குமென்பதாலும் தருணின் வீட்டிற்கே போவதென முடிவு செய்து துணிந்து வந்தேன். எங்கள் இனத்திற்கே மிகவும் பிடித்தமானது மசால்வடையும், சுட்ட தேங்காய் கீற்றும் அதன் வாசனை சுவை சொல்லிலடங்காதவை அதற்காகவே உயிரை விட்டவர்கள் கோடிகோடி பேர்கள். இரவில் உணவு தேடியலையும் போது அவர்கள் உடல்களை குப்பைத் தொட்டியருகே பார்த்திருந்த அனுபவம் அதிகம்.வீட்டையவதற்கு முன்பாகவே சுட்ட தேங்காய் வாசனையை நூகர்ந்த போது ஜன்னலுக்கு அருகே கம்பியில் குத்தப்பட்டு இருந்ததை கண்டு சுதாரித்து எப்பொழுதும் வீட்டிற்குள் போகும் வழியாக உள்ளே நுழைந்து சுட்டதேங்காய் வாசனை சமயலறையிலிருந்து வருவதை மோப்பத்தால் உணர்ந்து நெருங்கி மனம் நொந்தேன் இங்கும் கம்பியில் குத்தப்பட்ட தேங்காய் எனக்கு புரிந்து விட்டது வந்த வழியே வெளியேறி வேறு வழியில் உணவை தேடி அலைந்தேன் உயிர்பயம் இன்றி. முகத்தில் மகிழ்ச்சி நிறைந்த புன்கையுடன் நிலவொளியில் தனித்து தைரியமாக உலாவி காலையில் அவர்கள் பொறியை வந்து பார்க்கும் போது ஏற்படும் முகமாற்றத்தை நினைத்து எனக்குள் சிரித்துக் கொண்டு விடியற்காலையில் பொந்துக்கு திரும்பி நிம்மதியாக தூங்கினேன்.

காலையில் எழுந்தவர்கள் பொறியில் எலி விழாததால் ஆச்சர்யம் அடைந்தனர்.

அம்மா அதுவும் நம்மை போல வாழனும்ல உயிர் பிழைக்க கத்துகிச்சி இனி அது இங்க வராது ஜன்னல எப்பொழுதும் மூடி வச்சிருங்க என்றான் தருண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *