உறவுகள்- ஒரு பக்க கதை





செல்போனில், மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தாள் மணப்பெண் வர்ஷிணி, பேத்திக்கு அருகில் வந்தார் தாத்தா சதாசிவம்.
மண்டபத்துல உட்கார்ந்திருக்கிறவங்க எல்லாம் யாருன்னு தெரியுதா கண்ணு?
இது கூட தெரியாதா தாத்தா? சொந்தக்காரங்களும் தெரிஞ்சவங்களும்தான் என்றாள் சிரித்தபடி! அதோபார் நம் சொந்தக்காரங்க எல்லாம் தங்களோட வேலையை விட்டுட்டு
உன்னோட கல்யாண பந்தியில் ஆளுக்கொரு வேலையை செய்றாங்க! ஏன்னா, அது பதவி, பணம் தாண்டி உன் மேல அவங்க வைச்சருக்குற பாசம்.
நமக்குத் தெரிஞ்சவங்க எல்லாம், உன்னை நேரில் வந்து வாழ்த்துறாங்களே! அவங்களுக்கு என்ன அவசியம்! நம்ம குடும்பத்து மேல அவங்க வைச்சிருக்கிற அன்பும் மரியாதையும்தான்! அந்த அன்புதான் எல்லா உறவுகளுக்கும் ஆதாரமா இருக்கு. முதல்ல அவர்களுக்கு நன்றி சொல்லி, அவங்க கிட்ட நாலு வார்த்தை பேசி, ஆசி வாங்கிட்டு வா!
நேர்ல வராம செல்போன்ல வாழ்த்துறவங்கிட்ட அப்புறம் பேசலாம் என்றார்.
தாத்தாவின் வார்த்தையில் இருந்த உண்மையை புரிந்து கொண்டவளாக செல்போனை ஆஃப் செய்து, எழுந்து சென்றாள் நன்றி தெரிவிக்க!
– ப.உமாமகேஸ்வரி (டிசம்பர் 2011)