எப்போது வருவான்…?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 20, 2020
பார்வையிட்டோர்: 5,805 
 
 

சுமதியின் எதிரில் இருந்த அந்த உயிருள்ள காகிதம் காற்றில் படபடத்தது.

அவள் அதையே வெறித்தாள்.

சென்ற நிமிடம் வரை வெற்றுத் தாளாக இருந்த அந்தக் காகிதத்திற்கு இப்போதுதான் உயிர் வந்தது.

துரைவேலு எப்போது வந்தானோ சுமதிக்குத் தெரியாது.

அவள் கூடத்தில் வாசலுக்கு முதுகுகாட்டி முருகனின் புகைப்படத்தைக் கையில் பிடித்தப் படி அமர்ந்து ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சுமதி …! ”

துரைவேலு குரல் கேட்டதும்தான் திடுக்கிட்டு எழுந்தாள். அலறிப்புடைத்து நின்றாள். அவளையறியாமலேயே கை பின்னால் சென்று படத்தை மறைத்தது. கண்களில் பயம் மின்னியது. உடல் குப்பென்று வியர்த்தது. நடுங்கியது.

துரைவேலு கோபம் அடக்கி நிதானமாக அவள் எதிரில் வந்து அமர்ந்தான்.

“காலம் உன் காயத்தை மாத்தும்ன்னு நெனச்சேன். மாத்தலை.! இன்னும் நீ அவனை மறக்கல. எவ்வளவு தூரத்துக்கு அவன் மேல் அன்பு, ஆசை வைச்சிருந்தா இன்னமும் மறக்காமலிருப்பே..? இனிமேலும் நீ அவனை மறப்பே என்கிற நம்பிக்கை எனக்கில்லை. சுமதி ! இதுக்கு மேலும் நம்ம பந்தத்தால் உன்னைக் கட்டிப்போட நான் விரும்பலை. நீ விருப்பப்பட்டால் நாம விவாகரத்து வாங்கிக்கலாம். இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதான் நான் முன்னேற்பாடாய் ஒரு பத்திரம் வாங்கி வைச்சிருக்கேன். அதுல கையெழுத்துப் போட்டுத் தர்றேன். நீ எப்போ வேணுமின்னாலும்… ஏன் இந்த நிமிடத்திலிருந்து கூட விவாகரத்து வாங்கி உன் விருப்பப் படி வாழலாம்..”சொன்னனான்.

அதோடு நிற்காமல் அருகிலிருந்த மேசை இழுப்பறையை இழுத்தான். அதன் அடியிலிருந்தது பத்திரத்தை எடுத்தான். அதன் கீழே கையெழுத்துப் போட்டு அது மீது ஒரு பேப்பர் வெயிட்டை வைத்துவிட்டு நிச்சலனமாக வெளியே நடந்தான்.

சுமதி இப்படி ஒரு நடவடிக்கையை எதிர்பார்க்கவில்லை. உறைந்து போனாள்.

இவ்வளவிற்கும் காரணம்முருகன். தன் வாழ்வில் புயலாக நுழைந்து மனதில் இடம் பிடித்தவன்.

அப்படியே சரிந்து அமர்ந்தாள். கணவன் கையெழுத்திட்டுப் போட்டுவிட்டுப் போன அந்த பத்திரத்தையே வெறித்தாள்.

”அம்மா சுமதி ! நான் உனக்கு நல்ல வரன் பார்த்திருக்கேன். !”

அப்பா கங்காதரன் மகிழ்சசியுடன் சொல்லி கூடத்தில் வந்து உட்கார்ந்தார்.

சுமதி ஆவலை அடக்கிக்கொண்டு அருகில் வந்தாள்.

“பெரிய இடம்மா. பையன் மெக்கானிக்கல் பொறியியல் படிப்பு. மத்திய அரசாங்கம் இயற்கை எரி வாயு துறையில் கை நிறைய சம்பளம். பேர் முருகன். தரகரிடம் சொல்லி வைச்சிருந்தேன் . இப்பதான்… ஜாதகப் பொருத்தமெல்லாம் சரியா இருக்குன்னு விபரம் சொல்லி.. அந்தப் பையன் ஜாதகமும், புகைப்படமும் கொடுத்து விட்டுப் போனார்.”சொல்லி அவளிடம் புகைப்படத்தை நீட்டினார்.

அந்த வண்ணப் புகைப்படத்தில் இளைஞன் மூக்கும் முழியுமாக அழகாக இருந்தான் . பார்த்ததுமே பிடித்துப் போய் மனதில் சிக்கென்று ஒட்டிக்கொண்டான்.

“என்னம்மா..! மாப்பிள்ளையைப் பெண் பார்க்க வரச் சொல்லவா..?”கங்காதரன் குறு நகையுடன் மகளை பார்த்தார்.

“ம்ம்…”சுமதி முகம் சிவக்க உள்ளே சென்றாள்.

அந்த புகைப்படத்தை ஆசையாய் நெஞ்சில் அனைத்துக் கொண்டு அறையில் அமர்ந்தாள்.

பெண் பார்க்க அவன், அப்பா, அம்மா, அண்ணன், தங்கை , தரகர் சகிதம் வந்திருந்தார்கள்.

முருகன் புகைப்படத்தில் இருந்ததைவிட நேரில் மிக அழகாய் , வசீகரமாய் இருந்தான். இரு வீட்டார்களுக்கும் எல்லாரும், எல்லாம் பிடித்துப் போக… லௌகீகப் பேச்சு தொடர்ந்தது.

“எங்களுக்கு வரதட்சணை விருப்பமில்லே. அதனாலே எங்களுக்கு அது வேணும் இது வேணும்ன்னு ஆசைப்படலை. பையன் கை நிறைய சம்பாதிக்கிறான். உங்களுக்கும் எங்களுக்கும் குறை இல்லாம உங்களால எது முடியுமோ அதை செய்து திருமணத்தை முடிங்க..”மாப்பிள்ளை அண்ணன் துரைவேலு சொன்னான்.

“ஆமாம் சம்பந்தி !”அவன் அப்பா தலையசைத்தார்.

இதற்கு மேல் பெண்ணைப் பெற்றவர்களுக்கு ஒரு இடம் கிடைக்குமா..? சுமதி அம்மா, அப்பாவும் சம்மதித்து அப்போதே தாம்பூலம் மாற்றி விட்டார்கள்.

மனம் நிறைந்த மாப்பிள்ளை. சுமதிக்குப் புளகாங்கிதம். மனம் ஆகாயத்தில் பறந்தது.

பத்து நாட்களில் சடங்கு, சம்பிரதாயங்களுடன் பெண் வீட்டிலேயே நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் உறுதி பட்டது.

இதற்கு மேல் என்ன தடை. மனதில் கணவனாகவே வரித்தாள். திருமண நாள்வரை அந்த கனவிலேயே மிதந்தாள்.

விடியற்காலை முகூர்த்தம்.

நாலு மணிக்கு…..

“மாப்பிள்ளையைக் காணோம் !”- மண்டபம் அமர்க்களப்பட்டது.

“மாப்பிள்ளை ரெண்டு மணிக்கே மண்டபத்தை விட்டு வெளிக் கிளம்பி எவகூடயே ஓடிட்டாராம் !”தோழி வந்து சுமதி காதில் இடியை இறங்கினாள்.

இவளுக்குத் தலை சுழன்றது.

“ஒன்னும் வேணாம். நீங்க செய்யிறதைச் செய்யுங்கன்னு சொல்லும்போதே இதுல ஏதோ வில்லங்கம் இருக்குன்னு நெனைச்சேன். ! ”

“பையன் ஒருத்தியைக் காதலிக்கிறான்னு தெரிஞ்சும்….அவன் காதலை ஏத்துக்காம பிடிவாதம் பிடிச்சி ஏன் பொண்ணு பார்க்க வந்தீங்க..? திருமணம் வச்சீங்க..? ”

“இன்னைக்கு அவகூட ஓடி…. எல்லார் முகத்திலும் கரியைப் பூசினது மட்டுமல்லாம எங்களை அவமானப் படுத்தி, ஒரு பெண் ணோடா வாழ்க்கையைக் கெடுத்துட்டீங்களே. மணமேடை வரை வந்த எங்க பொண்ணை இனி எவன் கட்டிப்பான்..? ”

“எங்க பொண்ணுக்கு நீங்கதான் வழி பண்ணனும். இல்லேன்னா கொலையே நடக்கும் ! ”

பெண்ணின் உறவினர்கள் எகிறினார்கள்.

துரைவேலும், அவன் அப்பாவும் நடுவில் நின்று பரிதாபமாக விழித்தார்கள்.

சுமதிக்கு எல்லாம் காதில் விழ இடிந்து அமர்ந்திருந்தாள்.

“ஐயா ! இங்கே எல்லா செலவுகளையும் நாங்க ஏத்துக்கிறோம். இங்கே…. மணப் பெண்ணுக்கு முறைப் பையன் யாராவது இருந்தா கட்டி வையுங்க. நாங்களே முன் நின்று நடத்தறோம். மனசார வாழ்த்தறோம். ஐயா ! நாங்க தப்புப் பண்ணிட்டோம். பையன் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுட்டான். மன்னிச்சுக்கோங்க.”துறைவேலு கையெடுத்துக் கும்பிட்டான்.

அவன் அப்பா எதுவும் பேசாமல் மரம் போல் நின்றார்.

சுமதி அதிர்ஷ்டம்… மண்டபத்தில் அப்படி ஒருவருமில்லை. இருந்த இரண்டொருவரும் மனைவி மக்கள்களுடன் இருந்தார்கள்.

“விபரம் தெரிஞ்சி விளையாடுறீங்களா…?”ஒருத்தர் எகிறி சட்டையைப் பிடித்தார்.

“ஆளில்லேன்னா…இவனைத் தாலிக் கட்டக் சொல்றேன்ய்யா..”பதறிப் போன அவன் அப்பா இடையில் புகுந்து கை எடுத்துக் கும்பிட்டார்.

“டேய் ! கிழவன் புத்திசாலி. மனைவியை இழந்தவனுக்கு இப்படி திருமணம் முடிக்கத் திட்டம் போட்டு சதி பண்ணி இருக்கான் !”வேறொத்தர் அவர் மீது பாய்ந்தார்.

“ஐயா ! ஐயா ! நாங்க அப்படி நினைக்கல. அப்படி தரம் கெட்ட புத்தியும் எங்களுக்கில்லே. பையன் எங்களுக்குப் பிடிக்காத பெண்ணைக் காதலிச்சான். மிரட்டி, உருட்டினா சரியாய் போயிடுவான்னு நெனைச்சி… அவனைத் தட்டி வச்சு ஏற்பாடு செய்தோம். பணிஞ்சவன் மாதிரி நடிச்சி இப்படிப் பழி வாங்கிட்டான்.”அவர் கதறினார்.

கூனிக் குறுகினார்.

எல்லோருக்கும் இளகிப் போயிற்று. ஒரு வழியாக சமாதானமாகி பேசி முடித்து துரைவேலு சுமதி கழுத்தில் தாலி கட்டினான்.

முதலிரவில்…

“சுமதி ! இது நாம எதிர்பாராத திருமணம். உனக்கு என்னைப் பிடிக்குதோ பிடிக்கலையா… விதி நம்ம ரெண்டு பேருக்கும் முடிச்சிப் போட்டுடுச்சி. என்னைக்கு .. உனக்கு என்னோடு வாழலாம்ன்னு தோணுதோ… அன்னைக்கு நம்ம முதலிரவை வைக்ககலாம்..!”சொல்லி விலகிப் படுத்தான்.

ஏன்… கூடத்தில் வந்து தள்ளியே படுத்தான்.

பிள்ளையைப் பெற்றவர்களுக்கு எத்தனை நாட்களுக்குப் பொறுக்கும்..?

ஒருநாள் இவளைப் பிடித்து…

“சுமதி ! பெத்தவங்களுக்குக் காதல்ன்னாலே கசப்புதான். காதலிச்சவங்கதான்… தன் காதல்ல உறுதியா இருந்து ஜெயிக்கனும். அதை விட்டுட்டு இப்படி பெத்தவங்களுக்குப் பயந்tது நடிச்சி தலையில் கல்லைத தூக்கிப் போட்டு ஓடுறவங்க சரியான கோழைங்க.இவுங்களுக்கு வேறொருத்தரோட திருமணம் முடிச்சாலும் ஒழுங்கா வாழமாட்டாங்க.ஒத்துமையா இருக்க மாட்டாங்க. இந்தப் புள்ள துரைவேலு தங்கமானவன். மனைவி செத்து ரெண்டு வருசமானாலும் இன்னும் மருமணத்தை நினைக்காம, மாத்தாளை ஏறெடுத்துப் பார்க்காத தங்கம். நீ மனசார அவனை ஏத்துக்கிட்டீன்னா அவன் தங்கமாய் உன்னை வச்சி தங்குவான் !”மாறி மாறி சொன்னார்கள்.

அப்படியும் இவளுக்கு மனசில்லை.

இதோ விவாகரத்துப் பாத்திரம்.! என்ன செய்ய…? தீவிரமாக யோசித்தாள்.

தன் மாமனார், மாமியார் சொன்னது… மறுபடியும் காதில் ஒலிக்க….தெளிந்தாள்.

உடன் அந்த விவாகரைத்துப் பத்திரத்தை எடுத்து சுக்கு நூறாகக் கிழித்தாள். அதோடு முருகன் படத்தையும் சேர்த்து எரித்தாள்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *