இன்னொரு உரிமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2024
பார்வையிட்டோர்: 453 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இடுப்பில் இருந்து கணுக்கால்வரைக்கும் எட்டுமுழப் பட்டுவேட்டி ஒளிர, இடுப்பிற்கு மேலே ‘பாப்ளேன்’ சட்டை மினுங்க, கழுத்தில் ஜரிகை போட்ட ‘மேரியல்’ ஜொலிக்க, உதட்டில் வெற்றிலை போட்ட தடயம் டேஞ்ஜர் லைட் மாதிரியும் – லிப்ஸ்டிக் மாதிரியும் பிரகாசிக்க, மோதிரம் போட்ட வலதுகையில் கருப்புக்குடை துலங்க – சின்னச்சாமி வீட்டை நோக்கி மேக்கப்போடு வந்துகொண்டிருந்தார். 

அப்போது அவர் தங்கை தமயந்தி வாசலில் சாணந் தெளித்துவிட்டு, கோலம் போட்டுக்கொண்டிருந்தாள் தாமரைப் பூக்கோலம் அது. அடுக்கடுக்காக ஓர் இதழின் மேல் இன்னோர் இதழாக கோலப்பூ உருவாகிக்கொண் டிருந்தது. புருஷன் வருவதை ஊர்க்கிணற்றிலேயே பார்த்து விட்ட லட்சுமி, ‘தோண்டி’யை அங்கேயே போட்டுவிட்டு. குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு ஓடோடி வந்தாள். வீட்டை நெருங்க நெருங்க அவள் வேகம் அதிகமாகி வாசலுக்கு வந்தபோது உச்சக்கட்டத்திற்கு வந்தது. புருஷ னிடம் பேசும் ஆவலை அடக்க முடியாமல், அவள் இரண்டு கால் வைக்க வேண்டிய தூரத்தை ஒரே காலில் வைத்த போது, குடம் குலுங்கி அதிலிருந்து நீர் ‘சளக்’கென்று கோலத்தில் விழுந்தது. தமயந்தியின் தாமரைப்பூக் கோலம் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது. 

மூச்சை முன்னும் பின்னும் விட்டுக்கொண்டே, போன விஷயம் என்னாச்சு?” என்றாள் லட்சுமி. ‘மேக்கப்’போடு பேச விரும்பாதவர்போல் சின்னச்சாமி செருப்புக்களைக் கழற்றிப் போட்டுவிட்டு கிழிந்துபோன ஒரு நாலுமுழ வேட்டியைக் கட்டிக்கொண்டபிறகு மனைவியைப் பார்த்து கொஞ்சம் தண்ணி தா” என்றார் நிதானமாக. லட்சுமிக்கு குடத்தை இறக்கிவைக்க வேண்டும் என்று தோன்றவில்லை. 

“போன விஷயம் என்னாச்சி? அதச் சொல்லும் முதலுல!” 

“நீ முதல்ல தண்ணி தாப்பா…” 

“மாடுகூட இந்த வேளையில தண்ணி குடிக்காது. உமக்குத் தாகம் எங்கிருந்துதான் வருதோ…அது சரி, போன விஷயம் என்னாச்சி?” 

சின்னச்சாமி அவளிடம் பேசவில்லை. நேராக சமைய லறைக்குள் போய் செப்புக்குடத்திற்குள் ஒரு செம்பைவிட்டு உலுக்கி, வாய்க்குக் கொண்டு வந்தார். 

“போன விஷயம் என்னாச்சி?” 

“அநேகமாய்ப் பழந்தான்.” 

“அப்படியா, பையனுக்கு என்ன வேலையாம்? சொத்து இருக்கா? சுகம் இருக்கா? சொல்லுமே சீக்கிரமா!” 

“பையன் செக்கச் செவேன்னு ராஜா வீட்டுக் கண்ணுக் குட்டிமாதிரி இருக்கான். ரெவின்யூ இன்ஸ்பெக்டரா இருக் கானாம்! வேலையில் சேர்ந்து மூணு வருஷத்துல ரெண்டு வீடு கட்டிட்டான் கெட்டிக்காரன்!” 

“ரெவின்யூ இன்ஸ்பெக்டருக்குச் சம்பளம் குறைவாத் தானே இருக்கும்?’- இந்தக் கேள்விக்குப் பதில் சொல் லாமல் சின்னச்சாமி சிறிது நேரம் சிரித்தார். 

“ஒனக்கு ஒப்பனமாதிரி விபரந் தெரியல பிள்ளை பையனுக்கு முந்நூறு ரூபாய்தான் சம்பளம். ஆனால் கெட்டிக்காரன்… சம்பளத்துல சாப்பிட்டு கிம்பளத்துல வீடு கட்டிட்டான்.” 

“பரவாயில்லையே! அது சரி, எவ்வளவு கேக்கான்?” 

“முப்பது கழஞ்சி (இருபது பவுன்) நகையும்… மூவாயிரம் ரூபாய் ரொக்கமும் கேக்குறான்.” 

லட்சுமியின் முகம் கறுத்தது. அண்ணன் நல்ல முடி வோடு வந்திருப்பதை யூகித்துக்கொண்டு தமயந்தி அந்தப் பக்கமாக வந்தாள். பூவரசு பூவைப்போன்ற நிறம்! நாட்டுக் கட்டை போன்ற அவள் மேனியில், பருவம் ‘சன் மைக்கா’ மாதிரி மின்னியது. லட்சுமி ‘நாத்தனாரை’ச் சாடினாள்: 

“பெரியவிய பேசையில், உனக்கென்ன அம்மாளு இங்க வேல? போயி… மாட்டுக்குப் புண்ணாக்கு வையி போ! போ!” 

தமயந்தி புண்ணாக்கு எடுக்கப்போகும் சாக்கில், வீட்டுக்குள் போய் வாசற்கதவிற்குப் பின்னால் காதைத் தவிர, இதர உடற் பகுதிகளை மறைத்துக்கொண்டாள் லட்சுமி, ‘இடைவேளைக்குப் பிறகாவது நல்லா இருக்கும் என்று நினைத்து ‘தம்மடித்து விட்டு வரும் சினிமா ரசிகன் போல் சின்னச்சாமியை ஆவலோடு நோக்கி ஆதங்கத்தோடு கேட்டாள்: 

“நீரு சொல்றதப் பாத்தா எனக்குப் பயமா இருக்கு. வேலயில சேர்ந்து மூணு வருஷத்துல ரெண்டு- வீடு கட்டுறவன், அஞ்சு வருஷத்துல கமபியையும் எண்ணலா மில்லியா?” 

“கெட்டிக்காரன்! மேலிடத்தையும் கவனிச்சுக்கிறானாம். மாட்டிக்கமாட்டான்!” 

”நமக்கெதுக்கு வம்பு? கிளியை வளர்த்துப் பூனை கையில எதுக்குக் கொடுக்கணும்? ஒண்ணு கிடக்க ஒண்ணாகி அவன் ஜெயிலுக்குப் போயிட்டா! நம்ம தமயந்தி கதி என் னாகும்? கொஞ்சமாவது யோசித்தீரா? மூளையை உருக்கு’ப் பண்ணும்!” 

சின்னச்சாமி தாடையில் மூளையிருப்பதுபோல் அதைத் தடவி விட்டுக்கொண்டே யோசித்தார். “நீ சொல்றதும் ஒரு வகையில் சரிதான்.” 

“ஒருவகையில் இல்ல… எல்லா வகையிலேயும் சரியாத் தான் இருக்கும்.” 

“உனக்கு இருக்க மூளை எனக்கு வராது பிள்ளே! தெரியாத இடத்துல விழுவுறதவிட தெரிஞ்ச இடத்துல விழுவுறது நல்லது. நம்ம மேலத்தெரு மாடசாமி மவனுக்குக் கேக்கறாங்க. பி.ஏ.படிச்சிருக்கான். சொத்துபத்து இருக்கு. கொடுக்கலாமுன்னு நினைக்கேன்!” 

“எவ்வளவு கேக்காங்க?” 

“இருபத்தைஞ்சு கழஞ்சியும், இரண்டாயிரத்து ஐநூறும் வேணுமாம்.” 

“அவனுக்கு மாறுகண்ணாச்சே!’ 

“ஆம்பள எப்படி இருந்தா என்ன? எனக்குக் கூடத் தான் மாறுகண்ணு.” 

“அதனாலதான் சொல்றேன். மாறுகண்ணுக்காரனுக்கு வாக்கப்பட்ட ஒரு பொண்ணுக்குத்தான், இன்னோட பொண்ணின் மனசு தெரியும். நம்ம தமயந்தி எவ்வளவு அழகா இருக்கா! ஆலம்பழத்த, அண்டங்காக்கா கொத்துற துக்கு விடலாமா? மூளைய உருக்கு’ப் பண்ணிப் பாரும். உமக்கென்ன? எவன் கையிலாவது கொடுக்கத் துடிச்சிட்டு… ஏடாகோடமா போயிட்டா என்னாலதான் இப்படி ஆச்சின்னு ஊர்ல பேசுவாங்க! அதைவிட செத்தே போவ லாம்! பாழாப்போற கடவுளு… “

லட்சுமி கண்ணைக் கசக்கினாள். சின்னச்சாமியால் அவள் அழுவதைப் பார்க்க முடியவில்லை. அவளை எப்படி யும் சமாதானப்படுத்தியாக வேண்டும். அவருக்கு நாற்பது ‘மாப் வயதும், மூன்று பிள்ளைகளும் ஆகிவிட்டாலும், பிள்ளை பாக்கப்போனதில் பிரிவு நாலுநாள் ஆகிவிட்டது மூன்று நாள்தான் அவரால் பிரிந்திருக்க முடியும். 

கதவிற்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த தமயந்தி கண்ணீர் விட்டாள். கிட்டத்தட்ட மூன்று வருஷமாய்ப் ‘பிள்ளை பிடிக்கும் படலம் ‘ நடந்து வருகிறது. மாடசாமி மாமா மவன் மாறுகண்ணு என்கிறாளே! இவா கண்ணு தான் மாறுகண்ணு! இல்லன்னா அந்த மின்வெட்டுக் கண்ணை லயமாகப் பார்க்கும் அந்தக் கவர்ச்சிக் கண்ணை வேண்டுமென்றே மாறுகண் என்பாளா? எல்லாம் அப்பா, அம்மா இறந்துபோனதால் வந்த வினை. அவள்வயசுப்பெண்ணு ஒருத்திக்குக் கல்யாணமாகி கையில ண்ணும் வயித்துல ஒண்ணும் இருக்கு. இவள் மட்டும் புருஷனைப் பின்கட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போறாளே! அப்படித்தானே எல்லாத்துக்கும் இருக்கும்? 

நகையும் ரொக்கமும் அதிகமாகக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அண்ணிக்காரி, வரன்களைச் சாக்குப் போக்குச் சொல்லித் தட்டிக் கழிக்கிறாள். என்பது தமயந்திக்குப் புரிந்துவிட்டது. ஆனால் இந்த அண்ண னுக்குத் தெரியலியே! 

மனைவிக்காரி அவலை நினைத்து உரலை இடிக்கிறாள் என்பது சின்னச்சாமிக்கும் லேசாகத் தட்டுப்பட்டது. ஆகை யால் ஒருநாள் மனைவியிடம் சாமர்த்தியமாகப் பேசினார் 

“லட்சுமி ! நம்ம தமயந்திக்கு நல்லகாலம் பொறந் துட்டு. நம்ம பஞ்சாயத்து பிரஸிடெண்ட் பரமசிவம் இருக்கா னில்லியா? அவன் சம்மதிச்சுட்டான். ஊருக்கே தலைவன். சுற்றுவட்டாரத்துல அந்தப் பரமசிவம் தெரியாட்டாலும் இந்தப் பரமசிவம் தெரியும்!” 

“எவ்வளவு கேக்கான்?” 

“நாற்பது கழஞ்சியும்… நாலாயிரமும்.” 

“ஓமக்குக் கொஞ்சமாவது ‘கூறு’ இருக்கா? அந்தப் பரமசிவம் புறம்போக்கு நிலத்த சுத்தி வளைச்சுப்போட் டிருக்கான். பேப்பர்ல வர்றதுமாதிரி விசாரணைக் கமிஷன் வந்தால்…தமயந்திலா சந்தில நிக்கணும்? அதோடு அவன் குடிகாரன், குட்டிக்காரன்.” 

“என்னழா …ஒரேயடியாய் நீட்டுற? உன் பெரியய்யா மவன் நடராஜன் குடிகாரன் இல்லியா? சீட்டாட்டம் வேற! பொம்பிள ஷோக்கு வேற.” 

“எங்க நடராஜன சொன்னா… ஒம்ம நாக்கு அழுகிடும். பீடிகூடப் பிடிக்கமாட்டான். அவன் நடந்துபோற தூசீல அறுந்துபோற தூசுக்குக்கூட பரமசிவம் பெறமாட்டான்! நான் நீன்னு பொண்ணு வீட்டுக்காரங்க போட்டி போடறாங்க.” 

“அப்படி வா வழிக்கி நடராஜனுக்குத் தமயந்திய கேக்குறாங்க! கொடுத்திட வேண்டியதுதான்! உனக்கு எவ்வளவு போட்டாங்களோ அவ்வளவு நாம் போட் டுடணுமாம்.” 

“உமக்குக் கொஞ்சமாவது இருக்கா? நாற்பது கழஞ்சி யும், ஐயாயிரமும் நம்மால கொடுக்கமுடியுமா? நம்ம பிள்ளிக கதி என்னாவுறது?” 

“நமக்கு பம்பு செட்டோடு, மூணு கோட்டை புஞ்சை அது இதுன்னு ஒரு லட்சம் ரூபா சொத்து இருக்கு. தமயந் திக்குப் பதினெட்டாயிரம் ரூபாய் போட்டால் குடியா முழுகி விடும்?* 

“செக்களவு திரவியம் இருந்தாலும் செதுக்கித் திங்க ஆகாது!” 

“இந்தமாதிரி பேசினியான்னா எனக்குக் கெட்ட கோவம் வரும். நான் பாக்குறது பிடிக்கல! நீயாவது ஒரு மாப்பிள்ளை பாரேன்!” 

“ஒம்மமாதிரி நான் பராக்கு இல்ல. எங்க ஊர்ல இருந்து போயி மெட்ராஸ்ல எவர்சில்வர் கடை வச்சிருக்கார்ல நாகரத்தினம். அவரு பையன் வக்கீலாம்! எங்க அய்யா கிட்ட வந்து நல்ல குடும்பத்துப்பொண்ணா பாரும். நகையும் வேண்டாம்; நட்டும் வேண்டாம். பத்தாவது படிச்சிருக் கணும். கட்டுன துணியோட விட்டால் போதுமுன்னு லட்டர் போட்டிருக்கார். மெட்ராஸ்ல ரெண்டு வீடு இருக் காம். தமயந்திய முடிச்சிடலாம்.” 

“பையன் மெட்ராஸ்லே விலை போவாதவனா இருப் யான்… ஒருவேளை மாறுகண்ணா இருக்கலாம்!” 

“இடக்குப் பேசாட்டா உமக்குத்தான் தூக்கம் வராதே! ஆம்பிள்ளைக்கு அழகு எதுக்கு? உமக்குக்கூடத்தான் மாறு கண்ணு. நான் சந்தோஷமா இல்லியா? நமக்கும் மெட் ராஸ்லே ஒரு ஆளு இருக்காண்டாமா?” 

எவர்சில்வர் வியாபாரியின் மகனும், பிரபலமில்லாத வக்கீலுமான மோகனுக்கும் – தமயந்திக்கும் திருமணம் நிச்சயம் ஆனது. “ஒண்ணும் வேண்டாமுன்னு சொல்றத் துக்காக மாப்பிள்ளைக்கு எதிர்மாலையா பத்து கழஞ்சில ஒரு தங்கச்செயினு போடாண்டாமா?” என்று சின்னச்சாமி முறையிட, “கர்நாடகமுன்னு சிரிப்பாக” என்றாள் லட்சுமி. 

தமயந்தி வக்கீல் மாப்பிள்ளை கிடைத்ததில் மகிழ்ந்து போனாள். லட்சுமி ‘ஓசி’க் கல்யாணத்தில் உச்சி குளிர்ந் தாள். சின்னச்சாமி மாயமோ மந்திரமோ என்று மனங் குளிர்ந்தார். 

கல்யாணம் ஆகி இரண்டு மூன்று நாட்கள் ஆகி யிருக்கும். மோகனின் தந்தை எவர்சில்வர் குடம் மாதிரி கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். சின்னச்சாமியும் லட்சுமி யும், தமயந்தியும் மோகனும் ஜோடியாக உட்கார்ந்திருந்தார்கள். 

எவர்சில்வர்காரர் “சின்னச்சாமி! கல்யாணச் செலவு எவ்வளவு ஆகியிருக்கும்?’ என்றார். 

“ரெண்டாயிரம் ரூபாய்க்கு மேல போயிருக்காது.” 

“அப்படியா? இந்தாங்க ரெண்டாயிரம் ரூபாய்.” 

“என்ன மாமா… நீங்க ஒண்ணும் வேண்டாமுன்னிங்க. இந்தச் செலவாவது என்னுதா இருக்கட்டும். உங்க மனசு யாருக்கு வரும்? பரவாயில்லை, வேண்டாம்…” 

“அது தப்பு. பேசாம வாங்கும்… கல்யாணச் செலவு எங்க பொறுப்பு.” 

“கை கூசுதுக…” 

லட்சுமி இடைச்செறுகல்’ ஆனாள்: 

“பெரியவர் தர்றத ஏன் வேண்டாங்கிறீயரு? அவரு. கையில வாங்குற புண்ணியத்திலாவது நம்ம வீடு விருத்தி யாவட்டும்.” 

சின்னச்சாமி வாங்கிக்கொண்டார். எவர்சில்வர் மாமா புன்னகை செய்துகொண்டார். பிறகு- 

“மாப்பிள்ளை ஒரு விஷயம். எப்போ பாகப்பிரிவினை பண்ணலாம்?” 

“என்னா பாகம்… என்ன பிரிவினை? மாமா சொல்றது. புரியல…” 

“புரிய வைக்கிறேன். ஒம்ம தங்கச்சியோட சொத்தை நீங்க பயிர் செய்றதுல எனக்கு ஆட்சேபணை இல்ல. ஆனால் கொண்டான் குடுத்தானுக்கிடையில இசுக்கு இருக்கக் கூடாது பாரும்… அதனால நாளைக்குக் கர்ணத்தை வர வழைச்சி சொத்தைப் பிரிச்சி மூணாவது மனுஷனிடம் குத்தகைக்கு விடலாமுன்னு நினைக்கிறேன்.’ 

“தங்கச்சிக்கு எதுக்குச் சொத்து?” 

“அவளும் ஒங்க அப்பனுக்குப் பிறந்தவள்தானே… அவளுக்கும் சொத்துல பாத்தியதை உண்டுல்ல?” 

லட்சுமி நிஜமாகவே குதித்தாள்: 

“இந்த அநியாயம் எங்கேயாவது உண்டா? பொம்பிளைக்குச் சொத்து, நம்ம சாதில கொடுக்கது கிடையாது. வரதட்சணை வேண்டாமுன்னு சொல்லிட்டு நகை வேண்டா முன்னு சொல்லிட்டு… இப்போ சொத்துல பங்கு கேக்கிறது நியாயமா? அட பாழாப் போற கடவுளே…” 

எவர்சில்வர் எகிறினார்: “கப்பல்ல பொண்ணு வருது’ன்னானாம் ஒருவன். ‘அப்படின்னா எனக்கு ஒண்ணு; என் அப்பனுக்கு ஒண்ணு’ன்னானாம் இன்னொருவன். உங்க கதை இப்படித்தான் இருக்கு! தமயந்திக்கு அப்பா அம்மா இல்லங்கறதுனால சொத்த அமுக்க முடியாது. நாளைக்கே பிரிச்சாகணும்…” 

“இது அநியாயம்… அசிங்கம். நம்ம சாதிக்கு அடுக்காது. நேத்துகூட ரேடியோவில் வரதட்சணை வாங்கக்கூடாது, பொண்ணு வீட்டுக்காரங்கள சித்ரவதை பண்ணக்கூடாதுன்னு சொன்னாங்க.” 

எவர்சில்வர் மாமா மசியவில்லை: 

“உன்னை மாதிரி நிறைய பேரு, இப்படித் தப்பா நினைக்கிறாங்க. வரதட்சணை வாங்கக்கூடாதுன்னா பொண்ணுக்குச் சொத்துல உரிமை கிடையாதுன்னு அர்த்தமில்ல. வரதட்சணையைப் பற்றி பேசுறவங்களும் எழுதுற வங்களும் பெண்ணுக்குச் சொத்துரிமை இருக்கிறதை வற்புறுத்தாததால் வர்ற கோளாறு இது. ஏழைகிட்ட பணம் கேட்கிறது அரக்கத்தனம். ஆனால் இருக்கிறவங்க கிட்ட நியாயமா சேரவேண்டியத கேட்காதது மடத்தனம். நான் அரக்கனும் இல்ல… மடையனும் இல்ல!” 

வக்கீல் மோகன் இப்போது மனைவியை ‘இம்ப்ரஸ்’ செய்ய நினைத்தவன் மாதிரியும், இதர நபர்களை ஜூரி மாதிரியும் நினைத்துக்கொண்டு கைகளை ஆட்டி ஆட்டிப் பேசினான்: 

“நீங்க ஏமாறல… தமயந்தியை ஏமாத்தப் பார்த்தீங்க. நாங்க உண்மையிலேயே பிறந்த மண்ணுல பிடி இருக்கணுங் கறதுக்காக, நகை பணத்தைப் பொருட்படுத்தாமல் பெண்ணை மட்டுமே பொருட்படுத்தினோம். ஆனால், இவள் கழுத்தில ஏற்கெனவே இருந்த நெக்லஸைக்கூட நீங்க கழட்டிக் கொண்டதாய் இவள் சொன்னபோது என்னால் தாளமுடியல. எங்களை நீங்க ஏமாளியா நினைச்சது தெரிஞ்சுப் போச்சி இன்னொன்று- 

ஒரு பொண்ணு புகுந்த வீட்டுக்குக் கம்பீரமாய் வரணும் முன்னா அவள் தன் நியாயமான சொத்தோடு வரணும். இல்லன்னா தான் ஏமாளியோன்னு அவளுக்குத் தாழ்வு மனப்பான்மைதான் வரும். தமயந்திக்கு அந்த மாதிரி மன நோய் வர நான் அனுமதிக்கமாட்டேன். இது வெறும் பொருளாதாரப் பிரச்னை அல்ல; பெண்களின் இன்னோர் உரிமைப் பிரச்னை. இ.பி.கோ… 

எவர்சில்வர் மாமா இடைமறித்தார்: 

”சொத்தைப் பிரிச்சிக் கொடுக்காட்டால் இன்னும் ஒரு வாரத்தில் தமயந்தி சார்பில் பையன் வக்கீல் நோட்டீஸ் அனுப்புவான். அவன் பல கேஸ்ல தோத்திருக்கான். ஆனால் இந்தக் கேஸ்ல நிச்சயம் ஜெயிச்சிடுவான்!” 

எவர்சில்வர், துண்டை உதறிப் போட்டுக்கொண்டார். மோகன் மனைவியின் மன நிலையை அவள் முகத்தில் பார்க்க முயற்சி செய்தான். தமயந்தியோ அண்ணனுக்கு மனம் நோகுமே என்ற வருத்தத்தை, அண்ணி மாட்டிக்கொண்ட மகிழ்ச்சியால் ஈடுகட்டிக் கொண்டிருந்தாள். 

சின்னச்சாமி லட்சுமியை இழுத்துக்கொண்டு மாட்டுத் தொழுவத்திற்குப் போனார். அவளால்தான் இந்த நிைைம ஏற்பட்டது என்று சாடுவதற்காக மனைவியை அழைத்துக்கொண்டு போனாரா? அல்லது ஆலோசனை கலப்பதற்காக அழைத்துச் சென்றாரா என்பது இன்னும் பத்து நிமிடத்தில் தெரிந்துவிடும். 

– இன்னொரு உரிமை, முதற் பதிப்பு: மே 1992, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *