ஊன மனம்!




சாந்திக்கு ஐந்தாவதுக்கு மேல் படிப்பு புரியவில்லை. அம்மாவுடன் ஆடு, மாடு மேய்க்க காட்டிற்குள் உதவிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது கழுத்து வலிக்குமளவுக்கு விறகுச்சுமையை சுமந்து வருவாள். காய்ந்த பின் தான் விறகு கணம் குறைவாக இருக்கும். அம்மா பச்சையாகவே கட்டித்தலையில் வைத்து விடுவாள். காயும் வரை காட்டில் விட்டால் விறகு திருடு போய்விடும் என்கிற பயம்.
நகரத்திலிருந்து வந்திருந்த அம்மாவின் தங்கை சித்தி கனகா அம்மா ராசாத்தியை கண்டபடி திட்டிக்கொண்டிருந்தாள்.

“பச்சக்கிளி மாதர அழகா இருக்கற பொண்ண பெத்து வெச்சுட்டு வெறகு சொமக்கவா போடறது…? படிப்பு வரலேன்னா அதுக்கு என்ன காரணம்னு யோசிச்சுப்போட்டு, மறுபடியும் படிக்கவெக்கிறத உட்டுப்போட்டு எடுபிடி வேலைக்கு ஊட்ல வெச்சுட்டு கடுபிடியா பேசி காரியத்த சாதிச்சுக்கறே…? அதுக்காக இப்படித்தா ஊட்டு வாசல்ல வெறகக்கொண்டுவந்து காயப்போடுவாங்களா? தேளும், பாம்பும் வந்து குடியிருந்தராதா? வயசு வளரும் போது புத்தியும் வளரோணும்” என ஒரு தாயைப்போல திட்டினாள் ராசாத்தியை தங்கை கனகா.
கனகா நன்றாகப்படித்து அரசாங்க ஆசிரியையாக வேலையில் சேர்ந்ததால் அரசாங்க வேலையிலிருக்கும் வரன் அமைய, நகரத்தில் வீடு வாங்கி நாகரீக வாழ்க்கைக்கு மாறி விட்டாள். ராசாத்தி படிக்காததால் இருபது வயது மூத்தவரான தாய் மாமனுக்கு வாழ்க்கைப்பட்டு தன் கைப்பாட்டில் ஆடு, மாடு மேய்த்து ஜீவிப்பவள். ஒரே பெண்ணான சாந்தியை அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தும் விடுமுறை நாட்களில் ஆடு, மாடு மேய்க்க அனுப்பிய பழக்கத்தால் மரத்தடியில் சக ஆடு மேய்ப்பவர்களுடன் சின்னச்சின்ன விளையாட்டுகளை விளையாடியது மனதுக்கு மகிழ்ச்சியைத்தர, பள்ளியில் தேர்ச்சி பெற முடியாமல் போனது சக மாணவ, மாணவிகள் மத்தியில் தாழ்வு மனப்பான்மையைக்கொடுக்க, ஒரு நாள் அரளி விதையை அரைத்துக்குடித்ததால் வாயில் நுரை தள்ள, உள்ளூர் வைத்தியர் காப்பாற்றி உயிர் பிழைக்க வைத்தார்.
அம்மாவுக்கும் வயதான கணவருக்கு உடனிருந்து வேலை செய்வதும், வீட்டு வேலை, சுப, துக்க நிகழ்வுக்கு செல்வது என நேரம் சரியாக இருப்பதால் ஆடு, மாடு மேய்த்து விட்டு விறகு சுமக்கும் வேலை சாந்திக்கு நிரந்தரமாகிவிட பள்ளிக்குச்செல்வதே சாத்தியமில்லாமல் போனது.
இப்படியிருக்க ஒரு நாள் நகரத்துக்கு சித்தி கனகாவின் மகள் ரேகாவின் சீர் நிகழ்ச்சிக்கு அழைத்ததால் சென்றவள் சில நாட்கள் அங்கேயே தங்கி விட்டாள். அனைவரும் சிரித்து பேசி மகிழ்ந்திருக்கும் நேரத்தில் கூட படித்தவர்களுடன் பேசுவதற்கு கூச்சப்பட்டு, அடுப்படியில் உள்ள அனைத்து வேலைகளையும் தனியாக செய்து கொண்டிருப்பாள். உறவுகளுக்கு டீ, காபி கொடுப்பது என இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டாள். இதை நன்றாக கவனித்த பக்கத்து வீட்டு ரகுவரன் கனகாவிடம் விசாரித்து சாந்தியை பெண் கேட்டார் இரண்டாவது தாரமாக.
ரகுவரன் நல்ல வசதியான குடும்பத்தைச்சேர்ந்தவன். வங்கியில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருப்பவன். உடன் பணிபுரிந்த மலையாளத்துப்பெண்ணை காதலித்து மனைவியாக்கியவனை இல்லற வாழ்வில் ஈடுபட முடியாமல் தடுத்தது மனைவியை தாக்கிய புற்றுநோய்.
படுகையாய் கிடந்தவளை பார்த்துக்கொள்ளவும், வாரிசை பெற்றெடுக்கவும் இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தவனுக்கு சாந்தி மனைவியானது இறைவன் கொடுத்த வரமாக நினைத்தான். சாந்தியும் தன் விருப்பங்களை விட தன் கணவனின் விருப்பங்களுக்கும், எண்ணங்களுக்கும் கட்டுப்பட்டாள்.
வறுமையிலிருந்த, படிக்காத பெண்ணான தனக்கு படித்த வசதியான கணவன் கிடைத்ததில் இந்த நிலையை, இந்த வாழ்வை தக்க வைத்துக்கொள்ளவே விரும்பினாள். காரில் போய் இறங்கும் போது ஊரில் உள்ளவர்கள் முன் பெருமையாக இருந்ததால் கணவன் வீட்டில் வேலைப்பளுவால் ஏற்படும் சிரமங்களை பொறுத்துக்கொண்டாள்.
தாய் வீட்டினரையே முற்றிலும் மறந்தவளாய் நகர வாழ்க்கைக்குள் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டாள். கணவனின் முதல் மனைவியை ஒரு குழந்தையைப்போல பார்த்துக்கொண்டாள். இவளின் நிலை கண்டு சித்தி கனகாவே பொறாமைப்படுவதை அறிந்தாலும் சிரித்தே அனைவரிடமும் பேசி பிறர் பொறாமையை, படிக்காத தன் நிலையின் பலவீனத்தை சாணக்யமாக வெற்றி கொண்டு ஒரு குழந்தைக்குத்தாயானாள்.
நோயின் தாக்கம் அதிகரித்ததால் கணவனின் முதல் மனைவி நவ்யா இறந்து விட, குறைந்த காலமே பழகினாலும் கணவனை விட சாந்தியே அதிகமான கவலைக்கு ஆளானாள்.
சிரிப்பை மறந்தவளாய் சோகமாகவே வலம் வந்தாள். ஆனால் கணவன் ரகுவரனோ துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம், ரியல் எஸ்டேட் நிலவரம், அரசியல் என சிரித்து பேச ‘நகரத்து மக்களின் வாழ்வில் அன்பு, பாசம், துக்கம் குடிகொண்டிருக்கவில்லை. எதையுமே இயல்பாக எடுத்துக்கொள்கின்றனர்’ என நினைத்த போது, கிராமங்களின் நிலையை ஒப்பிட்டபோது வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.
கிராமங்களில் ஒருவர் இறந்து விட்டால் ஊரிலுள்ள வீடுகளில் உள்ளவர்கள், இறந்தவரை அடக்கம் செய்யும் வரை யாரும் அடுப்பு பற்ற வைக்க மாட்டார்கள். ஆனால் நகரத்தில் அடக்கம் செய்வதற்குள் இறந்தவரை வீட்டில் வைத்துக்கொண்டே விருந்து உணவு உண்டு கழிக்கிறார்கள்.
ஒரு வாரத்தில் இறந்த முதல் மனைவியை மறந்து விட்ட ரகுவரன் பார்டிகளுக்கும், திருமண நிகழ்வுகளுக்கும் சென்று வர ஆரம்பித்து விட்டான். அதே சமயம் சாந்தியிடமிருந்து இது வரை இருந்தது போலில்லாமல் விலகிச்செல்வது தினமும் வாடிக்கையாக இருந்தது.
ஒருநாள் பார்டிக்கு சென்று விட்டு நடு இரவில் வந்த ரகுவரன் அதிகமாக குடித்திருந்தான்.
அவனது படுக்கையறைக்கு சென்ற சாந்தியைக்கண்டதும் “போடி வெளியே” என அருகில் கிடந்த தண்ணீர் சொம்பை எடுத்து அவள் முகத்தின் மீது வீச, அச்சொம்பு நெற்றியில் பட்டு வீக்கம் ஏற்பட்டதை அழுது கொண்டே வெண்ணீரில் ஒத்தடம் கொடுத்து கவலையில் இரவு உறக்கம் தொலைத்தாள்.
கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டிற்கு சென்றால் இருக்கும் கௌரவம் குறைந்து போகும், குழந்தையை வளர்க்க முடியாது எனக்கருதி கொடுமைகளைத் தாங்கிக் கொண்டாள்.
இந்த நிலையில் அலுவலகத்திலிருந்து நேரமே வந்தவன் சாந்தியை தனது அறைக்கு அழைத்தான். நல்லது நடக்கப்போகுது என மகிழ்ச்சியாக சென்றவளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
ஒரு பெண்ணின் போட்டோவைக்காட்டி “என்னோட வேலை பார்க்கிற ரம்யா. போன வாரந்தா டைவர்ஸ் ஆயிடுச்சு. அவளை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு சமமா படிச்சிருக்கா, சம்பாறிக்கிறா, அழகா வேற இருக்கறா அதனால…. என இழுத்தவனை மறித்து அதிர்ச்சியுடன் “அதனால…?” என கேள்வி எழுப்பியவளை ஓங்கி அறைந்தவன் “கல்யாணம் பண்ணிக்கப்போறேண்டி…” என கத்தியபடி சொன்ன மறு நொடி அதிர்ச்சியால் மயக்கமடைந்து சரிந்தாள் சாந்தி.
நினைவு வந்தவுடன் “இத பாரு உன்ன என்னோட மனைவின்னு வெளில கூட்டிட்டு போக முடியாது. ஏன்னா நீ படிக்காத பட்டிக்காடு. அதனால இந்த பேப்பர்ல கையெழுத்து போடு. உன்ன டைவர்ஸ் பண்ணிட்டு வீட்லயே வேலைக்கார மனைவியாவே வெச்சுக்கறேன். ரம்யாவ கல்யாணம் பண்ணிக்கிறேன். ஏன்னா உன்ன மாதிரி விசுவாசமா வீட்ட கவனிக்கிற, சுவையா சமைக்கிற ஆள் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்” என ரகுவரன் சொன்னபோது சாந்தி கதறி அழுதாள்.
அவனது கொடுமை தாங்க முடியாமல் விவாகரத்து செய்ய ஒத்துக்கொண்டு கையெழுத்திட்டாள். விவாகரத்து செய்ய சம்மதித்து கையெழுத்திட்ட மறுநாள் முதல் உடன் பணி புரியும் ரம்யாவை வீட்டிற்கே அழைத்து வந்து கணவன் மனைவிபோல் வாழத்துவங்கி விட்டான்.
“ஒரு வருசம் பக்கத்துல வீடு எடுத்து கொடுத்திடறேன். அங்கேயே குழந்தையோட இருந்துக்க . விவாகரத்து முடிஞ்சதும் இங்கேயே வீட்டு வேலைக்கு வந்திடு. சம்பளம் கொடுக்கிறேன். குழந்தையோட படிப்பு செலவுக்கும் கொடுத்திடறேன்” என்றான் வில்லனாக ரகுவரன்.
மறுநாள் அதிகாலையிலேயே எழுந்த சாந்தி குழந்தையை எடுத்துக்கொண்டு பிறந்த ஊருக்கு செல்ல, முதல் பேருந்தில் ரகுவரனிடம் சொல்லாமலேயே கிளம்பிச்சென்று விட்டதை எழுந்தவுடன் அறிந்தவன் அதிர்ச்சியடைந்தான். நல்ல வேலைக்காரியை இழந்து விட்டோமென வருந்தினான்.
பெற்றோர் வீட்டிற்கு சென்ற சாந்தி தீர்க்கமாக ஒரு முடிவெடுத்தவளாய் ஒரு கால் ஊனமானதால் தனது மாமன் மகன் முருகனை சாந்தி உள்பட யாரும் திருமணம் செய்யாமலிருந்த நிலையில், பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டாள். குழந்தையை அன்புடன் புதிய கணவர் கவனித்துக்கொள்ள, அவரது பெட்டிக்கடையை மளிகைக்கடையாக மாற்றி வருமானத்தைப்பெருக்கி குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்தாள்.
மன ஊனம் உள்ளவர்களோடு வசதியாக வாழ்வதை விட, உடல் ஊனமுள்ளவர்களுடன் வறுமையோடு வாழ்ந்தாலும் உரிமையோடு வாழ்வதே மேல் என நினைத்து புதிய வாழ்வை அமைத்துக்கொண்டவள் வறுமையை தமது கடின உழைப்பால் வென்று நின்றாள்.