உடன்படு மெய்
கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 1, 2026
பார்வையிட்டோர்: 108
(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விளைந்து தெறித்து வளைந்த பாளையங்கோட்டன் வாழைக்காய் போன்று முன்தள்ளிய கொம்புகள் கொண்ட கறுத்த பசுவொன்று வீட்டின் முன் ஓடிய சாலையின் எதிர்புறத்தில் கிடந்தது என்றும்.
வேதகாலக் காராம்பசு எனலாமா? எனலாகாது. உண்மையில் அதன் ஆதிதாயர்களின், மனிதர்களிடம் சிக்கிக்கொள்ளாத வாரிசுகள் இன்னும் ஆஸ்திரேலியக் காடுகளில் சுதந்திரமாய் உலாத்திக்கொண்டிருக்கலாம். மழைநீரோ, பனிநீரோகண்ணாடி முத்துக்களாய் உருண்டு வழிந்தோடும் பசிய புற்கள் கடித்து, குதித்து மறியும் காட்டோடைகளில் நீர் பருகி, விடாய் தீர்த்து, வாலுயர்த்தி கெட்டியாய் சாணமிட்டு, கான மழைக்கும் கடுங் கதிருக்கும் மூத்த மரத்தின் நிழல் தாங்கலில் அல்லது புதர்க் கவியலில் ஒதுங்கி, சினைப் பருவத்தில் மாசி ஒழுக்கி, வலுவும் வீரமும் வெறியும் கோரோசனை வாசமும் மிகுந்த காட்டுக்காளைக்கு வாலொதுக்கி உடை கொடுத்து, காளையின் முன்னங்கால் பாரம் சுமந்து, காளையின் விந்து பீய்ச்சலில் முதுகு வளைத்துக் குன்னி, சினை பிடித்து, காளையங்கன்றோ கிடேரியோ ஈன்று, கன்றினை நாக்கு நீட்டி நீட்டித் துழாவி நக்கி, மடுவின் நான்கு காம்புகளிலும் பால் சுரந்து ஊட்டி, இன்னும் மனிதக் காலடி படாத கானகங்களில் நுழைந்து புதிதாய்த் துளிர்த்த ஆனையறுகம்புல் கரம்பிக் கழியக்கூடும்.
ஆனால் என் கதாநாயகிப் பசு ஆளுயரப் புங்க மூட்டில் கட்டப் பட்டுக் கிடந்தது. ஏதோ முனிபுங்கவரால் சபிக்கப்பட்டது போல. புங்க மரநிழலில் வெயிலுக்கு மறைப்பில்லை. மழைக்கு ஒதுக்கில்லை. புங்க மரத்தின் தோள்பட்டைக் கிளையில் கட்டப்பட்டுத் தொங்கும் புற் கட்டோ, கரும்புத் தோகையோ, வைக்கோலோ மென்றபடி, காலையும் மாலையும் வைக்கும் காதற்ற பிளாஸ்டிக் பக்கட் நிறைந்த கழுநீரைக் குடித்தபடி, சாணம் பீய்ச்சியபடி, மோண்டு ஒழுக்கியபடி, அதிலேயே விழுந்து அடிவயிற்றில் சாணக்குழம்பு சேறாக அப்பிக்கொள்ள புரண்டு படுத்து…
கடவுளோ, இயற்கையோ, ஆஸ்திரேலியக் காடுகளின் மு முன் னோரோ வழங்கிய ஆபரணங்கள் பூண்டிருந்தது பசு. முன்நெற்றியில்- பூவரச இலைவடிவத்தில் வெள்ளைச் சுட்டி. வாலில் குஞ்சம் வெண் மயிராக. நான்கு கால்களிலும் சலங்கைபோல வெள்ளை வளையங்கள். முன்னிரவுகளில், வாடகைக்கு குடியிருக்கும் வீட்டு மாடி வராந் தாவில் தலைக்குமேல் என்னைப் பொருட்டாகி வட்டமிடும் கொசுக் களின் ரீங்கரிப்பில், ஏதோ வாசித்துக்கொண்டு அல்லது வாசிப்பதாய் பாவித்து பாவபுண்ணியப் பகுப்பாய்வில் ஈடுபட்டு அல்லது முன்ன றையில் இருந்து ஒழுகிவரும் இசைக்காற்றில் இசைந்தபடி, நாற்காலியில் கிடக்கும் எனக்கு புங்கமர மூட்டில் கட்டுண்டு கிடக்கும் பசுவல்லது இல்லாத் துணை.
புங்கமரத்தையொட்டி நகரச் சாக்கடை நரம்பொன்று ஓடிக் கொண்டிருந்தது. சாக்கடை என்பது நகரில் கழிவுநீர் ஓட மட்டுமல்ல. குப்பையைக் கூட்டித் தள்ள, இளநீர்க் கதம்பை தேங்காய்ச் சிரட்டை போட, பாலிதீன் கிழிசல்கள், தண்ணீர் போத்தல்கள் எறிய. முன்தின உணவு மீதங்கள் வீச. காய்கறிக் குப்பை, முட்டை ஓடு, கோழி எலும்பு, கிழிந்த துணிகள், சானிடரி நாப்கின், சாப்பிட்ட இலை, மாங்கொட்டை போட என எவ்வளவோ உபயோகங்கள். அவரவர் குப்பை அடுத்தவர் எல்லையில் எனத் தொடர்சங்கிலி போலிங்கு நாடொறும் குவித்து ஓடை என்பதைக் குட்டை என ஆக்கிவிட்டது.
எல்லாக் குப்பையும் மொத்தமாய்க் கூட்டி, மொத்த மக்கட் தொகை யால் வகுத்து, அவரவர் தலைக்கு இத்தனை மெட்ரிக் டன் எனும் வீதத் தில் திகையும் கணக்கு உலக வங்கிக் கடன் போல. இந்தியக் குடி மகனுக்கு பாலிதீன் பைகளின் சுமை.
ஆனால் பாவம் பசு என்ன பிழைத்தது?
பெரிய பெரிய கொசுக்களின் கடி தாங்காமல் அது வாலாட்டி, முகத்தால் அடித்து, காலுதறி துன்பப்பட்டுக் கிடந்தது. வரப்போகும் கொசுப் பெருக்கமும் கொசு வகைகளும் பற்றித் தெரிந்திருந்தால் நாட்டு விலங்குகளின் நீள அகலம் பருமன் கணித்து ஆதி சிவன் அல்லது பரம் பிதா அல்லது குதா நீண்ட குஞ்சங்களுடன் வால் வைத்திருக்கலாம். ஆட்டுக்கும்தான் எதற்கு வால் அளந்து வைக்க வேண்டும்?இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. ‘குளோனிங்’ கடவுளர்கள் எதற்கு அவதரித்துள்ளனர்?
சாலையில் போகும் வாகனங்களை, பள்ளி மாணவரை, வண்டி வியாபாரிகளை, தலைச்சுமட்டு விற்பனைப் பெண்டிரை, வழிப் போக்கரை, பிச்சைக்காரர்களை, சைக்கிளின் பின்புறம் வைத்துக் கட்டிய பிளாஸ்டிக் கூடைகளில் மரவள்ளி, சாளை மீன் விற்பவரை – பகலெல் லாம் பசு வேடிக்கை பார்த்துக்கொண்டு கிடக்கும்.
அதிகாலை நாலரை மணி வாக்கில் கறப்பார்கள். கறவைக்காரர் களுக்கு மூன்று காம்பு காசுக்கு, ஒரு காம்பு கன்றுக்கு என்றொரு கணக்கு உண்டு. சுழற்சி முறையில் காம்பை மாற்றிக் கொள்வார்கள். ஜெர்ஸிகளும் கராச்சிகளும் மூர்ராக்களும் படையெடுப்பதற்கு முன்னால் நாட்டு மாடுகளில் உரியும் மூன்று ஆழாக்கும் கறந்துகொண்டிருந்த நாட்டார் இரண்டு காம்புகள் விட்டதும் உண்டு. கன்றுகளும் வளர வேண்டும், அவை செல்வங்கள் எனும் உறுதியில்.
இப்போது கறவை மாடுகளின் சொந்தக்காரர்களுக்கு ஒரு காம்பே கன்றுக்கு அதிகம் எனும் நினைப்புண்டு. நிறையச் சுரப்புள்ள மாட்டின் காம்பொன்றைக் குடித்து அஜீரணம், வாயுக்கோளாறு, புளிச்சேப்பம் வந்து கன்று இறந்தும் போகலாம் அல்லவா? அதிலும் அதிகம் பாலூற நல்ல விலை கொடுத்து வாங்கிப் போடும் சாக்குத் தீவனங்களினாலும் பால் சுரக்கும் ஹார்மோன் ஊசிகளாலும் சுரக்கும் அதிகப் பாலில் கன்றுக் குப் பங்கு தர அரசியல் சட்டத்திலும் இடமில்லை.
வைக்கோல் கன்றானால் நான்கு காம்புகளையுமே ஒட்டக் கறந்து விடலாம். காம்புகளில் இரத்தம் வருவதற்கு முன்பான கடைசிச் சொட்டு வரை. ஆண்டவன் ஏன் வைக்கோற் கன்றுகளைக் கருத்தரிக்கவும் பிரசவிக் கவும் பணிக்கவில்லை?
மனிதன் எவ்வளவு புத்திமான்? வைக்கோல் திணித்த கன்றுத் தோலின் நாற்றத்தைப் பசு கன்று என ஏமாந்துவிடும் என்று. ஃபார்மாலின் திரவத்தில் ஊறவைத்த குழந்தையின் சவத்தை எடுத்து வைத்துக்கொண்டு, “இங்கு, ஆக்கு” என்று அவன் சொல்லித் தருகிறான் பாருங்கள்.
சில நகரங்களில் நடமாடும் பால்வண்டி போல அல்லது சற்றுக் கம்பீரமாகத் திராவிடப் பாராம்பரியச் சொற்களில், நடமாடும் பல்கலைக் கழகம் போல வாசல் முன் நின்று நின்று தவணை முறையில் பால் சுரக்க வேண்டும்.
ஆஸ்திரேலிய, ஐரோப்பிய, அமெரிக்கக் காடுகளில் அலைந்த பசுக்களுக்கு போராட்ட உணர்வு இயல்பிலேயே இல்லை போலும். எமது இந்திய தேசத்தின் நாட்டுப் பசுக்கள் என்றும் இவ்விழி தொழி லுக்குப் போவதில்லை. பால் சுரப்பதில்லை என்று தீர்மானித்து விட்ட தென்றால் தீர்மானித்ததுதான். கையை மடியின் பக்கம் கொண்டு போனா லேயே உதைக்கக் காலுயர்த்தும். மூத்திரம் தோய்ந்த வாலால் முகத்தில் விளாசும். குளம்பின் திடம் முன்நெற்றியில் கோலங் காட்டும். பின்னங் கால்கள் இரண்டையும் தென்னைமரத்தின் மூட்டில் கொச்சக் கயிற்றி னால் பிணைத்துவிட்டு பால் செம்பையும் நல்லெண்ணெய்க் கிண்ணத் தையும் கொண்டு போவார் கறவைக்காரர். கன்றை அவிழ்த்து விட்டதும் சாலப்பரிந்து சுரந்து ஊட்டும். கன்று முட்டி முட்டிப் பால் குடிக்கும். கன்றை முன்பக்கம் தளைத்துக் கட்டியதும் மடியை எக்கிக்கொள்ளும். கன்றை நக்கும். ஆனால் மடு விடாது. தவிடு, புண்ணாக்கு, நனைத்து அரைத்துக் கலக்கிய பருத்திக் கொட்டை, கழுநீர், பழைய கஞ்சி, வாழைப்பழத் தோல், பசிய புல் என்ன வைத்தாலும் பசு இரங்குவது இல்லை. கட்டும் கயிற்றினால் மூஞ்சியை வளைத்து பிடித்து சாற்றுவார் கள். பின் முதுகில் நனைந்த கோணிச்சாக்கை விரித்துப் போடுவார்கள். அரை ஆழாக்கு சுரக்காது பசு. சோர்ந்து போய், கன்றை அவிழ்த்து விட்டு, ‘சனியனுக்க தந்திரத்தைப் பாரேன். கழனி மட்டும் ஒரு தொட்டி மோந்துகு… ஒரு சாக்குப் பில்லு திங்கி… மடி விடுகா பாரேன்” எனச் சலித்துப் போவான். கன்றுக்குக் கொண்டாட்டம். வாலுயர்த்திச் சுளி போட்டுக்களமெல்லாம் துள்ளி மறியும்.
அந்த எதிர்ப்பை, போராட்டத்தை என்னவென்று சொல்ல? அது காட்டின், தொன்மையின், உயிரின், சுதந்திரத்தின், படைப்பின் அடங்க மறுத்தல்.
ஆஸ்திரேலியக் கலப்பினப் பசுவின் உயிர் துளிர்க்கும் நேரம் கன்றுடன் – கன்று சீவித்திருந்தால் – நாவினாலும் கனைப்பினாலும் முகர் தலிலும் மடி சுரப்பிலும் கொஞ்சும் சில மணித்துளிகள். அதிகாலையில் ஒரு தவணை, முன்மாலையில் ஒரு தவணை எனத் தவணை முறைச் சீவிதம்.
மந்தையோடு ஆற்றங்கரைகளில் குளத்தங்கரைகளில் தரிசு நிலங் களில் புறம்போக்குத் தோப்புக்களில் மேயப் போயிருக்கும் தாய்ப் பசுவின் வரவு காத்து ஏங்கி நிற்கும் கன்றுகளைப் பார்த்து, “இன்னே வருகுவர் தாயர்” என ஆசுவாசப்படுத்தியது நற்றிணைக் கவிமனம்.
களைத்து ஓய்ந்து விளக்கணைக்கப் போகும் நேரம் சிலசமயம் பசு கிடந்து அலறும் ஓசை கேட்கும். பிரித்துக் கட்டிய கன்றின் நினைப்போ, பசியிலோ, குளிரில் நடுங்கியோ, காமத்தில் கிளர்ந்தோ, இன்னும் காட்டில் அலையும் தனது தொன்மக் கூறுகளின் கனவுத் துளிகள் புலப் பட்டோ…
எப்போதாவது கால்மாற்றிக் கட்டி, உலர்ந்து பொருக்காடிக் கிடக்கும் சாணத்தையும் வைக்கோல் புல் கூளங்களையும் ஒதுக்கு வார்கள். வாசல் தெளிக்க யாரும் முன் அனுமதியின்றி ஒரு குப்பம் சாணம் அள்ளிவிட இயலாது. அது ஆநிரை கவர்தல் போல் போருக்கான முகாந் திரம். அனுமதியுடன் எடுத்தால் பதிலுக்கு கழுநீர், காய்கறிக் குப்பை, வாழைப்பழத்தோல் கொண்டு சேர்க்க வேண்டும். அல்லது குப்பம் சாணத்துக்கு ஒரு ரூபாய் என விலையுண்டு. வெள்ளிக் கிழமைகளில், மாதப்பிறப்புகளில், நோன்பு நாட்களில் சாணத்துக்கு வெகு கிராக்கி. சப்ளை அன்ட் டிமான்ட் தியரி.
சேர்த்துக் கூட்டிப்போட்டமாட்டுச்சாண உரத்துக்குப் பொன்விலை கொடுத்து அள்ளிப் போவான் லாரிக்காரன். துன்பம் என்னவெனில், மாட்டுச் சாணக் குவியல் வீட்டு சுற்றுச் சுவரின் உட்பக்க மூலையொன் றில் பாதுகாப்பாகக் கிடக்கும்போது பசு சாலையோரம் இரவுக்கும் பகலுக்கும் காற்றுக்கும் மழைக்கும் சாட்சியாக, எந்தக் குறிக்கோளு மில்லாமல் கட்டப்பட்டுக் கிடக்கும்.
வாரம் ஒரு முறை பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீர் வைத்து, பழந் துணி கொண்டு தேய்த்து, பசுவைக் குளிப்பாட்டுதல் உண்டு. அதைக் குளித்தல் என எங்ஙனம் சொல்ல? கிட்டத்தட்டகார் கழுவுவதைப்போல. நாட்டில் நீதி எனும் சொல் நின்ற காலத்தில் அறம் வளர்ந்த காலத்தில், ஆறும் குளங்களும் பெருகிக்கிடந்த காலத்தில், தெய்வம் ஏனென்று கேட்ட காலத்தில், பசுவை, எருமையைக் குளிப்பாட்டுவது என்பது தினசரி ஒரு நேர வேலை. சாணப் பொருக்கு ஊற மாடு கிடக்கும் தண்ணீ ரில் முங்கித் துழாய்ந்தபடி கொம்பும் மூக்குத் துவாரங்களும் மட்டும் வெளியே தெரிய. காது குடைந்து கழுலி, உண்ணி பொறுக்கி, பொருக் காடிய சாண மூத்திரம் தேய்த்துக் கழுவிக் கரையேற்றுவார்கள்.
மாட்டுப் பொங்கலன்று கிடைக்கும் இரண்டு நைந்த வாழைப் பழங்கள், கரும்புத் துண்டு, ஓரகப்பை சர்க்கரைப் பொங்கல், தலைக் கொம்புக்குச்சாயம், நெற்றியில் குங்குமம் சந்தனம், கொஞ்சம் தூப தீபம் இவற்றுக்கு ஆண்டு முழுக்கப் பசு காத்துக் கிடப்பது போலத் தோன்றும் பலசமயம். வடநாடுகளில் மார்வாரிப் பெண்கள், குஜராத்திப் பெண்கள், ஜாட் இனப் பெண்கள் பசுவைப் பார்த்தால் அதன் பின் சட்டத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்வார்கள். அவ்வப்போது புற்கற்றை, அகத்தித் தழை கிடைக்கும். நமக்குள்ளும் பசுக்களில் லட்சுமி, காமாட்சி, மீனாட்சி, காந்திமதி, கோமதிகள் உண்டு. கறவை ஓய்ந்தால் எல்லாம் வாழாவெட்டிகள்.
சில சமயம் எனக்குத் தோன்றும் வீட்டில் குப்பைக்குப் போகும் வாழைப்பழத்தோல், பூசணி, வெள்ளரிக் குடல், முட்டைக் கோசு பூக்கோசுத் தழை, பச்சைப் பட்டாணி, மொச்சை தொலிகள், கீரைக் காம்புகள் எல்லாம் திரட்டிப் பசுமுன் கொண்டு வைக்கலாமா தினமும் என.
எந்தச் சுகமும் அற்று, பால் கறப்பதற்கும் பின்பு என்றோ ஒருநாள் பரோட்டாவுக்கு தொடுகறி ஆவதற்கும் பெல்ட்டோ, கைப்பையோ, காலணியோ ஆவதற்குமானதோர் வாழ்வு.
நாய் குரைப்புச் சத்தம் கேட்டோ, தூக்கம் வரவில்லை எனிலோ, இனிப்புப் பலகாரம் தின்று நள்ளிரவில் மூத்திரம் பெய்ய எழுந்தோ வெளி வராந்தாவில் வந்து நிற்பேன். பசு தன்னந்தனியாகக் கிடக்கும். சிலசமயம் அசை போட்டபடி, அன்றேல் கலைந்த தூக்கத்தில், நின்று வாலாட்டிக் கொசு ஓட்டிக்கொண்டு, அல்லது மோனத் தவத்தில். என்னை அது எப்போதுமே பார்த்ததில்லை. என் நிற்பும் அதற்கு வாகான கோணத்தில் அல்ல.
சில சமயம் நள்ளிரவு தாண்டியும் அலறல் ஒலி கேட்கும். யாராவது வந்து அவிழ்த்து ஓட்டிக்கொண்டு போக மாட்டானா என்றிருக்கும். காவல் நிலையத்தில் அல்லது நீலச்சிலுவை அமைப்பில் புகார் செய்யலாம்தான். மேலும் மாடு வைத்திருப்பவர் எல்லாம் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினரோ, இணை அல்லது துணை அமைச்சரோ, வட்டாட்சியரோ, வணிக வரி அதிகாரியோ, சிறு தொழில் நடத்து பவரோ, வியாபாரியோ, மருத்துவரோ, தனிப்பயிற்சி ஆசிரியரோ, இன்ஃபோஸில், விப்ரோ போன்ற நிறுவன ஊழியரோ வங்கி அதிகாரியோ, ஓட்டல் நடத்துபவரோ, அல்ல. பெரும்பாலும் பால்மாடு அவர்கள் உயிர் தரித்திருக்க ஒரு உபாயம். பாலில் தண்ணீர் சேர்ப்பது துணை உபாயம். இன்னும் இங்கு பால்சுரக்கும் ஊக்கி ஊசிகள் வர வில்லை. எங்கு புகார் செய்தாலும்தான் பசுவுக்கு என்ன நீதி கிடைத்து விடும்? மனிதனுக்கும்தான் என்ன நீதி கிடைத்து விட்டது? வேண்டு மானால் கால் மாற்றிக் கட்டுவார்கள், தொழுவங்கள் மாறும்!
நல்ல மழை-வெகு நாட்களுக்குப் பிறகு-பெய்த இரவில் வராந் தாவில் கிடக்கும் தோல் காலணிகளை உள்ளே எடுத்துப் போடும் அவசரத் தில் வெளியே வந்தேன். மழைத் தூவானம் முகத்தில் செல்லமாய் பூச்சொரிய, கால்களில் ஈரம் சிவீரிட, பசுவை நோக்கிச் சென்றன கண்கள். மழைக்குப் பின்புறம் காட்ட கயிற்று நீளம் இல்லை. சிரசைத் தாழ்த்தி மழை வேகத்தை எதிர்கொண்டது பசு. அந்தக் கணத்தில் அது என்ன நினைத்துக்கொண்டிருக்கும்? எதுவுமே நினைக்காதா? இல்லை மழை நீரில் கரந்திருக்குமா அதன் கண்ணீரும்?
ஒரு மாதச் சம்பளக்காரனுக்கு இந்தக் கவலையெல்லாம் ஆகாது. போனஸ், பஞ்சப்படி, சம்பளக்கமிஷன், மாற்றல், பதவி உயர்வு, தேக்கத் தொகை, ஊக்கத் தொகை, தவணைக் கடன் என்று கட்டப்பட்ட வேறொரு இனப் பசுமாடு அவன்.
எங்கும் மனித அரவமில்லை. மழைப்பொழிவின் சீரான இரைச் சலில், இரவில் ஏறி இருந்த குளிரில், அடுக்களை அலுப்புக் கொண்ட தத்தம் பெண்டிரை அணைத்துக் கொண்டு துயிலுவர் ஆண்மக்கள். காடு களானால் மழைக்கு அல்லது பனிக்கு கூட்டமாய்ச் சேர்ந்து உராய்ந்து நிற் கும். மழையில் நனைந்து முதுகு விலாப் பிரதேசத் தோல் சிலிர்த்து, சொட்டுச் சொட்டாய் நீரொழுக ஒட்டியொட்டிச் சேர்ந்து நிற்கும். தன்னந் தனியே இப்பசு எத்தோடு உரசிக் கொள்ளும்?
சில நாட்களாகப் பசுவின் முக்காரம் மூர்க்கமாக ஒலித்தது. நள்ளிர விலும் தாபம் கொண்ட அலறல். பசியல்ல, தாகமல்ல, தூக்கமின்மை யல்ல, வலியல்ல, அலுப்பல்ல, பிணியல்ல…
ஆதி விலங்கின் விரகப் பச்சையின் ஒலி. ஊரிலானால் மந்தையுடன் மேயப்போகும்போது காளையோ, காளையங் கன்றோ, பசு ஒழுக்கும் மாசி மணத்தில் கிளர்ச்சி பெற்று, முகர்ந்து, நக்கி, மூத்திரம் குடித்து இளித்து, கால்தூக்கிப் போடும். எப்போது சேர்ந்தது என்றும் எப்போது பிரிந்தது என்றும் மேய்ப்பவனுக்கு மட்டுமே தெரியும். பால் கறக்கச் செம்பு தூக்கிச் செல்லும்போது, சிலவாரச் சினையில் பசு காலால் எற்ற முயலும்போதும் பால் குறையும்போதும் தெரியும்.
“அது சரி… மாடு அடங்கீருக்கு… செனை புடிச்சாச்சு போல்ருக்கு” என் செம்பைக் கவிழ்த்துவிட்டுப் போவான்.
பசுவின் கதறல் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு இருந்தது. பால் காரனுக்கும் போதம் இல்லாமல் இல்லை. மாடு அடங்கினால் சில வாரங் களில் சுரப்பு நின்றுவிடும். சுரப்புக் குறைந்தால் வருமானம் குறையும். பிறகு கடன் தவணை, மாதச் சீட்டு, நகைச்சீட்டு, புடவைச் சீட்டு, பாத்திரச்சீட்டு, பலகாரச்சீட்டு… நாலைந்து நாட்கள் கத்தித் தீர்க்கட்டும். கழுதைக் காமம் கத்தினால் தீரும். சில மாதங்கள் போகட்டும் என்றிருப் பான்.
பகவின் பரிதாபமான அலறலைக் கேட்கும்போது, இரவு இரண்டு மணி சுமாருக்கு எழுந்து போய்க் கண்ணி தெறித்து விட்டுவிடுவோமா எனத் தோன்றியது. முட்ட வருகிற இனமல்ல அது. சுணை கெட்டுக் கிடக்கும் பாவ ஜென்மம். கண்ணியைத் தெறித்தாலும் எழுந்து ஓடும் என்பது நிச்சயமில்லை. எதிர்ப்பு அணைந்து குளிர்ந்திருக்கும் சாத்தியமுண்டு. அப்படியே ஓடினாலும் மூன்று மணி நேரத்தில் விடியுமுன் – ஒண்டிப்புதூரோ, இருகூரோ, கண்ணம்பாளையமோ தாண்டாது. எந்த நாயக்கரோ கவுண்டரோ பிடித்து மடக்கிச் சாளையில் கட்டிப் பால் கறப்பார். அல்லது கசாப்புக்காரன் உரித்துத் தலைகீழாகத் தொங்கவிடுவான். உரித்த பசுவின் என்பிலும் சதையிலும் இலக்கம் இட்டிருக்குதோ?
எதிலிருந்து என்ன விடுதலை? இரக்கமாக இருந்தது, வெறுப்பாக இருந்தது, இம்சையாக இருந்தது.
காலை நடக்கப் போகும்போது, புறப்படும் நேரம் பொறுத்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாதை. திருச்சி சாலைக்கு வந்து கரும்புக் கடை, உழவர்சந்தை, குளத்தேரி வரை ஒரு நடை. அல்லது சரோஜாமில், சின்மயானந்தா பள்ளி, சிங்காநல்லூர் ரயில் நிலையம். நீலிக்கோனான் பாளையம்,வரதராஜபுரம் மேடு சுற்றி கிருஷ்ணாபுரம் மேடு வழியாக ஒரு நடை. அல்லது ஆனையங்காடு, அரவான் கோயில், அக்ரஹாரம் வழியாக.
எங்கு கண்ணில் பட்டது என்பதல்ல முக்கியம். காலை முடிந்து முற்பகல் தொடங்கும் நேரம். கால்நடை மருத்துவ மைய வளாகம். கத்திப் பரபரத்துக் கிடந்தன சில பசுக்கள், பிடிகயிற்றை இழுத்துக் கொண்டு.
மண்ணில் புதைக்கப்பட்ட ஆறு கால்களுடன் இரும்புக் குழாய்க் கூண்டு. முன்னங்கயிறு பிடித்திழுத்து மாட்டுக்காரன் மாசியடித்து வாலொதுக்கி நின்ற பசுவைக் கூண்டினுள் செலுத்தினான். பசுவின் தலை கூண்டுக்கு வெளியே வந்ததும் கூண்டின் குறுக்காக பசுவின் கழுத்துக்கு மேலும் கீழுமாய் இரு குழாய்த் துண்டுகள் வளையங்களினுள் செருகப் பட்டன. பசுவை நெரித்து உள்ளே தள்ளி, பின்னங்கால்களைத் தொட்டு மேலும் இரண்டு குறுக்குக் குழாய்கள்.
வன்புணர்ச்சிக்கான தோதில் பசுவின் நிற்பு. வெள்ளைக் கோட்டுப் போட்ட கால்நடை மருத்துவர் வெளியே வந்தார். அவர் கையில் கூம்பு போல் வாய் சீவப்பட்ட மூங்கில் கொட்டம் போன்றதோர் உலோகக் கருவி. கைப்பிடிப்பக்கம் குறடு போல் கைப்பிடி. கையுறை மாட்டி, பசு உறுப்பில் கை நுழைத்து விரித்து, கருவியைச் செலுத்தினார். உதவியாளன் பழைய கிராமத்து ஐஸ் பெட்டி ஒன்றைக் கொண்டு ஓடி வந்தார். முருங்கைக்காய் நீளத்தில் பயிற்றங்காய் தடிமனில் கண்ணாடிக்குழாய் அதன் கைப்பிடிப் பக்கம் இங்க் ஃபில்லர் போல் ரப்பர் குழாயும்.
கால்நடை மருத்துவர் கைநீட்ட, உதவியாளர் ஐஸ்பெட்டியைத் திறந்து, அதனுள்ளிருந்த காளை விந்துக் குப்பியை எடுத்து, மூடியைத் திறந்து, ஃபில்லரால் உறிஞ்சி, ரப்பர் குழாயை மடக்கிப் பிடித்துக் கொடுத்தார். எந்த தேசத்து, எந்த இனத்து, எந்த வடிவக் காளையின் விந்தோ? எந்த மாதத்தில் எடுக்கப்பட்டதோ? அந்த விந்தின் துளிகளில் நெற்றிச்சுட்டி இருக்குமோ, வட்டக்கொம்போகூழைக்கொம்போ, நிறம் செவலையோ, காரியோ, மயிலையோ – கடவுள் அறிவாரா?
கண்ணாடிக் குழாயை வாங்கிய மருத்துவர், மூங்கில் கொட்டம் போன்ற உலோகக் கருவியை அதன் மூட்டுப் பக்கமிருந்த குறடை அழுத்தி பசுவின் உறுப்பினுள் செலுத்தி கருவியின் முனை வாயை விரித் தார். கருவியின் வெளி வட்டத்துவாரம் வழியாகக் குனிந்து உற்றுப் பார்த் தார். தெரிந்தது கைலாசமோ, வைகுந்தமோ, பரமண்டலமோ, ஒன்று மற்றப் பெருவெளியோ, பிறப்பின் இருட்கிடங்கோ, சோதியோ, சுயம்புவோ!
கண்ணாடிக் குழாயை மெதுவாக உள்ளே செலுத்தினார். சடாரென மடித்திருந்த ரப்பர் குழாயை விட்டதும் கண்ணாடிக்குழாயில் பாதரசம் போல நீளமாகக் கோத்திருந்த வீரிய விந்து பசுவின் கருவறை வாசலில் பீய்ச்சப்பட்டது. உண்மையான காளையின் சூடான வேகம் கொண்ட விந்தின் பாய்ச்சலைப் பசு உணர்வதற்கான வாய்ப்பே இல்லை. ஏதோ குடற்புண்ணுக்கு ஆயின்ட்மென்ட் தடவியதுபோல இருந்திருக்கும், உறைய வைக்கப்பட்ட, பொலிக்காளையின் நாட்பட்ட விந்து. பசுவிடம் துடிப்பு இல்லை, முக்கல் இல்லை, கூனிக் குறுகல் இல்லை. திருப்தி கொண்டவர் போலத் தலையசைத்து, பசுவின் புட்டத்தில் தட்டிக் கொடுத்து, நெக்ஸ்ட்’ என்றார் மருத்துவர்.
இரும்புக் குறுக்குக் குழாய்களை உருவியதும் பசு வெளியே சாடி யது. வஞ்சகமானதோர் ஏமாற்றுக்கு ஆட்பட்டதை இன்னும் அது அறிய வாரங்கள் ஆகும். இனி அடுத்த பசு, அடுத்த வன்புணர்ச்சி.
பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து…
கற்றாவின் மனம் போலக் கசிந்துருகி…
பார்ப்பார், பசு, அறவோர், பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழவி…
நல்லோர் ஒருவர் உளரேல் எல்லோர்க்கும்…
நடைதளர்ந்துவிட்டது எனக்கு.
உண்பது நாழி, உடுப்பது இரண்டு முழம், குடிக்க மொந்தைக் கள், வாய்க்கும் போதெல்லாம் சம்போகம்…
கால்பந்து வீரர்கள் மைதானமெங்கும் ஒரு பந்தைத் துரத்துவதைப் போல, ஐப்பசி – கார்த்திகை மாதங்களில் பெட்டை நாய் ஒன்றைப் பத்துப் பன்னிரண்டு ஆண் நாய்கள் ஓடியோடித் துரத்திக்கொண்டிருக்கும். நொண்டி நாய், கிழ நாய், சொறி நாய், பிணி நாய், குட்டி நாய், குள்ளநாய், கொழுத்த நாய் எல்லாம் இருக்கும். ஓட்டத்தினூடே உரசல், முகர்தல், கடித்தல், நக்கல், ஏறிச் சறுகுதல், தம்முள் கைகலப்பு. பலசாலியான நாய்க்குப் பெட்டை நாய் உடை கொடுத்தபின் அடுத்த பெட்டை நாய்.
பருவகாலம் முடிந்தபின்பும் நொண்டி நாய்க்கும் கிழட்டு நாய்க்கும் சொறிநாய்க்கும் நாய்த்துவாரம் அமைந்திருக்காது. இனி அடுத்த பருவ காலத்துக்கான காத்திருப்பும் இடையிடையே காம நொம்பல ஊளையும்… அடுத்த சீசனிலும் தான் என்ன உத்திரவாதம் ? ஆண்டில் ஒரு சம்போகத்துக்கான போக்கற்ற எச்சில் வாழ்க்கை? என்றாலும் ஓட்டமும் துரத்தலும் முகர்தலும் முட்டலும் பல்படக் கடித்தலும் என வக்கும் வழியுமற்ற நாய்களுக்குக் கூட வாழ்க்கை ஒரு கோணத்தில் அர்த்தமாகும். ஆனால் என்ன இந்தக் கறவைப் பசு வாழ்க்கை? பரம்பொருளே, படைத்தளித்துக் காப்பவனே!
வீட்டுக்கு வந்தாலும் விடாது கேட்ட அமறல். பசுவால் இந்தியத் திரைப்பட நாயகியர் போல் விரகத்தில் துடித்து நெளிய முடியுமா? தலை யணையை, நாய்க்குட்டியை, தென்னைமரத்தை, வீட்டுத்தூணைத் தழுவ முடியுமா? கனவுக் காட்சிகளில் சொந்தக் காமத்தை ஊர்க் காமமாக்கி தாராளப் பங்கீட்டில் மகிழ முடியுமா?
காமம் பசுவின் கண்களில் இருந்ததோ, உடல் மொழியில் இருந் ததோ, பெருங்குரல் அமறலில் இருந்ததோ?
எதுவானால் என்ன?
காமம் அணங்கும் பிணியும் அன்று.
பால் சுரப்பு, சினை, ஈற்று எனச் சுழலும் வட்டமாய் வாழ்க்கை தோயுமோர் போக வழியற்ற விலங்குச் சீவன்.
கல்லினுள் தேரைக்கும் படியளக்கும் தேவன் போன வழி புலப்படவில்லை.
நமது ஆச்சாரியர்கள், மகரிஷிகள், துறவிகள், சான்றோர் எங்ஙனம் குற்றம் சுமக்காமல் பால் பருகுவார்கள்? குழந்தைகள், வயோதிகர், பிணி யாட்கள் எனுமிவரை விட்டு மற்றோர் பால் குடிப்பதை, மோர் தயிர் விட்டுப் பிசைந்து கவளம் உருட்டுவதை, நெய்யூற்றிக் கொள்வதை, காப்பியில் தேநீரில் கஞ்சியில் பாலூற்றிக் கொள்வதை நிறுத்திக் கொள்ள லாம் எனத்தோன்றும்.
பசுவதை என்பது புரோட்டாவுக்கு சால்னா என்பது மட்டும்தானா?
யாரோ சொல்லியிருந்தார்கள் – 23 வயதுக்குமேல் ஆவின் பொருட் களால் மனித உடலுக்கு எப்பயனும் இல்லையென.
தொடர்ந்து மாடி வராந்தாவில் நின்று பார்த்துக் கொண்டு நிற்பதைத் தவிர மாதச் சம்பளக்காரனால் வேறென்ன செய்ய இயலும்?
– தினமணி, ரம்ஜான் மலர் – 2003.
நன்றி: https://nanjilnadan.com
![]() |
நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நடுவில் இருந்தது
சு.அப்துல் கரீம்
September 6, 2026
இந்த பிரபஞ்சத்தின் நாயகன்…
இளையவேணி கிருஷ்ணா
September 6, 2026
கள்வர் தலைவன்
பம்மல் சம்பந்த முதலியார்
September 6, 2026
