எப்போது ஒளிரும்? – ஒரு பக்க கதை





வெயிலின் கொடூரப்பிடியில் சிக்கித் தவித்த மரங்கள் தங்களது கூந்தலை உதிர்த்துவிட்டு காட்சியளித்தன. உமிழ்நீரை நாய்கள் சுரந்து கொண்டு இருந்தன. வாகனங்கள் எப்போதும் போல் சென்று கொண்டு இருந்தன.

தெருக்களில் சிலரே அங்குமிங்கும் உலாவிக்கொண்டு இருந்தனர். காலை ஐந்து மணிக்கே ரிக்ஷா ஸ்டாண்ட்க்கு வந்த மாணிக்கத்துக்கு கவலையாக இருந்தது. அவரது ரிக்ஷாவுக்கும் சவாரி கிடைக்கவில்லை.
“மிதிச்சு பாக்குற வேலை; நம்மையே மிதிச்சுப் பாக்குதே! மணியும் ரெண்டு ஆயிருச்சு” தனக்குள் நொந்து கொண்டார்.
“வரும் போது பிஸ்கட்டும் தலையாட்டும் பொம்மையும் வாங்கிட்டு வாங்க அப்பா” மூன்றாம் வகுப்பு படிக்கும் மகன் மோகன் சொன்னது நினைவுக்கு வர கண்கலங்கினார்.
“காலையில் இருந்த காசுக்கும் சிங்கிள் டீ சாப்பிட்டது தான். தண்ணீர் குடிக்கச் செல்லலாம் என்றால் அதற்குள் யாராவது சவாரிக்கு வந்துவிடுவார்களோ
“பரவாயில்லை” அடிகுழாய்க்குச் சென்றார். அடித்தார் தண்ணீர் வரவில்லை! அதற்கு பதிலாக அவருக்கு எலப்பு தான் வந்தது.
பசி மயக்கம் தலை சுற்றியது. உடல் சோர்ந்து கொண்டு இருந்தது. தன்னையே ஆறுதல் படுத்திக்கொண்டு ரிக்ஷாவை பக்கத்துக்கு தெருவுக்கு ஓட்டிச் சென்றார்.
“பயங்கர கூட்டம்”
“நல்ல வேளை கூட்டம் இருக்க இடத்துக்கு வந்தோம். யாராவது சவாரிக்கு வருவாங்க”
வயிறு கிள்ளியது பசி மயக்கம்.
மணியும் மாலை நான்கு ஒன்றுமே சாப்பிடாததால் முக்கால் மயக்கத்தோடு ரிக்ஷாவிலேயே படுத்திருந்தார்.
“பட்டப்பகல்ல பொழப்பப் பாக்காம மலிவு விலை பிராந்திக் கடையில் மது அருந்திட்டு மல்லாக்க கெடக்குறான். இவனுக்கிட்டவா சவாரி பண்றது” சவாரி செய்ய வந்த பெரியவர் வாய்விட்டு சொல்லிச் சென்றார்.
மெதுவாக கண்விழித்தவருக்கு அப்போதுதான் புரிந்தது; அருகில் மதுக்கடை இருப்பது. இங்கு மதுக்கடைதான் ஒளிர்கிறது; நம் வாழ்க்கையெங்கே ஒளிர்கிறது; அந்தப் பெரியவரையும் மதுக்கடையவும் பார்த்தவாறு அசட்டுச் சிரிப்பு சிரித்தார்.
அப்போது அவருக்கு அருகில் ஒருவன் குடித்துவிட்டு தள்ளாடிச் சென்றான்.
– தாழம்பூ 25 வது ஆண்டு மலரின் வெளியானது 2007
– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.