எளிமையான திருமணம் – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 29, 2020
பார்வையிட்டோர்: 14,959 
 
 

நமச்சிவாயம் ஆசிரியர் கடந்த பத்து நாட்களாக நடைப்பயிற்சிக்கு வரவில்லை. இன்றுதான் வந்திருக்கிறார்.அவர் பையனுக்கு திருமணம்.அதனால்தான் வரவில்லை.

ஆனால் எங்களுக்கு யாருக்குமே அழைப்பில்லை.அவர் நல்ல சம்பளம் வாங்குகிறார்.பையனும் ஐ.டி. கம்பெனியில் நன்றாக சம்பாதிக்கிறான்.ஆனாலும் இந்த கல்யாணத்தை மிக எளிமையாக நடத்தி இருக்கிறார் .

கோவிலில் திருமணம்.அருகில் உள்ள ஹோட்டலில் சாப்பாடு.மொத்தமே நூற்றைம்பது பேர்தான்.அதனால் தானோ என்னவோ அவரோடு நடைப்பயிற்சி செய்யும் எங்களுக்கு அழைப்பில்லை.நாங்கள் ஒரு பத்து பேர் வழக்கமாக நடைப்பயிற்சி முடித்து அரைமணி நேரம் பேசிக் கொண்டிருப்போம். அவரிடமே ஏன் இந்த சிக்கனம் என்று கேட்டுவிட்டோம்.

அமைதியாக ஓர் இடத்தில் உட்கார்ந்து கொண்டு எங்களையும் உட்காரச் சொன்னார்.மெதுவாக பேச ஆரம்பித்தார்.

“என் மகன் கல்யாணத்துக்கு உங்கள யாரையும் அழைக்காததற்கு உங்க கிட்ட மன்னிப்புகேட்டுக்கிறேன்.இந்தக் கல்யாணத்தை எளிமையாக நடத்தனும்கிறது தான் என்னோட ரொம்பநாள்ஆசை.பெரிய மண்டபமா பார்த்து பத்துலட்சம்,பதினைந்து லட்சம் செலவு செய்து,நிறைய வெரைட்டியோட. சாப்பாடு போட்டு,அதுல பாதி சாப்பிட்டு ,நிறைய வேஸ்ட் பண்ணிட்டு,வந்திருக்கிற வங்களையும் சரியாக கவனிக்காம, ஒரே டென்சனோட இருக்கிற அந்த ஆடம்பர திருமணம் எனக்கு பிடிக்கல. அதனால்தான் உங்களைப் போல் முக்கியமான ஆட்களைகூட அழைக்காம எளிமையாக நடத்தினோம்.

அதுமட்டுமில்லை.இதுல எனக்கு மிச்சம் ஆகிற பணத்தை, எங்கிட்ட படிக்கிற மாணவர்கள் எத்தனையோ பேர் வசதி இல்லாததால் கல்லூரியில் சேர முடியாம இருக்காங்க. அவங்களுக்கு உதவி செய்யலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.”

அவர் பேசப்பேச எங்களுக்கு ரொம்ப உயர்வாகத் தெரிந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *