ஈசுவர லீலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 2, 2024
பார்வையிட்டோர்: 173 
 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முதல் நாள் பிரமாதமான புயல். அத்துடன் மழை. ஊரே நிர்த்தூளிப்பட்டது. காற்றுச் சுழன்று அடித்தது. ஆயிரம் பேய்களை அவிழ்த்துவிட்டதுபோல் ‘ஹோ ஹோ வென்று அலறிற்று. எங்கும் மரங்கள் முறிந்து விழும் சப்தம். சாலையில் தென்ன மரங்களும் குறும்பைகளும் மரக்கிளைகளும் விழுந்து கிடந்தன. சூரியன் போனவழி தெரியவில்லை. ஊர், புயலுக்குத் தப்பி யதே தாய்மார்கள் செய்த புண்ணியம். 

மறு நாள் காலைக்குள் புயல் நின்று போய்விட்டது. காற்றில ஒரு தெளிவும் வெளியில் ஒரு வெளிச்சமும் கலந்திருந்தன. சூரியன் வரலாமா என்று கேட்டுக்கொண் டிருந்தான். 

ஒரு வீட்டுத் திண்ணையில் இருவர் உட்கார்ந்திருந் தனர். உதடு மறையும்படி உயர்ந்த நீலக் கம்பளியால் ஒருவர் தலையில் முக்காடிட்டு உடலையும் மூடி இருந்தார். மாங்காய்ப் பானைக்கு வேடு கட்டியிருப்பதுபோல் நீலக் கம்பளிக்கு மேல் ஒரு மப்ளரால் தலையைச் சுற்றிக் கட்டி யிருந்தார்; கம்பிளி ஷர்ட்டும் போட்டுக்கொண் டிருந் தார். அவர்தான் இன்சினீயர் ஸ்ரீ வித்யா உபாஸக திலகம் மணி ஐயர். மற்றவர் ஒரு பெரிய ஸம்ஸ்கிருத வித்வான். பெரிய பெரிய சம்ஸ்தானங்களிலும் அரச சபைகளிலும் பொன்னும் தோடாக்களும் சம்மானம் பெற்றவர். சம்மானமாகக் கிடைத்த சிவப்புச் சால்வைகளில் ஒன்றை எடுத்து, மேலே போர்த்துக்கொண் டிருந்தார். அவருக்குக் குழந்தை குட்டி கிடையாது. அவருடைய வித்வத்தை உத்தேசித்து, ஒரு மஹாராஜாவும் ஒரு மடாதிபதியும் அவருக்குத் தாராளமாக மாதச் சம்மானம் அனுப்பி வந்தனர். 

இஞ்சினீயர் முகத்தைச் சுளித்துக்கொண்டு, தயங் கித் தயங்கி ஓர் ஏப்பம் விட்டார். உடனே “ராத்திரிச் சாப்பாடே ஜீர்ணமாகவில்லை” என்று அதற்கு வியாக்கி யானம் செய்தார். அதற்கு நேர்விரோத தமாக, உலகவிஷயங்களெல்லாம் (தன் ஜீரண விஷயம் உள்பட) வெகு திருப்திகரமாக நடந்து வருகிறதென்று சொல்வது போல் ஸம்ஸ்கிருத வித்வான் தடங்கலில்லாமல் ஒரு பெரிய ஏப்பம் விட்டார்.

‘நேற்றைப் புயலைத்தான் ஈசுவர லீலை, பராசக்தி, தாண்டவம் என்று சொல்லவேண்டும். அந்த அந்த சக்தியின் லீலையைப் பார்க்க எவ்வளவு கொடுத்து வைத் திருக்க வேண்டும்!எவ்வளவு கண்கள் வேண்டும்!” என்று சொல்லி உள்ளம் பூரித்தார் இஞ்சினியர்.

இதைத்தான் நமது வேதத்தில், “நமஸ்தே வாயோ; த்வமேவப் பிரத்யக்ஷம் பிரும்மாஸி” என்று அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்’ என்று வித்வான் கூறிவிட்டுக் கண்களை மூடிக்கொண்டார்.

அப்பொழுது ஈனஸ்வரத்தில், ‘சாமியாம் சாமி! கம்மனாட்டிக் காத்து! அதுக்குப் பைத்தியம் கியித்தியம் பிடிச்சூட்டாப்பலே இருக்குது” என்று ஒருவன் தனக் குத்தானே பேசிக்கொண்டு தெருவில் சென்றது இவ்விரு வர்களின் கவனத்தையும் பிடித்திழுத்தது. வித்வான்கள் வருணித்த, ‘ஈசுவர லீலையைப் பயித்தியமாக்கி, ‘பிரும் மத்தை’க் ‘கம்மனாட்டி’யாக்கி விட்டானல்லவா, அந்த ஏழை!

அவன் இடுப்பில் மூன்று முழக் கந்தலும், தோள் மீது ஒன்றரைமுழக் கந்தலும்; ஓர் எலுமிச்சங்காய் புதைக்கக்கூடிய குழியில் அவன் கண்கள் கிடந்தன. பார்வையோ பஞ்சடைந்த சவப்பார்வை. கன்னங்கள் வாழைச் சருகுபோல் காய்ந்திருந்தன. அசிரத்தையாகப் பார்த்தால் எலும்புக்கூடு நடந்து வருவதாகத்தான் தோன்றும்.

அவனுடைய பேச்சைக் கேட்டதும் இருவரும், ‘நாஸ் திகப் பயல்’ என்று மனத்திற்குள் நினைத்துக்கொண்டார்கள். வந்தவன், “சாமி! கண் பஞ்சடையுதுங்க. காது கும்முன்னு இருக்கு; நேத்து முழுக்கச் சுத்தப் பட்டினி. கொஞ்சம் சோறுபோட உத்தரவு பண்ணுங்க” என்று உதறிய குரலில் கெஞ்சினான். 

இஞ்சினீயர் தம் மனைவியைக் கூப்பிட்டு, “ஏதாவது பழையது கிழையது இருந்தால் கொண்டுவந்து போடு” என்றார். அந்த அம்மாள் கொஞ்சம் பழையதும் இரண்டு பச்சை மிளகாயும் உப்பும் கொண்டுவந்து போட்டாள். 

”அம்மா, தாயே! இது பத்தாதுங்க. கொஞ்சம் நீராரத்துலே ஒரு கல்லு உப்புப் போட்டுக் குடுங்க. அப் போத்தான் காது அடச்சது விட்டுப் போகுமுங்க.’ 

“பாத்திரத்தை ஒன்கிட்டக் குடுத்தா, யாரு அதை அப்புறம் அலம்பறது? சரிப்படாது போ.” 

”அம்மா. அம்மா! கோடி புண்யம் உண்டுங்க. பாத்த ரத்தைக் குடுக்க வேண்டாம். கையிலே ஊத்துங்க; குடிச் சூடறேன். மஹராஜியா இருப்பீங்க!” என்று பல்லைக் காட்டினான். 

அதன் பேரில் நீராரத்தில் ஒரு உப்புப் போட்டு அவன் கையில் அந்த அம்மாள் ஊற்றினாள். 

“அம்மாடா காதடைப்புப் பளிச்சுன்னு விட்டுச் சுங்க. நீங்க நல்லா இருக்கணும்” என்று கும்பிடு போட் டான், நீராரத்தைச் சாப்பிட்டுவிட்டு. 

இஞ்சினீயரின் மனம் உருகிவிட்டது.”யாரப்பா நீ?” என்றார். 

“திருவாலூருங்க. பேர் திருவேங்கடம்.” 

“உனக்குப் பெண்டாட்டி,பிள்ளை இருக்கா?” 

“இல்லீங்க’ 

“தொழில்?” 

“கூலிவேலை?” 

“சரிதான். இங்கே எங்கே வந்தே?” 

“எனக்குப் பாண்டுங்க. இந்த ஊர் ஆஸ்பத்திரீலே இருந்தேனுங்க. நேத்துச் சாயங்காலமா வீட்டுக்குப் போகலாம்னுட்டாங்க. எனக்கு ஊடேது? அது மொதல் கொண்டு இந்தப் பொசல்லேயும் மழையிலேயும் மாட்டிக் கிட்டேனுங்க. சோறே இல்லீங்க.” 

“பொசல் அடிச்சபோது எங்கே இருந்தே?” 

“இந்தத் தெருக்கோடீலே பாழும் திண்ணை இருக்கே; அதுலெ.அப்பிடியே மொழங்காலைக் கட்டிக்கிட்டு, ஈர வேட்டியை வவுத்துலே போட்டுக்கிட்டு, குட்டுக் குட்டுன்னு உக்காந்திருந்தேனுங்க. ராவெக்கிப் பத்து மணி இருக்கக் குள்ளற ஒரு மாடு வேறே திண்ணைக்கு வந்து சேர்ந்ததுங்க. அதை நான் வெறட்டினால் போகுதா? ஹும்ஹும்! என் கால் மேலேயே அடி வச்சூட்டுது. இதப் பாருங்க காயம். வவுத்துலே மிதிச்சுது. அத்தோட இந்தாண்டெப் பக்கத்துச் சுவர் வேறே றே விளுந்து திண்ணைத் தூ ண் நொறுங்கிப் போச்சு. இந்தாலே கையிலே கல்லு விளுந்து சிராச்சு இருக்குப் பாருங்க. நான் தப்புச்சதே பெரிசுங்க… ஹும் … போயிட்டு வறேன்; ஒங்களுக்குக் கோடி கோடி நமஸ்காரம் சாமி.” 

“ஆஹா,போயிட்டுவா அப்பா” என்றார் இஞ்சினீயர்.

“பார்த்தீர்களா திருவேங்கடம் சொல்லுவதை” என்றார் வித்வான். 

“பராசக்தியின் ஒரு கண் புயல் என்கிறோம். மற் றாரு கண் கருணை என்கிறான் திருவேங்கடம்” என்றார் இன்சினீயர். 

– மாங்காய்த் தலை (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1961, கலைமகள் காரியாலயம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *