ஈ ஜகமுலோ திக்கெவரம்மா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 6, 2025
பார்வையிட்டோர்: 370 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஈ ஜகமுலோ திக் கெவரம்மா…” 

சபை”கும்”. இன்று வகையான கூட்டம். 

அவர்களிடையே ஒரு பழக்கம். இன்ன ராகம் ஆலாபனை,அதையொட்டி, இன்ன உருப்படி என்கிற முன் உடன்பாடோ, ஒத்திகையோ கிடையா. மேலும், ஆலாபனை செய்தவன்தான் கீர்த்தனையை எடுப்பது என்பதும் இல்லை. இருவருள், யாரும் எடுத்த பின் இருவரும் ஒருமித்து விடுவார் கள். ஆலந்தூர் சகோதரர்களுக்குப் பின், விஷய ஞானத் துடன் ஜனரஞ்சகத்துக்கு இவர்கள் பேர்தான் சமீபத்தில் அடிபட ஆரம்பித்திருக்கிறது. மண்டைக்கனம் நடுவில் ஏறாமல் இருந்தால், பரம்பரையாகக் காப்பாற்றி வருகிற ஸங்கீதந்தான்’. ஜாம்பவான்களின் சிரக்கம்பம். 

அன்று, ரீதிகௌளையை ஆலாபனைக்கு எடுத்துக் கொண்டதென்னவோ சபேசன்தான். சாமா வழக்கமாக ஆங்காங்கே ஒட்டிக்கொண்டான், பிரிந்தான், தொட்டுக் கொண்டான்; ஒட்டக் கலந்தான். 

சமயங்களில், ஆலாபனையோ, உருப்படியோ சேர்ந்து பாடாமல், துண்டாகத் தனித்து இயங்குவதும் உண்டு. அதிலும் ஒரு ‘சமாளி’ இருக்கிறதே! சவால் அல்ல. மணிக் கட்டில் கிளியை ஏந்தி, அதன் பேச்சைக் கேட்பதுபோல. 

ரீதிகௌளையின் விவரமான விஸ்தரிப்பு, இன்று சபேசனின் எண்ணத்தில் இல்லே. ‘ராகரத்ன மாலிக ஜே லேசாகத் தட்டிவிட்டதும், ஷண்முகப்ரியாவுள் புகுந்து ஆலாபனையையும் பாட்டையும் – ‘மரிவேறே திக்கவரய்ய ராமா’ அதுதான் சற்றுத் துரிதம்- ‘சிக்’கென முடித்துக் கொண்டு, ஸ்வரங்களை அள்ளி வீசி, மிருதங்கத்தின்மேல் சரக் கூடு கட்டிவிட வேண்டும் என்று திட்டம். அதையும் முன்கூட்டிச் சாமாவோடு பங்கிட்டுக் கொள்ளவில்லை. அப்படிக் கலந்துகொண்டிருந்தாலும் சாமாவுக்கு ஆட்சேபம் இருக்காது. மைலம் வாசுவை பொக்கை வைக்கவேண்டியது தான். 

மூணு நாலு தடவையாக, அவனைத்தான் சபாக்காரர் கள், சபேசன் சகோதரர்களுக்குப் போட்டு வருகிறார்கள். முழுச் சொரூபத்தை அவர்களிடம் அவன் இன்னும் காட்ட ஆரம்பிக்கவில்லையென்றாலும். போன தடவையே, ஆட்டுக்கு வால், லேசாக ஆட ஆரம்பித்துவிட்டது. 

இந்தச் சங்கீத களம் இருக்கிறதே, இதில் உழைப்பில் தானே முன்னுக்கு வருவது என்பது ஒன்று; வேறு காரணங்களாக அக்கறை கொண்டவர் வேண்டியப்பட்டவரைப் பின்னாலிருந்துத் தள்ளி முன்னுக்குக் கொண்டுவருவது மற்றொன்று. முன்னது குதிரைக் கொம்பு. பின்னதன் குரல் வளைப்பிடியில், சுயத்தகுதி திணறிற்று. இந்த நிலைமை எங்கும்தான் உளது எனினும், இங்கே பூசாரிகளின் கொடுமை கூட. இப்பவே, நம் மேடை வயசுக்கு, மேடையில் நம்மை முழு டிக்கெட்டுகளாக, பாட்டிலும் ‘ரேட்டிலும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்களே, இது நிஜந்தானா? அப்பப் போ, மேடையிலேயே கண்ணைக் கசக்கிப் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. 

முன்னுக்கு வந்துகொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் இந்தப் பக்கவாத்தியக்காரன் எனக்கு வேண்டாம்’– என்று  சொல்வது நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. என் குழியை நானே தோண்டிக்கொண்ட மாதிரிதான்-சூத்ரதாரிகள் அவ்வளவு நுட்பமாகப் பலகையைத் தட்டிவிடுவார்கள். 

ஆயினும், இந்த மைலம் வாசு, போகப் போக வம்பு தருவான் போலத்தான் தோன்றிற்று. அவனும் மேடை ஏறி நாளாகவில்லை. ஆனால் இசை வட்டாரத்தில் காலியென்று பேர் வாங்கிவிட்டான். ஒரு பெரிய அரசியல் புள்ளியின் பிள்ளை. அப்பன் வழியில் போகாமல், இசை மேடைக்கு இவன் ஏன் வந்தான்? ஃபீல்டில் இருக்கிற கஷ்டம் போதா தென்று இவன் சோதனையும் வேணுமா?’ என்று பிழைப்புக காரர்கள் தலையிலடித்துக் கொண்டார்கள். ஆனால் வாய் திறந்து சொல்ல முடியுமா? ஆனால் இவர்கள் புலம்பலிலும், சத்து, செத்தை பிரிப்பது கடினம். எப்படி இருந்தால் என்ன இப்போ வாசுக்குக் கொடியேற்றம். ஆளும், கடோத்கஜன் மாதிரி. 

மேடையை, சர்க்கஸ் கூண்டாக ஆக்க முயன்றான். வித்வத்தினால் அல்ல. கோமாளித்தனத்தால். சமயமில்லாத இடத்தில், அநாவசியமாக ஒரு தட்டு. பாட்டில் நூலேணி ஏறிவரும் கட்டத்தில் வித்வானின் நளினத்தை நசுக்கும் முறையில், ‘படார்’ ‘படார்’- அடுத்தடுத்துப் பொளியும் ‘சாப்பா’க்கள். 

சபையோர் சிரிப்பு அடங்கினதும், அதற்கு முத்தாய்ப்பாக ஒரு பிங்ங்ங்… மறுபடியும் பீறிடும் ‘கொல்”லுக்கு ஒத்தான்ஸாய்த் தான் உடல் குலுங்கல். வித்வான் சிவப்பாய் இருந்தால் முகம் குங்குமப் பிழம்பு. நிறம் மட்டாயிருந்தால் கருங்குழம்பு. வேதனை பார்ப்பதில்தான் என்ன களிப்போ! 

ஆச்சு, இன்னும் கொஞ்சநாள் போனால், ‘நான் நடுவில் உட்கார்ரேன். அவர் என்னிடத்தில் உட்கார்ந்து பாடட்டும்” என்று கேட்டால், கேட்பதற்கு ஆள் இருந்தார் கள். அப்படி ஒரு புரட்சியின் பெருமை என்னுடையதாக இருக்கட்டுமே!” என்று ஆசைப்படலாம். அவனா பாடுகிறான்? சாய்கால் பலம் பாட வைக்கிறது. ‘சல்பேட்டா’ இப்போ புகாத இடம் எது? ஆகையால் இசை திசை மாறக் கேட்பானேன்? 

“நமக்கு என்ன எவன்எப்படியானும் போகட்டும்’ என்று கட்டின பசுவாகயிருந்தால், திரும்பத் திரும்ப இவனையே தான் கழுத்தில் கட்டிக்கொண்டிருப்பார்கள். இப்பவே கழற்றிக்கொள்ள வழி தேடாவிடில் இந்தக் காம்பினேஷ னுக்குக் காறை பூசியாகிவிடும். இந்தத் துறையில் பகை ஆகாது. ஒருத்தர் விரோதம் நமக்கு என்ன? நாசூக்காகச் செய்யவேண்டிய வேலை; வேலைப்பாடு. 

மதுரை மணி ஐயர் ஒரு சமயம் வாத்தியத்தின் துடுக்கு அடங்கினதைப் பார்த்தது நினைப்புக்கு வந்தது. என்ன நேர்ந்தது, எப்படி எந்த லகுவில், எந்த இடத்தில் என்ன பொடி, யாருக்கும் வெளிப்படையாகத் தெரியாது. தடு வாசிப்பில், மிருதங்கக்காரன், சரணாகதியில் இரு கரங்களையும் தூக்கிச் கூப்பினதுதான் தெரியும். அப்பா! அந்தச் சமயத்தில் அந்த முகத்தில் தோன்றிய இளஞ்சிரிப்பின் கருணை, அடேப்பா!-இனம் கண்டுகொள்ளச் செய்வதில் தான் இருக்கிறது! சந்தியில் மொக்கு மோறையை உடைப் பதில் என்ன இருக்கிறது? அதுபோல… 

இன்று மைலம் வாசுதேவப் பிள்ளையை, பதினெட்டாம் புள்ளியில் புலியைக் கட்டுவதுபோல் ஸ்வர வலையில் மாட்டி விட்டு கொஞ்சநேரம் நெளியட்டும், புத்தி வரும் வரை. 

இன்றைய ஷண்முகப்பிரியாவின் ப்ளான்’ இதுதான். அந்தக் குறியில்தான் போய்க்கொண்டிருக்கையில்,சர்மா, ஜனனி நினுவினா வை எடுத்ததும், சபேசன் வியப்புடன் சாமாவை நோக்கினான். சாமா முகம் குனிந்திருந்தது. 

அதுவும் எடுக்கிற இடத்தைப் பார்! 

“ஈ ஜகமுலோ திக்கெவரம்மா?” 

அக்ஷரத்துக்கு அக்ஷரம் இடையில் கமகம் அலை தழைந்து இழைந்து, “திக்கெவரம்மா”வில், தேம்பல் நாபி வேரைக் கொத்தாகப் பிடுங்கிக்கொண்டு எழும்பினதும், ஹாலில் விளக்குகள் பொட்’டென் அணைந்தன. மேடையில்அ பின்னால் ஆள் உயரம் ராஜராஜேஸ்வரி (ஸ்ரீ ராஜராஜேஸ் வரி ஸங்கீத ஸபா) படத்துக்கெதிரே பஞ்சமுகக் குத்து விளக்குச் சுடர் மட்டும் இடத்துக்கு ஸந்நிதிக் களை வந்து விட்டது. 

“ஈ ஜகமுலோ திக் கெவரம்மா 
அம்…பா (முங்கி மொண்டு எழுந்து)
ஜனனி நினு வினா” 

குரல்கள் சிறகு விரித்த எழுச்சியில், ஜோடி சேர்ந்தது இருவருக்குமே தெரியாது. ஒரு தனிச்சக்தி இரு குரலையும் வாங்கிக்கொண்டது. 

நிகழ்ந்துகொண்டிருக்கும் ரஸாயனம், வேளையின் திரி புக்குக் காரணம் சாமாவா? சபேசனா? சபையோரின் பாத்திர நிலையா? அதோ குத்துவிளக்கு தரும் பெரு நிழல் சிறு ஒளியில். படத்தினின்று தனி ஒளிவீசும் அந்தப் புன்ன கைக்குள்தான் ரகஸ்யம் ஒளிந்துகொண்டிருக்கிறது. இந்த வேளையின் ஜாதுவும் ஜவ்வாதும் அவளுடையதுதானே! 

பக்கவாத்தியங்களைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அடியைத் தள்ளியெடுத்ததால், தள்ளிப்போன தாளத்தில் ஏமாந்து ஒருகணத் திக்ப்ரமையில் செயல் மறந்து போனார்கள். 

என்றுமே இருவரும் ஓங்கித் தொடை தட்டியோ, கையோடு கை அறைந்தோ அட்டகாசம் பண்ணுவதில்லை. அங்க சேஷ்டையை அறவே விலக்கி – 

“ராகதேவதைக்கு முகத்தில் இடம் கொடு. ராகத்தை இடவசதியாய்ப் புழங்கவிடு. டூத் பேஸ்டாய் பிதுக்காதே.” சபேசனுக்குக் குருவின் போதனை. 

“சங்கதிகள் என்னவோ லக்கக் கணக்குத்தான், ஆனால் முன்னாலேயே விடைதெரிந்த கணக்கல்ல. கடைசிவரை விடை காட்டாமலே வட்டத்துள் மறைந்த கணக்காயிருத்தல் வேண்டும். வழி தப்பிப்போய், நீ முழிக்கும் கணக்காக ஆகி விட்டது. 

இதுவும் அவர்தான். 

உதவுபடியில் சபேசன் சாரீரம் சிம்மத்தை நினைவூட் டியது. அடிக்கார்வைகளில் உன்னதமான உணர்ச்சிகளைக் காட்டவல்லது. விரக்தியான தீரம், அற்பங்களுக்கு இரங்கா பவுருஷம். மிருக ராஜ கம்பீரம். 

எவ்வளவுக் கெவ்வளவு சபேசனுக்கு மந்தரம் பலமோ, அத்தனைக்கும் பஞ்சமத்தில் சாமாவின் குரல் ஈடு கொடுத்தது. இனிமைகூட மந்தரத்திலிருந்து பஞ்சமத் துக்குப் பிசிர் இல்லாமல் ஒரே மூர்ச்சத்தில் கமான் வளைத்தது. அந்தரத்தைக் கிழித்துக்கொண்டு மேலே செல் கையில், இரு பக்கங்களிலும் கற்கண்டுச் சிதர்கள், சில்கள் திரைவிரித்து, திவலைகள் உதிர்ந்தன. விளம்ப காலத்தில், அடிமேல் அடி எடுத்து வைக்கையில், சிற்பக் கதவுகளின் திறப்பில் வெள்ளி மணிகள் கிணி கிணி… ஆனால் இந்தப் பாட்டில் பிர்க்கா வித்தைகளுக்கோ, ஸ்வர சமத்காரங்களுக்கோ இடம் இல்லை. 

அலைகள், அலைகள். தவழும் அலைகள்: ஆடி வேர் விட்ட அலைகள். பகுள பஞ்சமி நிலாவைக் கட்டிய நக்ஷத்திரக் கூட்டங்களுக்கடியில் நடுக்கடலின் மூச்சு மிதப்பின் மேல் கவிழ்ந்த ஓடத்தின் அசைவுகள். தொண்டை துக்கத் தின் சிறகடிப்பு. 

ஸாயங்காலே மலையடிவாரத்தில் மானஸ ஏரியில் அன்னக் கூட்டத்தின் பவனி. 

பழுத்த சுமங்கலி அணிந்த கனத்த தோடுகளில் சிவப்புக் கல்லின் அடக்கமான நீரோட்டம். 

“ஈ ஜசுமுலோ 
திக்கெவரம்மா” 

சபேசனின் சாரீர கனமும் சாமாவின் சாரீர நளினமும் ஸர்ப்பதண்டம்போல் ஒன்றோடொன்று பின்னிப் பிணை கையில். 

திக்குத்தெரியாக் காட்டில்
திக் திக் திக் 
திக்குத் தப்பிய இரு குழந்தைகள்
ஒன்றையொன்று அணைப்பில்
ஒன்றில் ஒன்று துணைதேடி, 

“திக்கெவரம்மா
திக்கெவரம்மா 
திக்கெவரம்மா” 

அலறி அலறி ஓடுங்கி ஓய்ந்து விசும்பலாகி அந்தரத் தோடு மூச்சாய்க் கலந்ததும் தருணம் களையவிழ்ந்தது. 

தவிக்கும் தன் குழந்தைகளைத் திரும்ப வாங்கிக் கொள்ள, தாய் வயிறு திறந்தாற்போல், ஒரு பெரும் கேவல் அத்தனை தொண்டைகளிலிருந்து புறப்பட்டது சொல்லி வைத்தாற்போல் விளக்குகள ஏற்றிக்கொண்டன. வேளை கலைந்தது. 

சபேசன் முகம் ஒளி வீசிற்று. சாமாவின் கன்னத்தை ருடினான்.உடனேயே சாமா, சபேசனின் பாதங்களில் இரு கைகளாலும் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டான். 

கோஷம் கூரையைப் பிளந்தது. 

கவிதா நேரங்கள் எப்படி நேர்கின்றன? அவளாலும் சொல்லமுடியாது. 

ஷண்முகப்ரியாவின் திட்டம் சபேசனுக்கு அடியோடு மறந்து போயிற்று. 

திக்கெவரு 

கண்ணீரை மறைக்கக் கெளரி தலைகுனிந்தாள். திக்கெவரம்மா அடிக்குச் சாமா பூரண ஆஹுதி ஆகிவிட்ட தன் பின்னணி நோக்கி அவள் நினைவு, வருடங்களை ஏழெட்டு இருக்குமா? ஒன்பது பத்து- கடந்துகொண்டிருந்தது. 

அம்பத்தூரில் அவர்கள் வசிக்கும் இடத்தில் அப்போ ஐந்தாறு வீடுகள்- இப்போ பரவாயில்லை – தெளித்தாற் போல் ஆங்காங்கே எட்ட எட்ட; அதிலும் அவர்கள் வீடு கீழ்க்கோடி. ஆனால் சபேசனுக்குச், சாதகம் பண்ண அமைதி யான சூழ்நிலை. மேலே வானம், கீழே பூமி. மார்கழி தையில் ஜமக்காளம் விரித்தாற்போல் பூமி பச்சைப் பசேல், பட்சி ஜாலம், முகில் கூட்டங்களின் கம்பீர மேய்ச்சல். தந்திக் கம்பங்களின் மோன சாட்சி. பகலிலே பாம்பு தாராளமாகப் புழங்கும். திருடன் பகல் இரவு பார்க்க வேண்டாம் கண்ணெ திரே வெந்நீர்த் தவலையைத் தூக்கிக்கொண்டே, அட போம்மா, உன் தொலையாத சொத்துக்குப் போடற கூச்சலைப் பாரு! நல்லாப் போடு என்று அலுத்துக் கொள்ளலாம். 

நடுப்பகல். ஒருவாறு காரியங்களை முடித்துக்கொண்டு, கெளரி அப்போதான் கலத்தில் சாதத்தை வைத்துக்கொண் டிருந்தாள். நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே ஓடினாள். வாசல் கேட்டுக்கருகே பூவரச மரத்துக்கும் முன்னறையின் ஜன்னல் கம்பிக்கும் இடையே கட்டியிருந்த கொடியில் காய்ந்துகொண்டிருந்த துணிகளின் நடுவிலிருந்து ஓர் இளைஞன், மஜந்தாக் கலர் புடைவையை உருவிக் கொண்டிருந்தான். அவளைக் கண்டதும், புடைவையைச் சுருட்டிக்கொண்டு ஓடினான். கேட்டுக்’ கதவு வெறும் மூங்கில் தட்டி, கௌரியின் வாய்க்குழறலில், முன்னறையில் சபேசன் உண்ட மயக்கத்தின் கண்ணயர்வு கலைந்து, எழுந்து துரத்திட, திருடனைப் பிடிக்கவும் பிடித்துவிட்டான். 

பையனிடம் எதிர்ப்பு இல்லை. மணிக்கட்டைப் பற்றி இழுத்துக்கொண்டு கூடத்துள் வந்து, பையனை எதிரே நிறுத்தி ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டான். 

“ஏன் எடுத்தே?” 

என்ன அசட்டுக் கேள்வி! அவனுக்கே தெரிந்தது. 

ஆனால் இதுமாதிரி விசாரணைக்காகவே – கன்னத்தில் நாலு அறை, வயிற்றில் குடல் வெளிவந்துவிடும் போல் இரண்டு குத்து – ஆள் கீழே விழுந்ததும், புரட்டிப் புரட்டிக் காலால் உதை – கண் வீங்குவதை, உதடு கிழிந்து ரத்தம் பீறிடுவதைப் பார்த்துக் களிக்கவே — துடிப்பவர்களும் இருக் கிறார்கள். திருடனைப் பிடித்தும் ஆயிற்று. சும்மா விட்டு விடவும் முடியாது. வேண்டியே இல்லை. இதுபோன்ற அசம்பாவிதங்களால் இடத்தின் சுருதியே குலைந்து விடுகிறது. 

கௌரி ஜன்னல் ஓரமாக நின்றாள். அவளுக்குப் பயமா யிருந்தது. 

“ஏன் எடுத்தே?” 

பையன் மார்லே கை கட்டிக்கொண்டு நின்றான். நல்ல சிவப்பு. முகம் கிரேக்க வார்ப்பு. Achilles Apollo, Alexander தலை மயிர் மோதிரக் குவியல். முகத்தில் பயத்தைக் காட் டிலும் குழந்தையின்பால் ஏக்கம்போல் ஏதோ திகைப்பு. 

“வாயைத் திறக்கப்போறையா இல்லையா?” சபேசன் கையை ஓங்கினான். 

“அம்மாவுக்கு இதே மாதிரி புடைவை இருக்கு.” 

ஓஹோ, உன்னை ஜோடி தேடிண்டு வரச்சொன்னாளா? 

பையனுக்கு முகம் ஆரத்தி கொட்டின மாதிரி ஆகி விட்டது. 

“அம்மா செத்துப்போயிட்டா.’ 

சபேசன் கட்டடம் விட்டுப்போயிற்று. கெளரி ஓடிவந்து பையனை அணைத்துக் கொண்டாள். 

சமையலறைக்குக் கூட்டிக்கொண்டுபோய், உட்கார வைத்துத் தன் கலத்தை அவனிடம் அப்படியே நகர்த்தி சாதத்தின் மேல் குழம்பை ஊற்றி, அதன்மேல் நெய்யையும் -சுண்டின கீரை. பையன் சாப்பிட்டு மூணு நாளாயிற்று. 

பிறகு தேம்பல்கள், விசும்பல்கள், விக்கல்கள் விசிப்பு களுக்கிடையே, கண்ணீரில் நனைந்து உதிர்ந்த வார்த்தை களை, புதிருக்கு விடை தேடுவதுபோல், அடுக்கிச் சேர்த்துப் பார்த்ததில் சாமாவின் கதை முகடு நிழல் தெரிந்தது. 

பையன் P.U.C. படித்து முடித்திருந்தான். ஒரே பிள்ளை; அம்மா பிள்ளே. அம்மாவுக்குப் புற்றுநோய். செத்து மூன்று வாரம் முடியவில்லை. கடைசிக் காலத்தில் அவள் பட்ட வேதனையிலும் அவனுக்காகத் தன் சிரிப்பைக் காப்பாற்ற முயன்ற வேதனை – பிரிவின் நிச்சயம் தெரிந்து போனதும் ஏற்பட்டுவிடும் அதிக ஒட்டுதல், உடனே பிரிவு கடைசி நிமிஷம் வரை நினைவு… விவரங்கள் அவிழ அவிழ, கௌரி அழ ஆரம்பித்துவிட்டாள். 

அம்மா காரியம் முடிவதற்குள் அப்பா மறு விவாகத்துக்கு ஏற்பாடு பண்ணிக் கொண்டிருப்பது எப்படியோ புரைசல் ஆகிவிட்டது. அம்மா போவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னா விருந்தே சதி நடந்துகொண்டிருக்கிறது. சாமாவுக்கு உள்ளே நரம்பு ஏதோ அறுந்தது. வீட்டை விட்டு ஓடிவிட்டான். 

சாமா, தன் அப்பாவைப் பற்றிப் பேசியது அன்றோடு சரி. அன்று தங்கியவன்தான். அவனைப் போவென்று சொல்லவே தோன்றவில்லை. ஸரிமாகரி ஸரிகரிஸா குழந்தைக்கு ஆரம்ப சிக்ஷை மலகரி வர்ணம்போல் விஷயம். அவ்வளவு சுலபமாக, எளிமையாக, இயற்கையாகத் தன் வழியில் தானே புரிவு கண்டுவிட்டது. (அல்லது கண்டு கொண்டதாக) 

பிறகு ஒருநாள், கிணற்றடியில் சொக்காய்க்குச் சோப்பு போட்டுக்கொண்டே, சாமா ஏதோ பாட்டு முனகுவதைக் கேட்டுச் சபேசன் அவனை அழைத்து எதிரே உட்கார வைத்துத் ‘தாஜா’ பண்ணி வாய்விட்டுப் பாடச் சொல்லிக் கேட்டதும், பிரமித்துப் போனான். குரலா அது? கிட்டப்பா அம்சம். அஞ்சு கட்டையில் நீர்வீழ்ச்சி கொட்டிற்று. இடை யிடையே மின்னல்கள், ஏதேதோ கலர்கள்.. 

புதையல் கண்ணில் பட்ட பிறகும், வீணாய்ப் போகக் காண்பது பாடத்தில் சேர்ந்தது என்று சபேசனுக்குத் தோன்றிவிட்டது. அன்று மாலையே குருநாதர் படத்தை இருவர் நடுவே வைத்துக்கொண்டு பாடம் ஆரம்பமாயிற்று. கரையில் கிடந்த மீனை அலையில் சேர்த்துவிட்ட மாதிரி பையன் வெள்ளத்தில் நீந்தினான். 

அம்மா பாடுவாளாம். வீணை வாசிப்பாளாம்! 

அன்றைய சிட்சை முடிந்ததும், சபேசன், “சரி சாமா நாளையிலிருந்து நீ என் வேஷ்டியையும், மன்னி புடை வையும் தோய்த்துப் போட வேண்டியதுதான். குடலை வாங்கித் தாரேன். எங்கிருந்தாலும் பூப்பறிச்சுண்டுவரணும், தெரிஞ்சுதா? நான் பூஜை பண்ணாவிட்டாலும், அவளுக்குக் கொண்டைக்காச்சு. 

சாமா முகத்தில் குங்குமம் பீரிட்டது. கை கூப்பிக் கொண்டான். நாத் தழுதழுக்க: ‘அண்ணா உங்களுக்கும் மன்னிக்கும் நான் என்னதான் செய்யக்கூடாது? செய்யக் கூடாததை மட்டும் சொல்லிக்கொடுங்கள். தெரியாத்தன மாகச் செய்துவிடப் போகிறேன்.” அதரங்கள் நடுங்கின. 

சபேசன் குரல் தாழ்ந்து, சாமா, நீ உன் அம்மா பாச்சி ரொம்பக் குடிச்சுட்டிருக்கே.” 

“நான் இங்கே இருக்கேன். கெக்கே பிக்கே சித்தே நிதானமாக இருக்கட்டும்.” 

இருவரும் திரும்பினர். கௌரி குத்துவிளக்கின் சுடரைத் தூண்டிக்கொண்டிருந்தாள். 

‘அம்மா தாயே நீ இருக்கையா?’ 

இருவரும் கைக் கூப்பினர். ஒருவன் கேலியாக, மறுவன் உண்மையில். 

விளக்கைத் தூண்டும் கௌரி. 

என்னை இருளிலிருந்து மீட்ட கௌரி.

என் அம்மா பேரைத் தாங்கும் கௌரி. 

அவளும் அவள் தாயை இழந்து இன்னும் ஆறுமாத மாகாத கெளரி. 

அம்மாவின் இஷ்டக் கலர் என்று அன்று நான் கொடியி லிருந்து உருவிய புடைவையை இன்று உடுத்துக்கொண்டிருக்கும் கௌரி. 

ஆனால் மூட்டங்களிலிருந்து சாமாவால் முற்றும் விடுபட முடியவில்லை. சமயங்களில் மாலை வேளைகளில் தூரத்து விளிம்பை வளைக்கும் ரெயில் பாதையைச் சிந்தித்த படி, பின்னால் கை கோத்த வண்ணம், தன்னையிழந்து அவன் நிற்கையில், அந்தக் கண்களுள், பின்னால், பின் னுக்கும் அப்பால். வெகு வெகு அப்பாலில், கடல் வீக்கத்தின் மேல் ஒரு காகிதக் கப்பல் தத்தளிப்பது, பார்க்கத் தெரிந்தவர்களுக்கு, பார்க்க மனமும் இருப்பவர்களுக்குத் தெரியும். அதன் கிழிந்த பாய்மரத்தில், நக்ஷத்திரங்களில் மூன்று எழுத்துக்கள் பொறித்திருந்தன. 

அம்மா! 

சாமாவுக்கு உத்தியோகமும் சீக்கிரமே கூடிவிட்டது. அதெல்லாம் ஒரு முகராசி.சபேசன் சிபாரிசு. சபேசன் வேலை பார்க்குமிடத்திலேயே. பின்னே என்ன இந்த நாளில், சங்கீதத்தையே வயிற்றுப் பிழைப்புக்கு முழுக்க நம்ப முடியுமா? அதுவும் இந்த நாளில்…சங்கீதார்ப்பணம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. சபேசனின் பல புழுக்கங் களில் இதுவும் ஒன்று. இப்போது நாடு பூரா நடந்துகொண் டிருப்பது வயிற்றுப் பிழைப்பா, வயிற்றெரிச்சலா? 

ஒரு ஞாயிற்றுக்கிழமை சபேசன் ஸலூனுக்குப் போய் விட்டுத் திரும்பி வந்தான்; தலைவெட்டிக் கொள்ளாமலே, ‘படா’ வெறுப்பில் இருந்தான். 

“டே, சாமா எங்கேருக்கே? வா இங்கே. ஒரு கத்திரிக் கோல், சீப்பு, கண்ணாடி, ஒரு நியூஸ் பேப்பரும் கொண்டு வா, இன்னிக்கு நீ எனக்கு வெட்டணும், பிறகு நான் உனக்கு வெட்டுவேன். இதிலே சங்கதிகள் வக்கிரம் ஏதும் வேண்டாம். பிடரியையும் காதோரத்தையும் கொஞ்சம் கவனி போதும். இதுக்கு அவனுக்கு அஞ்சு ரூபாய் வேணுமாம். இதுக்கு எனக்கு முன்னால் பத்துபேர்’ ‘க்யூவி’லே காத்திண்டிருக்கா. ஊம், ஊம். ஆகட்டும்.” 

கெளரி அடித்துக்கொள்கிறாள். சுவாமி படம். குலாசாரம்,கிருத்திகை – யார் அவளைக் காதில் போட்டுக் கொள்கிறார்கள்? 

சபேசனுக்குப் பட்டாபிஷேகம் ஆனதும் அவன் சாமா வுக்குப் பண்ணினான். சாமாவுக்குத் தேவைகூட இல்லே. ஆனால் சபேசனுக்கு ஆத்திரம் அவ்வளவு. 

இரண்டுபேரும் கிணற்றடியில் வந்து நின்றார்கள். திட்டு ஓயாமலே கௌரி சாமாவை முதலில் உட்காரச் சொன்னாள் 

“ஏன், இங்கேயும் நான் க்யூவா?”

ஆம்படையான் தலையில் ஆம்படையாள் கொட்ட வாகாது! சாமா உங்களுக்கு ஸ்நானம் பண்ணிவைக்கட்டும். எது இந்த நாளில் மலிவு? தலையைச் சுத்தி அவன் கேட்டதை எரிஞ்சுடறதுதானே? இருக்கும் விலைவாசி அவனுக்கு இல்லையா? ஏதோ இந்தமட்டுக்கும் மிச்சம் பிடிச்சுட் டேளே?” 

“ஆமாம். நான் இப்படியெல்லாம் மிச்சம் பிடிக்கறதை ஈடு பண்ணத்தான் ஒருநாள் விட்டு ஒருநாள் எண்ணெய்க் கடாயை அடுப்பில் ஏத்தி ஆறதே! பஜ்ஜி, பக்கோடா மசால் வடை, ஓமப்பொடி, அடை, சிப்ஸ், எல்லாம் வதக்கல்தான். வேகவைச்சுப் பண்றதுன்னு ஒண்ணு இருக்கு என்பதே உனக்கு மறந்துபோச்சு என்று நினைக்கிறேன்.” 

“ஆமாம், அத்தனையும் என் ஒண்டி வயிற்றுக்குக் கொட்டிக்க. நாக்கைக் கொட்டிண்டு திங்கறதில் குறைச்சல் இல்லை. கடைசியில் அரைச்சவளுக்கு ஆட்டுக்கல். வார்த்த வளுக்குத் தோசைக்கல்.”

“அட, நல்லாயிருக்கே கதை? பண்ணினால், தின்க றோம்! தொட்டி முற்றத்தில் தூக்கி எறியச் சொல்கிறையா?” 

“சரி, அப்படித்தான் போங்கோ. காய்கறிகள் இந்த நாள் ருசிதான் மாறிச்போச்சு. கண்ணாலே யாவது பளன்னு பார்க்கப்படாதா? ஆத்துக்காரரும் தம்பியும் சம்பா திச்சுக்கொண்டுவந்து போடறப்போ இந்த உரிமைகூட இத்தனை நாள் கழிச்சு எனக்கு இருக்கக் கூடாதா?” 

“தம்பியா? அது யாருடா, தம்பி?” 

“இதோ இவன் தான்!” சாமா தலையில் ‘ணக்’ கென்று குட்டினாள். வேறு பிறந்தாத்து உறவு எனக்கென்ன தட்டுக் கெட்டுப் போறது? 

“ஓஹோ அப்படிப் போறதா விவகாரம்?” 

“அண்ணா, உங்களை நான் அண்ணா என்கிறேன், அப்போ அக்கா எனக்கு மன்னியா? அக்கா, உங்களை அக்கா என்கிறேன். அப்போ அண்ணா எனக்கு அத்திம்பேரா?” சாமா முகத்தில் உண்மையாகவே குழப்பம் தெரிந்தது. அதில் எப்பவுமே ஒரு மதலைத் திகைப்பு. ஜாடையாகத் தான். ஆனால் அதைவிட்டு அவன் வளரவே முடியாத மதலை. 

“அதோ அந்தப் பாட்டியைக் கேளு.’ 

“அதன் பேருதான் முறை தெரியாக் கதை!” என்று பதில் அளித்துக்கொண்டே கெளரி வாளித் தண்ணீரைத் திடுதிப்பெனத் தலையில் ஊற்றினாள். 

இதுபோல் சமயங்களை மறக்க முடியுமா? 

அந்தச் சமய மலர்ச்சியில் நாம் ஆயிரம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், சமயங்கள் மறக்கத்தான் இருக்கின்றன. அப்பப்போ. அப்பப்போ-அதுதான் சமயம். சமயம் நின்றவிடத்தில் நின்றுவிட்டால் உலகம் எப்படி நகரும்? இரவு பகலாவது எப்போ? பிறப்பு, வளர்ப்பு, சாவு. நல்லது, பொல்லாது, கலியாணம், கார்த்தி மறுபடியும் குழந்தைகள்…பழையன கழிதலும் புதியன புகுதலும் நினைவும் மறதியும் ஒன்றுக்கொன்று மாற்று. நினைவு மறதி யின் அடிவயிறு. 

மருமகளே, மருமகளே வா வா!” கௌரி, உற்சாக மாக, பரவசத்தில் பாடினாள். வலது காலை முன் எடுத்து வாழ்விக்க உள்ளே வா -” உள்ளே வந்ததும் மணப் பெண்ணை இறுக அணைத்துக்கொண்டாள். அவளுக்குக் கண் கலங்கிற்று. 

“ராஜி, தெரியுமோன்னோ? நான் உனக்கு மாமியார் இல்லே; ஓர்ப்படிதான்.” 

”ஓஹோ, இப்படி ஒரு சங்கதியா?’ சபேசன் குரலில் ஏளனம் ஒலித்தது. 

“அப்போ மன்னி, நீங்கள் இவளுக்கு ஓர்ப்படி. ஆனால் எனக்கு அக்கா இல்லையா?” 

சாமாவின் குரலில் மெய்யாகவே ஒரு குழப்பம் தெரிந்தது. கௌரிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. 

“‘அக்கா, அவர் என்ன சொல்கிறா?” 

“ரெண்டு பேரும் சேர்ந்து கூத்துலே கோமாளி பண்ணறா — சங்கீதக்காரர் வேறே. அதிலும் சபேசன் சகோதரர்கள் வேறே. கொஞ்சம் ஒருமாதிரியாத்தான் இருப்பா. பயப்படாதே.” 

“அப்போ எங்களுடைய ராச்சாப்பாடு ராத் தங்கல் இன்னிலேருந்து ரூட் 20பி யா?” 

“சரி, சரி போதும் உள்ளே வாங்கோ” கௌரி சற்றுச் சிடுசிடுப்பாகத்தான் இருந்தாள். “அவள் ஏற்கெனவே மிரண்டிருக்கா. உங்கள் பேச்சு நடை புரிய இன்னும் கொஞ்ச நாளாகணும். திஸ்ரம், கண்ட ஜாதி திரிபுடை-” 


அம்மா! 

பழைய நினைவுகளின் சுழல் அவளை மெதுவாய் உள்ளிழுக்கையிலேயே, கௌரி பக்கத்தில் ராஜி முகத்தை ஓரக்கண்ணால் கவனித்தாள். ராஜி அசாத்திய அழகில் பொலிந்தாள். அவளுடைய சுபாவமே அவள் உள்ளுக்கு முறுக முறுக முகம் மெருகிட்டது. இது கௌரி கண் கண்ட அநுபவம். ஆனால் அவள் வெதும்பலுக்கு காரணந்தான் சரியாகப் பிடிபடவில்லை. பாவம்,சாமா. நாளுக்கு நாள் பாவம், பாவம் சாமா! கெளரி உதட்டில் புன்னகை. ஆனால் கண்களில் சங்கடம் முற்றும் மறைக்க முடியவில்லை. 

அன்றிரவு, கௌரியின் கவலை வீண்போகாமல், ராஜி வெடித்தாள். 

“உங்களுக்குச் சொந்தமாக ஆன அந்த ஒரு நிமிஷத் தையும் அவர் காலில் காணிக்கையாகச் சேர்த்துட்டேள். உங்களுக்குத் தனியாகப் பிரகாசிக்கணும் என்கிற ஆசையே கிடையாதா?” 

“என்ன சொல்றே ராஜி, எனக்குப் புரியல்லையே! 

“உங்களுக்கு ஒண்ணு ணுமே புரியாது. உங்களுக்குச் சொந்தம்னு எதுவுமே கிடையாதான்னு கேட்கிறேன். இடுப்பு வேஷ்டி ஏது?” அண்ணா கொடுத்தார்.” இந்தச் சொக்காயை இதுவரை நான் பார்க்கல்லியே?’ அண்ணா வோடது. தனக்குச் சின்னதாப் போயிடுத்துன்னு கொடுத் தார். “கச்சேரி சன்மானத்தில் உங்க ரெண்டு பேருக்கும் சம பங்கா? எனக்கென்ன தெரியும்? அண்ணா கொடுத்தது அவர் என்ன கொடுத்தால் என்ன?” கேட்டுக் கேட்டுக் காது புளிச்சுப்போச்சு. நீங்கள் புதுசா வேட்டி வாங்கினாலும் அவர் கட்டி அவிழ்த்துப் போட்டதைக் கட்டிண்டால்தான் உங்களுக்குக் கட்டிண்ட மாதிரி இருக்கு? இல்லையா?” 

சாமா புன்னகை புரிந்தான். “ராஜி உனக்கும் புரியாது. ஆனால் புரியாமலே உண்மையை இவ்வளவு தெளிவாகச் சொல்ல எப்படி முடிகிறது? 

“எனக்குப் புரிஞ்சவரைக்கும் போதும். நாம்தாம் தனியா வந்துட்டோமே. ஆனால் உங்கள் வாசம் பூரா ஏன் அங்கே? காலையில் சாதகம்னு போயிட்டு வந்து அவசர அவசரமா அள்ளிப் போட்டுண்டு ஆபிசுக்கு ஓடறது. சாயந்திரம் ஆபிசிலிருந்து நேரே அங்கேதான் ஆஜர். ராத்ரி பத்துமணிக்கு வந்து கதவைத் தட்டறது. இங்கே நான் மெனக்கெட்டு ஸ்பெஷல் சமையல் பண்ணி வெச்சுண்டு காத்திருந்தால், சாப்பிட்டுட்டு வந்துட்டேன்கறது. அந்தப் புளிச்ச பழையதும் சுண்டக்குழம்பும் உங்களுக்கு மணக்கறது அங்கே என்ன பூனைக்குட்டி மாதிரி சதா சர்வமும் அவர், காலையே சுத்திண்டு? எனக்குப் பிடிக்கல்லே. ஆமாம், கொஞ்சம்கூடப் பிடிக்கல்லே! முறுக்கேற்றத்தில் அவள் குரல் கிறீச்சிட்டது. 

சாமா தோளைக் குலுக்கிக்கொண்டு வாளாயிருந்து விட்டான். இவளுக்கு என்ன பதில் சொல்ல முடியும்? இவளுக்கு என்ன புரியும்? அவனுக்கே புரியவில்லை. இன்று அவன் நாக்கில் அந்தப் பாட்டு காத்திருப்பானேன். ரீதி கௌளையில் வேறு உருப்படிகள் தானா இல்லை?-த்வைதமு ஸுகமா, தத்வமறியதாமா, நனுவிடசி,பாதலீகதீரா – இதே ஜனனி நினுவினா’ மறுபடியும் இதே மாதிரி அமையுமோர் இல்லை, இன்றைக்கு அதில் விதி கலந்திருந்தது. 

தாரமும் குருவும் தலைவிதி. 

அண்ணா என் குரு பாக்யம். 

ராஜி-ஹும்! அண்ணா அப்பவே ஜாதகப் பொருத்தம் போறல்லேன்னா, ஆனால் நான் ஆசைப்பட்டேன். நான் ஆசைப்பட்டேன்னு தெரிஞ்சதும் என் ஆசைக்குக் குறுக்கே நிக்கலே. படறேன். படவேண்டியதுதான். பாரேன், ஈரம் பட்ட மின்சாரக் கம்பி மாதிரி ஏன் இப்படிச் சொட சொடக் கறாள். எரியறாள்? அப்போ கண்டது ரூபம். இப்போ காணறது சொரூபம், காணக் காண இனி சொரூபந்தான். 

சாமாவுக்குச் சிரிப்பு வந்தது. 

என்ன சிரிக்கறேள்? 

சாமாவுக்குச் சிரிப்பு பீறிட்டுக்கொண்டு வந்தது. 


The trough of low pressure on the bay …

கௌரி எரிச்சலுடன் வானொலி வாயை அடைத்தாள். ‘ட்ரஃப்” ஆம்! எந்த மாட்டுக்குக் கழநீர் கலக்கி வைக்கிற ட்ரஃப்! நேற்று மாலை வரை சோடையே தெரியவில்லை. ஆனால் இன்னிக்கிக் காலை பிடிச்சது இன்னும் விடவில்லை. 

அதுவும் ஞாயிறு காலை பிடித்தால் வாரம் பூரா விடாதாமே! வீடு விடிஞ்சாப்போலத்தான்! சொட்டலுக்கு அங்கங்கு தானே வைத்திருக்கும் ஏனங்களை ஓரக் கண் கண்டு கௌரி அதைரியமுற்றாள். சொட்டலா? அப்படி அப்படியே ஊத்தறது. சமையலறையில் மேலண்டைச் சுவர் கண்ணீர் வடிக்கிறது. Gas அடுப்புப் பாழ்தான், தரை தெப்பல், சொந்த வீட்டுக்கு அவர் பட்ட ஆசையைக் கண்டுகொண்டு தரகன் பண்ணினது துரோகம்; தலையில் கட்டிவிட்டான். சும்மா, அங்கங்கே ஒட்டுப் போடக் கை வெச்சால் ரூவா மூணு எகிறும். எங்கே போறது? 

கௌரி எழுந்துபோய்க் காற்றிலடித்துக் கொள்ளும் ஜன்னலை மூட முயன்றாள். சட்டத்துக்கும் சுவருக்கும் விட்டுக்கொண்டதால் கதவு மக்கர் பண்ணிற்று. மின்சாரம் ‘கோவிந்தா’. இங்கேயே முணுக்குன்னாலே விளக்குக்கு மங்களம். குத்துவிளக்கை ஏற்றிக் கூடத்தில் வைத்துவிட்டு ஊஞ்சலில் உட்கார்ந்தாள். ஊஞ்சல் முனகிற்று. 

லோகம் துரோக மயம். அவர் நேற்று இரவுதான் தஞ்சாவூருக்கு வண்டியேறினார். அங்கு நிலக் குத்தகைக் காரன் துரோகம். மூணு போகமா ஏமாத்தறான். அப்போத் தானே ஐயர்வாள் நிலத்தை அவன் சொன்ன விலைக்கு அவனுக்கு விற்றுவிடுவார்! விற்றேயாகணும். இப்படியே அவன் ஓட்டி ஓட்டிப் பெரிய பூமியாலே வளைச்சுப் போட் டாச்சு. இந்தத் தடவை விற்றுத் தொலைத்துவிடத்தான் சபேசன் போயிருக்கிறான். காலமே துரியோதனன் காலத்தி லிருந்தே துரோகத்துக்குத்தான். ‘ஊசிமுனை குத்தளவுக்குக் கூட மண் தரமாட்டேன். நம்மைப்போல வாயில்லாப் பூச்சிகளுக்குக் கையாலாகாத கப்பிகளுக்கு, குத்துவிளக்குத் தான் துணை. சுவாமி அலமாரியில் சம்புடத்திலிருந்து உதிரி விபூதியெடுத்து நெற்றிக் குங்குமத்தின் கீழ், நாசிப் பள்ளத் தில் இட்டுக்கொண்டாள். 

மழையின் போக்கைப் பார்த்தால் இது வெறும் அம்பத்தூர் ஸ்பெஷலாகத் தோன்றவில்லை. அப்படி ஒன்று உண்டு; அவர்கள் வீட்டைச் சுற்றி மட்டும் சேறாக்க. 

கணக்கிட்டால், மழைக் காலத்தில் மழையென்னவோ மிஞ்சி மிஞ்சிப் பத்து நாட்களுக்கு மேல் இல்லை. ஆனால் சறு காய ரெண்டு மாதம். வெளியே போகையிலும் உள்ளே வருகையிலும் சேறு பூட்ஸ் போட்டுக்கொள்கையில் அந்த இரண்டு மாதங்களில் உலகமே ‘சீ’ 

நேற்று வரை வெயில் தாளமுடியவில்லை. இந்தக் கோடையே கொடுமைதான் 

அவள் அப்பா பள்ளிக்கூட வாத்தியார். அவர் பாடம் சொல்கையில் அவள் கேட்டிருக்கிறாள். 

“கலிமுற்றி, கடைசியாக ப்ரளயம் ஏற்படும். மழை கொட்டுக் கொட்டெனக் கொட்டும். மூணு நாள் கொட்டி உலகமே அழியும். ஆனால் மழை வருவதற்கு முன்னால், நாற்பது நாட்கள் வெயில் அப்படிக் காயுமாம் பதினெட்டுக் சூரியர்கள் கண்ணுக்கே தெரியுமாம். “டேய் குசவா வகுப்பில் ஓர் உடையார் பையன்- “சூளைக்கு நல்லதாச் சுன்னு நீ பாட்டுக்குப் பானையை அடுக்கிடாதே. தண்ணிடா அத்தனையும் தண்ணி. மழை அப்படித்தான் பெய்கிறது. 

அவர் ஊருக்குப் போய் அங்கே மாட்டிண்டிருக்கார். நான் இங்கே. சாமா அவன் வீட்டில். சாமா பலவிதங்களில் மாட்டிக் கொண்டிருக்கிறான். 

ராஜி படி மிதித்து உள்ளேவந்து அவர்கள் சேர்ந்திருந்த அந்தப் பதினைந்து நாட்களுக்குள், கௌரி ராஜியைப் புரிந்து கொண்டுவிட்டாள். ஆனால் வெளிக் காட்டிக்கொள்ள வில்லை. சபேசனிடம்கூட. சத்தம் பண்ணாமல்,தானே தேடி அலைந்து, மூன்று தெருக்கள் தாண்டி, சாமாவுக்கு இடமும் பார்த்துவிட்டாள். சாமாவின் உரத்த ஆட்சேபங்களுக்கு அவளுடைய பதில் இதுதான்: 

“இதோ பார் சாமா, நீங்கள் சிறிசுகள். அவள் புதுசு. தம்முடைய குண்டுகளை அவள் எடை தாங்கமாட்டாள். அவளுக்குகந்த எடை மயிலிறகு, தங்க ரேக்கு, பாசிமணி குங்குமப்பூ பச்சைக் கற்பூரம், பட்டுநூல், இதுபோல நுட்பமான பண்டங்கள். இப்போ நீங்கள் தனித்துச் சந்தோஷமாயிருக்க வேண்டிய நாட்கள். தேனிலவு நாட்கள். அவளை அழைச்சுண்டு குற்றாலம்போ, கன்னியாகுமரியில் சூரியோதயம், அஸ்தமனம் பாருங்க. கோவளம் காட்டு, பிழைப்புப் பிரச்னைதான் எப்பவும் இருக்கு, அப்புறம் அவசியம் இருந்தால் இப்போ உன் மாதிரியே அவளுக்கும் மனசு அப்புறமும் இருந்தால், தேவி சித்தமும் இடம் கொடுத்தால்-‘ 

ஆல் ஆல் ஆல்…ஆல்களுக்குக் கணக்கேது? 

சபேசனே கேட்டுவிட்டான். “என்ன கௌரி ஒரே பிடிவாதமா அவாளை விரட்டி விட்டே?” கௌரி, மெஷினைச் சற்று முரட்டுத்தனமாகவே ஓட்டினாள். தையலின் மேல் அவள் முகம் கூடவே குனிந்தது. 

“நமக்குக் கலியாணமாகி நாலு வருடங்கள் சந்தோஷ மாக இருந்தோம். அப்புறம் சாமா வந்தான் அந்த ஏழெட்டு வருஷங்கள் அசல் கனவுபோலவே, மூவரும் நம்பமுடியாத சொர்க்கத்தில் வாழ்ந்தோம். ஆனால் கனவு கலையத்தான் இருக்கு. கலையறப்போ, என்று, எப்படிக் கலையுமோ என்கிற திகில் எனக்கு எப்பவுமே உண்டு. கலையற வேளை யும் வந்துடுத்து, கலைஞ்சுதானே ஆகணும்? கலைஞ்சது நமக்கு அதிர்ச்சியா இருக்கப்படாது. இந்தச் சமயத்துக்கு நமக்கு முக்கியம் அமைதி. அவாளுக்கும் அவாள் வாழ்க் கைன்னு வேண்டாமா?” 

லேசாக மூச்சு திணறிற்றோ? “உண்மையிலேயே அவாளிடம் நமக்கு என்ன உரிமையிருக்கு, நீங்களே சொல்லுங்கோ, சாமா, என்ன ரத்த சம்பந்தமா?” 

“அத்தனையும் கௌரி மகாத்மியம். நமக்கென்ன புரியறது? நான் பாட்டுத்தான் கத்துண்டேன். காலக்ஷேபம் கத்துக்கல்லே.” 

கேலி பண்ணினால் பண்ணிக்கட்டும். புருஷாளுக் கென்ன? கொட்டிப்போனால் இவாளா அள்ளப்போறா? அப்பவும் நம்மேல்தான் சீறி விழுவா. அது அது எவ்வளவு கொடுப்பனையோ அத்தோடு சரி என்கறதை இவா ஏன் புரிஞ்சுக்க மாட்டேன்கறா? 


வாசற் கதவைத் திறந்து கௌரி எட்டிப் பார்த்தாள்.. மின்னல் 

னல் வெளிச்சத்தில் அவள் கண்ட காட்சி…வாசற் படிக்கட்டில் மூணு முழுகியாச்சு. இன்னும் இரண்டு தாண்டி னால் வெள்ளம் உள்ளே; இத்தனைக்கும் அவர்கள் கட்டடம் நல்ல உயரம். வெள்ளத்தில் அலை ஒரு மாதிரியாக, குதிரைப் பிடரிபோல், ஒரு தனி எக்களிப்புடன் துள்ளி விழுந்தது. ஏரி உடைப்பெடுத்துக் கொண்டிருக்க வேண்டும். அடிவயிறு சில்லிட்டது. 

வாசலில் ஆசையுடன் வைத்திருந்தக் கல் வாழைக் கன்று, குரோட்டன்ஸ் எல்லாம் மானம் குலைந்து அலங் கோலம். அவள் கையாலேயே கட்டிய பிள்ளையார் கோவில் மூழ்கியாச்சு உள்ளே சுவாமி ஜல நித்திரை. 

பூமியே, பிரம்மாண்டமான ரஸகுண்டு வெடித்தது மாதிரி. 

கதவை மூடினாள். 

குத்துவிளக்கில் எண்ணெயை ஊற்றினாள். சுடர் கண்ணைக் கசக்கிக் கொண்டாற்போல் இருமுறை ஆடித் சமாளித்துக்கொண்டு நிலைத்தது. 

ஒரு பெரிய இடி மாடிமேல் நொறுங்கிக் காலடியில் தரை அதிர்ந்தது. 

“அர்ச்சுனப் பல்குன க்ரீடி நரசவ்யசாசி.” 

கதவு படபட – ‘யாராவது தட்டறாளா என்ன?’ 

இல்லை, காற்று. 

-இல்லே யாரோ தட்டற மாதிரிதானிருக்கு. இந்த மழையில் யார்? 

நிச்சயமாத் தட்டல்தான். 

“யார் – யாரது?” 

“நான்தான்.” 

ஒரு உருவம் உள்ளே வந்து நாய்போல் உதறிக் கொண்டது; அவள்மேல் ஜலம் தெளித்தது. 

”சாமாவா? சாமா, சாமா!” 

கௌரியின் குரலில் அழுகையோடு சிரிப்பு கலந்து உடைந்தது. 

“மன்னி, நீங்கள் சரியா இருக்கேளா?”

சாமாவுக்கு உடல் வெட வெடன உதறிற்று. 

“சாமா தெப்பமா நெனைஞ்சிருக்கையே! உடனே அவர் அறைக்குப் போய்த் துணி மாத்திக்கோ. இந்த மழையில் எப்படிடா வந்தே?” 

“உங்கள் நினைப்பெடுத்தது வந்துட்டேன். எப்படி வந்தேன்? எனக்கெப்படித் தெரியும்?” 

“சாமா, அவளைத் தனியா விட்டுட்டு ஏண்டா வந்தே?” 

“நீங்கள் தனியாயில்லையா? அதுக்காக வந்தேன். எப்படியிருக்கேள்?” 

“என்னடா, எனக்குத் தனியாயிருந்து பழக்கங்தானே! அவளை விட்டுட்டு வரலாமா? சிறிசு ஸ்னானம் வேறு பண்ணல்லே.” 

“அவள் கிடக்காள். நீங்கள் எப்படியிருக்கேள்?’ அவளை கண்கள் சுற்றும் முற்றும் ஓடின. டு ரொம்ப மோசமாம் போயிட்டாப் போலிருக்கே!” 

“இந்த மழைக்குக் குபேரக் கோட்டைகூடத் தங்காது.. சாமா, அவளை விட்டுட்டு நீ வந்திருக்கப்படாதுடா.” 

“மன்னி,நீங்கள் அவளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவளைப்பற்றி யாருமே கவலைப்பட வேண்டாம்.”

“என்னடா உளர்றே?” 

“இல்லை மன்னி. அவளைப்போல மனுஷாள் எங்கிருந் தாலும், எப்படியாகிலும், தங்கள் சௌகரியத்தையோ பத்திரத்தையோ குறைச்சுக்கமாட்டா. எதுக்கும் துணிஞ்சவா பெண் சிலந்தி.” 

கெளரிக்கு அடிவயிற்றில் பகீரென்றது. “என்னடா சாமா சொல்றே? கொஞ்சம் புரியும்படியா சொல்லேண்டா?” 

“புரியறதுக்கு என்ன மன்னி இருக்கு?” 

“அவள் உடம்பு விச்சாயிருக்கோளோன்னோ? ஏதேனும் அவளுக்கு நேர்ந்துடுத்தா?” 

“அவளுக்கென்ன? அவளுக்கொன்றும் நோவில்ல குத்துக்கல்லாட்டம் இருக்காள், தனக்கு நிகர் யாருமில் லேன்னு, கடபாறைக் கஷாயம். நேர்ந்தவர்கள் எல்லாம் நாம் தாம்.” 

“சாமா, நீ திரும்பிப் போயிடு. இந்த மழை இப்போ தைக்கு விடந்தாக இல்லை. அவள் தனியாக இருக்கம் படாது.” 

“போயிடறேன். எனக்கே தெரியும். ஆனால் மன்னி உங்களை ஒண்ணு கேட்கத்தான் வந்தேன்.” 

அவள் கண்களில் வினாத் துளித்தது. 

“மன்னி நீங்கள் எனக்கு மன்னியா? அக்காவா?” 

“கேள்வி கேட்க வந்த சமயத்தைப் பார்! இதென்ன உனக்குப் புதுக் கேள்வியா? நான் உனக்கு மன்னியா இருந்தா என்ன. அக்காவா இருந்தா என்ன? ரெண்டும் ஒண்ணு தானே! ஆ! இப்போ புரிஞ்சுடுத்து—” கௌரியின் விழிகள் திடீரென்று மூட்ட விலக்கத்தில் விரிந்தன. கண்ணகி விழிகள். 4‘நீ இப்போ ஏன் வந்தேன்னு. ஆனால் நம்மைப் பத்தி அவள் அப்படி நினைக்கல்லே இல்லையா? கிராதகி!” 

குத்துவிளக்கில் சுடர் சொட சொடத்தது. 

“இல்லை, நீங்கள் எனக்கு அம்மாவேவா?” சாமாவுக்கு அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. 

அவ்வார்த்தைகள் உள் இறங்கி அவள் மார்பில் பூரித்துக் கொண்டதும். கெளரி தன் வசமிழந்தாள். உடல் கிடுகிடென ஆடிற்று. பெற்றால்தான் தாயா? பெண்ணாய்ப் பிறந்தாலே யுகாந்த காலமாகக் கூடவே பிறந்த தாய்மை எங்கே போகும்? கௌரி தன்னை அழுத்திப் பிடித்துக்கொண்டாள். தள்ளாடித் தள்ளாடிப் போய் ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டாள். 

“எப்படியிருந்தாலும் சரி, சாமா நீ திரும்பிப் போயிடு. அவள் தனியா இருக்கப்படாது” 

அவள் தலை நிமிர்ந்து பார்க்கையில் சாமா அங்கு இல்லை. சாமா எப்பவோ போயாச்சு. 


கால் போன வழி சாமா சென்றான். வெள்ளம் காலில் கல்லைக் கட்டி இழுத்தது. ஓரிரு முறை சிறுசிறு குழியில் கால் வைத்து சறுக்கி விழ இருந்ததைச் சமாளித்துக்கொண்டு மேலும் நடந்தான். மனம்போன போக்கு இல்லை. கால் போன போக்கு. ஒவ்வொரு தூறலும் வாழைத்தண்டு தடுமன் கனத்தில் இறங்கிற்று. ஒன்றிரண்டு மின்சாரக் கம்பங்கள் குறுக்கே விழுந்து கிடந்தன. அந்த ஆபத்துகளை யெல்லாம் விலக்கிக்கொண்டு, கால்கள் ஜாக்கிரதையாகக் கொண்டு சென்றன. அதென்ன பாலமா? கைப்பிடிச் சுவரின் மேல் அமர்ந்தான். அடியில் வெள்ளத்தின் இரைச்சல். 

இந்த மழை இறைவனின் துயரந்தான். உயிரை லீலையில் படைத்துவிட்டு அதுகளின் கண்ணீரைத் துடைக்க வகையறியாமல்தான் இப்போ கண்ணீராய்ப் பெருக்கு கிறான். பிரயோசனம்? 

ஆ, அது என்ன? குனிந்து நோக்கினான். 

மின்னலில் ஒரு சோம்பல் தெரிந்தது. தோன்றிய சூட்டில் மறையவில்லை. தங்கித் தயங்கிற்று. பாலத்தின் கவானடியில் பாம்பு வாலைச் சுழட்டுவது போல் புரளும் வெள்ளத்தின் வீக்கத்தில், ஒரு காகிதக் கப்பல் தத்தளித்து அடித்துக் கொண்டு போயிற்று. அதன் பாய் மரத்தில் நக்ஷத்திரங்களில் மூன்று எழுத்துக்கள் பொறித்த்த்… 

“அம்மா!”

அந்த அலறலை அப்போதுதான் பாய்மரம்போல் விரிந்து இறங்கிய ஒரு சாரல் திரை அடித்துக்கொண்டு போய் விட்டது.

– நேசம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1989, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *