எதிர்வீட்டு ஏந்திழை!
‘அந்த’படம் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து மனசு குறுகுறுத்தது. உடம்பின் சூடு சுரம் அடிப்பதைப் போல கொதித்தது. தட்டினால் தெறித்து விடும் வீணையின் கம்பி போல உடல் அதிகமாய் முறுக்கேறியது.
மனைவியைத் தலைப் பிரசவத்திற்காக பிறந்தகத்திற்கு அனுப்பி இருக்கும் இந்த வேளையில், தண்ணி,’பலான’படங்கள் பார்த்தால் இந்த மாதிரியெல்லாம் ஓன்று கிடைக்க ஒன்று செய்து அவஸ்தைப் வேண்டி வரும் என்ற நினைப்பில்தான் மூன்று மாத காலமாக நண்பர்கள் பார்ட்டிக்கு வற்புறுத்தி அழைத்தும் நழுவி நழுவி வந்தேன்.
அவர்கள் இரண்டு நாட்களாக அடித்த வேப்பிலையில்…. இன்று என்னவோ சாத்தன் மனது போடா போடாவென்று இடைவிடாமல் ரொம்ப வேதம் ஓதி பிடித்துத் தள்ள… நண்பன் வீட்டில் படம், தண்ணி…. இதோ கஷ்டம் !!
திருமணம் முடிப்பதற்கு முன்பு, இந்தக் குட்டி நகரத்திலிருக்கும்’அந்த’மாதிரியான வீடு, விடுதிகளெல்லாம் அத்துப்படி.
திருமணம் முடிந்த பிறகு… நான் மனைவியைத் தவிர மற்றவளைப் பார்க்காத ஏக பத்தினி விரதன், ராமனாகிவிட்டேன். !
இது எனக்கே ஆச்சரியம்.!!
இப்படி மாறியதற்கு மனைவி ஜனனி ஒரு காரணமென்றாலும்…’எய்ட்ஸ்’வந்து செத்துப் போவானேன்.’‘வியாதி’வந்து மனைவியிடம் வாங்கிக் கட்டிக்கொள்வானேன் , கஷ்டப்படுவானேன் என்கிற பயம் விட்டு விட்டேன் விலகி விட்டேன்.
திருமணமானால் எல்லா இளைஞர்களுக்கும் இந்த பொறுப்பு, பய உணர்ச்சி வந்து விடும் போல. வரவேண்டும் !
அதே சமயம், நினைத்த நேரமெல்லாம் வகை வகையாய் சாப்பிட வீட்டில் வசதி இருக்கும்போது, எதற்கு இரவல் சோறு, எச்சில் சாப்பாடு, ஓட்டல் உபத்திரவம். என்று கஷ்டம் என்கிற மனோ நிலையும் அதற்கு காரணம்.
தண்ணி, படத்தின் விளைவு….? உடல் நாண் ஏற்றிய அம்பு, வில்லாக இருந்து ஆசை அங்கே இங்கே என்று அலைமோதினாலும் பொறுப்புணர்ச்சியின் காரணமாக’அந்தப்’பக்கம் திரும்பக் கூடாது என்ற வைராக்கியம், கட்டுப்பாட்டில்… எனக்கு எள்ளளவு இறங்கவும் மனதில் இடமில்லை.
இருந்தாலும் பொல்லாத சாத்தான் பூதமாக உருவெடுத்து மனசும் உடலும் வடிகால் ! வேண்டும் ! வேண்டும் ! என்று மனிதன் உயிரை எடுத்தது.
என்ன செய்யலாம் ? என்று யோசனை செய்தபோதுதான் எதிர்வீட்டு ஏந்திழை மனக்கண்ணில் வந்தாள்.
‘ஆள் தளதள தக்காளி !, ‘சேலத்து மாம்பழம் ! – நினைப்பு வந்ததுமே நெஞ்சில் எச்சில் ஊரியது.
அவள் கணவன் வியாபார வேலையாய் அடிக்கடி வெளியூர் சென்று தங்கி விடுபவன். திருமணம் முடித்து ஐந்தாறு வருடங்களாகியும் இன்னும் குழந்தை குட்டிகள் இல்லை. அதனால் அவள் உடல் கொஞ்சம் கூட கட்டு குலையவில்லை இன்னும் பதினாறு வயது பருவ சிட்டு மாதிரி’சிக் !’. ஆள் எந்த நேரம் பார்த்தாலும் காலையில் பூத்த ரோஜா போல. பளிச். !!
கணவன் ஊரில் இல்லாத சமயங்களில் அப்படி – இப்படி நடப்பதாக அக்கம் பக்கம் பேச்சு. ஆனால் சும்மா சொல்லக்கூடாது. பிறர் பேச்சைக் கேட்டுக் கொண்டு நாமும் மாங்காய் புளித்ததோ, வாய் புளித்ததோ என்று பேசக்கூடாது, அந்த பேச்சுக்களையும் நம்பக்கூடாது. நான் குடி வந்ததிலிருந்து ஒரு முறை கூட அவள் வீட்டில் அப்படி தப்பு தண்டாவாக அடுத்த ஆட்களைப் பார்த்தது கிடையாது.
ஒருவேளை வெளி இடங்களில் சென்று பழகலாம், பழக்கம் வைத்திருக்கலாம். அது நம் கண்களுக்குத் தெரியாதது. ஆனால் நான் பக்கத்து வீட்டுக்காரன் என்கிற மரியாதை பயத்தில் ஒதுங்கி இருக்கலாம்.
சென்ற வாரம் மும்பை சென்ற அவள் கணவன் வர ஒரு வாரமாகு மென்று எதிர் வீட்டு வாண்டுவால் தகவல்.! நினைக்க இனிப்பாக இருந்தது
கொஞ்ச நாட்களாகவே அவளின் பார்வை சரி இல்லை. அவளின் மேல் வெகுநாட்களாகவே ஒரு கண் இருந்தாலும், திருட்டுத்தனமாகப் பார்க்கும்போது கையும் மெய்யுமாய் மனைவியிடம் பிடிபட்டு அடிக்கடித் திட்டு வாங்கி இருந்தாலும்’அந்தக் கண்ணும் மனசும் எனக்குள் மாறவே இல்லை.!!
எப்படி மாறும்..? கிளிமாதிரி மனைவி வாய்த்தாலும், மச்சினிச்சி மீதும், அடுத்தவளின் மீதும்தானே ஆண்களுக்குக் கண் !
இதனால் மனைவி ஜனனியைப் பிறந்தகத்திற்கு அனுப்பிய நாள்முதலாய் என்றைக்காவது பழுக்கும் என்கிற நப்பாசையில்.. அவளிடம் அடிக்கடி வலிய சென்று நலம் விசாரிப்பது போலவும், அது வேண்டும் இது வேண்டும் என்று உதவி கேட்பது போலவும் உறவை வலுப்படுத்தி வைத்திருக்கிறேன்.
அவளும் என்னை எதிர்பார்ப்பது போல் என்னிடம் வலிய வலிய வந்து ஆசையாக உதவி செய்து கொண்டுதானிருக்கிறாள்.
காலையில் அலுவலகத்திற்கு கிளம்பி வரும்போதுகூட… முத்தாய்ப்பாய்…
“எதுக்கு தினம் ஓட்டல்ல சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்குறீங்க…? ஜனனி வரும்வரை எங்க வீட்டில வீட்டு சாப்பாடு சாப்பிடுங்க…”என்று சொன்னாள்.
இந்த திடுதிப் அழைப்பு நான் எதிர்பாராதது என்று மனது துணுக்குற்றாலும்…… பழம் பழுத்து விட்டதென்று. புரிந்து விட்டது. இருந்தாலும் அழைத்ததும் உடனே போய் அமருவது ஆணுக்கு எப்படி அழகு, கௌரவக் குறைச்சல் என்பதால்…
“பரவாயில்லைங்க… உங்களுக்கு வீண் சிரமம். !” என்று பெருந்தன்மையாக சொல்லி வந்தது இப்போது ஞாபகத்திற்கு வந்தது..
அவ்வளவுதான்…!!
மெதுவாய் வீட்டை விட்டு இறங்கி, சத்தம் போடாமல் எதிர் வீட்டை அடைந்து அழைப்பு மணியை அழுத்த கை வைக்கும்போதுதான்.. வாசலை ஒட்டி இருக்கும் படுக்கை அறைக்குள் இருந்து அவளின் கொஞ்சல் மொழியும் சிணுங்கல் ஒலியும் கேட்டது.
அடப்பாவி ! எனக்கு முன்னாடி எவனோ புகுந்துவிட்டானே..! அதிர்ச்சி !!
காது கொடுக்க…
“என்னங்க.. ! எதிர் வீடு ஜனனி கணவர் ரொம்ப நல்ல மனுசன். தங்கமான குணம். நீங்க வெளியூர் போனதிலிருந்து..’ என்னங்க ! ஏதாவது உதவி வேணுமா.? ‘..ன்னு அடிக்கடி வந்து விசாரிச்சு அன்பாய் கேட்டு உதவறார். உண்மையிலேயே நம்ம ஊறவுக்காரங்க கூட இப்படி அன்பா, அக்கறையா விசாரிச்சு உதவ மாட்டாங்க. உண்மையிலேயே இது போல அக்கம் பக்கம் உதவ நாம வச்சிருக்கனும். நாம கொடுத்து வைச்சவங்கதான்.
பாவங்க அவர். ! மனைவியைப் பிரவசத்துக்கு அனுப்பிட்டு ஓட்டல்ல சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கிறாரு. நீங்க வந்ததும் அவரை அழைச்சி சாப்பாடு போடாலாம்ன்னு நெனைச்சி இருந்தேன். நல்ல வேளை போன வேலை முடிஞ்சதும் சட்டுன்னு திரும்பிட்டீங்க. நீங்க நாளைக்கு அவரை சாப்பிட நம்ம வீட்டு அழைச்சுக்கிட்டு வாங்க……”
இன்னும் அவள் என்னென்னவோ அவள் கணவனிடம் சொல்ல….எதுவும் எனக்கு அதற்கு மேல் காதில் ஏறவில்லை.
மனதில் அழுக்குகளைச் சுமந்து கொண்டு போலியாய் அவளிடம் நடித்தவைகளை நினைத்துப்பார்க்கும்போது… என்னையறியாமல் எனக்குள் தலைகுனிவு ஏற்பட….
அடுத்த வினாடி…
உடம்பு சூடு, சுரமெல்லாம் தானாக இறங்க…மெல்ல படி இறங்கினேன்..