உண்மையின் தரிசனம்




(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நெல்லை அரைத்தாயிற்று. கூடத்தில் கொட்டி அளந்து கொண்டிருக்கிறான். அரிசிக்குள் கையைவிட்டு எடுக்கிறேன். டம்புச் சூடே போலும் கணகணப்பு, பூமியின் கர்ப்பத் னின்று வந்ததல்லவா?

அன்னபூர்ணே நம:
சிவனே அவளிடம் கையேந்தி நிற்கிறான். அவளும் இடுகிறாள். பாவனைகளின் அழகை ரசிக்க இதுவே உகந்த முதற்பாடம்.
பாவனை என்பது என்ன?
சாதக விசேஷத்தால் எண்ணத்தின் உருவத்தை உருவக மாக்கி, அதனுள் மிளிரும் நோக்கத்தின் அழகைக் கண்டு இன்புறல்தானே!
மோமா, கலத்துக்குப் பதினாறு படி தேறியிருக்கு. இடிசல்கூட அதிகமில்லை.
இந்தப் பாஷையே மறந்துபோகுமளவுக்கு அத்தனை வருடங்களாகிவிட்டன. ஆனால் புரிந்தமாதிரி தலை ஆட்டு கிறேன். சந்தானத்தின் சந்தோஷத்தைக் கெடுக்க மன் மில்லை.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, வீட்டுக்கு ஆந்திரா மூட்டையை முதுகில் சுமந்து வந்து இறக்கித் தையலைப் பிரித்து அவிழ்த்துக் கொட்டி அரிசிப் பீப்பாயுள் அளந்து கொட்டிவிட்டுச் செல்வான். கடையில் வாங்கினால் அளவு எடையில் எழுபத்து ஐந்து கிலோ. இவனிடம் படியில் நாற்பத்தி ஐந்து. இரண்டு அளவுக்குமிடையே எத்தனையோ திரிசமம். அளப்பதில் திரிசமம். ஆனால் பீப்பாய் நிறையக் காண என்ன மகிழ்ச்சி! ஏதோ ஒரு தைரியம்.
துடைப்பம் போடாமல், ஒரு மணிகூட விடாது திரட்டணும்,எவ்வளவு தூரம் சிதறல்!
கஞ்சியோடு போவாளோ,கழுநீரோடு போவாளோ எனும் பாவனைக்கு பயம்.
வள்ளுவர் வாசுகி கதை – குண்டூசியும், கொட்டாங்குச்சி யில் தண்ணீரும் – அதுவும் பாவனைதான்!
செய்கைக்குச் செய்கை பாவனையே ஒரு தரிசனம்.
வாங்கிச் சாப்பிடும் அரிசியையே நான் கொண்டாடத் தயாராயிருக்கையில், சந்தானத்தின் பெருமிதம் எத்துணை மகத்தானது! தன் வயலில் விதை நெல்லை வாரியிறைத்து வேளையிலிருந்து.
இரவில்லை பகலில்லை வேளையில்லை என
தாயின் பரிவில் பரமரித்து
தளரா உழைப்பில் அயராக் கண்ணில் வளர்த்து வீட்டுக்கு வந்து சேர்த்திருக்கிறான், நமக்கும் அளக்கிறான்.
சந்தானம்,நீதான் உண்மையாக வாழ்பவன், நீ அன்ன தாதா.
அதை நீயும் அறியாய்.
உன் விளைச்சல் யார் கலத்தில் சாதகமாக வட்டிக்கப் படுகிறதோ.
அவனும் அறியான்.
மத்யதரைக் கடலில் எங்கோ ஒரு அலை ஒரு நலுங் கலாக உருவெடுக்கிறது.
துளித்துளியாகத் தன் பிரயாணத்தின் வழி திறன் கொண்டு,
பெரும் நுரைக்கக்கலுடன்
வங்காளக்குடாக் கடல் கரையில் மோதி விரிகின்றது.
அன்னபூர்ண வியாபகம்.
மத்தியானம்.
வேப்பிலை வீட்டு ரேழியில் படுத்திருக்கிறேன்,
சொகுசான இருட்டில், அரைத் தூக்கத்தில் கண் செருகலில், கனவுலகத்துக்கும் நனவுலகத்துக்கும் நடு விளிம்பில் நினைவு அங்குமிங்குமாக நடுங்குகிறது, நழுவு கிறது. தேறிக் கொள்கிறது. மறுபடி இதே ஊஞ்சல் அசைவு.— லாலி லாலி!!…
பஸ்ஸின் வேகத்தில், ஒரு பக்கம் வாழைக் கொல்லை, மறுபக்கம் தென்னஞ்சோலை – பாய்ந்து செல்கின்றன.
ஒரு பக்கம் பாளம் பாளமாகப் பசும்பொன் தகடுகளாலாய பாவாடை மடிகள் போலும் வாழையிலைகள் அசைகின்றன. மறுபக்கம் தென்னைகள் சாமரம் வீசுகின்றன.
“வாங்கோ வாங்கோ சோழம் பார்க்க வாங்க!”
இடையிடை பாலங்களினடியில் நாடா ஓடும் வாய்க் கால்களில் தனித்தனித் துறைகளில் ஆடவரும் பெண்டிரும் மார்பில் நீராடுகின்றனர். புடவையை வேட்டி போல் இழுத்துச் சொருகி… பரவாயில்லை, தைரியமாக நடுத் தண்ணீரில் நீந்துகின்றனர். துளையலின் வெறியில் உறிஞ்சி உமிழும் தண்ணீர் மத்தாப்பு வீச்சில் மீண்டும் ஜலத்திலேயே விழுகிறது.
அங்கங்களின் விண்விண் செழிப்பு ஆடைகளின் வர்ணங் கள், வாய்க்காலைச் சூழ்ந்த பசுமையோடு இழையும் ஜாலங்களுடன் வானத்தின் மந்தாரத்தைக் குழை.
சோலைகளின் நடுவே அதோ அகன்றதோர் கோபுரம் ஸ்ரீரங்கம். பின்னால் திரும்பிப் பார், மலைக்கோட்டை
காவேரிப் பாட்டி, பாரியாகப் படுத்திருக்கிறாள். புது வெள்ளம், அவள் நரைக் கூந்தலாக, அலை அலையாய் சடைசடையாய், நுரைநுரையாய்ச் சோம்பி மதமதக்கிறது.
அம்மாடி பிரம்மாண்ட ஓவியம் இதைத் தீட்டிய தூரிகை வீச்சில் நான் அலட்சியமான, சின்னஞ் சிறியதோர் சுழிப்பு. ஆனால் இதில் இடம் கண்டுவிட்டபின், நான் இல்லாமல் இந்த ஓவியம் பூரணமில்லை… பூரணத்துக்கும் பூரணம் தந்தபடி, பூரணத்தோடு இழைந்து, என் இடத்தில் இடம் தெரியாமல் இயங்கும் இந்தப் பேறு கிடைக்க என்ன புண்ணியம் செய்தேனோ!
வான் நீலம், நதியின் தூரத்து விளிம்பில், காவேரிப் பாட்டியின் கூந்தல் விரி எழுப்பிய பிசுபிசுப்படலமெனம் படபடக்கிறது.
எந்தக் கவிதையும் யாருடைய சொந்தக் கவிதை அல்ல.
எல்லாம் அவள் அணிந்த மாலையினின்று உதிரும். இதழ்கள்.
விழும் இதழ்களுக்குக் காத்திருந்து, அவைகளைக் கண்டெடுத்து உண்டவன் பாக்கியவான்.
உள்ளமெலாம், உள்ளே, உடல் பூரா மணம் கமகமக்கிறதே!
பூமியின் கவிதையில் ஒரு வரியாக விளங்கக்கூட நான் ஆசைப்படவில்லை.
அடேயப்பா! என்ன பேராசை! என்ன அசட்டுத் தைரியம்?
ஒரு வார்த்தையாக? ஒரு சொல்? ஊ – ஊம்
இதோ நடு வந்துபோம் ஆனைக்காவின் அகிலாண்டே சுவரி சன்னதியில்.
அத்துணை துணிச்சலுக்கு எங்கு போவேன்?
ஒரு அக்ஷரத்தின்மேல் புள்ளி ஒலியாக, அநாமியாக இடம் தந்தாளெனில்
அதுவே பிறவி கண்ட பயன் ஆகிவிடாதா!
அரைக் கண் மயக்கத்தினூடே அம்மாவின் குரல்- இங்கு எப்படிக் கேட்கிறது?
ராமரத்னம், சாப்பிட வாயேன்! – ” அட, ராமரத்ன மும் இருக்காளே ! திடுக்கென விழிப்பு.
வேப்பிலை, அவள் பெண்ணைச் சாப்பிட அழைக்கிறாள். இந்த நிமிடம் வரை, இந்த வெளிச்சத்துக்கு எப்படிக் கண்மூடியாக இருந்திருக்கிறேன்? வேப்பிலையின் பெண், அந்த தேகவாகு, அந்த வண்டு விழி, அந்தக் கன்னக் கதுப்பு – அப்படியே ராமரத்னம் அச்சு.
உள்ளே போகிறேன்.
“வாங்கோ மாமா வாங்கோ. எழுப்பலாமா வேண்டா மான்னு நானே தவிச்சுண்டிருந்தேன். காப்பிக்குப் பாலை அடுப்பிலே வெச்சிருக்கேன்.
என் குழப்பத்தை அவளிடம் தெரிவிக்கிறேன். மனத்தின் குழளறலை யாரிடமேனும் சொல்லிக்கொள்ளனும்போல் இருக்கிறது!
“ஏன் இருக்காது? வம்சவழி எங்கே போகும்? உங்கள் அம்மாவும் என் பாட்டியும் ஒரே வயிற்று உடன்பிறப்புகள். ஆகச்சே, என் குரலில் உங்கள் அம்மாவின் ஒற்றுமையும், ராஜியும், உங்கள் தங்கையும் ஒரே ஜாடையாயிருப்பதிலும் என்ன ஆச்சர்யம்? மாமா நீங்கள் வாசலில் போற மாமாவை மாமான்னு அழைக்கற மாமயில்லே. நிஜமாவே உறவு மாமா. எனக்கு ஒண்ணுவிட்ட மாமா. அவாவா எங்கெங்கோ பிரிஞ்சுபோய் உறவு பிரிஞ்சு போகாட்டாலும் மறைஞ்சுபோயிடறது.”
அவள் அணிந்த மாலையினின்று உதிரும் இதழ்கள் விழும் இடத்தில் நேரும் நெஞ்சுள் எதிரொலியே கவிதை. ஆகவே, எந்தக் கவிதையும் யாருடைய சொந்தக் கவிதை அல்ல.
இதென்ன பல்லவி?
இன்று கார்த்திகை.
ஒரே ஜமக்காள விரிப்புப்போல், தெருவில் கோலங்கள். வீட்டுக்கு வீடு கோலத்தாமரை நடுவில் குத்துவிளக்கை நிறுத்தி, ஐந்து முகங்களிலும் திரியேற்றி, தாமரை இதழ் களின் நடு நரம்புகளில் வரிசையாக வைத்த அகல் விளக்கு களை வீட்டு மகிஷியும், இளவரசிகளும் ஏற்றுகிறார்கள். பட்டுப் புடவையைக் கொசுவம் வைத்துக் கட்டிக்கொண்டு தெருவே திருமணக் கோலம்; ஒரே தேஜோமயம்.
கலியாணமோ கார்த்தியோ!…
கார்த்தி விளக்கேற்றும் ஒவ்வொரு பெண்ணும் தன் சோதரனின் நல்வாழ்வுக்கு ஏற்றுவதாக ஒரு பாவனை.
எனக்கு? – என்னை நினைக்க…
ஐவர் பிறந்தோம்; இன்று இருவர் எஞ்சி நிற்கிறோம். என் தம்பியும் நானும்.
என்னை எனக்காகவே நினைக்க ஒருத்தியும் இல்லையா? லேசாக மூச்சுத் திணறுகிறேன்.
உடனேயே மனம் தேற்றிக்கொள்கிறது.
எழுத்து எனும் பெரும் உறவு இருக்கிறதே! நேரில் சந்திக்க முடியாவிட்டாலும், வாசகர் வழியில் எனக்குக் கிடைத்திருக்கும் தங்கைமார்களே. உங்களுக்கு என் பரிபூரண ஆசிகள். என் தாய்மார்கள் அனந்தம்பேருக்கும் என் சாஷ்டாங்க நமஸ்காரம்.
என்றைக்குமே கோழித் தூக்கம்தான். ஆனால் இன்று யடு மோசம். புரண்டு புரண்டு இருப்பே கொள்ளவில்லை. என் கையே எனக்குத் தெரியாத இந்தக் கும்மிருட்டில் விட்டம் எங்கே தெரியப்போகிறது?
ஆனால் அம்பத்தூரில் அவள் சுட்டிக்காட்டுவதுபோல், பகலிலேயே விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்ததன் அடிப்படையில்தான் இந்த ப்ரயாணம் விளைந்தது. ஆயிரம் குருட்டு யோசனைகள், புழுக்கங்களின் கடையலிலிருந்து ஒரு வாக்கியம் விட்டத்தின்மேல் சுருள் பிரிந்தது.
“வாழ்க்கையின் பிரயாணமே உயிரின் தரிசனம்.”
வார்த்தைகள் தனித்தனி மயிலாடின.
எனக்கே,எப்பவுமே கொஞ்சம் திரியல் பித்து உண்டு. இப்படி இரண்டு வருடங்கள், நான்கு வருடங்களுக்கு ஒரு முறை…
இப்படித்தானே. ஆத்ம விமோசனத்தைத் தேடிப் பிக்குகள் கிளம்பியிருப்பார்கள்! இப்படியா, என்மாதிரி, பெட்டி, படுக்கை டில்லிக் கூடையுடன்–?
அவர்களுடன் உன் பேரை இணைத்துக்கொள்வதால் துறவு என்று உனக்குள் நினைப்பா? அந்த எண்ணத்துடன் ஸரஸம் நடத்துகிறாயா? இது என்ன glamour game?
“வாழ்க்கையின் பிரயாணமே உயிரின் தரிசனம்.”
“சந்தானம்!”
யார் இந்த வேளையில்?
படுதாவைத் தூக்கிப் பார்க்கிறேன். வாசற்படியில் ஒரு உருவம். “சந்தானம் இருக்கானா?
சந்தானமே வந்துவிட்டான்.
இருவரும் சற்று எட்டப் போய்க் “கிசுகிசு” பேசி, சந்தானம் அவரோடு போய் விட்டான்.
உயிரின் தரிசனம் என்றால் என்ன? மனித முகம்தான். மனித முகம் மட்டும் அல்ல. சிருஷ்டியின் பல்வேறு முகங்கள். எண்ணற்ற முகங்களைப் பார்த்துப் பார்த்து, நாளடைவில் உன் பார்வையின் பக்குவத்துக்கேற்ப ஒருநாள்-
எல்லா முகங்களும் முகத்துடன் முகம் இழைந்து ஒரு முகம். ஒரே முகமாக எப்போது தெரிகிறதோ அதுதான் அவள் தரிசனம்.
மாறி மாறி தூக்கத்துக்கும், விழிப்புக்கும் சஞ்சலத் துக்குமிடையே கனவில் மாதிரியிருக்கிறது. சந்தானம் வந்த மாதிரி, அவனை மணி கேட்ட மாதிரி, 3.35. மாமா” – மறுபடியும் விழிப்பு நேர்ந்தபோது நன்றாய் விடிந்திருந்தது. பல் விளக்கக் கிணற்றடிக்குப் போனபோது மாட்டுக்குப் பிண்ணாக்குக் கரைத்துக்கொண்டிருந்தான்.
“என்னப்பா நடுராத்திரியில் அத்தனை அவசரமாப் போனே?’
“அந்த மாமா வீட்டுப் பசுவுக்குப் பிரசவம். ரொம்ப சிரமப்பட்டுப் போச்சு. பனிக்குடம் உடைஞ்சு, சிசுவும் வெளிப்பட்டுடுத்து. வலி தாங்காமல் தாய் எழுந்து நின்னுடுத்து நின்னபடியே, கன்றுக்குட்டியைக் கையில் ஏந்தியபடியே வாங்கும்படி ஆயிடுத்து. மாடு கிழம் வேறே’
உயிரின் தரிசனத்துக்காக கிளம்பிவிட்டாயே! பார்.. உண்மையின் தரிசனத்தையே பார்.
– உண்மையின் தரிசனம், முதற் பதிப்பு: செப்டம்பர் 1990, வானதி பதிப்பகம், சென்னை.