இப்படியும்!




அன்று பந்த். பேருந்துகள் ஓடவில்லை. நகரமே மனித நடமாட்டமின்றி வெறிச்சோடிக்கிடந்தது.
பிரசவ வேதனையில் பிரதிபா துடிப்பதை அவள் கணவன் பிரபாகரனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
பக்கத்து வீட்டு பரிமளம் அம்மாவை அழைத்து தன் மனைவிக்குத்துணையாக இருக்கச்செய்து விட்டு, ஆட்டோ பிடித்து வருவதாகக்கூறிச்சென்றான்.
சற்று தொலைவில் காவல் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டை அடைய வேக வேகமாக ஓட்டமும் நடையுமாக சென்றான்.
வெறிச்சோடிக்கிடக்கும் வீதியில் பிரபாகரனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஓர் இளம் பெண் திரும்பிப்பார்த்து ஓட்டமும் நடையுமாக தன் பின்னால் ஓர் ஆண் வருகிறான் என்பதை அறிந்ததும் தானும் ஓட்டம் பிடித்தாள்.
ஓடியவள் அருகில் உள்ள காவல் நிலையத்துக்குள் புக, பந்த் ஆதலால் ஏற்கனவே தயார் நிலையில் இருந்த காவலர்கள் வந்த பெண் தன்னை ஒருவன் துரத்தி வருவதாக புகார் செய்தவுடன் பிரபாகரனை கோழியாக அமுக்கி லாக்கப்பில் போட்டு விட்டனர்.
அவன் எவ்வளவோ உண்மை நிலையை எடுத்துச்சொல்லியும், காவலர்களது கால்களைப்பிடித்துக்கெஞ்சிக்கேட்டும் வெளியே விட மறுத்து விட்டனர்.
காவலர்களில் வயதான காவலர் ஒருவர் “நகையைப்பிடுங்க அந்தப்பெண்ணைத்துரத்திய திருடனாக இருந்தால் பிரசவ வேதனையில் இருக்கும் ஒரு பெண்ணைப்போல் இப்படித்துடிக்க மாட்டான். எதற்க்கும் நமது ஜீப்பை எடுத்துக்கொண்டு இவன் வீட்டு வரை நானே சென்று உண்மை நிலையை அறிந்து வருகிறேன்” என்று சொல்லி பிரபாகரனிடம் முகவரியை வாங்கிச்சென்றவர் வெகு நேரமாகியும் திரும்பாதது கண்டு, ‘தன் மனைவிக்கு என்ன ஆகியிருக்குமோ?’ என்ற கேள்வி மனதில் எழ கவலை கொண்டான்.
அவன் எண்ணிய சிறிது நேரத்துக்கு பின் ஜீப் வந்து நின்றது. கையில் பெட்டியுடன் இறங்கிய காவலர் பிரபாகரனைப்பார்த்து புன்னகைத்தவாறே வந்தார்.
வந்தவர் லாக்கப்பை திறந்து விட்டு “வாழ்த்துக்கள் பிரபாகரன். உங்க மனைவிக்கு ஆஸ்பத்திரில அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கு. நான் தான் என்னோட ஜீப்ல அவங்களை அங்கே சேர்த்தேன். அங்கே ஆஸ்பத்திரி வளாகத்துல இருந்த கடைல கேக் வாங்கிட்டு வந்திருக்கேன். உங்க கையால எனக்கும்,மற்ற காவலர்களுக்கும் சந்தோசமா கொடுத்துட்டு நிம்மதியா போங்க” என்றார்.
“ஒரு பெண் புகார் கொடுத்தாள் என்பதற்க்காக நல்லவரான உங்களை நல்லா விசாரிக்காம கைது செய்து தப்பு பண்ணிட்டோம். நான் மட்டும் சரியான சமயத்துல உங்க வீட்டுக்கு போகாம இருந்திருந்தா ஓர் உயிரை அல்ல இரண்டு உயிர்களைக்கொன்ற பாவிகளாகியிருப்போம்” என்று கூறிய காவலரை கடவுளாக நினைத்துக்கையெடுத்துக்கும்பிட்டான் பிரபாகரன்.