ஐந்தாவது கதிரை




(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஆந்தை பகலில் வெளியே வந்தால் அதிலே ஒரு விசேஷம் இருக்கும். அப்படித்தான் தங்கராசா இன்று வெளியே புறப்பட்டதும், பத்மாவதியைச் சமாதானப்படுத்துவதற் கான இன்னொரு முயற்சி. ஒரு சதுரமைல் பரப்பைக் கொண்ட அந்த மா அங்காடியில் கிடைக்காத பொருட் களே இல்லை. விநோதங்களுக்கும் களியாட்டங்களுக்கும் குறைவில்லை. ஒவ்வொரு தடவையும் பத்மாவதியை இங்கே கூட்டி வரும்போது அவள் சிறு பெண்ணாக மாறி பரவசமாகிவிடுவாள்.

எல்லாம் ஒரு கதிரையால் வந்த கஷ்டம்தான். உப்பு பெறாத சமாச்சாரம். இன்றைக்கு இவ்வளவு பெரியதாக வளர்ந்துவிட்டது. அவள் பிடித்த பிடி வாதமாக இருக்கிறாள். இதிலே விட்டுக்கொடுத்தால் அவ்வளவுதான். இனி அவரை ஒரு சதக்காசுக்கும் மதிக்க மாட்டாள்.
இந்தக் கதிரை காஷ்மீரத்தில் செய்யப்பட்டு, ஏற்று மதியாகி கனடாவில் விற்பனையானது. கம்பளத்துக்கு அடுத்தபடி காஷ்மீரில் பேர்போனது இந்த வால்நட் மரம்தான். பதப்படுத்தப்பட்ட மரத்தில் செய்த இந்தக் கதிரை சாதாரணமானதில்லை. ஒரு ராஜபரம்பரையை உத்தேசித்தும், அசௌகரியத்தை மனதில் கொண்டும் படைக்கப்பட்டது. நுணுக்கமான மரவேலைப்பாடுகள் கைப்பிடிகளிலும், கால்களிலும், முதுகு தாங்கியிலும் காணப்பட்டன. இளநீல வர்ண வெல்வெட்டில் மெத் தைகள் அலங்கரித்தன. ஏறியிருந்தால் கால்கள் கீழே தொங்கும். அந்தக் கதிரைதான் வாங்க வேண்டுமென்று அடம் பிடித்தாள் இந்த பத்மாவதி.
அவர்கள் வீட்டிலே நாலு சோபாக்கள் தான் இருந்தன. மெத்தை வைத்து, மண்புழு கலரில் ஊத்தை தெரியாமல் இருப்பதற்கும், நீண்டகால பாவனைக்குமாக வாங்கப் பட்டவை. ஒன்று இணை சோபா , மற்றவை துணை சோபாக்கள், இவர்கள் மனக்கணக்கு தாண்டி ஓர் உபரி விருந்தாளி வந்துவிட்டால், அவர் இருப்பதற்கு சமையல் கட்டிலிருந்து கதிரை எடுத்து வரவேண்டும்; அவமானம். அதுதான் அவள் இந்தக் கதிரையில் மிகவும் ஆர்வமாய் இருந்தாள். அதனுடைய விலை கூட அவளுடைய ஒரு வாரச் சம்பளத்திலும் குறைவுதான் என்று குத்திக்காட்டினாள்.
தங்கராசாவும் பிடிவாதமாக இருந்தார். சண்டை என்று வந்தால் இறுதியில் சரணடையும் பெருமை அவருக்குத்தான். ஆனால் இம்முறை அவர் விட்டுக்கொடுப்பதாய் இல்லை. தன் கைவசமிருந்த யுக்திகள் சகலத்தையும் கையாண்டு தன் அதிகாரத்தை நிலைநாட் டவே தீர்மானித்திருந்தார்.
ஆனால் பத்மாவதி இவரைவிட பெரிய சூழ்ச்சிக்காரியாக இருந்தாள். அவள் தன்னிடமிருந்த மிகச்சிறந்த படைக்கலத்தைப் பிரயோகிப்பதற்குத் தருணம் பார்த்திருந்தாள். அதைச் செய்தால் அவர் நிர்மூலமாகிவிடுவார் என்பது அவளுக்குத் தெரியும். அவள் துணிச்சல்காரி. செய்தாலும் செய்வாள்.
அவளுக்கு அப்போது பதினாலு வயது இருக்கும். பள்ளிக்கூடத் துக்கு வெள்ளைச் சீருடையில் போய்விட்டுத் திரும்பிக்கொண்டி ருந்தாள். அவளோடு பல மாணவிகள் வந்துகொண்டிருந்தார்கள். எல்லோரும் ஒரே சைஸ் பெண்கள். அப்போது ஒரு வண்டிக்காரன் வண்டியில் சிமென்ட் மூட்டை ஏற்றிவிட்டு ஓர் ஒடிசலான மாட்டை போட்டு அடித்துக்கொண்டிருந்தான். அது கால்களைப் பரப்பி வைத்து மூச்சிரைக்க நுரை தள்ளி நின்றது.
பேசிக்கொண்டு போனவள் திடீரென்று திரும்பி வண்டிக்காரனி டம் வந்து அவன் திகைத்தபடி பார்க்க அவனுடைய துவரங்கம்பைப் பிடுங்கினாள். நடுவீதியில் முறித்து எறிந்தாள். பிறகு வந்தமாதிரியே போய் சிநேகிதிகளுடன் கலந்துகொண்டாள். இவ்வளவும் செய்ய சரியாக அவளுக்கு இருபது விநாடிகள் எடுத்துக்கொண்டன. சிநேகிதி களுடன் சேர்ந்த பிறகு அவள் ஒருதரம் தானும் வண்டிக்காரனைத் திரும்பிப் பார்க்கவில்லை.
இது அவள் சுபாவம். தங்கராசா இவளிடம் மனதைப் பறிக் கொடுத்ததற்கும் இந்தத் துணிச்சல் தான் காரணம். அகதியாக கனடா வில் வந்து இறங்கிய பிறகு அவர் செய்த முதல் வேலை முகவர் மூலம் அவளையும் எடுப்பித்ததுதான்.
அவர்கள் கல்யாணம் கோயிலில் கோலாகலமாக நடந்தது. பிளாஸ்டிக் வாழைமரம், அசல் அம்மிக்கல், இருந்து வாசிக்கும் நாயனக்காரர், நின்று வாசிக்கும் நாயனக்காரர் (இவருக்கு சார்ஜ் கூட), யாளி வைத்த மணவறை, வானத்தில் பறந்து வந்த வாழையிலை, ஆழ்குளிரில் இருந்து எழுப்பிய மாவிலைகள், பால் ரொட்டி, பயத்தம் பணியாரம் போன்ற அபூர்வமான பலகாரங்கள் எல்லாம் தவறாமல் பங்கேற்றன. வீடியோ புகழ் ஜகன்னாத குருக்கள் கல்யாணத்தைச் சிறப்பாக நடத்திவைத்தார்.
சேலை கட்டுவதில் அவள் தேர்ச்சி பெற்றவள் அல்ல. சிரத்தையில் லாமல் உடுத்திக் கவனமின்றித் தாவணியை விசிறியிருப்பாள். இந்தச் சேலையில் சிலபேருக்கு உடல் அழகு பிரமாதமாக வெளிப் படும். இன்னும் சிலருக்கு அழகு அமுங்கி வெகு சாதாரணமாகிவிடும். இவள் இரண்டாவது வகை. மிகச் சாதாரணமான உடல்வாகு போன்ற தோற்றம். தவிட்டு நிறமாக இருந்தாள்.
கண்கள் ஏமாற்றும் என்பதை முதன் முதலில் தங்கராசா அனுபவித் தது அப்போதுதான். நாணம், பயம் என்பது அவளுக்குத் துளியும் கிடையாது. போலியில்லாமல் மிக இயல்பாக இருந்தாள். இதுதான் அவருக்குப் பிடித்தது. பிடிக்காததும் இதுதான்.
அன்று இரவு தங்கராசாவுக்குப் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. அவள் புஜங்கள் ஒரு மல்யுத்த வீராங்கனையுடையது போல இறுக்க மாகவும், மினுமினுப்பாகவும் இருந்தன. திடீரென்று தோன்றிய மார்புகள் மிக உருண்டையாகவும், முதலையின் அடிப்பாகம் போல வெண்மையாகவும் காணப்பட்டன. ஒரு மரம் ஏறியின் வயிறுபோல அவள் வயிறு ஒட்டியிருந்தது. பெண்மையைப் பற்றி அவர் இரவிர வாகச் சிந்தித்து வைத்திருந்த சித்திரம் எல்லாம் உடைந்துவிட்டது. அது அவருக்கு மிகவும் உவகை தருவதாக இருந்தது.
அவள் முயங்கும் போது முழுமூச்சோடு முயங்குவாள். தன்னை மறந்த நிலை. உலகை மறந்த சுகம். கைகளும் கால்களும் மாறுபட்டு யாருடைய கால்கள், யாருடைய கைகள் என்று தெரியாத குழப்ப மான நிலை. கண்களை மூடி அனுபவிப்பாள்.
அந்த நேரங்களில் எல்லாம் இவருக்குத் தோன்றும் இந்த மனித உடம்பு பிணையலுக்கு ஏற்றது இல்லையென்று. இந்தக் கையும் காலும் வேண்டாத இடங்களில் வந்து இடைஞ்சல் கொடுத்தபடியே இருக்கும். பாம்பின் உடம்பு ஒன்றுதான் கூடலை மனதில் வைத்துப் படைத்த ஒரே உடம்பு. சுருண்டு, பிணைந்து, நெளிந்து தேக சம் பந்தம் கொள்ள இந்த அற்ப மானுட உடல் சாத்தியமற்றது என்று ஆதங்கப்படுவார்.
அநேக நாட்களில் இந்த வேகத்தில் ஒரு விபரீதம் நடந்துவிடும். அவளுடைய கால் சங்கிலிகள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மாட்டிக் கொள்ளும். பாதி இரவில் இது அடிக்கடி நடந்துவிடுவது அவருக்கு வேடிக்கையாக இருக்கும். ஆனந்தமாகவும் இருக்கும். அவள் பரிதாப மாக ‘ஐயோ , கொழுவிப் போச்சு ! இதைக் கழட்டி விடுங்கோ ‘ என்று மன்றாடுவாள். இவர் அந்த தவிப்பைக் கொஞ்சம் நீடிக்கவிட்டு ரசிப்பார். ஓரங்களில் வெளிறிப்போய் இருக்கும் அந்த பாதங்களைத் தடவியபடியே கால் சங்கிலிகளைக் கழற்றுவார். வெகுநேரம் கழற்றுவார்.
இதெல்லாம் ஆரம்ப காலங்களில். பிறகு பிறகு புத்தி வந்து இரவு வேலைகளை முடித்துவிட்டு சயனத்திற்கு வரும்போது கால் சங்கிலியைக் கழற்றி வைத்துவிடுவாள். அதற்குப் பிறகு அதுவே ஒரு சைகை ஆயிற்று. சில நாட்களில் அவளே கொலுசைக் கழற்றி வைத்துவிட்டு சிரித்துக்கொண்டு வருவாள். அவருக்குப் புரிந்துவிடும். தயாராக இருப்பார். இன்னும் சில நாட்களில் கொலுசைக் கழற்றாமல் ‘சிலுங் சிலுங் ‘ என்று நடந்து வந்து படுக்கையில் தொப்பென்று விழுந்துவிடுவாள். அன்று விடுமுறை.
மகள் பிறந்த பிறகும் இது தொடர்ந்தது. அதுவே ஒரு சங்கேத வார்த்தையாக உருவெடுத்தது.
அதுவும் பழைய கதை இப்ப அவள் கால் கொலுசைக் கழற்றுவதே இல்லை . அவள் மனதில் என்ன நடக்கிறது என்று யாருக்குத் தெரியும். வெங்காயம் வெட்டுவதுபோல முகத்தை மறுபக்கம் திருப்பி வைத்துக்கொண்டுதான் பேசினாள். அவரை இப்பொழு தெல்லாம் அவள் அண்டுவதற்கே கூசுவதுபோலப் பட்டது.
இங்கு வந்த பிறகு அவள் குதிக்கால் வெடிப்பில் ஒட்டியிருந்த செம்பாட்டு மண் முற்றிலும் மறைவதற்குச் சரியாக ஆறுமாதம் எடுத்தது. ஆனால் அவள் அடியோடு மாறுவதற்கு ஆறுவாரம்கூட எடுக்கவில்லை. கனடா அவளுக்கு சொர்க்கலோகமாகப் பட்டது. மற்றவர்களைப் போல அல்லாமல் குளிரை அலட்சியப்படுத்தினாள். வாழ்நாள் முழுக்க அங்கேயே பிறந்து வளர்ந்தது போல் ஒருவித தடங்கலும் இன்றி உற்சாகத்தோடு அந்த நீரோட்டத்தில் கலந்து ஐக்கியமானாள்.
தங்கராசா இன்னமும் பழக்க தோஷத்தில் உலர் சலவை சேட்டை உதறிப்போட்டும், காலணிகளை அதிகாலை வேளைகளில் கவிழ்த்துப் பார்த்தும் போட்டுக்கொண்டு இருக்கையில் பத்மாவதி லீவாய் ஜீன்ஸும், வாசகம் எழுதிய ரீ சேர்ட்டும் அணிந்து, சீராக வெட்டிய குட்டை மயிர் காதைத் தொட , தானாகவே சுவாசிக்கும் நைக்கி காலணியில் சுப்பர் மார்க்கட்டில் சாமான் வாங்கிவிட்டு கடன் அட்டையில் கணக்கு தீர்த்துக்கொண்டிருந்தாள்.
கனடா வந்து ஒரு வருட பயிற்சிக்குப் பிறகு இவருக்கு கம்புயூட்டர் நிரல் எழுதும் வேலை கிடைத்தது. இவர் திறமையான வேலைக்காரர். இவர் நிரல்களைப் பூச்சி அரிப்பதில்லை . ஒருக்கால் எழுதினால் எழுதினதுதான். அதைச் சரி பார்க்க வேண்டிய அவசியமேயிராது. ஆனாலும் இவர் மேசைக்கு வரும் கோப்புகள் நத்தை வேகத்தில் தான் நகர்ந்தன. அதனால் ஒருநாள் வேலை போய்விட்டது.
வேலை போனபின் வீட்டிலேயே சுவாசித்துக்கொண்டு இருந்தார். அதுவரையில் சாதாரண தவறுகளையே செய்து பழகியிருந்தவர் பத்மாவதி தந்த துணிச்சலில் ஒரு மாபெரும் தவறைச் செய்ய நேரிட்டது. ஒரு தொழிற்சாலையில் வேலை ஒன்று காலியாகவிருந்தது. அவளை அதில் சேர அனுமதித்தார். அப்பொழுது அவர் கையை விட்டுப்போன ஆட்சியை அவர் இன்னமும் திருப்பிக் கைப்பற்ற வில்லை. அவருக்கு வேலை கிடைத்த பிறகும் அது அவளிடமே தங்கிவிட்டது.
பத்மாவதி வேலை செய்யும் இடத்தில் பல தென் அமெரிக்க பெண்கள் வேலை பார்த்தார்கள். அவர்கள் எல்லோரும் இவளுடன் நல்ல சிநேகம். இவளுடைய உடை, கலர், தோற்றம், தலைமயிர் இவற்றைப் பார்த்தவர்கள் இவளைக் கொலம்பியன் என்றோ, கொஸ்டா ரிக்கன் என்றோதான் நினைத்தார்கள். அவர்களைப் போல உடுக்கவும், நிற்கவும், நடக்கவும், பல் குத்தவும் பழகிக்கொண்டாள். பஸ் தரிப்பு நிலையங்களில் யாராவது அவளிடம் ஸ்பானிஷ் பாஷையில் பேசி விட்டால் பரவசமாகிவிடுவாள்.
பதினாலு வயதில் அவளுக்கு மகள் இருப்பதைச் சொன்னால் யாரும் நம்ப மறுக்கிறார்கள். ஒரு நாள் ‘பாலே’ வகுப்பில் சந்தித்த ஓர் அம்மா இது உங்கடை தங்கச்சியா?’ என்று கேட்டு விட்டாள். பத்மாவதி அன்று முழுக்க மிதந்தபடியே இருந்தாள். கணவரிடம் இதைத் திருப்பித் திருப்பிச் சொன்னபோது அவருடைய பயம் இன்னும் அதிகரித்தது.
சங்கேத பாஷை நாட்களில் அவர்களுக்கிடையே எவ்வளவு புரிதல் இருந்தது. பத்மாவதி’ என்று முழுப்பெயரும் கூறி அழைத்தால் அவர் கோபமாக இருக்கிறார் என்று அர்த்தமாகும். பிரியமாக இருக்கும் போது பத்து’ என்று அழைப்பார். பிறர் முன்னிலையில் ‘பத்மா’ என்றே கூப்பிட்டு பழக்கம். ஆனால் படுக்கை அறையில் மாத்திரம் விஷயம் வேறு. பத்தூஉ ‘, ‘பத்தூஉ ‘ என்று அளபெடைத் தொடரில் அழகு குறையாமல் அழைப்பார்.
அதெல்லாம் மறந்து இப்போது பல வருடங்கள் ஆகிவிட்டன.
கடைசியில் இந்த கதிரைப் போராட்டத்தில் வந்து நின்றது. இதில் அவர் வெகு தீவிரமாக இருந்தார். அவர் அறியாமல் அவள் கதிரை வாங்கினால் அதைத் துண்டு துண்டாக உடைத்துவிடுவதாக சபதம் எடுத்திருந்தார். இது இறுதிப் போராட்டம். இதில் தோற்றால் அவள் அவரைச் சுத்தமாக மட்டம் தட்டி வீட்டின் நிலவறையில் பழைய தளபாடங்களுடன் போட்டு விடுவாள் என்பது அவருக்கு நிச்சயமாயிருந்தது.
மகளும் இவளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டாள். வாய்க்கு ருசியான உணவு சாப்பிட்டு வருடக்கணக்காகிறது. தோசை, இட்லி, வடை, அப்பம் போன்ற சமாச்சாரங்களுக்கு ஒரேயடியாக விடுதலை கொடுத்துவிட்டாள். போர்கர் என்ற பேயும், பிஸா என்ற பிசாசும் வீட்டிலே தலை விரித்து ஆடின. தினம் இந்தச் சாப்பாடு சிவப்பு பூப்போட்ட பிளாஸ்டிக் மேசை விரிப்பில் பரப்பப்பட்டு, பழைய புதினப் பேப்பரால் மூடப்பட்டு கிடக்கும். அதன் மணம் வயிற்றைக் குமட்டும். ஒருநாள் இட்லி வேண்டுமென்று கேட்டதற்கு அவள் இப்படி வெடித்தாள்:
‘புளித்த மாவில் அவித்த இட்லி சாப்பிட்டு, புளித்த மாவில் சுட்ட தோசை சாப்பிட்டு, புளித்த மாவில் சுட்ட வடை சாப்பிட்டு, புளித்த மாவில் செய்த அப்பம் சாப்பிட்டு பழகிய உங்களுக்குப் புளித்துப்போன சிந்தனைதான் இருக்கும். நான் சும்மாவா இருக்கிறான். நாலு மணிக்கு எழும்புறன். சமைச்சுப் போடுறான். வீட்டைப் பார்க்கிறன். உங்களைப் போல சமமாய் வேலைக்குப் போய் உழைச்சுக் கொண்டு வாறன். ஒரு குமரைக் கட்டி வளர்க்கிறான். நீங்கள் பியர் குடித்துவிட்டு கால் விரியக் கிடக்கிறியள். அறுமாதமாய் குக்கர் வேலை செய்யவில்லை. நீங்கள் என்றால் போய் ரிமோட் கொன்ரோல் வாங்கிறியள். நான் ஒரு நாளைக்கு என்ன செய்வன் என்று எனக்கே தெரியாது.’
அவள் அப்படி அரற்றியதற்குக் காரணம் இருந்தது. சமையல றையில் பத்மாவதியின் சமையலடுப்பில் மூன்று எரிவாய்கள் எரிய வில்லை. ஆறுமாதமாக ஒரு எரிவாயை வைத்து சமாளித்து வந்தாள். எவ்வளவு சொல்லியும் அதை மாற்றவேண்டும் என்ற எண்ணம் தங்கராசாவுக்கு வரவில்லை . அவளுக்கு அதுதான் எரிச்சல் எரிச்ச லாக வந்தது.
அந்த எரிச்சலைச் சமாளிப்பதும் அன்றைய சுற்றுலாவின் பிரதான அம்சம். அவள் முன்னால் நடந்து கொண்டிருந்தாள். பின்னுக்கு இருந்து பார்க்கும் போது அசல் அப்படியே ஒரு கொஸ்டாரிக்கன் பெண்போலவே இருக்கிறாள். அவளிடம் எவ்வளவுக்குக் கவர்ச்சி இருந்ததோ அவ்வளவுக்கு இப்போதெல்லாம் கடுமையும் சேர்ந்து கொண்டது. வீடு அவர்கள் பெயரில் இருக்கிறது. வீட்டுக் கடனை இவர் அடைத்து வருகிறார். இந்த தேசத்து சட்டங்கள் மனைவிகளுக்கு அநுகூலம். இவளிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று மனது கட்டளையிட்டது.
எதிர் வருவோர் இவளை இரண்டு தரம் பார்த்துவிட்டு நகர்ந்தார் கள். ஜீன்ஸும், முடிச்சுப்போட்ட மேற்சட்டையும் அணிந்திருந்தாள். வார் இழுத்துக்கட்டிய மத்தளம் போல வயிறு ஒடுங்கி இருந்தது. இவரை விட்டுப் போவதற்கு அவசரம் காட்டுவதுபோல அவள் நடந்து கொண்டிருந்தாள். ஒரு சோற்றுப் பிராணி போல இவர் அவள் பின்னாலே விட்டுவிடுவாளோ என்ற அச்சத்துடன் வயிற்றைத் தூக்கிக்கொண்டு ஓடினார்.
ஒரு சைனாக்காரன் பச்சை குத்திக்கொண்டிருந்தான். வாட்ட சாட்டமான வெள்ளைக்காரன் ஒருத்தனுடைய முறுக்கேறிய புஜத்தில் டிராகன் ஒன்றை வரைந்தான். இந்த அதிசயத்தைக் கண் கொட்டாமல் இருவரும் நின்று பார்த்தார்கள். நீண்ட புடலங்காய்போல வலுவோடு இருக்கும் இவள் புஜங்களை மெள்ள கையினால் வருடி இறுக்கிக் கொண்டார். அது இரவுக்கான சமிக்ஞை என்பது அவளுக்குத் தெரியும்.
அழகு சாதனக் கடைக்கு அவளைக் கூட்டிப்போனபோது அவள் முகம் பிரகாசமானது. அவள் கேட்ட கண் மை, முகச் சாந்து, நக வர்ணங்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்தார். உதடுகளுக்கு, கடும் ஆராய்ச்சிக்குப் பிறகு அவள் தெரிவு செய்த பளபளக்கும் கபில நிறத்துக்கும் கறுப்புக்கும் இடைப்பட்ட பெயர் தெரியாத ஒரு வர்ணத்தை வாங்கித் தந்தார். உடனேயே அதைப் பூசிக்கொண் டாள். ஒரு சிறு பூச்சில் அவளுடைய உதடுகள் குவிந்து மிகக் கவர்ச்சிகரமாக மாறின.
இந்த சந்தோசத்தை அவர் கலையவிட விரும்பவில்லை. உணவகம் ஒன்றைக் கடந்தார்கள். அவளுக்கு சன்டே’ மிகவும் பிரியமானது. வேண்டுமா என்று கேட்டார். அவள் சிணுக்கமாகித் தலையசைத்தாள். அவ்வளவுதான். இலச்சினை மோதிரம் கிடைத்த வந்தியத்தேவன் போல் ஒருவித உற்சாகத்துடன் புறப்பட்டார். மூன்று குவியல் ஐஸ்கிரீம், உருகிய சொக்லட், பிஸ்கட், பாலாடை, மேலே மகுடமாக சிவந்த செர்ரி பழம் இவற்றுடன் திரும்பினார். ஓர் அரை ஆள் உயரத்துக்கு அது இருந்தது. தன் சொக்லட் நிற உதடுகளை நாக்கினால் தடவியபடி அவள் சாப்பிடத் தொடங்கினாள்.
திரும்பும்போது மெல்லிய குளிர் காற்றின் உராய்வுத் தன்மை அதிகமாயிருந்தது. எதிர்ச்சாரியில் கார்கள் விரைந்தன. சில படகு களை இழுத்துக்கொண்டும், வீடுகளைத் தொடுத்துக்கொண்டும் ஓடின. இன்னும் சில சைக்கிள்களைத் தாங்கிக்கொண்டு பறந்தன. இனிமையான விடுமுறையின் அதிர்வு எங்கும் சூழ்ந்திருந்தது. தங்கராசா மனதில் எதிர்பார்ப்புகள் அதிகரித்தன.
இவ்வளவு செய்தும் அன்றிரவு அவருக்குப் பெரிய ஏமாற்றமே காத்திருந்தது. வெறும் ஐஸ்கிரீமைக் காட்டி அவளை மயக்க முடியாது என்று அப்போது கண்டு கொண்டார். ஒரு கிருமி நோய்க்காரர்போல அவரை ஒதுக்கினாள். திமிறியபடி தள்ளித்தள்ளிப் போனாள். சவுக்கால் அடிக்கப்பட்டது போல தங்கராசா டிவியின் முன்னால் விழுந்தார். படுக்கை அறைக்கு அன்று அவர் திரும்பவே இல்லை.
அடுத்தநாள் காலை பத்மாவதி பதினாலு காலி பியர் டின்களை வரவேற்பறை முழுக்கவும் தேடித் தேடிப் பொறுக்கினாள்.
கடந்த இரண்டு வாரமாக அந்த வீட்டில் ஒரு மௌனம் சூழ்ந்து போய் கிடந்தது. ரகஸ்யமானதும், சதித்திட்டம் கொண்டதுமான ஒரு யுத்தம் அங்கே உருவானது. புறங்கை வீச்சில் வீங்கின உதடுகளைச் சாமர்த்தியமாக உதட்டுச் சாயத்தினால் மறைத்திருத்தாள். தங்கராசா தன் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு பாடத்தை, மற்றவர்களிடம் பகிரமுடியாத ஒரு அவமானத்தை, அவருக்குத் திருப்பி தருவதற்கு சமயம் பார்த்திருந்தாள்.
நாமகள் மகா வித்தியாலயத்தில் படித்த பெண், ஒரு சொட்டு ஆங்கில வாசனையும் அறியாதவள், சித்திரக்கதை புத்தகத்தைத் தாண்டி வராதவள், back space விசையை ஒடித்துவிட்டு கம்புயூட்டர் நிரல் எழுதும் வல்லமை படைத்த தங்கராசாவுக்கு இப்படி ஒரு சவாலாக வந்து வாய்த்திருந்தாள்.
தங்கராசா தான் பேராபத்தில் இருப்பதை உணர்ந்தார். போரின் விளைவுகள் அவருக்கு சாதகமில்லை என்பதும் தெரிந்தது. எப்பாடு பட்டும் அவளைக் கனியவைத்து வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்துக்கொண்டார். அதற்கான முயற்சிகளில் கம்புயூட்டர் நிரல் எழுதும் ஒரு தர்க்கத்துடனும் திட்டத்துடனும் அவர் இறங்கினார்.
அன்று இரவு உணவு சாப்பிடும் போது இது தொடங்கியது. காதல் நாட்களில் செய்த சைகைகள், சங்கேத பாஷைகள் எல்லாம் பரிமாறப்பட்டன. மகளுக்குப் புரியாதவாறு ஒரு முழு சம்பாஷணை அந்த உணவு மேசையில் நடந்து ஒப்பேறியது.
அவள் பாத்திரம் அலம்பும் போது இவர் பூனைபோல அடிவைத்துப் போய் பின்னே நின்றுகொண்டார். கைகள் கட்டிப்போட்ட நிலையில் பின்னாலிருந்து அவள் இடையை ஸ்பரிசித்தார். அவள் மறுப்பு சொல்ல முடியாமலும் தடுக்க இயலாமலும் நெளிந்தாள். இவருக்கு இருப்புக் கொள்ளவில்லை.
அவள் ஒருவித அவசரமுமில்லாமல் தன் வேலைகளை முடித்தாள். அது வேண்டுமென்றே நேரம் கடத்துவது போலத்தான் இருந்தது. ஈரப்பதன் எந்திரத்தை இசையவைத்தாள். பிறகு பூட்டுகள் சரிபார்க் கும் சத்தம். இப்பொழுது படிகள். அலாரம் சிஸ்டத்தில் ரகஸ்ய எண் கள் பதியும் ஒலி. விளக்குகள் அணைந்தன. இதோ வந்துவிட்டாள்.
மெதுவாகக் கதவு திறக்கிறது. இன்றும் கால் கொலுசைக் கழற்றி வைக்கவில்லை. சத்தம் வரக்கூடாதென்று வெகு பிரயத்தனம் நடக்கிறது. கால்களைப் பக்கவாட்டில் நுழைத்து நகர்த்தி நகர்த்தி வருகிறாள். இவர் துடிதுடிப்பானார்.
அவ்வளவு அவசரம் அவருக்கு. அவள் மேலங்கியை பிடித்து இழுத்தார். வேண்டாம், இன்றைக்கு வேண்டாம். நீங்கள் கோவிப் பியள்’ என்று அவள் கத்தினாள். அவர் கேட்பதாயில்லை . ஓர் உத்வேகம் வந்துவிட்டது. அவசரத்தில் அவர் இழுத்தபோது பட்டன் கள் தெறித்தன. அப்படியும் அவள் ஒரு பொக்கிஷத்தை காப்பது போல சட்டை விளிம்புகளை இழுத்துப்பிடித்தபடி எதிர்ப்புக் காட்டினாள்.
இப்பொழுது அவர் எல்லை கடந்துவிட்டார். ஆவேசம் வந்து வலிந்து இழுத்தார். அது பிரிந்தது. தளும்பல் குறைவில்லாத மார்புகள்.
ஆனால் அவர் கண்ட காட்சி அவரைத் திடுக்கிட வைத்தது.
அவளுடைய இரண்டு மார்புகளிலும் பச்சை குத்தியிருந்தது. அந்த சைனாக்காரனின் டிராகன்கள் வாயை ஆவென்று விரித்துக் கொண்டு உறுமின. ஒரு பென்சில் கூட இடையில் புக முடியாத நெருக்கமான மார்புகள், தன்னுடைய சொந்தப் பாவனைக்காகப் படைக்கப்பட்டவை என்று நினைத்திருந்தவை, யாரோ ஊர் பேர் தெரியாத நடைபாதை சைத்திரீகன் வரைந்த ஓவியங்களின் கனம் தாங்காமல் ஆடின.
இருண்ட வனத்திலே பதுங்கியிருந்த மிருகம் ஒன்று தாக்கியது போல உணர்ந்தார். மெல்ல பலமிழந்து சரிந்தார்.
அவள் மறுபடியும் கைகளினால் சட்டையை இழுத்து மூடிக் கொண்டாள். கடைவாயில் ஒரு சிரிப்பு தோன்றி அதே கணத்தில் மறைந்தது. இவர் கவனிக்கவில்லை.
இதுதான் அவர்களுடைய கடைசி சமர். இந்த வெற்றிதான் அவளுடைய கடைசி வெற்றி. இதற்குப் பிறகு அந்த வீட்டில் கதிரை வாங்கும் கதை எழும்பவே இல்லை. அவர்தான் இப்ப ஐந்தாவது கதிரை.
– 1999-2000
– மஹாராஜாவின் ரயில் வண்டி, முதற் பதிப்பு: டிசம்பர் 2001, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.