இசையே நீ இசைந்திடு!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 8, 2025
பார்வையிட்டோர்: 2,320

இசைக்கருவிகளை சிறு வயதிலேயே மீட்டுவதில் ஆர்வம் கொண்டிருந்தான் சரண். இசை நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அங்கே தன்னை அழைத்துச்செல்லச்சொல்லி அடம் பிடித்து அழுவான்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சிகளை தவறாமல் பார்த்து ரசிப்பான். அவனது பிடிவாதமான ஆர்வத்தைக்கண்டு பியானோ மற்றும் அவன் கேட்கும் இசைக்கருவிகளையெல்லாம் சலிக்காமல் வாங்கிக்கொடுத்தார் அப்பா பிரபாகரன்.
இசைக்கு பாடல் வரிகள் வேண்டும் என்பதை உணர்ந்தவன், பலரிடம் கேட்க யாருமே அவனது ரசனைக்கேற்ப எழுதித்தரவில்லை. பெரிய கவிஞர்களைக்கேட்டால் நிறைய பணம் கேட்பார்கள் என்பதால் அந்த முயற்ச்சியை எடுக்காதவன், தானே கவிதை எழுத முற்பட்டு எழுதினான். எழுதினான்,எழுதினான் எழுதிக்கொண்டே இருந்தான்.
பள்ளிப்படிப்பு முடித்த பின் முழு நேரமாக இசையெனும் கடலில் முத்துக்களைத்தேட மூழ்கியவனுக்கு திரைப்படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பல கவிதைகளை தானே எழுதி சினிமாவுக்காக பல பாடல்களை இசையமைத்து கொடுத்திருந்தாலும் இசையைப்பற்றி தான் எழுதிய ஒரு பாடல் மட்டும் முழுமையாக அவன் மனதை ஆக்கிரமித்திருந்தது.
அந்த வரிகளை திரும்பத்திரும்ப தனக்குத்தானே பாடிக்கொண்டே இருப்பான். தனக்கான பாடல் என்பதால் பாடலாக இசையமைத்து திரையில் வெளியிட விரும்பாமல் இருந்தான். இப்பாடல் அவனது கவிதை தேடலில் வந்த முதல் பாடலும் கூட என்பதில் எப்போதும் சரணுக்கு பெருமிதம் உண்டு.
இசையே…. இசையே…- உன்னை
பாடாதிருப்பேனோ…? – நீ
இசையும் வரையில் உன்னை
தேடாதிருப்பேனோ…?
அசையும் பொருளில் – உன்னை
கேளாதிருப்பேனோ…? – உன்
இசையும் கேட்டால்
தசையின் உடலில் – நான்
ஆடாதிருப்பேனோ…? – நான்
ஆடாதிருப்பேனோ…?
இசைக்கு வடிவம் எதுவும் இல்லை
இறைவன் போலத்தான் உனது நிலை
ஏழு ஸ்வரங்களில் ராகங்கள் கேட்க
மனதினில் அதனால் துன்பமும் இல்லை
இசையால் மனிதர்கள் உயிர்கள் நிலைக்கும்
இசையே எனக்கு உயிராய் இருக்கும்
இளைய ராஜாவின் பழைய பாடல்களின்
இனிமையை கேட்டால் தனிமையும் இனிக்கும்
உயரத்தை தொடவே உறுதியும் வேண்டும்
இறுதி வரை எனக்கு உயர்வும் வேண்டும்
பல்லவி பின்னே சரணம் வேண்டும்
சொல் கவியினை நானும் புனைந்திட வேண்டும்
நல் கவி என்ற பெயரும் வேண்டும்
நல்லோர் சபையில் பாடிட வேண்டும்
வல்லோர் கூட இறங்கி வந்து
வளமாய் இருக்க வாழ்த்திட வேண்டும்
இயற்கையும் இசைக்கு
மயங்கிட வேண்டும்
இசையால் இம்சைகள்
குறைந்திட வேண்டும் – என்
வயலின் இசை கேட்டு – கண்
கயல்களும் ஆடும் – வயல்
மரங்களில் அமர்ந்து கொண்டு
குயில்களும் பாடும்
மெல்லிசை மன்னர் பாடல்கள் போல
உன்னிசை பாடல்கள் இருக்கிறதென்று
பண்ணிசைப்பிரியர் கூட்டமெல்லாம்
என்னிசை தேடும் காலம் வரும்!
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இப்பாடலை ரசித்து பாடுபவன், ஒவ்வொரு முறையும் பாடலின் முடிவில் தன்னைப்பாராட்டி தானே கைதட்டிக்கொள்வான்.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |
