ஊர்மி





ஹலோ…
நான் ஊர்மியிடம் பேசலாமா, ப்ளீஸ்!
ஊர்மி! ராங் நம்பர்

தொலைபேசியின் ரிசீவர் கீழே வைக்கப்பட்டதன் கிளிக் ஓசை கேட்டது. நானும் ரிசீவரை கீழே வைத்தேன். குத்துமதிப்பாக மற்றொரு எண்ணைச் சுழற்றினேன்.
ஹலோ…
ஊர்மி இருக்கிறாளா?
ஊர்மி இங்கு இல்லை.
அவள் எண் உங்களிடம் உள்ளதா?
இல்லை.
தொலைபேசியின் ரிசீவரை கீழே வைத்துவிட்டு, ஏதோவொரு எண்ணைச் சுழற்றினேன்.
ஹலோ…
ஊர்மி இருக்கிறாளா?
இல்லை
எங்கே போய்விட்டாள்?
ஷியாமலைச் சந்திக்க.
எப்போது வருவாள்?
எனக்குத் தெரியாது. ஏதாவது தகவல் உண்டா?
இல்லை.
ரிசீவரைக் கீழே வைத்தேன். யார் இந்த ஆள்? ஊர்மிக்கும் இவனுக்கும் என்ன உறவு? நான் தெரிந்து கொண்டது, ஷியாமல் என்பவரை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைத்தான். ஆனால் ஊர்மி ஏன் ஷியாமலைச் சந்திக்கச் சென்றாள்? இந்த ஊர்மிக்கு என்ன வயதிருக்கும்? அவள் பார்ப்பதற்கு எப்படி இருப்பாள்?
மீண்டும் ஒருமுறை ஏதோவொரு எண்ணைச் சுழற்றினேன். வேறொரு இணைப்பில் இருந்தது.
மறுபடியும் ஒருமுறை ஏதோவொரு எண்ணைச் சுழற்றினேன். மற்றொரு இணைப்பில் இருந்தது.
மறுபடியும் தொடர்பின்றி ஒரு எண்ணைச் சுழற்றினேன். இந்த முறை தொலைபேசி ஒலிக்கத் தொடங்கியது. இந்த முறை, அநேகமாக…
ஹலோ…
நான் ஊர்மியிடம் பேசலாமா.
ராங் நம்பர்.
துண்டித்துவிட்டு, மற்றொரு எண்ணைச் சுழற்றினேன்.
ஹலோ…
ஊர்மி இருக்கிறாளா?
தயவுசெய்து காத்திருங்கள்!
சில நிமிடங்களுக்குப் பின், ஒரு பெண்ணின் குரல்:
ஹலோ…
என்னைத் தெரிகிறதா?
சோட்டு மாமாவா?
தவறு.
ஷிபேன் அண்ணாவா?
இல்லை.
தாய்மாமாவா?
இல்லை.
எரிச்சலுடன் தொலைபேசி ரிசீவரைக் கீழே வைத்தேன். ஊர்மியிடம் அவள் மாமாவைப்போல என்னால் பேச இயலாது.
மற்றொரு எண்ணைச் சுழற்றினேன். இல்லை, அது வேறொரு இணைப்பில் எல்லாம் இல்லை. தொலைபேசி ஒலிப்பதை என்னால் கேட்க முடிந்தது. ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை. வீட்டில் யாருமில்லை. ரிசீவரைக் கீழே வைத்தேன்.
சிறிது நேரம் கழித்து வேறொரு எண்ணைச் சுழற்றினேன். எனக்கு ஊர்மி வேண்டும். ஊர்மியை நான் அடையவேண்டும்.
ஹலோ…
நான் ஊர்மியிடம் பேசலாமா, ப்ளீஸ்!
ராங் நம்பர்
நான் ரிசீவரைக் கீழே வைத்தேன். என்ன தவறு நடந்தது? இருபது ஆண்டுகள் கடந்ததால் அந்தப் பெயர் மிகவும் பழையதாகிவிட்டதா? ஊர்மி எனப் பெயரிடப்பட்ட பெண்கள் இனி இல்லையா? அப்படி என்றால் இக்காலத்தில் என்ன மாதிரியான பெயர்களை பெண்கள் வைத்திருக்கிறார்கள்.? ஆனால் அவளுக்கு என்ன பெயர் இருந்தாலும் நான் ஊர்மியை அடைய வேண்டும். நான் வேறொரு எண்ணைச் சுழற்றினேன்.
ஹலோ…
நான் ஊர்மியிடம் பேசலாமா, ப்ளீஸ்!
ஊர்மிதான். யார் பேசறீங்க?
உனக்கு என்னைத் தெரியவில்லை. இல்லையா?
ஆமியாவா?
ஆம்.
சரியாகத் தான் கணித்தேன். ஆனால் உங்கள் குரல் வேறுமாதிரி இருக்கிறது. நேற்று ஏன் வரவில்லை?
வேறு ஒருபக்கம் மாட்டிக் கொண்டேன்.
குழந்தைகள் எல்லாம் உங்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இதற்கு மேல் கேட்க நான் விரும்பவில்லை. எனக்கு மணமாகாத ஊர்மிதான் வேண்டும், தாயான ஊர்மி அல்ல. ரிசீவரைக் கீழே வைத்துவிட்டு மீண்டும் மற்றொரு எண்ணைச் சுழற்றினேன்.
ஹலோ…
ஊர்மி?
ஆமா.
என்னைத் தெரியுதா?
ஆமாம். நீங்க ரொம்பக் குறும்பு.
ஏன்? நான் என்ன செய்தேன்?
வாயை மூடுங்க!. எதுவுமே தெரியாத மாதிரிதான்.
உண்மையாலும் தெரியாது.
அப்ப உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை.
ஏன்?
எனக்குத் தெரியாது, அப்பறம் கூப்பிடுங்க. எங்க அப்பாவும் அண்ணனும் இப்போது வீட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்துவிடும்.
எப்போது அழைப்பது?
மதியம். வீட்டில் யாரும் இருக்கமாட்டார்கள். ஊர்மி ரிசீவரை வைத்துவிட்டாள். அந்த ஒலியைக் கேட்டேன்.
நானும் ரிசீவரை வைத்துவிட்டேன். ஆனா எந்த எண்ணை நான் அழைத்தேன்? அந்த எண்ணால் என்ன பயன்? இருபது வருடங்களுக்கு முந்தைய ஊர்மிக்கும் இவளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவள் குரல் வேறு. அவள் பேசும் முறை வேறு. அவள் மொழி வேறு. அது எப்படி இருக்கும்? எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் அதைக் கேட்டால் தெரிந்து கொள்வேன். அந்த ஊர்மிதான் எனக்கு வேண்டும்.
மீண்டும் வேறொரு எண்ணைச் சுழற்றத் தொடங்கினேன்.
ராமநாத் ராய், வங்கச் சிறுகதை
தமிழில்: க.ரகுநாதன் – 25/06/2022
நன்றி:சொல்வனம்.காம்