இராமர் பதித்த அம்பு!





காரை ஷெட்டில் விட்டுவிட்டு ஆனந்தர் மெல்ல நடந்து பங்களாவுக்குள் நுழைந்தபோது, பாலகாண்டம் நடந்து கொண்டிருந்தது. சோபாவில் அமர்ந்து மெய்மறந்து செவியுற்றுக் கொண்டிருந்த அவர் மனைவி பாலம்மாளையோ, அடக்க ஒடுக்கமாக நாற்காலியில் அமர்ந்து மிகவும் இலயிப்போடு எஜமானியம்மா வுக்கு இராமாயணம் படித்துச் சொல்லிக் கொண்டிருந்த ரஞ்சிதத்தையோ அவரது வருகை சிறிதும் பாதித்ததாகத் தெரிய வில்லை. அப்படியே ஓசையெழுப்பாமல், ஓரமாக நின்றார்.
இந்த ரஞ்சிதத்தின் குரலில்தான் எத்தனை இனிமை! தெளிவான உச்சரிப்புடன், ஏற்ற இறக்கம், நெளிவு சுளிவுகளோடு, உணர்ச்சி ததும்ப என்னமாய் வாசிக்கிறாள்! அதோ, இராம லட்சுமணர்கள் வில் வித்தை பயிலும் காட்சி, அம்புகளைச் சரமாரியாக எய்கிற நேர்த்தி! சிறு பிராயம்தான் என்றாலும் அவர்களுக்குத்தான் எத்தனை ஆற்றல்! இராமாயணத்தை ரஞ்சிதம் வாசிக்கும் அழகே அழகு!
“அடடே, வந்துட்டீங்களா? என்ன அப்படியே திகைச்சு நிக்கிறீங்க? ” மனைவியின் குரல் கேட்டுக் கலைந்தார் ஆனந்தர்.
நாணமும் மென்சிரிப்பும் நெகிழ அவசரமாக எழுந்து, எஜமானியின் பின்புறம் போய் நின்றாள் ரஞ்சிதம். அவளைப் புன்முறுவலுடன் நோக்கியபடியே, “என்ன ரஞ்சி நிறுத்திட்டே? நீ ராமாயணம் படிப்பதை உன் எஜமானியம்மா மட்டும்தான் கேட்கணுமா?” என்று கிண்டல் செய்தார் ஆனந்தர்.
ரஞ்சிதம் பேசவில்லை; தலை குனிந்து நின்றாள்.
“நீங்க என்னங்க, அவளைச் சீண்டிக்கிட்டு?” பாலம்மாள் கணவனைச் செல்லமாய் அதட்டினாள். ஆனந்தர் சிரித்தபடியே மாடிப்படி ஏறித் தன் அறைக்குப் போனார்.
உடைகளை மாற்றிக் கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்தார். அவர் முன்னே வளைக்கரம் குலுங்கியது; மல்லிகை மணத்தது. டிபன் தட்டையும் காப்பித் தம்ளரையும் வைத்துவிட்டுத் திரும்பிய ரஞ்சிதத்தின் ஜடை கருநாகம்போல் ஒசிந்தாடியதைக் கவனித்தார். “ரஞ்சி ஒரு நிமிஷம் நில்லேன். அம்மா என்ன பண்றாங்க?”
“நைட் சமையலுக்காக சமையற்கார தாத்தாவுக்கு இன்°ட்ரக்ஷன் கொடுத்துகிட்டிருந்தாங்க. இப்ப வந்திடுவாங்க!” ரஞ்சிதம் விடுவிடென்று நடந்து ஒரு மின்னல் போல அறையைத் தாண்டி மறைந்தாள்.
ஆனந்தரின் மனம் பாறையாகக் கனத்துப் போயிற்று. “இது என்ன நினைப்பு? அயோக்கியத்தனம்? நானா இப்படியெல்லாம் நினைக்கிறேன்… சேச்சே!”
***
மேகராஜ் வீட்டு வாசலில் அடியெடுத்து வைத்தபோது, தட்டுத் தடுமாறித்தான் நடக்க வேண்டியிருந்தது. கூரை வீடு. ஒற்றை வாசல். முன்னே இருந்த கதவு அவனுக்கு வேறு எங்கோ தெரிந்தது. சுவரில் போய் முட்டிக்கொண்டு கத்தினான். “அடியே அஞ்சலை, கதவைத் தொறக்கறியா, இல்லே ஒடைச்சுகிட்டு உள்ளே வரவா?”
ஜுர வேகம் பொறுக்க மாட்டாமல் அயர்ந்து படுத்திரூந்த அஞ்சலை கணவனின் கூச்சல் கேட்டு எழுந்தாள். மெல்ல வந்து கதவைத் திறந்தவள், “இன்னிக்கும் குடிச்சுட்டு வந்துட்டியா, கஷ்டகாலம்! தலையில் அடித்துக் கொண்டாள் அஞ்சலை.”
“என்னாடி சலிச்சுக்கறே? மனுஷன் டீசல் சூட்டுல °டீரிங் புடிக்கத் தாவுல? ஒடம்பு நோவுக்கு குவார்ட்டர்தாண்டி மருந்து. நீயும் குடி. வியாதியெல்லாம் பறந்து பூடும்!” என்று சொல்லியபடி காலை எடுத்து வைத்தவன் டமாரென்று குப்புற விழுந்தான். அவனைத் தாங்கிப் பிடித்து உள்ளே அழைத்துப் போனாள் அஞ்சலை.
இரு தினங்களாக ஜுரம் அவளுக்கு அனலாய்க் காய்ந்தது. அடிக்கடி பிரக்ஞை தப்பிப் போனது. டாக்டரிடம் போகலாம் என்றால், லாரி லோடு ஏற்றிப் போன மேகராஜ் வரவில்லை. வந்தால்தான் டாக்டருக்குக் கொடுக்க, மருந்து வாங்கக் காசைப் பார்க்க முடியும். கஷாயம் வைத்துக் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்து விட்டாள்.
கணவனுக்குக் கதவைத் திறந்து விட்டுப் படுக்கையில் விழுந்தவள் ஜுர வேகத்தில் கன்ணயர்ந்து போனாள். மீண்டும் அவள் கண்விழித்தபோது ஒரு கோரம் நிகழ்வது கண்ணில் தெரிந்தது. அது மனதில் பதிவதற்குள் திகிலடித்துப் போயிற்று. எங்கும் அனலின் தகிப்பு. செந்தீயின் கொழுந்துகள்..! “என்ன இது? என்ன இது?”
அவன் வாயில் பீடி புகைந்து கொண்டிருந்தது. ஒரு கையில் தீப்பெட்டி. கண்களை மூடி, பீடிப் புகையின் சுகத்தில் ஆழ்ந்திருந்தான் அவன். “அடப்பாவி!”
குடிசை தீப்பிடித்து ஜ்வாலையும் தகிப்புமாக மேலேறிப் படர ஆரம்பித்திருக்கிறது. அவன் பீடிக்காகத் தீக்குச்சியைக் கிழித்திருக்க வேண்டும். தீக்குச்சியை அணைக்காமல் வீசியிருக்க வேண்டும். நிதானத்தில் இருந்தால்தானே செய்கையின் வீரியம் புரியும்? உலர்ந்த கூரை – எளிதாக தீப்பிடித்துக் கொண்டது… ஐயோ!
அவனை உலுக்கி இழுத்து வெளியேற்றுவதற்குள் மேலிருந்து சரிந்து விழுந்த தீப்படல் ஒன்றினால் இருவரது ஆடைகளும் தீப்பிடித்து எரிய, வேகமாக கெளியே ஓடி, கூக்குரலிட்டு… அக்கம்பக்கத்து ஜனங்கள் திரண்டு வந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட… கடும் தீக்காயத்தால் கணவன் மனைவி இருவரும் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்கள்.
அந்த விபத்து நிகழும்போது பள்ளி இறுதி வகுப்புப் படிக்கும் அவர்களது மகள் ரஞ்சிதம் வீட்டில் இல்லை. பள்ளி முடிந்து திரும்பும் வழியில் தோழி வீட்டில் அவளுடன் சேர்ந்து பாடம் படித்ததால், ரஞ்சிதம் தப்பினாள். ஆயினும் பெற்றோரைக் கிட்டத்தட்ட பத்து தினங்களில் மருத்துவர்கள் சிகிச்சையையும் மீறி அவள் இழக்க நேர்ந்தது ஒரு துரதிர்ஷ்டமே! மேகராஜும் அவன் மனைவியும் மறைந்தபின், நிர்க்கதியான ரஞ்சிதத்தை வளர்க்கும் பொறுப்பை ஆனந்தர் பாலம்மாள் தம்பதி ஏற்றுக் கொண்டனர். மேகராஜ், ஆனந்தர் வீட்டு லாரியில்தான் டிரைவராக வேலை பார்த்திருந்தான்.
ஆனந்தர் வீட்டு வேலைகளில் ஒத்தாசையாக ரஞ்சிதம் இருந்தாள். பள்ளிப் படிப்பை ஒருவழியாக ஆனந்தர் தம்பதியின் கருணையால் முடித்த ரஞ்சிதம் அதற்குமேல் படிக்கப் போகவில்லை. அந்த வீட்டிலேயே வேலைகளில் ஈடுபட்டு அவர்களுக்குத் தன் நன்றியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். அவள் மிகவும் புத்திசாலியாகவும் பணிவுடனும் நடந்து கொண்டது ஆனந்தர் தம்பதிக்குத் திருப்தி அளித்தது.
வீட்டில் தன் அறையில் அமர்ந்து ஜன்னல் வழியே தெரிந்த ஆகாயத்தை வேடிக்கை பார்த்தார் ஆனந்தர். திட்டுத் திட்டாக மேகங்கள். வட்ட நிலவு தகதகத்து கீழ்வானில் எழுந்தது.
“டின்னர் கொண்டு வரட்டுமா எஜமான்?” என்று ரஞ்சிதத்தின் இனிமையான குரல் கேட்டது. ஒரு வீணையின் இன்னிசையாக அவருக்கு அது தோன்றி, மனதை மயக்கியது. “ரஞ்சி, உன் எஜமானி எங்கே?” என்று கேட்டார்.
“லேடீ° கிளப் ஆண்டு விழாவாம். ராத்திரி வர நேரமாகும். சாப்பிட அவங்களுக்காகக் காத்திருக்க வேணாம்னு சொல்லிட்டுப் போனாங்க எஜமான்!”
ரஞ்சிதம் அறையை விட்டு அகன்றபிறகும் அவள் தலையின் மல்லிகைப் பூ மணம் குபீரிட்டுக் கொண்டிருந்தது. இளமை கொப்பளிக்கும் ரஞ்சிதத்தை மனக்கண் முன் கொண்டு வந்தார். எத்தனை துடிப்பான முகம், கவர்ச்சியான கண்கள், வாளிப்பான உடல்! ஆதரவற்றவளாக இருந்தவளை வீட்டுக்குக் கூட்டி வந்து வருடக் கணக்காக உணவும் உடையும் வழங்கிப் பராமரித்து வரும் எனக்கு இல்லாத உரிமையா? ரஞ்சி! ரஞ்சி!…
அறையில் இப்படியும் அப்படியுமாக உலவினார். நிலவை இப்போது கருமேகங்கள் மறைத்துவிட்டன. மழை வரும்போல் சில்லென்ற காற்று… அறை வாசல் வராந்தாவில் ரஞ்சி போவது தெரிந்தது.
படபடத்த மனதை இறுக்கிக் கொண்டார். தன் அறையை விட்டு வெளியே வந்து எட்டிப்பார்த்தார். கோடியில் இருந்த நூலக அறைக்குள் ரஞ்சிதம் நுழைவது கண்ணில் பட்டது. அதுவும் நல்லதுதான். சமையற்காரர், மற்ற வேலையாட்கள் வீட்டின் கீழ் தளத்தில் இருப்பார்கள். இங்கு யாரும் வரவும் மாட்டார்கள்.
அந்த அறையை அவர் மனைவி ஒரு குட்டி நூலகமாகவே மாற்றியிருந்தாள். பல உயர்ந்த நூல்களைச் சேகரித்து வைத்திருந்தாள். அவ்வப்போது புத்தகம் எதையாவது எடுத்துவந்து ரஞ்சிதத்தை விட்டு வாசிக்கச் சொல்லிக் கேட்பதில் மூழ்கிப் போவது பாலம்மாளின் வழக்கம்.
எஜமானிக்காகவும் தனக்காகவும் புத்தகங்கள் எடுக்க அந்த அறைக்கு ரஞ்சிதம் செல்வது வழக்கம். அன்று பீரோக்களில் வரிசையாக அடுக்கி வைத்திருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் புரட்டியவாறு நின்றிருந்தாள் ரஞ்சிதம். அறைக்குள் நுழைந்த ஆனந்தர் கதவைச் சத்தமின்றித் தாளிட்டார்.
மெல்ல நடந்து ரஞ்சிதத்தை நெருங்கினார். அவள் தோளில் கை வைத்தார்.
திடுக்கிட்டுத் திரும்பிய ரஞ்சிதத்தின் முகத்தில் வியப்பு. அறைக் கதவு தாளிடப் பட்டிருந்ததைப் பார்த்து அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏதோ கேட்க வாய் திறந்தவள், ஆனந்தரின் கை அவள் தோளைப் பற்றியிருந்ததை உணர்ந்து மௌனமாணாள். புத்தகத்தைப் படிக்கும் அறிவு போன்று மனிதர்களைப் படிக்கும் அறிவும் கைவரப் பெற்றவளே போன்று, அவரின் மனதை அவள் படித்துணர்ந்து, எதிர்ப்பே காட்டாமல், அமைதியாக, சலனமில்லாமல் நின்றது ஆனந்தருக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ரஞ்சிதம் பதறியிருக்க வேண்டும், அவரிடமிருந்து தப்பிக்க அங்கும் இங்கும் ஓடியிருக்க வேண்டும்,கூக்குரல் இட்டுக் கதறியிருக்க வேண்டும்… கையிலிருந்து தரையில் விழுந்த புத்தகத்தை வெறித்து நின்றாள் அவள்.
ஆனந்தருக்கு அவள் மௌனமும் அமைதியும் இறுக்கமும் வியப்பை அளித்தன. அவள் கைகளை இறுக்கித் தன் பக்கம் இழுத்தபடி கேட்டார்: “ரஞ்சி, உனக்கு என் மேல் கோபமில்லையா? ஏன் பேசாமல் இருக்கிறாய்?”
தரையில் குப்புறக் கவிழ்ந்து கிடந்த இராம காவியத்தை மீண்டும் ஒருமுறை பார்த்தாள் ரஞ்சிதம். பிறகு தலை குனிந்தபடியே மெல்லக் கூறினாள்:
“எஜமான் இராமாயணத்தில் ஒரு சம்பவம் வருகிறது. ஒரு சமயம் காட்டில் நடந்து சென்ற இராமர் ஒரு நீர் நிலையின் கரையருகே தரையில் அமர்ந்தார். அப்படி அமரும்போது, தன் அம்பறாத் துணியிலிருந்து ஒரு அம்பை எடுத்துத் தன் பக்கத்தில், பூமியில் குத்தி வைத்தாராம். ஏனென்றால், விலங்கோ, அரக்கரோ திடீரென்று எதிர்ப்பட்டால், பக்கத்தில் இருக்கும் அம்பை எடுத்துக் கணை தொடுப்பது எளிதாக இருக்கும் என்றே, வசதியான அமைப்பில், பக்கத்தில் தயார் நிலையில் அம்பைப் பதித்து வைப்பது அக்கால வழக்கம். ஓய்வு எடுத்தபின் மீண்டும் எழும்போது இராமர் தன் அம்பைப் பூமியிலிருந்து பிடுங்கினார். அம்பைப் பூமியில் பதித்த இடத்தில் ஒரு தவளை குத்துப் பட்டு ரத்தம் வழியக் காட்சியளித்ததைக் கவனித்துப் பதறிப் போனார் இராமர்.
தான் உட்காரும்போது அம்பைப் பூமியில் குத்திய சமயத்தில் அங்கு ஒரு தவளை இருந்ததைக் கவனியாமல் அதையும் சேர்த்துக் குத்திப் பூமியில் பதித்து விட்டோமே என்று தெரிய வந்து மனம் கசிந்து உருகினார் இராமர். அத்தவளை முன் மண்டியிட்டு “தவளையே! நான் அம்பைக் குத்தியபோது நீ குரல் கொடுத்திருந்தால் இந்தப் பாவ காரியம் செய்வதிலிருந்து தப்பியிருப்பேனே – மௌனமாக இருந்து இவ்வளவு நேரம் வலியும் வேதனையும் அனுபவித்து, என்னைப் பெரும் பாவியாக்கி விட்டாயே!” என்று வேதனையொடு கேட்டாராம் இராமர். அதற்கு அத்தவளை, “ஹே, இராமா! உலகில் வேறு யாராவது எனக்குத் தீங்கு இழைத்தால் நான் லோக ரட்சகனான உன்னிடம் வந்து முறையிடலாம். ஆனால், நீயே தவறு செய்யும்போது, தீங்கு இழைக்கும்போது நான் யாரிடம் போய் முறையிடுவேன் என்று சொன்னதாம்.”
ரஞ்சிதம் இப்படிச் சொல்லிவிட்டு அவரைத் தீனமாகப் பார்த்தபோது, ஆனந்தரின் இதயத்தை யாரோ சவுக்கால் சுளீர் சுளீர் என்று அடித்த மாதிரி வலி பரவியது; பொறி கலங்கினாற்போல் தடுமாறினார் அவர்.
ரஞ்சிதத்தைப் பிடித்திருந்த கையை உதறினார். “ஐயாம் ஸாரி. டெர்ரிப்ளி ஸாரி ரஞ்சி!…” அவர் குரல் தழுதழுத்தது. அடுத்தகணம் விடுவிடென்று நடந்து அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியேறிப் போனார்.
(நெல்லை தினமலர் – ஞாயிறு மலர்)