ஆசையெனும் நாய்கள்
கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 1, 2026
பார்வையிட்டோர்: 91
(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருவிழா பார்ப்பதற்காக மூக்கனுக்கு இருபது காசுதான் கிடைத்தது. இதற்காக அவன் மூன்று நாட்களாக அம்மாவைப் பஞ்சரித்துக் கொண்டிருந்தான். இருந்தும் அன்று காலை முக்கால் மணி நேரம் மூலை பிடித்து அழுகை ஆரோகண அவரோகணம் செய்த பிறகுதான் முதுகில் இரண்டு அறையோடும் ஏழெட்டு வசவோடும் கிடைத்தது, அந்தக் காசு. கையில் காசுகிடைத்தவுடன் மூக்கனின் அழுகை ஆர்ப்பாட்டம் எல்லாம் ஆவியாகியது.
ஒரே தாவாகத் தாவி அரங்குப் புரையினுள் நுழைந்தான். இடுப்பில் இருந்த துண்டை அவிழ்த்து எறிந்துவிட்டு நிக்கரை எடுத்து மாட்டினான். அரை ஞாண் கயிற்றில் இருந்து ஊக்கைக் கழற்றி பட்டன்கள் இல்லாத இடத்தில் பந்தோபஸ்து ஏற்பாடுகள் செய்தான். சட்டையை உதறிப் போட்டுக்கொண்டு கண்ணாடி முன்னால் நின்றான். கொம்புச் சீப்பை எடுத்து ‘பறட் பறட்’டென்று தலை வாரினான். கோவிலுக்குப் போவ தால் திருநீறு பூசினால் நல்லதோ என்று அவனுக்குத் தோன்றியது. சந்தேகத்தின் பலனைச் சாமிக்கு அளித்து மூலையில் தொங்கிய தேங்காய்ச் சிரட்டைக் கப்பரையிலிருந்து திருநீற்றை அள்ளிப் பூசினான்.
இப்போது சுமாரான ‘அளகோடு’ விளங்குவதாக அவனுக்குத் தோன்றியது. உடனே ‘விருட்’டென்று சுடலைமாடன் கோவில் ஆல் மரத்தை நோக்கி விரைந்தான்.
அங்குதான் காலையில் எல்லோரும் கூடுவதாக ஒத்துக் கொண்டிருந் தனர். அங்கிருந்து பாறையாற்றின் கரையோடு நடந்தால் பூதப்பாண்டி இரண்டு மைல். காலை ஒன்பது மணிக்குத் தேர் வடம் பிடிப்பதாக இருந் தார்கள். வடம் பிடிப்பதோ தேர் நிலைக்கு நிற்பதோ இவர்களுக்கு ஒரு கணக்கல்ல. ஆகையால் பத்து மணிக்குள் பூதப்பாண்டியைச் சேர்ந்தால் போதும். எனவே எட்டரை ஒன்பது மணி வாக்கில் எல்லோரும் ஆல மரத் தடியில் இருந்து புறப்படுவதாக ஏற்பாடு.
மூக்கன் அந்த இடத்தை அடையும்போது ஏகதேசம் எல்லோரும் வந்திருந்தனர். குளித்துத் தலைவாரிய முகங்கள். சிலதில் சாத்தாங் கோயில் சந்தன வரைகள், வெளுத்த சட்டைகள், கையில் சிறுசிறு பொட்டலங்கள்.
அதைக் கண்டவுடன்தான் மத்தியானச் சாப்பாட்டுக்கு எதுவும் கொண்டு வரவில்லையே என்று மூக்கனுக்கு நினைவு வந்தது. தெரிந் திருந்தாலும் ஒன்றும் செய்துவிட முடியாது. ஆகையால் இருபது காசு தைரியத்தில் மனத்தைத் தேற்றிக்கொண்டான்.
அங்கு அடிபட்ட பேச்சிலிருந்து மட்டுப்பா வீட்டு முருகேசன் இன்னும் வரவில்லை என்று தெரிந்தது. முருகேசன் கொஞ்சம் வீச்சுள்ள வீட்டைச் சேர்ந்தவன். சில்லரை புழங்கும் பையை உடையவன். ஆகை யால் அவன் வராமல் இவர்கள் கிளம்பி விடுவது என்பது இயலுகிற காரியமல்ல. எனவே அவன் வரும்வரை காத்திருந்தார்கள்.
இது சாதாரணமாகப் பள்ளிக்கூடம் போகும் நேரம்தான். புத்தகப் பைகையில் இல்லாததால் மனம் காற்று வெளியில் சஞ்சரித்தது. எட்டாங் கிளாஸ் சார் குளித்துவிட்டு வந்தார். எல்லோரும், ‘சார்,வணக்கம்…” என்று பள்ளிக்கூடத் தொனியில் நீட்டி முழக்கினர்.
முருகேசனும் வந்துவிட்டான். தேரோட்டம் பார்க்க அந்த கும்பல் நகர ஆரம்பித்தது. யாராருக்கு எத்தனை காசுக்கள் ரூபாய்கள் என்ற கணக் கீடுகள். மாமா, அத்தை, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மை, அண்ணன், அத்தான், தாத்தா, ஆத்தா, தந்த திருவிழாக் காசுகளின் ஐந்தொகைகள், மூக்கன் நிக்கர் பையினுள் கிடந்த இரண்டு பத்துப் பைசாக்களைத் தடவிப் பார்த்தான். வலது பையில் பெரிய ஓட்டை. எனவே இடது பையில்தான் பத்திரமாகப் போட்டிருந்தான். இருந்தாலும் ஒரு மனச் சாந்திக்காக அடிக்கடி தொட்டுப் பார்த்துக் கொண்டான்.
அவர்கள் பாறையாற்றுப் பாலம் அருகே வந்துவிட்டார்கள். பாலத்து மேட்டிலிருந்து சாமி தேரின் செங்கொடியும் பளிச்சிடும் கும்ப மும் பரிவட்டங்களும் தெரிந்தன. அம்மன் தேரின் கொடி மட்டும் தெரிந் தது. அதைக் கண்ட இவர்கள் மனத்தில் ஒரு துள்ளல். நடையில் ஒரு வேகம்.
பாறையாற்றின் மேலக்கரையோடு -ஒற்றையடித் தடத்தில் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக நடந்தார்கள். பேசிச் சிரித்து, ஒருவரையொருவர் துரத்தி, ஆவாரைச் செடியின் பூங்கொத்துக்களை ஆய்ந்து, காராம் பழம் பறித்து, சப்பாத்திக் கள்ளிப் புதர்களில் பழம் தேடி, தாழைப் புதர்களில் பூ இருக்கிறதா என்று பார்த்து, ஆற்றுத் தண்ணீரில் ஓட்டுச்சில்லிகளைத் தவளை எறிந்து, ஓணான்களைக் குறி பார்த்துக் கல் வீசி…
ஆற்றங்கரையை விட்டு ஆண்டித்தோப்பு சேர்ந்ததுமே திருவிழாச் சந்தடிகள் காதில் விழு ஆரம்பித்தன. பூதப்பாண்டியை நெருங்க நெருங்கத் திருவிழாவிற்குப் போவோர், வருவோர், கிலுக்கும் ஊத்தும் பலூனும் கையில் பிடித்த குழந்தைகள் – சிவப்புச் சவ்வு மிட்டாயை வாயெல்லாம் இளுவி அம்மா இடுப்பில் அல்லது அப்பா தோளில் சவாரி செய்யும் குழந்தைகள். வண்டிக்காரனின் கிணுக்கல்கள். பால் ஐஸ், சேமியா ஐஸ், சாதா ஐஸ்…
ரோட்டைவிட்டு ஊருக்குள் நுழைவதற்கான ஏற்றத்தில் அவர்கள் ஏறினர். இருபது பைசாவில் என்னென்ன வாங்கலாம் என்று மூக்கனின் மனம் கணக்குப் போட்டது. எங்கும் திருவிழா இரைச்சல்.
“பீடி புகைக்கும் அன்பர்களே! எங்கள் புறா மார்க் பீடிகளையே வாங்கி உபயோகித்து இன்புறுங்கள்…”
”காரம், மணம், குணம் நிறைந்தது தங்கையா விலாஸ் புகையிலை.”
“வாருங்கள்! வாருங்கள்! பால்பாண்டியன் மிட்டாய்க்கடை. மலி வான விலை… தரமான தயாரிப்பு பால்பாண்டியன் மிட்டாய்க்கடை…”
“அறிஞர் அண்ணா சிற்றுண்டி நிலையம். சூடான சுவையான சுத்தமான சிற்றுண்டிக்கு அறிஞர் அண்ணா சிற்றுண்டி நிலையம்… தேரோட்டம் காணவந்திருக்கும் தென்குமரி மக்களே! தெவிட்டாத உணவுக்கு அறிஞர் அண்ணா சிற்றுண்டி நிலையம். அவசியம் வருகை தாருங்கள். அறிஞர் அண்ணா சிற்றுண்டி நிலையம்…”
”இன்று ஐந்து காட்சிகள். திட்டுவிளை ரங்காவில் புரட்சி நடிகரின் புதுமைப் படைப்பு. காரசாரமான கத்திச் சண்டை… கிளுகிளுப்பூட்டும் காதல் காட்சிகள். இன்று ஐந்து காட்சிகள்.”
ஒலிபெருக்கிகள் ஒன்றையொன்று பார்த்துக் குரைத்தன. அவரவர்க் குத் தேவையான இரைச்சலைத் தனித் தனியாகப் பிரித்து எடுத்துக்க கொள்ளுங்கள் என்பதுபோல.
அவரவர் மனம் போலக் காசுகள் கரைந்தன. யாராவது பொரி கடலை, சவ்வு மிட்டாய், பொரி உருண்டை என்று வாங்கும்போது, அதில் சிறுசிறு பங்கு மூக்கனுக்கும் கிடைத்தது. சீனி ஐஸ், சேமியா ஐஸ் என்று ஸ்பெஷல் ஐட்டங்கள் வாங்கும்போது அவரவர் காசில் அவரவர் செலவு செய்தார்கள். தெற்குத்தெரு சிவலிங்கம் காக்காய்க் கடி கடித்து மூக்கனுக்கு ஒரு துண்டு தந்தான். எல்லோரும் பத்துப் பைசா கொடுத்து ‘கலர்’ குடித்தபோது மூக்கன் யோகி போலத் திரும்பிப் பார்த்துக்கொண்டு நின்றான்.
அவனிடமிருந்த இருபது பைசாவை என்ன செலவு செய்வது என்று இன்னும் தீர்மானிக்கவில்லை. அவன் பாக்கெட்டிலிருந்து கையை எடுக் காததைக் கேலியாகக்கூட அவர்கள் பேசிக்கொண்டார்கள்.
‘கழுவேற்றி மூலையில் தேர் நகராமல் நின்றது. வருடா வருடம் இந்த மூலையில் இருந்து நகர்வது என்பது ஒரு சிரமமான காரியம். அதன் பிறகு தெரு இறக்கம். எனவே கழுவேற்றி மூலையைத் தாண்டிவிட்டால் நிலைக்கு வருவது பெரிய காரியம் இல்லை. தேரைத் தாண்டி அவர்கள் மேலும் நடந்தார்கள்.
போலீஸ் ஸ்டேஷன், அதனுள் தற்காலிகமாகப் பிடித்து வைத் திருந்த பரட்டைத் தலை முகங்கள். உயர்நிலைப்பள்ளி, அதனுள் நடந்த கதர்க் கண்காட்சி. பாம்பு உடலும் பெண் முகமும் கொண்டு நாக கன்னிகை. காலாலேயே ஊசியில் நூல் கோர்க்கும் காப்பி போடும் கறிகாய் நறுக்கும் பெண். தொட்டால் ஷாக் அடிக்கும் ‘மின்சார மனிதன்’, ‘மரணக் கிணறு’ மோட்டார் சைக்கிள்…
மணி ஒன்று தாண்டியது. கொண்டு வந்திருந்த சாப்பாட்டுப் பொட் டலங்களை விழுங்க வேண்டி இலுப்பைத் தோப்புக்கு நடந்தார்கள். மூக்கன் என்ன செய்யலாம் என்று மண்டைக்குள் இருந்த எக்ஸ்பர்ட் கமிட்டியைக் கலந்து ஆலோசித்தான்.
தெற்குத் தெருவில் ஒரு வீட்டுப் படிப்புரையில் மோர்த் தண்ணீர் விளம்புவதை அவன் கவனித்து வைத்திருந்தான். எனவே இரண்டு மூன்று தம்ளர் மோர்த் தண்ணீர் குடித்துவிட்டு வரலாமே என்று எண்ணினான்.
மூக்கன் தனியாகச் சுற்ற ஆரம்பித்தான். வயிறு பசித்தது. இருபது பைசாவை எப்படி அதிக பட்சம் பயன் பெறும் வழியில் செலவிடலாம் என்று யோசித்தான். ஒன்றும் புலப்படவில்லை.
பல நிமிடப் போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த இரண்டு மூன்று தம்ளர் மோரும் நெல்லிக்காய் ஊறுகாயும் பசியைச் சிறிது மந்தித்தது. கால் போனபடி சுற்றிக்கொண்டு கோயில் முகப்புக்கு வந்தான். தெரு மூலையில் போடப்பட்டிருந்த தற்காலிகமான கீற்றுக் கொட்டகை ஓட்டலில் இருந்து வாழைக்காய் பஜ்ஜியின் வாசனை. மூக்கன் அதை மனமின்றித் தாண்டி மருத மர நிழலுக்கு வந்தான். நிழலில் சிறிய கும்பல், டப்பாவினுள் காய்களைப் போட்டுக் குலுக்குகின்ற கலகலப்பு.
“வை ராஜா வை… அள்ளி வச்சா வெள்ளிப் பணம்… வை ராஜா வை…” என்ற சப்தம். மூக்கன் அங்கே கூடியிருந்த கும்பல் அருகே போனான். இடையில் புகுந்து சற்று நேரம் வேடிக்கை பார்த்தான். கிளாவர், ஸ்பேட், டைமன், ஆடுதன் என்று காசுகள் மாறி மாறி விழுந்து கொண்டிருந்தன. இவன் கிளாவரை நினைக்கும்போது கிளாவர் அடித் தது. ஆடுதனை நினைக்கும் போது ஆடுதன் அடித்தது. டப்பாவின் கல கலப்பும் பலகையின் மீது ஓங்கி அடிக்கும் ஓசையும்.
மூக்கனுள் ஒரு பரபரப்பு. பையினுள் கைவிட்டுப் பத்துப் பைசாவை எடுத்தான். டைமனில் வைத்தான். டபில், முப்பது காசாகத் திரும்பக் கிடைத்தது. கிளாவரிலும் ஸ்பேட்டிலும் பத்துப் பத்து வைத்தான். நாற்பதாகத் திரும்பியது. இப்போது அவனிடம் அறுபது பைசா இருந்தது. மனதில் ஒரு தெம்பும் திடமும். சுற்றி நின்றவர்கள் யாரும் அவன் கண்ணில் படவில்லை. அவன் குறி ஒன்றியப்பட்டு நின்றது. அறுபது காசையும் எடுத்தான். ஸ்பேடில் முப்பது, ஆடுதனில் முப்பது.
கடகட… கடகட… கட்’ என்று தகர டப்பாவை ஓங்கிக் கட்டை மீது அறையும் ஓசை மூக்கனின் நெஞ்சில் விழுந்தது.
“வை ராஜா வை…” என்று தகர டப்பாவை எடுத்தான். டைமன் டபில்… கிளாவர்சிங்கில்…
மூக்கனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. பகீரென்றது வயிறு. அறுபது பைசாவை அரித்துப் போடுவதைச் செயலற்றுப் பார்த்தான். பைசா ஏதாவது மீதி இருக்குமா என்ற நப்பாசையில் பையினுள் கைவிட்டான். ஒன்றுமில்லை. சற்று நேரம் விளையாட்டை வெறித்தான். ஒன்றும் சுக மில்லை. வெளியே வந்தான்.
நண்பர்களைத் தேடிச் செல்வதற்கு அவனுக்கு மனமில்லை. கொஞ்சநேரம் தனியாக அலைந்தான். வேடிக்கைகள் எதுவும் உற்சாக மூட்டவில்லை. வயிறு புறுபுறுத்தது. வீட்டுக்குப் போகலாம் என்று தோன்றியது. பூதப்பாண்டியில் இருந்து பழையாற்றுக்கு இறங்கும் இறக்கத்தில் இறங்கினான். ரோட்டின் மேலிருந்து கலுங்கின் அருகே பத்துப் பைசாவுக்கு எட்டு என்று கொல்லாம் பழம் விற்றுக் கொண்டிருந் தான் ஒருவன். கையில் பத்துப் பைசாவாவது மிஞ்சியிருந்தால் தம்பிக்கு ஏதாவது வாங்கிக்கொண்டு போகலாமே என்று மூக்கனுக்குத் தோன்றியது.
– வஞ்சிநாடு, ஆகஸ்ட் 1977.
நன்றி: https://nanjilnadan.com
![]() |
நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நடுவில் இருந்தது
சு.அப்துல் கரீம்
September 6, 2026
இந்த பிரபஞ்சத்தின் நாயகன்…
இளையவேணி கிருஷ்ணா
September 6, 2026
கள்வர் தலைவன்
பம்மல் சம்பந்த முதலியார்
September 6, 2026
