இவர்கள் வித்தியாசமானவர்கள்…
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 5, 2024
பார்வையிட்டோர்: 2,317
நல்ல உணவில்லை..
நல்ல உடையில்லை..
உறையுளும் இல்லை..
நடமாடும் நாடோடிகள் நாங்கள்..
காலை உணவு கல்யாண சத்திரத்தின் வாசலில் விழுந்த எச்சில் இலை..
அதில் மிஞ்சியவை
என் அக்குள் பையில் பொட்டலமாய்..
எதற்கென யோசிக்காதீர்கள்
மதிய உணவு கிடைக்காவிடில் உதவுமே..
பைத்தியமாயினும் மூன்று வேளை பசிக்குமே..என்ன செய்வது?
வேண்டாமென வீசியெறிந்த ஆடைகள் எங்களிடம் அடைக்கலமாய் வந்தவை..
ஆடைகள் ஆடம்பர அணிகலன்கள் அல்ல எங்களுக்கு. மானம் காக்க உதவும் மறை பொருள். அவ்வளவே..
நேற்று உறங்கிய இடம் இன்றில்லை எங்களுக்கு. இன்று உறங்கப்போகும் இடமே முடிவாகாத நிலையில் நாளைய சிந்தனை எனக்கெற்கு..
யார் வயிற்றில் பிறந்தோமெனத் தெரியாது.
எங்களுக்கு பெயருமில்லை. ஏம்மா…
இந்தாம்மா..
யோவ்..
என்ற பெயர்களே எங்கள் அடைமொழிகள்.
எதுக்கும்மா வயசான காலத்துல உங்க வீட்டுகாரையும் கூட்டிட்டு அலையற. அவர ஒரு இடத்துல உட்கார வெச்சிட்டு நீ மட்டும் போகக் கூடாதா எனக் கேட்டாள் ஒரு பெண்மணி.
என் வீட்டுக்காரன் இல்லீங்க அவரு. காலிலே செருப்பின்றி, கால் சுட்டெறிக்க, மூன்றாம் கால் சறுக்கி விட கீழே விழந்து கிடந்த சக யாசகன் அவன். மறுபடியும் கீழே விழப் போகிறானே என்று தாங்கிப் பிடிக்க, இந்த ஆண்டியோடு அண்டிப் பிழைக்க வருகிறான் அனு தினமும்..
எங்களைப் போன்று பலரைக்
காணலாம் நீங்கள். அமரவைத்து கேளுங்கள். ஆயிரம் கதைகள் சொல்வார்கள். புத்தகம் போடுங்கள். திரைப்படம் எடுங்கள். எங்கள் நிலை மாறாது.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றால் இருப்பது ஒரே ஒரு ஜெகம் தானே.