இடம்




(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காமாட்சிக்கு எல்லாம் தெளிவாய்க் காதிலே விழுந்து விட்டது. விழாதென்று நினைத்துக்கொண்டு மகள் சுசீலாவும் மாப்பிள்ளை கணேசனும் வாசலில் பேசிக் கொண்டிருந்தார்கள். அவசர அவசரமாக இரவு ஒன்பது மணிக்கு மேல் அவர்களுக்காக ஒரு ரசம் வைத்து அப்பளம் பொரித்துக் கொண்டிருந்தாள். அதுகூட அக்கம் பக்கத்தில் இரவல் வாங்கித்தான்.

”நான் அப்பவே சொன்னேன். திடுதிப்பென்று போய் நிற்கக் கூடாதென்று. நீதான் உன் அம்மாவுக்குப் பிளஸென்ட் ஸர்ப்ரைஸாக இருக்கும்னு சொன்னே. இப்ப படுத்துக்கக் கூட இடமில்லையே இங்கே?”
”உஷ்! இப்படி இருக்குமென்று எனக்குத் தெரியுமா? நம் கல்யாணத்தின்போது கூட இங்கே இரண்டு ரூம் இருந்தது. கட்டுப்படியாகலேன்னு ஒரு ரூமைக் குறைத்துக் கொண்டு விட்டாள் போலிருக்கு. ஏதாவது அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். பேசாமல் இருங்க.”
கேட்டுக் கொண்டிருந்த காமாட்சிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. இருபது வருடத்துக்கு முன்பு, திடு திப்பென்று ஒருநாள் அவள் கணவன் ‘நான் பத்ரிநாத் போகிறேன்’ என்று சொல்லிவிட்டுத் திரும்பி வராமலே வட இந்தியாவில் எங்கோ தங்கி விட்டபோது அவள் இப்படி வருந்தவில்லை; சொந்த வீடு கண் முன்னாலே ஏலம் போன போதும் அவள் மனசைத் தேற்றிக் கொண்டாள்; குடும்பத்தைக் காப்பாற்றப் போகிறான் என்று நம்பியிருந்த மூத்த பிள்ளை மலை சாய்ந்த மாதிரி டைபாயிடில் போனபோதும் அவள் தாங்கிக் கொண்டாள். துக்கத்திலெல்லாம் பெரிய துக்கம், நம் சொந்தக் குழந்தை, ஆறு மாதப் புது மணப்பெண், சிறிசுகள், கணவனுடன் தனியே படுத்துக் கொள்வதற்கு வசதி செய்து தர முடியாததுதான். தெய்வமே! இந்தத் துன்பம் என் ஜன்மப் பகைக்கும் வர வேண்டாம்…
சாப்பாடானதும், “தர்மாம்பாள் வரச் சொன்னாள். நீங்க கதவைத் தாழ்ப் போட்டுக் கொண்டு இருங்க… நான் போய்ப் பார்த்து விட்டு வருகிறேன்” என்று சொல்லி விட்டுப் புறப்பட்டாள் காமாட்சி. ராத்திரி அங்கே தங்கிக் கொள்கிறேன் என்று சொல்வது நன்றாயிருக்காது. தடுத்து விடுவார்கள். வீட்டுச் சொந்தக்காரரிடம் சொன்னால், அவளுக்கு ஓர் இடம் கிடைத்திருக்கும். ஆனால் இன்று அவர்கள் வீட்டிலேயே ஏகப்பட்ட விருந்தாளிகள்…
பத்தரை மணி சுமாருக்கு, சினேகிதி தர்மாம்பாளின் வீட்டின் படியேறியபோது திக்கென்றது. கதவு பூட்டியிருந்ததே காரணம். வெளியூர் போயிருக்கிறாள் போலிருக்கிறதே? சரி, ஈசுவரன் கோவில்தான் தேவலை. அங்கே நடையைக் கட்டினாள். வினாயகர் சன்னதி வாசலில் புடவைத் தலைப்பைப் பிரித்துக் கொண்டு படுத்தபோது, குருக்கள் வந்தார்.
“பெரியம்மா, இப்பெல்லாம் மானேஜ்மெண்டில் ரொம்பக் கண்டிப்பு. யாரையும் இங்கே தங்க விடக் கூடாதாம்” என்றார்.
கடைத்தெரு வழியே வந்தபோது ராவுத்தர் மளிகைக் கடை ஞாபகம் வந்தது. அங்கே ஒரு குட்டித் திண்ணை இருக்கும். ஆவலுடன் சென்றாள். ஏற்கெனவே ஒரு பிச்சைக்காரி அங்கே முடங்கியிருப்பதைக் கண்டபோது பரிதாபமாக இருந்தது. மணி இப்போது பன்னிரெண்டைத் தாண்டி விட்டது.ஊரே ஓய்ந்து விட்டது. அவளுக்குத்தான் ஒண்டுவதற்கு ஓர் இடம் இல்லை. ஆனால் மனசுக்குள் ஒரு சந்தோஷம். இந்நேரம் மகளும் மாப்பிள்ளையும் சந்தோஷமாய் இருப்பார்கள்…
இப்படியே நடந்து கொண்டிருக்க முடியுமா ராவெல்லாம்? அதோ, வெளிச்சமான இடம்! அவளுக்குச் சிரிப்பு வந்தது, இத்தனை நேரம் அது தோன்றாமலே போயிற்றே என்று. ரயில்வே ஸ்டேஷன்… விடியற்காலை மெட்ராஸ் போகும் வண்டி இருக்கிறது. அதற்கு வந்ததாக நினைத்துக் கொள்வார்கள்… பெஞ்சில் படுத்துக் கொண்டாள். அப்படியும் இரண்டொரு போர்ட்டர்கள் அவளை வந்து பார்த்துக் கேள்விகள் கேட்டு விட்டுத்தான் போனார்கள்…
பலபலவென்று காலை மலர்ந்தது. குளிர் உடம்பை வெட்டியது. இருந்தாலும் செயற்கரியது செய்த மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினாள் காமாட்சி.
”என்னம்மா நீ பாட்டுக்கு ராத்திரி பூரா உன் சினேகிதி வீட்டில் தங்கி விட்டே?” என்று மகள் கோபித்துக் கொண்டாள். போலிக் கோபம். முகத்தில் ஆனந்தம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.
– குடும்பக் கதைகள், முதற் பதிப்பு: 2007, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.