இதழ்கள்




(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அம்மா அடிக்கடி சொல்லுவா : “நாக்கைப் பிடுங் கிண்டு சாகலாம் போல இருக்கு; ஆனால், கைதான் எச்சிலாப் போயிடுமேன்னு பாக்கறேன்”- அப்போல்லாம் அதுக்கு சரியான பதில் என்னன்னு தெரியாது. இப்போ தெரியும்;
“ஏம்மா, சாகத் துணிஞ்ச பிறகு, எச்சிலைப்பத்தி என்ன கவலை?”
அப்போ கேட்கத் தெரியாது. கேட்டிருந்தாலும் முதுகில்தான் கிடைத்திருக்கும். ஆனால், கேட்டாலும் கேட்டிராவிட்டாலும், அம்மா சொன்னதில் வாஸ்தவம் இருக்கென்றே தோணறது.
பாறேன், சாகணும்னு வந்திருக்கிறேன். ஆனால், இந்த ஜலம் இப்படி நாறுகிறதே ! உவ்வே !- வாடை வயிற்றைக் குமட்றது. சாகத் துணிஞ்ச பின் நாற்றத்தைப் பற்றி என்ன கவலை? சாவில்கூட மனம் சுகம்தான் நாடு கிறது. சந்தேகமேயில்லை.
ஆனால், இன்னிக்கு நான் பார்த்திருக்கும் வேளை சரியில்லேன்னுதான் தோன்றுகிறது. எதிர் பெஞ்சில் இந்தக் கிழவி இன்னும் உட்கார்ந்திருக்கிறாள். உட்கார்ந்த இடத்தை விட்டு அசையவுமில்லை. இதுவரைக் கும் என்னை ஏன் என்று கேட்க யாருமில்லாமல், இந்த சமயத்துக்கு எங்கிருந்து இவள் காவல் வந்தாள்? இருக் கட்டும். பார்க்கலாம். இன்னும் வேண்டிய பொழுது இருக்கிறதே!
பாட்டி, அம்மா அப்பாவிடம் சொல்லிண்டிருப்பாள்.
நான் பம்பரம் ஆடிண்டிருப்பேன்.
“ஆமாம். எல்லாத்துக்கும்தான் புண்ணியம் பண்ணி யிருக்கணும், ரொம்ப நாள் இழுபடாமல், பிறருக்கு சிரமம் கொடாமல், உடம்புக்கும் ரொம்ப உபாதையில்லாமல், சனிக்கிழமையில்லாமல், வேளையில்லா வேளையில் யார் தூக்கத்தையும் கெடுக்காமல் -”
“டே சேகர், கூடத்தில் பம்பரம் விடாதேன்னு எத்தனை தடவை சொல்வது ? Get out !”
பாட்டி சிரிச்சுண்டே, ‘ஊம், இதையும் சேர்த்துக்கோ. இதுமாதிரி ராஜா சொல்லச் சொல்லக் கூடத்தில் பம்பரம் ஆடி, அது எகிறி, ஆணி பொட்டிலே பொத்து – எனக்கென்ன. நான் போனப்பறம் எனக்குத் தெரியம் போறதா?’
“சேகர்!”
பம்பரம் வண்டாய்க் கூவிண்டு, கற்பூரமாத் தூங்கறது.. இருந்தும், அதை அப்படியே அழுத்திக் கலைச்சு எடுத் துண்டு வாசலுக்குப் போயிடணும். இல்லாட்டா அப்பா பிடுங்கி ஓட்டு மேலே வீசி எறிஞ்சுடுவார்.
எடுத்துண்டு வாசலுக்குப் போறேன்.
சே, இந்த வீட்டில் எடுத்ததுக்கெல்லாம் தர்க்கம். தொட்டதுக்கெல்லாம் கட்சி.
பேரில் இருந்து பெரிசு வரைக்கும்.
பாட்டிக்கு நான் ‘ராஜா’.
நான் வயிற்றில் இருந்தபோது, அப்பாவும் அம்மாவும் ஸ்வாமிகளைத் தரிசனம் பண்ணி வந்தாளாம்; அதனால் பிறந்தவுடன் அப்பாவுக்கு நான் சந்திரசேகர்; சுருக்கமாய் ‘சேகர்’.
அம்மாவுக்கு ‘குமார்’. அம்மாவுக்கு ஒரே முருக பக்தி.
பேனா மூடியைக் கழட்ட ஒத்தராலும் முடியாட்டா, நான் மனஸுக்குள்ளே ‘முருகா’ன்னு தலைப்பில், பிடிச்சுண்டு ஒரு திருகுதான் திருகுவேன். தனியா வந்தூடும்.
“ரஸத்துக்குப் புளி ஜாஸ்தி ஆயிட்டா, சுப்ரமணியான்னு உப்பை அள்ளிப் போடுவேன்; எப்படியோ சரி பண்ணிக்கும்.”
“குழம்புக்குத்தான் இல்லையேன்னு என் இஷ்ட தெய்வத்தை நினைச்சுண்டு கூடையிலே தேடுவேன்.ஒரு உலர்ந்து போன சேப்பங்கிழங்காவது அகப்படாமல் போகாது.குமரன் செயல் !”
பாட்டி குடித்தனக்கார மாமியோடு சண்டைக்குப் போவாள்.
“என்ன ஸுகந்தா, நீயும் அவளோடு சேர்ந்து ‘குமார், குமார்’ னு கொண்டாடறையே. அதென்ன குமாரு-விளக்குமாறு ?’ வீட்டுக்கு மூத்த பிள்ளையா, குடும்பத்தில் பெரியவா பேர் விளங்க வேண்டாமா? நான் தான் அவர் பேரை முழுக்கச் சொல்ல முடியவில்லை. நீயாவது வாய் நிறைய ‘நாகராஜா’ன்னு அழைக்கக் கேட்டு மகிழறேனே !”
“உங்காத்து விவகாரம் எல்லாம் எனக்கேதுக்கு பாட்டி ? இது சாக்கில் வீட்டைக் காலி பண்ற அளவுக்கு ஏதாவது தர்க்கம் முத்திவிடப் போறது. என் ஆத்துக்காரர் ஒரு மாதிரி. சும்மா இருந்தால் இருப்பார், கோவம் வந்தூட்டா தலைகாலே தெரியாது. நான் எதிலும் பட்டுக்கப் போறதில்லை. குழந்தை கொழுகொழுன்னு இருக்கான்; இனிமேல் கண்ணான்னுதான் கூப்பிடப் போறேன் – டேய் கண்ணா, ‘ஊம், ஏன்’னு கேளேண்டா!”
அப்புறம் பாட்டி ரகஸ்யமாய், “சரி சரி, ராஜா இன்னி சாயந்தரம் எங்கேயாவது ஓடிப் போயிடாதே; சுற்றிப் போடணும்.”
“ஆமாம்மா, அந்த மாமி கண் நல்ல கண் இல்லை.”
இதில் மாத்திரம் அம்மாவும் பாட்டியும் ஒண்ணு:-
ஆனால், எனக்கென்னவோ மாமிதான் இஷ்டம். சுட்ட அப்பளத்திலிருந்து மாமா வாங்கிவரும் பொட்டலம் வரை எனக்கு எப்பவும் ஒரு பங்கு வைத்திருப்பாள்.
“போறது, இந்த ஜன்மத்தில்தான் இல்லை. வர ஜன்மத்திலாவது வாய்க்காதா!*
மந்திரம் மாதிரி ஜபிச்சுண்டே அல்வாத் துண்டைத் தானே தன் கையால் என் வாயுள் தள்ளுவாள். நாக்கு, நெஞ்சு, மார்பு, வயிறு, உடம்பு முழுக்க உள்ளே தித்திக்கும்.
“என்ன வாய்க்காதா?” – வாய் நிறைய முழுங்க முடியாமல், குதப்பிண்டே கேட்பேன்.
என்னை ஒரு தினுசாய்ப் பார்த்துண்டே-கண் கோகு லாஷ்டமி நாவல் பழம்போல் பளபளக்கும்-‘கண்ணன்’ என்பாள்.
Bore
பசங்க கூடக் கேலி பண்றான்கள்.
“டேய், இன்னிக்கென்னடா பேர் வெச்சிருக்கு?”
“தினம் பேர் வெச்சா உங்காத்திலே தினம் பாயஸம் உண்டா?”
“என்னடா, அவனைச் சும்மா கிண்டல் பண்ணிண்டு? சுவாமிக்கு அஷ்டோத்ரம் இருக்கறப்போ,மனுஷனுக்கு நாலுகூட இருக்கப்படாதா?”
அன்றிலிருந்து ஐந்தாவதாய் அஷ்டோத்ரம்னு ஒரு பேர் கூட!
தொட்டால் குற்றம், திரும்பினால் குற்றம்.
“ராஜா,கூடம் அதிர்றது, ஓடாதே! பூமாதேவிக்குப் பொறுக்காது!”
“குமார், கெஞ்சிக் கேக்கறேண்டா! கெஞ்சிக் கேக்கறதாவது ? பல்லைக் கடிக்கிறாள். “ஊஞ்சலை வீசி ஆட்டாதேடா! போறவா வரவா மேலே படப் போறது!”
ஏன் ஆட்டக்கூடாது? ஊஞ்சலை ஆட்டல்லியே, பஸ்னா ஓட்றேன்? பஸ் வேகமாப் போகாதா? அதுவும் ஆபீஸ் டைம் ! நானே டைவர், நானே கண்டக்டர்!
புரரர் – ர – ர் -ர் – பஸ் ஸ்டாப் வந்துடுத்து! ஏறுங்கோ! ஆச்சா, ரைட் ரைட்! டபிள் ரைட்! ணக்ணாக்-டுர்ர்ர்ர்-”
“எனக்கு சாவு வரமாட்டேங்கறதே ! ரெண்டு நிமிஷம் கண்ணசர விடாமல், ஊர்ப் பசங்களையெல்லாம் கூட்டி வந்து நிர்த்தூளி பண்றானே ! இதுகள் எல்லாம் பிறக்கல் லேன் யார் அழுதா ? தவங்கிடக்கறவா வயத்திலே தொலையக் கூடாதா?”
அம்மா நிஜமாவே முகத்தைப் பொத்திண்டு ‘ஊ- ஊ’ன்னு நீளமா அழுவாள்.
எனக்கு வெக்கமாயிருக்கும். துக்கமா வரும். பயமா யிருக்கும். வெறுப்பாயிருக்கும். திகைக்கும்.
நான் ஏன் விளையாடக்கூடாது? அது ஒரு தப்பா? பாவமா?
“ஸோபா மேலே திமிதிமின்னு குதிக்காதேடா. இன்னும் அதுக்குப் பணம்கூடக் கொடுத்தாகல்லே. கிழிஞ்சுதுன்னா அப்பா தோலை உரிச்சுடுவா.”
இப்படி ஒவ்வொத்தராய். ஒண்ணொண்ணுக்கும் ஒரு ஒரு தோலாய் உரிச்சால், அப்புறம் எனக்கென்ன இருக்கும்? நான் எங்கிருப்பேன் ? மொத்தம் எனக்கு எத்தனை தோல்? உரிச்சால், உரிக்க உரிக்க எத்தனைன்னுதான் உரிக்க முடியும்?
நான் வளர்றது எனக்கே தெரியறது. உள்ளே சதையின் குறுகுறுப்பு உடம்பு தாங்கல்லே.
நான் கண்ணாடியில் என்னைப் பாக்கறப்போ ஒரொரு சமயம் எனக்குத் தோணும் :
இப்பொ கண்ணுக்குத் தெரியறமாதிரி ஒரு தலை, ஒரு மூக்கு, ரெண்டு கண், ரெண்டு கை ஒரு வயிறு, ரெண்டுகால்…… இது மாதிரி, இது மாத்திரந்தானே பார்க்க முடியறது? ஆனால், இந்தத் தோலுக்கடியில் இன்னும் எத்தனை கண், மூக்கு, காது? இன்னும் இது வரைக்கும் உலகத்திலிருந்து மானம் வரைக்கும் கண்ணால் கூடக் காணமுடியாமல், இன்னும் பேர்கூட வைக்காமலே. இன்னும் என்னென்ன. எத்தனை எத்தனை முளைச்சிருக்கும்?
பூவுக்குள்ளே இதழ் இதழாய்
மரத்துக்குள்ளே முண்டும்
முடிச்சுமாப்போல்
உடம்புக்குள்ளே, தோலின்
கெட்டிக்கடியிலே
இன்னும் என்னென்ன?
எத்தனை எத்தனை?
இதைப் பார்த்துத் தெரிஞ்சுண்டூடணும் – ஆத்திரம் மீறிப் போச்சு. ஒரு சமயம் அப்பா க்ஷவரம் பண்ணிண்டு எறிஞ்சுட்ட ப்ளேடாலே நானே கட்டை விரலை வெட்டிண்டேன்.
ரத்தம் பீச்சியடிச்சுது.. பயமாப் போச்சு. காயத்திலிருந்து கிளை கிளையா, கொடி கொடியாப் பிரிஞ்சு உள்ளங்கையில் வழிஞ்சுது. ஆனால், வேறொண்ணுந் தெரியல்லே.
அம்மா பார்த்துப் பயந்து போனாள். ‘லபலப’ன்னு வாயிலடிச்சுண்டா.
“அட மஹாபாவி! எந்தக் கசாப்புலேருந்து நேரே என் வயத்துலே முளைச்சேடா? எந்த ராக்ஷஸப் யிறவிடா நீ?”
டிங்சர் ரொம்பவும் எரிஞ்சுது. அழுதேன்.
“வாயைத் திறந்தையோ, போட்டூடுவேன் பலி! செஞ்ச காரியம் ஜரிக்க அழுகை வேறேயா? உம்-மூச்சு!”
வாயை இறுகப் பொத்திண்டு, பீறி வர தேம்பலை உள்ளேயே தள்ளிண்டு, அவஸ்தையில் முழி பிதுங் கிண்டு, அம்மா பயந்துபோய் ஏண்டா கண்ணேன்னு அணைச்சுண்டு-
அத்தோடு சரி.
மறுபடியும் என்னத்தைச் செய்யலாம். எதை உடைக்கலாம்னுதான் துருதுருக்கறது.
“சேகர், கத்தாதே !*- ஆபீஸ் ரூமிலிருந்து அப்பா-
அப்படிச் சொன்னதனாலேயே “ஹொஹ்-ஹோ!”. வாய்விட்டுக் கர்ஜிக்கத் தோணறது.
கர்ஜிக்கிறேன்.
வாங்கிக்கறேன்.
வசவு, அடி, திட்டு, உதை -ஊ-ஹூம்.
“கைதான் வலிக்கிறது. அத்தனையும் துடைச்சுப் போட்டுத்தானே வளையவரான்!”
“நீயே பார்த்துக்கோ, உன் பிள்ளையை!”
“ஏன் நீங்களேதான் பாருங்கோளேன், உங்கள் பிள்ளையை !”
எனக்கு என் அப்பா. என் அம்மா. ஆனால், இவா மாத்திரம் உன்னுது உன்னுதுன்னு ஒருத்தருக் கொருத்தர் ஒதுக்கித் தள்றாளே!
ஏன், எனக்கு ரோசமில்லையா? வலிக்காதோ? வலிச்சால் அழுகை வராதோ?
நான் ஒண்ணும் துடைச்சுப் போட்டூடல்லே. அது அமுங்கிப் போறது, அவ்வளவுதான்.
அன்னிக்கு மழை பேஞ்சுதே, அப்போ கொல்லையிலே, பள்ளத்திலே சேறு-என்னவோ உளையாமே- அங்கே ஒத்தரும் போகக்கூடாதுன்னு அப்பா உத்தரவு போட்டு, அதில் ஒரு கல்லை விட்டு எறிஞ்சு காண்பிச்சாரே. அது மெதுவாய் மனசில்லாமல், அமுங்கி உள்ளேயே போயிடுத்தே, அது மாதிரி அமுங்கிப் போறது. அவ்வளவுதான்.
உடம்புக்குள்ளே உடம்பு எப்படி வளர்றது ? உள்ளே என்னென்ன சக்கரம் எப்படிச் சுழல்றது? மாரில் எப்படி ‘டக் டக்’ கேக்கறது? அப்பா கடியாரத்தில் ‘டிக் டிக்” பார்க்க கடியாரத்தைப் பின்னாலே திறக்கணும். அது மாதிரி, அப்பாக்குக் கோவம் வந்தால், முதுகைப் பிளந்தூடுவேன்கறா. ஆனால், அப்படி என்னைப் பின்னால் திறந்துட்டாலும். நான் எப்படிப் பாத்துக்கறது? கழுத்தை என்ன ஒடிச்சுண்டாலும். முதுகு வரைக்கும் பின்னாலே திருப்பிக்க முடியாதே!
இந்தப் பழசு, இத்தனைப் பழசுகள் எல்லாம் இப்போ ஏன் நினைவுக்கு வருகின்றன? இந்த அம்மா இன்னும் நகரவில்லையே? நேரம் ஆகல்லியா? எனக் குத்தான் நாளில்லை, கிழமையில்லை, போக்கிட மில்லை: தீபாவளியுமதுவுமா இந்நேரம் இவள் இங்கே. என்ன பண்ணறாள்? பட்டாசை அடுப்பில் காச்ச வேண்டாமா? மருந்து இழைக்க வேண்டாமா, மாட்டுப் பெண்களுக்கு மருதாணி இட வேண்டாமா? வேலையை சின்னவா பார்த்துக் கொண்டாலும், பேரன் மார் பட்டாசு கொளுத்தறதையாவது பார்க்க வேண்டாமா? சப்தங்கள் கேட்க ஆரம்பித்தாச்சே? இவள் கழுத்துச் சங்கிலியைப் பிடுங்கிண்டு, இந்த இருட்டில் இவளை இப்படியே குண்டுக்கட்டாய்த் தூக்கி, இந்த ஜலத்தில் எரிய மாட்டேன் என்று இவள் என்ன கண்டாள்?
ஆனால், எனக்கொன்றும் அவசரம் இல்லை. வேண்டிய பொழுது இருக்கிறது. தானாக எழுந்து போகிறாளா, பார்க்கலாம். எனக்கு அவசரமே இல்லை.
இந்தத் துணிவுக்கு எப்போது வந்தேனோ அப்பவே என்னைச் சுற்றி என்னைக் கட்டிய காலத்தின் கோடுகளை அழித்து விட்டேன். இல்லாவிட்டால், நினைவுகள் இந்த மாதிரி அவைகளின் அடிப்படையை இழந்து, அடியில் புதைந்தவை எல்லாம் எப்படி மேலே வரும்? அப்படி யப்படியே, அப்பட்டமாய் அதனதன் அப்போதைய வடிவங்களிலேயே –
“நான் செத்தாலும் இது இருக்கும்”னு பெருமையாச் சொல்லிண்டே பாட்டி போடுவாளே. சுருள் சுருளாய் எண்ணெய் பளபளத்துண்டு, ஜாடியுள் பாம்புபோல் கெடாமல், வருஷமாய் உறங்குமே நார்த்தங்காய் ஊறு காய் மாதிரி.
பாட்டி ஊறுகாய் போடும்போதெல்லாம், அதன் பெருமையை ஜபிச்சுண்டே ஒரு காலை நீட்டியபடி, அரிவாமனையில் காயைச் சுருளின் வளையம் கெடாது, ஒரே சுருளாய் நறுக்குவாள்.
“இது இந்தச் சீமைக்காராளுக்குப் பிடிக்காது.* (இது அம்மாவை ஒரு குத்தல்)எனக்கென்ன, இதைப் பிடிக் காதவா கொடுத்து வைக்காதவா. கசப்புக்குப் பயந்தவா ருசியை ஏமாந்தவா. எனக்கென்ன, உண்டவாதான் மகிமை கண்டவா. இன்னும் தொப்புள் கொடி விழாத பச்சைக் குழந்தைக்காரிக்குப் போடலாம், ஒண்ணும் பண்ணாது; இரும்பை ஜீரணம் பண்ணீடும்.”
உடனே ‘பக்’கெனச் சிரிப்பாள். வாய் பொக்கை சிரிச்சால் அழற மாதிரியிருக்கும்.
“ஆனால், தன்னைப் பண்ணிக்கத் தெரியாது. பழையதுக்குக் காலையில் தொட்டுக்கோ, சாயந்திரம் ஏப்பத்தில் நெடியடிக்கும்.”
அதுபோல், என் மாலையில், என் காலை நெடி கிளம்புகிறதோ? அப்போ கசந்தது. இப்போ இனிக் கிறது. இன்னும் கொஞ்ச நாழி, என்ன அவசரம்?
வீட்டுக்குப் பின்புறம் ஒரு மாமரம்.
கொல்லைத் தாழ்வாரத்தில் தூண்மேல் சாய்ஞ்சுண் டிருக்கேன். என்னென்னவோ யோசனை யோசனையா வரது.
இந்த மரம் எப்படி இப்படியே வருஷக்கணக்கா நிக்கறது? ஒரு சமயம் இதன்மேல் கல்லைவிட்டு எறிஞ்ச துக்கு “அதுக்கும் உசிர் உண்டு,வலிக்கும். எப்படியும் உன்னைவிடச் சமத்து, வெச்ச இடத்தில் இருக்கு. பார் !’னு அப்பா கடிஞ்சார்.
அப்போ சமத்தாயிருக்கணும்னா மரமாயிருக்கணுமா? மரமாயிருந்தால்தான் சமத்தாயிருக்க முடியுமா?
“சமத்தாயிரு, சமத்தாயிரு- எல்லாரும் எப்போ பார்த்தாலும், எதுக்கெடுத்தாலும் “சமத்தாயிரு”. – இது ஒரு ஜபம்.
கோவிச்சுண்டா, “அப்படியெல்லாம் இனிமேல் பண்ணப்படாது. இனிமேல் சமத்தாயிருக்கணும். தெரிஞ்சுதா?”
பயமுறுத்தல்.
சந்தோஷப்பட்டால், “ஆ, அப்படித்தான்! எப்பவும் இதே மாதிரி சமத்தாயிருக்கணும்”.
ஷொட்டு.
தப்பே பண்ணவேண்டாம். வெறுமனே புதுசு உடுத்திண்டாலோ, நாள் கிழமைக்கு நமஸ்காரம் பண்ணாலோ அப்பவும் “சமத்-த்-த்தாயிரு”ன்னு அழுத்தந்திருத்தமா ஆசீர்வாதம்.
சமத்தாயிருக்கறதுன்னா, யார் சொன்னதையும் கேட்டுண்டு எல்லாரிஷ்டப்படிக்கும் இருக்கணும். அதானே ? என்னிஷ்டம்னே கூடாது. இந்த மரம் மாதிரி மரமாயிடணும். வெய்யில்லே காயணும், மழையிலே நனையணும், காற்றில் அலையணும், கல்லடி படணும், வெட்டுக்காயம் படணும்; பூவைக் கொட்டணும், காயைத் தரணும், பழமாத் தாங்கணும், நிழலைக் கொடுக் கணும். நின்ன இடத்தை விட்டு நகரக்கூடாது; இத்தனையும் பட்டுண்டு ஊமையாயிருக்கணும்; உசிரோடேயும் இருக்கணும். அதானே?
இது எனக்கு வருமோ?
அப்பறம் பெரியவாள் தங்களுக்குள்ளே என்னவோ அடிக்கடி சொல்றா “இதென்ன உன்னிஷ்டமா, என்னிஷ் டமா? மரம் வெச்சவன் தண்ணி ஊத்தாமலா போறான்?” இந்த மாதிரி மரமாயிருக்கறதுக்கு இதுக்குத் தண்ணி ஊத்தி, இதுக்கு ஏதோ பெரிய தயவு பண்ணிட்ட மாதிரி.
ஐயோ, நான் மாட்டேம்பா! இந்தச் சமத்து என்னால் இருக்க முடியாது. எனக்கு வேண்டவும் வேண்டாம். எனக்கு என்னிஷ்டம் கிடையாதாம், அவர்களுக்கு மாத் திரம் அவா இஷ்டம் உண்டாம். ஏனோவாம். என்னிஷ்டம் என்ன ஆறது ? என்னிஷ்டம்னு எனக்கு இருக்கே! இருக்கறத்தை இல்லேன்னா, இல்லேங்கப் பண்ணால் அது மாத்திரம் பொய் சொன்ன மாதிரி, பொய் பண்ண மாதிரி ஆகாதோ?
எனக்கு இஷ்டம், குழம்புஞ் சாதம். அதுவும் வெங் காய சாம்பார் பண்ணிட்டா, கூடக் கத்தரிக்கா (அப்படியே முழுசா நடுவுலே பிளந்து) முள்ளங்கி, முருங்கக்காய், எல்லாம் சேர்த்துப் போட்டு – அப்பா நாக்கிலே தண்ணி ஊர்றது கன்னம் வலிக்கிறது.
“ஏய் உன்னைத்தான்! குழைச்சு செவுர் கட்டாதே, மோருக்குப் போ !” என்னை அப்படிச் சொல்லிட்டு, அப்பா ரஸத்தைக் குளம் கட்றார். அதன் பேர் என்ன வாம் ? அப்போ, அவருக்கு அவரிஷ்டம் உண்டு எனக்கு என்னிஷ்டம் கிடையாது. ஏனாம்?
அம்மாவை ஏதாவது கேட்டால் “அதெல்லாம் அப்புறம் அப்பா மாதிரி நீயும் பெரியவனாறப்போ, அப்போ” என்கிறாள்.
எப்படி நான் நாளைக்கே பெரியவனாறது?
எனக்கொரு யோசனை தோணறது.
கொல்லைப்புறத் தாழ்வாரத்தில் பாட்டி ரெண்டு காலையும் நீட்டிண்டு, ரெண்டு காலையும் தடவிண்டு- கால் மரத்துப் போறதாம் – உக்காந்திருக்கா. பாட்டி தானே இந்தாந்துக்கே பெரியவள், அவளைக் கேட்டால் தெரியும்.
‘பாட்டி நீ எப்போ பெரியவள் ஆனே?’
பாட்டிக்குத் தூக்கிப் போட்டு, ரெண்டு கையையும் கன்னத்தில் வெச்சுக்கிறாள்.
“இதென்னடியம்மா அக்ரமம்? கலி ஆனாலும் இப்படியா முத்திப் போகணும்?”
அம்மா உள்ளிருந்து விடுவிடுன்னு வந்து, என்னைக் கையைப் பிடிச்சு இழுக்கறா.
ரகஸ்யமா, “உஷ், அப்படியெல்லாம் தத்துப்பித்துன்னு பேசாதே.!”
உள்ளூர அவளுக்கு சிரிப்பு பொங்கறது. எனக்குத் தான் புரியல்லே.
பாட்டி கேலிக் குரலில், “ஓஹோ. பெரியவா சிக்ஷை யாக்கும்!”
அம்மாவுக்கு இப்போ சிரிப்பை யடக்கவே முடியல்லை. இல்லே, அப்படி யில்லேம்மா. இப்படி-ன்னு புரியப் பண்ணறாள்.
அது சரி, நான் பெரீஈஈஈயவளாயிருக்கறதை நீ தாண்டா மெச்சிக்கணும் ! நான் எதுக்குப் பிரயோஜனம், என்னத்துக்கு மதிப்பு? நானும் இதோ நிக்கறது பார் இந்த மரமும் சரி.”
வீட்டிலேயே பெரியவள் பாட்டிக்கும் மரமாயிருக்கப் பிடிக்கல்லே, சின்னவன் எனக்கும் பிடிக்கல்லே, அப்போ நாங்க ரெண்டு பேரும் ஒண்ணுதானே !
‘ஏய், எங்கேடாயிருக்கே?’
மதனாவும், ஸாயியும் என்னைத் தேடிண்டு வரான்கள் ஸாயி ஒரு மூடின பெட்டி வெச்சிண்டிருக்கான். சுற்றிக் கறுப்புக் காகிதம் ஒட்டி, நடுவில் சின்ன துளைவிட்டிருக்கு. பார்த்தாலே ஆசையாயிருக்கு.
“டேய் டேய்,என்னடாது.
ரெண்டு பேருக்கும் கண் பளபளக்கறது. வாய்க்குள்ளே சிரிப்பு கூத்தாடறது.
“அதாண்டா, காமெரா, உன்னைப் போட்டோ எடுக்கப் போறோம் வரையா?”
வாசல் பக்கம் போறோம்.
மதனா ஒரு நாற்காலியை இழுத்துப் போடறான். நான் உக்கார்றேன்.
“நான் பிடிக்கிறேன்-”
“இல்லை நான்தான் பிடிப்பேன்-”
“மாட்டேன்-”
“போடா”
நான் தீர்ப்பு சொல்றேன். “ஸாயியே பிடிக்கட்டும். அவன் அப்பாதான் போட்டோ ஷாப்புலே வேலையா யிருக்கார்.
“ஆல் ரைட், மதனா! சேர் பின்னாலே நின்னுக்கோ வெரிகுட்,ஸார் -லைட் அட்ஜெஸ்ட் ஆகல்லே-கொஞ்சம் இந்தப் பக்கம்… நோ- ஸ்டாண்ட் அப் ப்ளீஸ்”
எழுந்து நிக்கறேன்.
“ஸிட்”
உக்கார்றேன்.
“ஸ்டாண்ட்”
நிக்கறேன்.
“ஸிட்”
தடால்னு விழறேன்.
ரெண்டு பேரும் உள்ளடக்கித் தவிச்சுண்டிருக்கறச் சிரிப்பு தண்ணி மாதிரி மூஞ்சியில் பீச்சியடிக்கறது.
எனக்குச் சப்பையில் நல்ல அடி. ஏமாந்த கோவம் வேறே. விழுந்த இடத்திலிருந்து எழுந்திருக்காமலே ‘ஓ’ன்னு கூப்பாடு போட்டு அழறேன். நான் அழ அழ, அவங்க சிரிச்சிண்டேயிருக்கான்கள். வயத்தைப் பிடிச் சுண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறான்கள். மதனாவுக்குப் புரைக்கேற்றது. ஒரு கையால் வயத்தைப் பிடிச்சுண்டு, ஒரு கையால் தலையில் தட்டிக்கிறான்.
கொஞ்ச நாழிக்கெல்லாம் அவங்க சிரிப்பு எனக்கும் தொத்திக்கிறது. என் அழுகை, என் இஷ்டமில்லாமலே, என் கண்ணெதிரிலேயே, என் காது கேக்கவே சிரிப்பாய் மார்றது.
மூணுபேரும் சேர்ந்து சிரிக்கிறோம். ஒரே சிரிப்பு 1 ஒரே சிரிப்பின் மூணு குரல். ஆர்மோனியத்தில் மூணு வல்லை சேர்த்து அமுக்கின மாதிரி.
மதனா, ஸாயி, இப்போ நீங்கள் எங்கிருக்கேளோ? ஆனால், அன்னிக்கு அது படே ஜோக்குடா !
ஆனால், இந்தச் சிரிப்பு என்னை விடவில்லை. இத்தனை நாளாவே உள்ளே இருந்ததுதான்; இப்போ இன்னும் பளிச்சாத் தெரியறது.
அப்பா யாரையாவது பத்தி ஏதாவது சொன்னால், “அவன் மஹா யோக்யன்னா, மஹா பெரிய மனுஷன், மஹா கர்வி’ -‘மஹா மஹா’ன்னு சேர்த்துப்பார். அது மாதிரி இது ஒரு ‘மஹா’ சிரிப்பு, உடம்புக்குள்ளேயே அடுக்கடுக்காய். தனித்தனி விள்ளலாய் குதிக்கிறது. விசிறியில் ஓலை மடிமடியாயிருக்கிற மாதிரி. ஸர்க்கஸ் காலரி மாதிரி. கோவில் கோபுரத்தில் செதுக்கல்கள் அடுக் கடுக்காய், தனித்தனியா, ஆனால், ஒரே கட்டாய் நிக்கற மாதிரி, பருப்புத் தேங்காயில், வரிசையாய் வேர்க்கடலைப் பருப்பு பதிஞ்ச மாதிரி. மைசூர்பாகு துளைவிட்ட மாதிரி.
நம் உடம்பே ஒரே துளைமயமாமே! அப்படியானால் ஒவ்வொரு துளை வழியாய் இந்த மஹா சிரிப்பு எட்டிப் பாக்கறப்போ என்ன பண்றதுன்னே புரியல்லே. உடம்பு. அப்படிப் பரபரக்கறது.
“ராஜா,ஆண்டவன் உனக்கு உடம்புக்கு மீறி உசிரை வெச்சுட்டான். இல்லாட்டா இப்படி ஆம்புலே ஏறி தோம்புலே விழுவையா? அடிப்பட்டாலும் அழாமல் இருப்பையா ? தூக்கத்தில் கூடக் கையும்காலும் உதைச் சுப்பையா? நாய் கனவு காணற மாதிரி! உனக்கு ஏன் இப்படி அலையறதோ தெரியல்லியே, ஈசுவரா!”
பாட்டி உசிர் என்கிறாள்.
நான் சிரிப்பு என்கிறேன்.
அதுவும் அஷ்டோத்ரம்தான் போலிருக்கு.
அதுமாதிரி சமயம்தான் அந்தச் சமயம் சாயங்காலம்.
முற்றத் தாழ்வாரத்தில் கிட்டக்கிட்ட ரெண்டு தூண்; ஒரு தூண்மேல் முதுகை நட்டுண்டு இன்னொரு தூண் மேல் காலைத் தலைக்குமேல் உயரமா உதைச்சுண்டு சாஞ்சுண்டிருந்தேன். அந்த மாதிரி சாய, அந்த இடம் எனக்கு அளவு எடுத்தாப்போல் இருக்கும். அப்படி உடம்பை விரைச்சுண்டு சாஞ்சிருக்கறதில் ஒரு குஷி இருக்கு. என் காலுக்கும் தலைக்கும் நடுவில் இருக்கும் காற்றைக் கயிறாய்த் திரிச்சு இழுத்துக் கட்டினால், நான் வில்லாயிடுவேன், இல்லையா? ராமர் வில், அர்ச்சுனன் வில், நாணைத் தட்டினால், ‘பூம்ரொய்ஞ்ஞ்……” ராமர் வளைச்ச வில் வீணாய் வளையாதாமே! என் பாணத்துக் கென்ன தரே ?”ன்னு ராமர் கேட்பாராமே!
“வழி-”
அப்பா நிக்கறார்.பட்டை பட்டையா விபூதி, பஞ்சக் கச்சம், கையில் டம்ளரில் ஜலம். அப்பா சந்தி பண்ணம் போறா.
“ஊம், வழி…”
மனஸேயில்லை. வில்லைக் கலைச்சு உடம்பைத் தளர்த்திண்டேன்.
“பூம்ரொய்ஞ்ஞ்…..”
திடீர்னு உடம்பெல்லாம் அதிர்ந்தது. வளைச்ச வில்லி லிருந்து அறுந்த நாணாய், என்னுடைய மஹா சிரிப்பு சத்தம் போடாமல் சிரிச்சுண்டே கால் கட்டை விரலி லிருந்து உள்ளே கிளம்பிடுத்து.
அப்பா என்னைத் தாண்டிண்டிருந்தார். நான் என்ன செய்யறேன்னு எனக்கே தெரியறது; ஆனால் அடக்க முடியவில்லை. தமாஷ் அப்படி உடம்பை ஊடுருவித்து. அப்பா காலுக்கு நடுவில் என் காலை விட்டேன்.
அப்பா ஸர்க்கஸ் பல்டி அடிச்சு விழுந்தார். அம்மி விளும்பில் மூஞ்சி ‘டண்’ணுனு மோதி அப்பாவுக்கு தலை தொங்கிடுத்து. நெற்றியில் ரத்தம் பிடுங்கிண்டுடுத்து.
சப்தம் கேட்டு அம்மா சமையலுள்ளிலிருந்து ஓடி வந்தாள்.
பூனை எலியைக் கவ்வற மாதிரி கிலி என்னை கவ்வித்து.
“வேவே – வூவூ” – வாயிலிருந்து எனக்கே புதிசா ஏதேதோ சப்தங்கள் கிளம்பித்து. சிட்டாய்ப் பறந்துட்டேன்.
அன்னிக்கு வீட்டை விட்டவன்தான்.
இன்னமும் ஓடிண்டிருக்கேன்.
அப்பா, அப்பா! நீங்கள் உடனே செத்துப் போயிட் டேளா, இன்னும் உசிரோடிருக்கேளா ?
ஆனால், சத்தியமாய்ச் சொல்றேம்பா, உங்களைத் தடுக்கிவிட்டது நான் இல்லேப்பா, என் சிரிப்பு. சத்தியமாய்ச் சொல்றேன்: அப்பா, விட்டேன்னுங்கோ ! சத்தியம் வெச்சுட்டேன் விட்டேன்னுங்கோளேன் !
ஆனால், நீங்கள் சொன்னாலும் எனக்கெப்படி காது கேட்கும் ? அப்படியும் இன்னும் கேட்டுண்டு தானிருக்கேன்.
அகப்பட்ட வேலையைப் பண்ணி கூலிவாங்கி
வயத்தைக் கழுவறபோது
வாய்க்ககப்பட்டதைத் தின்னு கையலம்பறபோது
கூலிக்குத் தூக்கற சுமை பாரத்தடியில்
தலை வயிற்றுக்குள் அமுங்கும்போது
அன்னன்னிக்கதை அன்னன்னிக்கு
வந்ததை வந்ததும் வந்ததே தீர்த்துவிட்டு
வராதன்னிக்கு வயிறு காய
மரத்தடியில் வேர்மேல் தலைவெச்சு
படுத்து, அண்ணாந்து பார்த்து
ஆகாசத்து நக்ஷத்திரங்களில்
உங்களைத் தேடிண்டு
இன்னமும் இப்பவும் கேட்டுண்டுதானிருக்கேன்.
ஆனால், வீட்டுக்கு வர பயமாயிருக்கப்பா! உங்கள் குரல் இங்கேயே கேட்டாலே ஒழிய நான் வரத்துக் கில்லை. அன்னிக்கு பயமாய மாறின சிரிப்பு, இன்னும் பயமாவேதானிருக்கப்பா எத்தனை வருஷங்களாச்சு, இன்னும் ஓடிண்டுதானே இருக்கேன்!
ஆனால் இப்போ அது பயம்னு பயமாயில்லை அலுப்பாய் மாறியிருக்கு. நிற்கவும் முடியாமல் இப்படியே எத்தனை நாள் எவ்வளவு தூரம் ஓடிக்கொண்டே யிருக்க முடியும்?
ஒரு வாணம் சீறிக் கொண்டு உயரப் போய் வெடித்து, பச்சை, சிவப்பு, ஊதா சரங்கள் மலர்ந்து இறங்கிக் குடை கவிகிறது.எவ்வளவு அழகாயிருக்கின்றது! எப்படி இத்தனை நக்ஷத்திரங்களை, வர்ணப் பொறிகளை, ‘படா’ரை. வாணத்தின் விரல் நீளத்தில் அடைத்தான்! இதைப் பண்ணின பிரயாசையென்ன, வெடித்த சுருக்கென்ன ?
எனக்குத் தோன்றுகிறது.
வெடிக்க வேணும் என்றே எண்ணி, இப்படி வெடித்துப் போவதில் என்ன அர்த்தம்? அதைப் பண்ணினவனுக்கென்ன அர்த்தம்? எதில்தான் என்ன அர்த்தம்? அர்த்தம் இல்லாமல் இருப்பதே ஒரு அர்த்தமா?
ஏது. இந்தக் கிழவி கிளம்பமாட்டாள் போலிருக் கிறதே ! தூங்கிப் போயிட்டாளா?
“ஏ, பாட்டி, நாழியாகல்லியா? நானும் பார்க் கிறேன், ரொம்ப நாழியாக என்னோடு போட்டி போட் டுண்டு இங்கேயே இருக்கேளே! வீட்டுக்குப் போக வேண்டாமா? தேடமாட்டாங்களா? என்ன, உதட்டைப் பிதுக்கிண்டு சிரிக்கிறேள்? இல்லை, எல்லாரும் போனப் புறம், தண்ணியிலே கிண்ணியிலே விழுந்து தற்கொலை பண்ணிக்கணும்னு காத்துண்டிருக்கேளா?”
“எனக்கென்னத்துக்கப்பா அதெல்லாம்? எனக்கோ கை காட்டி சாஞ்சாச்சு. இன்னும் கொஞ்ச நாள். நானா ஏன் அவசரப்படணும்?”
“இல்லே பாட்டி, தமாஷ் பண்ணினேன். இப்படிக் கொஞ்சம் முரட்டுத்தனமாப் பேசினால்தானே, நேரம் ஆவது உங்களுக்குத் தெரியும்.”
“எனக்கு ஒரு கோவமுமில்லை. என்ன வேணு மானாலும் சொல்லு, உன் மனசிலே உனக்கு தோனின் தைச் சொல்றே, அவ்வளவுதானே!”
“உங்களுக்கு நேரமாகல்லியா?”
“நேரமாவது, பொழுதாவது ! எனக்கு இப்பொ ஒண்ணும் அதனால் உபயோகமில்லை.”
“ஏன், வீட்டுக்குப் போகவேண்டாமா?”
“வீட்டில் என்ன இருக்கு, அப்பனே?”
“மனுஷா இல்லியா?”
“எல்லாரும் மனுஷாள்தான். நான் மனுஷியில்லியா நீ மனுஷன் இல்லையா?”
“பாட்டிகளுக்கே மூட்டம் போட்டுத்தான் பேச வரும் போல் இருக்கிறது-மடியில் என்னவோ கட்டிக்கொண்டு தவிச்சிண்டிருக்கேளே, என்னது ?*
“ஓ, இதுவா ?*
“பொட்டலமாயிருக்கே ! தீபாவளி பக்ஷணமா !”
“இல்லை. பட்டாசு-”
“என்ன பாட்டி, கைகாட்டி சாஞ்சூட்டுது என்கிறேள். பட்டாசு ஆசை விடல்லியா? எல்லாமே இருக்காப் போலிருக்கே, கம்பி, ஊசி -”
“இது என் பேரன் போன வருஷம் சுட்டுத் தீர்த்த மிச்சம்.”
“போன வருஷத்து பாக்கியையா இன்னும் வெச்சிண்டிருக்கான்? அப்படியானால் அவன் வயஸுக்குத் தகுந்த பையனே இல்லை”
“நிஜம். அவன் வயஸுக்குத் தகுந்த பையன் இல்லை.*
“சாதாரண சமத்தாயிருக்க முடியாது.”
*அசாத்திய சமத்துதான்.”
“தெய்வப் பிறவின்னு கூடச் சொல்லுவேன். பசங் களாவது பட்டாசை விட்டு வைக்கறதாவது!”
“உன் நாக்கில் வாக்குப் பேசறது: அவன் தெய்வமே தான்”.
“உங்கள் பேரனுக்கு என்ன வயஸு?”
“இந்த தீபாவளிக்கு சரியா பத்து. தீபாவளி அன்னிக்கு பிறந்தான்.”
“தேவலையே! தனியா பிறந்தநாள் கொண்டாட வேண்டாம். உங்கள் வீட்டில் மாத்திரம் இல்லை, ஊரே கொண்டாடும்னு சொல்லுங்கோ !…… எல்லாம் சரி, பேரனை விட்டுட்டு பட்டாசை நீங்கள் வெச்சிண்டிருந் தால் என்ன அர்த்தம்? பயல் எங்கே ?
“…..”
“என்ன சும்மாயிருக்கேள், உங்கள் பேரன் எங்கே ?”
“…..”
“என்ன பாட்டி அழறேள்? கன்னத்தில் கண்ணீரா வழியறதே!”
“…..”
பாட்டி, மன்னிச்சுடுங்கோ. என்ன உடம்பு இப்படி வெடவெடன்னு உதர்றதே!’
“வயஸாச்சோன்னோப்பா, சக்தியில்லை. ஒரு நினைப்பு கூட தாங்க முடியல்லே.”
“என் மேலே சாஞ்சுக்கோங்கோ. பரவாயில்லை. என் வயஸில் உங்களுக்கு ஒரு பேரன் இருக்கலாம்-ஆ. அப்படித்தான்!”
“போன தீபாவளிக்கு இருந்தான்…”
“உஷ், கொஞ்ச நாழி பேசாதிருங்கோ…”
“எனக்கு ஒத்தரும் இல்லை. இந்தத் தள்ளாமையில் அவன் இட்ட பிச்சைன்னு நினைச்சு மகிழ்ந்திண்டிருந்தேன். அதுகூட அவனுக்கு பொறுக்கல்லே. அவ்வளவு கர்வமா உனக்குன்னு இட்ட கையாலயே பிடுங்கிண்டு போயிட்டான்.”
“பாட்டி, அதெல்லாம் சொல்றதில் என்ன பிரயோசனம் ? கொஞ்ச நாழி பேசாதேங்கோ. உடம்பு உதறல் அடங்கட்டும். என்னவோ திடீர்னு ஆசையாயிருக்கு ஒரு பட்டாசு கொளுத்தட்டுமா?”
“தாராளமா எடுத்துக்கோயேன். உனக்குன்னுதானே கொண்டு வந்தேன்!”
“என்ன பாட்டி கேலி பண்றேளே?”
“ஏன்! அதுக்குள்ளே மறந்துட்டியா? நீ தானே சொன்னே. உன் வயசிலே எனக்கு ஒரு பேரன் இருக்கலாம்னு?”
“பலே, நன்னா மடக்கறேளே!”
“மடக்கல்லே. உண்மையே அதுதானே! என்ன முழி முழின்னு முழிக்கிறே?’
“ஒண்ணுமில்லே,”
“என்னை சொல்லிட்டு உன் கன்னம் நனைஞ்சிருக்கு. அழாதே.”
“இல்லை பாட்டி, அழல்லை. கண் அழுக்கு கரையறது கலிக்கமாத் தெரியறது.”
“என்ன தெரியறது?”
“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் எதிலேதான் அர்த்தம் இருக்கிறதென்று நினைத்தேன். அப்படி நினைத்ததில் அவசரப்பட்டு விட்டேன்னு இப்போது தெரிகிறது. பாட்டி, பட்டாசு வேண்டாம் வெடித்து விடும். மந்தாப்பு கொளுத்தறேனே!”
“கொளுத்தேன்.”
கம்பியிலிருந்து ஒரு பெரிய புஷ்பம் மலர்கின்றது அதன் இதழ்களில் குளுமை வீசுகின்றது.
எங்கிருந்தோ கம்மென்று பன்னீர்ப் பூவின் மணம் எழுகின்றது.
கிழவியின் தலை என் தோள்மேல் சாய்ந்து, அவளிட மிருந்து நீண்ட பெருமூச்சு கிளம்பிற்று. என்ன ஆச்சர்யம். அப்பா உங்கள் குரல் கேட்கிறதே!
விட்டேன் என்கிறேளா?
– கங்கா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1962, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.
![]() |
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க... |