ஒன்றே ஒன்று கேட்கணும்! – ஒரு பக்க கதை

0
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,841 
 
 

ஒரே பரபரப்பாக இருந்தது வெங்கடாச்சலம் இல்லம்.

“ஏங்க சாயங்காலத்துக்கு டிபன் சொல்லிட்டீங்களா? ராகுகாலத்துக்கு முன்னாடியே வந்துருவாங்களா?’

பாக்கியம் பூக்கட்டிக் கொண்டே தங்கள் பொண்ணை பெண் பார்க்க வரும் மகிழ்ச்சியில் விசாரித்துக் கொண்டிருந்தார்.

“என்ன பாக்கியம், ஏற்பாடெல்லாம் ஒரே தடபுடலா இருக்கே? பெண் பார்க்க வரும் போதே இவ்ளோ கவனிப்பா?’ என்று பக்கத்து வீட்டு பெண்மணி கேட்டாள்.

“ம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சும்மாவா, மூணு அடுக்கு மாடி வீடு இருக்கு. கார் இருக்கு, காம்ப்ளக்ஸ் இருக்கு, கை நிறைய சம்பாதிக்கிறார்… அவங்கள நல்லா கவனிக்க வேண்டாமா?’ என்று பெருமை பேசினாள் பாக்கியம்.

மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்தார்கள்.

பெண்மைக்குரிய அனைத்து அழகும் அமைய பைரவி சபைக்கு வந்து நின்றாள். மாப்பிள்ளையையும் பெண்ணையும் தனியாக பேச அனுமதித்தார்கள்.

அவன் பைரவியிடம் நிறைய கேள்விகள் கேட்டான்.

அனைத்திலும் பணச்செருக்கு தெரிந்தது. பதிலுக்கு அவள் ஒரே ஒரு கேள்விதான் கேட்டாள்.

“எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது. நாம் இருவரும் எச்.ஐ.வி. டெஸ்ட் செய்து கொண்டு விருப்பத்தை வீட்டில் சொல்வோமா?’ என்றாள். அவன் திடுக்கிட்டான்.

வீட்டிற்குச் சென்றவன் இரண்டு நாட்களில் “பெண்ணைப் பிடிக்கவில்லை’ என்றான். இதைக்கேட்ட பாக்கியம் பைரவியிடம் “தனியாக என்னடி பேசி தொலச்ச? உன் வாய்க் கொழுப்புனால வீணாப் போகப் போறடி’ என்று திட்டித் தீர்த்தாள்.

சட்டென்று பைரவி முன்வந்து, “உங்க மாப்பிள்ளைகிட்ட வீடு இருக்கு, கார் இருக்கு, காம்ப்ளக்ஸ் இருக்கு, ஆனா ஒழுக்கம்?’

– மு. சிந்து தர்ஷினி (ஜூலை 2014)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *