ஈசாக்கு
கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 1, 2026
பார்வையிட்டோர்: 100
(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கூரை தாழ்ந்த அந்தக் குடிசையில் இருந்து வெளியே வந்த ஈசாக்கு பிடரியைச் சொறிந்துகொண்டு தெற்கும் வடக்கும் பார்த்தான். மழை நீரில் கரைந்து பங்கறை பட்டுக்கிடந்த படிப்புரையில் சாட்சாத் மகா விஷ்ணு போலச் சாய்ந்து அனந்த சயனத்தில் ஆழ்ந்திருந்தது தர்மப்பன்றி. அதன் காம்புக்கொன்றாய் பால் குடித்துக் கொண்டிருந்தன பன்றிக் குட்டிகள். ‘கீங்கீங்’கென்று சத்தமெழுப்பிக்கொண்டு மடுக் காம்புக்காய் சாடி மறிந்தன. சற்று நேரம் கவனித்த ஈசாக்குக்கு ஒரு கல்லை விட்டெ றிந்து அவற்றைக் கலைத்தால் என்ன என்று தோன்றியது.
குனிந்து, மழையில் நனைந்து கொவர்ந்திருந்த மண்ணாங் கட்டி யைப் படிப்புரையில் இருந்து பெயர்த்து எறியக் கை ஓங்கினான்.
‘ஏலே…ஏ நீக்கம்புலே போவான். அந்த வாயில்லாச் சீவனை ஏம்லே நொம்பலப் படுத்துக்கே? பள்ளிக்கொடத்துக்கு நேரமாயாச் சுல்லா… உண்டான கஞ்சித் தண்ணியைக் குடிச்சுக்கிட்டு பொஸ்தகத் தையும் தூக்கிக்கிட்டுப் போயேன் ஒளிஞ்சு…”
‘இது என்ன சீண்ட்றம் புடிச்ச எடவாடா இருக்கு’ என்று ஈசாக்குக் குத் தோன்றியது. ‘இனிம அம்ம நிக்க விடமாட்டாவ…
குடிசையின் முன்னால் ஆளுயர மேட்டில் ரோடு. கப்பி ரோடு என்று அரசாங்கப் பதிவேடுகள் வர்ணிக்கும் ஆற்றங்கரை மேட்டில் ஏறினான். துவர்த்து முண்டால் தலைப்பாவும் வேட்டியும் வெள்ளை உடுப்புமாக ஒருவர் சைக்கிளில் போனார். ஐம்பது வயசிருக்கும். அவர்மணிக்கட்டில் கடிகாரம் இருப்பதைக் கவனித்தான் ஈசாக்கு.
“அண்ணாச்சி…மணி என்னாச்சு?”
குரல் வந்த திக்கில் அனிச்சையாகத் திரும்பியவர் முகம் சற்று விகாரம் அடைந்தது. ‘இந்தப் பயவிள்ள நம்மட்ட மணி கேக்கதா? அதும் சுத்தமான வளித்துப்புரவுள்ள வெள்ளாளனை அண்ணாச்சிண்ணு கூப் பிட்டு… பொளந்து போச்சு என்று சத்தமில்லாமல் மனதில் நினைத்துக் கொண்டு, ஈசாக்கைத் தண்டிப்பது போன்று பதில் பேசாமல் அலட்சிய மாக சைக்கிளை மிதித்தார்.
ஈசாக்குக்கு கோபம் வந்தது. கார் ஓட்டுவதைப் போன்று கைகளை ஸ்டீயரிங்காக்கி, வட்டை வளைத்து ஒடித்து, “டுர்ர்… பூப்பாய்ங்… பூப்பாய்ங்…” என்று ஊதி முன்னோக்கிப் பாய்ந்தான். சைக்கிளை மெதுவாக மிதித்துச் சென்றவரை சைடு எடுத்து முன்னால் வளையமிட்டு திரும்பினான். அவர்காதில் விழும்படியாக ‘அட பிஸ்கி’ என்று கத்தி விட்டு ஓடினான்.
பெரியவர்திரும்பிப் பார்த்து, வட்டாரச் சொல்லகராதியில் இருந்து சில சொற்களைத் தெரிவு செய்து அவன் மூன்று தலைமுறையினரையும் திட்டினார். ஈசாக்குக்கு சிரிப்பாணி பொங்கியது.
மணி எட்டரைக்குப் பக்கம் இருக்கும். ஒன்பதுக்கு வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்தால் ஆறு ஃபர்லாங் தூரத்தில் இருக்கும் பள்ளிக்குப் போய் விட முடியும். குளிப்பதா வேண்டாமா என்பதைச் சிந்தித்தான். எப்படி யும் பல் தேய்க்க ஆற்றங்கரைக்குப் போகத்தான் வேண்டும்.
ஒரு ஓட்டத்தில் ஆறு. உமிக்கரியைத் தண்ணீரில் நனைத்து வாய்க்குள் திணித்து ஆட்காட்டி விரலால் வலமும் இடமும் இழுத்தான். திடீரென நினைத்துக் கொண்டவன் போல நிக்கரை அவிழ்த்து கரையில் வீசிவிட்டு, தண்ணீரில் சாடினான். இரண்டு மூன்று முங்குகளுக்குப் பிறகு வெறும் கையால் உடலின் அழுக்கைத் தேய்த்தான். குளிக்கவந்த மற்ற பையன்களோடு எசலிக்கொண்டு கரையேறி, நிக்கராலேயே தலையைத் துவத்தினான். ஈரத்தை உறிஞ்சசக்தியற்ற துணியில் திட்டுத்திட்டாக ஈரம்.
நாய்போல மூச்சிரைக்க ஓடி வீட்டை அடைந்தான். வீட்டில் தாயாரைக் காணோம். காலைக்களை பறிக்கப் புறப்பட்டுப் போயிருப் பாள். கஞ்சி கொண்டு போகும் சோத்துப்போணி இல்லை. புத்தகப் பையின் பக்கம் வெள்ளோட்டுக் கும்பாவில் மூடி வைத்திருந்த பழையது. பக்கத்தில் பீங்கான் தட்டில் நேற்று ராத்திரி வைத்த அயிரைக் குழம்பு. தடாலென கும்பாவின் முன் குத்தவைத்துக் கஞ்சி குடிக்க ஆரம் பித்தான். குடிசை வாசலில் நிழலாட்டம். தலையை உயர்த்தி யாரெனப் பார்த்தான். வெள்ளச்சி. “போ… போ… ஒண்ணுங் கெடையாது இண் ணைக்கு. எனக்கே காணாது… உனக்கு எங்கேருந்து ஊத்த?”
விரட்ட விரட்ட வெள்ளச்சி அசையாமல் வாலை இட வலமாக விசையுடன் ஆட்டியது. ஆட்டும்போது முன்பு பால்மடுவாக இருந்து இப்போது தோல் பாய்ந்துபோன காம்புகள் அசைத்தன. பரிதாபமாக இளித்தது வெள்ளச்சி. “இதுதாலா உங்கிட்டே பெரிய எளவு… கஞ்சி குடிக்க நேரத்துக்கு வந்திருகே… போச்சொன்னாலும் போமாட் டங்கே…” எரிச்சலில் இரைந்தான் ஈசாக்கு.
இரைந்தாலும் மனசு கேட்காமல் கைப்பிடி அளவு சோற்றுப் பருக்கையும் கொஞ்சம் தண்ணீருமாக மீதம் வைத்து வாசலில் நெல் குத்துவதற்காகப் பதித்திருந்த கருங்கல் வரி மீது ஊற்றினான்.
வெள்ளச்சி அவசரமாக வழிந்தோடும் கஞ்சியை நக்கிக் குடித்தது. கல்லைத் தண்ணீர்விட்டு கழுவியது போல வள்ளிசாக நக்கிவிட்டு அவனை உராய்ந்தது.
“ஆமா… கஞ்சி ஊத்தினா கொஞ்ச வந்திரு… போ மூதி…ஆக்கக் கெட்ட அக்கா…” என்று காலால் எத்தி விட்டுக் குடிசையினுள் நுழைந் தான்.
புத்தகப்பையைத் தலைகீழாகத் தூக்கிக் கவிழ்த்து, ஏழாம் வகுப்புப் பாடப்புத்தகங்களையும் நோட்டுக்களையும் மீண்டும் ஒரு முறை எடுத்து அடுக்கினான். வீட்டுக் கணக்கில் இரண்டு செய்ய விடுபட்டுப்போனது நினைவு வந்தது. ‘கிளாசில் போய்ச் செய்துக்கிடலாம். சவத்தை விடு…’
துணிக்கொடியில் நான்று கிடந்த கந்தல்கள், அப்பாவின் வேட்டி, அம்மாவின் கண்டாங்கி, துவைத்து உலர்த்தியது இடையில் நெரிந்து கிடந்த சட்டையைத் தேடி எடுத்து உதறி, அதனுள் நுழைந்தான். மேலே இருந்து மூன்றாவது பட்டனைக் காணோம். பைக்குள் கிடந்த ஜாமெட்ரி டப்பாவைத் திறந்து அதில் இருந்த துருப்பிடித்த குண்டூசியை எடுத்து சட்டையில் கோர்த்த பிறகு திருப்தியாயிற்று.
இடது தோளில் பையை மாட்டி, இடது கையால் கொக்கி போட்டுப் பிடித்து, குடிசையில் இருந்து வெளியே வந்து கதவைச் சாத்தினான். கொண்டியைப் போட்டு, கையிலிருந்த பூட்டைச் செருகி, ‘டபக் கென அழுத்தினான். இனிமேல் அம்மாவோ அப்பாவோ வந்து திறப்பார்கள். சாவி இல்லாவிட்டால் கூடப் பாதகமில்லை. சிறிய வெட்டாங்கல் எடுத்து பொருத்தில் தட்டினால் போதும். வாய் பிளந்து விடும்.காக்க ஏதுமில்லை, காவலுமில்லை, ராம ராச்சியம்.
வீட்டை விட்டு வெளியே வந்து, ரோட்டில் ஏறி பள்ளிக்கூடம் வரை போவதற்கு வேறு யாராவது துணைக்கு அகப்படுவார்களா எனத் தேடி னான். தூரத்தில் இசக்கிமுத்து வருவது தெரிந்தது. எதற்கு எடுத்தாலும் கறட்டு வழக்குப் பிடிப்பவன். அவனுடன் போகத் தோதுப்படாது.
அவனுக்கும் பின்னால் நத்தானியேல் வந்தான். ஈசாக்கை விட மூன்று வயது பெரியவன். ஈசாக்கின் வகுப்புதான். எட்டிவந்து தோளில் கைபோட்டான் நத்தானியேல். இருவரும் நடக்கத் துவங்கினார்கள்.
”இண்ணைக்கு பிராக்ரஸ் கார்டு தருவாளாடே?” மிகுந்த விசனத்துடன் நத்தானியேல் கேட்டான். குலைந்து கிடந்த புத்தகப் பையை ஒரு உலுக்கில் சரியாகப் போட்டுவிட்டு ஈசாக்கு பதில் சொன் னான்.
“நேத்தே சென்னாருல்லா மூக்காண்டி சார்? ஓனக்கு எத்தனை பாடத்திலே செவப்பு?”
“நீ என்னலே? உனக்கு பரியாசமாட்டு இருக்கு… தமிள் மட்டும் நாப்பத்தாறு…பாக்கி எல்லாம் செவப்புதான்.”
கலைந்து தாறுமாறாகப் போகும் எறும்புக் கும்பல்கள் போல், ரோட்டில் மாணவ மாணவியர். குறுகிய உலகக் குழுக்கள். சண்டையும் பச்சமும் சர்வ சாதாரணம். புன்னை மூட்டுப் பாலத்தில் சின்னக்கூட்டம். வர வேண்டியவர் வரும்வரை, மீதிப்பேர் தாவளம். அங்கே தாவளம் அடிக்காமல் நேரே சென்று விடும் மாணவியர். அவர்கள் கூட்டு வீடுகளி லேயே சேர்ந்துவிடும்.
ஈசாக்கு கிளம்புவதற்கு எழுந்தான்.
“கொஞ்சம் நிண்ணு போலாண்டே… பிரம்ம நாயகம் வரட்டும்…” மனசின்றி ஈசாக்கு தலையசைத்தான். கொளுக்கிப் போட்டிருந்த பையை பாலத்தின் கல்வரி மீது கிடத்தினான். அங்குமிங்கும் வம்பளப்பதிலும் கேலிகள் செய்வதிலும் ஆரவாரத்துடன் கழன்ற மணித்துளிகள். நேரம் நெருங்கி விட்டதால் குழுக்கள் நகரத் தொடங்கின… கடுக்காமூடு, புங்க மூடு, பூதத்தான் கோயில், புதுக்குளத்தாங்கரை வரை கொத்துக் கொத் தாகத் தெரிந்த மாணவர்கள். நேரங் கடந்துகொண்டிருந்த பரபரப்பில் ஈசாக்கு நத்தானியலைப் பார்த்தான். ‘கொஞ்சம் இரி… இன்னா வந்திரு வான்…”
கடைசியாகப் போன குழு பூதத்தான் கோயில் முக்கில் திரும்புவது தெரிந்தது.
“இல்லடே.நான் போறேன்… நீ வேணும்ணா பொறவாட்டு வா.. இப்பம் பெல்லடிச்சிரும்…”
“அட கொஞ்சம் பொறுங்கேன்… பெல்லடிச்சா என்னா? ஒரு நாள் போகாட்டா மூக்காண்டி தலையைச் சீவிருவாரா?”
ஈசாக்கு பதட்டமடைந்தான். கடைசியாகக் குளத்தங்கரையில் போன கும்பல் ஓடுவது தெரிந்தது. முதல்மணி அடித்துவிட்டது போலி ருக்கிறது. ஈசாக்குக்கு இருப்புக் கொள்ளவில்லை.
“நீ வாறதானா வா… நான் போறேன்.”
புத்தகப்பையை அவன் எடுக்கக் கைநீட்டியதும், அதற்காகவே காத்திருந்தவன் போல, அதைத் தன் கையில் அழுத்திப் பிடித்துக் கொண்டான் நத்தானியேல்.
“இப்பம் போறாயானாப் போ…”
ஈசாக்குக்கு கோபம் வந்தது. அடக்கிக்கொண்டு பையை இரந்தான். நத்தானியேல் பிடிவாதமாக இருந்தான்.
ஈசாக்குக்கு என்ன தோன்றியதோ? பக்கத்தில் இருந்த நத்தானி யேலின் புத்தகப்பையைப் பாய்ந்து எடுத்துக்கொண்டு பறந்தான்.
– வஞ்சிநாடு, 1978.
நன்றி: https://nanjilnadan.com
![]() |
நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
வெத்தலை மடிச்சுக் கொடுக்க ஆசையா?
வளர்கவி
September 6, 2026
இதய ஓசைகள்
மா.வீ.தியாகராசன்
September 6, 2026
உறவுகள் ஆயிரம்
ஐ.சாந்தன்
September 6, 2026
