எது மகிழ்ச்சி?






கௌரி ஒரு அரண்மனையில் சமையல் வேலை செய்பவள். அன்றைய தினமும் அவள் வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு அரண்மனைக்கு வேலைக்கு போக ரெடியாகி கொண்டிருந்தாள். அவளின் கணவன் வேலுச்சாமி அவளையும் மகன் சீனுவையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அவளை அரண்மனையில் விட்டுவிட்டு மகனை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்வான். வேலை முடித்துவிட்டு திரும்பும்போது கௌரியையும் அழைத்துக் கொண்டு வீடு செல்வான்.
இவ்வாறுதான் அவர்களின் நாட்கள் இனிமையாக நகர்கிறது. அன்றும் அதேபோல் அவளை அரண்மனையில் இறக்கிவிட்டு திரும்பும்போது அவளின் கையை பிடித்து நிறுத்த அவள் திரும்பி அவனின் கண்களைப் பார்க்கிறாள். அவன் பொட்டு கோணலா வச்சுருக்கடி என பொட்டை சரி செய்து விட்டு கிளம்பியவனின் கைகளை பிடித்து இன்னைக்கு கோவிலுக்கு போலாமா? என கேட்கிறாள், போலாம் என்கிறான்.
சிரித்துக் கொண்டே உள்ள வந்தவள் அரண்மனையை விட்டு வெளிய வந்த ராஜலக்ஷ்மியின் மீது மோத, கௌரி காலையிலேவா என கேட்க வெக்கத்தில் தலை குனிகிறாள். உன்னை பார்த்தால் எனக்கு பொறாமையா இருக்கு என அவள் சொல்ல, இவ்ளோ பெரிய அரண்மனையோட முதலாளியம்மா நீங்க குடிசைல வாழுற என்ன பார்த்த பொறாமையா இருக்குன்னு சொல்றீங்க ஆச்சர்யமா இருக்கு மா என்கிறாள்.
கௌரி நான் இவ்ளோ பெரிய அரண்மனையில் இருந்தாலும் இந்த வீட்டுல நான் ஒண்ணுமே இல்ல. நீ குடிசை வீட்ல இருந்தாலும் அங்க நீதான் ராணி. உன்ன விடுறதுக்கும் கூட்டிட்டு போறதுக்கும் உன் புருஷன் வரான். ஆனா நான் எங்க போணும்னாலும் டிரைவர் ஓட தான் போணும். உன் புருஷன் எவ்ளோ சந்தோசமா சிரிச்சு பேசிட்டு போறான், அவருக்கு என்கூட பேசவே டைம் இருக்காது.
நான் நினைச்சதெல்லாம் வாங்குற அளவுக்கு காசு இருக்கு. ஆனா நீ உன் புருஷன் கூட துணி எடுக்க போறப்ப ஒரு புடவையோட விலைய பாத்துட்டு வாங்காம வந்துருவ. அவன் உனக்கே தெரியாம அத வாங்கி கொடுக்கும்போது ஒரு சந்தோசம் வரும் அது நானா எனக்கு வாங்கிறதுல இருக்காது.
இவ்ளோ பெரிய அரண்மனையில இருக்காங்க. இவங்களுக்கு சந்தோஷத்துக்கு என்ன குறை என எல்லாரும் நினைப்பாங்க. வசதியாலயும் பணத்தினாலயும் மட்டும் சந்தோசமா இருந்துற முடியாது. கூடவே அன்பும் அக்கறையும் வேணும் கௌரி. அதுனாலதான் சொன்னேன். நீ தப்பா எடுத்துக்காத என சொல்லிவிட்டு வெளியில் செல்பவளை பார்த்தப்படியே நிற்கிறாள் கௌரி…