என் பையன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 1, 2024
பார்வையிட்டோர்: 1,072 
 
 

வீட்டுக்குள் நுழைந்த பையனின் முகத்தை பார்த்த பார்கவிக்கு மனசு பக்கென்றிருந்த்து. முகம் எல்லாம் இருண்டு கலையிழந்து சோர்வாக தெரிந்தான். என்னடா என்னாச்சு, ஏன் இப்படி இருக்கே? ப்ச்சு…ஒண்ணுமில்லை…

டேய் ஒண்ணுமில்லைன்னு சொல்றே, முகத்தை பார்த்தா அப்படி தெரியலையே? ஒண்ணுமில்லையின்னா விடேன், சலித்துக்கொண்டான்

டேய் முதல்ல ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லைன்னு சொல்றதை நிறுத்து, இப்ப ஏன் இப்படி இருக்கே? அதை மட்டும் சொல்லு? விடும்மா..கொஞ்சம் டயர்டா இருக்கு, குடிக்கறதுக்கு ஏதாவது இருந்தா கொடு, அப்புறம் விசாரிக்கலாம்

சரி முதல்ல காப்பி எடுத்துட்டு வர்றேன், குடிச்சுட்டு அப்புறம் சொல்லு.

காப்பி குடித்து முடித்தவன் சற்று ஆசுவாசமாக உட்காருகிறான். இப்ப சொல்லு என்ன பிரச்சினை, பசங்க யார் கூடவாவது சண்டை போட்டியா? இல்லை ஸ்கூல்ல ஏதாவது பிரச்சினையா?

ஒண்ணுமில்லைம்மா..இந்த கிளாஸ் மிஸ்தான் சும்மா சும்மா பிரச்சினை பண்னறாங்க

ஏன் என்னாச்சு, அவங்க எதுக்கு உன்னைய டார்ச்சர் பண்ணனும்?

ஒண்ணுமில்லை, நான் பிரண்டுகிட்டே பேனா கேட்டுகிட்டிருந்தேன், அப்ப ஒரு பேப்பர்ல எவனோ ஒரு படம் வரைஞ்சு என் டேபிள்ள போட்டுட்டான், அப்ப பார்த்து அந்த மிஸ் என்னைய பார்த்துட்டு எழுந்து நிக்க வச்சிருச்சு, அதுவும் கிளாஸ் எல்லா பசங்க முன்னாடியும் நிக்க வச்சிடுச்சு, முக்கால் மணி நேரம் அவங்க கிளாஸ் முடியற வரைக்கும்..குரல் உடைவது போல் இருந்தது. வேண்டாம் விட்டால் அழுதுவிடுவான் என்று தோன்றியதால் அவனது தோளை தட்டி சாந்தப்படுத்தினாள். நாளை வேலை முடிந்து வரும்போது அந்த டீச்சரை பார்த்துக்கொள்கிறேன் முடிவு செய்தாள்.

அவள் கணவன் இரவு வந்ததும் இதை பற்றி பிரஸ்தாபித்தாள். இவள் கோபம் கொண்ட அளவுக்கு அவனுக்கு கோபம் வரவில்லை எனபதே இவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஏங்க அந்த டீச்சர் நம்ம பையனை இப்படி பண்ணிடுச்சேன்னு கவலையில சொல்லிட்டிருக்கேன், நீங்க பாட்டுக்கு இருந்தீங்கன்னா? .

ப்ளீஸ் பார்கவி புரிஞ்சுக்கோ, அவனவன் வேலை செஞ்ச டயர்டுல வந்திருக்கேன், நாளைக்காலையில இதை பத்தி பேசலாம், இப்ப சூடா ஏதாவது இருந்தா கொடேன் க்கூம்..எனக்கும், பையனுக்கும்னா உங்களுக்கு ஒண்ணும் வராது, இதே உங்க தங்கச்சி குழந்தைகளா இருந்தா எகிறி குதிச்சிருப்பீங்க? அலுத்துக்கொண்டே அங்கிருந்து சென்றாள்.

மறு நாள் வேலை முடிந்து காரை அந்த பள்ளியின் முன்னால் நிறுத்த்ம்போது மாலை ஆறு மணி ஆகி விட்ட்து. சே..வேலை முடிய இந்நேரம் ஆகி விட்ட்து, இப்பொழுது உள்ளே போய் பார்க்கலாமா? வேண்டாமா என்ற சிந்தனை வந்தாலும் வந்த்துதான் வந்தோம், உள்ளே சென்று பார்த்து விடுவோம்

வாட்ச்மேனிடம் காரை நிறுத்தி உள்ளே யாராவது இருக்கிறார்களா? என்று கேட்டாள். இப்பத்தான் டீச்சர்ஸ் மீட்டிங்க் முடிஞ்சு, எல்லாரும் கிளம்பி போனாங்க, பிரின்ஸ்பால் இருக்காங்க. அது போதும் சர்ரென்று காரை உள்ளே கொண்டு சென்று நிறுத்தியவள், வேகமாக பிரின்ஸ்பால் அறைக்கு வந்தாள். வெளியே நின்றிருந்த அலுவலக பணியாளர் இவளை கண்டவுடன் நீங்க?

நான் ராஜேஸ் எய்த் பி படிக்கிற் ஸ்டூடண்டோட அம்மா, பிரின்ஸ்பாலை கொஞ்ச்ம் பாக்கணும். ஒரு நிமிசம் உள்ளே சென்றவன் ஐந்து நிமிட்த்தில் வெளியே வந்து கூப்பிடறாங்க..இவள் உள்ளே நுழையும்போதே கவனித்தாள், பாவம் கிளம்பும் மன நிலையில் இருந்திருக்கிறார், அதற்குள் நான்..? அதற்கு மேல் சிந்திக்கவில்லை. மட மடவென தன்னை அறிமுகப்படுத்தியவள் தான் பணி புரியும் கம்பெனி பேரையும் சொல்லி அதில் தனது உயர்ந்த பதவியையும் குறிப்பிட்டாள்.

பிரின்ஸ்பால் சற்று உள்புறமாய் உட்கார்ந்தார். வந்திருப்பவள் கொஞ்சம் உயர்ந்த ஸ்தானம் என்பதால் கிளம்புவதை சற்று தாமதப்படுத்தலாம் முடிவு செய்தவர் சொல்லுங்க என்ன விஷ்யமா என்னை பார்க்க வந்திருக்கறீங்க?

இவள் தன் மகன் நேற்றிலிருந்து மன வேதனையில் இருப்பதாகவும், அவனது கிளாஸ் டீச்சர் எல்லா மாணவ மாணவிகள் முன்னாடி நாற்பது நிமிடம் நிற்க வைத்து விட்ட்தாகவும் சொன்னாள். ஒரு மாணவனுடைய மன்நிலை இதனால எப்படி போகும்னு கூட தெரியாத டீச்சர் எப்படி இவங்களுக்கு பாடம் எடுக்க முடியும்?

பிரின்ஸ்பால் சற்று நேரம் யோசித்தவர், நாளைக்காலையில இதை பத்தி விசாரிச்சு உங்களுக்கு பதிலை சொல்றேன்.

நீங்க கண்டிப்பா அந்த கிளாஸ் டீச்சர்கிட்ட இதை பத்தி ‘எக்ஸ்பிளெனேசன்’ கேட்கணும், இதனால அவங்க பேரண்ட்ஸ்க்கு ஏற்பட்ட வருத்தத்தையும் சொல்லணும்.

கண்டிப்பா செய்யறேன். அவர் உறுதி கூறியதும், இவள் முகத்தில் சற்று புன்னகையை காட்டி நீங்க வேணா எங்கூட வாங்களேன், எங்க நீங்க இறங்கணுமோ அங்க இறக்கி விடறேன்.

வேண்டாம் ரொம்ப தேங்க்ஸ்.. கண்டிப்பா நாளை இதை பத்தி விசாரிக்கிறேன்.

இப்பொழுதுதான் பார்கவியின் மனம் சற்று நிம்மதியானது. இரவு கணவனிடம் இதை பற்றி பெருமையாக சொன்னாள். அந்த கிளாஸ் டீச்சரை கண்டித்து வைக்க சொன்னதாகவும் சொன்னாள் இதெல்லாம் எதுக்கு? பாவம் அந்த டீச்சருக்கு வேலையில பிரச்சினை வராதா?

ஆமா உங்களுக்கு நம்ம பையனை இப்படி பண்ணிட்டாளேன்னு கோபம் வரலை, அந்த பொண்ணுக்கு வேலை போயிடும்னு மட்டும் கவலை வந்திடும்..இவளின் பேச்சுக்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை.

இரண்டு நாட்கள் ஓடியிருந்தது. இவள் தனது அலுவல்க வேலை பளுவில் அதை பற்றி மறந்து விட்டாள். அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று மணி இருக்கலாம். காலிங்க் பெல் சத்தம். இவள் அப்பொழுதுதான் சாப்பிட்டு சற்று கண்ணயரலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தாள்.

கதவை திறந்தவள் எதிரே ஒரு இருபத்தைந்து மதிக்கத்தகுந்த பெண் நின்று கொண்டிருந்தாள். வணக்கம் என் பேர் ‘பிலோமினா’ நான் உங்க பையனோட கிளாஸ் டீச்சர். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள்.

அதுவரை பைய்னை பற்றிய மறைந்து போன நினைவுகள் மீண்டும் வர அந்த பெண்ணை உள்ளே வர சொன்னாள். பிரின்ஸ்பால் ஏதாவது சொல்லியிருப்பார், அதற்காக தன்னிடம் மன்னிப்பு கேட்க வந்திருப்பாள் என்று மனதுக்குள் நினைத்து கொண்டாள்.

சாரி இந்நேரம் வந்து உங்களை தொந்தரவு பண்ணறதுக்கு மன்னிக்கணும், பிரின்ஸ்பால் கிட்டே ரொம்ப வருத்தப்பட்டிங்களாம், நான் உங்க பையனை எல்லார் முன்னாடி நிக்க வச்சதுக்கு.

இவளுக்கு கோபம் தலைதூக்கியது, பின்னே அது தப்பில்லையா? அத்தனை பேர் முன்னாடி நிக்கவைக்கறது.

பிலோமினா இவளின் கோபத்தை கண்டு கொண்ட்தாக தெரியவில்லை, சற்று நகைத்து அதுக்கு முன்னாடி உங்க பையன் கிட்டே என்ன சொல்லி நிக்க வச்சேன்னு சொன்னானா?

இவள் சற்று குழம்பி இல்லையே?

இங்க நின்று எல்லா மாணவ மாணவிகளை பார், அவங்க முகம் பார்த்து நிற்கற போது ஒரு ஆசிரியர் இவ்வளவு பேர் பார்வையில எப்படி தெரிவார் அப்படீன்னு உனக்கு புரியும்னு சொன்னேன்.

மீண்டும் குழப்பமாய் பிலோமினாவை பார்த்து அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

பிலோமினா தனது கைப்பையில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து பார்கவியிடம் கொடுக்க அதில் ஒரு பெண் ஆபாசமாய் போஸ் கொடுப்பது போல் நின்றிருந்தது. இவள் திகைப்புடன் அதை பார்க்க..

உங்களுக்கு புரியுதா? அவன் என்னைத்தான் இப்படி வரைஞ்சிருக்கான்னு? அவன் மனசுல எந்தளவுக்கு ஒரு டீச்சரோட உருவம் பதிஞ்சிருக்கும்னு

ஐ..ஆம்.சாரி..பார்கவிக்கு உள்ளம் நடுங்கியது இவனா? அப்பாவியாய் பள்ளிக்கு வந்து போய் கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் நம் பையனா?

தயவு செய்து நான் சொல்றதை கேளுங்க, அவனுக்கு இப்ப பெற்றோர்களுடைய அரவணைப்பு தேவை. பெண்களை பற்றிய பார்வையை மாத்தறதுக்கு அதுதான் நல்லது. நீங்க அதுக்கு முயற்சி எடுங்க, மறுபடி மன்னிப்பு கேட்டுக்கறேன். இதைய சொல்லிட்டு போகத்தான் இங்க வந்தேன்.

பிலோமினா கை குவித்து வணக்கம் சொல்லி விடை பெற திரும்பும் போது இவள் குற்ற உணர்வுடன் பிரின்ஸ்பால்கிட்டே..இழுத்தாள். சொல்லலை, சொன்னா அது வேற மாதிரி ஆயிடும். உங்க பையனோட வாழ்க்கை பிரச்சினை. அவங்க என்னைய சத்தம் போட்டாங்க. நான் அதுக்காக அவங்க கிட்டே சாரி கேட்டுகிட்டேன்.

பார்கவி சட்டென்று பிலோமினாவை அணைத்து ஐ.ஆம்.சாரிம்மா..நான்தான் புரிஞ்சுக்காமா… .உன்னையப்பத்தி…

நான் வரட்டுமா, பிலோமினா செல்வதை பார்த்துக்கொண்டிருந்தாள் பார்கவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *