இளமைக் கோலங்கள்





(1975ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
அத்தியாயம்-13
காலையிற் பூத்த மலர் வாடிப் போயிருக்கிறது. அகிலா வாசலில் நிற்பதைக் கண்டும் எதுவுமே பேசாமல் உள்ளே நுழைந்து கதிரையில் அமர்ந்தான் சிவகுமார். அவளும் அவனது மனநிலையை உணர்ந்தவள் போல மௌனமாக நின்றாள்.

சிவகுமார் இருந்தாற்போல நிமிர்ந்து அகிலாவைப் பார்த்தான். அந்தக் கண்களின் ஆராய்ச்சியை அவளால் தாங்க முடியவில்லையோ? தலை குனிந்து கொள்கிறது. நிமிர்ந்து நேருக்கு நேர் நோக்கும் திராணி இல்லையென்றால்…?
சிவகுமாருக்கு குரல் கொடுத்து கதைப்பதற்குக் கூட சக்தியில்லாதது போன்ற சோர்வு;
“அகிலா!”
அந்த அழைப்பை எப்படிப் புறக்கணிக்க முடியும்? அவள் தலையை நிமிர்த்தினாள். கண்கள் கலங்கிப் போயிருக்கின்றன. அவனது பார்வையைச் சந்தித்ததும் கண்ணீர் உடைத்துக் கொண்டு வந்தது. அவனுக்கு வேதனை – அறையில் நடந்த சம்பாஷணையை அகிலா கேட்டிருக்கக் கூடும்.
“அகிலா… கவலைப்படாதையுங்கோ…” அதற்குமேல் அவனால் கதைக்க முடியவில்லை. எந்த முகத்தை வைத்துக் கொண்டு கதைக்கலாம்? துக்கம் தொண்டையை அடைத்தது.
“அவங்களுக்கு வேலையில்லை…” என்று மாத்திரம் சொன்னான். அவளது மனதைச் சமாதானப் படுத்த அந்த அளவிற்காவது கதைக்க முடிந்ததே பெரிய காரியம்தான்.
“நான்… எல்லாம் கேட்டிட்டுத்தானிருந்தன்…”
சிவகுமாரது நெஞ்சிலே ‘திக்’கென்ற அதிர்ச்சி.
அகிலா தொடர்ந்து பேச முடியாமல் நின்றாள். தனக்காகப் பரிந்து பேசுவதற்கு ஓர் உள்ளம் இருக்கிறது. பல சந்தர்ப்பங்களில் அவனது நல்ல சுபாவத்தை உணர்ந்திருக்கிறாள். அந்த அன்பையும், பரிவையும், பாசத்தையும் எண்ணுகின்ற பொழுது, தான் அதற்கெல்லாம் தகுதியானவள்தானோ என்ற எண்ணமும் தோன்றியது. அந்தக் காரணத்துக்காகவே அழுகையும் பீறிட்டுக் கொண்டு வந்தது; அவனிடம் எதையுமே மறைத்திருக்கக் கூடாது.
“சிவா…அவனுகள் கதைச்ச… உண்மைதான்!”
எரிமலையொன்று வெடித்தது. சிவகுமார் ஆச்சரியத்துடனும் இப்படியும் நடக்குமா எனும் அதிசய உணர்வுடனும் அவளைப் புதினமாகப் பார்த்தான். மீளமுடியாத அதிர்ச்சி. இந்தப் பூனையும் பால் குடிக்குமா?
பெண்களின் சரித்திரத்தில் எங்கள் சமூகம் எவ்வளவு கரிசனையாயிருக்கிறது! இவள் இப்படி நடக்கலாமா? ஏன் தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொள்கிறாள்? ஆண்கள் நேர்மையாக நடக்க வேண்டும் என்ற வாதம் ஒரு பக்கம் இருக்கட்டும். இதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு பெண்களைத்தானே தாக்கும் என்பதையாவது மனதில் வைத்து கவனமாக நடக்கத் தெரிய வேண்டாமா?
சிவகுமாரது மனது அலைக்கழிந்தது. அவள் இப்படி நடப்பதற்கு என்ன காரணம்? அவளை ஒரு
காரணம்? அவளை ஒரு கெட்டவளாகவும் கணித்துவிட மனம் இசையவில்லை. யாரையாவது காதலிக்கிறாளோ? அல்லது ஏதேனும் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தமாக இருக்குமோ?
“அகிலா அழாதையுங்கோ… உங்களுக்கு என்ன பிரச்சினை…? மனசை திறந்து உள்ளபடி சொல்லுங்கோ… என்னாலை முடிஞ்சவரை உதவி செய்யிறன்.”
அவளது கண்களை நிறைக்கின்ற கண்ணீர் இப்பொழுது எதையும் சொல்லக்கூடிய மனநிலையில் இருக்கமாட்டாள் என உணர்த்தியது. சற்று நேரம் அழுது தீர்க்கட்டும் எனப் பேசாமலிருந்தான். பின்னர் கவனத்தை வேறு பக்கமாகத் திருப்ப முயற்சித்தான்.
“எங்கை அகிலா… அம்மாவைக் காணயில்லை?”
“மார்க்கட்டுக்குப் போனா…”
“அப்பாடா! இப்பவாவது இந்தத் திருவாய் மலர்ந்ததே…” அகிலாவுக்கு வேதனையிலும் ஒரு மென்மையான சிரிப்பு மலர்ந்தது.
“இருங்க தேத்தண்ணி போட்டிட்டு வாறன்” என்றவாறு எழுந்து சென்றான்.
கால்களை நீட்டி தலையைக் கதிரையின் சார்விற் பதித்து மேலே நோக்கியவாறு அமர்ந்து கொண்டு நெற்றியைக் கையினால் வருடினான். பூச்சியொன்று ‘லைட்’டைச் சுற்றி சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது. பாவம்; அதிலேயே விழுந்து மாய்ந்து போகுமோ?
சற்று நேரத்தில் அகிலா தேநீருடன் வந்தாள். தேநீரை வேண்டி ஆவலோடு பருகினான். ஒரு தாயைப் போன்று பரிவோடு பார்த்துக் கொண்டிருந்தாள் அகிலா. நன்றாக களைத்துப் போயிருக்கிறான், பாவம்.
“சிவா ஏன் அவனுகளோடை சண்டை பிடிச்சீங்க?”
“பின்னை என்ன?… எவ்வளவு அநியாயமான கதையெல்லாம் கதைக்கிறாங்கள்!”
“இல்லை அவனுகள் சொன்னது உண்மைதான்.”
“என்ன உண்மை?”
“இன்னொருத்தரோடை படத்துக்குப் போனன்தான்.”
சிவகுமார் மேற்கொண்டு பேசாமலே இருந்தான். பாவத்துக்குத் துணை போனதாக அவள் ஒப்புவிக்கும் போது என்ன செய்வது? அவள்மேல் கோபமும் பற்றிக் கொண்டு வந்தது. “சீ! நான்தான் தப்புக் கணக்கு போட்டு விட்டேனா!’
அவள் நினைத்தாள்; அவனுக்கு உண்மை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் அவனது நல்ல மனதுக்குச் செய்கின்ற துரோகமாகும். சொல்லாமல் விட்டதும் தவறுதான்.
“சிவா, படத்துக்கு என்னோடை வந்தவர் என்னக் கலியாணம் செய்ய இருக்கிறார்.”
விளக்குகள் சட்டென்று அணைந்தன. கும்மிருட்டில் சிவகுமாரது முகமாற்றத்தைக் கவனிக்க முடியவில்லை.
மின்தடை ஏற்பட்டிருக்க வேண்டும். தலைநகரில் இப்படியான ஒரு நிலைமையைக் கற்பனை செய்து பார்த்தான் சிவகுமார். வீதிகள், வியாபார நிலையங்கள், களியாட்ட விழாக்கள் சனங்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் வெளிச்சம் சடுதியாக அற்றுப் போய் இருள் ஆக்கிரமிக்கின்ற பொழுது எப்படி இருக்கும். பெரிய தெருக்கள் எல்லாம் இப்படித்தான் இருக்குமா? அந்த இருளில் வாகனங்கள் கண்களைக் குற்றுகின்ற ஒளியை உமிழ்ந்தவாறு ராஜாக்களைப் போலச் செல்லும். எத்தனையோ பேர் சினந்து கொள்வார்கள். அவை யாருக்காகவும் கவலைப்படாமல் ஓடும்.
அகிலா இருளிலே எழுந்து தட்டுத் தடுமாறி நடந்தாள். மேசை லாச்சியொன்றில் இருக்கும் மெழுகுதிரியையாவது எடுத்துக் கொளுத்தலாம் என்ற நினைவுடன் லாச்சியைத் திறந்த பொழுது வெளிச்சம் பளிச்சென்று வந்தது. சிவகுமார் சிரித்துக் கொண்டிருந்தான்; ‘என்ன லவ்வரா’ என்றான்.
“உங்கட பாசயில சொன்னா அப்பிடித்தான்.”
அவன் அதைப்பற்றி அபிப்பிராயம் சொல்ல விரும்பவில்லை. வரப் போகிறவன் நல்லவனாக இருந்தாற் சரிதான்.
“இந்த நல்ல மனதைக் கவர்ந்த கள்வன் யாரோ?”
“என்ன கேலி பண்றீங்கள்… சிவா?”
“இல்லை உண்மையாகத்தான் கேக்கிறன்.”
“அவரும் எங்கடை ஒப்பீசிலைதான் வேலை செய்கிறார் எங்கட பக்கம்தான்… கிழக்கு மாகாணம்.”
“அப்ப உங்கட ஊர்க்காரரைத்தான் தேடிப் பிடிச்சிருக்கிறீங்கள் என்று சொல்லுங்கோ…”
“அப்பிடியெண்டில்லை… அவர்தான் நான் இன்ன இடமெண்டு தெரிஞ்சிட்டு வந்து வந்து கதைச்சார்…”
கொழும்பில் இப்படி ஆரம்பிக்கின்ற எத்தனையோ அலுவலகக் காதல்கள் போகின்ற இடம் தெரியாமல் போகின்ற கதைகள் எல்லாம் அவனுக்குத் தெரியும். அகிலா என்ற மென்மையான மலரை விரும்புகிறவன் நேர்மையானவன்தானோ என்னவோ?
“அகிலா… உங்களுக்கு ஒரு சந்தோசமான வாழ்க்கை அமைஞ்சால்… முதலிலை மகிழ்ச்சியடைகிறவன் நான்தான்” என ஆரம்பித்து எப்படிச் சொல்வது எனப் புரியாமல் தடுமாறினான். “நீங்கள் கொஞ்சமெண்டாலும் முன் யோசனையோடை நடக்க வேண்டும்… நான் அடிக்கடி சொல்லுவன்… இந்த விஷயத்திலை பொம்பிளையள் நெருப்பாய் இருக்கவேணும்… ஆம்பிளையளிலை எத்தனையோ பேர் நச்சுப் பாம்புகள். அந்த விஷம் பாதிக்காமல் உங்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கடை பொறுப்புத்தானே?… ஆம்பிளையள் இந்த விஷயத்திலை சுயநலமாய்த்தான் இருப்பாங்கள். சொல்லுறனெண்டு குறை நினையாதையுங்கோ… கலியாணம் முடிக்க முதல் இப்பிடிக் கண்டபடி சேர்ந்து திரியிறது சரியில்லை.”
தான் நினைப்பதை எப்பிடிப் புரிய வைப்பது என அவனுக்குப் புரியவில்லை. அவள் புரிந்து கொண்டாள்.
“நீங்கள் என்ன சொல்லுறீங்களெண்டு விளங்குது… நானும் இப்பிடியெல்லாம் திரிய விருப்பமில்லைதான்… ஆனா…”
“என்ன ஆனால்… எல்லா கேர்ள்சும் இப்பிடித்தான்… தங்களை லெவலாய்க் கதைக்கிறது… உங்களுக்கு விருப்பமில்லாமலா காதலிக்கிறீங்கள்!” அவன் கிண்டலாகத்தான் கேட்டான்.
அவள் “தலைவிதி!” என்றாள்.
சிவகுமார் திடுக்குற்றான். அப்படி என்ன தலைவிதி? நிர்ப்பந்தமா?
“அகிலா! உங்கடை போக்கு எனக்கு ஒண்டும் விளங்குதில்லையே!”
“எனக்கே என்னண்டு விளங்கல” அகிலா வலிந்து சிரித்துக் கொண்டாள். அவன் எரிச்சலடைந்தான்.
“என்ன விசர்க்கதை கதைகிறீங்கள்?”
“ராஜேசன் நல்லவர்… எண்டு தான் நானும் முதல்ல நினைச்சன்… நான் வேலைக்கு வந்த புதுசில வலிய வலிய கதைச்சார்… ஒரு ஜெண்டில்மன் மாதிரி உதவி செய்தார். அவர் என்னை விரும்புகிறார்போல எண்டு நினைச்சன்.
“அவரும் அப்பிடித்தான் சொன்னார்… எண்டாலும் நான் சம்மதிக்கவில்ல. எங்கட குடும்ப நிலையை நினைச்சுப் பயந்துதான். அவர் அதையெல்லாம் சொல்லிக் கேட்கல்ல… ஆர் என்ன சொன்னாலும் என்னத்தான் கலியாணம் முடிக்கிறதென்று சொன்னார்.
“அவற்ற பிடிவாதம்தான் என்னை மாத்திச்சு… என்னில இவ்வளவு அன்பும் விருப்பமும் உள்ளவரோட வாழுறதில பிழை இல்லத்தானே எண்டு நினைச்சன்…. அதோட எனக்கு இப்பிடியொரு அதிஷ்டம் கிடைக்கிறது, பெத்தவங்களுக்கும் பாரமில்லாமற்போகும் எண்டு தோன்றிச்சு…
“போகப் போகத்தான் அவர் கண்ட கண்ட கேர்ள்ஸ்சோடை திரியிறது எண்டும் தெரிஞ்சுது… எண்டாலும் என்ன செய்ய?”
கண்களில் பனித்த கண்ணீரை விரலினால் தட்டிவிட்டவாறே தொடர்ந்தும் பேசினாள் அகிலா.
“என்ன இருந்தாலும்… அவர் என்னில அன்பு குறையாமத்தான் பழகினார்… அவரோட இவ்வளவு பழகியாச்சு… சபலபுத்தி உள்ளவரெண்டாப் போல விடுறதா? திருத்தலாமெண்ட நம்பிக்கை இருக்கு. அதுக்காகத்தான் அவர் விரும்புற மாதிரியெல்லாம் நடக்கிறன்… இல்லாட்டி வேறை கேர்ள்ஸ்சோட அவர் திரியிறதப் பார்த்துக் கொண்டிருக்கேலுமா?”
சிவகுமார் அவளது மனதை சமாதானப்படுத்துவது போல, “அகிலா மனிசனை உருவாக்கிறதும் அழிக்கிறதும் பெண்களின்ரை கையிலைதான் இருக்குது. நீங்கள் கெட்டித்தனமாய் நடந்து கொள்ளுங்கோ… உங்கடை ‘லவ்வர்’ திருந்துவார்… உங்களைப்போலை… ஒருத்தி கிடைக்கக் குடுத்து வைக்கவேணும்.”
அகிலா தன் மனக்குமுறல்களையெல்லாம் மறைத்துக் கொண்டு சிரிக்க முயன்றாள். சிவகுமார் தனக்காக வீணே கவலைப்படக்கூடும் என்று எண்ணியவள்;
“சிவா… இதுக்காகக் கவலைப்படாதீங்க… எனக்கொரு மன வருத்தமுமில்லை… அவர் என்னை வைச்சுக் காப்பாத்தினா சரிதானே?” என ஆறுதல் கூறினான்.
ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் இயல்பு. ஒருவரை ஒருவர் தேற்றுவதற்கு இரண்டு ஒத்துப் போகக் கூடிய உள்ளங்கள் தேவைப்படுகிறது. இப்படி ஒருவரின் கவலையை மற்றவரால் மறக்கடிக்கப்படக்கூடிய வசதி இல்லாவிட்டால் எத்தனை பேருக்கு பயித்தியமே பிடித்துவிடும்?
அத்தியாயம்-14
மின்குமிழ் வெளிச்சம் மேசையில் அடுக்கப்பட்டிருந்த போத்தல்களில் பட்டுத்தெறிக்கிறது. மெண்டிஸ் ஸ்பெஷல். அதற்கு ‘சண்டி’யாக பிளேய்ன் சோடா. சில பேருக்கு லெமெனெட்தான் பிடிக்குமாம். ஸ்பெஷலின் கசப்பை அது கொஞ்சம் குறைத்துக் காட்டும் என்பதாற் போலும். பொலித்தீன் தாள்கள் உரிக்கப்படாத சிகரட் பைக்கட்டுக்கள் புதிய பொலிவுடன் காட்சியளிக்கின்றன.
கட்டிலில் வந்தமர்ந்த நண்பனொருவனுக்கு வியர்த்துக் கொட்டுகிறது. பார்ட்டிக்கு சரியான நேரத்துக்கு வர வேண்டுமென்ப தற்காக அவசரமாக நடந்திருப்பான். மகேந்திரன் அறையின் யன்னலை திறந்து விடுகிறான். இன்னும் ஒரு சிலர் வரவேண்டி யிருக்கிறது. ‘ரேஸ்ற்’றுக்காகப் பொரிக்கப்படுகின்ற இறைச்சியின் மணம் நாக்கில் ஜலத்தை ஊற்றெடுக்கச் செய்கிறது. பஞ்சலிங்கத்தார் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்திறங்கி தனது சைக்கிளை பவுத்திரமாக ஓரப்படுத்தினார். “எதுக்கு நேரந் தவறினாலும் இதுக்குப் பிந்தமாட்டாங்கள்…” உள்ளே யாரோ ஜோக் அடிக்கிறார்கள். எல்லாருக்கும் முதல் நீதானே வந்தனீ?’ ‘பதில் ஜோக்’ தேவையற்ற சிரிப்புக்கள்.
“வெயார் இஸ் ஜெகா? விஸ் யூ ஒல் த பெஸ்ற் தம்பி!” என்றவாறே அறையினுள் பஞ்சலிங்கத்தார் நுழைகிறார். அவன் அடக்கமாகத் ‘தாங்ஸ்’ அளித்தான்.
அறை ஏழெட்டுப் பேருக்குப் போதவில்லை. கட்டில்கள் ஒதுக்காக அடுக்கப் பட்டிருக்கின்றன.
‘ரேஸ்ற்’றும் மேசைக்கு வந்துவிட்டது.
“ஏன் சுணங்குவான்?… ஷால் வீ ஸ்ரார்ட்?” பல நல்ல கருமங்களை ஒப்பேற்றிய அனுபவம் பஞ்சலிங்கத்தாருக்கு!
சிவகுமார் மேசையில் கிளாஸ்களை எடுத்து அடுக்கினான். “இந்தாருங்கோ நீங்களே ஸ்ராட் பண்ணி வையுங்கோ” ஜெகநாதன் போத்தலை பஞ்சலிங்கத்தாரிடமே ஸ்பெஷலாகக் கொடுத்தான்.
“இல்லை… ஏன்….? நீர்தான்… ஆரம்பிக்க வேணும்…”
-யார் போத்தலை உடைப்பது என்ற முகஸ்துதிப் பிரச்சினை… யாராவது நல்லவன் பெரியவன் ஆரம்பித்து வைக்க வேண்டுமே!
“இஞ்சை… கொண்டாடாப்பா…” இதுக்குப் போய் இழுபறிப் படுறியள்… என்றவாறு மகேந்திரன் அந்த நல்ல காரியத்தைச் செய்ய முன்வந்தான்.
கைகள் கிளாஸ்களைப் பற்றி உயர்த்தின. கோரஸ் : “நண்பர் ஜெகநாதனின் ஒளிமயமான எதிர்காலத்துக்கும் மகிழ்ச்சிகரமான கிளாஸ்கள் குடும்பவாழ்வுக்கும் வாழ்த்துக்கள் -சியர்ஸ்” முழக்கமிட்டன.
-‘பச்சுலர்ஸ் பார்ட்டி’ நடக்கப் போகிறது. பார்ட்டியில் பஞ்சலிங்கத்தாரைத் தவிர மற்ற யாவருமே இன்னும் திருமணமாகாத குமரர்கள்தான். ஆனால், அவர்கள் எல்லாரும் ‘பச்சுலர்கள்’ என்பதற்கு எவ்வித உத்தரவாதமுமில்லை. எப்படியிருப்பினும் இந்த விருந்து வைபவத்தைக் குறிப்பிடுகின்ற சம்பிரதாயபூர்வமாக பெயர்… “பச்சுலர்ஸ் பார்ட்டி.”
ஜெகநாதனுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது. இன்னும் சில தினங்களில் அவன் குடும்ப சமேதராகப் போகிறான். அதற்காக நெருங்கிய நண்பர்களால் ஜெகநாதனின் செலவில் அளிக்கப்படும் பிரியாவிடைதான் இந்தப் பார்ட்டி. திருமணம் பஞ்சலிங்கத்தாரால் பேசி ஒப்பேற்றப்பட்டது. அவருக்கு விசேஷ அழைப்பு. பிரமச்சாரி களின் அறையென்றால் பார்ட்டிகளுக்குக் குறைவில்லைத்தான். சம்பள தினங்கள், ஓவர்ரைம் தினங்கள் மற்றும் விசேஷ தினங்களில் ‘சின்டிகேட்’ போட்டு சிறிய அளவில் ஆங்காங்கே பார்ட்டிகள் நடைபெறும். இது வீட்டுக்காரருக்கோ, சுற்றாடலிலுள்ளவர்களுக்கோ இடைஞ்சலளிக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். அல்லது அடுத்தநாளே பெட்டி படுக்கைகளைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டியும் நேரிடலாம். அதற்காகத்தான் ஒரு சுபநாளாகப் பார்த்து இன்றைய தினத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்.
பிரபல ஹோட்டலொன்றில் நடைபெறும் திருமண விருந்து வைபவமொன்றுக்கு வீட்டுக்காரர்கள் போய்விட்டார்கள். அந்த பிரபல ஹோட்டலில் ஏறுகின்ற அளவுக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் (பொருளாதார ரீதியாக) என்பது என்னவோ மறுக்க முடியாத உண்மைதான். ஆனால், தங்கள் மேல்மட்ட வாழ்க்கையை உறுதிப செய்து கொள்வதற்கு இதுபோன்ற ஆடம்பரமான வைபவத்தை ஆதரிப்பது மறைக்க முடியாத உண்மை. (கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழிக் கதை) கொழும்பில் எத்தனையோ வசதி படைத்தவர்கள் இருக்கிறார்கள். அன்றாடம் விருந்துகள் கு கேளிக்கைகளில் அவர்கள் நேரத்தையும் பணத்தையும் செலவிடுவது சர்வசாதாரணம். அந்தப் பொழுது போக்குகளில் மனம் கவரப்பட்டு அல்லது தங்களையும் அவர்களில் ஒருவராகக் காட்டிக் கொள்வதற்காக இன்னும் எத்தனையோ பேர் தங்கள் பொல்லாச்சிறகை விரித்து ஆடுகிறார்கள்!
கிளாஸ்களை உதடுகள் தடவித் தீர்க்கின்றன. சிகரட் புகை அறையிலுள்ளவர்களைப் பழுக்கப் போடுகிறது. ‘ரேஸ்ற் எண்டால் ரேஸ்ற்தான்’ – சமையல் செய்தவருக்கு இலவச ‘சேர்ரிபிக்கட்’ கிடைக்கிறது.
“சிவா!… யூ ஆர் ஸ்ரில் சிலோ… டிறிங் வில் யூ.” மகேந்திரனுக்கு மப்பு அவனது ‘இன்டிகேசன்’ ஆங்கிலம்தான். வழக்கமாக இங்கிலீசில் கதைப்பதில்லை. தண்ணி பாவிக்கிற நாட்களில் ஆங்கிலம் தாறுமாறாகத் துள்ளி விளையாடும். எப்படியோ நாக்கைக் கொழுவிக் கொள்ளாமல் ஒப்பேற்றிவிடுவான். மற்றவர்களோடு இங்கிலீசில் சண்டைகூடப் பிடிப்பான்! “வெல் டண் மகேந்திரன்!”
“என்ன சிவா… அப்பிடியே வைச்சுக் கொண்டிருக்கிறாய்?… குடியன்ராப்பா… நாங்கள் இஞ்சை ரெண்டாவது றவுண்டும் வந்திட்டம்.’ ஜெகநாதனின் பரிவான வார்த்தைகள். கொஞ்ச நாட்களாக சிவகுமார் நண்பர்களோடுகூட அவ்வளவு மனம் வைத்து கதைத்ததில்லை. இந்த நேரத்திலாவது அவனைச் சமாதானப்படுத்த வேண்டுமென ஜெகநாதன் கருதினான்.
“என்ன புதுப்பழக்கமோ?” பஞ்சலிங்கத்தார் கேட்டார்.
“…இல்லை… என்ன அவசரம். ஆறுதலாகக் குடிப்பம்!”
“ஹீ… நோஸ் ஹிஸ் லிமிட்… உங்களாலை அவனை அசைக்கேலாது”. – மகேந்திரன் புகழ்கிறானா அல்லது பரிகசிக்கிறானா என்பது புரியவில்லை.
நுளம்புகள் நிம்மதியாக இருக்கவிடாமல் தலையைச் சுற்றி வட்டமிட்டு காதுகளுக்கருகே வந்து பொப்பிசைப் புயல் நடத்துகின்றன. வேறு பிராக்காக இருந்துவிட்டால், மெல்ல ‘லான்ட்’ பண்ணி – “சடக்” – நுளம்பின் மேல் ஏற்பட்ட ஆத்திரம் அடிபட்ட இடத்தைத் தடவ வைக்கிறது. நல்ல அடி! “ரத்தத்தைக் குடிச்சு அதுகளுக்கும் வெறி வரப்போகுது” ஒரு ஜோக் கோரஸ் சிரிப்புக்கள்.
மகேந்திரன் அலட்டிக் கொண்டிருப்பதைக் கவனித்து விட்டு ஒரு நண்பன் திசையை மாற்றுகிறான்…
“மகேந்திரன்… வை டோன்ற் யூ சிங் ஏ சோங்?”
“யேஸ்… டெஃபினிற்லி!”
பூமியென்ன சயிசு என்று அவன் பாடத் தொடங்குகிறான், போட்டாத்தான் அற்புதமான தத்துவங்களும் பிறக்கின்றன!
நண்பனொருவன் மேசையை மத்தளமாகப் பாவிக்கின்றான். (நாளைக்குத்தான் கையில் வலி தெரியும்.) பார்ட்டியில் சூடு பிடிக்கிறது. இரு நண்பர்கள் எழுந்து ஒழுங்காகக் கால்களைப் பதித்து முன்னும் பின்னும் அசைந்து ஆடுகிறார்கள். பரீட்சைக்குப் பாடமெழுதுகின்ற மாணவனின் அவதானம், அவர்களுக்கு ஆட்டத்தில் இருக்கிறது! ஆடியபடியே அவர்கள் ஜெகநாதனைக் கைகோத்து இழுக்கிறார்கள். அவனுக்கு அவர்களோடு ஈடுகொடுக்க முடியவில்லை. கைகளைத் தட்டி மெல்ல துள்ளல் போட்டு சமாளித்துக் கொள்கிறான்.
பஞ்சலிங்கத்தார் இன்னொரு ‘ட்றாமை’ ஊற்றி உறிஞ்சிவிட்டு புதிய உற்சாகத்தோடு எழுந்து பழைய பாகவதர் பாட்டொன்றை இராகம் இசைத்துப் பாடத் தொடங்குகிறார். ஒருபாடாக அவரது பாட்டும் முடிந்தது.
“ஐயாவரவைப் பார்த்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா. இந்த ஐயா இங்கே கும்மாளம்தான் போடுறாங்க சும்மா!” என்று பாடத் தொடங்கினான் மகேந்திரன். அவனோடு நண்பர்களும் சேர்ந்து வேண்டுமென்றே இந்த வரிகளைத் திரும்பத் திரும்பப் பாடினார்கள். பஞ்சலிங்கத்தார் இளமை திரும்பியவரைப் போல அவர்களோடு கும்மாளமடித்தார் – ‘ஒரு சந்தோஷமான பிறவி!”
“நேரம் போகுது… இனி முடிப்பம்” என்றான் சிவகுமார். மற்றவர்கள் நேரத்தைப் பார்த்தார்கள். பதினொரு மணி.
“நைற் இஸ் ரூ… யங்” என்றான் மகேந்திரன். பின்னர் “பசுமை நிறைந்த நினைவுகளே” என்ற பாட்டை ஆரம்பித்தான். அது எல்லாரின் மனதையும் தொடுவதாக இருந்தது. எங்கோ பிறந்து வேலை நிமித்தமாக கொழும்பிற்கு வந்து ஒரே அறைகளில் கோபதாபங்களோடும் இன்ப துன்பங்களோடும் ஒரு குடும்பத்தவர்களைப் போல வாழ்க்கை நடத்திய தங்களது நட்பில் பெரிய பிரிவு நேரப் போவது போன்ற கவலை மனதை வருத்தியது.
இப்படியே நெடுநேரம் ஆட்டங்களுடனும் பாட்டுக்களுடனும் கழிந்த பின்னர் அவரவராக, “குட்நைட்” சொல்லி விடைபெற்றனர். “குட்நைற்” சொன்னபொழுது நேரம் பன்னிரண்டு மணியையும் தாண்டி விட்டது!
மகேந்திரன் கட்டிலொன்றில் குப்புற விழுந்து கிடந்தான். கட்டிலுக்குப் பக்கத்தில் ஓங்கழித்துச் சத்தியெடுத்தான்.
“குடிக்கையிக்க யோசிச்சுக் கட்டுமட்டாய் குடிக்கமாட்டாங்கள்” எனத் திட்டியவாறே அவனது நெற்றியைப் பிடித்துக் கட்டிலிலிருந்து அந்தரத்தில் தொங்குகிற தலையைத் தாங்கிக் கொண்டான் சிவகுமார்.
ஜெகநாதன் கோப்பையைக் கழுவிக் கொண்டு சாப்பிட ஆயத்தம் செய்தான். “சிவா! வா அவனையும் எழுப்பிக் கொண்டு…சாப்பிடலாம்.”
“அவன் இப்ப சாப்பிடக்கூடிய மாதிரியே கிடக்கிறான்?”
சிகரட் கட்டைகள் அறை முழுவதும் குப்பையாகச் சிதறிக் கிடக்கின்றன. அநாதரவாகக் கிடக்கின்ற கிளாஸ்கள் விட்டகுறை தொட்டகுறை – மகேந்திரன் எடுத்த சத்தியை மூடுவதற்காக மண்அள்ளுவதற்கு வெளியே வந்தான் சிவகுமார்.
அப்பொழுதுதான் வெங்கடாசலம் தம்பதியர் பார்ட்டி முடிந்து ஒரு ரக்சியில் வந்து இறங்கியிருக்கிறார்கள். மிஸ்டர் வெங்கடாசலத் துக்கு நிறை தண்ணி.நடக்கக்கூடச் சக்தியில்லை. திருமதியார் பெரிய சங்கடத்தோடு அவரைச் சுமந்து இழுத்துக் கொண்டு வருவதைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. மனிசன் வருகின்ற வரத்தைப் பார்த் தால் பார்ட்டியில் மனிசிக்காரியின் மானத்தை வாங்கியிருக்குமோ என்னவோ? ‘ஏன் இந்தப் பாடு?’ என எண்ணிய பொழுது தானும் கொஞ்சம் குடித்திருக்கிறான் என்ற உணர்வு, நெஞ்சில் உறுத்தியது. பேசாமல் மண்ணை அள்ளிக் கொண்டு அறையினுள் நுழைந்தான். மகேந்திரன் ஓங்காழிக்கிற சத்தம் கேட்கிறது.
அத்தியாயம்-15
யாழ்ப்பாணம் வந்து நாவலர் வீதியில் அலைந்து, நாலு பேரை விசாரித்து, ஒழுங்கையைக் கண்டுபிடித்து இறங்கி நடந்து இலக்கத்தைப் பார்த்து வீட்டை அடைந்து:
“வீட்டுக்காரர்.. வீட்டுக்காரர்!”
“ஆரது… இஞ்சாலை வாருங்கோ!”
ஜெகநாதன் உள்ளே நுழைந்தது முற்றத்திலே நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த நாய்க்குப் பிடிக்கவில்லை! எழுந்து பொல்லாத கோபத்தோடு குரைத்துக் கொண்டு ஓடி வந்தது
“அடிக்!…. அடிக்…”
“அது கடிக்காது!… நீர் வாரும்!”
ஜெகநாதன் நாயை பார்ப்பதா குரல் வருகின்ற திசையைப் பார்ப்பதா என்று புரியாமல் பயம் கலந்த சிரிப்பை மலர்த்தி தனது சிநேகபூர்வமான வருகையை நாய்க்கு உணர்த்த முயன்றான்.
அவனது சிரிப்பைக் கண்டோ அல்லது எசமானியின் அதட்டலினாலோ நாய் தனது சண்டித்தனத்தை விட்டு சமாதானக் கொடியை (வாலை) ஆட்டியது.
“ஆரைத் தேடுறீர்” தென்னோலையில் கிடுகு பின்னிக் கொண்டிருந்த பூமணி… ஓலையை ஒரு பக்கத்தில் இழுத்துப் போட்டுவிட்டு எழுந்தாள்.
“அருணாசலம் மாஸ்டர் வீடு இதுதானோ?”
ஓம்… இதுதான் உள்ளுக்கு வாரும்” என்றவாறே வீட்டினுள் நுழைந்து, “இஞ்சருங்கோ… உங்களை ஆரோ தேடி வந்திருக்கினம்!” எனக் குரல் கொடுத்தாள்.
பாயொன்றில் ஓய்வாய் படுத்திருந்த அருணாசலம் மாஸ்டருக்கு எழுந்து வர மனதில்லை. “அதாரப்பா? விளங்கச் சொல்லன்” எனச் சினந்தார்.
“ஆரெண்டு தெரியவில்லை… ஒரு புதுப் பெடியனா யிருக்கு… உங்களைத்தான் காணவேணுமாம்.”
ஜிம்மி நாய் இப்பொழுது ஜெகநாதனை ஏற்கனவே தெரிஞ்சது போல சுற்றிச் சுற்றி மோப்பம் பிடிக்கத் தொடங்கியது.
தனது திருமணத்திற்காக ஊருக்கு வந்திருந்தான் ஜெகநாதன். முதல் வருகின்ற நாளுக்கே கலியாணத்தை முடித்துவிட வேண்டுமென்று பெண் வீட்டுக்காரர் ஒற்றைக் காலில் நிற்பதால் திடுதிப்பென்று வரவேண்டியதாயிற்று. கொழுத்த சீதனம். விடமுடியுமா?
ஊருக்கு வந்தவனுக்கு யாழ்ப்பாணம் வரவேண்டிய அலுவல் இருந்தது. மாலை நாலு மணியைப் போல 750ஆம் இலக்க பஸ் எடுத்து யாழ்ப்பாணம் வந்தவன், கையோடு சிவகுமார் வீட்டுக்கும் போய்விட்டு வரலாம் என்ற எண்ணத்தாலும் வந்து நிற்கிறான்.
அரையிலிருந்து விழுகின்ற களிசானைப் பிடித்தபடி அண்மையில் ஓடிவந்த சிறுவனொருவன், “ஜிம்மி!…இஞ்சாலை வா!” என அழைத்தவாறு இவனை விடுப்புப் பார்க்கத் தொடங்கினான். ஜெகநாதன் வீட்டு வாசலைப் பார்த்தபடி நின்றான்.
அண்மையிற் கட்டப்பட்ட வீடு, வீட்டைச் சுற்றி வர தோகையை விரித்துக் கொண்டு நிற்கும் தென்னம் கன்றுகள், சில வாழைகள், முன்னே அழகாக வெட்டப்பட்டிருக்கும் குரோட்டன் செடிகள், பூங்கன்றுகள், பின்பக்கமாக உயர்ந்து தலையை நிமிர்த்திக் கொண்டு நிற்கும் பனைமரங்கள்.
படுக்கையிலிருந்து ‘முருகா!’வைத் துணைக்கு அழைத்துக் கொண்டு வேண்டா வெறுப்பாக எழுந்தார் அருணாசலம் மாஸ்டர். வேட்டியை சரிசெய்து உதறிக் கட்டிக் கொண்டு வெளியே வந்தவர் ஜெகநாதனைக் கண்டதும் ‘அறியாத முகமாயிருக்குதே’ என்ற குழப்பத்துடன் மெல்லிய புன்னகையைக் காட்ட முயன்றார்;
“ஆரை காண வந்திருக்கிறீர்?”
“அருணாசல மாஸ்ரர் நீங்கள்தானே?”
“ஓம்!… உம்மைத்தான் எனக்கு விழங்கவில்லை…”
“நான் கொழும்பிலை உங்கடை மகனோடை அறையிலை இருக்கிறன்…”
அருணாசலத்தாரின் மனது பதட்டமடைந்தது. விஷயம் என்னவோ ஏதோ?
“வாரும்… இருந்து கதைக்கலாம். ஏதேன் முக்கியமான அலுவலோ?”
“அப்பிடியொண்டுமில்லை… என்ரை ஒரு அலுவலாய் யாழ்ப்பாணம் வரவேண்டியிருந்தது…. பின்னைத்தான் சிவகுமாற்றை வீடும் இந்தப் பக்கம் எண்டாப் போலை… பாத்திட்டுப் போகலா மெண்டு வந்தனான்!”
அருணாசலம் மாஸ்டர் ஜெகநாதனை வசீகரிக்கின்ற சிரிப்பைக் காட்டினார். மகனோடு அறையில் இருக்கின்ற நண்பன் வந்திருப்பது ஒருவித மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. பிள்ளைகளது பழக்க வழக்கங்களில் மிகவும் அக்கறையானவர் அருணாசலம் மாஸ்டர். கண்டிப்பாக வளர்த்தவர். ‘இப்பொழுது கண்காணாத இடத்தில்… என்ன செய்கிறானோ… எப்பிடி இருக்கிறானோ?’ என்பது அடிக்கடி எழுகின்ற ஏக்கம்
“எப்பிடித் தம்பி கொழும்புப் பக்கம்?” எனச் சம்பிரதாய பூர்வமாக பேச்சை ஆரம்பித்து வைத்தார் மாஸ்டர்.
அகிலாவுடன் சிவகுமார் அன்னியோன்யமாகப் பழகுவதை எப்படியாவது நிறுத்திவிட வேண்டுமென, மகேந்திரனுடன் கூட்டுச்சேர்த்துப் போட்ட திட்டத்தின் ஓர் அம்சத்தை அமுல் நடத்துவதற்கென வந்திருக்கிற ஜெகநாதனுக்கு இது போதாதா?
சம்பாஷணைகள் வளர்ந்தன.
பூமணி (மாஸ்டரின் மனைவி) தேநீர் கொண்டு வந்து வைத் தாள். அருணாசலத்தார் எதையோ பறிகொடுத்தவர் போல இருந் தார். ஜெகநாதன் கச்சிதமாகத் தனது வேலையை முடித்துவிட்டான். மாஸ்டரால் அந்தக் கதைகளை எப்படி ஜீரணிக்க முடியும்?
“தம்பி… தேத்தண்ணியை எடுத்துக் குடியும்… ஆறுது!” பூமணி நிலைமையைச் சமாளிக்க முயன்றாள். கணவனின் முகமாற்றத்தைக் கொண்டே அவர் மனநிலையை அவளால் ஊகிக்க முடியும். கோபம் வந்தால் மாஸ்டர் பொல்லாதவர்.
சற்றும் எதிர்பாராத நேரத்தில் மனைவியின் பக்கம் திரும்பிய மாஸ்டர்;
“பாத்தியே!… உன்ரை பிள்ளை செய்திருக்கிற வேலையை… எல்லாம் நீ வளர்த்த வளர்ப்புத்தான்!” எதிர்பாராத தாக்குதல் – இது மாஸ்டருடைய குணம். அந்தப் பழியை அமைதியாக சகித்துக் கொண்டாள் பூமணி.
அருணாசலம் மாஸ்டர் அதே சீற்றத்துடன் ஜெகநாதனின் பக்கம் திரும்பி, “ஒரு பிள்ளை நல்லா வர்றதும் கெட்டுப் போறதும்… தாய் வளர்க்கிற வளர்ப்பிலைதான் தங்கியிருக்குது” எனக் குற்றம் சுமத்தினார். ஜெகநாதனும் ஆமோதிப்பவன் போலப் பாவனை செய்தான். பிறர் முன்னிலையிலும் நியாயமில்லாமல் மனைவியின் மேல்குற்றம் சுமத்துவது மாஸ்டருக்கு பழகிப் போய்விட்ட சுபாவம். அப்படிச் செய்வதால் தனது கவலையைக் குறைத்துக் கொள்ள முயல்கிறாரோ என்பதும் புரியவில்லை. அவரை மணந்துகொண்ட நாள் முதல் இது பழகிப் போய்விட்ட சங்கதியானதால் பூமணியும் பெரிதுபடுத்திக் கொள்வதில்லை.
“தம்பி!… நான் மானத்துக்குப் பயந்த மனிசன்!… அப்பிடி ஏதாவது… நீர் சொல்றமாதிரி ஏறுக்குமாறாய் செய்வானெண்டு கண்டால்… பிறகு பிள்ளையெண்டும் பார்க்கமாட்டன்… சுட்டுத் தள்ளிப் போடுவன்.”
“அப்பிடி ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ… நாங்கள் கவனிக் காமல் விட்டிடுவமே?… ஒண்டாயிருக்கிற நாங்கள் சொல்லாமல் விட்டிட்டம் எண்டு பிறகொரு காலத்திலை குறை சொல்லக் கூடாதெண்டதுக்காகத்தான்… என்ரை அலுவல்களையும் விட்டிட்டு மினைக்கெட்டு வந்தனான்.”
அருணாசலம் மாஸ்டர் ஜெகநாதனை நன்றியுடன் நோக்கினார். இப்படியொரு குடும்பநிலைமை, பொறுப்பு உணர்ந்த பிள்ளை தனக்கு இல்லையே என்ற கவலை துளிர்த்தது.
“நான் இவங்களுக்குப் படிச்சுப் படிச்சு எத்தனை புத்திமதி களைச் சொல்லியிருப்பன்! பனை மாதிரி வளர்ந்ததுதான் மிச்சம்… ஒரு தேப்பன் சொல்லுறானெண்டு அதைக் கேட்டு நடக்கிறாங்களே…?” “மாஸ்டரின் மனத்துடிப்பு, மகன் அடிக்கடி ஊருக்கு வராமல் விட்டதற்கும் இதுதான் காரணமோ என எண்ணிப் பார்த்தார். வங்கியில் எடுக்கிற கடன் பணத்தைக் கொண்டு வருவதாக முதல் எழுதியவன் பின்னர் லீவு கிடைக்கவில்லை என எழுதி காசோலையை அனுப்பி விட்டதற்கும் இதுதான் காரணமாயிருக்கும்.
“வரட்டும்! எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுறன்… காலா காலத்திலை ஒரு கால்கட்டைப் போட்டு விட்டால் அடக்கமாய் இருப்பாங்கள்!”
அருணாசலம் மாஸ்டர் பேயறைந்தவர்போல இருந்தார். சிவகுமாரை பணயமாக வைத்துக் கொண்டு அவர் பறக்கடிக்க நினைத்த பிரச்சினைகள் எத்தனை? ஆசிரியராக இருந்து உழைத்த சேமிப்பெல்லாம் வீடு கட்டியதோடு கரைந்துவிட்டது. வீடு கட்டுவதற்காக ஈடுவைத்த காணியை இன்னும் மீள முடியவில்லை. இந்த விசித்திரத்தில் திருமணத்திற்காக மூத்தவளொருத்தியும் காத்திருக்கிறாள். மற்றப் பிள்ளைகளின் படிப்புச் செலவுகளுக்கே பென்சன் பணம் பறந்துவிடும். எல்லாவற்றிற்குமே மலைபோல நம்பியிருப்பது சிவகுமாரைத்தான்.
கஷ்டத்தோடு கஷ்டமாக சிவகுமாரைப் படிப்பித்து ஆளாக்கி விட்டும் அரசதிணைக்களமொன்றில் சாதாரண கிளார்க்கு உத்தியோகம்தான் கிடைத்தது – செல்வாக்கு இல்லாதவர்கள் படித்தும் என்ன பலன்? இருந்தாலும் இதுபோதும் அவருக்கு. இந்த ஒரு தகுதியை வைத்துக் கொண்டே யாழ்ப்பாணத்து கலியாணச் சந்தையில் எத்தனை வித்தைகளைக் காட்ட முடியும்! அதற்காக அவர் ஓடாத இடங்களும் இல்லை. பார்க்காத புறோக்கர்மாரும் இல்லை. பேசாத சம்பந்தங்களும் இல்லை. எல்லாவற்றிற்கும் பேரம் பேச்சும் ஒத்து வர வேண்டுமே!
-‘அதுக்குள்ளை… இந்தப் பொடியன் அவசரப்படுகுது!…’ “நான் அப்ப வரப் போறன்!” என அவரது சிந்தனையைக் குலைத்தான் ஜெகநாதன்.
“என்ன தம்பி அவசரம்?”
“பொழுதுபடுகுது… இருளுக்கு முந்திப் போயிடவேணும்!”
“அப்ப பின்னப் போட்டு வாருமன்… இனிமேலும் வர்ற நேரங்களிலை இஞ்சாலிப் பக்கம் வந்திட்டுப் போம். அங்கத்தை சங்கதியளையும் அறியலாம்.”
“ஓமோம்….ஆனால், ஒண்டு, நான் இஞ்சை வந்ததைப் பற்றிச் சிவகுமாரிட்டைச் சொல்லிப் போடாதையுங்கோ… பிறகு குறை விளங்குவார்!”
“சாச்சாய்… நாங்கள் ஒண்டும் பறையமாட்டம்… இன்னொரு அலுவல்… பாரும் நீரெண்டாலும் சொல்லி அவனை ஒருக்கால் வேறை அறைக்கு மாறிப் போகச் சொன்னால் நல்லது!”
“சொல்லிப்பாக்கிறன்… சொன்னாப்போலை அவர் கேட்கப் போறாரே?” என அவரது மனதை இன்னும் கலக்கியவாறு புறப்பட்டான் ஜெகநாதன்.
‘படலை வரை சென்று ஜெகநாதனை வழியனுப்பிவிட்டு இனம்புரியாத கலக்கத்துடன் திரும்பினார் மாஸ்டர்.
காற்றிலே அசைகின்ற பனை ஓலைகள் கலகலத்துச் சிரிக்கின்றன. கீழ் நோக்குகின்ற காவோலைகள்; மேலே உயரும் குருத்தோலைகள்!
‘பனையை வளர்ப்போம் பயனைப் பெறுவோம்.’
– தொடரும்…
– 1975-ம் ஆண்டளவில் சுதாராஜ் எழுதிய முதலாவது நாவல்.
– இளமைக் கோலங்கள், முதல் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.