ஐயா




(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஐயா என் பெரிய தாத்தா. என் பாட்டனாருக்குத் தமையனார்.
ஐயாத்துரை, அய்யாத்துரை, ஐயா – ஊருக்கே ஐயா- நாங்களும் உள்படத்தான்.
ஒரு தடவை அவரைப் பெரிய தாத்தா என்று முறை வைத்துக் கூப்பிட்டு நான், அவரிடம் வாங்கிய அறையை நினைக்கும் போதெல்லாம் செவி இன்னும் ‘ரொய்ஞ்ஞ்…’
என் பாட்டனார் தமிழ்ப் பண்டிதர்.

குடும்பத்துக்கே சம்பாதிக்கும் பேர்வழி. அதாவது உத்தியோகம் பண்ணி-அவர் ஒருவர்தான்.
குடும்பம் பெரிது – வருவோர் போவோரும் அதிகம். எங்கள் வீடு ஒரு ‘ஜங்ஷன்.’
பதினைந்து வயதில் என் பாட்டனார் ஒரு கனவு கண்டாராம்
நாங்களே கனவு காண்கிற கூட்டம்!
பிள்ளையார் அவர் வாயில் ஒரு கற்கண்டைப் போட்ட மாதிரி. மறுநாள் காலையிவிருந்தே அவர் பாட்டாய்ப் பொழிகிறார்.
இந்தப் பாடல்கள் அனேகமாய்க் குலதெய்வத்தின் பேரில் தோத்திரங்கள்.
முழுக்க முழுக்க தோத்திரங்களுமல்ல;
கெஞ்சல்கள்
கொஞ்சல்கள்
மிஞ்சல்கள்
மிதமிஞ்சல்கள்
அதட்டல்கள்
அலுப்புகள்
மீண்டும் துதிகள், உருகல்கள்.
குடும்பத்தின் அவ்வப்போதைய தேய்வு, ஓய்வு, ஓய்ச்சல், ஒடுங்கல், ஓங்கல் நிலைமைக்கேற்றபடி
எல்லாவற்றிற்கும் காரணமும் அவள்தான். விமோசனமும் அவள்தானே!
எளிய சொற்களில் சிக்கலற்ற சிந்தனை. பட்டுக் கயிறின் உரம். முகத்தில் எப்போ வெடிக்குமோ எனும் ஒரு
வெகுளி.
ஆனால் அருள்வாக்கு.
அவர் சாகும்வரை புனைந்த கவிதைகள் அனைத்தையும், மணிமணியான தன் பொடியெழுத்தில் கறுப்பு மசியில் ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்தார்.
பின் சந்ததிகள் அந்தப் புத்தகத்தைப் பூஜையில் வைத்துக் காப்பாற்றி வந்தன; புத்தகமும் தலைமுறைகளை – அவைகளின் நம்பிக்கை, பக்தி, சிரத்தைக்கேற்ப காப்பாற்றி வந்தது.
ஆனால், போகப் போகத் தலைமுறைகளைத்தான் தெரியுமே!
ஆனால், முழுக்கவும் தலைமுறைகளைக் குற்றம் சொல்வ தற்கில்லை.
மசி மங்கி, பக்கங்கள் பழுப்பேறி மஞ்சள் பூத்து, பாளம் பாளமாய் உடைந்து- தையல் கழன்று.
ஒரு நாள் கிணற்றடியில் பேராண்டி ஒரு சின்னக் காகிதத் துண்டில் பற்பொடியை டப்பியிலிருந்து தட்டிக் கொண்டிருந்தான்.
நான் குளித்துக் கொண்டிருந்தேன்.
கறுப்புமசியில் எழுத்துக்கள் முத்து வடிப்பது நான் நின்றவிடத்திலிருந்தே தெரிந்தது. பயல் கையிலிருந்து பிடுங்கினேன்.
‘அவள் என்ன தாராமல் இருப்பாளோ…?
அவள் என்ன சத்தியம் மறந்தவளா?’
இரண்டு வரிகள்தாம்.
நெஞ்சு ‘சுறீல்.’
எனக்கு அழுகை வந்துவிட்டது.
அத்தனை கஷ்டத்திலும் அவ்வளவு நம்பிக்கை.
நம்பிக்கை என்று சொன்னால்கூடப் போதாது.
‘உனக்காச்சு… எனக்காச்சு…’ என்ற உடும்புப்பிடி.
என் தகப்பனார் புழுங்குவார். பண்டங்கள் மலிவாய்ச் செறிந்த அந்த நாட்களிலும் ராவிலோ – பகலிலும் கூட மாதம் ஒன்றிரண்டு தினங்கள் வலுப்பட்டினிகள் தவறாதாம். ‘அம்பாள் கண் திறக்கிறோளோ இல்லையோ; அன்றாடம் அரிசிக் கூடைக்காரி யோகம்பாள் படியளந்தால்தான் உண்டு. அவளை விட்டால் கதியில்லை. பாவம் பார்த்து, அவள்தான் சற்று முன்னே பின்னே வாங்கிக் கொள்வாள். உலைப்பாட்டுக் குக் காய்ந்து கொண்டிருக்கும். அவளை எதிர்பார்த்துக் கொண்டு மன்னி கூடத்துக்கும் வாசலுக்குமாய் அலைவாள். வந்தால் வயிற்றில் பாலை வார்த்தாள். வராவிடில், அந்த உலை எங்கள் வயிற்றுக்கு மாறிவிடும்! நாங்கள் குழந்தைகள், மூலைக்கொருவர் உண்டு, பசிக்களையில் உறங்கிவிடுவோம். பெரியவர்கள் திண்ணையில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு பழங்கணக்குப் பேசிக் கொண்டிருப் பார்கள், வயிற்றுக்கு வழியில்லை. என்ன சவுடால் வேண்டி யிருக்கோ?’
என் பாட்டனார் அம்புபோல், உயரமாய், நெட்டையாய் நெருப்புச் சிவப்பாயிருப்பார்-எப்பவும் சுத்தமாய் ‘டீக்’காய் உடுத்தி. தமிழ்ப் பண்டிதராயினும் அவருக்கு மாப்பிள்ளை வாத்தியார் என்று பெயர்! வாரத்தில் ஒன்றிரண்டு நாள் இரவு. வீடு திரும்ப மாட்டார். மன்னி மூஞ்சியைத் தொங்கப் போட் டுக் கொண்டிருப்பாள். மன்னி நல்ல மனுஷி. நல்ல கறுப்பு.
ஆனால், அது வேறு கதை.
ஐயா சந்தனக் குழம்பு நிறம்.
(அவாள் கூட்டமே வெள்ளைக்காரக் கூட்டம்னா… அகம்பாவம் பிடிச்ச கூட்டம், கோவிலே அவாள் குடும்ப சொத்து மாதிரி. அம்மன் சன்னதி யென்ன அவாளுக்குத் தான் குத்தகையா…? கோவில் குருக்கள் முதற்கொண்டு அவாளுக்குத்தான் கும்மியடிக்கிறார். தீபாராதனைத் தட்டு முதல் மரியாதை அவாளுக்குத்தான். மண்டகப்படிகாரர் கூட இரண்டாம்படி. அகம்பாவம் பிடிச்ச கூட்டம்!”)
முகத்தில் எப்பவும் மூணு மாதத்தாடி. சடைத்தலை. அழுக்கு.
அழ்-ழ்-ழுக்-கு- பொடிப் பழக்கம் வேறெ. ஐயாவுக்குக் குளியல் என்றாலே ‘அலெர்ஜி,’
அவருக்கு இருபது வயதிலேயே, மனைவி தலைப் பிரசவத் தில் இறந்து விட்டாள். குழந்தையும் தக்கவில்லை. யார் யாரோ என்னென்னவோ சொல்லிப் பார்த்தும், அவர் மறு மணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் அதனால் கடைசி வரை அவர் பெயர் கறைபடவில்லை.
என் பாட்டிதான் எல்லாருக்கும் மன்னி.
மத்தியான வேளையில், சமையலறையில் பானைகள் குடையல் சத்தம். எலியில்லை. இது தனியாகத் தெரியும்.
“யாரது..
-மன்னி வரும் காலடி கேட்டு-வெல்லப் பானையுள் விட்ட கையை எடுக்க நேரமிருக்காது. பானையோடு ஐயா விழுந்தடித்துக் கொண்டு கொல்லைப்புறமாய் ஓடுவார். நாங் களும் பின்னாலேயே ஓடுவோம். எங்கள் பாடு ‘மோக்ளா,’
“ஐயா…! ஐயா…! வியாழக்கிழமை உங்கள் அம்மா திவசம்!”-மன்னி கத்துவாள்; ‘வேறு வெல்லம் இல்லை!”
“பரவாயில்லை. என் அம்மாவுக்குத் தித்திப்புப் பிடிக் காது!” – ஒரு கையில் பானை. மறுகையை ஆட்டிக்கொண்டே ஐயா எதிர்க்குரல் கொடுத்துக் கொண்டே ஓடுவார்.
மாலை திரும்பியதும் எங்களுக்குத் திட்டு உதை. வயிற்றெரிச்சலில் கத்துவாள், அழுவாள்.
ஐயா பதிலே பேசமாட்டார். திருதிருவென்று விழித்துக் காண்டு, கூடத்தில் குந்திட்டு உட்கார்ந்த வண்ணம் கட் டாந்தரையில் சுட்டு விரலால் என்னவோ எழுதிக் கொண்டிருப்பார். எப்பவும் அவருடைய பச்சாத்தாபப் ‘போஸ்’ அதுதான்!
திவசத்துக்கு முதல் நாள், வயிற்றெரிச்சலில் திட்டிக் கொண்டே மன்னி வெல்லப்பானையைத் திறந்தாள்.
‘ஐயோ, இதென்னடி மாயம் ? இல்லி பில்லி சூன்யமா? ஐயா…! ஐயா…!”
முன்னைவிட வெல்லம் கூடுதலாகவே யிருக்கும். நல்ல வெள்ளை உருண்டை வெல்லம். ஐயா பதிலே பேசமாட்டார். கூடத்தில் குந்திட்டு உட்கார்ந்த வண்ணம் கட்டாந் தரையில் சுட்டு விரலால் எழுதிக் கொண்டிருப்பார். முகத்தில் ஒரு புன்னகையின் சோடைகூட இருக்காது. அதே திருட்டுமுழி
ஊரான் லீட்டு மரத்திலேறி, இளநீரைப் பறித்துக் குடிப் பார். எங்களுக்கும் கொடுப்பார். தாடி நுனியில் இளநீர் சொட்டும். எப்பவும் ஓர் அவசரம். சொந்தக்காரன் பார்த்து ஆட்சேபித்தால், அவன் செவி கூசி – செவி பொத்திக் கொள் ளும் வகையில் வாயில் வந்தபடி வைவார்.
“என்ன தைரியம் உனக்கு? என்னவோ அடிக்கிறாப் போல் வரையே…எப்படிக் காலம் கெட்டுப் போச்சு பார்த் தியா? இந்தத் தென்னை மரத்துக்கு எப்படித் தண்ணீர் பாய்ச்சி, எருப்போட்டு நீ காப்பாத்தினேன்னு எனக்குத் தெரியாதா…? என்னடா நீங்கள் எல்லாம் அப்பன் சேர்த்து வெச்சுட்டுப் போனதை அழிக்கிறவங்க தானேடா? உன் அப்பன் இருந்தால் நான் மரமே ஏற வேண்டாம். இளநீரைச் சீவி பொக்க மட்டும் கத்தியைப் பக்கத்திலேயே வெச்சுட்டு, கைகட்டி எட்ட நிப்பான். டேய் இந்த வாழைப் பட்டைக் கத்தியைப் பார்த்தாயா? உன் அப்பன் கொடுத்ததுதான். அவன் நினைவா வெச்சிண்டிருக்கேன். இதோடு பிடி மூணு தடவை கயண்டாச்சு, ஒரு தடவையேனும் ஆணீ அடிச்சுக் கொடுக்க உனக்குத் துப்பு உண்டா…?”
“ஏஞ்சாமி! என் சொத்துக்கு உனக்குக் கணக்குச் சொல்லியாகணுமா…? என்னவோ கேட்டால் என்னென் னவோ பேசிகிட்டுப் போறியே? தமிழ் அய்யா வீடுன்னு பார்க்கறேன், இல்லாட்டி…?”
“இல்லாட்டி என்னடா பண்ணுவே? போலீசுலே பிடிச்சுக் கொடுப்பையாக்கும்! அவனும் தைரியமாய் என்னை இழுத்துண்டு போவானாக்கும்… நீ உன் பெண்டு பிள்ளை யோட வாசல்லே நின்னு பார்த்து மகிழ்வாயாக்கும்! ஏய்” நான் உன் மாதிரி ஏத்தப் பாட்டுப் பாடி வேணா இறைச் இருக்க மாட்டேன். ஆனால், என்னிக்கேனும் பல் தேய்ச்சு இதே மரத்தடியில்-இது கன்னாய்ருந்தப்போ வாய் கொப் பளிச்சிருப்பேன். அதற்குமேல் ஜலமும் உன் இளநீரில் இல்லே,உப்புக் குரும்பை. இதுக்கு உனக்கு இவ்வளவு வாய் கிழியறது…!”
“ஐயா எருமை மாட்டுக்குப் பிரசவம் பார்ப்பார். கட்டி லுக்குக் கயிறு பின்னுவார். வெகு அழகாகக் கூடை முடை வார். குடிசைக்கு ஓலைக் கூறை வேய்வார். வாழைப்பட்டை யைச் சீவிச் சுரண்டி இலை தைப்பார். இடுப்பில் எப்பவும் வாழைப்பட்டைக் கத்தி செருகியிருக்கும். பளப்பள…”
கோலம் போட்டால் இன்று முழுக்கப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்! பொம்மனாட்டிகள் பார்த்துக்கொண் டிருப்பார்கள்.
எடுபிடி வேலைக்கு ஐயாவைக் கூப்பிடு! ஆனால், ஐயாவை நம்ப முடியாது. இஷ்டமில்லாவிட்டால். இடை யில் அப்படீயே விட்டுப் போய் விடுவார்.
படிப்பு வாசனையும் அறவே கிடையாது.
உருப்படியாக உதவாத ஐயா, ஆனால், யாருக்கும் வேண்டியவர், ஐயா, பண்ணுலதெல்லாம அக்ரமம்; ஆனால் பொருட்டாய் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
அள்ளிச் செருகி அடிகனத்த வேட்டியின் தலைப்பைப் பிடித்த வண்ணம் அடிமேல் அடி வைத்து ஐயா உள்ளே றுழைவார்.
“அவன் இருக்கானா…?’ ‘அவன்’ என் தாத்தா.
வேட்டித் தலைப்பைக் கீழே விட்டதும் பச்சைப் பசே லென்று அப்போதுதான் பறித்த கத்திரிக்காய் கூடத்தில் நாலா பக்கமும் சிதறி உருண்டோடும்.
“என்ன ஐயா அது? இன்னிக் காலையில்தான் பொடிக்கு காசில்லேன்னு மூக்கால் அழுதேள்…?”
ஐயா கத்திரிக்காயை நறுக்க ஆரம்பிச்சாச்சு. எப்பவும் இடுப்பில் செருகிய வாழைப்பட்டைக் கத்தி. துண்டிக்காமல் அடிவரை நாலாய்ப் பிளந்து-குட்டி குட்டியா- குண்டுகுண்டா குழந்தை கத்திரிக்காய். மருந்துக்கு ஒரு விரை? ஊஹும்.. வெண்ணெய், வெண்ணெய்.
“மன்னி, குழம்பு உருளியை அடுப்பில் போடு! ஊம்- சுருக்க! மஞ்சள் பொடியைக் கொஞ்சம் கூடவே போடு. காய் வேக ஆரம்பிச்சு நிறம் மாறினதும் அதுக்கே அதன் அடையாளம் தெரியாது. அப்புறம் உனக்கென்ன? வாசல் கதவை மட்டும் சத்தே ஒருக்களி…
அது உருளியல்ல. கிட்டத்தட்ட ஒரு சின்ன அண்டா. குடும்பமும் பெரிசு. கொஞ்சநேரத்தில் ‘குழம்பு’ காய்கை யிலேயே வாசனை கூடத்தைத் தூக்கும். பருப்பா, மண்ணாங் கட்டியா? எல்லாம் மன்னியின் கை ‘வாஸம்’ தான்! வேளை பொழுது இல்லாத எங்கள் ஓயாப் பசிதான். இழுத்துக் கட்டிப்பிடித்த இந்த வயிறுக்கு எப்போதேனும் விடுதலை வேண்டாமா? ஏதோ ஒரு நியாயம்’ தானே தன்னை இந்த சமயம் செலுத்திக் கொள்வதாகவே எங்களுக்குத் தோன்றிற்று.
வயிற்றின் நியாயம்.
எல்லாரும் ஓர் ‘இழு’ இழுப்போம், ஆமாம்! மன்னியும் மற்ற பெண்டுகளும் சேர்ந்துதான். அதுவும் எங்கள் அத்தைப் பாட்டி ஒரு காலை நீட்டியபடி வெறும் குழம்பைத் தேனாட்டம் உள்ளங்கையில் சொட்டிக் கொண்டு–நாக்கை ஒவ்வொரு தடவையும் ‘டொக்டொக்’ கென்று கொட்டிக் கொண்டு, உள் தொண்டைவரை இழுப்பது இன்னும் நினை விருக்கிறது.
“தேவாமிருதம்! தேவாமிருதம்!!”
பண்ணின அரைமணியில் அண்டா- இல்லை உருளி- இல்லை அண்டா சரி – என்னவோ காலி. எங்கள் பாடு
திணறிப் போகும். உண்ட சிரமம் சாப்பிட்ட இடத்திலேயே சாய்வோம், கைகாயும், அடே கையலம்புங்கடா… கை காய ஆகாதுடா!”
“சரிதான் போ மன்னி!”
ஆனால், ஐயாவின் பாம்பு வயிற்றில் அவ்வளவு உணவும் எங்கே ‘பாக்’ ஆகுமோ…? வயிறு குழியும்.
நாங்கள் ‘வாண்டுகள்’ எங்களுக்கு நினைவு தெரிந்த நாள் முதல். ஐயாவின் வாழ்க்கைக்கதியே இப்படித்தான். சொன்னதையே நாங்கள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாலும் ஐயாவின் ப்ரபாவம் எங்களுக்கு அலுக் காது. எங்களுக்குச் சரியாக எங்களோடு பேசிச் சிரித்து விளையாட வேறு யார்…?
பிறகு-
இது ஒரு நீண்ட பிறகு,
பிறகு ஐயாவுக்கு மெய்க்காவல் வேலை கிடைத்தது. அதாவது கோவில் வாட்ச்மேன். வேலை ஒன்றும் காலியா யில்லே… ஐயாவுக்கென்றே வேலை போட்டுக் கொடுத்தார் கள்! இதற்குத் தனிப்பட்ட காரணங்களை எப்படிக் கணக் கெடுப்பது…?
உள்ளூர் என்பது ஒன்றாயிருக்கலாம்.
எங்கள் குடும்பத்துக்கே கோவில் மேல் இருந்த அலாதி பக்தி, அதனால் தர்மகர்த்தாக்களுக்கு இந்தக் குடும்பத்தின் மேல் உள்ள தனி மதிப்பு. அம்பாளைப் பள்ளியறையில் கொண்டு போய்விட்டு, அங்கு தன் பாட்டுக்களைத் தன் இனிய வெண்கலக் குரலில் பாடி வீட்டுக்கு வந்தபின் தான் தாத்தா சாப்பிடுவார்.
இந்த மனுஷன் ஐயாத்துரை உதவாக்கரையா இத்தனை நாள் கழிச்சாச்சு. இப்போதிருந்தேனும் தானும் ஏதோ வேலைக்குப் போனோம்னு ஒரு திருப்தி அவருக்குக் கிடைக் கட்டுமே என்றும் இருக்கலாம்!
தவிர முக்யம், மனுஷனுக்குத் தைரியம் ஜாஸ்தி, ‘பயம்ன்னா வீசை என்ன விலை?’ என்பார்.
ஒருமுறை பக்கத்தூரில் ‘டென்ட்’ சினிமா பார்த்துவிட்டு நள்ளிரவில், கழனிக் காட்டில் குறுக்கு வழியில் திரும்பி வருகையில் ‘புஸ்… ஸ்….ஸ்…’
காலைச் சுற்றின பாம்பு கடிக்காமல் விடாது என்பார்கள்! ஆனால், காலைச் சுற்றினதைப் பிய்த்துத் தூர வீசியெறிந்த அந்தக் கண்ணிமைக்கும் நேரத்துக்கும் குறைந்த அந்த சுருக்கை, அந்தத் தீரத்தை…
நாங்கள் பெருமையடித்துக் கொள்ளவில்லை, எங்கள் ஐயா என்பதால் ஒண்ணுக்கு ஒன்பதாய்க் கப்ஸ்’ அளிக் கிறோம் என்பீர்கள். நடந்ததுக்கெல்லாம் ஐயாவுடன் சினிமா வுக்குப் போனவர்கள் அத்தனை பேரும் சாட்சி. தானே சினிமா போக ஐயாவிடம் துட்டு ஏது…? மடியை உதறினால்; அதில் முடிச்சிருந்தால், அது ஞாபக முடிச்சாயிருக்கும்!
எங்களைப் பொறுத்தவரை. ஐயாவின் சம்பளம் எப்படி யேனும் போகட்டும், வாஸ்தவத்தில் சம்பளத்துக்கும் ஐயா வுக்கும் சம்பந்தம் ரசீதில் கட்டை விரல் பதிவோடு சரி, தொகை ஆபீஸ் பையன் மூலம் நேரே மன்னியிடம் போய் விடும். ஐயாவின் இஷ்டமும் அதுதான். “நான் பணத்தை வெச்சுண்டு என்ன பண்ணப் போறேன்?”
மண்டகப்படி நைவேத்தியத்தை மடப் பள்ளியிலிருந்து சன்னிதானத்துக்குக் கொண்டுவந்து வைத்தால் ஐயாவுக்குச் சில்லறை உண்டு, “டேயப்பா, என் பொடிக்கு ஏராளம்!”
நைவேத்தியத்தில் வேறே வெட்டு.
தவிர இரண்டு வேளையும் வேளைக்கு இரண்டு பட்டை… இப்போ மாதிரி சூம்பி, உசிரே போய் இருக்காது. கடுகு, மிளகாய் தாளித்து, தயிரைத் தாராளமாய்த்தெளித்திருக்கும். இளக்கி, நாலுபேர் தாராளமாய்ச் சாப்பிடலாம்.எங்கள்பாடு வேட்டைதான். வீடே இப்போ முன்னைவிடப் பச்சைதான். நாளடைவில் நாங்களே மூஞ்சியைத் தூக்கிக் கொள்ளு மளவுக்கு எங்களுக்கு மிதப்பாகி விட்டது.
“என்ன ஐயா, தினமும் சுண்டல் தானா? வடையும் வெடக்குவெடக்குன்னு பாயசத்தை ஆள் மூலம் கூஜாவில் அனுப்பிச்சுடுங்கோளேன்! நீங்கள் கொண்டுவரத்துக்குள் ஆறிப் போயிடறது- ஐயா ஏதேனும் மாறுதலாய்க் கிடையாதா? பஞ்சாமிர்தம் -ஜிஞ்சாமிர்தம் – இல்லை? அதை நீங்கள் அங்கேயே பார்த்துடறேளா…?”
மாட்டார். எங்களுக்குத் தெரியாதா?
ஐயாவுக்கு ‘ட்யூட்டி’ மாலை ஆறு மணீக்குத் தொடங்கும்.
கிழங்குபோல் வெள்ளியில் பூணும் கொண்டையும் போட்டதடியை வேலைக்கு வந்ததும் வழங்கி விட்டு, இரவு பத்துக்குக் கோயில் கணக்காபீஸ் மூடும்போது பிடுங்கிக் கொண்டு விடுவார்கள். ஓரளவுக்கு ஒழுங்காய்க் குளித்து முகமும் மழித்து, முடியை வாரி, வெள்ளை ஆடை-ஈதெல் லாம் சேர்த்து முதன் முதலாய் நாங்கள் ஐயாவைப் பார்க்கை யில் எங்களுக்குத் திகைப்பாகி விட்டது. ஐயா ‘துரை’ தன் முழுப் பெயராகி விட்டார்!
சிப்பந்திகளும் போய், கோவில் காலியாகி விட்டபின், உள்பிராகாரக் கதவைப் பின் தாளிட்டுக் கொண்டு, வெறுங் கழியுடன் ஐயா உள்ளே ரோந்து சுற்றுவார்; அல்லது நடராஜா சன்னதியில் ஒரு தூண்டியில் துண்டை விரித்துப் போட்டுத் தூங்குவார். அல்லது கொட்டு கொட்டென விழித்துக் கொண்டிருப்பார். உயர வௌவாலும் துரிஞ்சலும் வேட்டையாடும். சிலைகளின் மேல் பெருச்சாளி ஓடும். நடராஜா அடுத்த திருவாதிரை வரை, கட்டிய பஞ்சக்கச்சம் நலுங்காமல், முகத்தில் அவருடைய ரகஸ்யம் புன்னகை தவழ, ஆனந்தமாய் நொண்டிக்கொண்டிருப்பார். எங்கேயோ ஜலம் சொட்டுச் சொட்டு – மஹிமையாயிருக்கலாம். சரியாக மூடாத குழாயாயுமிருக்கலாம். எல்லாம் அவரவர் எண்ணத் துக்கு ஏற்றபடி அவரவர் பூத்ததுக்குத் தக்கபடி.
ஒரு நாள் ஐயா. ட்பூட்டி முடிந்து வழக்க நேரத்துக்கு வீடு திரும்பவில்லை.
முதல் நாள் வெள்ளிக்கிழமை. கோவில் சிப்பந்திகள் எல்லாருக்குமே அன்று வேலை ‘கசர்’ வாங்கும் அரை டஜன் அபிஷேகங்களுக்குக் குறையாது. தனித்தளி அலங்காரம், நைவேத்தியம், ஸஹஸ்ரநாமம் ஓயும்போது நிசி தாண்டி விடும். கடைசி அலங்காரத்தைக் கலைக்கத் தென்பு இல்லாமல், நகைகளை மட்டும் கழற்றித் தர்மகர்த்தாவிடம் கொடுத்துவிட்டு. பெரிய சாவிக் கொத்தை ஐயாவிடம் வீசி யெறிந்து விட்டு (‘எல்லாம் நீ பூட்டிக்கோ’) வைத்தி குருக்கள் (அவர்தான் ‘ஹெட்’) வீட்டுக்குப் போயிவிடுவார், தீபா ராதனை தட்டில் தனியா விழுந்த ‘சில்லறையை(சில்லறையா? நூற்றுக்கணக்கில் தேறும்) எண்ணிப் பங்கீடு பண்ணக்கூட மனமும் உடலும் அசத்தும்.
“எல்லாம் நாளைக்கிப் பார்த்துக்கலாம், ஓடிப் போயிட மாட்டேன், தரித்ரபுத்திகள்! இதனால்தான் கையில் அள்ளற மாதிரி கண்டும் நாம் உருப்படறதில்லே” என்று மற்ற சிப்பந்திகளை ஆசிர்வாதம் பண்ணிவிட்டு,”எல்லாவற்றையும் மடியில் கொட்டிக் கொண்டு போய்விடுவார்.
நேரம் ஆக ஆக அத்தைப் பாட்டிக்கு வயிற்றில் குதிரைக் குட்டி உதை தாங்க முடியவில்லை. உடன்பிறப்பு இல்லையா? என்றைக்குமில்லாமல் இன்றுமட்டும் எங்களுக்கே எங்கள் கவலை புரியவில்லை.
அசதி மறதியாக, அம்பாள் கழுத்தில் ஏதேனும் விட்டுப் போய், அது ஐயா கண்ணில் பட்டு-வேலைக்காரன் மயக்கப் பொடியைத் தூவிட்டான்னா?-கையும் பிடியுமா மாட்டிண் டுட்டாரா? அப்படி ஏதேனும் நடந்திருந்தால் இத்தனை நாழி ஊரே ‘கொல்’லாகி யிருக்குமே!
“நீங்களதான் கோவில் பக்கம் போய்ப் பாருங்களேன்!”
தாத்தா காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. அவர் பாட்டுக்கு நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டிருந்தார். “…தாராமல் இருப்பாளோ அவள் என்ன சத்தியம் மறந்தவளோ?’
“ஐயா இதோ வராண்டி?” அத்தைப் பாட்டி அறை கூவினாள்.
குடிகாரன் போல் தள்ளாடித் தள்ளாடி ஓர் உருவம் உள்ளே வந்து, கூடத்தில் ‘தொப்’பென்று விழுந்து உருண்டு கட்டையாகி விட்டது.எங்களுக்கு உடல் வெல் வெலத்துவிட்டது.
ஐயாவுக்கு உடல் மழுவாய்க் காய்ந்தது. அத்தைப் பாட்டி நாடியைப் பிடித்தாள். நாடியில் நிபுணியாம்! வைத்தி யர் விசுவநாதன் செட்டியார் சொல்லுவார்; ”நாங்கள் பரம் பரை வைத்யம்தான், நாடி பார்ப்பதில் எச்சுமி அம்மாவுக் கெதிர் நாங்கள் நிக்க முடியுமா? இத்தனைக்கும் என் ‘அப்பா கிட்டே விளையாட்டா கத்துண்டதுதான். குருவை மிஞ்சின சிஷ்யை ஆயிட்டாங்க! அதெல்லாம் பிறவிக் கொடுப்பனை!’
அத்தை முகம் மாறிற்று “ராமா!” அத்தை குரல் கணீர். விலங்குக்கு விலங்கு கூவல்.
தாத்தா ஓடி வந்தார்.
“ஐயா கையில் தேவதாது பேசறதுடா”
அப்படியென்றால் என்ன? எங்களுக்குத் தெரியாது. ஆனால் அடிவயிற்றில் ஏதோ ஒரு ‘சில்’- இது ஏதோ விலங்கு பாஷை. எல்லாம் தெரியறது. ஆனால் ஒண்ணும் புரியல்லே.
ஐயாவின் தலையைத் தாத்தா தோளில் தாங்கிக் கொண் டார். அத்தை பக்கத்தில் மொய்த்தாள்.
இப்பொக்கூட அந்தக் காட்சி கண் முன் தொண்டை யில்தான் எழுகிறது. மூணும் ஒரே தொப்புள் கொடி. மூவரும் ஒரு கொத்து.நாங்கள் கூட பிறகு தான். அந்த மட்டுக்கும் வேறுதான்.
‘வெறி’ பிடித்த கூட்டம். என்ன வெறி?
‘ஐயா, என்ன நடந்தது,’
ஐயா எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாரேயன்றி பார்வை எங்கள் மேல் இல்லை. பன்னிரண்டாயிரம் மைல் களுக்கு அப்பால். பதினெட்டாயிரம் வருடங்களுக்கு முன் எதன்மேலோ பதிந்திருந்தது. வார்த்தைகள் அங்கிருந்து வந்தன.
”- அசந்து தூங்கிப் போயிட்டேன். ‘வெடுக்’குனு உதறிண்டு முழிப்பு வந்தது. ஒரேயிருட்டு. ஓர் அகலில் மட்டும் முத்துப் பொறி, எதிரே, யாரோ நிக்கறா, அலறிப் புடைச்சுண்டு எழுந்திருந்தேன், இல்லை வாயடைச்சுப் போச்சு. கைகால் விழுந்து போச்சு.
”முகம் மூஞ்சினு உருப்படியா தெரியவில்லை. தெரி யாமலுமில்லே. ஏதோ கோட்டுக்குள் அடைச்ச இருட்டில் மூக்குத்தி திகுதிகு – அதைவிட கண்கள். எனக்கு கண் கூசுறது. நெற்றியில் குங்குமம் சுடர் விடறது. சிவப்புப் பாவாடை. நீலத் தாவணி..
தாத்தாவின் கண்கள் விரிந்தன. பேச்சு, மூச்சாய் வந்தது. நேற்று கடைசி அலங்காரம்… மளிகைக் கடை சபாபதி நாடான் மண்டகப்படி…
“-தோளில் பச்சைக்கிளி. தலையை ஸொகுஸா திரும்பிப் திரும்பிப் பார்த்துண்டு…”
எங்களுக்கு எலும்பெல்லாம் உருகி அங்கங்கே கட்டி தட்டிண்டு தொண்டையை ஒரே அமுக்காய் அமுக்கி
‘-இரை தின்ன பாம்பு மாதிரி முழங்காலில் இடிக்கறது. பின்னல், என்னைப் பார்த்தது சிரிச்சுண்டு, ஒரு கையால் பின்னலைச் சுழட்டிண்டு நிக்கறா. சிரிப்பா? கண்ணா? எதன் ஒளி கூட? அப்பா எனக்குக் கண்ணைப் பறிக்கிறது. கண்ணை இறுக மூடிண்டு என்னை அழுத்தறபயத்தை ஒரு வழியா உதறிண்டு எழுந்திருந்தேன், ‘ஹத்து தேவடியா முண்டை எட்ட ஓடு! எப்படி உள்ளே வந்தே?’ உரக்க சிரிச்சுண்டே பின்னலைச் சுழட்டிண்டே கர்ப்க்ரஹத்துள் ஓடிப் போயிட்ட அந்த சிரிப்பு -”
- செவிகளைப் பொத்திய வண்ணம், மரண அடிபட்ட விலங்குபோல் ஐயா அலையாடினார்.
தாத்தாவுக்கு முகம் பிசைந்தது. ஐயாவின் முதுகிலும் முகத்திலும் பளார் பளார் என்று அறைந்தார்.
“ஐயா பாவி! ஜன்மேதி ஜன்மமாய்க் காத்திண்டிருக் கிறவாளுக்கும் கிடைக்காத பேறு நிமிஷத்தில் அடைஞ்சுட்டு நிமிஷமாய்க் குடி கெடுத்துட்டியே! உன்னைப் போல் பாக்ய வான் உண்டா? பாவியும் உண்டா? என் பாட்டையும் நோட்டையும் தூக்கி உடைப்பில் போடு…!”
-ஐயாவைக் கட்டிண்டு கதறினார். எங்களுக்குப் பயமா யிருந்தது.
ஐயா படுக்கையை விட்டு எழ வாரம் ஆயிற்று. அவர் யாரோடும் பேசவில்லை, கஞ்சியோ, ரஸமோ கொடுத்தால் உண்டு. இல்லையேல் இல்லை,
எட்டாம் நாள் காலை வாயில் பல்குச்சியை மாட்டிக் கொண்டு போனவர்தான்- தேடாத இடம் பாக்கியில்லை.
கிணறு, குளம், ஏரி, ஆறு-வடிகட்டிப் பார்த்தாச்சு. எங்கள் முட்டாள்தனம் எங்களுக்கே தெரியும். சீ,ன்னு சுறாமீனுக்கு அதன் மண்டையில் தட்டிக் காட்டுவான் மன்னன் –
திரும்பி வரவேயில்லை.
– மீனோட்டம், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1991, வானதி பதிப்பகம், சென்னை.
![]() |
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க... |