கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 5, 2024
பார்வையிட்டோர்: 3,458 
 
 

(1979ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 21-25 | அத்தியாயம் 26-30 | அத்தியாயம் 31-35

அத்தியாயம் இருபத்தாறு 

மாலை நேரம், மீனாச்சி இரவுச் சாப்பாடு சமைப்பதற் கான ஒழுங்குகளைச் செய்துகொண்டிருந்தாள். அப்போது வெளியே இருந்து வந்த மாயாண்டி கோபத்துடன் வீட்டினுள்ளே நுழைந்தார். 

“இந்தா பாரு மீனாச்சி, எங்க அவள் செந்தாமரை?” மாயாண்டியின் குரல் கடுமையாக ஒலித்தது. 

“இப்போதாங்க வேலை முடிஞ்சு வந்தவொடன குளிக்கப் போனா; அதுக்கு ஏன் இப்புடி சத்தம் போடுறீங்க?” என மீனாச்சி குழப்பத்துடன் கேட்டாள். 

“அடியே இன்னிக்கு கண்டக்கையா ஏங்கிட்ட என்னா சொன்னாரு தெரியுமா… இவளும் அந்தப் பியசேனாப் பயலும் கதைச்சுக்கிட்டு இருந்ததை அவரு கண்ணால பாத்தாராண்டி. மலையில வச்சு அத்தனை பேருக்கும் முன்னால சொன்னாரடி. இவளால் நம்ப குடும்ப மானமே நாசமாப் போவுது” எனப் பலமாகக் கத்தினார் மாயாண்டி. 

“ஐயையோ, கண்டக்கையா வரைக்கும் தெரிஞ்சு போச்சா? இப்ப என்னாங்க செய்யுறது?” எனப் பதறினாள் மீனாச்சி. 

“இப்ப என்னாடி செய்யுறது?எல்லாம் ஒன்னாலதாண்டி வாறது. வேலைக்குக் கூட்டிப்போறபோது ஒன்கூடவே கூட்டிக்கிட்டுப் போன்னு சொன்னேனே, கொஞ்சமாவது நீ அக்கறைப்பட்டியா?” மீனாச்சியை முறைத்தார் மாயாண்டி. 

“நான் என்னாங்க செய்யுறது? எம்மேல மொறைக்கி றீங்க. அவள் வேலைக்காட்டுல வச்சு வவுத்துவலி, தலைவலினு கங்காணிகிட்ட சொல்லிப்புட்டு வூட்டுக்கு வாறாப்போல அவனைச் சந்திக்கப் போயிறா; நானும் அவ பின்னாலையே என் வேலையை உட்டுப்புட்டு சும்மா ஓடியர முடியுமா?” 

“அவளுக்கு எவ்வளவு துணிச்சல் பாத்தியா? நம்ம எவ்வளவு சொல்லியும் கேக்காம அந்தப் பியசேனாப் பயலோட போய் ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்திருக்கிறா. இன்னிக்கு அவ வூட்டுக்கு வரட்டும், கவ்வாத்துக் கத்தியால அவளை ரெண்டு துண்டா வெட்டிப் போடுறன்’ என கத்தினார் மாயாண்டி. 

“இங்க பாருங்க… தயவுசெஞ்சு மெதுவாப் பேசுங்க. இதைக் கேட்டு லயத்தில் உள்ளவங்க எல்லாம் சிரிப்பாங்க” என அவரைப் பார்த்து கெஞ்சும் குரலில் கூறினாள் மீனாட்சி. 

“இனி என்னாடி சிரிக்க இருக்கு. தோட்டமேதான் சிரிப்பா சிரிக்குதடி; அவ வூட்டுக்குள்ள நுழையட்டும் அப்புறம் என்னா நடக்குதுன்னு பாரு…” என்றார் மாயாண்டி ஆவேசமாக. 

“நாம் அவளை அடிச்சி ஒதைக்கிறதுனால ஒண்ணும் பெரயோசனமில்லீங்க; இப்புடி நாம் அடிக்கடி ஏசிக்கிட்டு இருந்தோமுனா ஒருவேளை அந்தப் பயகூட ஓடினாலும் ஓடிப்போயிடுவாளுங்க” என்றாள் மீனாச்சி கலக்கத்துடன்.

“அப்புடீன்னா அவளை அவேன் கூடவே சுத்திக்கிட்டு இருக்கச் சொல்லுறியா? இவளை என்னதாண்டி செய்யுறது?” 

“இப்ப இருக்கிற நெலமையில் பேசாம அவளுக்கு ஒரு கலியாணித்தைப் பண்ணி வைக்கிறதுதாங்க புத்திசாலித்தனம். சும்மா சும்மா வூட்டுல சத்தம் போட்டு கிட்டு இருக்கிறதில் வேலையில்லீங்க,” 

“சரி நீ சொல்லுறபடி பாத்தாலும் இப்ப அவளுக்கு கலியாணம் செஞ்சு வைக்கிறதுக்கு ஒரு நல்ல மாப்பிளை பாக்க வேணாமா? இந்தக் காலத்தில நம்ம தகுதிக்கு ஒரு பையன் கெடைக்க வேணுமே. மாப்புளையென்ன கடையில காசு குடுத்து வாங்கிற சாமான்னு நெனைச்சுக்கிட் டியா?” எனக் கேட்டார் மாயாண்டி. 

”அவ்வளவு தூரத்துக்கு ஏங்க போறீங்க… ராசாத் தோட்டத்திலே இருக்கிற ஓங்க தங்கச்சி மவனுக்குத்தான் நம்ம செந்தாமரையை கட்டித்தாங்கனு அடிக்கடி கேட்டுக்கிட்டு இருங்காங்களே, அந்தப் பொடியனுக்கே கட்டிக் குடுத்திட்டாப் போகுதுங்க.” 

“நீ லேசா சொல்லிப்புட்டே; அந்தப் பயலை இவளுக்குப் புடிக்கவேணுமே. அவனைப் பாத்தா ஒரு மாதிரி மக்குப் பயலா இல்லியா இருக்கான்” என்றார் மாயாண்டி. 

“பயலைப் பத்தி என்னாங்க பாக்கிறது. இவவூட்டு நடத்தையே எனக்குப் புடிக்கல்ல. ஏதாச்சும் வயித்திலே வாயில வந்துருச்சினா… அப்புறம் தோட்டமே நம்மளைப் பாத்துத் துப்புமே” என மீனாட்சி கவலையுடன் கூறினாள். அவளது கண்களில் நீர் முட்டியது. 

“சரி சரி மீனாச்சி நீ சொல்லுறபடியே செய்வோம். நான் வாறகெழம ராசாத் தோட்டத்துக்கு போயி அவுங்க கிட்ட பேசி முடிச்சுகிட்டு வாறேன். சட்டுப்புட்டுனு கல்யாணத்த நடத்திப்புடுவோம்” எனச் சிந்தனையுடன் கூறினார் மாயாண்டி. 

“ஏங்க நான் ஒண்ணு கேக்கிறேன். நீங்க அங்கபோய் கல்யாணத்துக்கு வேண்டிய எல்லா வெசயத்தையும் முடிச்சிட்டு வந்தவொடன. இங்க இவ ஏதும் மறுப்பு தெரிவிச்சு கொழப்பம் பண்ணிப்புட்டாளென்னா என்னாங்க செய்யுறது? மாப்பிளை வூட்டுக் காரங்களுக்கு என்னா பதில் சொல்லுறது? அப்புறம் நாம தலைநிமிர்ந்துதான் நடக்க முடியுமா?’ எனக் கவலையுடன் கேட்டாள் மீனாச்சி. 

”என்ன மீனாச்சி வெளங்காம கறைக்கிற… நாம ஏன் இவகிட்ட எல்லா வெசயத்தையும் சொல்லணும். நான் ஒரு நாளைக்கு ராசாத் தோட்டத்துக்குப் போயி ரகசியா கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை முடிச்சுப்புட்டு வந்துடுறேன். சரியா சொன்ன தேதிக்கு அங்க விருந்தாளி போற மாதிரி செந்தாமரையையும் அழைச்சுக்கிட்டுபோவோம்”

“ஆமாங்க மாப்பிளை வூட்டுக்காரங்களும் அங்க ரெடியா இருப்பாங்க; அந்தத் தோட்டத்து மாரியம்மா கோயில்லையே தாலிய கட்டிப்புடலாம்” என்றாள் மீனாச்சி. ”ரொம்ப ரகசியமாத்தான் இத நாம செய்யனும். வெளியில் யாருக்கும் தெரியக்கூடாது…” என மாயாண்டி கூறிய போது வெளியே இஸ்தோப்பில் யாரோ நடந்து வரும் அரவம் கேட்டது. 

யன்னல் ஊடாக எட்டிப் பார்த்த மீனாச்சி “செந்தாமர குளிச்சிட்டு வந்துட்டா” என மெதுவாகக் கூறிவிட்டு தனது வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள். 

மாயாண்டி அடுப்பின் அருகே சென்று குளிர் காயத் தொடங்கினார். 

வேலை முடிந்து வீடுதிரும்பியிருந்த ராக்கு இவர்களது சம்பாஷணையைத் தனது காம்பராவில் இருந்தபடியே கேட்டுக்கொண்டிருந்தாள். அவளது உள்ளம் பெரிதும் கலக்கமடைந்தது. செந்தாமரையிடம் இந்த விஷயத்தைக் கூறி, அவளை எப்படியும் இந்தச் சிக்கலிலிருந்து காப்பாற்றிவிடவேண்டுமென அவள் எண்ணிக்கொண்டாள். 

அத்தியாயம் இருபத்தேழு

மடுவத்தில் தொழிலாளர்கள் நிறைந்திருந்தனர். 

முதலில் கொழுந்து நிறுத்துப் பேர்போட்டு முடிந்த ஒருசில பெண்கள் ஏற்கனவே லயத்துக்குத் திரும்பியிருந்தனர். வேறு சிலர் கொழுந்துகளைக் கயிற்றுச் சாக்குகளில் போட்டுக்கட்டி ஸ்டோருக்கு அனுப்புவதற்குத் தயாராக் கிக் கொண்டிருந்தனர். 

சாக்குக்காரன் சுமணபால், கொழுந்து நிறைந்த சாக்குகளை லொறியில் ஏற்றுவதற்கு வசதியாக மடுவத்து வாசலில் எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தான். 

அப்போது தோட்டத்து லொறி மடுவத்தை வந்த டைந்தது. என்றும் இல்லாதவாறு துரையும் அந்த லொறி யில் வந்திருந்தார். அவர் அங்கு வந்ததும், மடுவத்தில் இவ் வளவு நேரமும் நிறைந்திருந்த இரைச்சல் குறைந்து அமைதி நிலவியது. துரை லொறியை விட்டிறங்கி மடுவத்திற்குள் நுழைந்தபோது அவரது முகத்தில் கலக்கம் குடி கொண்டிருப்பதை சிலர் அவதானிக்கத் தவறவில்லை. 

கண்டக்டர் எழுந்து துரைக்கு வணக்கம் தெரிவித்தார். அங்கு நின்ற தொழிலாளர்களும் துரைக்கு சலாம் வைத்து மரியாதை செய்தனர். 

துரை ஒரு கணம் அங்கு நின்றவர்களைக் கவனித்து விட்டு மேசையின் பக்கத்திலிருந்த நாற்காலியில் போய் அமர்ந்துகொண்டார். 

துரை தங்களுக்கு ஏதோ சொல்ல விரும்புகின்றார் என்பதைப் புரிந்துகொண்ட தொழிலாளர்கள் அவர் முன்னே சென்று அடக்கமாக நின்றனர். வீரய்யாவும் ராமுவும் முன் வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். 

“இப்ப நாங் ஒங்களுக்கு ஒரு முக்கியமான விஷயங் சொல்லத்தாங் வந்தது. தோட்டத்தை இந்த மாசத்தோட மூடச்சொல்லி அரசாங்கத்திலயிருந்து இன்னிக்கு எனக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு. வாற மாசத்திலயிருந்து ஓங்களுக்கு இந்தத் தோட்டத்தில வேலையில்லை, வேலை நிப்பாட்டிரது.” 

துரை இப்படிக் கூறியதும் எல்லாத் தொழிலாளர்களும் திகைத்துப்போய் நின்றனர். 

துரை கூறிய விஷயம் அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. தோட்டத்தை கொலனிக்குக் கொடுக்கப்போவதை அவர்கள் அறிந்துதான் இருந்தார்கள். அதற்குத் தங்களது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும் திட்ட மிட்டிருந்தனர். ஆனாலும் இப்படித் திடீரென ஒரு மாதத் தவணையில் தோட்டத்தை மூடுவார்களென அவர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தோட்டத்தில் தொடர்ந்தும் வேலை நடந்துகொண்டே இருக்கும். அப்போது சிறிது சிறிதாக தொழிலாளர்களைத் தோட்டத்திலிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சிப்பார்கள்; அதே வேளையில் குடியேற்றமும் நடக்கும் என்று தான் அவர்கள் நினைத்திருந்தனர். தோட்டத்தில் வேலையை நிறுத்துவது அவர்களது காலையே வாரிவிடுவது போன்ற நிகழ்ச்சி. வேலை வழங்கா விட்டால் அவர்களுக்கு சாப்பாட்டுப் பிரச்சினை தலைதூக்கி நிற்கும். எதனையும் எதிர்த்துப் போராடுவதற்கு வேண்டிய சக்தி அவர்களுக்கு இல்லாமல் போய்விடும். 

வீரய்யா தன்னை சுதாகரித்துக்கொண்டு “என்னாங்க தொர. இப்புடித் திடீருனு வந்து சொல்லுறீங்க… நாங்க பொறந்து வளந்ததே இந்தத் தோட்டந்தானுங்களே; இந்தத் தோட்டத்த நம்பித்தானுங்களே நாங்க எல்லாம் இங்க வேலை செஞ்சிகிட்டு இருக்கோம். வேலைய நிப்பாட் டினா நாங்க எப்புடீங்க தொரை பொழைக்கிறது…?” எனப் பணிவாகக் கேட்டான். 

“அதிங் நமக்கும் மிச்சம் மனவருத்தங்தான். இப்படி வாறது சொல்லி நமக்குத் தெரியாது தானே. இது அரசாங்கத்திலயிருந்து நமக்கு சொல்லி இருக்கு. அதனாலதான் வேலை நிப்பாட்டுறது. நீங்கெல்லாம் வேற தோட்டத்துக்கு போகவேணும்.” 

“அப்புடி திடீருனு போகமுடியாதுங்க. நாங்கெல்லாம் லயத்தில ஆடு, மாடு, கோழி, மரக்கறித் தோட்ட மெல்லாம் வச்சிருக்கோம். ரொம்பக் கஷ்டப்பட்டுத் தாங்க இதெல்லாம் நாங்க செஞ்சோம். இதெல்லாத்தையும் வுட்டுப்புட்டு நாங்க எப்புடி போறது” எனக் கூட்டத்தில் இருந்து ஒரு குரல் எழுந்தது. 

“எங்க பாட்டன் பூட்டன் காலத்திலயிருந்தே நாங்க மாங்காமரம், பெலாக்கா மரம், பாக்குமரம் இன்னும் நெறைய மரங்களெல்லாத்தையும் வச்சுகிட்டு இருக்கோம். நாங்க போற எடத்துக்கு இது எல்லாம் கொண்டு போக முடியுங்களா தொரை?” என்றது இன்னொரு குரல். 

“அப்புடி தொர சொல்றமாதிரி போறதுன்னா, நாங்க எல்லாம் எந்த தோட்டத்துக்குத்தான் போறது?” என மூலையிலிருந்து ஒரு குரல் கேட்டது. 

இவ்வளவு நேரமும் தொழிலாளர்கள் கூறியதையே கேட்டுக்கொண்டிருந்த துரை கூறினார். 

“ஓ… அதுதான் ரொம்ப தோட்டங் இருக்குத்தானே. இந்தியாவுக்கு இப்ப ரொம்ப ஆள் போயாச்சு. அந்தத் தோட்டங்களுக்கு ஒங்களை எல்லாம் அனுப்பறது; இப்ப நீங்க இங்க ஆடு, மாடு, கோழி எல்லாங் வளக்கிற மாதிரி அங்கையும் வளக்க முடியும். அங்கேயும் ஒங்களுக்கு அந்த மரங்கள் எல்லாம் இருக்குத்தானே…” 

“நாங்கெல்லாம் இந்தத் தோட்டத்திலேயே பொறந்து வளந்து ஒரு குடும்பம் மாதிரி இருக்குறோமுங்க தொர…நீங்க சொல்லுற மாதிரி நாங்க வேற தோட்டத்துக்குப் போறதாயிருந்தா நீங்க எங்களையெல்லாம் பிரிச்சு பிரிச்சுத்தானே அனுப்புவீங்க… அப்புடி எங்களால போய் இருக்க முடியாதுங்க” என்றான் வீரய்யா உறுதியான குரலில். 

“நீங்க சொல்லுற மாதிரி நான் கேக்க முடியாது. அரசாங்கம் சொல்லுறது தான் நான் செய்யுறது, மாசம் முடிய எல்லாரும் தோட்டத்தவுட்டு போயிடணும், அதிக்கு தோட்டக் கணக்கில லொறி எல்லாங் கொடுக்கிறது” எனக் கூறினார் துரை சற்று விறைப்பான குரலில். 

அப்போது லொறியில் கொழுந்துச் சாக்குகளை ஏற்றி முடித்துவிட்டு வந்த சுமணபால் “அரசாங்கம் எடுத்ததில இருந்து தான் இந்தத் தோட்டமே காடாகிப் போய் விட்டதே. இப்போது தொழிலாளர்களின் சுதந்திரத்திலும் தலையிட்டு அவர்களையும் நாசமாக்கப் போகின்றார்கள் போலத் தெரிகிறது” எனச் சிங்களத்தில் கூறினான். 

துரை அவனை நிமிர்ந்து பார்த்தார். அவனது உணர்ச்சிகளை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. 

“யாரு என்னா சொன்னாலும் தொர, நாங்க இந்தத் தோட்டத்தவுட்டு போகமாட்டோம்” எனக் கூறினான் வீரய்யா திடமான குரலில். 

“ஆமாங்க…நாங்க போகமாட்டோம்…” எனக் கூட்டத்திலிருந்து பல குரல்கள் ஒரே சமயத்தில் ஒலித்தன. 

துரையின் நிலைமை மிகவும் தர்மசங்கடமாகப் போய் விட்டது. ஆனாலும் இந்த விடயத்தில் அரசாங்கத்தின் உத்தரவுக்கு மாறாகத் தான் நடந்தாலோ அல்லது தொழிலாளர்களோடு கதைத்தாலோ அது தனது தொழிலுக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். மேலும் தோட்டத்திலே நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மேலிடத்துக்கு அறிவிப்பதற்கு அங்கு அரசியல் ஆதரவாளர்கள் பலர் இருக்கிறார்களென்பதும் அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தன. 

இந்நிலையில் அரசாங்கத்தின் உத்தரவுக்குக் கட்டுப் பட்டு நடப்பதைத் தவிர வேறு வழியேதும் இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. 

“நீங்க எல்லாங் சும்மா அரசாங்கத்தோட எதிர்த்துக்கிட்டு இருக்கிறதுல பொரயோசனம் இல்லை. ஒங்களால ஒன்னுங் செய்ய முடியாது. ஒங்களுக்கு அரசாங்கம் எல்லா வசதியுங் செஞ்சிதானே வேற தோட்டத்திக்கி அனுப்புறது. அப்போ எல்லாங் போக வேண்டியது தானே” எனக் கூறினார் துரை. 

“இது நாங்க பொறந்த பூமிங்க… இதை வுட்டிட்டு எங்களால போக முடியாதுங்க. இங்கதாங்க நாங்க பொறந்தோம், வளந்தோம், கஷ்டப்பட்டோம். அந்தக் கஷ்டங்களுக்குள்ளேயே வாழ்ந்தோம். இந்த எடத்தவுட்டு நாங்க போகமாட்டோமுங்க தொரை…” இப்படிக் கூறும் பொழுது வீரய்யா சற்று உணர்ச்சிவசப்பட்டான். 

தோட்டத்தை விட்டு தொழிலாளர்கள் வெளியேற மறுப்பதற்குரிய காரணம் இப்போதுதான் துரைக்கு நன்கு விளங்கியது. ஆனாலும் அவர் மேலிடத்தில் இருந்து வரும் உத்தரவுக்கு கட்டுப்பட்டவர். அவற்றை மீறி அவரால் எதுவும் செய்ய முடியாது. சிந்தனையுடன் எழுந்திருந்த அவர் கண்டக்டரின் பக்கம் திரும்பி- 

“இந்த மாத முடிவில் எஸ்டேட் மூடவிருப்பதால் கூடியவரை செலவினங்களை தவிர்க்கவேண்டும். கொழுந் தெடுக்கும் வேலையைத் தவிர மற்றைய வேலைகள் எல்லாவற்றையும் உடனே நிறுத்திவிடவேண்டும்” என ஆங்கிலத்தில் கூறிவிட்டு விருட்டெனச் சென்று லொறியில் ஏறினார். லொறி ஸ்டோர் பக்கமாகப் புறப்பட்டுச் சென்றது. 

துரை ஆங்கிலத்தில் கூறியதை கண்டக்டர் தொழி லாளர்களுக்கு தமிழில் விளக்கிக் கூறினார். 

அங்கு நின்ற தொழிலாளர்களின் உள்ளங்கள் நிம்மதியற்றுத் தவித்தன. எல்லோருக்கும் ஒரே குழப்பமாக இருந்தது. என்ன செய்வதென்றே புரியவில்லை. எல்லோரும் வீரய்யாவை சூழ்ந்துகொண்டு அவனது கருத்தை அறிய முற்பட்டனர். 

“நீங்க எல்லாரும் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுக் கும் வரவேணாம்… நாங்க இந்தத் தோட்டத்தை வுட்டுப் போறதில்லேனு முடிவு செஞ்சிட்டோம். அந்த முடிவை எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நாங்க மாத்தப்போறதில்ல. எல்லாரும் ஒத்துமையா இருந்து போராடுவோம். நான் இன்னிக்கே நம்ப ஜில்லாவில போய் எல்லா விபரத்தையும் சொல்லி நடவடிக்கை எடுக்கச் சொல்லுறன். இப்ப எல் லாரும் அமைதியா வூட்டுக்குப் போங்க” என வீரய்யா கூறினான். 

வீரய்யாவின் கூற்று அங்கு நின்றவர்களுக்கு சிறிது ஆறுதலைக் கொடுத்தது. ஒவ்வொருவராக அவ்விடத்தை விட்டுக் கலைந்தனர். 

வீரய்யா சிந்தனையுடன் தொழிற்சங்கக் காரியாலயத்தை நோக்கிப் புறப்பட்டான். 

அத்தியாயம் இருபத்தெட்டு

ஸ்டோருக்கு அருகிலுள்ள மலையில் ஆண்களும் பெண்களுமாகப் பலர் கொழுந்து பறித்த வண்ணமாக இருந்தனர். தோட்டத்தைக் கொலனிக்குக் கொடுக்கப் போவதால் இப்போது ஆண்களுக்குக் கொடுக்கப்படும் சில்லறை வேலைகள் யாவும் நிறுத்தப்பட்டிருந்தன. ஆண்களுக்கும் இப்போது கொழுந்தெடுக்கும் வேலையே வழங்கி னார்கள். 

அவர்கள் எல்லோரும் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போதிலும், ஒவ்வொருவரது மனதிலும் கலக்கமும், பெரும் சஞ்சலமுமே குடிகொண்டிருந்தன. இன்னும் சிறிது நாட்களில் தோட்டத்தைவிட்டு எல்லோருமே போய்விட வேண்டுமென்று துரை அறிவித்ததிலிருந்து அவர்கள் எல்லோரது உள்ளத்திலும் தங்களது எதிர் காலத்தைப்பற்றிய தெளிவற்ற நிலை உருவாகியிருந்தது. 

வழமைபோல கண்டக்டர், கணக்கப்பிள்ளை போன்ற உத்தியோகத்தர்கள் இப்போது மலைக்கு வந்து அடிக்கடி வேலைகளைக் கவனிப்பதில்லை. கண்டக்டர் காலையிலேயே ஆபிசுப் பக்கம் போய்விட்டார். கணக்கப்பிள்ளை மட்டும் கொழுந்து நிறுப்பதற்காக மடுவத்திற்கு வந்துவிட்டுத் திரும்பினார்; அப்போது மேலோட்டமாகக் கொழுந்தெடுப்பவர்களைக் கவனித்துவிட்டு கங்காணியிடம் ஒரு சில வார்த்தைகள் பேசிவிட்டுச் சென்றார். 

தோட்டத்தில் இப்போது ஒரு தேக்க நிலை ஏற்பட்டி ருந்தது. எவருமே அக்கறையோடு எந்த வேலையையும் கவனிப்பது கிடையாது. தொழிலாளர்களும், உத்தியோகத்தர்களும் ஏதோ கடமைக்காகத் தத்தமது வேலைகளைச் செய்தனர். 

மலையிலே கொழுந்து பறித்த ஆண்களும், பெண் களும் வாய் ஓயாமல் தோட்டம் கொலனிக்கு எடுக்கப் போவதைப்பற்றியே கதைத்த வண்ணம் இருந்தனர். 

தொழிலாளர்கள் வேலையில் கவனம் செலுத்தாது கதைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த வீரய்யா. 

“சும்மா சும்மா… ஏன் இதபத்தியே கதைச்சிக்கிட்டு இருக்கீங்க. நாமெல்லாம் ஒத்துமையா இருந்தா, அவுங்க எப்புடி நம்மள வேற தோட்டத்திற்கு அனுப்ப முடியும்? நாங்க ஒருபோதும் இந்தத் தோட்டத்தவுட்டு போகப் போறதில்லேனு முடிவு செஞ்சிருக்கோம். இந்த தோட்டத்துல நம்மளக்கு வேல கொடுக்காமப் பட்டினி கெடந்தாலும், நம்ப உயிரைக் கொடுத்துப் போராடுவோம்?’ என உறுதியான குரலில் கூறிவிட்டு மட்டத்திற்கு மேல் வளர்ந்துபோய் இருக்கும் தேயிலைச் செடியைத் தனது கையில் இருக்கும் கத்தியினால் மட்டப்படுத்தினான். 

“யார் வந்து எங்களை வெரட்டினாலும், எவர் வந்து எங்களை தோட்டத்துவுட்டுப் போகச் சொன்னாலும், யாரும் தோட்டத்தவுட்டு அசையக்கூடாது” எனக் கண் டிப்பான குரலில் கூறினான் கொழுந்தெடுத்துக்கொண்டிருந்த ராமு. 

மலையில் கொழுந்தெடுத்தவண்ணம் தொழிலாளர்கள் வெகுதூரம் சென்றபோது, ஜீப் வண்டியொன்று பலத்த உறுமலுடன் ஸ்டோர் முடக்கில் வந்தது. அது ஆபீசுப் பக்கத்திலிருந்து வந்துகொண்டிருப்பதை மலையில் நின்றபடியே வீரய்யா கவனித்தான். 

ஜீப் வண்டியின் உள்ளே. முன் ஆசனத்தில் மூவர் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் கண்டக்டரும், பெரிய கிளாக்கரும் இருந்தனர். மடுவத்தின் அருகே ஜீப் வண்டி நிறுத்தப்பட்டதும் அதிலிருந்த கண்டக்டர் முதலில் இறங்கினார். 

தூரத்தே கொழுந்து பறித்துக்கொண்டிருக்கும் தொழிலாளர்களை அவர் ஒரு தடவை நிமிர்ந்து பார்த்தார். பின்னர் குறிப்பாக வீரய்யாவைப் பார்த்து அவனை அருகே வரும்படி கையசைத்தார். வீரய்யா அவசர அவசரமாகத் தேயிலைச் செடியைப் பிடித்துக்கொண்டு மலையிலிருந்து இறங்கி வந்தான். ராமுவும் கொழுந்துக் கூடையை மலையிலே எறிந்துவிட்டு அவனைத் தொடர்ந்து ஓடிவந்தான். 

“வீரய்யா இவுங்க எல்லாங் அரசாங்கத்தில் உள்ளவங்க, காணி அளக்கிற ‘டிப்பாட்மெண்’டிலயிருந்து வந்திருக்காங்க. நம்ப தோட்டத்த கொலனிக்கு கொடுக்கப் போறதுதானே. அதுனாலதான் காணி எல்லாங் அளந்து கணக்குப் பாக்கப் போறாங்க.” 

கண்டக்டர் இப்படிக் கூறியதும் வீரய்யா ஒரு கணம் திகைத்து நின்றான். அவனால் உடனே எவ்வித பதிலையும் கூற முடியவில்லை. 

“நீங்க கொழுந்தெடுக்கிற மலையத்தாங் இப்ப அளக்கப் போறது. அதுனால நீங்க எல்லாங் முப்பதாம் நம்பர் மலைக்குப் போகவேணுங்” எனத் தொடர்ந்து கூறினார் கண்டக்டர். 

“ஐயா எங்களுக்கு ஒரு முடிவும் தெரிவிக்காம இப்புடி நீங்க திடீரென்னு வந்து இந்தத் தோட்டத்தை கூறு போட்டு, மத்தவங்க கையில கொடுக்க நாங்க அனுமதிக்க முடியாதுங்க; நாங்க இவுங்களை காணி அளக்க விடமாட்டோம்” வீரய்யா தன்னைச் சுதாகரித்தபடி கூறினான். 

“நாங்க இந்தத் தோட்டத்தவுட்டு போகமாட்டோம். யாரும் காணி அளக்கிறதா நெனச்சி தேயில உள்ளுக்கு கால் வச்சா, அப்புறம் என்ன நடக்குமுனு தெரியாது” படபடப்புடன் கூறினான் பக்கத்தில் நின்றிருந்த ராமு. 

கண்டக்டருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. 

அப்போது ஜீப்பினுள் இருந்த பெரிய கிளாக்கர், “இந்தா பாரு, நீயெல்லாங் வெளங்காம கதைக்கிறது. இப்ப அரசாங்கம் சொல்லுறபடிதாங் நாங்க செய்ய வேணுங். நீங்க காணி அளக்க வந்தவங்களுக்கு கரச்சல் கொடுக்க வேணாங்” எனக் கூறிக்கொண்டு ஜீப்பிலிருந்து கீழே இறங்கினார். 

“அப்புடி முடியாதுங்கையா… இங்க இருக்கிற தேயிலையெல்லாம் அரசாங்கம்வந்து நட்டு வைக்கல. நாங்க நட்டுவச்ச தேயிலையுங்க. இதவுட்டு நாங்க செத்தாலும் போகமாட்டோம்” எனக் கூறினார் அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்த கறுப்பண்ணன் கங்காணி. உணர்ச்சியால் அவரது ரோமங்கள் துடித்தன. 

பெரிய கிளாக்கரைப் பார்த்து கறுப்பண்ணன் கங் காணி கூறியது, கண்டக்டருக்குப் பெருங் குழப்பமாக இருந்தது. எப்போதும் தனது பேச்சுக்குத் தலையாட்டும் கறுப்பண்ணன் கங்காணிகூட மாறிவிட்டது அவருக்குப் பெரும் வியப்பாக இருந்தது. 

மேலும் பல தொழிலாளர்கள் இப்போது ஜீப்பின் அருகே வந்து சேர்ந்தனர். 

“என்ன மிஸ்டர், இந்தத் தொழிலாளர்கள் எல்லோரும் ஏன் சத்தம் போடுகிறார்கள்…? அரசாங்கம் சொன்ன படிதானே நாங்கள் செய்யவேண்டும். நாங்கள் எங்களது கடமையைத்தான் செய்யவந்திருக்கிறோம். எங்களுக்கு இடைஞ்சல் கொடுக்க வேண்டாமென்று சொல்லுங்கள்” அளக்க வந்த உத்தியோகத்தர்களில் ஒருவர் பெரிய கிளாக்கரைப் பார்த்து ஆங்கிலத்தில் கூறினார். 

“இவர்கள் நமது பேச்சைக் கேட்கமாட்டார்கள் போல் தெரிகிறது. இப்போதே நான் ஆபீசுக்குச் சென்று பொலிசுக்கு டெலிபோன் பண்ணி அவர்களை இங்கு வரவழைக்கின்றேன்” என்றார் பெரிய கிளாக்கர் ஆத்திரத்துடன். 

இவர்களது சம்பாஷணை வீரய்யாவுக்கும் ஓரளவு புரிந்தது. 

“அவசரப்பட்டு அப்படியொன்றும் செய்துவிடாதீர்கள். நியாயமான முறையில் இவர்களுடன் பேசிப்பார்ப்போம்” எனக் கூறியபடி ஜீப்பில் இருந்த ஓர் அதிகாரி கீழே இறங்கினார். 

“ஐயா தயவுசெய்து நீங்கள் இன்று காணி அளக்க வேண்டாம். உங்கள் மேலதிகாரியிடம் சென்று. இந்தத் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் எல்லாரும் காணி அளப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்று கூறுங்கள்…” என அந்த உத்தியோகத்தரைப் பார்த்து மிகப் பணிவுடன் கூறினான் வீரய்யா. 

“அதெல்லாம் முடியாது… அரசாங்கக் கடமையைச் செய்ய வந்த எங்களை நீங்கள் தடுப்பது மிகவும் பெரிய குற்றம். உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை நீங்கள் வேண்டுமானால் எமது மேலிடத்திற்குத் தெரியப்படுத்துங்கள்… எங்களுக்குக் கரச்சல் கொடுக்கவேண்டாங் . நாங்கள் காணியை அளக்கத்தான் போகின்றோம்” எனச் சினத்துடன் கூறினார் அந்த அதிகாரி. 

அவர்களோடு மேலும் கதைப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லையென வீரய்யா உணர்ந்துகொண்டான். 

“சரி ஐயா, நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்.எங்களுக்கும் சில கடமைகள் இருக்கின்றன. நாங் கள் அதனைச் செய்தே தீருவோம். அதனால் உங்களுக்குச் சில வேளை சிரமங்களும் நேரிடலாம். பின்பு எங்களைக் குறை சொல்லாதீர்கள்” என வீரய்யா அடக்கமாகக் கூறினான். 

பின்பு தொழிலாளர்களைப் பார்த்து, “நீங்கள் எல்லாம் பதட்டப்படாம அமைதியா முப்பதாம் நம்பர் மலையில போய் கொழுந்தெடுங்க. இவங்களோட இப்ப நாங்க கரச்சலுக்குப் போறது முறையில்லை. இவுங்க மேலதிகாரியின் சொற்படிதானே நடக்கணும். இதுபத்தி நாங்க ஆறுதலா யோசிச்சு ஒரு முடிவுக்கு வருவோம்” எனக் கூறினான். 

தொழிலாளர்கள் யாவரும் முப்பதாம் நம்பர் மலையை நோக்கிச் சென்றனர். நில அளவையாளர்கள் சிறிது நேரம் பெரிய கிளாக்கருடனும், கண்டக்டருடனும் உரையாடிவிட்டு, தாங்கள் கொண்டுவந்த கருவிகளுடன் மலையின் பக்கம் சென்றனர். 

பெரிய கிளாக்கரும், கண்டக்டரும் தங்களுக்குள் ஏதோ பேசிச் சிரித்தவண்ணம் ஆபீஸ் பக்கம் சென்றனர். 

அத்தியாயம் இருபத்தொன்பது

கிராமத்தின் ஓரமாக உள்ள தோட்டத்து மலைகளில் ‘ரவுண்ட்’ பிந்தியதால் எங்கும் கொழுந்து நிறைந்து பச்சைப்பசேலென காட்சி அளித்தது. 

அதிகாலையிலே கிராமத்தில் உள்ளவர்கள் பலர் சாக்குகளுடன் தோட்டத்தை நோக்கி ஒற்றையடிப் பாதையில் படையெடுத்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் கிராமத்தின் எல்லையிலே உள்ள மலைகளில் ஏறி ஆங்காங்கே நின்று கொழுந்தெடுக்கத் தொடங்கினர். 

கொழுந்தெடுத்து முன்பின் பழக்கமில்லாதவர்கள் வயல் வெட்டும் அரிவாளால் கொழுந்தை அரிந்து தமது சிறிய சாக்குகளுக்குள் நிரப்பத் தொடங்கினர். ஒருசிலர் தாங்கள் அணிந்திருக்கும் சாரத்தை முழங்கால் வரை மடித்துக் கட்டிக்கொண்டு கொழுந்துகளை உருவி, சாரத்துக்குள் திணித்தனர். 

எப்படியாவது பெருந்தொகையான கொழுந்துகளைச் சேர்த்து விடவேண்டும் என்பதிலேயே எல்லோரது குறிக்கோளும் இருந்தது. நேரம் செல்லச் செல்ல கிரா மத்தில் இருந்து மேலும் பலர் வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு மிகவும் குதூகலத்துடன் கொழுந் தெடுத்துக் கொண்டிருந்தனர். 

“டேய்… நாங்கள் இப்படி களவாகக் கொழுந்தெடுப் பதை யாரும் கண்டால் நமக்கு கரச்சல்தான் வரும். யாராவது பார்க்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும்” என்றான் பொடிசிங்கோவுக்கு பக்கத்தில் நின்று கொழுந்தை அரிவாளால் அரிந்து கொண்டிருந்தவன். 

“என்ன நீ இப்படிப் பயப்புடுறாய்… நாங்களெல் லோரும் பட்டப் பகலில் துணிவோடு கொழுந்து எடுத்துக் கொண்டு இருக்கிறோம்… எவராலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது” என்றான் பொடிசிங்கோ அலட்சியமாக. 

“துரை பொலிசுக்கு தகவல் கொடுத்து விட்டால் என்ன செய்வது?” எனக் கேட்டாள் அங்கு கொழுந்தெடுத்துக் கொண்டிருந்த பெண்ணொருத்தி, 

“அம்மே, நீங்கள் ஒன்றுக்கும் பயப்படாதீங்க. பொலிசுக்காரன் என்ன தேயிலைத் தூரிலையா மறைந்திருந்து எங்களைப் பிடிக்கப் போறான். மேல் ரோட்டில் ஜீப் வரும்போதே நமக்கு தெரிந்து விடும். அப்போது எல்லோரும் நாட்டிற்குள் இறங்கி விடலாம்” எனச் சண்டிக் கட்டோடு கொழுந்தெடுத்துக் கொண்டிருந்தவன் கூறினான். 

“அப்படிப் பொலிசில் பிடித்தாலும் எங்களை என்ன தான் செய்யப் போகிறார்கள். நமது வாக்குமூலத்தை எடுத்துக்கொண்டு அனுப்பி விடுவார்கள்தானே” என்றான் சற்றுத் தூரத்தில் கொழுந்து எடுத்துக் கொண்டிருந்த மற்றொருவன். 

“நாட்டில் இருந்து எல்லோருந்தானே இங்கு வந்து கொழுந்தெடுக்கிறோம். எல்லாரையும் பொலிஸ் பிடித்து விட முடியுமா?” என்றான் பொடிசிங்கோ. 

“நாங்கள் என்ன அநியாயமா செய்கிறோம். இந்தத் தோட்டத்தை நமக்குத்தானே பிரித்து கொடுக்கப் போகிறார்கள். நமக்கு கிடைக்கப் போகும் காணியில் கொழுந்தெடுப்பதற்கு நாம் ஏன் பயப்பிட வேண்டும்” என்றான் அரிவாளால் கொழுந்து அறுப்பவன். 

“இந்த தோட்டத்து ஆட்கள் எல்லோரும் நமக்கு காணி கொடுக்க விடாமல் தடுக்கிறார்கள். நாங்கள் செய்கிற  செயலில் இருந்தே அவர்கள் தோட்டத்தை விட்டு ஓடி விடவேண்டும்” என்றான் பொடிசிங்கோ. 

தூரத்தில் தெரியும் லயங்களின் முன்னால் சிறுவர்களும் பெரியவர்களுமாக பலர் கூடி நின்று இவர்கள் கொழுந்தெடுப்பதையே கவனித்தபடி இருந்தனர். 

அதைக் கவனித்த ஒருத்தி “தோட்டத்து ஆட்களெல்லாம் லயத்திலிருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் போய் துரையிடம் சொல்லுவார்கள்’ எனப் பயந்தபடி கூறினாள். 

“துரை வந்தாலென்ன, யார் வந்தாலென்ன இனி போவ மேல் நாங்கள் கொழுந்தெடுப்பதை நிறுத்தப் போவதில்லை” என்றான் பொடிசிங்கோ அலட்சியமாக. 

“பண்டா முதலாளியின் பேச்சைக்கேட்டு எல்லாரும் கொழுந்தெடுக்கிறோமே. நாங்க கொண்டு போகும் கொழுந்து எல்லாவற்றையும் அவர் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வாரா?” எனச் சந்தேகத்துடன் கேட்டான் சண்டிக்கட்டோடு கொழுந்தெடுத்தவன். 

“எவ்வளவு கொழுந்து கொண்டு வந்தாலும் வாங் கிறதாகத்தானே அவர் சொல்லி இருக்கிறார். பின்பு நாம் ஏன் தயங்க வேண்டும். முடிந்தவரை எடுத்துக்கொண்டு போவம்” என்றான் மூலையில் நின்று கொழுந்தெடுத்தவன். 

அப்போது தோட்டத்தில் முன்பு கங்காணியாக வேலை செய்த முதியான்சே, அவர்கள் கொழுந்தெடுக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். மேல் றோட்டில் இருந்தபடியே கொழுந்தெடுப்பவர்களை அவர் ஒரு தடவை நோட்டம் விட்டார். அவர்கள் கொழுந்தெடுத்த விதத்தைப் பார்த்ததும் அவரது நெஞ்சு பதறியது. 

“என்ன நீங்கள் செய்வது பெரிய அநியாயமாக வல்லவா இருக்கிறது. தேயிலையையே நாசமாக்கிவிடுவீர்கள் போல் தெரிகிறது; இப்படி அரிவாளால் கொழுந்து அரிந்தால் தேயிலைச் செடிகள் என்னத்துக்கு உதவும்?” என உரக்கக் கூறினார் முதியான்சே. 

“நீங்கள் எங்களுக்குக் கங்காணி வேலை பார்க்க வர வேண்டாம். உங்களுக்குத்தான் எப்போதோ தோட்டத்தில் பென்ஷன் கொடுத்துவிட்டார்களே… நீங்கள் உங்களது வேலையைப் பார்த்துக்கொண்டு போங்கள்” எனச் சூடாகக் கூறினான் பொடிசிங்கோ. 

“நான் ஒன்றும் உங்களுக்கு கங்காணி வேலை பார்க்க வரவில்லை. நீங்கள் இப்படித் தேயிலையை நாசமாக்குவதை என்னால் பாத்துக்கொண்டு பேசாமல் இருக்க முடியவில்லை” என்றார் முதியான்சே. 

“பண்டா முதலாளி நாங்கள் கொடுக்கும் கொழுந்திற்கு பணம் தருவார். எங்களது கையில் சிறிது பணம் புழங்குவது உங்களுக்கு பொறாமையாக இருக்கின்றதா? நீங்களும் வேண்டுமானால் எங்களுடன் வந்து கொழுந் தெடுங்களேன். யார் தடுக்கப் போகின்றார்கள்” என முதியான் சேயைப் பார்த்துக் கூறினான் அரிவாளால் கொழுந்து அறுப்பவன், 

“உங்களைப்போல் என்னையும் திருட்டுவேலை செய்யச் சொல்கிறீர்களா? எனக்கு ஒருபோதும் உந்தப் புத்தி வராது” எனக் கோபத்துடன் கூறினார் முதியான்சே. 

“தோட்டத்தைத்தான் விரைவில் மூடிவிடப் போகின்றார்களே. இனி எப்படி கொழுந்தெடுத்தால் தான் என்ன?” என அலட்சியமாகக் கூறினான் பொடிசிங்கோ. 

“நீங்கள் சொல்லுவதுபோல் தோட்டத்தை மூடிவிட்டாலும், பின்னர் இந்தப் பகுதியைத்தானே உங்களுக்கு பிரித்து கொடுக்கப் போகின்றார்கள். இப்போதே இப்படி மோசமான காரியத்தைச் செய்யும் உங்களுக்கு, இந்த தோட்டத்தை பிரித்துக் கொடுத்துவிட்டால் கொஞ்சக் காலத்தில் தேயிலைச் செடிகளையே அழித்துவிடுவீர்கள்” என்றார் முதியான்சே. 

அப்போது சண்டிக்கட்டோடு கொழுந்தெடுப்பவன் கூறினான்: “தோட்டத்தை பிரித்துக் கொடுக்கும்போது, கிராம சேவகரிடம் சொல்லி நமது முதியான்சே தாத்தாவிற்கு இந்த மலையை கொடுக்கச் சொல்லுவோம்” எனக் கிண்டலாகக் கூறினான். 

எல்லோரும் கொல்லெனச் சிரித்தனர். 

“என்னமோ… நீங்கள் போகும் போக்கு சரியானதாகத் தெரியவில்லை. இது எங்கேபோய் முடியுமோ தெரியாது” எனக் கூறிய முதியான்சே, மேலும் அவர்களுடன் கதைக்க விரும்பாதவராக அவ்விடத்தை விட்டு அகன்றார். இப்போது பலரது சாக்குகளிலும் கொழுந்து நிறைந்திருந்தது. அவர்கள் ஒவ்வொருவராக நாட்டுக்குத் திரும்பத் தொடங்கினர். 


பண்டா முதலாளி தனது கடையின் முன்பக்கத்தில் உள்ள கிராதியொன்றில் கொழுந்து நிறுக்கும் தராசு ஒன்றை மாட்டி வைத்துக்கொண்டு புதிதாக வாங்கிய கொழுந்துச் சாக்குகளுடன் அமர்ந்திருந்தார். 

ஒவ்வொருவராக பண்டாமுதலாளியிடம் தாங்கள் எடுத்துக் கொண்டுவந்த கொழுந்துகளை நிறுத்துக் கொடுத்தனர். பண்டாமுதலாளி ஒரு சிறிய கொப்பியில் கொழுந்து கொண்டு வந்தவர்களின் பெயரையும், அவரவர் கொண்டு வந்த கொழுந்தின் நிறையையும் குறித்துக்கொண்டு அவர்களை அனுப்பிவைத்தார். 

பின்னர் அவர் கொழுந்தை சாக்கில் திணித்துக் கட்டி. அதனைக் கிராமத்தின் எல்லையில் இருக்கும் தெரு வுக்கு ஆட்கள் மூலம் அனுப்பிவிட்டு தானும் அவர்களைப் பின்தொடர்ந்தார். 

கிராமத்தின் மறுபக்கத்தில் குறைந்த பரப்பளவு கொண்ட சிறிய தோட்டங்கள் இருக்கின்றன; அவை ஒவ்வொன்றும் தனிப்பட்டவர்களுக்கு சொந்தமான தோட்டங்கள். சிறுதோட்டச் சொந்தக்காரர்கள் தமக்கெனத் தனியாக தொழிற்சாலையை நிறுவி, தேயிலை தயாரிக்க முடியாத காரணத்தினால், தமது தோட்டங்களில் கிடைக்கும் கொழுந்தை வியாபாரிகளுக்கு விற்றுப் பணமாக்குவது வழக்கம். அக்கொழுந்துகளை வாங்குவதற் கென தனிப்பட்ட வர்த்தகர்கள் சிலர் இருக்கின்றனர். அவர்கள் தனியார் தோட்டங்களிலிருந்து தாம் வாங்கும் கொழுந்தை லொறிகளில் ஏற்றிச் சென்று தமக்கு வசதியாகவுள்ள தேயிலைச் தொழிற்சாலைகளில் பெரும் இலாபத்துடன் விற்று வருவார்கள். இப்படியான வர்த்தகர் ஒருவரிடம், தான் சேகரித்துள்ள கொழுந்துகளை விற்பனை செய்வதற்கு ஏற்கனவே ஒழுங்கு செய்திருந்தார் பண்டா முதலாளி. அதன்படி குறிப்பிட்ட நேரத்தில் அந்த வர்த் தகர் லொறியுடன் வந்து சேர்ந்தார். 

பண்டாமுதலாளி தான் கொண்டுவந்த கொழுந்துகளைச் சாக்குடன் நிறுத்து லொறியில் வந்தவர்த்தகரிடம் கொடுத்துவிட்டு அதற்குரிய பணத்தைப் பெற்றுக் கொண்டார். பின்பு ஒவ்வொருநாளும் லொறியை அங்கு கொண்டு வரும்படி அவரிடம் பணித்துவிட்டு அவர் வீடு திரும்பினார். 

அன்று மாலை பண்டா முதலாளியின் கடை ஒரே கல கலப்பாக இருந்தது. பகலில் கொழுந்தை அவரிடம் கொடுத்தவர்கள் பணத்தை பெறுவதற்காக அங்கு வந்து குழுமி இருந்தனர். 

பண்டாமுதலாளி நோட்டுக்கட்டுக்களை லாச்சிக்குள் திணித்து வைத்துக் கொண்டு குறிப்புப் புத்தகத்தைப் பார்த்து ஒவ்வொரு பெயராக வாசித்து பணத்தை எண்ணி மெனிக்காவிடம் கொடுத்தார். மெனிக்கா  புன்சிரிப்புடன் அதனை வாங்கி மீண்டும் சரியாக இருக்கிறதா எனக் கணக்குப் பார்த்துவிட்டு ஒவ்வொருவருக்கும் பணத்தை கொடுத்தாள். 

அன்று கொழுந்து கொடுத்த எல்லோருக்கும் பத்து முதல் பதினைந்து ரூபா வரை பணம் கிடைத்தது. இவ்வளவு தொகைப் கொஞ்ச நேரத்திற்குள்ளேயே பணம் அவர்களுக்கு கிடைத்துவிடுமென அவர்கள் கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை. அவர்கள் எல்லோரது உள்ளங்களிலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. எல்லோருக்கும் பணம் கொடுத்து முடிந்ததும் லாச்சியை இழுத்து மூடிக் கொண்டு எழுந்திருந்தார் பண்டா முதலாளி. பணம் பெற்றுக் கொண்டவர்கள் அவரது கடையிலேயே தமக்கு வேண்டிய உணவுப் பொருட்களையும், பலசரக்குகளையும் வாங்கினர். வேறுசிலர் பின்புறமாகச் சென்று கள் குடித்துவிட்டுச் சென்றனர். 

அன்று பண்டா முதலாளிக்கும், மெனிக்காவுக்கும் வியாபாரத்தை கவனிப்பதற்கு பெரும்பாடாகப் போய் விட்டது. ஆட்கள் எல்லாரும் கடையை விட்டு அகன்றதும், பண்டாமுதலாளி கடையை மூடிவிட்டு மேசை அருகே உட்கார்ந்து, அன்று அவருக்குச் சேர்ந்திருந்த பணத்தை எண்ணத் தொடங்கினார். மெனிக்கா அடுப்படிக்குச் சென்று கோப்பி தயாரித்து வந்து அவருக்குக் கொடுத்தாள். 

பணத்தை எண்ணியபடியே. மெனிக்காவின் பக்கம் திரும்பி, “என்ன மெனிக்கே இன்றைக்கு என்ன விச ஷம்… கோப்பி கொண்டு வந்திருக்கிறாய்” எனச் சிரிப் புடன் கேட்டார் பண்டாமுதலாளி, 

“நீங்கள் ரெம்ப களைத்துப் போனீர்கள்” எனப் புன்னகைத்தாள் மெனிக்கே. 

பண்டா முதலாளி பனத்தை எண்ணிப் பார்த்து விட்டு, அதனை லாச்சியில் வைத்துப் பூட்டினார். அவரது உள்ளம் மகிழ்ச்சியால் பூரித்தது. 

ஒரே நாளில் அவருக்கு இலாபமாக முந்நூறு ரூபா வுக்கு மேல் கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு றாத்தல் கொழுந்திற்கும் இருபது சதம் கமிஷன் வைத்தபடியால் இவ்வளவு பெருந் தொகையான பணத்தை அவர் பெற் றிருக்கிறார். உண்மையில் இவ்வளவு இலாபம் கிடைக்கு மென அவர் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்தும் இந்தக்  கொழுந்து வியாபாரத்தை நடத்தினால் மிக விரைவி லேயே அதிக பணத்தை சுலபமாக சம்பாதித்து விட லாமென எண்ணியபோது அவரது உள்ளம் நிறைந்தது.

“நாம் இப்படிக் களவாகக் கொழுந்தை வாங்கி விற் பதனால் நமக்கு ஏதும் கரச்சல் ஏற்பட்டு விடாதா? எனச் சிந்தனையுடன் கேட்டாள் பக்கத்தில் நின்றிருந்த மெனிக்கே. 

அவள் இப்படித் திடீரெனக் கேட்பதன் காரணத்தை புரிந்துகொண்டு சிரித்த பண்டாமுதலாளி,’நாம் எதற் குமே பயப்படத் தேவையில்லை. இந்த விஷயம் தோட் டத்து கண்டக்டருக்கும் பெரிய கிளாக்கருக்கும் நன்கு தெரியும். ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படுமாயின் அவர்கள் உடனே எனக்குக் தகவல் கொடுத்து விடுவார். கள். நாம் ஏற்ற நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள லாம்” எனக் கூறினார். 

“பொலிசாருக்கு ஏதும் தகவல் கிடைத்து திடீரென வந்து உங்களைக் கைது செய்துவிட்டால் நான் என்ன செய்வது”? எனக் கலக்கத்துடன் கேட்டாள் மெனிக்கே. 

“என்ன மெனிக்கே இப்படி பயப்படுகிறாய்? கட்சி அமைப்பாளர் எமக்குச் சார்பாக இருக்கும்போது, நாம் எதற்குமே பயப்படத் தேவையில்லை. அப்படி ஏதும் கஷ் டம் ஏற்பட்டாலும் அவர் ஒருபோதும் எம்மைக் கைவிட மாட்டார்” எனக் கூறிவிட்டு மகிழ்வுடன் மெனிக்கே கொடுத்த கோப்பியை சுவைக்கத் தொடங்கினார் பண்டா முதலாளி. 

மெனிக்கேயும் அவரது சந்தோஷத்தில் கலந்து கொண்டாள். 

அத்தியாயம் முப்பது

பூரணச் சந்திரன் மலைமுகட்டின் பின்னாலிருந்து வெளியே எட்டிப் பார்த்தான்.லயங்கள் யாவும் சோபை இழந்துபோய்க் கிடந்தன.ஓரிரு காம்பராக்களில் மட்டும் மினுக் மினுக்கென்று விளக்கு எரிவது தெரிந்தது. மடுவத் தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த அரைச் சுவரில், ராமுவும் செபமாலையும் வேறு இரு இளைஞர் அமர்ந்திருந் தனர். மடுவத்திலிருந்து சிறிது தூரத்தில் இருக்கும் கண்டக் டரின் பங்களாவிலிருந்து மின்விளக்கின் ஒளிக் கீறல் மடு வத்தின் ஒரு பக்கத்தில் கோடுகள்போல் விழுந்திருந்தது. இளைஞர்கள் மடுவத்தின் இருட்டான பகுதியில் அமர்ந்தி ருந்தனர்.சில்லென்று வீசிய குளிர் காற்று அவர்களின் உடலைத் தைத்தது. 

“டேய் செபமாலை, பீடி இருந்தா தாடா…சரியான கூதலா இருக்கு. ஒரு ‘தம்’ அடிச்சாத்தான் நல்லா இருக்கும்…” என்றான் ராமு மெல்லிய குரலில். 

செபமாலை தானணிந்திருந்த சேட் பொக்கட்டைத் துளாவிப் பார்த்தவாறு, “எங்கிட்ட ஒரு துண்டு பீடி கூட இல்லேடா… எனக்கும் பீடியில்லாம ஒரே பைத்தியமா இருக்கு” என வாயைச் சப்புக்கொட்டிக்கொண்டான். 

‘இந்த வீரய்யாவைத்தான் இன்னும் காணோமே.. ஏழு மணிக்கெல்லாம் வந்திருவேனு சொல்லிட்டு ஜில்லாவுக்குப் போனான்.இப்ப மணி எட்டாகுது.” 

“ஜில்லாப் பெரதிநிதி இருக்காரோ இல்லியோ தெரியாது. எத்தின மணியா இருந்தாலும் அவரைக் கண்டு கதைச்சிட்டுத்தானே வரணும். இது முக்கியமான விஷயம் இல்லியா?” என்றான் இதுவரை நேரமும் மௌனமாக இருந்த இளைஞர்களில் ஒருவன். 

அப்போது மடுவத்தின் முன்பாக ரோட்டில் காரொன்று வரும் வெளிச்சம் தென்பட்டது. 

“அடே… தொரவூட்டு கார் சத்தம் மாதிரி கேக்குது. நம்மளைக் கண்டா ஏதும் சந்தேகமா நெனைப்பாரு; கீழே இறங்கி சுவருக்குப் பின்னுக்கு மறைஞ்சிக்குங்கடா” என செபமாலை உத்தரவிட்டான். 

எல்லோரும் கீழே குதித்துச் சுவரின் பின்னால் மறைந்து கொண்டனர். துரையின் கார் மடுவத்தை நெருங்கியதும் ஒருகணம் நின்று, பின்பு அதே வேகத்துடன் புறப்பட்டுச் சென்றது. 

இளைஞர்கள் மீண்டும் சுவரின் மேல் தாவி ஏறிக்கொண்டனர். 

“தொர படம் பாக்கவோ, கிளப்புக்கோ போயிட்டுப் போறாரு… நம்மதான் தோட்டத்தவுட்டு வெரட்டுறாங்களேன்னு கவலைப்பட்டுக்கிட்டு கெடக்குறோம்; தொர ஜாலியா சுத்திட்டுப் போறாரு” என்றான் செபமாலை சலிப்புடன். 

“ஆமாடா. அவருக்கென்னா…இந்தத் தோட்டம் இல் லாட்டி வேற தோட்டத்துக்கு தொரையாப் போவாரு. நம்மளுக்குத்தான் எந்த நாளும் கஷ்டம்” எனக் கூறினான் ராமு. 

கீழே ஒற்றையடிப் பாதையில் யாரோ வருவது நிலவு வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிந்தது.இளைஞர்கள் ஒரு கணம் தங்களது சம்பாஷணையை நிறுத்திக்கொண்டனர். 

வீரய்யா அந்த ஒற்றையடிப் பாதையிலிருந்து ஏறிக் கரத்த றோட்டுக்கு வந்து மடுவத்திற்குள் நுழைந்தான். 

“போன வெசயம் எப்புடி… சரி வந்துச்சா?ஜில்லா வுல என்னா சொன்னாங்க?” என ஆவலுடன் வினவினான் ராமு. 

“இன்னும் ஒன்னும் சரியான முடிவு தெரியல்ல. தோட்டத்த கொலனியாக்குற விஷயமா யூனியனில இருந்து எதிர்ப்பு தெரிவிச்சு கடதாசி எழுதியிருக்காங்க… அதற்கு எந்தவித பதிலும் இன்னும் கெடைக்கலியாம். அதுனால ஜில்லா பிரதிநிதியால எந்த முடிவுக்கும் வரமுடியல்ல. மத்தியக் கமிட்டிய கேட்டுத்தான் சொல்லமுடியும் எங்கிறாரு” என்றான் வீரய்யா. 
 
“மத்தியக் கமிட்டியில் இருந்து பதில் வாறதுக்கு இடையில் தோட்டமெல்லாம் அளந்து கொலனிக்குக் கொடுத்திடுவாங்க போல இருக்கு…அவ்வளவு சுறுக்கா காணி அளக்கிற வேல நடக்குது” எனப் படபடத்தான் ராமு. 

“ராமு… நாங்க இப்புடியே காலத்தைக் கடத்திக் கிட்டே போனா சரிவராது..இப்ப நான் ஒரு நல்ல திட்டத் தோடதான் வந்திருக்கேன்…அதை நாங்க ரொம்ப ரகசியமாத்தான் செய்யனும்; வெளியில் மத்தவங்களுக்குத் தெரிய வந்திச்சினா அது எல்லாத்துக்கும் ஆபத்தா முடி யும்” என்றான் வீரய்யா மெல்லிய குரலில். 

“என்ன வீரய்யா சொல்லுற…அப்புடி என்னா திட்டம் போட்டு வச்சிருக்கிற…சொல்லுறத கொஞ்சம் வெளக்கமா சொல்லேன்” எனக் கேட்டான் இளைஞர்களில்  ஒருவன். 

“எல்லாரும் எங்கூட வாங்க; அப்புறம் எல்லாத்தையும் வெபரமா சொல்றேன்” எனக் கூறிய வீரய்யா, மடுவத்தை விட்டுப் புறப்பட்டான். இளைஞர்களும் அவனைப் பின் தொடர்ந்து சென்றனர். 

மடுவத்திற்கு அருகில் உள்ள மலையில் கடந்த இரண்டு நாட்களாக நில அளவைத் திணைக்களத்தினர் அளந்து கூனி அடித்திருந்த பகுதியை அவர்கள் அடைந்தனர். வீரய்யா முதலில் ஓர் கூனியைப் பிடுங்கி கையில் எடுத்தான். 

‘”என்ன வீரய்யா கூனியப் பிடுங்கிறே?” எனக் கேட்டான் ராமு. 

“காணியளக்கிறவுங்க அடிச்சிருக்கிற கூனியெல்லாம் பிடிங்கி வீசுங்க… மாயம் தெரியாம அழிச்சிப்புடுங்க. அப்புறம் எப்புடித்தான் காணியைப் பிரிச்சிக் கொடுப்பாங்கனு பார்ப்போம்” வீரய்யாவின் குரல் ஆக்ரோஷமாக ஒலித்தது. 

“என்ன வீரய்யா யோசிக்காம செய்யுற;இன்னிக்குக் கூனியெல்லாம் பிடிங்கி வீசிட்டா, நாளைக்கு நம்மளைப் பொலிசுல புடிச்சி அடைச்சிட்டு, அப்புறம் வந்து புதுக் கூனி அடிப்பானுக” எனக் கூறினான் செபமாலை. 

”இந்த விஷயத்துலதான் நாம் கவனமா இருக்கோனும்;யாரு கூனியப் புடுங்கினாங்கனு ஒருத்தருக்குமே தெரியவரக்கூடாது” என்றான் வீரய்யா நிதானமாக. 

“ஆமா வீரய்யா, நீ சொல்லுறது சரிதான். இந்த நேரத்துல கூனி எல்லாத்தையும் புடிங்கி வீசிட்டா, புடிங்கி வீசினது யாருன்னு சொல்லமுடியுமா? தோட்டத்து ஆளுங்கதான் புடிங்கி வீசினாங்கன்னு எல்லாத்தையும் பொலிசில கொண்டுபோய் ‘ரிமான்ட்’ பண்ணமுடியுமா?” எனக் கூறினான் ராமு அலட்சியமாக. 

அப்போது அங்கிருந்த இளைஞர்களில் ஒருவன், “இன் னிக்கு நாமெல்லாம் பிடிங்கி வீசிட்டா,நாளைக்குக் காணி யளக்கிறவங்க வந்து திரும்ப கூனி அடிக்காமலா இருக்கப் போறாங்க?” எனக் கேட்டான். 

“இனிமே காணி அளக்கிறவுங்கள் தோட்டத்தில் கால் வைக்க வுடுறது இல்ல” எனக் கூறினான் வீரய்யா. அவனது கூற்றில் உறுதி தொனித்தது. 

“அது நம்மளால முடியுமா அண்ணே…” எனச் சந்தேகத்துடன் கேட்டான் செபமாலை. 

“ஏன் முடியாது. நம்ம எல்லோருமே சேந்து ஒத்து மையா இருந்தா எதையும் சாதிக்கமுடியும். காணி அளக் கிறவங்க வாறப்போ எல்லோருமா சேந்து வந்து அவுங் கள தோட்டத்துக்குள்ள நுழையாம தடுப்போம்” என் றான் வீரய்யா. 

“காணியளக்கிறவங்க எந்த நேரத்தில வருவாங்க? எப்ப வருவாங்கனு நமக்குத் தெரியவா போவுது. நம்ப கிட்ட சொல்லிக்கிட்டா வாறானுக?” எனக் கேட்டான் ராமு. 

“அதுக்கும் ஒரு திட்டம் வச்சிருக்கேன். காணியளக்கிற வங்க வாறப்போ, அவுங்களை யார் கண்டாலும் ஒடனே மடுவத்துக்கு வந்து பெரட்டு மணிய அடிக்கோனும். மணிச்சத்தம் கேட்டவொடன லயத்துல இருக்கிறவங்க எல்லாரும் ஓடிவந்து அவுங்களை காணி அளக்கவிடாம தடுக்கனும்” வீரய்யா இப்படிக் கூறியபோது நண்பர்களது மனதிலும் அவன் கூறிய திட்டம் சரியானதாகவே பட்டது. 

“இது ஒரு நல்ல யோசனைதான். நாளைக்கி காலையில லயத்துல இருக்கிறவங்க எல்லாத்துக்கிட்டேயும் சொல் லிடுவோம்” என்றான் செபமாலை உற்சாகத்துடன். 

“இனிமே நாமெல்லாம் ரொம்ப துணிவோடதான் எல்லா வேலையும் செய்யனும்” எனக் கூறிய ராமு, “மொதல்ல எல்லாரும் இந்தக் கூனி எல்லாத்தையும் பிடுங்கி வீசுங்க” எனக் கூறிவிட்டு, அங்கிருந்த கூனிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கி எறிந்தான். நண்பர்கள் ஒவ்வொரு வராகக் கூனிகளைப் பிடுங்கி வீசத் தொடங்கினர். இப் போது அவர்களுடைய நெஞ்சில் எதற்குமே அஞ்சாத துணிவு துளிர்விடத் தொடங்கியது. 

– தொடரும்…

– குருதிமலை (நாவல்), முதற் பதிப்பு: ஜூலை 1979, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *