கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 2,503 
 
 

“அம்மா தாயே! பிச்சை போடுங்க” என்று ஒரு பிச்சைக்காரன் ஒரு வீட்டின்முன் நின்று கத்தினான். அந்த வீட்டில் இருந்து ஒரு பிள்ளை வந்து, வீட்டில் ஒன்றும் மிச்சமில்லை; போ’ என்று சொல்லி அனுப்பினாள். அவனும் முணுமுணுத்துக்கொண்டே புறப்பட்டான்.

உடனே அவ்வீட்டின் உள்ளேயிருந்த அப்பெண்ணின் மாமியார் வாசற்படியில் வந்து நின்றுகொண்டு, பிச்சைக் காரனைக் கைதட்டிக் கூப்பிட்டாள் அவனும் சோறு கிடைக்கப் போவதாக எண்ணித் திரும்பிவந்தான்?.”

“ஏம்ப்பா? அவள் சொன்னதும் நீ போய்விடுவதா” என்று அதட்டினாள் மாமியார்.

“சிறுபிள்ளை சொன்னதை நம்பித் தெரியாமல் போய்விட்டேன் தாயே! நீங்கள் போடுங்கள்” என்று சட்டியை நீட்டினான் பிச்சைக்காரன்.

“ஆம்! நான்தான் இந்த வீட்டு மாமியார். அவளுக்கு என்ன இங்கு அதிகாரம்? நான்தான் சொல்லணும். இப்ப சொல்றேன், “இல்லை நீ போ” என்றாள் மாமியார்.

“ஏம்மா? இதைச் சொல்லவா அழைத்தீர்கள்? நான் என்னவோ உங்களை நம்பி……போங்கம்மா” என்று. மனம் வெதும்பிச் சொல்லிக்கொண்டே போனான்.

பிச்சைக்காரனுக்கு இல்லை என்று சொல்கிற அதிகாரம்கூட மருமகளுக்கு இருக்கக்கூடாது என்று எண்ணும் மாமியார்களும் சிலர் இருந்தனர் என்பது இதிலிருந்தே தெரிகிறது.

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *