உயிர் உனதானதே!
கதையாசிரியர்: லாவண்யா ஸ்ரீராம்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 1, 2026
பார்வையிட்டோர்: 237
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
அத்தியாயம் – 7

காவ்யா திருமணத்திற்கு மறுத்துவிட்டாள் என்பது தெரிந்து, பெற்றோரிடம் காவ்யா பேசிய விதம் பற்றி யோசித்துக்கொண்டிருந்தாள் திவ்யா. காவ்யா ஒரு ஆளுமையுடன் மறுத்த விதம் பற்றி திவ்யாவுக்கு ஆச்சரியமே! அவளுக்கு எது வேண்டும் என்று எத்தனை தெளிவுடன் இருக்கிறாள். ஆனால் ‘சென்னை செல்லாதே! இங்கே வா!’ என்று சொன்னதும் எதிர்த்து அவள் கருத்தைக்கூட சொல்லாமல், இங்கே வந்துவிட்டாளே திவ்யா! அவளுக்கு ஏன் காவ்யாவின் துணிச்சல் இல்லை? முதலில் திவ்யாவும் அப்படித்தானே இருந்தாள்.
பெற்றோர்களுடன் செல்லக் குறும்புத்தனத்தை குறைத்துக்கொண்டவளை, அத்தையின் வருகை இன்னும் மாற்றியது.
வேலை முடிந்ததும் மாமா வாங்கி வரும் தின்பண்டங்கள் தொடங்கி அவ்வப்போது அவள் பள்ளி கட்டணம் வரை எல்லாம் அத்தையின் கண்களை உறுத்தியது.
“உங்கள் அக்கா மகளுக்கு நீங்கள்தான் எல்லாம் செய்ய வேண்டுமா?”
“அப்படி என்ன செய்துவிட்டேன்?”
“சென்ற மாத பள்ளி கட்டணம் நீங்கள் தானே கட்டினீர்கள்!”
“அதை அப்பா அப்போதே திரும்பத் தந்துவிட்டார். வீட்டு வாடகை வரத் தாமதம் ஆகிவிட்டது என்று கட்டச் சொன்னார். பணம் வந்ததும் தந்துவிட்டார்.”
தாத்தாவின் ஓய்வூதியம் மற்றும் அவர் கட்டி விட்ட வீடுகளின் வாடகை தான் அவர்கள் செலவுக்கான வரவு. சில நேரங்களில் வாடகை வரத் தாமதம் ஆகும். அந்த நாட்களில் மாமா, திவ்யாவுக்காகப் பணம் செலவு செய்வார். அத்தை வந்ததும் அதற்கான கணக்குகள் கேட்கத் தொடங்கினாள். தாத்தாவும் அதை அறிந்து மாமாவிடம் பணம் கேட்பதை தவிர்த்துக்கொண்டார்.
இருந்தாலும் அத்தையின் சந்தேகங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தன. எந்நேரமும் சண்டையாக இருந்தது. எல்லாவற்றுக்கும் திவ்யா காரணம் என்று தோன்றியது. அப்படித்தான் அத்தையின் பேச்சுக்கள் இருந்தன. அதைப் புரிந்துகொள்ளும் அளவுக்குத் திவ்யாவுக்கு வயதும் வந்திருந்தது. இதற்கிடையில் ஒருமுறை திவ்யாவை அவள் பெற்றோரிடம் அனுப்பிவிடலாம் என்று யோசித்தார்கள். ஆனால் காவ்யாவின் செயல் தாத்தாவைத் தீர்க்கமான ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது.
காவ்யாவுக்கு, எங்கே திவ்யாவுக்குப் பதில் அவளைத் தாத்தாவுடன் அனுப்பி விடுவார்களோ என்ற பயம். அப்படியொரு பேச்சுவார்த்தையைக் காவ்யா கேட்டிருக்கிறாள் கூட.
உமாவும் திவ்யாவுக்கு அவர்கள் அருகாமை கிடைக்கவேயில்லை என்று வருத்தத்துடன் “ஓரிரு வருடnக்கள் திவ்யாவை இங்கே அழைத்து வரலாமா?” என்றாள் கணபதியிடம்.
“திவ்யாவைக் கூட்டி வர வேண்டும்தான். ஆனால் மூன்று பேரையும் இங்கே படிக்க வைப்பதுதான் கொஞ்சம் கஷ்டம். பேசாமல் மூன்று பேரையும் வேறு பள்ளியில் சேர்த்துவிடலாம். அப்படி இல்லை என்றால் காவ்யா கொஞ்ச நாள் அங்கே படிக்கட்டும்.” என்றார் கணபதி.
“வேறு பள்ளியில் சேர்ப்பது சரி வராது. கொஞ்ச நாள் காவ்யா அங்கே இருக்கட்டும். உங்களுக்கு இன்னும் சம்பள உயர்வு
வந்ததும் அவளையும் இங்கேயே சேர்த்துவிடலாம்.” என்று பேசிக்கொண்டார்கள்.
ஆனால் காவ்யாவுக்குத் தாத்தா வீட்டுக்குச் செல்ல மனம் இல்லை. எப்போதும் பாட்டி திவ்யாவைத்தான் தாங்குவாள். எப்போதும் அவளுடன் இருக்கும் பேத்தியின் மேல் கொஞ்சம் கூடுதல் அக்கறை இருக்கத்தான் செய்தது. அதே போல் நிறைய கட்டுப்பாடுகள் பாட்டியிடம் இருக்கும். உணவு, உடை, விளையாட்டு என்று எல்லாவற்றிலும் பெண் பிள்ளை இப்படி செய்யக் கூடாது, அப்படி நடந்துகொள்ளக் கூடாது, வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும், தெருவில் சென்று விளையாடக் கூடாது என்று பழைய காலத்து கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்யும். தீர்மானமான முடிவெடுக்கும் முன் பெற்றோர்கள் பேசியதை மனதில் வைத்துக்கொண்டு, விடுமுறைக்கு வந்த திவ்யாவை அவர்களுடன் இருக்கச் சம்மதிக்கவில்லை. அவள் போட்ட கூச்சலில் திவ்யாவும் பயந்துவிட்டாள்.
பத்து வயது நிரம்பியிருந்த திவ்யாவின் கேசத்தைப் பற்றி காவ்யா அவளை அடித்ததும், அவளைத் தள்ளி விட்டதும் எல்லோருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
“திவ்யா இங்கே வேண்டாம். அவள் இங்கே இருந்தால் நான் எங்கே போவது? நான் எங்கும் போகமாட்டேன். இவளை இங்கிருந்து போகச்சொல்லுங்கள்.” என்று காவ்யா கூச்சலிட்டாள். அழுது புரண்டாள்.
அத்தையினால் வரும் சண்டைகள் திவ்யாவின் மனதைத் தாக்கிவிடுமோ என்று எண்ணியே பெரியவர், அவளை பெங்களூருக்கு அழைத்துச் சென்றார். காவ்யாவின் செயலைப் பார்த்த பிறகு, திவ்யா அவருடன் இருப்பதே சிறந்தது என்று முடிவெடுத்தார்.
காவ்யாவின் பிடிவாதத்துக்கு உமாவும் காரணம். ‘தங்கை வருவாள். அவள் நம்முடன்தான் இருப்பாள்’ என்று மூத்த மகளிடம் ஏன் உமா புரியவைக்கவில்லை? என்ற கோபம் அவருக்கு நிச்சயம் இருந்தது. இன்னொரு மகளின் பொறுப்பை முழுவதும் மறந்துவிட்டார்கள் என்றே தோன்றியது.
உமா திவ்யாவிடம் கல்லூரி படிப்பைப் பெங்களூரில் படிக்கும்படி கேட்டாள். பல வருடங்களுக்குப் பிறகு உமா தான் மீண்டும் அந்தப் பேச்சைத் தொடங்கினாள்.
“அடுத்த வருடம், திவ்யாவைப் பெங்களூரு கல்லூரியில் சேர்த்து விடலாம் அப்பா!”
“வேண்டாம்!”
“ஏன் அப்பா?”
“அவள் விருப்பத்திற்குத் தான் நான் முக்கியத்துவம் தருவேன். இதுவரை பார்த்துக்கொண்ட என்னால், நான் இருக்கும் வரை அவளைப் பார்த்துக்கொள்ள முடியும்.”
“அதில்லை அப்பா! இப்போதெல்லாம் அம்மாவுக்கும் முடிவதில்லை. திவ்யாவைப் பார்த்துக்கொள்வது உங்களுக்கும் கொஞ்சம் சிரமமாக…”
“அவள் என்ன குழந்தையா? எங்கள் யாருக்கும் எந்தச் சிரமமும் இல்லை. ஒருவேளை அவளுக்கு உன்னுடன் இருக்க வேண்டும் என்று ஆசை இருந்தால் அழைத்துச்செல்.”
திவ்யா துளியும் யோசிக்காமல், “நான் இங்கேயே இருந்துகொள்கிறேன்!” என்றாள்.
“அப்பா உனக்குக் கல்லூரி கூடப் பார்த்து வைத்திருக்கிறார். நீயும் காவ்யா, சங்கருடன் படிக்கலாம்!”
“எனக்கு அங்கே சௌகரியமாக இருக்காது!”
திவ்யாவை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று எண்ணி கிளம்பினாள். அப்போதும் திவ்யாவுக்கு ஒரு பெரும் ஏமாற்றம். உண்மையில் கல்லூரி எல்லாம் பார்த்தாயிற்று என்றால் ஏன் அன்னை அவளிடம் பெங்களூரு செல்வதை வலியுறுத்தவில்லை? ஒருவேளை சொன்னது எல்லாம் கூட பேச்சுக்கு சொன்னதுதானோ!
இப்போதும் திவ்யாவை அவர்களுடன் வைத்துக்கொள்ளப் பிரியம் இல்லையோ? ஆனால் பல வருடங்களாக பழகி விட்டதால் திவ்யாவுக்கு சீக்கிரமே அந்த ஏமாற்றம் மறைந்தும் விட்டது.
உமா சென்றதும் பாட்டி கேட்டாள். “ஏன் கண்ணு பெங்களூருக்கு வரவில்லை என்று அம்மாவிடம் சொன்னாய்!”
“எனக்கு இங்கே தான் பிடித்திருக்கிறது பாட்டி!”
“ஆமாம்! அப்போது தானே உன் அம்மா அப்பா காசு மிச்சமாகும்.” என்றாள் உள்ளே வந்த அத்தை வேணி.
வீட்டில் அடிக்கடி வரும் சண்டையால் தாத்தா மாமாவைத் தனிக் குடித்தனம் போகச் சொல்லிவிட்டார். அதுவரை பெரிதாகக் கணக்கு என்று பார்க்காமல் இருந்த தந்தை மகன் இடையே, மருமகள் ஒருத்தி வந்து கணக்கு கேட்கவும் பெரியவருக்கு வருத்தம். அதுவும் துல்லியமாகப் பைசா கணக்கு பார்த்து குறை சொல்லும் அத்தையை திருப்தி படுத்துவது பெரிய சங்கடமாகவும் சலிப்பாகவும் இருந்தது. யார் என்ன சொன்னாலும் அத்தைக்கு வரும் எல்லா கஷ்டங்களுக்கும் திவ்யாதான் காரணம் என்ற எண்ணம்.
“எனக்கு ஒரு நல்ல புடவை கேட்டால், பிறகு பார்க்கலாம் என்பீர்கள். அதுவே அக்கா மகளுக்குப் புத்தகம் வாங்க மட்டும் பணம் இருக்கும்.”
“எனக்கும் என் மாமியாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. எல்லாம் வினையாய் வந்து வீட்டில் இருக்கிறதே, நாத்தனாரின் மகள். அவளால்தான் குடும்பம் இரண்டாய் போய் விட்டது.”
“சரியான கைகாரி! பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, அவளுக்கு வேண்டியதை சாதித்துக்கொள்கிறாள்.”
இப்படிப் பலதும் திவ்யா கேட்டிருக்கிறாள். எல்லா இடங்களிலும் வேண்டாத ஒருவளாக இருக்கிறோம் என்ற உணர்வு, திவ்யாவுக்குப் பெரும் மன உளைச்சலைத் தந்திருந்தது. அதுவும் உடன் பிறந்தவர்கள் அந்த வீட்டில் இயல்பாக வலம் வந்து கொண்டிருக்கும் போது, எந்நேரமும் அறைக்குள் அடைந்து
கிடப்பதும், உணவருந்த மட்டும் வெளியே வருவதும் என்று இருக்க, பெரும் இறுக்கத்தை உணர்ந்தாள் திவ்யா.
இளைய மகளின் மன நிலையை அறியாத கணபதிக்கு அவள் திருமணத்திற்குச் சம்மதிக்க வேண்டும் என்று ஆசை வந்தது.
பெற்றோர் இருவரும் ஒன்றாக அவள் அறைக்கு வரவும் சற்றே வியப்புடன் பார்த்தாள் திவ்யா.
“என்னம்மா செய்கிறாய்?” என்றார் கணபதி.
இங்கே வந்ததிலிருந்து அவளுக்கு இருக்கும் ஒரே வேலை, வேலை தேடுவது. தந்தை சொன்ன இடங்களிலிருந்து இன்னும் நேர்காணலுக்கு அழைப்பு வரவில்லை. அதனால் செய்தித்தாளில் வரும் வேலை பற்றிய விளம்பரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மகள் கையிலிருந்த விளம்பரங்களைப் பார்த்துவிட்டு, “இனி இதற்குத் தேவை இருக்காது” என்றார்.
வேலை கிடைத்துவிட்டது என்று தந்தை சொல்கிறார் என்று எண்ணினாள் திவ்யா.
“எந்த நிறுவனம்?” என்றாள்.
“நிறுவனமா? ஓ! நீ வேலையைப் பற்றிக் கேட்கிறாயா? நாங்கள் உன் திருமணத்தைப் பற்றிப் பேச வந்தோம்” என்று மனைவியைப் பார்த்தார் கணபதி.
உமா பேசினாள், “ரொம்ப நல்ல இடம் திவ்யா! அப்பாவுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அங்கே உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள்!”
“என்னை யாரும் பார்த்துக் கொள்ளத் தேவை இல்லை” என்றாள் சட்டென்று.
இருவரும் ஒரு கணம் திகைத்துவிட்டு, “அப்படிச் சொல்லவில்லை. அவர்கள் ரொம்ப நல்லவர்கள் என்பதை அப்படிச் சொன்னோம்.”
“என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்? இன்னும் காவ்யாவுக்கே திருமணம் ஆகவில்லை.” என்றாள் திவ்யா.
“அவள் படிப்பு இன்னும் முடியவில்லை. நீ படிப்பை முடித்து விட்டாய். உனக்கும் திருமண வயதுதான். அவள் படித்தபின் திருமணம் செய்து கொள்வதாகச் சொல்கிறாள்.” அப்போது திவ்யா லேசாகச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் நிச்சயம் ஒரு ஏளனம் இருந்தது.
அவள் செயல் இருவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. “என்ன திவ்யா?” என்றார் கணபதி.
“நான் இங்கே இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நேரடியாகச் சொல்லிவிடுங்கள். இப்படி என்னை இங்கிருந்து அனுப்ப நீங்கள் சுற்றி வளைக்கத் தேவையில்லை.” சட்டென்று சொல்லிவிட்டாள்.
“ஐயோ! நாங்கள் அப்படி எல்லாம் நினைக்கவில்லை திவ்யா!” பதறினாள் உமா.
“பிறகு இதை நான் எப்படி புரிந்துகொள்வது? இங்கே நான் வந்து ஒரு மாதம் கூட நிரம்பவில்லை. உடனே என்னை இங்கிருந்து அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறீர்கள். இப்போதும் ஒன்றும் பிரச்சனை இல்லை. நான் சென்னை சென்று விடுகிறேன். அங்கே ஒரு வேலையை என்னால் நிச்சயம் பார்த்துக் கொள்ள முடியும்.” என்று எழுந்துவிட்டாள்.
“நீ சொன்னால் புரிந்துகொள்வாய் என்று நம்பி வந்தேன். இப்படி எங்களைக் காயப் படுத்துகிறாயே!” உமா கண்ணீர் வடிக்கத் தொடங்கிவிட்டாள்.
“நீ பொறுமையாக இரு உமா!” என்று மனைவியைச் சமாதானப்படுத்திவிட்டு, “நீ நினைப்பதுபோல் இல்லை திவ்யா. எனக்கு இந்த இடம் மிகவும் பிடித்திருந்தது. இதைவிட மனமில்லை. உனக்குச் சம்மதம் என்றால் மேலே இதுபற்றிப் பேசலாம் என்றுதான் நினைத்தோம். மற்றபடி உன்னைக் கட்டாயப்படுத்தவில்லை. உனக்குப் பிடிக்கவில்லையா! விடு. இனி
இந்தப் பேச்சை எடுக்கமாட்டோம். நீ எங்கும் செல்ல வேண்டாம்.” என்று இருவரும் அறையை விட்டு வெளியேறினர்.
கொஞ்சம் வெளிக்காற்று தேவைப்பட்டது திவ்யாவுக்கு. மாடிக்குச் செல்லலாம் என்று நினைத்தாள். ஆனால் பெரும்பாலும் அங்கே சங்கரும் காவ்யாவும் ஒன்றாக அரட்டை, விளையாட்டு என்று இருப்பார்கள். இவள் சென்றால் உடனே எல்லாம் நின்றுவிடும். காலையில் ஒருமுறை அவள் உடைகளைக் காயப்போடவும், மதியம் அதை எடுத்துவரவும் செல்வதுடன் சரி. அங்கே அனாவசியமாகச் செல்வதில்லை. சிறிது ஆலோசனைக்குப் பிறகு வேகமாக அவர்கள் இருக்கும் பகுதியைக் கடந்து விடலாம் என்று எண்ணி மேலே சென்றாள். நல்ல வேளையாக யாரும் அங்கே இல்லை. சிறிதுநேரம் அங்கே அமர்ந்திருந்தாள்.
எண்ணங்கள் எங்கெங்கோ சென்றன. பள்ளியில் பயின்ற காலத்தில் தந்தை அவளுக்காக எதுவும் செய்யவில்லை. அவளுக்கு விவரம் தெரிந்த பிறகு பண்டிகை சமயங்களில் அவர்கள் வாங்கித்தரும் ஆடைகளுடன் சரி. தாத்தாவுடன் வரவு செலவுக் கணக்கு, வங்கிக் கணக்கு என்று பார்த்தபோது தான், அவளின் முழு பொறுப்பையும் அவள் பெற்றோர் தட்டிக் கழித்துவிட்டார்கள் என்று தோன்றியது. தாத்தாவின் ஓய்வூதியம், அவர் வாடகைக்கு விட்டிருந்த இரண்டு வீடுகளின் வாடகைதான் அவர்களின் வரவு. செலவு பெரும்பாலும் திவ்யாவின் படிப்புக்குத்தான் சென்றது. அப்படியானால் தந்தையும் தாயும் அவள் படிப்புக்கென்று எதுவும் செய்யவில்லை. தாத்தாவிடம் ஒருமுறை கேட்டாள்.
“என் பீஸ் முழுவதும் நீங்கள் தான் கட்டுகிறீர்களா?”
“பிறகு என் பேத்திக்கு நான் கட்டாமல்?”
“அப்பா என் படிப்புக்குக் கூடப் பணம் தருவதில்லையா தாத்தா?”
தாத்தாவின் முகத்தில் ஒரு திகைப்பு இருந்தது. ஒரு கணம் யோசித்தவர், “அவர் தருவார் திவ்யா! அது உன் பெயரில் தனியாக டெபாசிட் செய்து வைத்திருக்கிறோம்,” என்றார்.
அது அவளைச் சமாதானம் செய்ய மட்டும் சொன்னது என்று விரைவிலேயே தெரிந்து கொண்டாள். அது கூட அத்தையின் பேச்சில் வெளிப்பட்டதுதான். தாத்தா, வீட்டில் இருக்கும் நேரம் அதிகம் பேசாத அத்தை, அவர் இல்லாத நேரங்களில் கொஞ்சம் பாட்டியிடம் வம்பிழுப்பாள். பக்கத்துக்குத் தெருவில் தனி குடித்தனம் இருக்கும் அவள் பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு வருவாள்.
“மாமாவுக்கு, என் பிள்ளைக்குச் செய்வதென்றால் மனம் வராது! அதே மகள் வயிற்றுப் பிள்ளை என்றால் எவ்வளவு செய்கிறார்.”
“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நீ தான் தேவையில்லாமல் கற்பனை செய்கிறாய்!” இது பாட்டி.
“நானா கற்பனை செய்கிறேன்? திவ்யாவின் படிப்புச் செலவை ஏன் மாமா செய்ய வேண்டும்? ஏதோ இங்கே இருக்கிறாள். சாப்பாட்டுக்குக் கணக்கு பார்க்கத் தேவையில்லை. பள்ளி கட்டணம் முழுவதும் மாமா தான் கட்டுகிறார். அரசாங்க பள்ளி வேண்டாம் என்று, தனியார் பள்ளி வேறு. திருமணத்திற்கு முன் என் கணவரும் அவளுக்கு நிறையச் செய்திருக்கிறார். இப்போது என் பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்க்க மாமா எந்த உதவியும் செய்வதாக இல்லை.”
“உன் பிள்ளைகள் படிப்புக்கு வேண்டும் என்று கேட்டால் மாமா செய்யப் போகிறார்.”
“திவ்யாவுக்கு மட்டும் கேட்காமல் எல்லாம் செய்கிறார். என் பிள்ளைகளும் அவரின் பேரப்பிள்ளைகள் தானே! உங்கள் மகள் மூன்றாவது பிள்ளையை இங்கே விட்டு விட்டுக் கண்டுகொள்வதே இல்லை.”
“திவ்யா எங்கள் பொறுப்பு! அவளுக்கு நாங்கள் முடிந்ததைச் செய்கிறோம். உன் பிள்ளைக்கும் தேவை என்றால் மாமா செய்வார்,” என்று பாட்டி சொன்னார்.
“கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். திவ்யா விஷயம் தவிர வேறு எதிலாவது நான் குறுக்கே பேசுகிறேனா. அவளுக்கு எதற்காகச்
செலவு செய்கிறீர்கள் என்று கேட்டதும் எங்களைத் தனியே போகச் சொல்லிவிட்டார் மாமா! இப்போது நான் தான் பொல்லாதவள். எல்லோரும் அப்படித்தானே பேசுகிறார்கள்.”
இதுபோல் அத்தை எப்போதும் திவ்யாவுக்குச் செய்வதைக் குத்திப் பேசிக்கொண்டே இருப்பாள். குத்தல் ஒவ்வொன்றும் திவ்யாவுக்குப் பெரும் வடுவாய் மாறியது. கல்லூரியில் சேர்க்கும்போது தாத்தாவின் சேமிப்பிலிருந்துதான் எடுத்தார்கள். அப்போதுதான் திவ்யாவுக்குச் சந்தேகம் வந்தது.
“என் பெயரில் இருக்கும் டெபாசிட்டில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் தாத்தா. உங்கள் சேமிப்பில் இருக்கும் பணம் எதற்கு?”
வயோதிகம் காரணமாகச் சொன்ன பொய்யை மறந்துவிட்டார். “உன் பேரில் டெபாசிட்டா? பாட்டி பெயரில் தான் ஒன்று இருக்கிறது. அது உன் கல்யாணத்துக்குத்தான் எடுப்பேன்.” என்று சிரித்தார் பெரியவர்.
கல்லூரியில் சேர்த்த கையோடு அவள் மூன்று வருடப் படிப்புக்குத் தேவையான தொகை மற்றும் அவள் தனிப்பட்ட செலவு என்று ஒரு தனி வங்கிக் கணக்கை அவள் கையில் தந்தார்.
“இப்போதிலிருந்து உன் செலவுகளை எல்லாம் நீ தான் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவை எனும்போது தாத்தாவிடம் கேள். ஆனால் நீ எல்லாவற்றையும் சமாளிக்கப் பழக வேண்டும். பகுதி நேர வேலை, ஊக்கத்தொகை, பரிசுத் தொகை என்று எப்படி எல்லாம் சேர்க்க வேண்டும் என்று யோசி!” என்று தாத்தா பல அறிவுரைகள் சொன்னார்.
முதலில் தந்தை தனக்கு எதுவும் செய்யவில்லை என்ற வேதனை மறையும் முன், தாத்தாவும் அவளைக் கைவிடப் போகிறாரா என்று யோசித்தாள். கட்டுப்படுத்த முடியாத அழுகை வந்தது. தாத்தாவைக் கட்டிக்கொண்டு அழுதாள்.
“நீ பயன்பட ஒன்றுமில்லை திவ்யா குட்டி! உனக்குச் சிறுவயதிலிருந்து சொல்வதுதான். எல்லாம் நீ சமாளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். உனக்கு நாங்கள் இருக்கிறோம்.
ஆனால் யார் தயவும் இல்லாமல் நீ தனியே சமாளித்தாய் என்றால், அது என் வளர்ப்புக்குக் கிடைத்த வெற்றி.” தாத்தாவின் கடைசி அறிவுரை அதுவே. கல்லூரியில் சேர்த்த கையோடு அவர் கடமை முடிந்தது என்று எண்ணிவிட்டாரோ என்னவோ.
தாத்தா மறைந்த சில மாதங்களில் பாட்டியும் பலவீனமாகிவிட்டார். பாட்டியைப் பார்க்கச் சென்றால் கூட அத்தை ஜாடையாகப் பேசுவாள். “எல்லாம் பேத்திக்கென்று பார்த்துப் பார்த்துச் செய்தார்கள். இப்போது அருகிலிருந்து பார்ப்பது யார்?” என்பாள்.
“திவ்யா எங்கள் பொறுப்பு என்று உங்கள் அம்மா சொன்னார்கள். இப்போது அவருக்குப் பின் யார் பார்ப்பார்களாம். என்னால் எல்லாம் பார்க்க முடியாது.” என்று அவள் கணவனிடம் பேசுவாள். அத்தையின் கோபத்தைக் குறைகூற முடியாதுதான்.
“என்னால் உங்களுக்கு எந்தத் தொல்லையும் இருக்காது. நான் இங்கே அதிகம் வரமாட்டேன் அத்தை. வேறு வேலை தேடிக்கொள்வேன்.” என்றாள் திவ்யா.
“அதுதானே! நீ ஏன் வரப்போகிறாய்! உன் தாத்தா அவரின் சேமிப்பில் பாதியை உனக்குக் கொடுத்துவிட்டாரே! மீதம் இருந்த பாதியிலும் பாதிதான் என் பிள்ளைகளுக்கு கிடைத்தது.”
“கல்லூரி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் செலுத்தத்தான் தாத்தா கொடுத்திருக்கிறார். வேலைக்குப் போனதும் நான் அதையும் திரும்பக் கொடுத்துவிடுவேன்.”
மாமா மனோகரன் தான் உடனே மறுத்தார். “திவ்யா, அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். அத்தை ஏதாவது சொல்வாள். நீ தேவையில்லாமல் கவலைப்படாதே.”
இப்படிப் பலமுறை ஏதாவது பேச்சுக்கள் நடக்கும். பாட்டி பெயரில் இருந்த சேமிப்பும் அவரின் மருத்துவ செலவுக்கே சரியாகிப்போனது. பாட்டி இருக்கும் வரை அவரைப் பார்க்கவென்று சென்றாள். பாட்டி இறந்த பிறகு வீட்டுக்குச் செல்லவில்லை என்றால் மாமா வருத்தப்படுவாரோ என்று சில முறை சென்றாள். அதன் பின் செல்லத் தேவையில்லை என்று தெரிந்துவிட்டது.
பெரியவர்களுக்குள் என்ன ஒப்பந்தமோ! படிப்பை முடித்ததும் திவ்யாவைப் பெங்களூருக்குச் செல்லும்படி சொன்னார்கள்.
அவளுக்கு எல்லோரும் இருக்கிறார்கள், ஆனால் யாரும் இல்லை என்ற உணர்வு திவ்யாவுக்கு இருக்கிறது. இப்போது இந்தத் திருமண விஷயம் கூட அவள் பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைக்கும் முயற்சியாகவே தோன்றியது. அதுவும் அவள் அக்காவுக்கு முன் அவளுக்குத் திருமணம்.
இரவெல்லாம் யோசித்தாள். தெளிவாக முடிவை எட்டும் முன் மனோகரன் திவ்யாவுக்கு அழைப்பு விடுத்தார்.
“என்ன திவ்யா குட்டி! எப்படி இருக்கிறாய் கண்ணு!”
“இருக்கிறேன்! நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? அத்தையும் வாண்டுகளும் எப்படி இருக்கிறார்கள்?”
“ஹ்ம்ம். இப்போது தான் எங்கள் நினைவு உனக்கு வந்ததா? ஊருக்குச் சென்றதும் என்னிடம் பேசக்கூட உனக்குத் தோன்றவில்லையா!”
“எங்கே பேசுவது மாமா! நீங்கள் பகலில் வேலைக்குச் சென்றுவிடுவீர்கள்! மாலை எல்லோரும் வந்த பிறகு பேச முடியாது! இதில் எங்கே நான் உங்களுக்கு அழைப்பது?”
“ஏன்? மாலையில் பேசுவதற்கு என்ன?” மாமா கேட்ட பின் தான் தோன்றியதை பேசிவிட்டது தெரிந்தது. இவள் தான் எல்லோரும் வீட்டில் இருக்கும் நேரம் கூட்டுக்குள் அடைபட்டுவிடுவாளே!
“அது, அது….”
“பார்த்தாயா? அங்கே சென்ற பின் எல்லாம் மாறிவிட்டது! என்னிடம் பேசக் கூட உனக்குத் தோன்றவில்லை. நான் தான் சொன்னேனே! அம்மா அப்பா உன் மேல் ரொம்ப பிரியம் வைத்திருக்கிறார்கள் என்று!” விஷயம் முழுவதும் தெரியாமல் சொல்லிவிட்டார்.
“ஆமாம்! ரொம்ப பாசம்! அதனால் தான் முதலில் என்னை வீட்டில் இருந்து துரத்த யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள்!” திவ்யாவும் வெடித்து விட்டாள்.
“என்னடா சொல்கிறாய்?”
மாமாவிடம் திருமண ஏற்பாடு பற்றி சொன்னாள் திவ்யா.
பொறுமையாக கேட்டவர், “ஏன் திவ்யா எல்லாவற்றையும் தவறாக புரிந்து கொள்கிறாய்? உனக்கும் திருமண வயது தானே!” என்றார்.
“ஆனால் காவ்யாவுக்கு முன் எனக்கு எதற்கு?” என்றாள்.
“நீ இப்படி அவர்களை புரிந்து கொள்ளாமல் அங்கே இருப்பதை விட, வேறு இடத்தில் நன்றாக இருப்பாய் என்று நினைத்திருக்கலாம்!”
“எனக்கு அப்படி தோன்றவில்லை!”
“திவ்யா குட்டி! கோபத்தில் எல்லாவற்றையும் பார்க்காதே! உண்மையில் எனக்கு இது சந்தோஷமாக இருக்கிறது. திருமணம் செய்வது என்பது உன்னை அங்கிருந்து அனுப்புவது என்று நினைப்பதற்கு பதில், உன் வாழ்க்கையை அமைத்து தர நினைக்கிறார்கள் என்று யோசி! அதுவும் காவ்யாவுக்கு முன்பு உனக்கு நல்ல படி அமைத்து தர நினைக்கிறார்கள்.”
“அது தானே இங்கே பிரச்சனை! அவள் வேண்டாம் என்றால், அது எனக்கு என்று முடிவுசெய்து விட்டார்கள். அவளை பாட்டி தாத்தாவுடன் அனுப்ப முடியவில்லை. அவளுக்கு பதில் நான். இப்போது அவளுக்கு இந்த திருமணம் வேண்டாம். உடனே அதை எனக்கு முடிக்கிறார்கள்!”
“தாத்தா பாட்டி உனக்கு நிறைய குறை வைத்துவிட்டார்களா திவ்யா?” மாமா கேட்டதும் அப்படியே உறைந்தாள்.
அவள் சொன்னதில் அப்படியும் பொருள் கொள்ளலாம் தானே. அவளுக்கு ஏதோ பெற்றோர்கள் தீமை செய்ததாக சொன்னது போல் தானே!
“அப்படி…அப்படி இல்லை மாமா! ” அவள் தடுமாற, “நீ தாத்தா பாட்டியுடன் சந்தோஷமாக தானே இருந்தாய்?” மனோகரன் கேட்டார்.
“நிச்சயமாக மாமா!”
“அப்படியானால், உன் அம்மா அப்பா இனி அனுப்பும் இடத்திலும் நீ சந்தோஷமாக இருப்பாய் என்று நம்பு. உன் அம்மா அப்பாவுடன் நீ இருக்க முடியவில்லை என்பது எனக்கு புரியாமல் இல்லை. அதற்காக அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் உன்னை ஒதுக்கி வைக்க தான் செய்கிறார்கள் என்று நினைக்காதே! அப்படி நினைத்திருந்தால் சென்னையில் நீ சென்று வேலை பார்க்க அனுப்பிவிட்டு உன்னை கண்டுகொள்ளாமல் இருந்திருப்பார்கள். நான் ஏதோ உன்னை அவர்கள் ஏற்பாட்டுக்கு கட்டாயப்படுத்துகிறேன் என்று நினைக்காதே! நன்றாக யோசித்து முடிவெடு!”
அதுவரை ஏதேதோ எண்ணிக் கொண்டிருந்தவள் யோசித்தாள்.
உண்மையில் இங்கே இருக்கும் நிதி நிலைமை திவ்யாவுக்குத் தெரியாதுதான். அம்மா அப்பாவிடம் நிறைய சேமிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால், முன்பே திவ்யாவை பெங்களூரு அழைத்துவந்திருப்பார்களே! குறைந்தது திவ்யாவுக்காகும் செலவுக்கேனும் பணம் தந்திருப்பார்களே! இவை எல்லாவற்றையும் விட இனி திவ்யாவுக்குச் செய்ய வேண்டிய கடமை எல்லாம் சங்கர், காவ்யாவுக்கு செய்வதிலிருந்து எடுத்துச் செய்ய வேண்டும்.
இதுவரை அவர்களிடமிருந்து திவ்யா எதையும் பறித்துக்கொண்டதில்லை. இனியும் அப்படியே இருந்துவிடலாம். திவ்யா அவளைப் பார்த்துக்கொள்வதாகச் சொன்னாலும், அவளுக்குத் திருமணம் என்று செய்யும் வரை அவள் அவர்களுக்குப் பாரமாகத்தான் இருப்பாள்.
இங்கிருந்து சென்றுவிட்டால்… திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டால்… எல்லோருக்கும் நல்லது. அதுவும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கிடைக்கும் ஒரு மாப்பிள்ளையை ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.
உண்மையில் தந்தையின் எண்ணமும் அதுதான். ஒரு நல்ல இடம். சீர்வரிசை வேண்டாம் என்றதால் மட்டும் இல்லை. உண்மையிலேயே கணபதிக்கு மாப்பிள்ளை வீட்டாரை மிகவும் பிடித்திருந்தது. அவர் கடமையை முடித்துக்கொள்ள, தெரியாத ஒருவனுக்கு திவ்யாவை மணம் முடிக்க நினைக்கவில்லை. அவருக்கு நல்ல பரிச்சயம் உள்ள குடும்பம் என்றுதானே சொன்னார். இந்த விஷயத்தில் அவர் நிச்சயம் காவ்யாவுக்கும் திவ்யாவுக்கும் பாகுபாடு பார்க்கவில்லை. அவரின் ஒரு மகள் அந்த வீட்டிற்கு சென்றால் நன்றாக இருக்கும் என்றுதானே நினைக்கிறார். இப்படியாகப் பல ஆலோசனைகள் செய்தாள் திவ்யா.
உமா ஒரு தட்டில் உணவுடன் திவ்யா அறைக்கு வந்தாள். அன்றைய நாள் முழுவதும் அவள் சாப்பிடவில்லைதான். பெற்றோரிடம் பேசவும் இல்லை.
“நீ சாப்பிடாமல் இருக்க வேண்டாம். அதுதான் நீ வேண்டாம் என்று சொல்லிவிட்டாயே! நானும் அப்பாவும் இனி உன் திருமணம் பற்றி இப்போதைக்கு பேசமாட்டோம். நீ சாப்பிடு” என்று தட்டை நீட்டினாள்.
ஒரு கணம் தன் அன்னையின் கண்களைப் பார்த்தாள். அழுதிருக்க வேண்டும். லேசான சிவப்பு கண்களின் ஓரம் மட்டும் தெரிந்தது. திவ்யா பேசியது நிச்சயம் பெற்றோரை காயப்படுத்தியிருக்க வேண்டும்.
அன்னை நீட்டிய தட்டை வாங்கிக்கொண்டு, “கல்யாணத்துக்குச் சம்மதம். அப்பாவிடம் சொல்லிவிடுங்கள்.”
“ஏன் திவ்யா? உனக்குப் பிடிக்கவில்லை என்றால் வேண்டாம். நீ இங்கே இருக்க வேண்டும் என்று பிரியப்பட்டாயே!” அன்னை முடிக்குமுன்,
“எனக்குச் சம்மதம்! யோசித்துத் தான் சொல்கிறேன். உங்களுக்கும் அப்பாவுக்கும் இதில் சந்தோஷம் என்றால், எனக்கு இது நல்லது என்று நினைப்பதால் எனக்கு மறுப்பு சொல்லக் காரணம் எதுவும் இல்லை.” மகளின் குரலிலிருந்த உணர்வு உமாவுக்குக் கொஞ்சம் தயங்கவைத்தது. “நான் அப்பாவிடம் சொல்கிறேன்” என்று சென்றாள்.
பாதி முடித்திருந்த உணவை அதற்கு மேல் உண்ண முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. எழுந்து சென்று பாத்திரத்தைச் சுத்தம்செய்து வைத்துவிட்டு வரவும், தந்தை அவளுக்காகக் காத்திருந்தார்.
“இப்படி உட்கார் திவ்யா. அம்மா நீ சம்மதம் தெரிவித்ததை சொன்னார்கள். ஏன் திடீர் மாற்றம்?”
“நேற்று கேட்டபோது எனக்கு வேறு தோன்றியது” என்றாள் மெதுவாக.
“நீ இங்கே வந்ததும் உன்னை இங்கிருந்து அனுப்புவதாகவா?”
மகள் பேசாமல் அமர்ந்திருக்க, “திவ்யா! உன்னை நாங்கள் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று எப்போதும் நினைக்கவில்லை. பொருளாதார நெருக்கடி. மூன்று பேரையும் வளர்க்க முடியாதோ என்ற பயம். ஒருவர் பொறுப்பை உன் தாத்தா ஏற்றுக்கொள்வதாகச் சொல்லவும் எங்களுக்குச் சரி என்று தோன்றியது. பிறகு சூழ்நிலை காரணமாக உன்னை இங்கே அழைத்து வரமுடியவில்லை. மற்றபடி நீங்கள் மூவரும் எங்களுக்கு ஒன்றுதான்.” ஒரு சிறு இடைவெளி விட்டு மீண்டும் பேசும் முன்,
“நீங்கள் எனக்கு விளக்கம் தர அவசியம் இல்லை. உங்கள் விருப்பத்திற்குச் சம்மதம் தெரிவிக்கிறேன்.” என்றாள் திவ்யா.
“நீ இப்படிப் பேசுவதே எங்களைக் குறை கூறுவது போல் இருக்கிறது. இந்த மனநிலையில் உன்னை எப்படி வேறு வீட்டிற்கு அனுப்புவது. எங்களுடன் உனக்கு இருக்கும் கசப்பு அங்கேயும் உன் நிம்மதியைக் கெடுத்துவிடக் கூடாது. உனக்கு இருக்கும் மனக்குறை எனக்குப் புரிகிறது. அதற்கு யார் என்ன விளக்கம்
கொடுத்தாலும் அது சரியாகப் போவதில்லை. ஆனால் நீ நினைப்பது போல் உன்னை இங்கிருந்து அனுப்பும் நோக்கத்தில் உனக்குத் திருமணம் செய்ய நினைக்கவில்லை. அதையேனும் நீ உணர வேண்டும் என்பதால்தான் நானும் அப்பாவும் உனக்கு விளக்கம் தருகிறோம்.” உமா சொன்னாள்.
யாரும் சில கணம் பேசவில்லை. கணபதி தொடர்ந்தார், “நாங்கள் சொல்வதை மனதில் வைத்து யோசித்துச் சொல் திவ்யா. இப்போதும் உன்னைக் கட்டாயப் படுத்தவில்லை. நீ சொன்ன சம்மதம் முழுமனதாகச் சொன்னதாகத் தெரியவில்லை.”
“நீங்கள் என் விருப்பத்திற்கு இத்தனை முக்கியத்துவம் தருவது எனக்குச் சந்தோஷம். நான் முழுமனதாகத்தான் சொன்னேன்.”
“அப்படியானால் மாப்பிள்ளை வீட்டில் சொல்லிவிடலாமா?” உமா கேட்டாள்.
‘சரி’ என்பதுபோல் தலையாட்டினாள்.
திவ்யா சம்மதம் தெரிவித்தபோதும் உமா, கணபதி இருவருக்கும் கலக்கமாகவே இருந்தது. திருமணம்பற்றிப் பேசும்போது ஒரு பெண்ணுக்கு இருக்கும் நாணம், மகிழ்ச்சி துளியும் அவளிடம் இல்லை. திவ்யா வெளிப்படையாக முகத்தில் எதையும் காட்டிவிடமாட்டாள் என்பது உமா அறிந்ததே! இருப்பினும் ஒரு குழப்பத்துடன் ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினார்கள்.
கணபதி சொன்னது போல், திவ்யாவை சந்தோஷமாக வரவேற்கும் மனிதர்கள் அந்தக் குடும்பத்தில் இருக்கலாம். நிச்சயம் சங்கர் காவ்யாவைப் போல் வெறுப்பைக் காட்டும் மனிதர்கள் இருக்கமாட்டார்கள். இங்கிருப்பதை விட உலகில் வேறு எங்கு இருந்தாலும் நன்றாகத்தான் இருப்பாள் என்று திவ்யாவுக்குத் தோன்றியது. நல்லபடியே யோசித்தாலும், ‘மூவரில் அவள் ஏன் தனித்து விடப்பட்டாள்’ என்ற ஏமாற்றமும் எட்டிப்பார்த்தது. தந்தை மேல் சிறு மதிப்பு வந்த சில நிமிடங்களில், எப்போதும் அவளை ஒதுக்குவது அவருக்கு எளிதாக இருக்கிறதோ என்று தோன்றியது!
அத்தியாயம் – 8
வசந்திக்குப் பெண் வீட்டிலிருந்து வந்த செய்தி உண்மையில் மகிழ்ச்சியாக இல்லைதான். திருமணத்திற்கு அக்காவைக் கேட்டுத் தொடர்புகொண்டால், தங்கையைத் தருகிறோம் என்கிறார்கள். அக்காவை ஏன் தர மறுக்கிறார்கள்? யோசித்துக்கொண்டிருந்தவள் கணவன் எதிரில் நிற்பதைக் கவனிக்கவில்லை.
“என்ன பகல் கனவா? பகல் கனவு பலிக்காது.” என்றார் தங்கவேலு.
“அதெல்லாம் இல்லை. பெண் வீட்டிலிருந்து தகவல் வந்தது. அதுபற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன்.”
“என்ன சொன்னார்கள்?”
“அவர்களுக்குச் சம்மதம் தான். ஆனால்….”
“அதில் என்ன சிக்கல்? இழுக்காமல் விஷயத்தைச் சொல்.”
“இளைய மகளைத் தருவதாகச் சொல்கிறார்கள்.”
“ஏன்? மூத்த மகளுக்குத் திருமணம் முடிந்துவிட்டதா?”
“அப்படி இருந்தால் பரவாயில்லையே! பெரியவள் படிக்கிறாளாம். அதனால் இப்போது அவளுக்குச் செய்வதாக இல்லையாம். நம் ஊர்களில் இப்படி யாரேனும் செய்வார்களா? பக்கத்து ஊர்தான் அவர்கள் பூர்வீகம் என்று நினைத்தேன். ஆனால் இப்போது கொஞ்சம் கலக்கமாக இருக்கிறது.”
“இவர்கள் ரொம்ப நகர்ப்புற நாகரீகத்திற்குப் பழகிவிட்டார்களோ என்று. நம் குடும்பத்திற்கு ஒத்து வராதோ என்று.”
“உனக்குப் பிடிக்கவில்லை என்றால் வேண்டாம் என்று விடலாம். இதில் யோசிக்க என்ன இருக்கிறது?”
“அப்படி இல்லை. நான் நினைப்பதை வைத்து ஒதுக்கவும் முடியவில்லை. நம் கீர்த்தியின் திருமணத்தின்போது கிருபாவுக்கும் ஜாதகம் பார்த்தேன். இருபத்தி எட்டு வயதுக்கு முன் திருமணம் அமையும். அப்படி இல்லை என்றால் முப்பத்தி ஐந்து தாண்டித்தான் திருமண யோகம் இருக்கிறது என்றார் ஜோசியர். அதற்காக அவசரப்பட்டுச் செய்துவிடவும் முடியாது. படிப்பைக் காரணம் சொல்லி, இளைய மகளைத் தருகிறேன் என்று சொல்வது கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது.”
“இப்போதுதான் படிப்பைத் தவிர வாழ்க்கையில் எதுவுமே முக்கியம் இல்லை என்று எல்லோரும் நினைக்கத் தொடங்கி விட்டார்களே.”
“நீங்கள் சொல்வதும் சரிதான்! முத்து அண்ணா இங்கே வருவதாகச் சொன்னார். நேரில் வந்து எல்லாம் சொல்கிறேன் என்றார். இன்னும் அவரைக் காணோம்!” என்று சொல்லிமுடிக்கும் நேரம் ஒருவர் குரல் வாசலில் கேட்டது.
“வேலு! வீட்டில் இருக்கிறீர்களா?”
நகரங்களைப் போல் பகலில் கூட வீட்டுக் கதவை அடைத்து வைக்கும் நாகரீகம் இன்னும் அந்த ஊரில் வரவில்லை. இரவு நேரங்களிலும், வீட்டில் ஆள் இல்லாத நேரத்திலும் மட்டுமே கதவு அடைத்திருக்கும். மற்றபடி திறந்திருக்கும் கதவுடன் இருக்கும் வீட்டில், ‘நான் வருகிறேன்’ என்று தெரியப்படுத்தக் குரல் கொடுத்துக்கொண்டே வெளி ஆட்கள் உள்ளே நுழைவது தான் வழக்கம். அப்படித்தான் யாரோ உள்ளே வந்தார்கள். அவரைக் கண்டதும், தங்கவேலு சொன்னார்.
“இப்போது தான் உன்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.”
“போனில் வசந்தியிடம் சுருக்கமாக சொன்னேன். நேரில் சென்று விளக்கமாகப் பேசிவிடலாம் என்று கிளம்பி வந்தேன்.”
முத்து. முத்துகுமரன். தங்கவேலுக்கு நண்பர். ஒன்றாகப் பள்ளியில் படித்தவர்கள். இருவர் ஊர்களும் அருகருகே தான். முத்துகுமரனுக்குத் திருமண வரன்களை அமைத்துத்தருவது மிகவும் பிடித்தமான விஷயம். தரகர் என்று சொல்ல முடியாது.
தெரிந்தவர்களுக்குள் திருமண வயதில் யாரேனும் இருந்தால் அவருக்குத் தெரிந்த இடங்களில் வரன் பற்றி விசாரித்துச் சொல்வார். வசந்தி நேரடியாகப் பெண் வீட்டில் பேசவில்லை. முத்து தான் இரு வீட்டாருக்கும் தொடர்பில் இருக்கிறார்.
முத்துகுமரன் அமர்ந்ததும், “குடிக்க ஏதேனும் கொண்டு வருகிறேன்” என்று வசந்தி உள்ளே சென்று வரும் வரை ஆண்கள் இருவரும் வேறு விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
வசந்தி வரவும் பேச்சைத் தொடங்கினர்.
“நேற்று மாலையே பெண் வீட்டிலிருந்து தகவல் வந்தது. எனக்கும் சில சந்தேகங்கள் இருந்தது. எல்லாவற்றையும் தெளிவுபடுத்திக் கொண்டு வருகிறேன்.”
“எனக்கும் சில விஷயங்களில் குழப்பம் தான் அண்ணா! இளையவளுக்கு ஏன் முதலில் திருமணம் செய்கிறார்கள்? பெரியவள் படிக்கிறாள் என்றால் இளையவள் படிக்கவில்லையா? பார்க்க எப்படி இருப்பாள்? நல்ல குணமா? நமக்கு ஒரு விவரமும் தெரியவில்லையே?”
“இத்தனை பதட்டம் தேவை இல்லை. நான் முதலில் சொல்லி முடிக்கிறேன்” என்று சொல்லும்போது கிருபாகரனும் உள்ளே நுழைந்தான்.
“வா! சரியான நேரத்தில் தான் வந்திருக்கிறாய்” என்றார் தங்கவேலு.
“எப்போது வந்தீர்கள் மாமா? வீட்டில் எல்லோரும் நலமா?”
“எல்லோரும் நலம். நான் சொல்லும் விஷயத்தை நீயும் கேள். நீ என்ன நினைக்கிறாய் என்பது மிகவும் முக்கியம்” என்று விஷயத்தைச் சொன்னார்.
“நீங்கள் பெண் கேட்டது, பெண் வீட்டாருக்கு மிகவும் சந்தோஷம்தான். ஆனால் பெரியவள் இப்போது தான் முதுகலை
பட்டப் படிப்பில் சேர்த்திருக்கிறாளாம். நம் குடும்பம்பற்றித் தெரிந்ததால் அவர்களுக்கு இந்தச் சம்பந்தத்தை விடவும் மனம் இல்லை. அதனால் இளைய மகளுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துவிட்டார்கள்.”
“நீங்கள் சொல்வதைப் பார்த்தால், பெண் மிகவும் சிறு பெண்ணாகத் தோன்றுகிறது” என்றார் தங்கவேலு.
“இல்லை. இல்லை. இருவருக்கும் ஒரு வயது தான் வித்தியாசம். சின்னவளும் ஒரு டிகிரி முடித்திருக்கிறாள். பெண் பெயர் திவ்யா. அவளுடன் பிறந்த ஒரு பையன் இருக்கிறான். அதாவது இரட்டையர்கள். அவனும் படிக்கிறான். மூன்று பிள்ளைகளுக்கும் எல்லாம் ஒரே நேரத்தில் செய்வது கடினம். பெரியவள் படிக்கிறாள். மகன் வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்கிறானாம். பெரியவளுக்குத் திருமணம், மகன் படிப்பு என்று நிறையச் செலவுகள் ஒன்றின் பின் ஒன்றாக இருக்கிறது. அதன் பின் இரண்டாவது மகளுக்குத் திருமணம் என்றால் கணவன் மனைவி இருவரும் பணி ஓய்வு பெற்றிருப்பார்கள். எல்லாம் யோசித்து இப்போது இந்தத் திருமணத்தைச் செய்யலாம் என்று இருக்கிறார்கள்.”
“பெண் எப்படி? ரொம்ப நாகரீகமோ!” என்றால் வசந்தி.
“அதைச் சொல்ல மறந்துவிட்டேன். இந்தப் பெண் திவ்யா பெரும்பாலும் திருச்சியில் அவள் தாத்தா பாட்டியிடம்தான் வளர்ந்தாளாம். இரட்டையர்கள் என்பதால் ஒரு பிள்ளையைப் பெரியவர்கள் வளர்த்தால் இலகுவாக இருக்கும் என்று அப்படிச் செய்தார்களாம். அவர்களுக்குத் திவ்யா மேல் பிரியம் அதிகமாம். அதனால் அவர்கள் இருக்கும் வரை அவர்களுடன் தான் இருந்தாளாம். விசாரித்தவரை எல்லாம் நல்ல மாதிரிதான் தெரிகிறது.”
“நீங்கள் சொன்னால் சரிதான் அண்ணா!” என்றாள் வசந்தி.
“இன்னொன்றும் எனக்குத் தோன்றியது. நம் குடும்பம்பற்றி நன்றாகத் தெரிந்தவர் பெண்ணின் தந்தை. அவரும் அவர் பக்க விஷயங்களை எல்லாம் வெளிப்படையாகச் சொல்லிவிட்டார். அவரால் வரதட்சணை என்று நிறையச் செய்ய முடியாதாம்.
திருமணம் கூட எளிமையாகச் செய்யலாம் என்கிறார். நமக்கும் அது சௌகரியம் தானே.”
“நமக்கு வரப்போகும் பெண்தான் முக்கியம். மற்றதெல்லாம் பெரிதல்ல!” என்றார் தங்கவேலு.
“நீ என்ன சொல்கிறாய் கிருபா?” என்றார் முத்து.
“எல்லாம் அம்மா அப்பா விருப்பம். எதுவானாலும் நீங்களே முடிவு செய்யுங்கள். கரும்பு எடுக்க இன்று இரவு வண்டி வரும். எனக்காகக் காத்திருக்க வேண்டாம். நீங்கள் படுத்துக்கொள்ளுங்கள்.” என்று எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு சென்றான்.
“பெண் வீட்டில் என்ன சொல்லலாம்” என்றார் முத்து.
“பார்க்கலாம் அண்ணா! திருமணம் செய்துகொள்ள போகும் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்த்து முடிவு செய்யட்டும். இருவருக்கும் பிடித்தால் பிறகு பேசலாம்.” என்றாள் வசந்தி.
“முதலில் பெண்ணின் புகைப்படத்தைக் கேட்டிருக்கிறேன். அப்படியே நம் கிருபாவின் புகைப்படத்தையும் அனுப்பலாம். இருவருக்கும் பிடித்தால் பிறகு நேரில் சென்று நிச்சயம் வைத்துக்கொள்ளலாம்.” என்றார் முத்து.
இரு வீட்டாரும் புகைப்படங்களை அனுப்பிவைத்தனர். திவ்யாவின் புகைப்படத்தைப் பார்க்க வசந்தி தான் ஆர்வமாக இருந்தாள். புகைப்படத்தைப் பார்த்ததும் அவளுக்குப் பிடித்திருந்தது. மகனுக்குப் பொருத்தமாக இருப்பாள் என்றும் தோன்றியது.
கிருபாகரனுக்கும் சிறு கலக்கம் இருக்கத்தான் செய்தது. ஒரே புகைப்படத்தில் அவன் வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுப்பதா? பெண்ணின் குணம் எப்படியோ? இருவருக்கும் எத்தனை ஒற்றுமை இருக்குமோ? எத்தனை வேறுபாடுகள் இருக்குமோ? ஆனால் திவ்யாவின் புகைப்படத்தைப் பார்த்தபோது அவன் கேள்விகள் எல்லாம் மறைந்துபோனது. அமைதியான முகம், துறுதுறுப்பான விழிகள், மென் புன்னகை. அவனுக்குப் பிடித்துவிட்டது.
இருவீட்டிலும் சேர்ந்து நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் நாள் குறித்தார்கள். நிச்சயம் செய்ய கிருபாகரன் வீட்டிலிருந்து எல்லோரும் பெங்களூரு புறப்பட்டார்கள்.
பெங்களூரு அவர்கள் யாருக்கும் புதிதல்ல. வசதியாக வாழ்ந்த நாட்களில் இந்தியாவின் நிறைய இடங்களுக்குச் சுற்றுலா சென்றிருக்கிறார்கள். முதல் தினமே ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கிவிட்டு மறுநாள் காலைப் பெண் வீட்டிற்குச் சென்றார்கள். கணபதி அவர்களை வரவேற்று வீட்டிலிருந்தவர்களை அறிமுகம் செய்துவைத்தார். மனோகரன், வேணி அவர்களின் பிள்ளைகள் மட்டும் வந்திருந்தார்கள்.
திவ்யாவை அழைத்து வந்தார்கள். குனிந்த தலையுடன் வந்து எல்லோருக்கும் வணக்கம் சொன்னாள். அவள் கிருபாகரனைப் பார்த்ததாகத் தெரியவில்லை. கீர்த்தி தான் முதலில் பேசினாள்.
“உங்களை நான் எப்படி அழைப்பது? என்னைவிட நீங்கள் வயதில் சிறியவர். என்றாலும் பேர்சொல்லி அழைக்க முடியாது. ‘அண்ணி’ என்று சொன்னால் மிகவும் விலகி நிற்பதுபோல் இருக்கிறது.”
திவ்யா பேசுமுன், “பெயர் சொல்லி அழைத்தாலும் ஆட்சேபனை இல்லை” என்றாள் உமா.
“அப்படியானால் சரி, இனிமேல் உங்களை ‘திவ்யா’ என்று அழைக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீங்களும் என்னைப் பெயர் சொல்லி ‘கீர்த்தி’ என்று அழைக்க வேண்டும்.”
“இப்போது தான் நீங்கள் பெரியவர்கள் என்று சொன்னீர்கள். பெயர் சொன்னால் சரி வராது. நீ அண்ணி என்றே அழைத்துப் பழகு ‘திவ்யா’.” என்றாள் உமா மகளிடம்.
“அத்தை! இந்தச் சாக்கில் என்னை உங்களைவிடப் பெரியவள் ஆக்கி விடாதீர்கள். நீங்கள் என்னை ஒருமையிலேயே அழைக்கலாம்” என்றாள் கீர்த்தி.
எல்லோரும் சிரித்தார்கள். கிருபாவின் பார்வை திவ்யாவிடம் சென்றது. அவள் அதிகம் சிரிக்கவில்லை. சிரித்தாளா என்று கூடச் சந்தேகம் வந்தது.
“நானே பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் ஏதாவது சொல்லுங்கள் அண்ணி” என்றாள் கீர்த்தி.
“திவ்யா!” என்று ஒரு வார்த்தை மட்டும் வந்தது.
“என்ன அண்ணி! உங்கள் பெயரைச் சொல்கிறீர்கள்.”
“அண்ணி என்று சொன்னீர்கள். திவ்யா என்று அழைத்தால் போதும். அதற்குத் தான் அப்படிச் சொன்னேன்” என்றாள்.
“நீங்கள் மட்டும் சொன்னால் போதுமா? என்ன, அண்ணா உனக்கு எப்படி?” என்று கிருபாகரனைப் பார்த்தாள்.
“அதுதான் நீங்களே முடிவுக்கு வந்து விட்டீர்களே!” என்றான்.
“சரி நல்ல நேரம் முடிவதற்குள் பூ வைத்து விடலாம்” என்றாள் வசந்தி.
பூ வைத்துத் திருமண நாள் குறிக்கப்பட்டது. அதிக நாள் இல்லை. ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்கள். அன்றே திருமண உடைகளை எடுத்துவிடலாம் என்றும் நினைத்தார்கள். ஈரோட்டுக்கும் பெங்களூருக்கும் உடனே சென்று வரும் தூரம் இல்லையே.
காலை உணவை முடித்துக்கொண்டு கடைக்குச் சென்றார்கள். கிருபாகரன் குடும்பம் ஒரு காரிலும், திவ்யா வீட்டார் ஒரு காரிலும் கிளம்பினார்கள். காவ்யா கலந்துகொள்ளவில்லை. யாரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பெரியவர்கள் எல்லோரும் சுற்றி இருக்க, திவ்யாவும் கிருபாகரனும் அதிகம் பேசிக்கொள்ள வாய்ப்பே அமைவதாகத் தெரியவில்லை. பெண்கள் எல்லோரும் திவ்யாவுக்குத் தேர்வு செய்ய பெண்கள் பகுதியிலும், ஆண்கள் எல்லோரும் கிருபாகரனுக்குத் தேர்வு செய்ய ஆண்கள் பகுதிக்கும் சென்றார்கள்.
கிருபாவுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. ஆண்கள் பகுதியில் முடித்துக்கொண்டு, பெண்கள் பகுதிக்கு வர கிருபாவும், திவ்யாவின் மாமாவும் மட்டும் சற்று விலகி நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். இதைக் கவனித்த கீர்த்தி வேகமாக கிருபாகரனிடம் சென்றாள்.
“அண்ணா! இங்கே நின்றால் எப்படி? வந்து அண்ணிக்குத் தேர்வு செய்!” என்று அவன் பதிலுக்குக் காத்திருக்காமல் அவனை இழுத்துச் சென்றாள். திவ்யாவின் ஒரு புறம் உமாவும் மறுபுறம் வசந்தியும் அமர்ந்திருக்க, திவ்யாவுக்குப் பின்னால் கிருபாகரனை நிறுத்தினாள். மற்றவர்கள் எடுத்துத் தரும் புடவையை அவளுக்கு வைத்துக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தவள், அவள் பின் கிருபாகரன் நிற்பதைப் பார்த்ததும் விழிகள் விரிந்தன. அவள் எதிரில் இருந்த கண்ணாடியில் அவனும் அதைக் கவனித்துவிட்டான். அவன் இதழோரம் லேசான புன்னகை ஒன்று எட்டிப் பார்த்தது. சட்டென்று தலை குனிந்தாள் திவ்யா.
“அண்ணிக்கு இந்தப் புடவை எப்படி அண்ணா இருக்கிறது?” என்றாள் கீர்த்தி.
அப்போதுதான் மற்றவர்கள் கிருபா அங்கே நிற்பதைப் பார்த்தார்கள். “நீங்களே பார்த்து முடிவு செய்யுங்கள்” என்றான்.
“அதற்காகவா உன்னை இங்கே கூட்டி வந்தேன். இதில் எது நன்றாக இருக்கிறது என்று சொல்!” என்று ஏற்கனவே தேர்வு செய்து வைத்த சில புடவைகளை நீட்டினாள்.
தங்கை நீட்டிய புடவைகள் அல்லாமல் திவ்யா முன் வைத்திருந்த புடவைகளில் ஒன்றை எடுத்தான். ராமர் பச்சை வண்ணத்தில் ஒரு புடவை அதிக ஜரிகை இல்லாமல் வெகு சாதாரணமாக இருந்தது என்று அதை ஒதுக்கியிருந்தார்கள்.
கிருபாகரன் திவ்யா இருந்த இடத்திற்கு வரும்போது அவள் கை அந்தப் புடைவையைத் தான் தடவிக்கொண்டிருந்தது.
“அண்ணா, இதில் ஜரிகை வேலைப்பாடே இல்லை. திருமணத்திற்கு இது மிகவும் சாதாரணமாக இருக்கும்.”
“பார்க்க நன்றாக இருக்கிறது. இதுவும் இருக்கட்டும்.”
அதன் பின் யாரும் மறுப்பு சொல்லவில்லை. தேர்ந்தெடுத்த மற்ற புடவைகளுள் அதுவும் சேர்த்துவிட்டது.
சில மணிநேரங்கள் உடை தேர்வு செய்ததில் எல்லோருக்கும் களைப்புதான். சூடாக ஏதாவது குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, ஒரு சிற்றுண்டி கடைக்குச் சென்றார்கள். எல்லோருமே சேர்ந்து உட்கார இடம் இருக்காது என்று தனித் தனி மேசைகளில் உட்கார எண்ணினார்கள். திவ்யாவின் தந்தை அருகருகே இருக்கும் மேசைகளைத் தேர்ந்தெடுத்து, அவர் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் கலந்து அமரும்படி ஏற்பாடு செய்தார். கிருபாகரன், கீர்த்தியுடன் திவ்யாவின் மாமாவும் அத்தையும் உட்காரட்டும் என்று எண்ணினார். ஆனால் மாமா சட்டென்று திவ்யாவை கீர்த்தி அருகில் அமரச் சொல்லவும் யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. எதிரில் கிருபாகரன்.
சர்வர் வந்து ஆர்டர் எடுத்தார்.
“எனக்கு ரோஸ்மில்க்.” என்றாள் கீர்த்தி.
“உனக்கு?” கிருபாகரன் திவ்யாவைக் கேட்க, “காபி” என்று மட்டும் சொன்னாள். திவ்யாவின் மாமாவின் விருப்பத்தையும் கேட்கக் கிருபாகரன் தவறவில்லை. இடையில் மாமாவின் குடும்பம் அவர் பிள்ளைகள் பற்றியும் கேட்டுக்கொண்டான்.
“உங்களுக்குக் கன்னடம் பேசத் தெரியுமா?” என்று குறுக்கிட்டாள் கீர்த்தி.
“இல்லை. கொஞ்சம் புரியும்.”
“பெங்களூர் பிடிக்குமா?” கிருபாகரன் தான் கேட்டான்.
யாரையும் குறிப்பிடாமல் பொதுவாகக் கேட்கவும், அவன் யாரைக் கேட்கிறான் என்று திவ்யா பார்க்க, அவன் அவளைத் தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
“திருச்சி ரொம்ப பிடிக்கும்.” என்றாள்.
“திவ்யா எங்களோடு தான் அதிகம் இருந்தாள். இப்போது தான் பெங்களூருக்கே வந்தாள்.” என்றார் திவ்யாவின் மாமா.
கீர்த்தி சொன்ன ரோஸ்மில்க் மட்டும் வராமல் இருக்க, “நான் பார்க்கிறேன்” என்று திவ்யாவின் மாமா மனோகரன் எழுந்தார்.
“உனக்கு எல்லாம் ஓகேவா?” கிருபாகரன் கேட்டான்.
இப்போதும் திவ்யாவுக்கு குழப்பம் யாரை கேட்கிறான்? எதைப்பற்றி கேட்கிறான்?
அவனே மேலும் பேசினான், “முக்கியமாக நான் ஓகேவா?”
இப்போது பெண்கள் இருவருக்கும் புரிந்தது கேள்வி யாருக்கு என்று. திவ்யா நாணம் மிகுந்துவிட தலை கவிழ்ந்தாள். கீர்த்தி நமட்டு சிரிப்புடன் இருவரையும் பார்க்க, தலையை சம்மதமாக ஆட்டினாள் திவ்யா. இன்னும் அவள் நிமிர்ந்து பார்க்காமல் இருக்க, கீர்த்தி, “அங்கே எப்படியாம்? உனக்கு ஓகேவா அண்ணா?” என்றாள்.
“ஹ்ம்ம்!”
அதற்குள் மகேந்திரன் கீர்த்திக்கு பானத்துடன் வந்துவிட்டார்.
அன்று மாலையே கிருபாகரன் குடும்பம் ஊருக்குத் திரும்பிவிட்டார்கள். திவ்யா எப்படி இருக்கிறாளோ என்று கலங்கிக்கொண்டிருந்த வசந்திக்கு ஏக சந்தோஷம்.
“எனக்குத் திவ்யாவை ரொம்ப பிடித்திருக்கிறது. செல்லும்போது, திவ்யா எப்படியோ என்ற பயம் இருந்தது. ஒரே நாளில் என் மனதைக் கவர்ந்துவிட்டாள்.”
“அது எப்படி அம்மா?” என்றாள் கீர்த்தி.
“அதிகம் பேசவில்லை! வாயடியாக இருக்க மாட்டாள். பேசாமலும் இல்லை. அளவான, தெளிவான பேச்சு. புடவை தேர்வில் கூடப் பெரியவர்கள் சொன்னதை எதிர்த்துப் பேசவில்லை. எனக்கு
இதுதான் வேண்டும் என்று சொல்லவில்லை. புடவை நிறம் பிடித்திருந்தாலும், விலை அதிகம் என்றால் அதை வேண்டாம் என்று விட்டாள். ‘திருமண புடவை எவ்வளவு விலைக்கு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்’ என்று சொன்னேன். ஆனாலும், ‘மிக அதிக விலை வைத்து எடுத்தால், சாதாரண விழாக்களில் உடுத்த முடியாது. அப்படியே பூட்டி வைத்து வீணாகும். அதனால் ரொம்ப விலையில் வேண்டாம்’ என்றாள்.”
“இதை வைத்து முடிவு செய்யாதே! கீர்த்தி கூடத் தான் திருமணத்திற்கு முன் மிகவும் அடக்கமாக இருந்தாள். இப்போது அப்படியா?” என்றான் கிருபா.
“என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறாய்? அதுவும் அம்மா உன் மனைவியைப் பற்றிப் பெருமையாக சொல்லும்போது, அப்படி இல்லை என்று யாராவது சொல்வார்களா?”
“வருங்கால மனைவி!” என்று திருத்திவிட்டு, “நான் திவ்யாவைப் பற்றிச் சொல்லவில்லை. இங்கே உன்னைப் பற்றி மட்டும் தான் சொன்னேன்.”
“பார்த்தாயா அம்மா! இப்போதே அவன் மனைவிக்கு வக்காலத்து வாங்குகிறான்.”
இப்படியே கலகலப்பாகவும் பரபரப்புடனும் நாட்கள் வேகமாக நகர்ந்தன.
மிக நெருங்கிய வட்டத்தில் மட்டுமே அழைப்பு வைக்க முடிவு செய்ததால், இருவீட்டாருக்கும் இலகுவாகவே இருந்தது.
திருமண நாள் நெருங்க நெருங்கத் திவ்யாவுக்குப் புரியாத ஒரு உணர்வு. இந்த வீட்டிலிருந்து சென்றால் போதும் என்று திருமணத்திற்குச் சம்மதித்தாள். அவளுக்கென்று தாத்தா கொடுத்துச்சென்ற தொகையில் பாட்டியின் மருத்துவ செலவுக்குப் பெரும்பாலும் செலவாகிவிட்டது. மிஞ்சியதை திருமண செலவுக்கென்று அப்பாவிடம் கொடுத்துவிட்டாள். கொஞ்ச நாள் ஏதாவது வேலைக்குச் சென்று அவளுக்கென்று ஒரு சேமிப்பைச் சேர்த்த பிறகு திருமணம் செய்வது பற்றி யோசித்திருக்கலாம்.
தாத்தா சொன்னதுபோல் யாரையும் எதிர்பார்க்காமல் இருப்பதுதானே ஒரு மனிதனுக்குப் பெருமையான விஷயம். அவளுக்கு அப்படியொரு பெருமை கிடைக்க இனி வாய்ப்பில்லையே. இதுவரை தாத்தாவையும் அவர் சேமிப்பையும் நம்பி இருந்தாள். இனி இன்னொருவனை நம்பி வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டுமா? அதில் பெரிய தவறொன்றும் இல்லை. காலம் காலமாக நடப்பதுதானே. ஆனால் இப்போதைய தலைமுறை பெண்கள் பழைய முறைகளிலிருந்து வெளியே வந்து சொந்தக் காலில் நிற்கிறார்கள். சாதிக்கிறார்கள். அதுபோல் அவளும் இருக்க வேண்டும் என்று ஒரு காலத்தில் நினைத்தாளே! காவ்யா கூட அப்படிதானே சொல்வாள். படிப்பு, பெரிய வேலை, அவளுக்கென்று ஒரு வீடு என்று ஏதேதோ சொல்வாள். திவ்யா அப்படியெல்லாம் யோசிக்கவில்லை. அவள் மனதில் எப்போதும் ஒன்றே ஒன்றுதான். அவள் ஒரு பாரமாக யாருக்கும் இருக்கக் கூடாது என்று. பிறந்ததும் பெற்றோருக்கு எதிர்பாராத பாரம் அவள். வளரும் வரை தாத்தா பாட்டிக்கு ஒதுக்கிவிட முடியாத பாரம். இனியேனும் அவள் யாருக்கும் பாரமாக இல்லாமல் இருக்க வேண்டும். கிருபாகரன் வீட்டில் அவளை அப்படி யாரும் நினைக்கமாட்டார்கள் என்றுதான் தோன்றியது. ஆனால் பெண் பார்க்க வந்த முதல் நாளை வைத்து ஒரு தெளிவான முடிவுக்கு வந்துவிட முடியாதே! என்று மறுகணம் மனம் எதிர்மறையாக எண்ணியது. இப்படி எல்லாம் குழப்பிக்கொள்ளக் கூடாது என்று முடிவு செய்தாள்.
அவ்வப்போது அவளுக்குக் கிருபாகரன் வீட்டிலிருந்து தொலைப்பேசி அழைப்புகள் வரும். திருமண வேலைகளைப் பற்றிப் பேச அழைத்தாலும், திவ்யாவிடம் சில நிமிடங்கள் பேசுவார்கள்.
“பெங்களூரில் மழை என்று கிருபா சொன்னான். வெளியே அதிகம் சென்று உடம்புக்கு ஏதாவது வரப்போகிறது. பத்திரமாக இரு.” என்பார் தங்கவேலு.
“அன்றே பார்த்தேன். நீ காலில் கொலுசு போடவில்லை. கொலுசு அளவு பார்த்துச் சொல். உனக்கு அதிக சலங்கை இருந்தால் பிடிக்குமா? இல்லை சத்தம் அதிகம் வராதது போல் இருக்க வேண்டுமா?” என்று கேட்டாள் வசந்தி.
இரு வீட்டாரும் சேர்ந்து அச்சிட்ட திருமண அழைப்பைக் கொண்டுவந்த கிருபாகரனின் பெற்றோர், திவ்யாவுக்கென்று வாங்கிய கொலுசுடன் சில சேலைகளையும் கொண்டு வந்தார்கள்.
“இது நம்ம ஊரில் நெசவு செய்தது. பெரிய பெரிய கடைகளுக்கெல்லாம் நம் ஊரிலிருந்து புடவைகளை வாங்கி செல்வார்கள். இந்த நிறம் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். உனக்கு நன்றாக இருக்கும் என்று எடுத்துவந்தேன். அப்படியே இந்தக் கொலுசைப் போட்டுப் பார்த்துச் சொல். அளவு சரியாக இருக்கிறதா என்று.”
“கொலுசு நன்றாக இருக்கிறது! சரியாகவும் இருக்கிறது. ஆனால் புடவைகள் நிறைய இருக்கிறது அத்தை. இதில் நீங்களும் கீர்த்தி அண்ணியும் கூட எடுத்துக்கொள்ளுங்கள். இத்தனை புடவைகள் எனக்கு மட்டும் என்றால் அதிகப்படி!” என்றாள் திவ்யா தயக்கத்துடன்.
“இதுபோல் பெரிய கரை வைத்து நான் எடுப்பதில்லை. உனக்கு எடுக்கும்போது, ‘நானும் அண்ணியும் ஒரே மாதிரிப் புடவைகள் உடுத்துவோம்’ என்று கீர்த்தியும் சிலது எடுத்துக்கொண்டாள். அதனால் இது எல்லாம் உனக்குத் தான். உன் அம்மா கூடச் சொன்னார்கள், புடவை எல்லாம் நீ அதிகம் உடுத்தவதில்லை என்று. பெரும்பாலும் சுடிதார் தானாமே! அதனால் கொஞ்சம் சுடிதார் கூட எடுத்து வந்திருக்கிறேன். உன் அளவுக்குத் தைத்துக்கொள்.”
திவ்யா முன் வசந்தி கடை பரப்பினால். இதைப் பார்க்கும்போது சந்தோசமாக இருந்தாலும், இது எப்போதும் நீடிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்ள திவ்யா மறக்கவில்லை.
அத்தியாயம் – 9
கிருபாகரனுக்கு ஊரிலிருந்த கோவிலில் எளிமையாகத் திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பெங்களூரிலிருந்து முன்தினமே, திவ்யா குடும்பத்தில் எல்லோரும் கிருபாகரன் ஊருக்குச்
சென்றுவிட்டார்கள். தங்கும் விடுதி என்றெல்லாம் வசதி இல்லை. இருவீட்டாருக்கும் தொடர்புடைய முத்துவின் வீட்டில் திவ்யா குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். நாளைத் திருமணம் என்றால் மணப்பெண்ணுக்கு இருக்கும் கவனிப்பைக் கேட்கவா வேண்டும்! முத்துவின் குடும்பம் மொத்தமும் அவளுக்கு என்ன தேவை என்று மணிக்கு மூன்று முறை கேட்க வந்தார்கள். போதாததற்கு கிருபாகரனின் தங்கை கீர்த்தியும் வேறு நாள் முழுவதும் திவ்யாவுடன் தான் இருந்தாள். ஒருமுறை அண்ணி என்றும் ஒருமுறை திவ்யா என்றும் அழைத்துக்கொண்டு அவளுடனே ஒட்டிக்கொண்டு நின்றாள்.
தங்கவேலும் வசந்தியும் கூட ஒருமுறை வந்து எல்லாம் சௌகரியமாக இருக்கிறதா என்று கேட்டார்கள். திவ்யாவைப் பார்த்து, “என்ன? எங்கள் வீட்டுக்கு வரப்போகிறாள் என்று, எங்கள் மருமகளைச் சரியாகக் கவனிக்கவில்லையா? இப்படி மெலிந்து தெரிகிறாள்.” என்றாள் வசந்தி.
நிச்சயத்தின்போது ஒரு பருத்தியால் ஆன புடவை அணிந்திருந்தாள். அதனாலேயே அவள் மெலிவு யாருக்கும் பெரிதாகத் தெரியவில்லை. பிரயாணத்துக்குச் சௌகரியமாக இருக்குமென்று ஒரு சிந்தெடிக் சல்வார் அணிந்திருந்தாள். அது அவளை மெலிவாகவே காட்டியது.
“அதெல்லாம் இல்லை அத்தை” என்று திவ்யா சொல்ல, “அம்மா! உன் மருமகள் மேல் அக்கறை இருப்பதெல்லாம் சரி. ஆனால் அன்றை விட இன்று கொஞ்சம் கன்னம் எல்லாம் உப்பி இருக்கும் அண்ணியைப் பார்த்து மெலிந்துவிட்டாள் என்று சொல்வதெல்லாம் கொஞ்சமும் சரியில்லை.” என்றாள் கீர்த்தி.
“சரி, இனி உன் வீட்டில் தானே இருக்கப் போகிறாள். நானும் பார்க்கிறேன். உன் மருமகளை நீ எப்படிப் பார்த்துக்கொள்வாய் என்று.” என்றார் முத்து.
இப்படியாகப் பேச்சு முழுவதும் திவ்யாவைச் சுற்றியே இருந்தது. சங்கருக்கும் காவ்யாவுக்கும் இது கொஞ்சம் எரிச்சலைத் தந்தது. யாரும் அறியாமல் காவ்யா பின்புறம் இருந்த கிணற்றடியில்
சென்று அமர்ந்தாள். சிறிது நேரத்தில் சங்கரும் அவளுடன் இணைந்து கொண்டான்.
“ஏன்? இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறாய்?” என்று சங்கர் தமக்கையைக் கேட்டான்.
“எல்லாம் ரொம்ப நாடகத்தனமாக இருக்கிறது. ஏதோ டிவி சீரியல் பார்ப்பது போல! டிபிக்கல் வில்லேஜ். பார்க்கவே சகிக்கவில்லை.”
“ஹ்ம்ம்! போரிங். ஆனால் திவ்யாவுக்கு இத்தனை முக்கியத்துவம் தருவது உனக்குக் கொஞ்சம் அதிக எரிச்சலைத் தரலாம்.”
“அவளுக்கு யார் என்ன செய்தாலும் எனக்கென்ன வந்தது. ஆனால், கண்ணே மணியே என்று கொஞ்சும் அதிகப்படியான நாடகம் தான் எரிச்சலாக இருக்கிறது.”
“அவள் இன்று நீ இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறாள். உன்னுடையது அவளுக்குக் கிடைத்துவிட்டதாகத் தோன்றவில்லையா?” என்று கேட்ட தம்பியைப் பார்த்து, “நான்சென்ஸ்! இந்தத் திருமணத்திலிருந்து தப்பித்தது எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? பெங்களூரிலிருந்து இங்கே வந்து இருப்பது என்னால் முடியும் என்று உனக்குத் தோன்றுகிறதா? எனக்குக் கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. எங்கே, அப்பா என்னை வற்புறுத்தித் திருமணம் செய்து கொள்ளச் சொல்வாரோ என்று பயம் இருந்துகொண்டே இருந்தது.”
“அப்படி என்றால், அப்பா வற்புறுத்தினால் நீ சம்மதித்திருப்பாய்?”
“நோ வே! அப்பா அப்படி சொல்லியிருந்தால் நான் வீட்டை விட்டு வெளியே சென்றிருப்பேன்.” என்றாள் காவ்யா.
“வெளியே போய் என்ன செய்திருப்பாய்? உன் எம்பிஏவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு ஏதாவது கிளர்க் வேலையைச் செய்துகொண்டிருப்பாய்!”
“படிப்பறிவில்லாத ஒரு ஆளுடன் இப்படியொரு ஊரில் இருப்பதை விட வேலையே இல்லாமல் பெங்களூரில் அலைந்தாலும் கூடப்
பரவாயில்லை. இங்கே என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியாது. ஆனால் திவ்யாவுக்கு ஏற்ற இடம் இதுதான். என்ன சொல்கிறாய்?” என்று சிரித்தாள்.
“மாமா அப்படி ஒன்றும் படிக்காத ஆளாகத் தெரியவில்லை. நிறைய விஷயங்கள் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார். இந்த ஊரும் பார்க்க நன்றாகவே இருக்கிறது.” என்றான் சங்கர்.
“இந்த ஊரா?” என்றாள் காவ்யா சலிப்புடன்.
காவ்யா சொல்வது போல் அந்த ஊர் ஒன்றும் வாழமுடியாத பாலைவனம் இல்லை. ஆறு, ஏரி, குளம் என்று நீர் நிலைகள் நிறைந்து பசுமையான கிராமம் தான். பெங்களூரு நகரம் ஒரு விதமான வாழ்க்கை என்றால் இதுவும் ஒரு விதம். ஒன்று பிடிக்கிறது என்றால் தவறில்லை. ஆனால் இன்னொன்று மோசம் என்று எப்படிச் சொல்லலாம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்கலாம். நகரம் பிடிப்பது சரி. ஆனால் ஒரு கிராமத்தை இப்படித் தாழ்த்தி பேச வேண்டுமா? இது திவ்யாவிற்கு ஒத்து வரும் என்று எதார்த்தமாகச் சொன்னதா? இல்லை. இறுதியில் வந்த ஏளன சிரிப்பு அப்படி இல்லை என்று சொன்னது.
திவ்யாவின் வருங்கால மாமியாராகட்டும், நாத்தனார் கீர்த்தி ஆகட்டும், அவள் மேல் காட்டும் பிரியம் வெறும் திருமண விழாவிற்காக இல்லை. பெண் பார்க்க வந்த முதல் நாளில் இருந்தே அன்புடன் தான் பழகுகிறார்கள்.
திவ்யா மிகவும் சந்தோஷமாகவே இருந்தாள். முக்கியமாக இனி அவள் பெங்களூரில் இருக்கத் தேவை இல்லை. அவளை வெறுக்காத மனிதர்களுடன் இனி வாழப்போகிறாள்.
மறுநாள் அதிகாலையில் கோவிலில் திருமணம் இனிதே நடந்தேறியது. அக்னி வலம் வந்ததும், மணமக்களைக் கோவிலைச் சுற்றி வரச் சொன்னார்கள். அதுவரை இணைத்து வைத்த கையை விடுவிக்கத் திவ்யா கரங்களைச் சுற்றிக் கட்டியிருந்த கைக்குட்டையைக் கழற்றுவார்கள் என்று பார்த்தாள். அருகிலிருந்த கீர்த்தியிடம் கேட்டாள், அவளும் அதைக் கழற்ற முற்படுகையில், புரோகிதர், “அப்படியே கோவிலை சுற்றி வரட்டும். பிறகு கழற்றலாம்.” என்றார்.
மணமக்கள் செல்லச் சற்று இடைவெளி விட்டு சிலர் முன்னும் பின்னும் சென்றார்கள். அப்போது தான் விடியத் தொடங்கியது என்பதால் பிரகாரத்தில் இவர்கள் திருமணத்திற்கு வந்தவர்கள் தவிர வேறு யாரும் இல்லை. கிருபாகரன் உடன் ஒருத்தி வருகிறாள் என்ற எண்ணமே இல்லாமல் சற்று வேகமாக நடக்கத் தொடங்கினான். அவன் வேகத்திற்கு திவ்யாவால் ஈடு கொடுக்க முடியவில்லை.
“கொஞ்சம் மெதுவாக” என்றாள்.
நின்றவன், திவ்யா அவள் புடவையை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, சற்றே தடுமாறியபடி அடி எடுத்து வைத்தாள். “என்ன ஆயிற்று?”
“புடவையில் உங்களுடன் வேகமாக நடக்க முடியவில்லை. கொஞ்சம் மெதுவாகச் சுற்றலாமே!”
“ஹ்ம்ம். மெதுவாக சுற்றலாம். ஆனால் இந்த கைக்கட்டை பிரிக்கத் தாமதம் ஆகும். பரவாயில்லையா? ” என்று மெதுவாக நடந்தான்.
திவ்யா தான் முதலில் அந்தக் கட்டை அவிழ்க்க கேட்டிருந்தாளே!
கிருபாகரன் கேலிப்பார்வை புரிய “அது பரவாயில்லை!” என்றாள்.
“தேங்க்ஸ்.” என்று மீண்டும் அவள் சொல்ல,
“மெதுவாக நடப்பதற்கா?”
“இல்லை! அந்தப் புடவையைத் தேர்ந்தெடுத்ததற்கு.”
“நன்றி சொல்ல ஒரு மாதம் தேவைப்பட்டிருக்கிறது.”
“அதன் பின் இன்று தானே பார்க்கிறோம்.”
“அன்று புடவை தேர்ந்தெடுத்ததற்குப் பிறகு உன் பின்னால் பத்து நிமிடம் நின்றேன். நீ ஏதாவது சொல்வாய் என்று. அன்று உணவகத்தில் கூட ஒரு அரை மணி நேரம் இருந்திருப்போம்.”
விழிகள் விரிய அவன் முகத்தைப் பார்த்தாள் திவ்யா. சில விநாடிகள் அவள் பார்வையைத் திருப்பவில்லை.
“நேராகப் பார்! பின்னாடி இருப்பவர்களுக்கு நாம் பேசுவது கேட்காதுதான். நீ இப்படிப் பார்த்துக் கொண்டிருந்தால் பிறகு அவர்கள் செய்யும் கேலி அதிகமாக இருக்கும்.”
சட்டென்று நேராகப் பார்க்கத் தொடங்கினாள். அவள் வேகமாகக் கழுத்தைத் திருப்பவும், சிரித்துக்கொண்டே அவளைப் பார்த்தான். அவன் பார்ப்பது திவ்யாவுக்கு நன்றாகத் தெரிந்தது. “இப்போது உங்களைக் கேலி செய்வார்கள்!” என்றாள்.
“செய்யட்டும்! என் மனைவியை நான் பார்க்க யார் கேலி செய்தாலும் என்ன?” என்றான்.
“அப்போது என்னை மட்டும்…” என்று திவ்யா மீண்டும் அவனைப் பார்க்க, “அண்ணி! நாங்கள் பின்னால் தான் வருகிறோம். மறந்துவிட வேண்டாம்.” என்றது கீர்த்தியின் குரல்.
தன்னை குறிப்பிடவில்லை என்று கிருபா கேலியாகச் சிரிக்க, “அண்ணா! அண்ணி கையை விட மனம் இல்லை என்பதற்காக இவ்வளவு மெதுவாக நடந்தால் மற்ற சடங்குகள் செய்ய இன்று மாலை வரை நேரம் போதாது.” மீண்டும் கீர்த்தி தான்.
இப்போது திவ்யா சிரித்தாள். சத்தம் இல்லாமல் தான்.
“உன் அண்ணி தான் மெதுவாக நடக்கச் சொன்னாள்.” என்று கிருபா தங்கையிடம் சொல்ல, கைக்குட்டைக்குள் இணைந்திருந்த அவன் கையை லேசாகக் கிள்ளினாள் திவ்யா. பதிலுக்கு அவனும் அவள் மீண்டும் கிள்ள முடியாதபடி பற்றிக்கொண்டான்.
கோவிலிலிருந்து எல்லோரும் நேராகக் கிருபாகரன் வீட்டிற்குத்தான் வந்தார்கள். வீட்டின் முன் ஏற்பாடுகளைப் பார்த்தபோது எல்லோருக்கும் ஆச்சரியம்தான். நூறு பேருக்கு மேல்
உட்காரும் அளவுக்குப் பெரிய பந்தல். பந்தல் முழுக்க தோரண அலங்காரங்கள். மணமக்களை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றார்கள். ஓரளவு பெரிய வீடு தான். ஆனால் வீட்டில் இடமே இல்லாத அளவுக்கு நிறையச் சாமான்கள். எல்லாம் மரத்தால் ஆன பெரிய பொருட்கள். மேஜை, நாற்காலிகள், அலமாரிகள் என்று நிறைய. அதுவும் பெரிய அறையின் ஓரமாக இன்னும் சில பொருட்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு துணியால் மூடப்பட்டிருந்தது. காலியாக இருந்த இடத்தில் அமர்வதற்காக ஜமக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. கோவிலிலிருந்து உடன் வந்தவர்கள் எல்லோரும் ஆங்காங்கே அமர்ந்து கொள்ள, திவ்யாவை கீர்த்தியும் வசந்தியும் சமையல் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். பால் காய்ச்சச் சொன்னார்கள்.
பின்னோடு உமாவும் வந்தாள்.
“வீட்டின் வெளியே பெரிய பந்தல் போட்டிருக்கிறது. அதிக ஆட்களை நாம் அழைக்கவில்லையே!” என்றாள் உமா.
“இதுவரை வீட்டில் எல்லா விசேஷங்களும் ஊரையே அழைத்துத்தான் செய்திருக்கிறோம். கீர்த்தி திருமணம் கூட இன்னும் நன்றாகவே செய்தோம். இன்று திருமணத்தை எளிமையாக முடித்துவிட்டோம். அதனால் பண்ணையில் வேலை செய்வோரின் குடும்பங்களுக்காவது ஒருவேளை உணவு செய்து பரிமாறலாம் என்று, மதிய உணவுக்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது. சில நெருங்கிய நண்பர்களும் வருவார்கள். வருபவர்கள் உணவு உண்ணத்தான் பந்தல்.” என்றாள் வசந்தி.
அப்போது உள்ளே வந்த தங்கவேலு, “முதலில் பொண்ணு, மாப்பிள்ளையைச் சாப்பிட அழைத்துச் செல்லுங்கள். ஆட்கள் வர ஆரம்பித்துவிட்டால் பிறகு சாப்பிட முடியாது. காலை உணவு தயாராகிவிட்டது. மதியத்துக்கு சாப்பாடும் தயாராகிவிடும். அதற்கு முன் யாரேனும் வந்தால், காபி பலகாரங்கள் கொடுத்துவிடு.” என்றார்.
“இந்த ஏற்பாடுகள் பற்றி எங்களுக்குத் தெரியவில்லை அண்ணா. தெரிந்திருந்தால் திவ்யா அப்பா கூட ஏதாவது செய்திருப்பார்.” என்றாள் உமா.
“அதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை அம்மா! இது திடீர் ஏற்பாடுதான்.” என்றார்.
வரவேற்பு போல் மணமக்கள் ஒன்றாக நிறுத்தப்படவோ உட்காரவைக்கவோ இல்லை. திவ்யாவை ஒரு விரிப்பில் அமரவைத்திருக்க அருகில் வேணி மட்டும் இருந்தாள். வருவோரை அழைத்து வந்து அறிமுகம் செய்து வைத்து, பின் அவர்களை உணவு உண்ண அழைத்து செல்வதுமாக இருந்தார்கள் கீர்த்தியும் வசந்தியும்.
மதியம் வரை ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருந்த காவ்யாவையும் சங்கரையும் பார்க்கும்போது கீர்த்திக்கு கோபம் வந்தது. இப்படியா சகோதர சகோதரிகள் இருப்பார்கள்! திருமணத்திற்கு ஓடியாடி வேலை செய்யவில்லை என்றாலும், மூன்றாவது மனிதர்கள் போல் யாருடனும் பேசாமல் ஒதுங்கியே நிற்கிறார்கள். காவ்யா அப்போது சரியாக வந்து பேசினாள்.
“நாங்கள் இரவில் தங்கிய வீடு அருகில் இருக்கிறதா? அங்கே எப்படிச் செல்ல வேண்டும்? என் உடைகள் எல்லாம் அங்கே இருக்கின்றன” என்றாள்.
“இங்கிருந்து அருகில் தான்! கொஞ்சம் பொறுங்கள், யாரையாவது அனுப்புகிறேன்!” என்று நகர்ந்தாள்.
வெகு நேரத்திற்குப் பிறகு வந்த கீர்த்தி, “எல்லோரும் வேலையாக இருக்கிறார்கள்! இப்போது அவசரமா?” என்றாள்.
“கொஞ்சம் களைப்பாக இருக்கிறது. அங்கே சென்றால் ஓய்வெடுக்கலாமே என்று!”
“களைப்பாகத்தான் இருக்கும், காலையிலிருந்து இடத்தை விட்டு நகராமல் இருந்தால் அப்படித்தான் இருக்கும்” என்று ஏளனமாகச் சொல்லும்போது, உமா அருகில் வந்துவிட்டாள்.
“என்னம்மா? என்ன வேண்டும்?”
“ஒன்றுமில்லை அத்தை! உங்கள் மகளுக்கு முத்து மாமா வீட்டிற்குப் போக வேண்டுமாம்.”
“அங்கே எதற்கு?”
“என்னுடைய டிரஸ் அங்கேதான் இருக்கிறது. எத்தனை நேரம் இப்படிப் பட்டுப் புடவையில் அமர்ந்துகொண்டிருப்பது” கடுகடுப்புடன் காவ்யா கூறினாள்.
“உனக்கு மாற்று உடை பையில் எடுத்து வைத்தேனே. இரு, கொண்டு வருகிறேன்” என்று நகர்ந்தாள் உமா.
காவ்யா அதிகாரத்துடன் நடந்துகொண்டது கீர்த்திக்குப் பிடிக்கவில்லை.
அவள் தேவைகளை அவளே கவனித்துக்கொள்ளாமல் மற்றவர்களைச் செய்யச் சொல்வது மட்டுமில்லாமல், பணிவு என்பது துளியும் அவள் பேச்சில் இல்லை என்பது காவ்யா மேல் ஒரு வெறுப்பை ஏற்படுத்தியது. கொஞ்சம் கலக்கமும் இருந்தது. திவ்யா எப்படியோ என்று?
திவ்யாவின் பெற்றோர்கள் கிளம்பும் முன், ஒரு சிறு பையை வசந்தியிடம் கொடுத்தார்கள். “நிறைய இல்லை என்றாலும், எங்களால் முடிந்தது.”
பிரித்துப் பார்த்த வசந்தி, “உங்கள் மகளுக்கு நீங்கள் செய்வதை நான் தடை சொல்ல மாட்டேன். ஆனால் இங்கே தோட்ட வீட்டில் அத்தனை பாதுகாப்பு இல்லை. அதிகப்படியான நகையும் அணிவதில்லை. இதை உங்களிடமே வைத்திருங்கள். வங்கியின் லாக்கர் வசதி செய்த பிறகு அல்லது தேவைப்படும்போது திவ்யா
வந்து எடுத்துக்கொள்ளட்டும். அதுவரை உங்களிடமே இருக்கட்டும்.” என்றாள் வசந்தி.
“பெண்ணுக்குப் போட்ட நகைகளை எப்படி நாங்கள் திரும்ப எடுத்துச் செல்வது?” என்று உமா தயங்க,
“நமக்குள் அப்படி எல்லாம் நீங்கள் பார்க்கத் தேவையில்லை சம்மந்தி. கிருபாவிடம் சொல்லி சீக்கிரம் லாக்கர் ஏற்பாடு செய்து பிறகு எடுத்துக்கொள்கிறோம்!” என்று வசந்தி பையைத் திரும்பத் தர, உமாவுக்கு சங்கடமும் ஒரு புறம் இருக்க மறுபுறம் மட்டற்ற மகிழ்ச்சி. கொடுத்த நகையை எடை போட்டுப் பார்க்கும் மாமியார்கள் இருக்கும் காலத்தில் இப்படி ஒரு பெண்மணி அவள் மகளுக்குக் கிடைத்தது எந்த அன்னைக்கும் மகிழ்ச்சியாகத்தானே இருக்கும்.
அன்று இரவு பெண் வீட்டார் முன் தினம் தங்கிய வீட்டிற்குச் சென்று விட்டார்கள். இரவு உணவு ஏற்பாடுகளைப் பார்க்க கீர்த்தி சென்றுவிட திவ்யா வெகு இயல்பாக வசந்தியிடம் வந்து, “ஏதாவது செய்ய வேண்டுமா அத்தை?” என்றாள். முதலில் வசந்திக்கு ஆச்சரியம்தான். இந்தக் காலத்தில் பெண்களுக்குத் திருமண வாழ்க்கை பற்றி நன்றாகத் தெரியும் தான். அதனால் அன்றைய பெண்களைப்போல் பெற்றோர் விட்டுச் சென்றவுடன் அதிகம் கண்ணீர் வடிப்பதில்லை. ஆனால் சிறிய கவலையுடன் இருப்பார்கள்தான். பெரியவர் பார்த்துச் செய்த திருமணம் என்றாலும் சரி. அது காதல் திருமணம் என்றாலும் சரி. ஏன்? கீர்த்தி கூட வசந்தியை கட்டிக்கொண்டு அழுதாளே. திவ்யா சிறு வருத்தம் கூட இல்லாமல் நிற்பதை சற்றே வியப்புடன் பார்த்தாள்.
“ஏன் அத்தை? அப்படி பார்க்கிறீர்கள்?” என்றாள்.
சமாளித்துக்கொண்டு, “ஒன்றும் இல்லை அம்மா. எல்லோரும் சென்றவுடன் இப்படி இலகுவாக என்னிடம் வந்து பேசுகிறாயே! அதுதான்.”
திவ்யாவுக்கு சரியாய் புரியவில்லை. மாமியாரிடம் இப்படி வந்து பேசக் கூடாது என்கிறார்களா? “மன்னியுங்கள் அத்தை! எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.”
“நீ என்ன தவறு செய்தாய்? நீ இப்படி வந்து பேசுவது தான் எனக்குச் சந்தோஷம்.”
மாமியார் அப்படி சொல்லவும் தான் கொஞ்சம் நிம்மதியானது. “ஏதாவது வேலை இருக்கிறதா அத்தை?”
மணப்பெண் என்று அப்படியே அமர்ந்திருக்காமல் திவ்யா கேட்டது வசந்திக்கு சிரிப்பு வந்தது. “முதலில் உன் பொருட்களை எல்லாம், கிருபா அறையில் அடுக்க வேண்டும். நாளை என்ன உடை அணிய வேண்டும் என்று இப்போதே எடுத்து வைத்து விடு. இன்னும் ஒரு வாரத்துக்கு யாரேனும் வருவதும் போவதுமாக இருப்பார்கள். அதனால் காலையில் சீக்கிரம் தயாராகி விடு.”
“சரி அத்தை!”
பெட்டியில் இருந்த பாத்திரங்களை எல்லாம் எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தாள் வசந்தி. குனிந்து பொருட்களை எடுத்து அருகில் இருந்த ஒரு அலமாரியில் அடுக்கிக்கொண்டிருந்தாள். “நான் எடுத்துத் தருகிறேன். எத்தனை முறை குனிந்து எடுப்பீர்கள்.” என்று பெட்டியின் அருகே மண்டியிட்டு அமர்ந்தாள் திவ்யா. அதில் நிறைய சிற்றுண்டி தட்டுகள், காபி கோப்பைகள், சிறிய பாத்திரங்கள் என்று நிறைய இருந்தன. “இப்போது ஏன் அத்தை இதெல்லாம் அடுக்குகிறீர்கள்.”
“சில நாட்களுக்கு ஆட்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். திருமணத்திற்கு நிறைய பேரை அழைக்கவில்லை என்றாலும், தகவல் சொல்லி இருக்கிறோம். எப்படியும் உங்களைப் பார்க்க வருவார்கள். இன்று வந்தவர்களுக்குப் பேப்பர் பிளேட், கப் என்று கொடுத்துவிட்டோம். இனி வருபவர்களுக்கு அப்படி கொடுப்பது நன்றாக இருக்காது. அதனால் தான் இதையெல்லாம் எடுத்து வைக்கிறேன்.” என்றாள்.
“இதை எல்லாம் எப்போதும் இங்கேயே வைத்துவிடலாமே!”
“அந்தப் பெரிய கிண்ணங்கள் வேண்டாம்! கீழே இருக்கும் சின்ன ஸ்பூன்களை எடு!” என்று சொல்லிக்கொண்டே, “எல்லா
பாத்திரங்களும் வெளியே எடுத்துப் போட்டால், சமையல் அறை பத்தாது. விருந்தினர்கள் அதிகம் வரும் நேரம் மட்டும் எடுக்க இப்படி இரண்டு பெட்டிகள் ஒதுக்கி வைத்துவிடுவேன்! வீட்டில் விசேஷ நாட்களில் உபயோகிக்கத் தனி பாத்திரங்கள் இருந்தால் அது பளபளப்புடன் புதிது போல் இருக்கும். இதுபோல் விஷயங்களையெல்லாம் நீயும் பழக வேண்டும்!”
“நீங்கள் பிளான்ட் அண்ட் ஆர்கனைஸ்டு.” என்றாள்.
“அப்படி என்றால்?”
வசந்திக்கு எப்படி சொல்வது என்று ஒருகணம் யோசித்து “நன்றாகப் பொருட்களை எல்லாம்…” என்று சரியான வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்க, “சிறப்பாகத் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்வது.” கிருபாகரனின் குரல்.
கீர்த்திக்கு திவ்யா மேல் இருந்த சந்தேகம் அந்த நொடியில் மறைந்துவிட்டது. புதுப் பெண் என்று ஒய்யாரமாய் அமர்த்திருக்காமல் வந்த முதல் நாளே மாமியாருடன் சேர்த்து வேலை செய்யத் தொடங்கி விட்டாளே!
திவ்யா மண்டியிட்டு அமர்ந்திருப்பதைப் பார்த்து, “என்ன அம்மா? வந்த முதல் நாளே அண்ணியை முட்டிப் போட வைத்துவிட்டீர்கள்!” என்றாள் கீர்த்தி.
“அதெல்லாம் இல்லை. அத்தைக்கு உதவ நான் தான் அப்படி உட்கார்ந்தேன்.” என்று அவசரமாகத் திவ்யா எழுந்திருக்க, புடவை தடுக்கியது. சட்டென்று அவளைப் பற்றிக்கொண்டான் கிருபாகரன்.
கீர்த்தியும் வசந்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர்.
இரவு உணவிற்கு பிறகு, வீட்டின் அரவம் குறைந்துவிட்டது. கிருபாகரனின் அறையில், அதாவது அவர்கள் அறையில் திவ்யா அமர்ந்திருந்தாள். புது மணப்பெண்ணிற்கான பரபரப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது. லேசாகக் கைகள் நடுங்குவது போல் கூடத் தோன்றியது. மாலைவரை எதுவும் பெரிதாகத்
தோன்றவில்லை. ஏதாவது ஒரு சடங்கு, புது மனிதர்களின் அறிமுகம் என்று ஆட்கள் சுற்றி இருந்தார்கள். அதிகம் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. ‘கிளம்புகிறோம்’ என்று பெற்றோர் வந்து சொன்ன போதும், பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் இப்போது ஏதோ கலக்கம். புது இடம், புது உறவுகள், புது மனிதர்கள். வசந்தி கீர்த்தியிடம் இயல்பாகவே பேச முடிந்தது. பலமுறை நடந்த தொலைப்பேசி உரையாடல்கள் நல்ல இணக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் கிருபாகரன்!
காலையில் இருவரும் பேசியிருந்தாலும், இப்போது என்ன பேசுவது? யோசித்துக் கொண்டிருக்கையில் வீட்டின் சத்தம் வெகுவாக அடங்கியிருந்தது. எல்லோரும் தூங்கி இருக்க வேண்டும். வெகு அமைதியாக இருந்தது. அப்போது கொஞ்சம் விசித்திரமான ஒரு சத்தம். உன்னிப்பாகக் கேட்டாள். திகில் படங்களில் வருவதுபோல் சத்தம். பகலில் வரும்போதே பார்த்தாள். சுற்றிலும் வீடுகள் இல்லை. தோட்டத்தின் நடுவே இருந்தது வீடு. ஒரு பக்கம் தென்னை மரங்கள், இன்னொரு பக்கம் ஏதோ பயிர் செய்திருந்தார்கள். அவளுக்கு அதுபற்றி அதிகம் தெரியாது. மற்ற இருபக்கமும் பந்தல், அதை அடுத்து உழுத நிலம். ஓவல் வடிவில் பெரிய வளையங்கள் அமைத்தது போல் நிலம். அப்போது பார்க்க எல்லாம் நன்றாக இருந்தது. ஆனால் இரவில் நினைத்துப் பார்க்கும்போது கொஞ்சம் பயமாக இருந்தது. நெருக்கமான வீடுகள் இருக்கும் பகுதியில்தான் திவ்யா இருந்திருக்கிறாள். கொஞ்சம் கத்தி பேசினால் பக்கத்து வீட்டுக்கு கேட்கும் அளவுக்கு வீடுகள் நெருக்கமாவே இருக்கும். ஆனால் இங்கே அருகில் வீடுகளே இல்லை. உதவி என்று கூப்பிட்டால் கூட யாருக்கும் கேட்காதே.
அதில் இந்தச் சத்தம்! திகிலை ஏற்படுத்தியது. அந்தச் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று உன்னிப்பாகக் கேட்டாள். அறையில் ஒரு சுவற்றில் இருந்த பெரிய ஜன்னல் பக்கம் இருந்து வருவதாகத் தோன்றியது. அருகில் சென்று நின்றாள். ஆம், அந்த ஜன்னல் அருகில் தான் சத்தம் அதிகமாகக் கேட்டது. உய்.. உய்.. என்ற சத்தம்.
“அங்கே என்ன இருக்கிறது?” பின்புறம் குரல் கேட்டதும், “ஆ…” என்று அலற, கிருபாகரன் சட்டென்று அவள் வாயைப் பொத்தினான்.
“கத்திவிடாதே!” என்று மெல்ல கையை அவள் வாயிலிருந்து அகற்றியவன், “இங்கே என்ன ஆராய்ச்சி செய்கிறாய்?” என்றான்.
“இங்கே ஏதோ சத்தம் வருகிறது” என்று ஜன்னலைக் காட்டினாள்.
கூர்ந்து கவனித்தவன், அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டு, அந்த ஜன்னலைத் திறந்தான். காற்று வேகமாக உள்ளே வந்தது.
“இப்போது அந்தச் சத்தம் வருகிறதா?”
இல்லை என்று தலையாட்டினாள். கதவை அடைத்தான். மீண்டும் சத்தம் வந்தது. ஜன்னலில் சிறிய இடைவெளியில் காற்று மோதி, இருக்கும் இடைவெளியில் காற்று நுழைவதால் வரும் சத்தம்.
“என்ன பயந்துவிட்டாயா?”
‘ஆம்’ என்று தலையாட்டினாள்.
“நானும் சிறு வயதில் பயந்திருக்கிறேன். இங்கே வரும்போது இரவில் வெகுநேரம் தூக்கம் வராது. அது என்ன என்று தெரியும் வரை பயம் இருந்தது.”
“இங்கே வரும்போது என்றால், வேறு எங்கு இருப்பீர்கள்?”
திவ்யாவை ஆழமாகப் பார்த்தான். “சீக்கிரம் அங்கே அழைத்துப் போகிறேன்.”
என்றபடி மனைவியை அமர்த்தி அருகே அமர்ந்தான்.
“சில வருடங்களுக்கு முன்பு எங்கள் வாழ்க்கை வேறு மாதிரி இருந்தது. சில பிரச்சினைகள். அந்த நிலைக்கு வரும் வரை திருமணம் கூட செய்யக்கூடாது என்று நினைத்தேன். ஆனால் அம்மாவுக்கு என் திருமணம் உடனே நடக்க வேண்டும் என்ற ஆசை.” அவன் பேசும் போது, இங்கேயும் அவள் ஒருவன்
வாழ்க்கையில் திணிக்கப்பட்டு இருக்கிறாளா என்று மனம் பதறியது.
“ஆனால் ஆசைப்பட்ட நிலையை அடைந்து, அதன் பின் மனைவியை அதில் இருக்க வைப்பதை விட, மனைவியுடன் சேர்ந்து அந்த நிலையை அடைவது இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. உடனே கல்யாணத்துக்கு சம்மதித்துவிட்டேன்!” என்று அவள் நெற்றியில் முட்டினான்.
அவள் அவன் கண்களைப் பார்த்து சொன்னாள், “நிச்சயம் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்!”
“இந்த வீடு பிடித்திருக்கிறதா?” என்றான்.
“வீடு பிடித்திருக்கிறது. ஆனால் சுற்றி வீடுகள் இல்லை. அதுதான் கொஞ்சம் பயமாக இருக்கிறது.”
“நீ என்ன தனியாகவா இருக்கிறாய்? எப்போதும் சுற்றி யாராவது இருப்பார்கள். நாளைக் காலையில் பார். தேங்காய் உரிக்க, களை எடுக்க என்று வீட்டைச் சுற்றி ஆட்கள் இருப்பார்கள்.”
“இரவில் யார் இருப்பார்கள்?”
“இரவில் நான் இருப்பேன்.” என்று கண் சிமிட்டினான்.
“என்னை பற்றி உனக்கு எதுவும் தெரியவேண்டுமா?”
அவன் முகத்தை ஒருகணம் பார்த்தவள், “அது… அது… நான்… இங்கே இருப்பது …உங்களுக்கு ஏதும் சிரமம் இல்லையே!” என்று கேட்டுவிட்டாள்.
மனைவியின் கேள்வியில் ஒருகணம் அதிர்ந்தவன், ‘இவள் என்ன கேட்கிறாள்?’ என்று புரிந்து கொள்ள முயற்சித்தான்.
“சிரமம் என்றால்? நீ என்ன கேட்கிறாய்?” என்றான்.
“அது… உங்கள் வீட்டில் .. நான் இனிமேல் இங்கே இருக்கப்போவது பற்றி…” அவள் விளக்கம் தெளிவிற்கு பதில் மேலும் குழப்பத்தை
உண்டாக்க, அவளைப் பார்த்தான். கணவனுடன் மனைவி இருப்பதுதானே இயல்பு.
அதையே, அவன் கேட்டான், “திருமணம் முடிந்தால் மனைவி என்னுடன் தான் இருப்பாள் என்று எனக்கு முன்பே தெரியும்! எங்காவது வேறு மாதிரி நடக்குமா? நான் கேள்விப்பட்டதில்லையே!” என்றான்.
“அதில்லை! புதிதாக நான் இங்கே வந்திருக்கிறேன்! என்னை நீங்கள் பார்த்துக்கொள்வது… உங்களுக்கு சிரமமாக இருக்குமோ என்று…”
“எடைக்கு எடை தங்கம், வைரம் வேண்டும் என்று கேட்காத வரையில் சிரமம் இல்லை!” என்றான்.
“நான் அப்படி எல்லாம் கேட்கமாட்டேன்!” என்றாள் திவ்யா.
“பிறகு? என்னிடம் என்ன எதிர்பார்ப்பாய்?” கேலியாகவே கேட்டான்.
“நான் இங்கே இருப்பதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டாலே எனக்கு போதும்!”
இருபதை கடந்த ஒரு பெண்ணுக்கு இதுதான் எதிர்பார்ப்பா? கிருபாகரன் யோசித்தான்.
– தொடரும்…
தொடர்புள்ள சிறுகதைகள்
முள்
ஜே.எம்.சாலி
August 1, 2026
கடவுள் போட்ட முடிச்சு!
கல்பனா ராஜகோபால்
August 1, 2026
பூசைக்குள் வரும் பூக்கள்
காரை ஆடலரசன்
August 1, 2026