இன்னொரு தாய்






சனிக்கிழமை . மாலை நேரம். மிகப்பெரிய தனியார் மருத்துவமனையான மல்லிகா மருத்துவமனையின் ஆறாவது தளத்தில் அந்த மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி சதீஷ் குமாரின் அறைக்கு வெளியே சின்னஞ்சிறிய நாற்காலிகளில் சூரிதார் அணிந்த ஒடிசலான, அழகான இரண்டு இளம்பெண்கள் ரஞ்சனாவும் நிரஞ்சனாவும் அமர்ந்து இருந்தனர். சற்று நேரத்தில் நீல நிறச் சேலை அணிந்த ஓர் இளைஞி அந்த அறையிலிருந்து வெளியே வந்து இவர்களிடம் சார் ஒங்கள வர சொல்றாரு என்று சொல்லி விட்டு அவள் மாடிப்படிகளை நோக்கிச் சென்றாள். இவர்கள் இருவரும் அறைக்குள் சென்றனர். அறையின் கதவு திறந்து இருந்தது. சபாரி உடுத்திய பருமனான தேகம் கொண்ட நடுத்தர வயது நபர் சதீஷ் குமார், இவர்களின் விசிட்டிங் கார்டைப் பார்த்தபடியே அமரச் சொன்னார். இருவரும் நாற்காலிகளில் அமர்ந்தனர்.
“டிடெக்ட்டிவ் ஏஜன்சி நடத்தறீங்களா…சரி என்ன வேணும்?”
நிரஞ்சனா பேசினாள்: “சார் என் பேரு நிரஞ்சனா. இவங்க பேரு ரஞ்சனா. எங்கள வளர்த்த மாமா நந்த கோபால் இங்க அட்மிட் ஆயிருக்காரு…”
“பாரதி ஆசிரமம் ஹெட் அவரா…?”
“சார் ஒங்க சேர்மனோட பொண்ணு மிருதுளா மேம் எங்க தோழி..ஆனா அவங்கள ரீச் பண்ண முடியல..நீங்க கொஞ்சம்…”
சதீஷ் குமாரின் முகம் மாறியது. உரத்த குரலில் பேசினார்: “மேனேஜ்மென்ட்ல யார் சொன்னாலும் நான் சலுகை காட்ட மாட்டேன். அவர் சாரிட்டி நடத்தறவராக இருக்கலாம். நாங்க அப்படி இல்ல பார்த்தீங்க இல்ல எவ்வளவு பெரிய எஸ்டாப்ளிஷ்மென்ட்… நீங்க டிஸ்சார்ஜ் செஞ்சு ஒங்க பொருளாதாரத்திற்கு ஏத்த இடத்துக்கு அழைச்சுகிட்டு போங்க”
ரஞ்சனாவும் நிரஞ்சனாவும் எழுந்து நின்றனர். அப்போது உயரமான, ஒல்லியான உடல்வாகு கொண்ட சூரிதார் அணிந்த அழகான இளம்பெண் அறைக்குள் நுழைந்தாள். சதீஷ் குமார் எழுந்து நின்றார். அந்த இளம்பெண் தான் நிரஞ்சனா குறிப்பிட்ட மிருதுளா.
மிருதுளா சதீஷ் குமாரைப் பார்த்து விட்டுப் பேசினாள் “சார்..நந்த கோபால் இவங்களுக்கும் இவங்கள மாதிரி பல பேருக்கு வளர்த்த மாமா… எனக்கு உறவுல மாமா..எங்க அம்மாவோட உடன் பிறந்த தம்பி…தாய் மாமா இன்னொரு தாய் மாதிரின்னு சினிமாவுல வசனம் வரும் பார்த்து இருக்கீங்க இல்ல…இப்ப என்ன சொல்றீங்க…”
சதீஷ் குமார் நெளிந்தார். “நான் பார்த்துக்கறேன்…மேம்…” என்றார்.
“வாங்கடி” என்று ரஞ்சனா, நிரஞ்சனாவிடம் கூறிய மிருதுளா விடுவிடுவென அறையை விட்டு வெளியேறினாள். இரண்டு இளம்பெண்களும் அவளைத் தொடர்ந்தனர்.
– “நாயகன் / நாயகியின் அரவணைப்பில் ஆதரவற்ற சிறுவர் சிறுமியர் மற்றும் முதியோர்” என்பதை அடிநாதமாக கொண்டு “எங்க மாமா கதைகள்” என்னும் இந்த சின்னஞ்சிறு புனைகதைகளின் தொகுப்பைப் படைத்துள்ளேன்.