என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 8, 2025
பார்வையிட்டோர்: 754 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இப்படி ஆரம்பிக்கையிலேயே பாஸ்கர், எனக்கு உடம்பை என்னவோ பிய்த்துப் பிடுங்குகிறது. ஆனால் வேணும் என்றேதான். இருக்கட்டும். இந்தக் கடிதம் உனக்கு ‘ஷாக்’காக இருக்கலாம். ஆனால் எனக்கு இதுவே பிராயச்சித்தமாக இருக்கக்கூடும் என்பதனால்தான் நம் சினேகத்தின்பேரில் பாரம். 

“ஆமாம், இன்றிரவு பன்னிரண்டு வரை கடற்கரையில், அலையோரம் படகடியில், அனு, நீ, நான் அரட்டை அடித்துவிட்டு, இதென்ன கடிதம் வேண்டிக் கிடக்கிறது?e என்று நீ வியப்புறுவது நியாயமே. இன்று நான் மறக்க முடியாத என் மிக்க மிக்கச் சந்தோஷ நாள். இன்று அனு Simply Scintillating. பேச்சில், தோற்றத்தில், கண்களின் ஒளியில், என்ன ஜாஜ்வல்யம்! என் பரவசம் அதன் கவானின் உச்சியைத் தொட்டுவிட்டது. எனக்கே தெரிந்துவிட்டது.

நான் ஸஸ்பென்ஸை வெறுப்பவன் It is cheap, vulgar, silly, artificial. 

என் பிரியமுள்ள சினேகிதனே, I love your wife. இதை நான் நேரிடையாக உன்னிடம் சொல்ல முடியுமா, நீயே சொல். 

பாஸ்கர் உடனே தப்பாக நினைக்க அவசரப்பட்டு விடாதே. எங்களிடையே ஒரு தப்பும் கிஞ்சித்தும்கூட நேர்ந்துவிடவில்லை. அனுவுக்கு என் நிலை பற்றி ஒன்றுமே தெரியாது. தெரிந்தாலும் அவள் எனக்குக் கிடைக்க ட்டாள் அதனாலேயே என் சத்தியத்தை, உன் முன்னிலையில், பொட்டென்று உடைக்கிறேன். 

இதனாலேயே it is time for my Exit. ஆமாம்,சும்மா ‘நாக்குப் கதையிலும், வம்பிலும், ஏன் நடப்பிலும்தான், பட்டே நைந்துபோன இந்த eternal triangle நிலையை நான் எங்கே? உண்டாக்கப் போவதில்லை. I am going away. இந்த நிமிஷம் வரை அறியேன். இப்போதைக்கு இந்தக் கடிதத்தை எழுதி முடிப்பதில்தான் என் முழு முனைப்பு. என் தன்மையின் உண்மையை, அல்லது என் உண்மையின் தன்மையையா? அதன் செப்புச் சுருளைப் பிரித்துப் படித்துப் பார்த்துவிடணும். அவரவர் தன்மையின் உண்மை, கண் ணுக்குப் புலனற்ற தாமிர இலையில் வரைந்து ஒவ்வொரு பிறவியினூடே, அதன் மூளையில் செருகி அனுப்பப்படுகிறது என்று எனக்குப் பிடித்தமானதொரு கற்பனை. தாமிரமாக இருப்பானேன்? என்னைக் கேட்காதே. ஆசாரத்துக்குத் தாமிரம் என்று நம் ஐதீகம். என்னதான் பகுத்தறிவு வாதத் திலும் இப்படி ஒரு சபல புத்தி, அசடு. பாஸ்கர், எவனுமே எப்படியோ ஒரு முழுக்க முழுக்கப் பகுத்தறிவாளி அல்லன். பழம் பிசுக்கு நம்முடன் ஒட்டிக்கொண்டுதானிருக்கிறது. ஜன்மப் பிசுக்கு? இல்லை அதன் மறுபெயரில் Call it the. greasiness of evolution. விதி, நம்பிக்கை, கடவுள் என்கிறோமே இவையெல்லாமே உயிர்த் தொடர்பின் காரைப் பூச்சுத்தானே! நான் விஷயம் தாண்டிப் போகவில்லை. என்னுடைய all out sinceriety அதுவே ஒரு நாடக பாணியாக என்கிற கவலைதான். ஆகிவிடாமல் இருக்கவேண்டுமே ஆகவே என் பிரியமுள்ள சினேகிதனே, here goes. 

ஒரு நிமிஷம், பாஸ்கர். நான் நல்ல தமிழ் எழுதுகிறேன் இல்லை? எல்லாம் காலேஜில் உன் சிக்ஷைதான்! 

பாஸ்கர், நான் மகானில்லை. ஓ, உனக்கு அது தெரியும். ஒரே வார்த்தையில் சொல்லப் போனால் ஒண்ணு பாக்கியில்லை. ஆனால் எனக்கு எதிலேயுமே பிடிப்பு இல்லை. என் கோளாறே அதுதான். இதைவிட அது, அதைவிட எது என்று ருசி பார்த்துப் பார்த்தே, கிளைக்குக் கிளை தாவியே, எனக்கு எதிலுமே ஆழமான பற்று இல்லாமல் போய் விட்டது. பற்றற்றானின் தனிமை பயங்கரம். பாஸ்கர். 

என் பெற்றோர்கள். எனக்குச் சின்ன வயதிலேயே, மோட்டார் விபத்தில் இருவருமே மாண்டபின், nursery, nursing home, hostel, hotel என்று வளர்ந்து, இதற்குள் வங்கியின் trusteeship இல் விட்டுப்போயிருந்த என் சொத்து எக்கச்சக்கமாக வளர்ந்து, எனக்கு வயது வந்ததும் என் னிடம் ஒப்படைக்கப்பட்டதும், அதன்மேல் முதல் வெறி தணிந்த பின், அப்புறம் என்ன? extreme boredom தான். மாறுதலுக்கு, மாற்று ஏதோ ஒண்ணு எனும் desperation, depression தான். எனக்கு discipline கிடையாது, எனக்கே தெரிகிறதே! 

காலேஜிலிருந்தே என்னை அறியாமலே எனக்கு இந்தப் பார்வைதான் என்று எனக்கு இப்போ தெரிகிறது. அப்பவே உனக்கு நான் அப்பப்போ புத்தகம், நோட்புக், special fees என்று திருப்பித் தரமுடியாத கடன்களாக உதவி செய்த போதிலும் எனக்கு உள்ளூர Amusement தான். உன் நிலைமை, பாஸ்கர்,பாவம், அப்போதிலிருந்தே, ஏன், எப்பவுமே சரியாக இருந்ததில்லை அல்லவா? என் பேப்பர் களை நீ தயார் செய்தாய், என் home workஐ நீ செய்தாய். நீ எனக்கு ஒரு Sydney Carton ஆக இருந்தாய், பேரம் நல்ல பேரம்தான், இல்லையா? 

ஆனால் பாஸ்கர், திவாகர் ஒன்றும் dull boy அல்ல. அதற்கென்ன, உன்மாதிரி தங்கப் பதக்கம் வாங்கமுடியாது என்னால். என்னிடம் முயற்சி என்கிற பெயரில் உடலுக்கும் மனதுக்கும் வரவழைத்துக்கொள்ள உற்சாகம் மட்டும் இருந்தால்,உன் தயவே எனக்கு வேண்டாம். ஆனால் அவ்விதமான முயற்சியே எனக்கு ஒரு bore. அதனாலேயே அதை நான் படவில்லை. எதிலுமே எனக்கு அலுப்பு. எல்லாமே வசதியின் கோளாறுதான். வசதியே ஒரு பீடை. 

‘அப்படி உனக்குச் செல்வத்தின் பாரம் தாங்க முடியா விட்டால் வாரி வழங்கேன்! ஆஸ்பத்திரி,கோயில், அனாதை இல்லம், டொனேஷன் – என்ன இல்லை என்கிறாயா? அங்கேயும் எனக்கு ஒரு fixation. தர்மம் செய்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. அழித்தாலும் அழிப்பேன், கொடுக்க மாட்டேன். என்னுடன் அது ஒரு கொள்கையாகவே ஆகி விட்டது. சும்மாக் கொடுப்பதால் உண்மையில் சைத்தான் பட்டறையும், சோம்பேறிப் பண்ணையும், Corruptionஉம் தான் வளர்கின்றன நான் கண்மூடத்தான் ஒட்டுண்ணி களும் பருந்துகளும் கழுகுகளும், நீ குறிப்பிட்ட பெயர்களில் காத்திருக்கின்றனவே! ஒப்படைக்க என் உயிர் வேளையி லேயே என்ன அவசரம்? 

‘கலியாணம் பண்ணிக்கொள்ளலாம்’ என்பாய். Enough. Drop it. 

அப்புறம் இன்னொரு விஷயம். இப்படி எல்லாமிருந்தும், எல்லாவற்றிலும் அலுப்புத் தட்டியவனிடம், தனியாக ஒரு குரூரம் வளர்கிறது. தான் இன்பம் காண முடியாமையால் பிறரைத் துன்புறுத்துவதில் ஒரு இன்பம். அதுவே ஒரு பொழுது போக்கு. அவனவன் ரத்தத்தைப் பரிசோதனை செய்தால், அதன் அணுக்களில் நீரோக்களும், கலிகுலாக் களும்தான் நீந்துகிறார்கள். இதயத்தின் மர்ம அரங்கு Roman Arenaத்தான். மாறுதலாக வேறு ஏதேதோகூட இருக்கலாம். ஆனால் அவனவனுக்கு என்ன பார்க்கக் கிடைக்கிறதோ அதுதானே! 

So! உன் கலியாணத்தின் ரிஸெப்ஷனுக்கு நான் வந்த போது – ஜானவாசத்துக்கே எதிர்பார்த்ததாக நான் வந்ததும் கோபித்துக்கொண்டாய் – நான் ஒரு ரோஜாப் பூவை, அதன் காம்பு ஒடியாமல், வெகு ஜாக்கிரதையாக ஒரு மிகை மரியாதையுடனேயே உன் மனைவியிடம் சமர்ப் பித்தபோது. “ச் அனு,இவன்தான் திவாகர், என் ஆப்த நண்பன்” என்று நீ அறிமுகப்படுத்தினாலும், உன் முகம் விழுந்தது எனக்கல்லவா தெரியும்? உள்ளூர எப்படி அனுப வித்தேன் தெரியுமா? குறைந்தபட்சம ஒரு ப்ரஷர் குக்க ரேனும் எதிர்பார்த்தாய் அல்லவா? Oh! my secret laughter! 

ஆனால் அனு, எவ்வித கல்மிஷமுமில்லாமல், புன்சிரிப்புடன், என் புஷ்பத்தை வாங்கிக்கொண்டு தலையில் சொருகிக்கொண்டதும் – நம்பினால் நம்பு. நம்பாட்டிப் போ- அதுவே ஒரு Pleasure ஆக இருந்தது; Oh strange Pleasure, இதுவரை எனக்குப் பழக்கமில்லாத ஒரு Pleasure. 

என் secret laughter இத்துடன் முடியவில்லை. 

ஒரு பத்து நாள் கழித்து.மாலை, உன் வீட்டுக்கு வந்தேன். இதெல்லாம் உனக்குத் தெரியாததல்ல. ஆனால் எழுத்தில் இப்படி நினைவுகூட்டிப் பார்ப்பதில் ஒரு தனி கவித்வம், எனக்கே சொந்தமானதோர் சந்தோஷம். ஒரு புது dimension உணர்கிறேன். 

அனு நல்லாத்தான் டீ செய்கிறாள். 

என் பாக்கெட்டிலிருந்து ஒரு சின்ன சம்புடத்தை எடுத்து னுவிடம் கொடுத்து– 

“Press the button.” 

உள்ளே, கருநீல மெத்தையில், ஒரு ஜோடி தொங்கட்டான்கள் அனுவுக்குத் தோளுக்கு இறங்கக்கூடும். ஆனால், பாஸ்கர் உன் முகத்தைத்தான் ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்தேன். ஆ! உன் கண்களில் என்ன ‘குபீர் ‘- உன் மேல் தப்பே இல்லே பாஸ்கர், மனித எடையே அவ்வளவுதான். நான் ஏன் கலியாணம் செய்துகொள்ள வில்லை தெரிகிறதா? 

“நிஜ வைரம்போல இருக்கே!” என்றாய். 

“Put it on, lady!” அவசரப்படுத்தினேன் 

ஆனால் அனு, பெட்டியை உள்ளங்கையில் தாங்கியபடி, உதட்டில் புன்னகையின் நிழலாட, நகையைச் சிந்தித்துக் கொண்டிருந்தாள். விழிகளில் பெரும் ஆழம். அனுவுக்குக் கண்கள் பாயின்ட். அந்த சமயத்தில் அந்த பாப்பாக் களுள் ஏதேதோ, ஏதேதோ நான் பார்த்திராத மீன்கள் நீந்துவதுபோல எனக்குப் பிரமை தட்டிற்று. 

இதற்குள், என் கைக்கடியாரத்தில் வினாடிகள், நா செவிக்கு வைக்காமலே, அவைகளின் நொடிப்புக் கேட்டது போல் – அதுவும் பிரமையா, நிஜமா? 

“அனு. நான் மாட்டிவிடட்டுமா” ஐயோ பாஸ்கரா, என்ன பரிவோ? 

”Take it take it!’ 

“போட்டுக்கோ அனு, திவாகர் என்னுடைய dearest friend” 

Oh, my secret laughter! 

அனு, ஒரு பெருமூச்செறிந்து, பெட்டியை என்னிடம் நீட்டினாள், மறுப்பில் தலையை ஆட்டினாள். 

”வாங்கிக்கொள் அனு, இதை உனக்குக் கொடுக்க எனக்குச் சக்தியிருக்கிறது! 

மீண்டும் தலையை ஆட்டினாள். அவள் புன்னகை ஆழ்ந்தது. 

“உங்களுக்குச் சக்தியிருக்கலாம் கொடுக்க. ஆனால் வாங்கிக்கொள்ள எங்களுக்குச் சக்தி வேண்டாமா? தற் சமயம் நிச்சயமாக இல்லை. ரொம்ப thanks. உங்கள் டீ ஆறிப்போறது.” 

என் அனுபவத்தில் முதன்முறையாகக் கன்னத்தில் அறை தாங்கிக்கொள்வது சிரமமாகத்தானிருக்கிறது. 

“நகையை வேண்டாமென்று சொல்கிற பொம்மனாட்டி கூட இருக்காளா?” என்றேன். பாதி கேலி, பாதி வெறுப்பு. 

“ஏன், என்னைப் பார்த்தால் உங்களுக்கு எப்படிப் படுகிறது?” கால்கட்டை விரலிலிருந்து மார்புவரை தன்னை ஒரு கண்ணோட்டம் விட்டுக்கொண்டாள். அது அவளுடைய கேலி. “இந்தாங்கோ, பத்ரம்” நகைப்பெட்டியை என் கையில் திணித்தாள். “வரேன், அடுப்பில் குழம்பு காயறது. இங்கேயே இன்னிக்குச் சாப்பிடுங்களேன். சுண்டைக்காய் வத்தல் குழம்பு.கருவடாம் பொரிக்கப்போறேன். ஓட்டலில் கிடைக்காது. உங்களுக்குத் தினம்தான் ஓட்டல் சாப்பாடு, இன்னிக்கு என் கைவரிசையைப் பாருங்களேன்!” 

உள்ளே போய்விட்டாள். 

குழம்பு மணம் கூடத்தைத் தூக்கிற்று. 

ஆனால் நான் ஏதோ சாக்குச் சொல்லிக் கழன்று கொண்டேன் 

அன்றுதான் உங்களிருவரிடையே முதல் தர்க்கமோ, பாஸ்கர்? 

எனக்கும் அன்றிரவு சரியான தூக்கம் இல்லை; வெகு நேரம் படுக்கையில் புரண்டேன். 

அவளுடைய புன்னகை, பழத்துள் இறங்கும் கத்தி போல்,d-n her! 

எதிர்ப்பு எனக்குப் பழக்கமில்லை. ஆகையால் பிடிக்க வில்லை, கசந்தது. 

But resistance is peautiful; and is a challenge. 

அன்றிலிருந்து உன் வீட்டுக்கு வர ஆரம்பித்தேன். The challenge. பாஸ்கர், சவாலை ஏற்கணும், இல்லையா? 

நெற்றியில், உழைப்பின் வேர்வை முத்துக்கு இத்தனை அழகு இருக்குமா, என்ன? உழைப்பே அறியாத எனக்கு அது precious ஆகப் படுகிறது. 

“எனக்கே வேர்க்கும் சுபாவம்”. அவள் சிரிக்கையில் வலது கன்னம் குழிகிறது. அவள் கன்னங்களில், மூக்கு நுனியில், மோவாயில் ஆரோக்யத்தின் எண்ணெய்ப் பிசுக்கும் பளபளக்கிறது. 

“நான் கிராமத்துப் பெண். கிராமத்திலிருந்து போய்த் தான் காலேஜ் படித்தேன். தினம் பஸ். வீட்டில் எப்பவும் சுமைவேலை இருந்தபடித்தான். பெரிய குடும்பம். அதனால் வேலை செய்யாமல் இருக்க முடியாது. இங்கே என்னதான் இழுத்து விட்டுக்கொண்டாலும் என்ன சொப்பு வைத்து விளையாடுகிற மாதிரி – எதிரும் புதிருமாய் இரண்டுபேருக்கு இருக்கிற வேலைதானே இருக்கும்! மிச்சப்போதுக்கு, கொட்டடா குடையடான்னு, பொழுதைச் சுமக்க முடிய வில்லை! இம்சையாயிருக்கு. மத்தியான்னத் தூக்கம்.. பத்திரிகைகளில், பொம்மைப் பக்கங்களைப் புரட்டுவது, அக்கப்போர் – எல்லாம் இனிமேல்தான் பழக்கிக்கணும்”. மறுபடியும் அந்தச் சிரிப்பு. 

“ஏன் நீயும் வேலைக்குப் போகலாமே. ஏற்பாடு பண்ணட்டுமா?” 

“No, Thanks, வேலைக்குப் போவதில் எனக்கு நம்பிக்கையில்லை. அதற்கு உடல் வணங்கும் தன்மையும் எனக்குக் கிடையாது. வேலையிலிருந்து களைத்து வரும் ஆண்பிள்ளைக்குக் குளிர்ந்த தீர்த்தமேனும் கொடுக்கக் காத்திருக்க வீட்டில் ஒரு பொம்மனாட்டி வேண்டாமா?” 

அப்போ கஷ்டப்பட்டு காலேஜ் படித்து. டிகிரி வாங்குவானேன்?” 

“ஓ, அது கலியாணத்துக்குக் காத்திருக்கும்வரை, உருப்படியா ஒரு பொழுதுபோக்கு. வாய்ப்பாட்டு வாத்தியம், the gentle arts எனக்கு வராது. அதனால் என்ன? இஷ்டப்பட்டால் ஒரு பொம்மனாட்டிக்கு வீட்டிலேயே எத்தனை பொழுது இருக்கு தெரியுமோ?” 

“இந்த நாளில் இரண்டுபேர் சம்பாதித்துமே போதவில்லை என்பதுதானே பொதுவான புகார்? உனக்குத் தெரியாததல்ல” என்று முனகினேன். 

“அதனால்? பெண்டாட்டி பிள்ளையைக் காப்பாற்றுவது புருஷன் பாடு. அதில் நான் ஏன் புகணும்? பெண்டுகளின் வேலை இன்னதென்று இயற்கையே கோடு கிழித்து விட்டிருக்கே! அதுதான் கிராமவாசத்தின் தத்துவம் – அல்லது கோளாறா?” இப்படிச் சொல்லிவிட்டு அவள் உன்னைப் பார்த்த பார்வை… 

பாஸ்கர் உன் மனைவியை நீ பார்க்க உனக்குச் சொல்லிக் கொடுப்பதன் அதிகப்ரசங்கித்தனம் எனக்குத் தெரியாததல்ல. அதற்குக் கண் வேண்டும். ஆனால் கண்ணுக்கு உனக்குப் பொழுதில்லை அதுவும் தெரிகிறது. எவனோ ஒரு மார்வாடியிடம் மாட்டிக்கொண்டிருக்கிறாய். இடம் மாறவும் உனக்கு மனம் இல்லை. Economics இல் இதை Commercial inertia என்பார்கள். அவன் நன்றாய்த் தான் கவனித்துக்கொள்கிறான் என்று உன் மனைவியும் உனக்குச் சிப்பக் கட்டுக் கட்டுகிறாள். இருந்தாலும் உன் யோக்யதைக்கேற்றபடி ஒரு நல்ல ஸ்தாபனத்தில் – உனக்காக இல்லாவிட்டாலும் – 

யார் என்ன செய்தாலும், செய்யக் காத்திருந்தாலும், அதைத் தடுக்க, விதி என்று இருக்கத்தான் செய்கிறது போலும். உன் விதியின் பெயர் அனு. உனக்கு உதவி செய்யவும் என்னை விடமாட்டாள். அவளுடைய சகஜ பாவம், புன்னகை, சிரிக்கையில் மூக்குத்தண்டின் சுருக்கத் தின் பின்னால் ஒரு அழுத்தம், இறுமாப்பு, அவளுக்கென்று ஒரு குணம் – எனக்குத் தெரிகிறதே! என்னிடமிருந்து ஒரு தித்திப்புப் பண்டப் பெட்டி, கேக் பெட்டி, பழக்கூடை- ஊஹும், “No. Thank you!” ஆனால் வரும்போதெல்லாம். நான் டிபன், சாங்கோபாங்கமா சாப்பாடு – நானும் சாப்பிடுகிறேன். என் ரோசம் எங்கே போச்சு? The Witch. 

இப்ப எல்லாம் உன் வீட்டுக்கு வராமல் முடியவில்லை. ராச்சாப்பாடு ஆகி, அவளுக்குக் காரியம் முடிந்து, மொட்டை மாடியில் நம் மூவர் பேச்சு, அதற்காகவே வருகிறேன். The அனு magic. வெளிக்குத் தெரியாமல், அரித்து அரித்து, உள்ளே சந்தனம், ஜவ்வாது அத்தர், குங்குமப்பூ கமாளிதம். Oh God! என்னில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ரசாயனம் எனக்கும் தெரியாமலே… அந்தப் பேச்சு எனக்கு வேண்டியிருந்தது. உள்ளே ஏதேதோ ரணங்கள் ஆற்றும் தைலம் போன்ற பேச்சு. 

பாஸ்கர், அனு, ஏதோ பேரழகு என்று சொல்லிக்கலாமே தவிர, அனு அழகு அல்ல. அவள் நெற்றி மேடு, பெண் பிள்ளைக்கு அதிகம். வாய் வார்ப்பு இன்னும் சற்று சின்னதா யிருக்கலாம். உயரம் இன்னும் ஒரு அங்குலம் கூடணும், She should watch her figure. A bit on the buyom side. பிறத்தியான் பெண்டாட்டியை – அதுவும் அங்க விமர்சனம்! என்ன தைரியம்! என்கிறாயா? No, no, my son, She is not my type of sex, I would fall for. How to convince you, it is so boring, because you are boring. அதனால்தான் இந்தக் கடிதமே எனக்குக் கொட்டி ஆற்றிக்கொள்ள ஒரு களம் வேண்டாமா? 

ஆனால் ஒரு radiance, பாஸ்கர். உணர உணர விரிவாகிக்கொண்டே போகும் ஒரு ஒளிப்ரபை. அதன் நடுவில் அவள். அவளைப் பார்க்கும்போதும், கேட்கும் போதும், கவனிக்கும்போதும் ஏதேதோ மறந்துபோன தெல்லாம். இந்த ஜன்மத்தில் மட்டுமல்ல, ஜன்மேதி ஜன்மாவின் நினைவுகள், நிழல்கள் ஆடுவதுபோல், ஏதேதோ பழங்கணக்குகள் பிரிவதுபோல் – என்ன நினைவு, என்ன கணக்கு? Ask me another.ஆனால் இந்தப் பழைய பாடத் திருப்பலில், சிக்குப் பிரிதலில் ஒரு இதவு, ஒரு கலிக்கம். அதனால் மனசு லேசு, அதுவே ஒரு புதுமை, ஒரு adventure.

அன்று தன் தாத்தாவையும் பாட்டியையும் பற்றிச் சொன்னாளே,நினைவிருக்கிறதா? அவள் சொன்னதைவிட, அவள் பேசினது இருக்கே, இன்னமும் அதன் Wonderment எனக்கு ஓயவில்லை. ஆனால் ஒண்ணு நான் ஒப்புக் காள்ளணும். சிந்திக்க, ஆச்சரியப்பட எனக்கு நேரம் இருக்கிறது.நினைத்து நினைத்து என் தன்மையின் உண்மை யின் கவிதையும் என் சிந்தனையுடன் கலந்த குழைவுக்கு ஒரு தரிசன ருசி வந்துவிடுகிறதோ? 

‘தாத்தாவையும் பாட்டியையும் பார்த்த நினைப்பு எனக்கில்லை. நான் குழந்தையாம். ஆனால் என்னில் பாட்டியை அப்படியே உரிச்சு வெச்சிருப்பதாகப் பார்த்தவா சொல்றா. 

ஒருநாள் தாத்தா விடிகாலை, வெள்ளி முளைச்ச வேளைக்குத் தன் பங்கு ஆற்றுப் பாய்ச்சலை மேலத்தனம் பண்ணப் போனவரைப்பத்து மணி வேளைக்கு நாலுபேர் சுமந்து வந்து, கூடத்தில் விசுப்பலகையில் கிடத்தினார்கள், கழனிக்கட்டுச் சேறில், தன் நினைப்பற்றுக் கிடந்தாராம். Stroke. அந்த நாளில், கிராமத்தில் அதற்கென்ன பாஷையோ? ஒருநாள் இரண்டு நாள் கோமா இல்லை மூணு வருஷம்; என்ன சொல்றேள்? 

தாத்தா வருஷத்துக்கு ஆறு தெவசம் பண்ணுவாராம். அத்தனையும் நின்றுபோய், பிதுர்க்கடன் ஏறிப்போச்சு. இப்போ எனக்குத் தெரிஞ்சே கிராமத்தில் ‘துபாய் போறேன்’ ‘ஸவுதி போறேன்’னு அங்கெல்லாம் எந்த சாஸ்திரி கிடைக்கிறான்? தாகத்துக்கே பெட்ரோல்தான். காக்காய்க்குப் பிண்டமரனும் வைக்கலாம். ஆனால் அங்கே காக்கா இருக்கோ? எனக்குத் தெரியாது. ஓ, அங்கங்கே problems இருக்கு. ஆனால் அதுக்கெல்லாம் கிராமத்துலே பயப்படுவா. கிராமத்துலே வளர்ந்தவள்தானே நானும்! நானும் பயப்படறேன். எல்லாமே பெரியவாள் காட்டற பூச்சாண்டின்னு தள்ளிடற அளவுக்கு நமக்கும் முழுக்கத் தைர்யம் இல்லியே; உப்பும் தணலோடு ஆற்றில் கரைக்கற அஸ்தியும் சேர்ந்து, அதன் பேர் பயமோ, நம்பிக்கையோ பரம்பரையா உடம்பில் ஊறிப்போயிருக்கே! 

பாட்டிக்கு உடம்பிலே ஆயிரம் கோளாறு. கேட்கப் போனால் தாத்தாவுக்கு மேலே. தாத்தாவுக்கென்ன, அவர் விழுந்தது ஒண்ணோடு சரி, பாட்டிக்கு. B.P. சர்க்கரை, உப்பு ulcer, கண்ணில் சதை, கீல்வாயு, ஆஸ்துமா, பல்வலி, ஆனால் முக்கிண்டே முனகிண்டே வளைய வளைய வந்து கொண்டிருந்தாள். சரீரம் வேறு ‘பொந்தகா’. ஆனால் தாத்தாமாதிரி உயிர்ப்பிணம் ஆகல்வியே! 

தாத்தாவும் பாட்டியும் அப்படி ஒண்ணும் ஒத்துமையான தம்பதியில்லே. ஒரு சமயம், ஏதோ மனஸ்தாபம், மூணு வருஷம் பேசாமலிருந்தாளாம். Can you imagine? பேச்சு மட்டும்தான் இல்லை. மற்றபடி எல்லாம் வழக்கம்போல். கடிகாரக் கணக்கில்… தாத்தாவுக்குத் தினப்படி பூஜா திரவியங்கள், சமையல், பரிமாறல், வஸ்திரமடி. மத்தியான ஆகாரம், ராத்ரி பால், படுக்கை – எல்லாம் மை போட்ட சக்கரக்கணக்கில் நடந்துகொண்டிருந்தது. தாத்தா ஒரு ஜாடைகூடக் காட்ட வேண்டாம். காட்டவில்லை. தாத்தா வின் வயிறு,நாக்கு, பழக்க வழக்கங்கள் எல்லாம் பாட்டிக்கு அப்படி ஒரு அற்றுபடி. தாத்தாவுக்கு ஒரு தலைகூட வலிக்காது.பாட்டிக்கு என்னவாக உடம்பு இருந்தால்கூட தாத்தா திரும்பி நின்னுகூடப் பார்க்கமாட்டாராம்.My pound of flesh மனுஷனாம். 

அப்புறம் எப்படித்தான் சமாதானமானாள்னு கேட் பேளே! ஒரு சிராத்தத்தின்போது, ஒளபாசனத்துப் புல் பிடிக்க, சமையல்கட்டில் வேலையாயிருந்த பாட்டியைக் கூப்பிடும்படி ஆயிடுத்தாம். மாமியைக் கூப்பிட சாஸ்திரிகள் மறுத்துவிட்டார். ‘இந்த நியாயப்படி நித்யானுஷ்டான கர்மாவுக்கு உங்கள் தர்மபத்தினியை நீங்கள் அழைக்காமல், என்னவோய் சிரார்த்தம் வேண்டிக் கிடக்கு?’ சாஸ்திரிகள் தான் புதுசோ, இல்லை இரும்புத்தலையனோ? தெரியல்லே. இல்லை, இதுவே ஒரு சூழ்ச்சியோ? ஆகவே கூடத்திலிருந்து தாத்தா பாட்டியைக் கூப்பிடும்படியாகிவிட்டது. கூப்பிடற தாவது.ஒரு உறுமல். அந்த நாள் பாஷையை அதுதான் உறுமும்படி ஆகிவிட்டது. 

அதற்கே பாட்டி “உங்கப்பாதான் முதல்லே பேசினா”ன்னு பீத்திப்பாளாம். உடனே அதை ஒட்டி இன்னொரு சண்டை. 

அப்போது நம் மூவரின் ஒன்றான சிரிப்பு, இப்பக்கூட நினைப்பில் ஒலிக்கிறது! 

Freud வந்தபின் இதை என்ன சொல்வான்? “Sex war on a grand scale” என்பானா? Love-hate, hate-love theoryஐச் சேர்ந்ததா? 

மனுஷன் ஒற்றுமை வேற்றுமை என்கிறோமே, ஆனால் உண்மையில் இரண்டுக்கும் என்ன barometer? திவாகர். நீங்கள் சொல்லமுடியுமா? மனது என்று ஒன்று இருக்கிறது. அதன் ஓட்டம் என்று ஒன்று இருக்கிறது. அந்த ஓட்டத்தின் படு ஆழத்தின் அந்தகாரத்திலிருந்து எழுந்த சுழிப்புகளின் வெளித்தெரிந்த மட்டம்தானே நாம் போட்டுக்கொள்ளும் சண்டைகள், பண்ணிக்கொள்ளும் சமாதானங்கள்,காரைப் பூச்சுக்கள். மீண்டும் வெடிப்புகள் – என்கிற மேலொட்டின வித்தியாசங்கள் நாமே அங்கிருந்து வந்தவர்கள் தானே- the dark eternal womb of creation என்பது மனம் அல்லாமல் பின் என்ன? 

அவள் அப்படிச் சொன்ன அப்பவே, ஒரு நக்ஷத்ரம் உதிர்ந்தது Thrill. அனு, நீயா கிராமத்துப் பெண்? சட்டி, யானை தேய்க்கத்தான் எனக்கு இஷ்டம் என்று சொல்லிக் கொள்பவள் நீயா அனு? நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டுவதுபோல், நக்ஷத்திரத்தை உதிர்த்துக் காட்டுகிறாயே, நீயா அனு? நீ பயத்துக்கு உரியவள், ஹூம்- 

“So!” அனுவின் பெருமூச்சு. பேச்சினும் பேசும் பெருமூச்சு.தாத்தாவுக்கும் பாட்டிக்கும் மறுபடியும் இப்போ ஒரு கட்டம் வந்துவிட்டது. நாட்டுப் பெண்கள் நாலுபேர் வந்தாச்சு.ஆனாலும் சூசிருஷையெல்லாம் பாட்டிதான். மத்தவாளை விடவில்லை. ஏற்கனவே புனர்ப்பாகம் அதை இன்னும் மையா, புளிக்காத மோரிலோ, பாலிலோ கரைச்சு திப்பியை எறிஞ்சுட்டு, நினைப்பில்லாத வாயில். சிறுகச் சிறுகச் செலுத்தப் பொறுமைக்கு மத்தவாளை எப்படி நம்புவது? தவிர அப்பப்போ துணி மாத்துவது, உடல் சம்பந்தமான காரியங்கள் வேறேயிருக்கே! ஒரு நாளா இரண்டு நாளா,ஒவ்வொரு நாளா மூன்று வருடங்கள்… 

ஆனால் இப்போ ரெண்டுபேருக்கும் வயசு என்ன ஆச்சு? தாத்தாவுக்குப் படுக்கையிலேயே கரைச்ச சாதத் திலும். கஞ்சியிலும், உடம்பு அன்னாடம் இம்மியென ஒடுங்க ஆரம்பிச்சாச்சு. அதைப் பார்க்கப் பார்க்கப் பாட்டி யின் உடல் கோளாறுகள் அதிகரிக்கத் தலைப்பட்டன. 

கூடவே எல்லாவற்றிற்கும் மேல் ஒரு திகில். நெஞ்சில் எலி பிராண்டல் அடிக்கடி அவளை அறியாமலே கை, தாலிச் சரட்டைத் தொட்டுக் கொள்ளுமாம். பழுத்த சுமங்கலி வாய்விட்டுச் சொல்லிக்கிற விஷயமா? மானத்தின் ரூபங்கள் எப்படி எப்படியெல்லாம் எடுக்கின்றன? இது சமுதாய எடை மானம் இல்லை. வேறு ஏதோ ஒண்ணு, அவாவாளுடைய சத்தியத்தின் எடை. அவாவாளுக்கு மட்டும்தான் தெரியும் போல இருக்கு. சந்திரமதி தாலி. Spell bound. But not Hitchcock. சொல்லே மந்திரமடா அது இது. 

“ஆகவே ஒரு வெள்ளிக்கிழமை. எண்ணெய் ஸ்னானம் பண்ணிண்டு, பட்டு உடுத்திண்டு, குத்துவிளக்கை ஏற்றி நமஸ்காரம் பண்ணிவிட்டு, பாட்டி, விசுப்பலகை அடியில், தலைப்பை விரித்து, முழங்கையே தலைக்கு உயரமாகப் படுத்துவிட்டாள். பாட்டி தினம் எங்கே படுத்துண்டிருந் தாள்னு அசட்டுக் கேள்வி கேட்காதீர்கள். இது தனிப்பட்ட படுக்கை – அல்ல, ஸமிக்ஞை அப்புறம் எழுந்திருக்கவே யில்லையா, குளிக்கல்லியா, சாப்பிடல்லியா வளைய வரல் லையா?’ Don’t be Silly. எனக்குக் கோபம் வரது. எல்லாம் முறைப்படித் தான் நடந்து கொண்டிருந்தது. தன் கையாலேயே தாத்தாவுக்குப் பணிவிடைகள் உள்பட. ஆனால் அன்று எட்டாம் நாள் வெள்ளிக்கிழமை, தை, பகுளபஞ்சமி தினத்தன்று. விடியற்காலை வேளையில் பாட்டி, இந்த உலகத்தை நீத்தாள். சரியாக இரண்டு மணி நேரம் கழித்து, தாத்தாவின் உயிரும் பிரிந்தது. 

ஒரே சிதையில் தகனம். விஷயம் காட்டுத் தீயாகப் பரவி, ஊரும், சுற்றுவட்டாரமும் சமுத்ரம் புரண்டு, மயானம் கொள்ளல்லே. தேர்த்திருவிழா மாதிரி ஜேஜே’. அந்தப் பேச்சு ஆறுமாசத்துக்கு. அதன் தஹிப்பு தணியல்லே. வீடு யாத்திரை ஸ்தலமாப் போச்சு. 

‘இந்த விசுப்பலகையா. இதன் அடியிலா, இங்கேயா?’ நமஸ்காரம் பண்ணிக்கொண்டுவந்த தேங்காயை உடைத்து. வெற்றிலைப்பாக்கு மஞ்சளோடு மடியில் கட்டிக்கொண்டு தொழுதுவிட்டுப்போன பெண்டிர் எத்தனைபேர்? அந்தக் காலம். சொன்னாலும் இப்ப நம்புவாளா? 

“என் பாட்டி இருந்தாளே – அல்லது இருக்காளேயா? எதைச் சொல்றது? பொல்லாத பாட்டி. மஞ்சள் குங்குமத் தோடு தான் முந்திண்டுடணும்னு ஒரே எண்ணம், ஒரே சித்தத்தில், she simply willed her death into coming. இந்த நாளில் இது நடந்ததுன்னா. அந்த நாளில் ஒருத்தி,புருஷன் உயிரை யமனிடமிருந்து பிடுங்கிண்டு வந்தாள். ஒருத்தி தனக்குப் புருஷன் தக்கணும்னு உலகத்துக்கே விடியாம இருக்க அடிச்சுட்டான்னா ஏன் நடந்திருக்காது? ஏன் நம்பக்கூடாது? ஆயிரம் காலேஜ் குமாரியானாலும் நான் நாட்டுப்புறம்தானே! சிரித்தாள், கொல்லும் சிரிப்பு. “போனவா போனாலும் இருக்கறவா இருக்கத்தானே இருக்கா, எல்லாம் உடன்கட்டை ஏறிடறாளா?” என்று என்னதான் பகுத்தறிவுவாதம் பண்ணினாலும், “ஆமாம், எல்லாம் காக்கை உட்காரப் பனம் பழம் விழ’ இப்படியும் ஒரு வாதம் உண்டு. ராமாயணத்திலேயே ஜாபாலி இருந் திருக்கார்- அதுவும் உண்மைதான், எதுவும் உண்மைதான் ஆனாலும் – 

பதிம் தேஹி பதிம்தேஹி பதிம் தேஹி பதிம்தேஹி பதிம் தேஹி பதிம்- 

வானம் குமுறிற்று. அப்பத்தான் நானே மீண்டேன். எப்படி, இப்படி எப்போ, இருண்டது? 

முகம் தெரியா இருளிலிருந்து அசரீரியாக அவள் குரல் பிரிந்து வந்தது. 

“ஒண்ணு தெரியறது. முடியறவாளுக்கு எப்பவும் முடியும். முடியறவாளுக்கும் காலத்துக்கும் சம்பந்தமில்லை”. 

தூறல். 

“புண்ணிய வசனம் சொன்னாலே மழை வரும்னு சொல்லுவா.” 

அவசரமாக எழுந்து கீழே இறங்குவதற்குள் மழை றங்கிவிட்டது.நிமிஷமா கொட்டோ கொட்டு. 

“திவாகர் நீங்கள் ரூமூக்குப் போக முடியாது”. ஒரு விரிப்பையும் தலையணையையும் கொணர்ந்து கூடத்தில் போட்டாள். “சோபாவில் புரள இடமில்லை. உடம்பு வலிக்கும். Goodnight!” 

ஆனால் தூக்கம் வரவில்லை. ஏதேதோ யோசனைகள், ஆனால் பிடிபடவில்லை. ஏதோ வகையில் நான் உள்ளூர கிடுகிடுத்துப்போயிருந்தேன். 

நான் லக்ஷ்மணக் காவல் புரிந்துகொண்டிருக்கிறேன். ஆனால், பாஸ்கர், நான் உன்னைவிட ஓரிரண்டு வயது மூத்தவனில்லை? எனக்கு என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது? 

எழுதி எழுதிக் கைவலிக்கிறது. கொஞ்சம் off.


அறைக்கு வெளியே மொட்டை மாடிக்கு வந்தான். புகையை இழுத்து மார்புள் தங்கவைத்து, கொஞ்சங் கொஞ்சமா ‘புக் புக்’ வெளியே விட்டதும். அம்மாடி! என்ன சுகம்! வேறு சமயம் இந்நேரத்துக்கு ஒரு பாக்கட் காலியாகி யிருக்கும். எழுதுவதே ஒரு discipline போல இருக்கே! 

அற்புதமான இரவு, எட்டித் தொட்டுவிடலாம் போல் வான்கவானில், ஒரு பூப்பாரம் கட்டவிழ்ந்து சரிந்ததுபோல், ஒரே நக்ஷத்ரக் கொள்ளை. ‘லேசான ஒரு கேம்கூட உண்மையிலா, அல்லது மனம் மனதை ஏமாற்றா? 

இந்த நக்ஷத்ரங்களில் எது எனது? இருபத்தி ஏழு அற்ற மற்றதெல்லாம் அநாமி – நானும் ஒரு அநாமி. பின் என்ன இதுவரை என்ன சாதித்தேன்? புஸ் புஸ் புஸ் – களிமண் பட்டாஸ். நான் செத்தால் எனக்காக அழ, அச்சாரம் கொடுத்து, சம்பளத்துக்கு அமர்த்தியாகணும். என்ன தமாஷ்! 

இந்த ப்ரம்மாண்டமான தேன்கூடில், என்னைப் பெற்ற வர்கள் எங்கிருப்பார்கள்? எனக்காகக் காத்துக்கொண்டிருப் பார்களா? அல்லது மீண்டும் தங்கள் தனித்தனிப் பிறவிகளை யெடுத்துத் தங்கள் தங்கள் தேன்களைத் தேடிக்கொண் டிருப்பார்களா? அங்கு போயும் என் தனிமையின் குளிரில் வெடவெடத்துக் கொண்டு, அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கணுமா? 

அனுவின் பாட்டியும் தாத்தாவும் – No. தங்கள் வளை யில் பத்திரமாக.கதகதப்பாக, அடக்கமாக அடங்கியிருப்பார்கள். அவர்கள் இனி தேன் தேட வேண்டாம். 

அனு- அவள் Queen Bee. அவளுக்கே தெரியும்.தெரியு மோன்னோ? ஆனால் அனுபற்றி எதுவும் சொல்ல முடியாது. எப்படியிருந்தால் என்ன. என்னைக் கொட்டிவிட்டாள். வலிதாங்க முடியல்லே. But how wonderful! வயலினில் எஃகுத் தந்தியில், பஞ்சமத்திலும் அதி பஞ்சமம் சூக்ஷ்ம பஞ்சமம் என வலி தற்சமயம் அந்த ஸ்தாயியில்தான் தெறித்துக் கொண்டிருக்கிறது. போதாது. சாக்ஷாத்கார பஞ்சமம் அதாவது அது அதுவேதான். அதற்குமேல் கிடையாது. வேறும் கிடையாது. அங்கு சேர்ந்துவிட்டால் அதற்கு மேலும் நோக இடமில்லை அல்லவா? ஆனால் அப்படி ஒன்று இருக்கிறதா? இது சங்கீத பாஷை அன்றோ? ஆனால் இதற்கு music தெரியத் தேவையா? இசை ஒரு கலை எனும் பதவிக்கும் முன்னால், அதுவே வாழ்வின் அடிப்படைத் தன்மை என்று சொல்வது உண்மைக்கு இன்னும் நெருக்கமாகும் என்று நினைக்கிறேன், 

“அழியமாட்டேன். புதையமாட்டேன். சமயங்களில் என்னை உனக்கு ஞாபக மூட்ட புதைவினின்று வெளிப்படுவேன்”. 

கண்கள் பெருகின 

Ecstasy. ஆயிரம் ஸிகரெட், ஹஷீஷ் இதற்கு ஈடாமோ? 

சிகரெட்டை எடுத்து, பற்றவைக்குமுன், நுனியை இடது புறங்கை மேல் தட்டினவன், என்ன தோன்றிற்றோ, அப்படியே எறிந்துவிட்டு உள்ளே வந்து, மீண்டும் மேசைக் கெதிரே, மீண்டும் நாற்காலியில்- 

சொச்சத்தை எழுதித்தான் ஆகணுமா? பிரியமுள்ள சினேகிதனுக்கு – உண்மையில் இந்தக் கடிதம் உனக்கா? இல்லை. அவளுக்கா? No Wrong again உண்மையில் எனக் கல்லவா? அப்போ இது அவசியம்தானா? why not? இது ஒரு சுய கணிப்பு அல்லவா? Discovery of me. அதில் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது. 

No, அந்த trend கலைஞ்சுபோச்சு. அதனாலும் என்ன? ஒவ்வொரு Mosaic detailஐயும் ஆராய்வதானால் நேரம் எங்கே? திடீரென எனக்கு நேரம் குறுகிவிட்டதாக ஒரு உணர்ச்சியா, உணர்வா? So immediately to the turning point. 

அன்று மாலை, டெலிபோன் அடித்து எடுத்ததும், 

“மிஸ்டர் திவாகர்?” அனு. அதுவே ஒரு ஆச்சரியம்.

“என்ன அனு ஏது இந்த கெளரவம்?” 

“அவருக்கு ஜுரம். நினைப்பே இல்லை திவாகர், வாங்கோளேன்!” 

அனு கலங்கும்படி ஆனால், Seriousதான். 

டாக்ஸி பிடித்து, கூடவே டாக்டரையும் பிடித்து அழைத்துக்கொண்டு- (நான் ஏன் கார் வைத்துக்கொள்ள வில்லை? கேட்கவில்லையா? அது ஒரு நியூசென்ஸ். அப்படி எனக்கென்ன Social activities, engagements தட்டுக்கெட்டுப் போகின்றன?)- உன் வீடு சேர்த்ததும், தட்டாமலே கதவு திறந்தது. அனு காத்திருந்திருக்கிறாள். உள்ளே வந்ததும், 

கட்டிலில் நீ கிடந்த நிலை கண்டதும் எனக்கே திக் கென்றது. கண் அரைக்கண். உதட்டோரம் வழிந்து காய்ந்த எச்சில் இன்னும் வழிந்துகொண்டிருந்தது. பரீசீலனையில் டாக்டர் உன் கையைத் தூக்கினால், அது தன் இயக்கம், சுரணையின்றி பொட்டென்று விழுந்தது. இமைகளைத் தூக்கி, டார்ச் அடித்தால், விழிகளில் சுணக்கம் காணோம். மார்பின் அந்த மிதப்பு தெரியாவிடில், நீ பச்சை மூங்கிலுக்குத்தான். என் ஜோக் சமயமாயில்லே. ஸாரி. நான் ஜோக் அடிக்கவில்லை. முகமும் மார்பும் நெருப்புச் சிவப்பு. ஜூரம் மழுவாய்க் காய்ந்தது. 

மூவரும் உன்னையே பார்த்தபடி உன்னைச் சூழ்ந்து மோனத்தில் சமைந்து எந்நேரம் நின்றோமோ? 

“Some brain fever போலத் தோன்றுகிறது. எப்படி இவ்வளவு சுருக்க develop ஆச்சு? என்ன நேர்ந்தது?” 

“தெரியல்லே டாக்டர். டெஸ்கில் எழுதிக்கொண்டிருந் தவர், திடுக்கினு பக்கவாட்டில் சாய்ஞ்சவர் நாற்காலியை யும் தன்மேல் தள்ளிக்கொண்டு விழுந்துட்டாராம். மூணு நாளா லேசா ஜூரம்தான் அத்தோடு நடமாட்டம். ரெண்டு நாள் லீவு போட்டுட்டு வீட்டில் இருங்கோளேன்னு சொல்லிப் பார்த்தேன். Account-closing, எல்லாம் ஜலதோஷ ஜுரம்தான். போயே ஆகணும் ணுட்டார். பிற்பகல் மூணு மணி வேளைக்கு, வண்டியிலிருந்து ரெண்டு பேர் தூக்கிண்டு வந்து படுக்கையில் கிடத்தின்போதே. நினைப்பு இல்லை”. 

“ஹும்- உள் ஜனனி. ஆஸ்பத்திரிக்கு உடனே remove பண்ணியாகணும் திவாகர், டாக்ஸியை அனுப்பிச்சுட்டேளா? No. இங்கிருந்து G.H. 25 கி.மீ தாங்குமா? இந்த நிலையில், வழியில் ஏதானும் ஆச்சுன்னா?” அவருடைய உரத்த சிந்தனை வயிற்றில் புளியைக் கரைத்தது. 

“He should be touching 108. We will get some ice and rub him. இங்கே, நம் அவசரத்துக்கும் தேவைக்கும் கிட்ட ice கிடைக்காது. மருந்து, ஊசி? No, I won’t touch him now. The crisis must pass. அப்பப்போ எனக்கு போன் செய்யுங்க. ஒரு பன்னிரண்டு மணிவாக்கிலே வந்து பாக்கறேன். ஏம்மா உங்க வீட்டு மனுஷா, அவங்க வீட்டு மனுஷா? எல்லாரும் ஊரிலேயா? நெனைச்சேன். இந்த சமயத்திலே துணைக் காச்சும் பக்கத்திலே ஆள் இல்லாட்டி கஷ்டம்தான்-” 

அவர் போனபிறகு ஓரக்கண்ணால் கவனித்தேன். ஒரு தீர்க்கம் தவிர, அந்த முகத்தில் ஏதும் படிக்க முடியவில்லை. அது கவலையா, பயமா,சொல்லமுடியவில்லை. Damn her! மிதந்து செல்லும் பனிமலையில் தெரிவது அதன் நுனிதான். மலையின் உயரமும் அகலமும் கடல் ஆழத்தில் எம்மட்டோ? அப்பத்தான் குளித்தமாதிரி, ஒரு freshness அவளிடம் திகழ்ந்தது. 

The Queen Bee. 

“உட்காருங்கள், திவாகர், எந்நேரம் நிற்பீர்கள்? Coffee? Tea?”

அவள் சமையலறைக்குப் போனாள். உன்னைப் பார்த்தேன். நீ, நான், அனு இனி ராப்பூரா தனி. இப்படி உன்னோடு இருக்கப் பிடிக்கவில்லை. எந்த சங்கட சமயத்தையும் சந்திப்பதில் மனிதனுக்கு விருப்பம் கிடையாது. அடிப்படை வேறென்ன, பயம்தான். ஆனால் இவளைத் தனியாக விட்டும் போக முடியாது! 

கைக்கு ஆவி பறக்கும் கோப்பையுடன் அனு வந்தாள். அவளுடைய ப்ரசன்னமே எனக்கு மாருதம் வீசினாற்போல் ஒரு தென்பாய் இருந்தது. கப் என் கையில் மாறுகையில் கவனித்தேன் நகக் கணுக்களில் என்ன ஆரோக்கியமான ரோஜாத் திட்டு! சுண்டு விரலிலும், அடுத்ததிலும் ஒரு செப்பு மோதிரம், இரண்டு கிராம் பொன் தேறாது. ஒரு நெளி நெளியில் பதித்த கற்கள் கண்ணாடியென்று காணக் கண்ணாடி வேண்டாம். கட்டை விரலில் சுழி ரேகை அடுக்கில் தனித்தனியாக எண்ணிவிடலாம். 

அந்த சாட்டின் புடவை அவள் நடமாட்டத்திற்கு ஒரு புனிதத்தனத்தைத் தந்தது. கூந்தல் முடிச்சில் சொருகித் தாங்கும் ஜாதிமல்லிச் சரத்தினின்று, திடீர் திடீர் ‘கம்’.

இதுபோன்ற நுணுக்கங்களைக் கவனிக்க, தரிசிக்க இது தான் சமயமா? ஆனால் அது என் இஷ்டமில்லையே! ஆனால் அவை இப்பத்தானே எனக்குத் தென்படுகின்றன! அதுவே ஒரு விபரீதம்தான். நேரத்தின் ப்ருகடை முறுக்கேறி யிருந்தது. பின்! இன்னமும் ஏறப்போகிறது. உன் பீதியினால் தான் அவளுக்கு இந்தத் தனி ஒளி: 

Stroke, பாஸ்கர்? பக்கவாதத்தில் கொண்டு போய் விடுமோ? 

Typhoid? ஆனால் அது இப்படித் திடீர் மூட்டமாய்க் கவியுமோ? 

Typhus? நம் ஊரில் சகஜமாக இது கிடையாதே! 

மெனஞ்சிட்டிஸ்? 

எனக்குத் தெரிந்த பெயர்களை உதிர்த்து, என் அசடு தான் அம்பலமானது எனக்கே தெரிகிறது. ஆனால் இடம் பொருள், ஏவல், இங்கிதம் இன்றி, எந்த இடத்திலும், மனித எப்படியும் தன்னை ஸ்தாபித்துக் கொள்வதில்தான், னுக்குக் குறி. அதுவும் காரணம் பயம்தான். தன் அநிச்சயத் தின் பயம், சர்க்வம் பயமயம், ஜகத். 

இருவரும் கட்டிலின் இரு பக்கங்களில், எதிருக்கெதிராய் உட்கார்ந்திருக்கிறோம். 

சுவர்க் கடிகாரத்தில், முட்கள் இரக்கமற்ற தங்கள் மாறாக்கதியில் சேர்ந்தவண்ணம், காலத்தை அதன் அதமத் துக்குப் பொறுத்த அளவில் தனித்தனித் தெறித்து பெரிது பெரிதாக அளந்துகொண்டிருக்கின்றன. 

நாங்களும் பொய். 

நீயும் பொய். உன் பயத்தில் உன்னை ஏமாற்றிக் கொள்ள எங்களைப் படைத்தாய். 

பொய் படைத்த பொய் மேல் பொய், ஒன்றையொன்று விழுங்கிக் கொண்டிருக்கிறோம். 

மணி எட்டு, ஒன்பது, பத்து என்பதில் என்ன தென்போ? 

நடப்பது நடந்து கொண்டேயிருக்கிறது. நடப்பதுதான் நடக்கப்போகிறது. 

உன் காய்ந்த உதடுகளை அவ்வப்போது ஈரத்துணியால் துடைக்கிறாள். 

உன் நிலையில் எந்த மாறுதலும் இல்லை. 

டாக்டருக்குப் போன் செய்ய என்ன இருக்கிறது? உண்மையில் நாங்கள் சொல்ல வேண்டும் என்று அவர் எதிர் பார்க்கிறாரோ? அவருக்கு ஏற்கெனவே தெரிந்துவிட்டதை நாங்களே நிதரிசனத்தில் தெரிந்துகொள்ள இப்படி ஒரு வழி. 

கட்டையாக் கிடந்தபடி பாஸ்கர், என்ன பாடு படுத்துகிறாய்? 

மணி பத்து, பதினொன்று… 

எனக்குப் பசியென்று தெரியவில்லை. அவளும் அதுபற்றி ஏதும் முற்படவில்லை. 

லேசான குளிர் ஒன்று தெரிந்தது. என்னையறியாமலே சிலிர்த்துக்கொண்டேன். ஆனால் இது பனிக்காலம் அல்லவா! ஆனால் இப்போல்லாம், எதுதான் ரீதியில் நேர் கிறது? தொலை தூரத்தில் எங்கோ மழை பெய்து கொண்டிருக்கிறது. 

ஜன்னல் கதவுகள் படபடவென அடித்துக்கொண்டன. அனு எழுந்துபோய் அவைகளை அழுந்த மூடி,கொக்கிகளை மாட்டிவிட்டு வந்தாள். உடனேயே வாசற்கதவைத் தட்டும் சத்தம். நான் எழுந்தேன். 

“வேண்டாம்” கட்டளையில் அவள் குரல் சுணீர்.

“ஒரு வேளை டாக்டர்-” 

“அது டாக்டர் இல்லை”. 

பின்னே யார்? ஆனால் நான் கேட்கவில்லை. முதுகுத் தண்டு ‘சில்’- 

அவள் குத்துவிளக்கை ஏற்றிக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் நீலம் மின்னிற்று. ஏதோ வகையில் மாறியிருந்தாள். அவளே சுடர்போல் தாழ்ந்து தணிந்து, ஆனால் அமைதியான திடத்தில், விளக்கெதிரே அமர்ந்தாள். 

‘மாத்ரே நம:’ 
சத்யப் பிரசாதினியே நம: 
மஹாதாண்டவ மஹாப்ரளய சாக்ஷியே நம:
ஸ்தோத்ர ப்ரியே நம: 
தருண்யை நம: 
தீரா நம: 
விஜயா நம: 

என் மனதில் நின்றதை, வரிசை தப்பி, அவள் சொன்னதைத் திருப்பிச் சொல்கிறேன். 

பிரார்த்தனை மனிதனின் கடைசி அடைக்கலம். இயற்தைதான். நம்புகிறோமோ இல்லையோ? வேறு வழியு மில்லை. இதுவும் ஒரு பழக்கதோஷம்தான். இதுவும் பயத்தின் உச்சத்தின் ஒரு உருத்தான். 

ஆனால் ஒன்று பாஸ்கர். உனக்காக ஒருத்தி பிரார்த் தனை செய்கிறாள். ஏன்? ஒருத்தி இருப்பதனால்தான். ஒருத்தி மட்டுமன்று. அவள் மூலமாக விருத்தியாக இருக்கும் உன் குடும்பம் உன் முன்னோர்களிலிருந்து உன்வரை தழைத்து வந்திருக்கும் உன் குடும்பம் அவளுடைய பிரதி நிதித்வத்தில் உனக்காகப் பிரார்த்தனை செய்கிறது. ஆனால் எனக்கு?- ஓ இதுஉன் மேல் பொறாமையில் எழுந்த எண்ணம் அன்று (ஆனால் அதையும் எப்படி நிச்சயமாய்ச் சொல்வது?) என் வேளை வரும்போது எனக்காக நானே பிரார்த்தனை செய்துகொள்வதா? இப்பவும் அதில் ஒரு அவமானம் தட்டுகிறது. பயம், பக்தி, நம்பிக்கை எதையும் மறுக்கும் எனக்கு; என் பிரார்த்தனையை, எனக்கும் புரியாத சக்தி, கேட்கப்போகிறதா? நான் எதில் சேர்த்தி? சம்போ சங்கரோவா, அம்போ ஐயகோவா? பாஸ்கர், you lucky guy. 

உறவு என்று ஒன்று வேண்டும். இருந்தால்தான் வீடு என்ற களை வரும். நாள் கிழமை, பண்டிகை, பாயஸம், குத்து விளக்கு, கற்பூரம், நமஸ்காரம்,ஆசீர்வாதம்,உதயம், மதியம், சாயங்காலம், இருட்டு, விடிவு, கோலம் இவைகளுக் கெல்லாம் அப்பத்தான் அர்த்தமே ஏற்படுகிறது. இதுவரை எனக்கு இதெல்லாம் தோன்றியதில்லை. அதுவே ஒரு ஆச்சரியம். 

அதனினும் ஆச்சரியம், இதோ அனு பக்கத்தில் நானும் கைகளைக் கூப்பிக்கொண்டு உட்கார்ந்திருப்பதைக் காண்கிறேன். இது எப்போது நேர்ந்தது? அவள் வாயினின்று புறப்பட்டுக் கொண்டிருக்கும் நாமாக்கள் மேல் விளம்புவது போல. நானும் அவளைப் பின்பற்றி என் நாக்கில் உருட்டி உச்சரிக்க முயல்கையில், அலைகள் என் காலடியில் மண் ணைப் பறித்து, என் பத்திரம் பறிபோய், ஒரு பிரம்மாண்ட மான நாக்கு என்னை நக்கி உள்ளுக்கு இழுப்பதுபோல – மாட்டேன். மாட்டேன்- 

என்ன மாட்டாய்? எதுதான் உன்னால் மாட்டும்? உன் தோத்திரம் உனக்காக அல்ல. அவனுக்காகவும் அல்ல. தோத்திரம் என்று ஒன்று சொல்ல முயல்கிறாயே. அதுவே போதும். எல்லாம் எனக்காக. 

“பாஸ்கர்” இருளில் என்மேல் பாம்பு ஊறல் போன்ற இந்த வசியத்தினின்று முழுமூச்சில் என்னை உதறிக் கொண்டு எழுந்தேன். எழுந்து உன்னிடம் விரைந்தேன். 

பாஸ்கர், நீ காகிதமாய் காகிதமாய் வெளுத்துப்போயிருந்தாய். உன் உள்ளங்கையைத் தொட்டேன்.சில் உன் மார்பில் காதை வைத்துத் துடிப்பைத் தேடுகிறேன். நாடியும் – கேள்விக்குறிதான். 

“அனு!” 

ஓடிவந்தாள், தழையத் தழையப் பசு. 

“ஏமாந்துவிட்டோம்!” 

“இல்லை, இல்லை, மாட்டேன், மாட்டேன்-“

எரிமலை வெடித்தது. உன் கால்களை அணைத்தபடி உன்மேல் விழுந்து அவள் வீறிடுகையில், மார்த்துணி நழுவி, தலையவிழ்ந்து, மயிர் வரண்டு, உடலின் பரவாட்டல் பார்க்க சஹிக்கவில்லை. 

“முடியாது, முடியாது.மாட்டேன், மாட்டேன்” 

எனக்குச் சற்று கோபம்கூட வந்தது. என்ன முடியாது, என்ன மாட்டேன்? 

“அனு, We must face facts.” 

“Facts?” காளி என் மேல் திரும்பினாள் “என்ன Factsஐக் கண்டுவிட்டாய்?” 

“அனு, Look!” 

பாஸ்கர், உன் கண்கள் திறந்து, நீ எங்களை அடையாளத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாய். உன் உள்ளங் காலைத் தொட்டேன். சூடு திரும்பிக்கொண்டிருந்தது. நாடி அசைந்தது. மிக்க பலஹீனமாய், ஆனால் நிச்சயமாக பாஸ்கர், நீ விழித்துக் கொண்டிருக்கிறாய் என்றால். நான் விழித்துக் கொண்டிருக்கிறேனா? 

விளக்கில் சுடர் சொட சொட. என்ன பேசுகிறது? 

“டாண்! டாண்!” சுவர்க் கடியாரம் ஜயப்ரகடனம் செய்தது. 

பாஸ்கர், உன் கண்கள் மூடிக்கொண்டன, நித்திரையில். 

“திவாகர் ஜன்னல் கதவுகளைத் திறவுங்கள்.” 

நான் திரும்பியபோது அவள், தன் நிலைக்கு வேகமாக மீண்டுகொண்டிருந்தாள். ஆடைகளைச் சரிப்படுத்திக் கொண்டிருந்தாள். ஆனால் முகத்தில் வேர்வை ஜலகண்ட மாய்க் கொட்டியிருந்தது. 

ஆகவே, எது நிஜம், எது நடக்கக்கூடியது என்பதைக் கூட நிர்ணயிக்க நாம் தகுதியில்லை. 

”you love him very much. don’t you, அனு?” 

“எனக்குத் தெரியாது”. அவள் உன்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

“உனக்குத் தெரியாது என்றால்,எதுதான் யாருக்குத் தெரியப்போகிறது! you love him very much don’t, you?” 

களைப்பாயிருந்தாள். புன்னகை புரிய முயன்றாள். 

“கலியாணம்னு பெரியவா பண்ணி வெக்கறா. இனி மேல் உனக்கு இந்த வீடு இல்லை. இனி இவனேதான் உன் கதி என்று வெளிப்படையாகச் சொல்லாமலும், பச்சை யாகச் சொல்லியும், வம்சம் வழி வழியா, பெண்ணுக்கு வழங்கும் புத்தி – இல்லை, தீர்ப்பு, பரம்பரையா நடந்து வரது. அதுதான் எனக்குத் தெரியும்.” 

உன்னை வாரிக் கொள்ளும் பார்வையில், உன்னையே பார்த்துக்கொண்டு சொன்னாள். என் பக்கம் திரும்பக்கூட இல்லை. அவளே எங்கிருந்தோ திரும்பி வந்தாற்போல், அத்தனை களைப்பாயிருந்தாள். 

களையாயிருந்தாள். 

”you love him, dont you, அனு?’ 

“என்னைச் சும்மாவிடு!” எரிந்து விழுந்தாள். “Love எனக்குத் தெரியாது. But want him. இவரில்லாமல் என்னால் முடியாது. உடன்கட்டையேறப் போறேனா? கேக்கா தேயுங்கள். ஆனால் இவர் எனக்கு வேணும் எனக்கு வேணும், எனக்கு வேணும், வேணும். – வேணும் -” 

அதற்குமேல் கோர்ட் கிடையாது. 

‘பதிம் தேஹி பதிம் தேஹி பதிம் தேஹி’

கதை இங்குதான் கேட்டாற் போலிருக்கிறதே! 

இப்போது களைப்பில் நான் சாய்ந்தேன். 

பாஸ்கர், அனு சக்தியில் நீ மீண்டாயா? காக்கை உட் காரப் பனம்பழம் விழுந்ததா? Crisis எனும் மதில்மேல் பூனை சரியான இடத்தில் குதித்ததா? ஈெதெல்லாம் பதிலே கிடைக்காத கேள்விகள். அவரவர் பூத்ததற்குத் தக்கபடி கேள்விகள்மேல் சுமை ஏற்றும் மழுப்பல்கள், பதில் ஆகா. கண்ணாமூச்சி கண்டுபிடிப்பு ஆகிவிடாது. 

ஆனால், பாஸ்கர், காதல், காதல் என்று சொல்லிக் கொண்டு காலம் காலமாய்,காவியமாகவும், கவிதையாகவும், கதைகளாகவும், பெருமூச்சாகவும், மலையாய் I want him – எனக்கு அவன் வேணும் – இப்படியும் தேவையெனும் பெயரில். இப்படியும் ஒரு மகத்தான மூர்க்கம் உண்டா? என்ற வியப்பு எழுந்ததகணமே – இந்த மூர்க்கத்தைக் கண் கூடாகக் கண்டதே ஒரு மகத்தான அனுபவம்தான். இந்த வணும் பொருளாய் விளங்கும் உனக்குக்கூட இந்த தரிசனம் கிடையாது — ஆனால் எதேச்சை வழிப்போக்கன் எனக்குக் கிடைத்துவிட்டது. 

இந்த உணர்வு தன் பட்டாசுத் திரிக்கூத்தை என்னில் ஆடியதக்கணமே, என்னுள் கடல் பொங்கி நுரை வழுக்கி I fell in love with your wife. கூடவே என் வெறுமையின் வெறிச்சு, அதன் முழு பயங்கரத்துடன் கரடி தழுவியதும் நான் பொடிப் பொடியாக நொறுங்கிப்போனேன். 

Ah the beautiful flood of tears! 

“Tea, திவாகர்? or Coffee?’’ 

இனி எழுத அதிகம் இல்லை. ஏன், ஏதுமில்லையென்றே சொல்வேன். 

தரிசனம் என்பதே ஒரு தடவைதான். அதுபற்றித் திரும்பத் திரும்ப மிச்சமெல்லாம், பிறரையும் தன்னையும் ஏமாற்றிக்கொள்ள, அதற்குக் காட்டும் கிச்சுகிச்சு. 

இதற்குப்பிறகு உன் வீட்டுக்கு நான் வருவது தானாகவே குறைந்துபோயிற்று. நீ கூடக் கேட்டாய், உன்னிடம் என்ன சொல்வது? 

அவள் கேட்கவில்லை. கேட்கமாட்டாள். அன்று நான் அவள் உயிரை நிர்வாணமாகப் பார்த்துவிட்டேன். அப்படி ஒன்று இருக்கிறதா? என்ன என்று கேட்கிறாயா? இருக்கிற தென்று எனக்கே இப்பத்தானே தெரிகிறது! ஆத்மா என்கிற வார்த்தையை வேணுமென்றே விலக்குகிறேன். ஆத்மாவைப் பற்றி என்ன கண்டேன்? 

உயிரின் நிர்வாணத்தில் Sex கிடையாது.I love her Terribly. அவள் நினைப்பில் பற்றி எரிகிறேன். ஆனால் அவள்மேல் எனக்கு இச்சையில்லை. Strange! 

புரட்டு பக்கங்களை; The end of the chapter for me. 

இந்தக் கடிதத்தை எழுத உட்கார்ந்தபோது. இதைத் தபாலில் சேர்த்ததும் ஊரைவிட்டுப் போய்விடலாம் என்று உத்தேசித்திருந்தேன். எழுதி முடித்ததும் அது end of the chapter ஆகாது என்று தெரிகிறது. எங்கு போனாலும் என்னோடு இருக்கிறேனே! கேட்கிறேன். உண்மையில் இங்கே என்ன இருக்கிறது? முதலில் உண்மை என்பதே என்ன? எனக்கு ப்போ தோன்றுகிறது, Truth is an explosion. 

வெடித்த பின்னும் மிச்சமிருப்பின் அது உண்மையான உண்மை அன்று. 

George sawnders என்று ஒரு சினிமா நக்ஷத்ரம். தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டு அவன் இறந்துபோனபோது ஒரு குறிப்பை விட்டுவிட்டுப் போனான். 

“I am bored with life” 

தன் உயிரின் உரிமையை முறையாக உபயோகித்தவன் என்று சொல்வேன். 

மானஸ்தன். 

‘So, now, ஒரு தம்’. 

புகைத்துக்கொண்டே, கடிதத்தைத் தலையிலிருந்து அடிவரை படித்தான். ஒரு கணத் தயக்கத்தின் பின் சட்டென முடிவுக்கு வந்தவனாக, அதை நாலு சுக்கல் களாகக் கிழித்து. தீக்குச்சிச் சுடருக்கு இரையாகிச் சுருண்டு, விண்டு கீழே விழும்வரை காத்திருந்தான். 

என் கருகல். 

உதடுகளில் புன்னகை அரும்பிற்று. 

அலமாரியிலிருந்து சீசாவையெடுத்துக்கொண்டு கட்டிலில் உட்கார்ந்து, மூடியைத் திறந்து, குப்பியை ஆட்டி ஆட்டி, மறு உள்ளங்கையுள் மாத்திரைகளை உதிர்க்க ஆரம்பித்தான். 

– அமுதசுரபி

– என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு… (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1992, வானதி பதிப்பகம், சென்னை.

லா.ச.ரா லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *