ஒரு கடவுள் கிளாப் போர்டு அடிக்கிறார்..!
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 8, 2025
பார்வையிட்டோர்: 1,664
கிளாப் போர்டு அடிப்பது என்பது ஒரு பிரம்ம பிரயத்தனம் போலத்தான், ஒரு படத்துக்குக் கிளாப்போர்டு அடிப்பது ஜுனியர் டைரக்டர் வேலைதான் என்றாலும், அதென்னமோ தெரியவில்லை?! கடவுள் ஒவ்வொரு மனிதனின் கதையின் ஆரம்பத்திலும் தானே கிளாப்போர்டு அடிப்பவராகவே ஆஜராகிறார்.
கதை, வசனம், டைரக்ஷன், ஆர்டிஷ்ட் அத்தனையும் அவரே முடிவு செய்தாலும், படைக்கப்படும் கதையின் ஜீவன் கெட்டுப் போகாமலிருக்க அவரே அசிஸ்டெண்ட்டுகள் வசம் விடாமல் தானே கிளாப் அடித்து எல்லாருடைய படப்பிடிப்புகளையும் ஆரம்பித்து வைக்கிறார்.
‘சீன் ஒண்ணு!’., ‘ஷாட் ஒண்ணு!’, ‘டேக் ஒண்ணு!’ ‘டே!’ என்று எழுதியே கிளாப் போர்டை தயார் செய்கிறார். அவர் ஆசை முதல் டேக்கிலேயே அது ஓகே ஆக வேண்டுமென்றே அவர் ஆசைப் படுகிறார்.
அபிநயிப்பவனின் அகங்காரமோ அஜாக்கிரதையோ சில காட்சிகள் பல டேக்குகள் வாங்குகின்றன. வெறுத்துப் போய் கடவுளே சில சமயங்களில் பேக்கப் சொல்லிவிடுவதும் உண்டு.
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார ஊரில்தான் அந்தக் கதை படமாக்கப்பட்டது. மதியம் வெயில் மதுரை திருச்சி போலெல்லாம் இல்லாமல் சகிக்கக் கூடிய சந்தன வெயில்தான்! இந்த கற்பனைக்குப் கவிஞர்பழநி பாரதிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்!. அழகிய லைலா.. இவள் அவளது ஸ்டைலா? சந்தன வெயிலா?! என்பார். அங்கிருந்து உருவியதுதான் ‘சந்தன வெயில்’ வார்த்தை.
மதியம் சூடு தணிக்க தன் ஓய்வுக்கால பென்சனின் சொற்பத் தொகையில் பேரன் பேத்திகளுக்கு அன்றைக்குக் கடைகளில் கிடைத்த பெப்ஸி ஐஸ் பாக்கெட் வாங்கிக் கொடுப்பது அவர் வழக்கம். பெப்சி ஐஸ் ஒரு நீள்விரல் தடிமபாலிதின் ஐஸ் பாக்கெட்..! அதில் பல வண்ணங்களும், பல் சுவைகளும் உண்டு!. கோக்.. பைனாப்பிள், மேங்கோ ரோஸ்மில்க் எல்லாம் ஒற்றை ரூபாய் பெப்சியில் உதடு மட்டுமல்ல உள்ளமும் நனைக்கும் ஐஸ் பாக்கெட் அது!.
ஊக்கால் அதன் நுனி குத்தி., குத்திய ஓட்டை வழியே உறிஞ்சி பெப்சி குடிக்கையில் அந்த வயதானவர் மற்றவர் குளிர்வதில் தான் குளிர்ந்து நெகிழ்ந்து போவார் கடவுளாக!. ஆவரைப்பொருத்து டேக் ஓகே!
அபிநயிக்க ஆசைப்பட்டு வந்தவர்கள் எல்லோரும் தங்கள் இஷ்டப்படிதான் நடித்தார்களே ஒழிய, ஊர் எதிர்பார்ப்பையோ டைரக்டர் உள்ள எதிர்பார்ப்பையோ உணரவில்லை ஒருவரும்!.
கிளாப்படித்துத் தொடங்கியவர் கடவுள் என்று கருதாமல், அசிஸ்டெண்ட் என்று அனுமானிப்பதால்… டேக்குகள் கூடுகின்றன. படம் பிளாப்பாகிறது.
எந்த சமயத்தும் கிளாப்படிக்கும் கடவுள் படம் பிளாப்பாக வேண்டும் என்று எண்ணி எந்தக் கதைக்கும் கிளாப்படித்து ஆரம்பித்து வைப்பதில்லை!
ஓரே டேக்கில் சூப்பர் ஹிட்டாக வேண்டுமென்றே… ஆண்டவன் ‘அசிடெண்ட் டைரக்டராக’ கிளாப்[படிக்கிறார்.
உறிஞ்சிக் குடித்த பெப்சி தந்த தணுப்பில் ஒரு துளிகூட கிளாப் அடித்தவருக்கோ… வாங்கித்தந்த முதியவருக்கோ சேர்வதில்லை! வயது முதிர்வில் பெப்சி கொடுத்த முடியவருக்குக்கூட ஆயிரம் கனவுகள் இருந்திருக்கும் என்று ஏனோ அபிநயிப்பவர்கள் அனுமானிக்கத் தவறிவிட்டார்கள்!
படம், சிலருக்குச் சந்தனமாய் மணந்தது! சிலருக்கு வெயிலாய்ச் சுட்டது!