இந்தக் கொரோனாவால!




அன்று ஒரு நாள், வைகாசி மாதத்து வெள்ளிக்கிழமை.வெளியில் காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. பனித்தூறல் சாளரத்தில் பட்டுப் பட பட வென்று தட்டி எழுப்புவதுபோல் ஓசையெழுப்பியது. இன்னுமா தூங்கிக் கொண்டிருக்கிறாய் என்று தன்னைத்தானே கேள்வி கேட்டபடி மெல்லக் கண்விளித்தான் ரிசி.
இரண்டு பெரிய படுக்கை அறைகள், நன்கு விசாலமான வரவேற்பறை அதையொட்டி நவீன திறந்த சமையலறை, அத்தோடு பள பளவென்றிருக்கும் குளியலறை. புதிதாகக் கட்டிய இரண்டடுக்குமாடி கட்டடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்திருக்கிறது ரிசி வாங்கிக் குடிபுகுந்த இந்த வீடு. இந்த வீட்டிற்குத் தன்னந்தனியே குடிவந்து இரண்டு வருடங்களாகப் போகிறது. பனி கொட்டும் நாட்டிற்கு எல்லோரையும் போல் பல கனவுகளுடன் காலடியெடுத்து வைத்தவன் தான் ரிசி.
படுக்கையை விட்டு எழுந்திருக்க மனமின்றி சுவரில் தொங்கிக் கொண்டிருந்த ஓவியத்தில் பதிந்தது அவன் வாழ்க்கைக் கனவுகள். நிலாவை அவனுக்கு அவ்வளவாகத் தெரியாது. 13 வயதில் புலம்பெயர்ந்து நோர்வே நாட்டில் தஞ்சம் புகுந்தவன் ரிஷி. இருவரும் ஒரே ஊர் என்பதால் அவனின் அம்மா நிலாவின் வீட்டிற்கு வரும்போதெல்லாம் இவளைத்தான் ரிஷிக்கு திருமணம் செய்வதென்று அடிக்கடி சொல்லி அவளின் மனதில் ஆசையை வளர்த்தவர். இதெல்லாம் ரிஷிக்கு எங்கே தெரியப்போகிறது.
பருவ வயதை நிலா அடைந்தபோது ரிஷியின் சம்மதமின்றியே நிலாவின் வீட்டாருக்கு வாக்குக் கொடுத்துவிட்டார் ரிஷியின் தாயார். ரிஷிக்கு அப்பொழுது 21 வயது மட்டுமே நிரம்பியிருந்தது. ரிசியின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லாததால் இந்தியாவிற்கு அழைக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார் அவர். இந்நிலையில்த்தான் தொண்டையில் அவருக்குப் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டு, சத்திர சிகிச்சை செய்தார்கள். அதனால் பேசும் திறனை இழந்தார் தாயார். கடைக்குட்டிப் பையனான ரிஷி தாய்ப்பாசம் மிக்கவன். ஒரு முறையேனும் தாயைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் நோர்வேயிலிருந்து
சென்னையில் ஒவ்வொரு நாளும் வைத்தியசாலைக்கும் வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருந்தான் ரிசி. எப்பவும் போல வழக்கமாக அன்றும் தாயாரைப் பார்க்கச் சென்றான் ரிசி, அன்றுதான் அவன் வாழ்வில் ஓர் திருப்புமுனை ஏற்படப் போகின்றதென்பதை அறியாதவனாய்… கட்டிலில் படுத்திருந்த தாயாரின் அருகில் ஓர் இளைஞன் நின்றிருந்தான். பேச்சை இழந்த தாயார் இப்போதெல்லாம் கையசைவில் கதைப்பதற்கு நன்கு கற்றிருந்தார்.ரிசியின் கைகளைப்பற்றிக் கொண்ட தாயார் அவன் கைகளை அந்தப் இளைஞனின் கைகளில் ஒப்படைத்து தலையசைத்தார். ஏதும் புரியாது விழித்த ரிசிக்கு அவன்தான் கூறினான், தான் நிலாவின் அண்ணன் என்பதையும், தாயார் கொடுத்த உறுதிமொழி பற்றியும் எடுத்துரைதான்.ரிசிக்கு தலை சுற்றியது, வைத்தியசாலையை விட்டு உடனே வெளியேறினான்.
அம்மாவின் வாக்குறுதியைக் காப்பாற்ற நினைத்தானா? இல்லை நிலாவின் அழகில் லயித்தானா? தெரியவில்லை. திருமணத்திற்குச் சம்மதித்தான். தயார் குணமடைந்து மீண்டும் தாயகம் திரும்பினார். ஆனாலும் அவர் பூரண குணமடையவில்லை. சில மாதங்களிலேயே இறந்துவிட, நிலாவீட்டாரின் கடும் நெருக்கடியால் தாயார் இறந்து மூன்று மாதங்களே ஆகியிருந்த நிலையில் மீண்டும் இந்தியாவிற்குச் சென்று நிலாவை அழைத்து பதிவுத் திருமணம் செய்துகொண்டான். நிலாவிற்கு அப்பொழுது 18 வயதே நிரம்பியிருந்தது. அறியாப் பருவம் ஆனாலும் வெளிநாடு சென்று வாழப்போகின்றேன் என்ற குதூகலிப்பு மட்டும் அவளின் முகத்தில்
நாட்கள் நகர்ந்தன, நிலா கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுப்பான் ரிசி, அவளும் குசியாகவே வாழப் பழகிவிட்டாள். வருடங்கள் இரண்டு ஆனபோது நோர்வேக்குச் சென்று கணவருடன் வாழ விசாக் கிடைத்து, ஏதேதோ கனவுகளுடன் வந்திறங்கினாள் அவள். கணவர் ஓர் அறையில் அடைபட்டுக் கிடைப்பதையும் தானும் அந்த அறைக்குள்ளேதான் வாழ வேண்டும் என்பதையும் அவளால் ஜீரணிக்க முடியவில்லை. மாணவர் விடுதிதான் அவன் தங்கியிருந்த இடம், கழிவறையும் குளியலறையும் எல்லோருக்கும் பொதுவானது. அதைச் சமாளித்து வாழ அவளால் முடியவில்லை. கழிவறைகளைச் சுத்தம் செய்வதே அவனுடைய தொழில் என்று அறிந்தபோது அவனிடத்தில் அவளால் ஒட்டிக் கொள்ள முடியவில்லை. அவனோடு இணைந்து வெளியில் செல்வதைத் தவிர்த்தாள் அவள். சுத்தம் செய்யும் தொழில் என்றாலும் தகுந்த ஊதியத்தைப் பெறும் அவனால் பணத்தைச் சேமிக்கவும் சரியாகக் கையாளவும் முடியாதிருந்தது. அவன் இன்னும் வளரவில்லையென்றே சொல்லவேண்டும். பின்னாளில் ஒரு படுக்கையறையோடு கூடிய ஒரு வீட்டைச் சொந்தமாக வாங்கியபோதும் அவளை அவனால் திருப்திப்படுத்த முடியவில்லை. இன்னும் இன்னும் அடுத்த கட்டத்திற்கு நகர் என்றே அவனை விரட்டத் தொடங்கினாள். அவனுக்கோ பிள்ளைகள் என்றால் கொள்ளை ஆசை. அவளோ அதற்கான தேவைகள் இன்னும் பூர்த்தியாகவில்லை என்பாள்.
வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாகக் கசக்கத் தொடங்கியது. இருவருக்குமிடையில் சந்தேகப் பெரு நீரும் ஆறாய்ப்பெருக்கெடுத்து ஓடியது. வீட்டிலுள்ள பொருட்களே இருவரின் கோபத்திற்கும் பலியாகின. அதன் விளைவுதான் அவள் ஒரு நாள் வீட்டைவிட்டு வெளியேறினாள், அவனிடம் சொல்லாமலேயே…..
இதனைச் சற்றும் எதிர்பாராத ரிஷி அடிபட்ட புழுவாய் சுருண்டு படுத்தான். எவ்வளவு சமாதானம் சொல்லியும் அவள் பிடிவாதமாகவே இருந்தாள். கைவிடப்பட்டோர் நலன்புரி நிலையத்தில் தஞ்சம் புகுந்த அவளை மீட்க முடியவில்லை; இல்லை அவள் மறுத்துவிட்டாள். நாட்கள் சில நகர்வதற்குள்ளேயே விவாகரத்து விண்ணப்பத்தில் கையெழுத்திடுமாறு வக்கீலூடாக அஞ்சல் வந்தது. விடைபெற விருப்பமில்லாத தன் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து கையெழுத்திட்டு அனுப்பிவைத்தான்.
யாருடைய தவறு இது? வெளிநாடு என்பது வெறும் கனவுலகமாகவே இன்றுவரை நம்மவர்களால் மனக்கண் கொண்டு பார்க்கப்பட்டு வருகிறது. மேற்கத்தேய நாடுகளிற்கு புலம்பெயரும் நம்மவர்கள் இங்கு எதிர் நோக்குகின்ற பிரச்சனைகள், வாழ்க்கைச் சவால்கள் என்பனபற்றித் தாயகத்திலிருப்பவர்களுக்கு புகட்டத் தவறியதால் வந்ததன் விளைவா? இல்லை; என்போன்ற இளைஞர்கள் கண்மூக்குத் தெரியாமல், இலங்கைப் பெறுமதியைக் கருத்தில் கொள்ளாது பணத்தை வாரி இறைத்து, நாமே இந்த நிலைக்கு அவர்களை ஆளாக்க காரணமானோமா? அவனால் எதற்கும் விடைகாண முடியாதிருந்தது.
கைபேசி அலறல் கேட்டு தன்னைச் சுதாகரித்துக் கொண்டவன். அதை எடுத்துக் காதில் வைத்தான். ஏய் இன்னுமா தூங்குறாய்? என்ற செல்ல அரவணைப்பில் திகழ்ந்து, நெளிந்து எழுந்தான். ஆம் இவள்தான் அவனை இப்போது அன்பால் திணறடிப்பவள். நல்ல பொறுப்பு, சேமிப்பின் சிகரம். அம்மா, அப்பாவிற்கு ஒரே பெண், ஆருயிராய் ஒரு அண்ணன். பேசி முடித்த திருமணம்தான். ஆனாலும் அவளுக்கு தன் கடந்தகாலமெல்லாம் சொல்லியிருக்கிறான். அவள் அதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லை. “நீங்கள் உண்மையைச் சொன்னதால் எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது என்பாள். திருமணம் செய்த பிறகும் தப்புச் செய்யும் ஆண்கள் இருக்கிறார்கள் இல்லையா! இதைவிட உண்மையை மறைக்கிறவர்களும் இருக்கிறார்கள்தானே”என்பாள். ச்சே! இவளை ஏன் கடவுள் முதலில் எனக்குக் காட்டியிருக்கக் கூடாது? என்று பல தடவையென்ன தினம் தினம் எண்ணி ஏங்கியவாறே கழிகிறது அவன் வாழ்க்கை. இந்தக் கொரோனாவால அவளும் இன்னும் வந்து சேரவில்லை.